kv-20

kv-20

20

சரி, இதுக்கு நான் சரியான ஆளா இருப்பேன்னு எப்படி நினைக்கறீங்க?” தானும் அந்நியன் தானே என்று கேட்க,

நீங்க கேட்கறது நியாயம் தான். அந்த வேர் உங்க மேல பட்டும் அது எறியாம இருந்துச்சே..அத வெச்சு தான் சொல்றோம். எங்களுக்கு உதவக் கூடிய ஒருத்தர் உடலில் ஒரு வித சக்தி இருக்கும். அந்த உடல் மேல இந்த வேர் பட்டா அந்த சக்தி இந்த வேரை எரிக்காது. அதை வெச்சு தான் சொல்றோம்.” அவன் விளக்கினான்.

இது வரைக்கும் எத்தனை பேர் அப்படி வந்தாங்க. உங்கள்ல யாரும் உங்க தெய்வத்த வெளிய கொண்டு வர முயரற்சிக்கலையா?” விஜயின் கேள்விகள் தொடர,

இது வரை இந்தக் காட்டுக்குள்ள வந்தவங்கள எங்க காவல் மிருகமே உள்ள விடாது. அவங்களுக்கு அந்த சக்தி இருக்கான்னு அதோட மோப்ப சக்தில தெரிஞ்சிடும். அப்படி இல்லன்னா அவங்கள அது அடிச்சிரும்.” அவன் சொன்னதும் ஜானவியின் உடல் ஒரு நொடி சிலிர்த்தது.

விஜய் மட்டும் நேற்று அவளைக் காப்பாற்றவில்லை என்றால், இன்று அவள் பிணமாகத் தான் கிடந்திருப்பாள். நினைக்கவே நெஞ்சம் பதற, காப்பாற்றிய அவனை மெல்ல கண் உயர்த்திப் பார்க்க அவன் அந்தக் காட்டு வாசியிடம் பார்வையை வைத்திருந்தான்.

இவள் பார்ப்பதை உணர்ந்தாலும், அது அவனுக்கு முக்கியமாகப் படவில்லை.

பாக்கறேன்னு தெரிஞ்சாலும் இந்தப் பக்கம் திரும்பமாட்டானே!” வாய்க்குள் முனகிக் கொண்டாள்.

இப்ப நான் என்ன செய்யணும்?” விஜய் அவனுடைய பங்கு என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கேட்க,

அந்தக் காட்டுவாசி அதற்கான வழிமுறைகளை சொல்ல ஆரம்பித்தான்.

*******************************************************************

கிருஷ்ணமாச்சாரி தனக்கென கொடுக்கப்பட்ட அறையில் மிகவும் சொகுசாகப் படுத்திருந்தார். நேற்று அந்த அவையில் இருந்தவர்களையும், அவர்கள் தன்னிடம் சொன்ன விஷயங்களையும் பற்றி ஒரு முறை ஆழ்ந்து சிந்தித்தார். எத்தனை பெரிய விஷயங்கள் அவை! நினைக்கவே பிரமிப்பாக இருந்தது!

அங்கே அமர்திருந்த பத்து பேரும், இவ்வுலகில் உள்ள மிக முக்கியப் புள்ளிகளின் பின்னே இருந்து அவர்களையே ஆட்டி வைப்பவர்கள் என்று தான் கூறவேண்டும். ஒவ்வொருவரும் ஒரு ஒரு நாட்டில் இருந்து வந்தவர்கள். ஆனால், இந்த உலகில் எங்கும் எப்போதும் செல்லும் பவர் அவர்களிடம் இருந்தது.

ஒவ்வொருவர் பற்றியும் அறிந்து கொண்டார். கிருஷ்ணன் தான் செய்யும் இந்த மந்திர வித்தைகளை பெரிதாக நினைத்துக் கொண்டிருக்க, மற்றவர்கள் அவருக்கும் மேலே பல பல விஷயங்களில் பெரும் புள்ளிகளாக இருந்தனர்.

நாங்க எல்லாரும் இந்த உலகில் , அதில் நடக்கும் அனைத்து விஷயங்களும் ஏற்கனவே சொல்லி எழுதி வைக்கப் பட்டது என்பதை அறிந்தவர்கள்.” முதலில் ஒருவர் பேச ஆரம்பிக்க , அந்த வாக்கியத்தை கிருஷ்ணன் உள்வாங்கவே சில நொடிகள் பிடித்தது!

என்ன?!!” அமர்ந்திருந்தவர் எழுந்துவிட்டார்.

இதுக்கே ஷாக் ஆகாதீங்க…உட்காருங்க!”

கிருஷ்ணன் மெல்ல அமர,

இதை நீங்க நம்பித் தான் ஆகணும். இது ஒரு மாய உலகம். இதுல நடக்கற எல்லாமே, இந்தக் காலத்துல இருக்கற கம்பியூட்டர் ப்ரோக்ராம் மாதிரி தான். என்ன நடக்கணும். எப்போ நடக்கணும், எல்லாமே எழுதி வைக்கப் பட்டது. அதைத் தான் நாம விதின்னு சொல்றோம். அந்த விதியை எழுதுனவங்க எங்க இருக்காங்க… ? உங்களுக்கு எதாவது ஐடியா இருக்கா?” அவரிடம் கேள்வி கேட்க

ஒன்றும் விளங்காமல் அதிர்ச்சியில் இருந்தார் கிருஷ்ணன்.

அவருக்கு விஷயத்தை மட்டும் சொல்லுங்க..” இன்னொருவர் கூற,

சரி. உங்களை எங்க கூட நாங்க சேத்துக்க முக்கிய காரணம் , நீங்க இருக்கற இடம். அந்த பத்மநாப சுவாமி கோவில்! அதில் திறக்கப் படாம இருக்கும் அந்தக் கருவறை! அதுக்குள்ள என்ன இருக்குன்னு நீங்க நினைக்கறீங்களோ அது இல்லை.

அங்கே இருக்கும் அந்த விஷயம் தான் நாம தேடிக்கிட்டு இருக்கற அந்த உலகத்துக்குப் போகற வழிக்கு ஆரம்ப வாசல்.” ஜீரணிக்க முடியாத விஷத்தை அவர் எளிதாகக் கூற ஆடிப் போனார் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் உண்மையில் இப்படி நினைக்கவில்லை. அந்த அறைக்குள் இருப்பது ஓர் அரிதான விஷயம் என்று தெரியும். அதை வைத்து எதையும் சாதிக்கலாம் என்ற வரை தான் அவரது மந்திர சக்தி அவருக்கு உரைத்தது. ஆனால் அது இத்தனை பெரிய இமாலய விஷயமாக இருக்கும் என்று அவர் நினைக்கவில்லை.

அப்படீனா? அதை உபயோகப் படுத்த முடியாதா? அதை வெச்சு நிறையா சாதிக்கலாம்னு நினைச்சேனே?!” அதிர்வுடன் கேட்க,

இந்த மாதிரி இந்த உலகத்தில் இருக்கும் அற்ப விஷயங்கள் மேல ஆசைய வளத்துக்காதீங்க… அப்படி இருந்தா நீங்க எங்க கூட ஓட்ட முடியாது. நாங்க எதிர்பார்க்கறது வேற.” அவருக்கு சற்று எரிச்சல் வர, மற்றொருவர் தொடர்ந்தார்.

இங்க பாருங்க கிருஷ்ணன். உங்களுக்கு தெளிவா சுருக்கமா சொல்றேன். கவனமா கேளுங்க.. இந்த உலகத்தில இருக்கற வசதி வாய்புகள் எல்லாம் மாயை. அதவாது மனிதர்களுக்கு இதன் மேல நாட்டம் அதிகமாக அதிகமாக, உண்மையான சொர்க்கம் நிம்மதி இவையெல்லாம் எங்க இருக்குன்னு தேடக்கூடாது என்பதற்காக உருவான விஷயம்.

அப்படிப் பட்ட இடம் இந்த உலகத்தில் யார் கண்ணுலையும் படாம மறஞ்சு இருக்கு. முதல்ல அதைத் தேடடி கண்டு பிடிக்கணும். அந்த இடத்துக்குப் போகற வழிகள் நிறையா இல்லை. அதைப் பத்தி தெரிஞ்சுகிட்டப்ப தான், உங்களப் பத்தி கேள்விப் பட்டோம். நீங்க இருக்கற அந்த இடத்துல தான் ரகசிய அறையில அதுக்கான வழி ஒளிஞ்சுகிட்டு இருக்குனு எங்களோட அனுமானம். அதுனால அதை அடைய நீங்க தான் உதவனும்.

அந்த இடத்துக்குப் போயிட்டா நாம இருக்கற நிலையே வேற… அதைப் பத்தி அப்பறம் சொல்றேன். நீங்க சொல்லுங்க.. அதை திறக்கற வழி உங்களுக்குத் தெரியும்னு இவர் சொன்னாருஎன்று கிருஷ்ணமாச்சரியைக் கூட்டி வந்தவரை கை காட்டினார்.

இத்தனை விஷயங்களையும் ஜீரணிக்க முடியாமல் அமர்ந்திருந்த கிருஷ்ணனுக்கு தொண்டை வரண்டது. மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து இரண்டு மிடறு குடித்தவருக்கு சற்று தெளிவு பிறக்க,

தொண்டையைச் செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

ஆமா.. அந்த கதவைத் திறக்கத் தான் நான் இப்ப சில திட்டம் போட்டிருக்கேன். அது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. அதை திறக்க ஒருத்தனால தான் முடியும். அவனையும் நான் இப்ப நெருங்கியாச்சு.

அதுனால இனிமே சுலபம் தான். கூடிய சீக்கிரமே அதை அடைஞ்சதும் உங்களுக்குத் தகவல் சொல்றேன்.” மிடுக்குடன் சொல்ல,

நீங்க தகவல் சொல்ல வேண்டாம். உங்க கையில இருக்கற அந்த தொடர்பு பந்தை மட்டும் எப்போதும் உங்க கூடவே வெச்சிருங்க. அதன் மூலம் நாங்க விஷயங்களை தெரிஞ்சுப்போம்.” என்றனர்.

அன்று மயானத்தில் கிருஷ்ணமாச்சாரி இவர்களைத் தொடர்பு கொண்ட அந்தப் பந்தைத் தான் குறிப்பிடுகிறார்கள் என அறிந்துகொண்டார்.

அப்போது தான் கவனித்தார். அங்கிருந்த எல்லோருமே ஒரு அழகிய நேர்த்தியான சிறு பையில் அந்தப் பந்தை வைத்திருந்தார்கள்.

அந்த இடத்தில் சரிஎன சம்மதிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழிகள் இல்லை.

உங்களுக்கு எதாவது உதவி வேணும்னா உடனே எங்களைக் கேட்கலாம்என்றதும்,

அவரைக் கிளம்பச் சொல்லி விட்டனர். அவரைக் கூட்டி வந்தவரே கொண்டு வந்து ஒரு அறையில் தங்க வைத்துவிட்டு, “இப்போது உறங்கி இருந்து விட்டு நாளை கிளம்புங்கள்என்று கூறினார்.

இது என்ன இடம். எனக்கு எல்லாமே குழப்பமா இருக்கு.” செல்ல இருந்தவரைத் தடுத்து கிருஷ்ணன் கேட்க,

ஷ்ஷ்… நாளைக்கு வந்து பேசுவோம்.” இப்போது எதுவும் பேசவேண்டாமென சைகை செய்துவிட்டுக் கிளம்பினார்.

அன்றைய இரவு அவருக்குக் குழப்பத்தில் கழிய, மறுநாள் விடியலில் தான் உறக்கம் வந்தது.

காலை கண்விழித்ததும், அவரது நண்பன் வருவதாகச் சொல்ல அவருக்காக இப்போது காத்திருந்தார். நேற்று நடந்த அனைத்தும் கேட்ட யாவையும் இன்னும் அவரை ஒரு மாய வலையில் வைத்திருப்பது போலத் தான் இருந்தது.

கதவு தட்டும் சட்டம் கேட்க, நேற்றைய நினைவை விடுத்து அவசரமாக எழுந்து சென்று கதவைத் திறந்தார். எதிர்ப்பாத்தது போல அவரது நண்பர் தான் வந்திருந்தார்.

வாங்க.. உங்களுக்காகத் தான் காத்திருந்தேன் வேணு.” உள்ளே வரவேற்க,

என்ன சந்தேகம் கிருஷ்ணன் சொல்லுங்க..?” நிதானமாக வந்து அமர்ந்தார்.

வேணு, முதல்ல இது என்ன இடம் சொல்லுங்க..?” அவருக்கு எதிரே இருந்த நாற்காலியில் கிருஷ்ணன் அமர,

மெல்ல சிரித்தார் வேணு.

இது நாம வாழற உலகத்தோட ஒட்டாத ஒரு பகுதி. அங்க வந்த மனுஷங்க எல்லாம் வேற மாதிரி. இந்த உலகத்தை ஆளனும்னு நெனச்சா, அத விட்டு வெளிய வந்தா தான், அதோட தன்மையும் அதன் சக்தியும் எந்த அளவுன்னு தெரியும். அதுலயே இருந்து பார்த்தா தெரியாது. அதுனால தான் அப்படி ஒரு ப்ளான் போட்டு, பூமியைத் தாண்டி இந்த இடத்தை நிர்மானிச்சு இருக்காங்க.

நீ வந்தியே லிஃப்ட்.. அது ஒரு மார்டர்ன் ராக்கெட். அதை அஃபீஷியலா இந்த உலகத்துக்கு அறிமுகப் படுத்த இன்னும் இருநூறு ஆண்டுகள் கூட ஆகலாம். சில விஷயங்களை வெளிய சொல்லாம விஞ்ஞானிகளை வெச்சு செஞ்சுக்குவாங்க. அப்படிப் பட்ட செல்வாக்கு உடையவங்க இவங்க.

இன்னும் சொல்றேன் கேளு. ஏலியன் கிட்டயே தொடர்பு வெச்சிருக்காங்க. அப்போ இவங்க கிட்ட நீ எவ்வளவு ஜாக்கிரதையா இருக்கணும்னு யோசி. அதுமட்டுமில்லாம, இன்னொரு முக்கியமான விஷயம் கவனி.

இவங்க இந்த உலகத்தைத் தாண்டி வெளிய வந்து ஒரு உலகத்தை நிர்மானிச்சவங்க. அப்போ அவங்க தேடற ஒரு விஷயம் அந்தக் கோவில் நிலவரைல ஒளிஞ்சு இருக்குன்னா, அது எப்பேர்பட்ட விஷயம்னு யோசி. அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் சுயநலமா யோசிச்சுடாத. ஒரு ஒரு மாபெரும் சக்தி. சோ ரொம்ப ரொம்ப கவனமா இரு.”

தொண்டையில் இருந்த எச்சிலைக் கூட விழுங்க மறந்தார் கிருஷ்ணன். தலை சுற்றியது அவருக்கு. இன்னும் அது பற்றித் தெரிந்து கொள்ள ஏகப் பட்ட விஷயம் இருந்தது அவர் மூளைக்குள். எதைக் கேட்பது, எதை விசுவது என்றே தெரியவில்லை.

எனக்கு இதெல்லாம் ஜீரணமாக இன்னும் நேரம் வேணும் போலிருக்கு. அது சரி, இந்த உலகத்துல நடக்கற எல்லாமே ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டதுன்னு சொன்னாங்களே! அது நிஜமா?” பேயரைந்த முகத்துடன் காணப்பட்டார் கிருஷ்ணன்.

அது ஒரு லாஜிக்ல அவங்க சொல்றாங்க. அதாவது …” என்று இழுத்தவர்,

இது ஒரு அதி நுண்ணிய இயற்பியல் விஷயம். சில பேர் நம்பறாங்க.” பொதுப்படையாகக் கூற, கிருஷ்ணனுக்கு அதை விட முடியவில்லை.

இல்ல எனக்குத் தெளிவா சொல்லு. எதையும் அரை குறையா புரிஞ்சுக்க என்னால முடியாது.” தெரிந்து கொண்டே ஆகவேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார்.

உனக்கு ஒரு உதாரணம் சொல்றேன். ராமர் கடைசி காலத்துல அவர் உயிரை எடுத்துட்டுப் போக யமன் காத்திருந்தாராம். ஆனா ஹனுமான் யமனை உள்ளே விடலயாம். இத தெரிஞ்சுகிட்ட ராமர், தன்னோட மோதிரம் ஒன்றை கழட்டி அந்த மாளிகை தரைல இருந்த ஒரு இடுக்குல போட்டாராம்.

பிறகு ஹனுமானை விட்டு அதை எடுத்து வரச் சொன்னாராம். ஹனுமானும், ராமர் சொல்லைத் தட்டாம, தன்னோட உருவத்தை சிறிதாக்கிக் கொண்டு அந்த பள்ளத்துல விழுந்து தேட, அது பாதாள லோகம் வரை போச்சாம்.

அப்போ அந்த இடத்துல ஒரு மோதிரக் குவியலே இருந்துச்சாம். அந்த லோகத்தக் காவல் காத்த வாசுகி பாம்பு ஹனுமானுக்கு விளக்கம் சொல்லுச்சாம்.

ஒவ்வொரு முறை த்ரேதாயுகம் முடியறப்ப ராமர் இப்படி ஒரு மோதிரத்தை வேணும்னே தவற விட்டு, ஒரு வானரத்த விட்டு கொண்டு வரச் சொல்லுவாராம். அப்போ தான் அவர் இந்த உலகத்தை விட்டு போய் மீண்டும் அடுத்த ஜென்மம் எடுக்க முடியுமாம்.

அதுனால இரு ஒரு வழக்கமா, யுகம் யுகமா நடக்கற விஷயம் தான். இந்த உலகம் சுத்திக்கிட்டே தான இருக்கு. அப்போ ஒரு இடத்துல இருந்து போனா, மீண்டும் அந்த இடத்துக்கு வந்து தான ஆகணும். அது போலத் தான், இது எல்லாமே திரும்பத் திரும்ப நடந்துக்கிட்டே இருக்கற விஷயம்னு விளக்கம் தந்து அனுப்புச்சாம் அந்தப் பாம்பு.

அந்தக் கதைய நாம நம்பினா, இப்போ இந்த உலகத்துல இருக்கற நடக்கற எல்லாமே, ஏற்கனவே நடந்து தானே இருக்கணும். அப்போ இந்த உலகத்தை விட்டு நாம தள்ளி நின்னு பாத்தா, இங்க நடக்கற எல்லாமே தெரியும் இல்லையா. அதைத் தான் அவங்க சொல்றாங்க.” வேணுவின் விளக்கம், ஏற்கனவே தலை சுற்றலுடன் இருந்த கிருஷ்ணனை மேலும் குழப்ப, அவர் அங்கிருந்த மெத்தையில் கண்ணை மூடிப் படுத்தே விட்டார்.

மறுபுறம் அங்கே விஜயிடம் வழிமுறைகளைச் சொல்லிக் கொண்டு இருந்தான் அந்தக் காட்டுவாசி.

error: Content is protected !!