உயிரோவியம் நீயடி பெண்ணே – 5

love-quotes-couples-hold-my-heart

உயிரோவியம் நீயடி பெண்ணே – 5

5

மருத்துவமனைக்குச் சென்ற பொழுது ப்ரதாப் வீடியோ காலில் சுஜிதாவைக் காட்டவும், அவளைப் பார்த்த சூர்யா முதலில் சந்தோஷத்தில் கத்திக் கூப்பாடு போட்டான். நீண்ட தவத்திற்குப் பிறகு அவளது தரிசனம்.. அவன் கத்திய கத்தலில், உறங்கிக் கொண்டிருந்த விமல் பதறிக் கொண்டு அவனது  அறையில் இருந்து வெளியில் வர, சூர்யாவின் நிலையைக் கண்டு பதறிப் போனான்..

“சூர்யா என்ன ஆச்சு? ஏன் இப்படி அழற?” தனது மொபைலை கையில் வைத்துக் கொண்டு அவன் அழவும், ஏதோ கெட்ட செய்தி என்று அவன் நினைத்துக் கொண்டு அவனது அருகில் வந்தான். அப்பொழுது தான் அவனது மொபைலைப் பார்த்தவன், அதில் சுஜிதாவின் உருவம் தெரியவும், அவனது அழுகை புரிந்தது.. 

அவனது தோளைத் தட்டிக் கொடுத்தவன், ஒரு பாட்டில் தண்ணீரைப் பிடித்து அவனது அருகில் வைத்து விட்டுச் செல்ல, சூர்யாவோ, எங்காவது பார்வையை அகற்றினால் அவள் காணாமல் போய்விடுவாளோ என்று எண்ணிக் கொண்டு, அவனது செல்லையே வெறித்துக் கொண்டிருந்தான்..

அதை விட அவளது செல்போன் ரிங்க்டோன் சத்தத்தில் அவனது நின்றிருந்த அழுகை மீண்டும் ஒலிக்க, விமல் அவனைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு நின்றான்.

ப்ரதாப் போனை வைத்ததும், சோபாவில் அப்படியே சாய்ந்தவன், தனது கண்களை மூடிக் கொண்டு, நெடுநாளைக்குப் பிறகு கிடைத்த தனது உயிரின் மேலானவளின் முகத்தை தனது மனக்கண்ணில் கொண்டு வந்து ரசித்தான்..

கண்களில் கண்ணீர் ஒரு பக்கம் வழிந்துக் கொண்டிருக்க, அவனது மனது அவளது பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தது. அவன் அப்படி சாய்ந்து விடவும், விமல் அவனது அருகில் வந்து அமர, கண்களைத் திறந்துப் பார்த்தவன், ஒரு மெல்லிய புன்னகையுடன், “என் சுஜி பெரிய கைனகாலாஜி டாக்டரா இருக்கா.. எப்படி பேசறா தெரியுமா? நேர்ல இருந்தா அவளை இறுக ஹக் பண்ணி இருப்பேன்..” பெருமை பொங்கச் சொன்னவன்,

“இன்னைக்கு இந்த அர்த்த ராத்திரியில நான் என்னோட தேவதையைப் பார்த்துட்டேன். என் சுஜியைப் பார்த்துட்டேன்.  இன்னும் கொஞ்ச நேரத்துல மாமா கூப்பிடுவார்.. எனக்கு அவளைப் பத்தி சொல்லுவார்.. நான் கேட்டுக்கிட்டே இருக்கப் போறேன்..” என்று சொன்னவன், வேகமாக எழுந்துச் சென்று அடுத்த காபியைக் கலக்க, விமல் அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீ தூங்கு விமல்.. எனக்கு இன்னைக்கு தூக்கம் இல்ல.. மாமா பேசின உடனே ஊருக்குப் போறது பத்திப் பார்க்கணும்.. ஆபிஸ்ல லீவ் கேட்கணும்.. இல்ல கால்ல கையில விழுந்து வர்க் ப்ரம் ஹோம் கேட்கணும்.. அவளைக் கூப்பிட்டு பார்ப்பேன்.. இல்லையா நான் அவ கூட அங்க போயிடுவேன்.. இனிமே எல்லாம் அவளை விட்டு என்னால ஒரு நிமிஷம் இருக்க முடியாதுப்பா..” என்று சொல்லிக் கொண்டே காபியைக் கலந்துக் கொண்டு வர,

“சூர்யா.. கொஞ்சம் நிதானமா இரு.. இத்தனை வருஷமா தேடி அவங்க இப்போ தான் உன் கண்ணுல பட்டு இருக்காங்க.. எங்க இருக்கேன்னு கூட ஒரு க்ளூ கூட இல்லாம இருந்திருக்காங்க. அதனால கொஞ்சம் பொறுமையா ஹாண்டில் பண்ணு சூர்யா.. அவங்களுக்கு உன்னைப் பார்த்த அப்பறம் சரி ஆக கொஞ்சம் டைம் எடுக்கும்ல.. மெல்ல தான் அவங்களை சமாதானம் செய்யணும்..” என்று சொல்ல,     

“நான் சமாதானம் செய்தாலும் அவ என் கூட இங்க வருவாளா? இல்ல நான் அங்கயே வேற வேலை பார்க்கணுமா? ஒருவேளை அவளுக்கு வேற கல்யாணம் ஆகி இருந்தா?” அவன் எங்கோ பார்வையைப் பதித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்க, விமல் அவனது தொடையில் தட்டினான்.

“லூசு மாதிரி பேசாதே சூர்யா. உன் வைஃப் எப்படி வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்க முடியும்? டைவர்ஸ் பண்ணிட்டீங்களா என்ன?” புரியாமல் கேட்க,

“இல்ல.. என்னால அவளை அப்படி எல்லாம் செய்ய முடியாது.. சண்டைப் போட்டுட்டோம்.. கொஞ்சம் வார்த்தை தடிச்சு போச்சு.. அதும் அவளோட கோபம் நியாயம் தான்.. நான் தான் அந்த நேரம் பேசத் தெரியாம.. கோபத்துல என்ன பேசறேன்னு இல்லாம கண்ட படி பேசிட்டேன்.. பேசிட்டு நான் கோபத்துல யூ.எஸ். வந்துட்டேன். அவ ரோஷக்காரி இருக்கற இடம் தெரியாம போயிட்டா.. அதுக்கான தண்டனையா அப்படியே பத்து வருஷம் ஓடிருச்சு. இப்போ தான் என் கண்ணுல படறா ராங்கி.. அதுவும் உரிமையோட பார்க்க வேண்டியவன் திருட்டுத்தனமா பார்க்கறேன்.. எப்படியோ நான் அவளைப் பார்த்துட்டேன்.. இப்படியே செத்தா கூட சந்தோஷமா போய்டுவேன்.. எங்க அவளைப் பார்க்காம செத்துப் போயிடுவேனோன்னு பயந்துட்டு இருந்தேன்.. நல்லவேளை அப்படி எதுவும் நடக்கலை..” அவனது முகத்தில் இருந்த இறுக்கம் மெல்லக் குறைவதாய்.. அவனது பேச்சுக்களும் எப்பொழுதையும் விட நட்புடன் இருந்தது. 

“பத்து வருஷத்துக்கு முன்னன்னா.. சூர்யா அப்போ உங்களுக்கு இருபத்தி மூணு இல்ல இருபத்தி நாலு வயசு இருக்குமா? அப்போவே கல்யாணம் ஆகிருச்சா?” புரியாமல் விமல் கேட்க, சூர்யா அவளைப் பார்த்து புன்னகைத்தான்..

“அவ கழுத்துல இன்னும் நான் போட்ட செயின் இருக்கு. அவ விரல்ல நான் போட்ட மோதிரத்தை செயின்ல பத்திரமா போட்டு இருக்கா. நான் அதைப் பார்த்தேன்.. அப்போ அவ வேற யாரையும் பார்த்து இருக்க மாட்டா தானே. வேற யாரையும் கல்யாணம் பண்ணி இருக்க மாட்டா தானே.. அப்படி இருந்தா அதை எல்லாம் கழட்டி இருப்பா தானே..” பட்டென்று எழுந்து அமர்ந்தவன் விமலிடம் கேட்க, அவன் சொல்ல வருவது ஓரளவு விமலுக்குப் புரிந்தது.

“ஹ்ம்ம்.. மாட்டாங்கன்னு நம்புவோம் சூர்யா.. சரி.. உங்க மாமா கூப்பிட்டா பேசிட்டு தூங்கு… மணியாகுது.. நாளைக்கு ஆபிஸ் இருக்கு..” என்றவன், தனது அறைக்குச் சென்று விட, சூர்யா ப்ரதாப்பின் போனுக்காக காத்திருக்கத் துவங்கினான்..

அவனது மனதில் ஒரு வித படபடப்பு.. அவளைப் பற்றி  கேட்கும் ஆவல்.. நெடுநாட்களுக்குப் பிறகு அவளைப் பார்த்த தவிப்பு என்று பல்வேறு மனப் போராட்டங்களில் தவித்துக் கொண்டிருந்தவன், ஓரிடத்தில் நிலைக் கொள்ளாமல் தவித்தான்.

ஜைஷ்ணவியை வீட்டில் விட்ட ப்ரதாப், சற்று தள்ளி இருந்த காபி ஷாப்பின் உள்ளே சென்று அமர்ந்து, ஒரு கோல்ட் காபியை ஆர்டர் செய்துவிட்டு, அவனுக்காக காத்திருந்த சூர்யாவிற்கு அழைத்தான்..  

அவன் அழைத்ததும் ஒரே ரிங்கில் போனை எடுத்தவன், “ஹலோ மாமா.. சொல்லுங்க மாமா.. சுஜியைப் பார்த்தீங்களா? சுஜி எப்படி இருக்கா? என்னைப் பத்தி ஏதாவது கேட்டாளா மாமா? மாமா.. அவளைப் பத்தி ஏதாவது சொல்லுங்க.. எனக்கு கேட்கணும்ன்னு ஆசையா இருக்கு. இத்தனை வருஷமா யாராவது அவளைப் பத்தி பேச மாட்டாங்களான்னு தவிச்சிட்டு இருந்தேன் மாமா.. சொல்லுங்க மாமா. அவ எப்படி இருக்கா?” ஆவலும், பரபரப்பும், தவிப்பும், ஒரு பக்கம் அழுகையும் முட்டிக் கொண்டு வர சூர்யா படபடத்தான்.

“கொஞ்சம் பொறுமையா கேளேன்டா.. முதல்ல ஒண்ணு கிளியர் பண்ணிடறேன்.. நான் வெளிய வர வரை நீயும் கேட்டுட்டு தானே இருந்த? சுஜி உன்னைப் பத்தி கேட்கவே இல்ல..” ப்ரதாப் எடுத்ததும் சொல்லவும்,

“ஆமா.. அவ என்னைப் பத்திக் கேட்கவே இல்ல..” தனக்கே சொல்லிக் கொண்டவனின் கண்களில் கண்ணீர் வழிந்தது..

“அடுத்து.. இன்னைக்கு அங்க டாக்டர் சுஜி தான்னு தெரிஞ்சு நாங்க போகல.. இன்னைக்குப் பார்த்தது எதற்சையா பார்த்தது தான்.. உங்க அக்காவுக்கு டாக்டர் பார்க்கலாம்ன்னு போனோம்.. அந்த டாக்டர் சுஜியா இருந்தது உன்னோட அதிர்ஷ்டம்..” மீண்டும் ப்ரதாப் சொல்லவும், சூர்யா ‘ஆம்..’ என்று தலையசைத்துக் கொண்டான்.  

“அடுத்து.. நாங்க காலையில பத்து மணிக்கே போயிட்டோம்.. அவளை இப்போ தான் பார்க்க முடிஞ்சது.. அந்த அளவுக்கு அவ ரொம்ப பிசி.. அதுவும் இன்னைக்கு நிறைய டெலிவெரி போல. அதுல ஒரு டெலிவரி க்ரிட்டிகள் கேஸ்ன்னு நினைக்கிறேன்..

ரொம்ப டென்ஷனா போன் பேசிக்கிட்டு, கையில இருந்த ரிப்போர்ட்சை எல்லாம் பார்த்துட்டு போயிட்டு இருந்தா.. அவங்க ரிலேடிவ் முகத்துல எல்லாம் அவ்வளவு டென்ஷன். நான் அப்படியே உட்கார்ந்து இருந்த நேரத்துல சுத்திப் பார்த்தேன். இவ நல்லபடியா காப்பாத்தி இருக்காடா.. அவ கையில குழந்தையோட வெளிய வந்து காட்டின அப்போ அவங்க ரிலேட்டிவ் எல்லாம் அவளை கை எடுத்து கும்பிட்டாங்க.. அந்தக் குழந்தையை அவ அவ்வளவு ஆசையா வச்சு இருந்தா. அதைப் பார்க்கும்போதே அப்படி சந்தோஷமா இருந்தது..” ப்ரதாப் சொல்லவும், சூர்யாவிற்குள் அவ்வளவு மகிழ்ச்சி..

“அவ்வளவு பெரிய ஆளாகிட்டாங்களா என்னோட டாக்டர் மேடம்? கேட்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கு. அப்பறம் மாமா?” நெகிழ்வாகக் கேட்க,

“சுஜி.. ரொம்ப சாந்தமான அழகுடா. அவ அந்த ஆபரேஷன் தியேட்டர் டிரஸ்ல நடந்து வந்த போது மரியாதை தானா வருதுடா.. சூப்பர் செலெக்ஷன் சூர்யா.. அந்த முகத்தைப் பார்க்கும்போதே நம்பிக்கை தானா வருது..” முதலில் ப்ரதாப் பாராட்ட, சூர்யா சிரிக்கத் துவங்கினான்..

“என் சுஜி எப்பவுமே அப்படி தான் இருப்பா.. சாதாரண நைட்டில கூட அவ அழகா தான் இருப்பா.. சரி.. அப்பறம்.. இன்னும்  சொல்லுங்க..” பசித்தவன் வயிற்றுக்கு கிடைத்த அமிர்தம் போல மேலும் அவளைப் பற்றிக் கேட்க,  

“ஹ்ம்ம்.. சரி.. நான் உனக்கு இன்னும் ரெண்டு போட்டோ அனுப்பறேன் பார்த்துட்டு வா..” என்றவன், அவன் எடுத்த இரண்டு புகைப்படங்களையும் அனுப்பி வைத்தான்.

அதைப் பார்த்து அதிர்ந்த சூர்யா, “மாமா? எதுக்கு அவ அடாப்ஷன் ஃபார்ம் ஃபில் பண்ணி வச்சிருக்கா? அவளுக்கா? அவளுக்கு எதுக்கு?” சூர்யாவின் குரலில் நடுக்கம்.

“நீ உங்க அக்காக்கிட்ட பிள்ளைப் பெத்துக் கொடு.. வளர்த்துக்கறேன்னு சொல்றது போல சொல்ல அவளுக்கு ஆளு இல்லையோ என்னவோ? அதனால அடாப்ஷன் போறாளோ என்னவோ?” கேலியாக ப்ரதாப் கேட்க,

“மாமா.. ப்ளீஸ் சீரியஸா சொல்லுங்க.. எனக்கு டென்ஷன் ஆகுது.. எதுக்கு அவ அப்படி செய்யறா?” சூர்யா அவனை மீண்டும் கேட்டான்.

“எனக்குத் தெரியல சூர்யா அதுல அவ பேர் தானே எழுதி இருக்கா. எதுக்கு அவ அப்படி ஒரு முடிவு எடுத்தான்னும் எனக்குப் புரியல.. நானும் கொஞ்சம் போட்டு வாங்கப் பார்த்தேன்..”

“என்னன்னு?” சூர்யா இடையிட,

“நான் பேச்சு வாக்குல இப்போ என்ன குழந்தைப் பிறக்கலைன்னா ஒரு குழந்தைத் தத்தெடுக்கலாம்ன்னு சொன்ன பொழுது அவ முகம் ஒரு மாதிரி வலியைக் காட்டிச்சு… எனக்கே அது பார்த்து ஷாக்கா தான் இருக்கு. இன்னும் உங்க அக்காவுக்கு அந்த விஷயம் தெரியாது..” என்றவன், சூர்யா தலையைப் பிடித்துக் கொள்ளவும், 

“கண்டிப்பா அவளுக்கு கல்யாணம் ஆகலை சூர்யா.. அது மட்டும் நான் உறுதியா சொல்லுவேன். ஏன்னா உங்க அக்கா அவ கழுத்துல இருந்த செயின கைல எடுத்து பார்த்த பொழுது, அவ முகமே அப்படி மாறிடுச்சு. பார்க்கவே பாவமா இருந்தது. அத உங்க அக்கா கையில இருந்து வாங்கி, அவ்வளவு அவசரமா சட்டைக்குள்ள தள்ளிக்கிட்டா. அதோட அந்த பிஞ்சுக் குழந்தை பொம்மை மேல இருந்த பேரைப் பார்த்தியா?” ப்ரதாப் கேட்டு நிறுத்த, சூர்யா ‘ஆம்’ என்று தலையசைத்தான்..

“எங்க ரெண்டு பேரோட பேர்ல முதல் ரெண்டு எழுத்து.. அவ எப்பவுமே அப்படி தான் எழுதுவா. சுஜிதா ஜெயசூர்யாவோட ஷார்ட் ஃபார்ம்..” தொண்டையடைக்க வந்த சூர்யாவின் பதிலில்,

“புரியுதா?” ப்ரதாப் கேட்க, சூர்யா ‘ஆம்’ என்று தலையசைத்தான்.

“ஹ்ம்ம்.. சரி.. இப்போ அவ எங்க இருக்கான்னு தெரிஞ்சுப் போச்சு. அவ என்ன செய்யறான்னு தெரிஞ்சுப் போச்சு.. அடுத்து என்ன சூர்யா? உங்க அக்காவுக்கு அவளைப் பார்த்ததுல தனக்கு குழந்தை பிறந்திடும்ன்னு ரொம்ப நம்பிக்கை வந்திருக்கு போல.. ஏன்னா வெளிய வந்ததுல இருந்து குழந்தையைப் பத்தி ஒரு வார்த்தை பேசல.. உன்னைப் பத்தி அவ கேட்கலன்னு தான் புலம்பிட்டு இருந்தா..” என்றவன், சூர்யா தலையசைக்கவும்,

“சொல்லு சூர்யா.. உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன தான் பிரச்சனை? மறைக்காம சொல்லு சூர்யா. எதா இருந்தாலும் சரி பண்ணலாம். போதும்.. நீ அங்க கஷ்டப்படற.. அந்தப் பொண்ணைப் பார்த்தாலும் பாவமா இருக்கு.. சொல்லுடா. அடுத்து என்ன செய்யலாம்ன்னு பார்ப்போம்..” ப்ரதாப் கேட்கவும், சூர்யா தயங்கியபடி, ‘மாமா..’ என்று இழுக்க,

“எனக்கு உண்மை வேணும் சூர்யா.. நான் உன்கிட்ட உண்மையை மட்டும் தான் எதிர்ப்பார்க்கறேன்.. அதுல ஏதாவது மறைக்கிற மாதிரி எனக்கு ஃபீல் ஆச்சுன்னா கூட நான் என்ன செய்வேன்னே எனக்குத் தெரியாது..” ப்ரதாப்பின் குரலில் அழுத்தம் தெரிய, சூர்யா ஒரு பெருமூச்சுடன் கடகடவென்று நடந்தவற்றை சொல்லத் துவங்கினான்.

அனைத்தையும் சூர்யா சொல்லி முடித்து, முகத்தை மூடிக் கொண்டு கண்ணீர் விடவும், ப்ரதாப்பிடம் அவ்வளவு அமைதி. கண்களைத் துடைத்துக் கொண்டவன், “நான் அப்படி நடந்திருக்க கூடாது மாமா. நான் அப்படி பேசி இருக்க கூடாது.. அவ பாவம்.. என்னை நம்பின பாவத்துக்கு நான் அவளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வதைச்சிட்டேன்.. அவ என்கிட்டே எதிர்ப்பார்த்தது நான் அவக்கிட்ட எல்லாம் ஷேர் பண்ணிக்கணும்ன்னு தானே.. ஆனா.. நான் அதைச் செய்யலையே.. அதுக்கு என்ன எல்லாம் பேசிட்டேன்.. எனக்கு எல்லாம் அவ முகத்துல முழிக்கிற ஆசையே இருக்கக் கூடாது.. ஆனா.. மனசு கேட்க மாட்டேங்குது மாமா.. நான் என்ன செய்யறது?” என்று தலையிலேயே அடித்துக் கொள்ள,

“இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கல சூர்யா..” வார்த்தையே வராமல் இறுகிய குரலில் ப்ரதாப் சொல்ல, சூர்யா தலையைக் குனிந்துக் கொண்டான்.

“நீ செஞ்சிட்டு வந்த காரியத்தோட பின் விளைவுகளை யோசிச்சியா சூர்யா? இதெல்லாம் உங்க அக்காவுக்கு தெரியுமா?” திகைப்புடன் ப்ரதாப் கேட்க,

அப்பொழுது தான் அதன் விளைவு புரிந்தவனாக, “மா..மா..” சூர்யா அதிர்ந்து போனான்.

“சொல்லு சூர்யா.. நீ கோவிச்சிக்கிட்டு இங்கயே இருந்திருந்தா கூட பரவால்லடா.. ஒரு நாள் ரெண்டு நாள்ல உன் கோபம் அடங்கின அப்பறம் அவளைத் தேடி இருக்கலாம்.. அதுவும் அங்க போயிட்ட. அவளைப் பத்தி.. நீ செஞ்சிட்டு வந்த காரியத்தைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா? அவளைத் தனியா தவிக்க விட்டுட்டு இல்ல வந்திருக்க? எனக்கு அதெல்லாம் நினைச்சாலே கலங்குது சூர்யா.. அவ தனியா என்ன எல்லாம் பேஸ் பண்ணினான்னு தெரியலையே..” ப்ரதாப் நொந்துக் கொள்ள,

“மாமா.. அப்படி எல்லாம் சொல்லாதீங்க மாமா.. எனக்கு பயமா இருக்கு.” அவன் பதறிப் போனான்..

“என்னடா அப்படிச் சொல்லாதேன்னு சொல்ற? கொஞ்சமாவது எதையாவது யோசிச்சு பார்த்தியா? சரி.. நான் கேட்கறேன்.. அவளை உன் பொண்டாட்டின்னு சொல்ற இல்ல.. அந்த அளவு உனக்கு அவகிட்ட உரிமையை அவ கொடுத்திருந்தா இல்ல.. அப்போ நீ என்ன செஞ்சிருக்கணும் சூர்யா?

அவகிட்ட நீ யூஎஸ் போற விஷயத்தை பத்தி முன் கூட்டியே சொல்லி இருக்கணும் இல்ல.. கடைசி நிமிஷத்துல நீ யூஎஸ் வர விஷயத்தைச் சொன்னா அவ உன்னைத் திட்டாம என்ன செய்வா? ஒருவேளை உங்க அக்காகிட்ட நான் ஆன்சைட் போற விஷயத்தை கிளம்பற அன்னைக்கு சொன்னா உங்க அக்கா என்ன செய்வா? இல்ல உங்க அம்மா என்னை என்ன எல்லாம் கேட்பாங்க கொஞ்சம் சொல்லேன்.. இல்ல நீயே சும்மா இருப்பியா? இல்லை நான் உங்க அக்காவை அப்படி ட்ரீட் பண்ணினா நீ சும்மா இருப்பியா?

உன்னை அந்தப் பொண்ணு புருஷனாவே நினைச்சு இருந்ததுனால தானே அதை எல்லாம் அவ எதிர்ப்பார்த்து இருக்கா? அதைக் கூட சொல்ல முடியாம நீ எல்லாம்.. போடா.. உன்கிட்ட அவ அதை எதிர்ப்பார்த்தது தப்பு தாண்டா…” ப்ரதாப்பின் வார்த்தைகளில் அவ்வளவு கடுப்பு..

“தப்பு தான் மாமா.. நான் செஞ்சது தப்பு தான்.. கோபத்துல அப்போ எனக்கு தெரியல மாமா.. அறிவு கெட்டு இங்க வந்து கொஞ்ச நாளைக்கு பேசாம இருந்துட்டேன்.. அப்பறம் தேடினா அவளைக் காணவே இல்ல..” அவன் சொல்ல,

“நீ செஞ்சிட்டு வந்ததுக்கு அவ உனக்காக காத்துக்கிட்டு இருப்பா பாரேன்.. ஏன் அவ கண் காணாம போனா? ஏன் அப்படி அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் யாரு கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்கன்னே புரியலையே..” ப்ரதாப் தலையை பிடித்துக் கொள்ள, சூர்யா நொந்து போனான்.

“மாமா.. எனக்கு பயமா இருக்கு மாமா..” சூர்யா பதற,

“ஏண்டா கோவிச்சிட்டு வந்தியே.. உனக்கு வேற எதுவுமே தோணவே இல்லையா? சரி.. அவ உனக்கு காண்டாக்ட் பண்ணி இருந்தா? உன்னோட பழைய சாட், மெயில் இதெல்லாம் பார்த்தியா?” ப்ரதாப் கேட்க,

“பார்த்தேன் மாமா.. இங்க வந்து செட்டில் ஆன உடனேயே என் கோபம் எல்லாம் போய் அவளை மிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.. அவ மெயில், சாட்ல எல்லாமே பார்த்தேன் மாமா.. அவ எதுவுமே எனக்கு பண்ணல.. நான் அப்பறம் என்னோட இந்தியா நம்பரையும் மெசேஜ் ஏதாவது வருமான்னு ஆன் செய்து பார்ப்பேன்.. அவளோட இந்தியா நம்பர் அட்ரஸ் எல்லாமே மாத்திட்டா..

நான் என் ஃப்ரென்ட்டை விட்டு அவ காலேஜ்ல பார்க்கச் சொன்னேன்.. ஆனா.. அவனுக்கு அவளை மீட் பண்ண முடியல.. எனக்கும் அவ ஒரு மெசேஜ் கூட செய்யல மாமா. ராங்கி..” என்று அவன் சொல்ல, ப்ரதாப் யோசனையுடன் தலையசைத்தான்.

“மாமா..” சூர்யா பரிதாபமாக அவனை அழைக்க,

“அவ ராங்கின்னா நீ என்ன சூர்யா? எனக்கு அந்தப் பொண்ணு வேற எதுவுமே பெருசா அனுபவிச்சு இருக்கக் கூடாதுன்னு மட்டும் தான் தோணுது. ஹையோ எனக்கு நிஜமா பைத்தியம் பிடிக்க வைக்கிறடா.. நிஜமாவே சொல்றேன்.. அவ வேற கல்யாணம் பண்ணி இருந்தா கூட நான் சந்தோஷப்படுவேன்டா.. போடா..” ப்ரதாப் தலையை பிய்த்துக் கொள்ள, சூர்யா கண்ணீருடன் அவனைப் பார்த்தான்..

“மாமா.” சூர்யா திகைத்து,

“மாமா.. ப்ளீஸ். எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணுங்க மாமா.. அந்த ஃபார்ம்ல அவ அட்ரஸ் இருந்தது இல்ல.. அந்த அட்ரஸ்ல போய் அவளைப் பார்த்துட்டு வரீங்களா? நான் வேணா அக்காக்கிட்ட சொல்லவா? எனக்கு தலையே சுத்துது மாமா.. நான் இப்போ என்ன செய்யட்டும்?” அவனையே சூர்யா கேள்வி கேட்க, ப்ரதாப் உதட்டைப் பிதுக்கினான்..

“நீ ஏண்டா அவக்கிட்ட முன்னயே சொல்லல.. அப்படி என்னடா உனக்கு ஈகோ? சொல்லி அவளை சமாதானம் செய்து நீ அங்க போயிருக்க வேண்டாமா? அது கூட முடியலைன்னா உனக்கு என்னத்துக்கு கல்யாணம்? அவ்வளவு ஒண்ணுல ஒண்ணா இருந்துட்டு சொல்ல வேண்டாமா? நான் எல்லாம் போய் பார்க்க மாட்டேன்..” ப்ரதாப் சொல்ல,

“மாமா.. மாமா ப்ளீஸ்.. அவளுக்கு வெளிநாடுக்கு போறதுனால பிரிஞ்சு வாழறது எல்லாம் பிடிக்காது மாமா.. அவங்க அம்மா அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணுவாங்கன்னு தான் அவ காலேஜ் சேர்ந்ததும் அவங்களை அனுப்பி விட்டுட்டா.. அதே போல அவங்க அப்பா வெளிநாட்டுல வேலைப் பார்த்ததுனால எந்த ஒரு ஃபன்க்ஷன்க்கும், எந்த ஒரு பண்டிகைக்கும் பேமிலியோட இருக்க முடியறது இல்லைன்னு அவ அடிக்கடி வருத்தப்படுவா. பணத்தை தவிர அதுல என்ன இருக்குன்னு கேட்பா மாமா..

‘என்னையுமே விட்டுட்டு தனியா இருக்க முடியல.. உங்களுக்கு சென்னைல வேலை கிடைக்கும்ன்னு தெரிஞ்சு இருந்தா பேசாம நான் சென்னை மெடிகல் காலேஜ்ல சேர்ந்திருப்பேன்.. இப்போ இப்படி நீங்க ஒரு பக்கம் நான் ஒரு பக்கம் இருக்கற மாதிரி இருக்கு. பேசாம இங்க ஏதாவது சாப்ட்வேர் கம்பனி இருந்தா வேலை வாங்கிட்டு வந்திருங்களேன்’னு சொல்லுவா மாமா..

அதனால தான் அவக்கிட்ட முன்னாலேயே சொல்லல. எங்க நான் ட்ரை பண்றது தெரிஞ்சு அவ வேண்டாம்ன்னு சொல்லிட போறாளோன்னு எனக்கு பயம். அவ வேண்டாம்ன்னு சொல்லி நான் செஞ்சது போல இருக்கப் போகுதேன்னு நினைச்சு தான் கடைசி நிமிஷத்துல சொன்னேன்.. அது வார்த்தை தடிச்சு ரொம்ப பேசிட்டேன்.. இப்படி ஆகிப் போச்சு..” வருத்தமாக சூர்யா சொல்ல, ப்ரதாப் தலையில் அடித்துக் கொண்டான்..      

“ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.. சரி சொல்லு.. இப்போ என்ன செய்யணும்? நீ என்ன செய்யப் போற?” கோபமாகவே கேட்க,

“மாமா அவ வீட்டுல சும்மா போய் பார்த்துட்டு வாங்க..” தலையைக் குனிந்துக் கொண்டு சூர்யா சொல்ல, ப்ரதாப் அவனைக் கூர்மையுடன் பார்த்தான்.

“என்ன பார்க்கணும்ன்னு சொல்ற?” அவன் கடுப்புடன் கேட்க,

“ஏதாவது பார்த்துட்டு வாங்க.. ஆனா.. ப்ளீஸ் எனக்காக போயிட்டு வாங்க மாமா.. எனக்கு வேற என்ன செய்யறதுன்னு தெரியல.. ப்ளீஸ் மாமா.. அவ வீட்ல எப்படி இருக்கான்னு பார்த்துட்டு வாங்க மாமா..” சூர்யா கெஞ்சத் துவங்கினான்..

“என்னத்தை பார்க்கறது? அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சான்னா? இல்ல.. பிள்ளைக் குட்டி இருக்கான்னு பார்த்துட்டு வரச் சொல்லறியா?” நக்கலாகக் கேட்க,

“மாமா.” சூர்யா பதட்டத்துடன் அழைத்தான்.

“சரி. சரி. டென்ஷன் ஆகாதே.. அவ இன்னும் உன்னை மறக்கலைன்னு நம்புவோம். நான் வீட்டுக்குப் போயிட்டு. ஜைஷுக்கிட்ட பேசிட்டு கூட்டிட்டு போறேன்.. இப்போ நீ சொல்லு உன்னோட அடுத்த ப்ளான் என்ன?” ப்ரதாப் கேட்க,

“ஏன் மாமா இப்படி என்னை வதைக்கறீங்க?” சூர்யா அவனைக் கெஞ்ச,

“ஹ்ம்ம்.. கேட்டேனே.. அடுத்து என்ன செய்யப் போற?” ப்ரதாப் கேட்கவும், சூர்யா தனது அடுத்த கட்ட நடவடிக்கையை சொல்லி முடித்தான்..

“சரி.. அப்போ நீ வேலையை விட்டுட்டு வரப் போறியா?” ப்ரதாப் கேட்க,

“ஹ்ம்ம்.. முதல்ல லீவ்ல இருந்து ஆரம்பிப்போம். லீவ் போட்டு வந்து என் சுஜி கால்ல விழுந்தாவது அவளை சமாதானப்படுத்தணும்.. இல்ல லீவ் தரலையா இங்க செட்டில் பண்ணிட்டு அங்க வரதைப் பத்தி பார்க்கணும்.. அங்க வந்து வேலை தேடனும்..” சூர்யா சொல்லிக் கொண்டே வர, ப்ரதாப் சிரிக்கத் துவங்கினான்..

“ஹ்ம்ம்.. எல்லாம் நல்லா தான் பிளான் பண்ற? அடுத்து உங்க அம்மாவை எப்படி சரி கட்டறதுன்னு யோசி.. அதுக்கும் முன்னால நாங்க போய் அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சான்னு பார்த்துட்டு வரோம்..” வேண்டுமென்றே ப்ரதாப் வம்பு வளர்க்க,

“மாமா.. நீங்க தானே அவளுக்கு கல்யாணம் ஆகி இருக்காதுன்னு சொன்னீங்க.. இப்போ இப்படிச் சொல்றீங்க?” சூர்யா அலற,

“அது என்னோட கெஸ்ன்னு தானே சொன்னேன்.. அது தான் நிஜம்ன்னு சொல்லலையே.. எதுக்கும் நான் அவ வீட்டுக்கு போய் பார்த்துட்டு வந்து கன்ஃபார்ம் பண்றேன்.. நீ போய் தூங்கு..” ப்ரதாப் சொல்லவும்,

“தூக்கமா? நானா? இதுக்கும் மேலயா? நான் இன்னைக்கு வர்க் ப்ரம் ஹோம் போடறேன்.. நீங்க அவ வீட்டுக்கு போயிட்டு எனக்கு வீடியோ கால் பண்ணுங்க..” எனவும்,

“சரி.. நான் வீட்டுக்கு போயிட்டு அப்பறம் ஜைஷு ப்ரீன்னா கூட்டிட்டு போயிட்டு வரேன்.. பை டா..” என்ற ப்ரதாப், தான் வாங்கி இருந்த கோல்ட் காபியை குடித்து முடித்து விட்டு, வீட்டிற்குச் சென்றான்..

error: Content is protected !!