வெண்பா-1

வெண்பா-1

வெண்பா

அத்தியாயம்-1

திருச்சி மாநகராட்சி!

மே மாத வெயில் திருச்சி மக்களின் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டிலேயே திருச்சியின் வெயிலைப் பற்றி சொல்லத் தேவையில்லை. அதுவும் இம்முறை நாற்பத்தொரு டிகிரியை தொட்டு சாதனை படைத்து, அனைவரின் க்ளூக்கோஸையும் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக் கொண்டிருந்தது.

ஒவ்வொருவருக்கும் உடலில் இருந்து ஆவி பறந்து கொண்டிருக்க, எப்போதடா அக்னி வெயில் முடியும் காத்துக் கிடந்தனர்.

கோடை வெயில் கோலகலமாய் காலை எட்டு மணிக்கே சுட்டெரித்துக் கொண்டிருக்க, தனது வீட்டின் சாமி படத்தின் முன்பு நின்றிருந்தாள் வெண்பா.

வெண்பா!

இருபத்தைந்து வயது!

வயதிற்கேற்ற வதனம்!

அதில் அவளின் பதவிக்கு ஏற்ற ஆளுமையும், அதிகாரமும்!

உதடுகள் வழக்கம் போல சிறிய வயதில் தந்தை சொல்லிக் கொடுத்த சிவனின் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது.

எளிமையான பிங்க் நிற காட்டன் புடவையை இக்காலத்து பெண் போன்று அழகும் பாந்தமுமாய் கட்டியிருந்தவளின் சங்குக் கழுத்தில் மெல்லிய ப்ளாடின் சங்கிலி.

அதில் ஒற்றை முத்து வைத்த பென்டன்டும், செவியில் ஒற்றை முத்து வைத்த தோடும் அலங்கரித்திருக்க, நெற்றியில் நடுவே கருப்பு வண்ண குட்டி பொட்டு.

அதரங்களில் மெலிதாய் பேபி பிங்க் லிப் பாம்!

முதுகு வரை இருந்த சிகைக்கு பனானா க்ளிப்!

இடது கரத்தில் கருப்பு நிற வாட்ச்!

தினமும் இதுதான் அவளின் உடை!

இவை அனைத்தும் அவளை பெண்மையாய் அலங்கரித்ததை விட, கம்பீரமாய் அலங்கரித்தது என்பதே மிகச்சரி.

கடவுளை வணங்கிவிட்டு வந்தவள், சாப்பிட அமர, வெண்பாவின் தாயார் அருந்ததி சமையல் கட்டிற்குள் இருந்து வெளிப்பட்டார். அவளைப் போலவே முகம். ஆனால் அதில் சாந்தமும், அமைதியும் வழிந்து கொண்டிருந்தது.

மகளுக்கு வந்து தட்டை எடுத்து வைத்த அருந்ததி அதில் சுடச்சுட இட்லியை பரிமாறிவிட்டு சாம்பாரையும், சட்னியையும் ஊற்ற, அடுத்து கிண்ணத்தில் நெய்யோடு கலக்கி வைத்திருந்த இட்லி பொடியை வைக்க வர அவ்வளவு தான்.

மகள் பார்த்த பார்வையில் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டார். அவள்தான் எண்ணை உணவுகள், பொரித்த வகை பதார்த்தங்கள் அனைத்தையும ஒதுக்கி வைத்து உடலை பராமரித்து வருகிறாளே.

“சரிடி.. வேணாம்னு சொன்னா நானும் வச்சிட போறேன்.. அதுக்கு எதுக்கு இப்படி முறைக்கிற.. நீ ஊருக்கு தான் கலெக்டர்.. ஆத்துல இல்ல” என்ற அன்னையின் பேச்சில் புன்னகைத்தவள்,

“எந்த ஆத்துல?” என்று கேட்டாள் கேலியாக.

மகளின் தலையில் கொட்டு வைத்த அருந்ததி, “நீயும் உன் அப்பாவும் தான் நம்ம பாஷை எல்லாம் மறந்துட்டீங்க.. நானாவது பேசறனேன்னு விடுங்கோ.. உங்ககூட பேசி பேசி எனக்கே இப்ப எல்லாம் நம்ம ஆத்து பாஷை குறைஞ்சிடுச்சு” என்று பெருமூச்சு விட, சிரித்தபடியே அங்கு வந்து சேர்ந்தார் அந்த வீட்டின் குடும்பத் தலைவர் குருமூர்த்தி.

“என்னடா காலைலயே உங்க அம்மா ஸ்டார்ட் பண்ணிட்டாளா?” தனது கண்ணாடியை போட்டபடியே சேரில் அமர்ந்தவருக்கும் உணவை பரிமாறிய அருந்ததி, “அப்பாவுக்கும் பொண்ணுக்கும் என்னை வம்பு இழுக்கலைனா தூக்கம் வந்திடாதே” என்று மூக்கில் புகை வண்டியோடு கோபப்பட்டார்.

இரண்டு இட்லிகளையும் சிரித்தபடியே காலி செய்த வெண்பா, உள்ளே சென்று தனது அலைபேசியை எடுத்து வர, ஏற்கனவே அவளுடைய பேக்கை கார் ஓட்டுனரிடம் தந்திருந்தார் அருந்ததி.

கம்பீரம் குறையாது நடந்து செல்லும் மகளையே பார்த்த பெற்றோர்களின் மனம் புன்னகைக்க, அருந்ததி, “அந்த தரகர் என்ன சொன்னாருனா?” என்று கேட்டார்.

“அந்த பையன் ஜாதகத்தையும், வெண்பா ஜாதகத்தையும் பாத்துட்டு கூப்பிடறேன்னு சொன்னாரு” என்று குருமூர்த்தி கூற, “நல்ல புள்ளையான்டானா இருந்தா போதும்” என்றதும் வக்கீல் குருமூர்த்தி எட்டிப் பார்த்தார்.

“என்னடி பேசற நீ.. நல்ல பையனா இருந்தா மட்டும் போதாது.. நம்ம வெண்பாக்கு இணையா இருக்கனும்.. படிப்புல, அறிவுல, கம்பீரத்துல” என்றவர் குலம், கோத்திரம் அதிகம் பார்ப்பவர்.

அதை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார். இறங்கவும் மாட்டார்.

அவரவருக்கு அவரவர் இது பெரியது.

அருந்ததியும் யாரையும் இழிவாக எண்ணவில்லை என்றாலும், திருமணம் என்று வரும்பொழுது அது யாராக இருந்தாலும் தன்னுடைய இனத்தில் பார்க்கலாம் என்று நினைப்பதில் தவறில்லையே.

சாப்பிட்டு முடித்த குருமூர்த்தி, பட்டையை இட்டுக் கொண்டு, தன்னுடைய காரில் கோர்ட்டிற்கு பறந்தார். திருச்சியில் இருக்கும் கொஞ்சம் புகழ்பெற்ற வக்கீல்களில் இவரும் ஒருவர். அந்த கர்வமும் இவர் தலையில் அதிகமே உண்டு.

வெண்பாவிற்கு ஒரு அண்ணன் இருக்கிறான். பெயர் ஸ்ரீராம். வெண்பாவை விட நான்கு வயது பெரியவன். தற்போது தான் திருமணம் முடிந்து, தான் பணிபுரியும் அலுவலகத்திற்கு அருகிலேயே மனைவியுடன் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருக்கிறான்.

குழந்தைகள் நல மருத்துவன்.

மொத்தத்தில் எந்தவொரு தங்கு தடங்கலும் இன்றி அவரவர் வேலைகள் போய் கொண்டிருந்தது.

காரில் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த வெண்பா, அன்றைய வேலைகளை பின்னால் அமர்ந்திருந்த தன்னுடைய செக்கரெட்டரி மூலம் கேட்டுக் கொண்டே வந்திருக்க, “அப்புறம் ராஜேஷ், அந்த ஸ்கூலுக்கு பக்கத்துல வைன் ஷாப் பத்தின மனு வந்துச்சுல.. என்ன ஸ்டெப்ல இருக்கு” என்று வினவ, ராஜேஷோ என்ன சொல்வது என்று தெரியாமல் பிதுங்க, கார் சடன் ப்ரேக்கிட்டு நின்றது.

வெண்பா என்னவென்று சாலையை பார்க்க, ட்ராபிக் கான்ஸ்டபிளும், பைக்கில் இருந்தபடி ஒரு வாலிபனும் வாய்ப் போர்க்களத்தின் உச்சத்தில் இருந்தனர்.

காரில் இருந்து இறங்க முயன்ற ட்ரைவரை ஒற்றை விரலை நீட்டி தடுத்த வெண்பா, தன் பின்னே திரும்பிப் பார்த்தாள். போக்குவரத்து நெரிசல் ஆகத் தயாராக இருந்தது சாலை.

அந்த ஏரியாவின் இன்ஸ்பெக்டருக்கு அழைத்தாள். அலைபேசியை அவன் எடுத்தது தான் தாமதம், அவளை ஐயராத்து பெண் என்றால் ஒருவன் நம்பமாட்டான்.

இன்ஸ்பெக்டரை வெண்பா ஆங்கிலத்தில் லெப்ட் ரைட் வாங்க, அவனோ, “ஸாரி மேடம், ஸாரி மேடம்.. பாக்கறேன் மேடம், பாக்கறேன் மேடம்..” என்றவர் ஃபோனை வைத்துவிட்டு நேராக அந்த ட்ராபிக் கான்ஸ்டபிளுக்கு அழைத்து ஒரு காட்டு காட்ட, தனக்கு ஐம்பதடி இடைவெளியில் இருந்த மாவட்ட ஆட்சியரின் காரை பார்த்தான் அவன்.

அதுவும் அவனை அழுத்தமாகவும், கூர்மையாகவும் பார்த்தபடி அமர்ந்திருந்த வெண்பாவை கண்டவனுக்கு வியர்த்து வடிய, தன்னுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த வாலிபனை நகர்த்தியவன், மற்ற அனைவருக்கும் வழியை விட, ஒரு வழியாய் நெரிசல்கள் குறைய, கார் அவனை கடக்கும் போது, வெண்பாவின் பார்வையிலேயே அந்த கான்ஸ்டபிளுக்கு தொண்டை மேலே கீழே ஏறி இறங்கியது.

வரும்வழியில் ஆசிரமத்திற்கு காரை விட சொன்னவள், அங்கு இருக்கும் தலைமை அதிகாரியும், அந்த ஆசிரமத்தின் உரிமையாளருமான ராதாவை சந்திக்கச் சென்றாள்.

ஒருகாலத்தில் அவர் அவளின் பள்ளி ஆசியரும் கூட.

சிறு வயதில் இருந்தே துறுதுறுவென்று இருக்கும் வெண்பா என்றால், அவருக்கு பிரியம் அதிகம்.

வெண்பாவிற்கும் அவரின் உடை, நடை, பாவனை, கம்பீரம் என்று சிறுவயதில் பார்த்து அவரின் மேல் ஈர்ப்பு வந்தவளுக்கு அவரைப் போலவே இருக்க வேண்டும் என்று சிறிய வயதில் இருந்து ஆசை.

வெண்பாவின் தந்தை குருமூர்த்தி வேறு, ராதா அவரின் கணவருக்கு நெருங்கிய நண்பர் வேறு. ராதாவின் மகள் மீராவும் வெண்பாவிற்கு நெருங்கிய தோழி. அதனாலேயே இரு குடும்பமும் எளிதில் நண்பர்களாகி போனது.

அதுவும் வெண்பாவிற்கு ராதாவிடம் ஒட்டுதல் அதிகம். அதனால் அவரை வாரத்தில் ஒரு முறையாவது வந்து பார்த்துவிடுவாள்.

காரிலிருந்து இறங்கிய வெண்பா நேராக அங்கிருந்து மேலாளரின் அறைக்குள் நுழைய, அவள் இன்று வருவாள் என்று தெரிந்திருந்தவர், “வா வெண்பா!” என்று வரவேற்றவர், அவளுக்கு பிடித்த கேசரியை எடுத்து டேபிளில் வைத்தார்.

பொய்யாய் முறைத்தாள் வெண்பா!

அவரும் கேலியாய் அவளை பார்த்தார்!

“நீ என்னதான் டயட் மெயின்டெயின் பண்ணாலும், எனக்கு அந்த ஆறு வயசு குண்டு வெண்பா தான்” என்றவரின் கரத்தில் இருந்த டிபன் பாக்ஸை சிரிப்புடன் வாங்கிய வெண்பா, “உங்களுக்காக சாப்பிடறேன்” என்று நெய் மிதந்த கேசரியை வாயில் வைத்தாள்.

வெண்பாவையே பார்த்திருந்தார் ராதா!

சிறிய வயதில் இருந்து நெய் இல்லாது சாப்பிடமாட்டாள். அதுவும் மாலை கண்டிப்பாக நொறுக்க வேண்டும் சிறிய வயது வெண்பாவுக்கு. சிறிய வயதிலேயே திருப்பதி லட்டு போன்று கொலுக் மொலுக்கென்று இருந்தவளை அனைவருக்கும் பிடிக்கும். அதன்பிறகு அவள் பெரிய மனுஷியான போது எடை அதுவாக குறைய, சக தோழிகளை பார்த்தவள், இன்னும் எடை குறைக்க வேண்டும் என்று யோகா பயிற்சி சென்று எடையை குறைத்து வைத்தாள்.

அப்போது கூட வாயை அவ்வளவாக அவள் கட்டியது கிடையாது. வீட்டில் செய்வது அனைத்தையும் சாப்பிடுபவள் தான். இந்த கல்லூரி முடித்த பிறகு தான் ஆரோக்கிரமாக இருக்க வேண்டும் என்று செலக்ட்டிவ்வாக உண்ண தொடங்கிவிட்டாள்.

முதலில் மகள் சாப்பிடுகிறாள் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அருந்ததிக்கே மகள் இப்போதெல்லாம் சாப்பிடமாட்டேன் என்கிறாள் என்கின்ற குறை.

அவள் சத்தாக சாப்பிடுவதையே அவர் குறைவாக சாப்பிடுவதாக எண்ணினார்.

அவள் ஆசை ஆசையாக சாப்பிட்டு பார்த்ததை பார்த்து பழகியவருக்கு இப்போது இப்படி பார்த்தால் தாங்காது தானே? அதுவும் அன்னையாக யாருக்கு தான் பிடிக்கும்?

இரண்டு வாய் சாப்பிட்ட வெண்பா, “இரண்டு வாய்கே கலோரீஸ் ஏறுன மாதிரி இருக்கு ஆன்ட்டி.. ப்ளீஸ் போதும்” என்று கேட்ட விதத்தில், அவரும் வாய்விட்டு சிரித்து தலையை ஆட்டியிருந்தார்.

சிறிது நேரம் அவரிடம் உரையாடியவள், “சரி ஆன்ட்டி கிளம்பறேன்..” என்று எழுந்து வெளியே வந்து வாகனத்தில் ஏறும் வரை அவளுடனே நடந்து வந்தவர், “டேக் கேர் வெண்பா” என்றிட, “நீங்க தான் ஒழுங்கா சாப்பிட மாட்டிறீங்கனு உங்க ரோமியோ கம்ப்ளைன்ட் பண்றாங்க” என்று ராதாவின் கணவர் கூறியதை கூறியவளின் தோளில் செல்லமாய் அடி போட்டார் அவர்.

அடுத்த பத்து நிமிடங்களில் கார் வந்து மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் நிற்க, காரை ஒருவர் வந்து திறந்துவிட, கம்பீரம் குறையாது, நிமிர்வான நடையுடன், சுறுசுறுப்பிற்கு பஞ்சமில்லாது நடந்து வந்தவளை பார்த்து அனைவரும் வணக்கம் தெரிவித்து எழுந்து நிற்க, சிறிய தலையசைப்புடன் நடந்து தனது அறையை அடைந்தாள்.

தன் பதவிக்கே உண்டான நாற்காலியில் சிறிது கர்வமும், பெரும் பெருமையுமாக உள்ளுக்குள் வழக்கம் போல பூரித்து அமர்ந்தவள், ராஜேஷிடம் விட்ட இடத்தில் இருந்து தொடங்கினாள்.

“என்னாச்சு ராஜேஷ் அந்த வைன் ஷாப் விஷயம்?” என்று வினவ, எச்சிலை மென்று விழுங்கியவன், “மேம் அது அந்த ஏரியா கவுன்சிலருக்கு சொந்தமானது போல” ராஜேஷ் இழுக்க, ஒரு பைலை பார்த்துக் கொண்டே அடித்துவிடும் பார்வையோடு தனது செக்கரெட்டரியை அவள் பார்த்த பார்வையில் அவனோ எச்சிலை மென்று விழுங்கினான்.

செவியை அனைத்திற்கும் தயாராய் வைத்துக் கொண்டான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த வெண்பா, “வாட்? இதை சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்ல? ஒரு கவுன்சிலருக்கு பயந்துட்டு வந்து எங்கிட்ட நிக்கறீங்க? கடமைன்னு வந்தா யாரா இருந்தாலும் எதிர்ல நின்னு தான் ஆகணும்.. இதெல்லாம் படிச்சுட்டு தானே வந்திருப்பீங்க” என்று குரல் மேலேயும் செல்லாது கீழேயும் இறங்காது ஒரே தொணியில் சரமாரியாக திட்டியவளை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் ராஜேஷ்.

பொறுமையிழந்த வெண்பா, “எருமை மேய்க்க தான் லாயக்கு” என்று திட்டிவிட்டு, அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் யார் என்று விசாரித்தாள்.

பெயரை கேட்டவுடன் முகத்தைச் சுளித்து, “அவனா?” என்று நினைத்தவள், ‘பொம்பளை பொறுக்கி’ மனதினுள் நினைத்துவிட்டு, “டிசிபி விருத்தாசலமை போய் பாத்துட்டு வர்ற சொல்லுங்க.. நான் ஆர்டர் தர்றேன்” என்றவள் அடுத்த பத்து நிமிடத்தில் கையெழுத்தை இட்டு ராஜேஷிடம் ஒப்படைக்க, திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் தனது காலை வைத்தான் சஞ்சய் கிருஷ்ணன்.

தோளில் ஒரு ட்ரேவல் பேக் மாட்டப்பட்டு இருக்க, இடது கரத்தில் ஒரு ட்ராலி இருக்க, வலது கரத்தில் அவனுடயை நாலரை வயது மகள் ரியா.

மகளுடன் அவன் திருச்சிராப்பள்ளியில் கால் வைத்து இறங்கியவுடனே, திருச்சியின் கடுஞ்சுடர் வெயிலையே மேகங்கள் சூழத்தான் செய்தது.

இரயிலில் இருந்து இறங்கியவுடன், மகளைப் பார்த்து அவன் புன்னகைக்க, தந்தையைப் போலவே தோளில் குட்டி பார்பி பேக்கை மாட்டியிருந்தவளும் புன்னகைக்க, இருவருக்காக காத்திருந்த ஒருவர் சஞ்சயிடம் வந்து ட்ராலியை வாங்கினார்.

மூவரும் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கிளம்ப சுமார் இரு கிலோ மீட்டர் தூரம் தான் கார் வந்திருக்கும். “டாடி! டாடி! குச்சி ஐஸ்” என்று மடியில் இருந்தபடியே குதித்த மகளிடம், “ஓகே! ஓகே! வாங்கலாம்” என்றவன், மகளுடன் காரில் இருந்து இறங்கினான்.

பிள்ளை கேட்டால் அது வேண்டாம், இது வேண்டாம் என்று சொல்லும் ரகம் அவன் இல்லை. “பிடித்திருக்கிறதா சாப்பிடு” என்ற கேட்டகிரி அவன்.

அது ஒரு முதியவர் தள்ளிக் கொண்டு வந்து வைத்திருந்த ஐஸ் பெட்டி. பெரிய குடையை வைத்து அதற்கு அடியே கடையை போட்டிருந்தார்.

ஐஸ் பெட்டிகுக்குள் எம்பி நின்று கண்களை உருட்டி உருட்டி பார்த்தவள், “ஒரு பால் ஐஸ், ஒரு குச்சி ஐஸ்” என்று அவரிடம் தன் இரண்டு குட்டி விரல்களை காட்டி சொன்ன விதத்தில், யாருக்கு தான் அவளை பிடிக்காது.

கடைக்காரர் சஞ்சயை பார்க்க, “பேபி கேக்கறதே தந்திடுங்க” என்றான்.

இரு ஐஸையும் தன் குட்டி வாயால் சப்பி சப்பி சாப்பிட்டவள், “ஊஉஉஉ” என்று அதனுடைய குளுமை தாங்காது உதட்டை குவித்து ஊதி மறுபடியும் சாப்பிட, மகள் சாப்பிடும் அழகையே பார்த்துக் கொண்டிருந்தவன், ஃபோனில் அதை படமும் பிடித்தான்.

சாப்பிட்டு முடித்தவள், “டாடி!” என்று உடையை காட்ட, இளம் ஆரஞ்சு வண்ண உடையில் ஆங்காங்கே ஐஸ்க்ரீம் கறைகள்.

மகள் இரு கரங்களையும் அவனிடம் தூக்க, மகளை அலேக்காக தூக்கியவன், கடைக்காரரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு, “பாட்டி நாளைக்கு வருவாங்க இல்ல.. துவச்சுப்பாங்க” என்றிட தந்தையுடன் காரில் ஏறி அமர்ந்தவள், தந்தையின் பாக்கெட்டில் இருந்த ஃபோனை எடுத்தாள்.

ஃபோனை எடுத்தவள் தந்தையின் மடியில் அமர்ந்து கொண்டே பாட்டிக்கு வீடியோ கால் செய்ய, “ஹாய் மீனும்மா.. நாங்க திருச்சி வந்தாத்சு” என்று மழலையில் தனது மஷ்ரூம் கட் அசைய, முன் பற்கள் தெரிய சிரித்துப் பேசிய பேத்தியை பார்த்த மீனாட்சி, பின்னே மகனையும் பார்த்தார்.

பேத்தியும் மகளும் மாறி மாறி பேசத் துவங்க, “சட்டைல என்னடாமா கறை?” மீனாட்சி கேட்க, “அதுவா மீனும்மா.. ஐஸ்க்ரீம் கறை.. நீங்க வந்து துவைப்பீங்கனு அப்பா சொன்னாங்க” என்ற பேத்தியையும் மகனையும் பொய்யாய் முறைத்த மீனாட்சி,

“அப்பனும், மகளும் எனக்கு வேலை லிஸ்ட் போட்டு வச்சிருக்கீங்களா?” என்று மிரட்ட, தந்தையும் மகளும் அவரை பார்த்து சிரித்தனர்.

“ரியா குட்டி.. பாட்டி நாளைக்கு வந்திடறேன்.. அது வரைக்கும் நீங்களே உங்க வேலை எல்லாம் செஞ்சுக்கணும்” என்று கூற, சரியென்று தலையாட்டிய வாண்டு,

“நீங்க தாத்தாவை அடிக்காம, வேலை வாங்காம பாத்துக்கங்க” என்று வாயடித்தவளை, “அடி!!!” என்று அவர் துவங்கும் முன் ஃபோனை கட் செய்தவள் தந்தையை பார்த்து சிரிக்க, சஞ்சயையும் மகளை பார்த்து சிரித்தான்.

தந்தையிடம் இருந்து தங்களை அழைத்து வந்தவரிடம் தலையை திருப்பியவள், “உங்க பேர் என்ன?” என்று கேட்க அவரோ, “மாணிக்கம் பாப்பா” என்றார் புன்னகையோடு.

உடனே தந்தையிடம் திரும்பியவள், “டாடி! அப்போ இனி இவங்கதான் உங்களோட கார் அங்கிளா?” என்று கேட்க, “எஸ் இவங்க தான் இனி நம்ம கார் அங்கிள்” என்றான் சஞ்சய்.

மாணிக்கத்திற்கோ ஏனோ இருவரையும் பிடித்துப் போனது. ட்ரைவராய் தான் இதுவரை இருந்த யாரும் அவரை பார்த்திருக்கின்றனர். அப்படித்தான் அவருக்கும் தான் அழைக்கப்பட்டும் பழக்கம். அப்படியிருக்க இது அவருக்கு ஒரு வித மகிழ்ச்சியாய் இருந்தது.

ஒருவழியாய் ரியாவின் வாய் மூடியது. அதாவது வீடு வந்நு சேர்ந்தது.

“ஸார் இதுதான் உங்களுக்கு டிபார்ட்மென்ட்ல கொடுத்த வீடு” என்று சாவியை கொடுத்த மாணிக்கம், ட்ராலியை எடுக்க, சஞ்சய் வீட்டைத் திறந்தான்.

தந்தையின் கரத்தை பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்த வாண்டு, “வாவ் வீடு ரொம்ப அழகா இருக்கு. இல்லப்பா” ரியா சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே வீட்டு சாமான்களோடு நேற்று சென்னையில் இருந்து கிளம்பிய வண்டி வந்து சேர்ந்தது.

மகளை கரத்தில் தூக்கிக் கொண்டு வெளியே வந்த சஞ்சய், வண்டியில் இருந்து இறங்கிய ஆட்களிடம், “எல்லாத்தையும் உள்ள வச்சுடுங்க” என்றான்.

தந்தையும் மகளும் உள்ளே இருந்த அறையில் தயாராக, உடையை தானே அணிந்த மகளிடம் வந்த சஞ்சய், உடையின் பட்டன்களை போட்டுவிட, புருவம் மேல் வரை இருந்த மஷ்ரும் தலையை துவட்டிவிட்டவன் மகளுடன் விளையாட, அவளோ குரங்கு சேட்டைகள் பண்ணத் துவங்க, WWFஇல் வருவது போன்று மகளை தூக்கி படுக்கையில் அவன் போட, மகாராணி போன்று அந்த வீடே தெறிக்க சிரித்தாள் சஞ்சயின் உயிர் மகள்.

தன் பிஞ்சுக் கரங்களால் அவள் தந்தையின் தோளில் குத்தி எழ முயல, மகளுக்கு விடாது கிச்சு கிச்சு மூட்டி அவளை சிரிக்க வைத்தவன், அவளுடன் தானும் சேர்ந்து படுக்கையில் விழ, எழுந்து தந்தையின் நெஞ்சின் மேலே அமர்ந்தவள், தந்தையின் கன்னங்களில் மாறி மாறி குத்த, வலிப்பது போல பொய்யாய் நடித்தான் ரியாவின் ஆசை தந்தை.

இறுதியில் அவளே அடித்துவிட்டு அடித்த இடங்களில் தன் பிஞ்சுக் கரங்களை வைத்து தேய்த்துவிட்டு, “டாடி! எங்காவது போகலாம்” என்று சிணுங்கினாள்.

நெஞ்சின் மேல் அமர்ந்திருந்த மகளை கரத்தில் பிடித்துக் கொண்டே எழுந்து அமர்ந்தவன், “எல்லாம் எடுத்து வச்சிட்ட அப்புறம் கிளம்பலாம்” என்று கூற, தலையை ஆட்டியவள், அவளுக்கு என்று சஞ்சய் வாங்கித் தந்திருந்த ஐ பேடை எடுத்து அதிலேயே வரைய ஆரம்பித்தாள்.

பொருட்களை எல்லாம் எடுத்து சஞ்சய் சொன்ன இடத்தில் வைக்கவே இரண்டு மணி நேரம் கடந்துவிட, மாணிக்கமும் அவ்வப்போது உதவி கொண்டிருந்தார்.

அனைவரும் பொருளை வைத்துவிட்டு கிளம்பிவிட, சஞ்சய் அட்டப்பெட்டியில் இருந்ததை எல்லாம் பிரித்து எடுத்து மாணிக்கத்திடம் கொடுக்க, அவரோ ஆங்காங்கே அடுக்கிக் கொண்டிருந்தார்.

அனைத்தும் முடித்து சஞ்சய் வாட்சை பார்க்க, அதுவோ ஒன்றாகி இருந்தது. மகளை பார்க்க அறைக்குச் சென்ற சஞ்சய் அவள் இன்னும் வரைந்து கொண்டிருப்பதை பார்த்து சிரிப்பு எட்டிப் பார்த்தது.

அவளது அன்னையை போலவே வரையும் போது கீழ் உதட்டை பற்களால் கடித்துக் கொண்டு சின்சியராக வரைந்து கொண்டிருந்தாள். மனைவியை நினைத்த மாத்திரத்தில் சஞ்சயின் மனதில் சிறிய வலியும்.

சட்டென நினைவை மாற்றி மகளிடம் சென்று, “நாம வெளிய போகலாமா?” என்று வினவ, “ஓகே” என்று குதித்து இறங்கியவள், ஐ பேடை தனது பையில் போட்டுவிட்டு தந்தையுடன் அரிசிப் பற்கள் தெரிய வந்து கரத்தை பிடித்துக் கொண்டாள்.

மகளுடன் வந்தவன், “நீங்களும் வாங்கண்ணா.. இன்னைக்கு எங்களுக்கு லன்ச் உங்க கூட தான்” என்று மாணிக்கத்தையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.

மாணிக்கமும் அங்கிருந்த நல்ல ஹோட்டலுக்கு இருவரையும் அழைத்துச் சென்றார். கொஞ்சம் தொலைவில் இருந்தது.

மூவரும் சாப்பிட அமர, அவரவருக்கு பிடித்ததை சஞ்சய் கேட்டு சொல்ல, திடீரென ஹோட்டலுக்கு வெளியே சலசலப்பு. அதுவும் குறையாது அதிகம் ஆகிக் கொண்டே இருக்க, சஞ்சய், எழுந்து வெளியே என்னவென்று பார்க்க செல்ல, மாணிக்கத்தின் கரத்தை பிடித்துக் கொண்டே ரியாவும் ஆர்வமாக வெளியே வந்தாள்.

மதுபானக் கடை தள்ளி இருக்க, அங்கே போட்டுக் கொண்டிருந்த சப்தம் தான் உள்ளே வரை கேட்டிருந்தது. அங்கே நாலைந்து பேர் அருகே இருந்த கடையில் ஐஸ்க்ரீம் வந்த, மாணவ மாணவியிரிடம் பிரச்சனை செய்து கொண்டிருக்க, சஞ்சய் சுற்றியும் பார்த்தான். மெயின் ரோட்டில் இருந்த ட்ராபிக் போலீஸும் இதை பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

அதாவது வேடிக்கை!

மாணிக்கத்தை திரும்பிப் பார்த்த சஞ்சய், “என்னனா இங்க வைன் ஷாப் வச்சிக்காங்க” என்று கேட்க, “பத்து வருஷமா இருக்கு தம்பி.. யாரும் கவனிக்க மாட்டாங்க.. பாருங்க நம்ம டிபார்ட்மென்ட்லையே வேடிக்கை பாத்துட்டு நிக்கறதை” என்று ட்ராபிக் போலீஸை அவர் காட்டினார்.

ஆனால், அங்கோ நிலைமை மோசமாவதைப் போன்று இருந்தது. மது போதையில் இருந்த இருவர் இரு மாணவிகளை சுற்றி சுற்றி ஏதோ பேசுவதையும், அவர்களை போக விடாது தடுப்பதையும் கண்ட சஞ்சய் சுற்றியும் முற்றியும் பார்த்தான்.

கீழே ஒரு நீளமான ஹோஸ் கிடந்தது. கை சட்டையை முட்டி வரை மடித்துவிட்டவன், கீழே கிடந்த ஹோஸை எடுத்து இருமுறை அருகில் இருந்த திண்டில் தட்டிப் பார்க்க, அதிலிருந்த புழுதி பறந்தது.

தண்ணீர் பிடிக்கும் ஹோஸ் அது. வெட்டப்பட்டு நீளமாக வைத்திருந்தது.

மகளை திரும்பிப் பார்த்து புன்னகைத்து கண் சிமிட்டினான்.

நேரே நடந்தான்.

நடையில் சிறு பிசிறு கூட இல்லை.

கரங்களில் நரம்புகள் முறுக்கேற, உடல் கோபத்தில் விரைக்க, விழிகளில் கழுகின் கூர்மை ஏற, பாய்ந்து வரும் லட்சம் வாட்ஸ் மின்சாரமாய் சென்றவன், அங்கே நின்றிருந்தவனின் காலில் முதலில் ஹோஸை வைத்து இழுக்க, சஞ்சய் வீசிய வீச்சில், அது கொடுத்த அதி பயங்கரமான வலியில், கத்தியபடியே கீழேயே விழுந்துவிட்டான் அந்த குடிகாரன்.

அடுத்து ஒருவன் போதையிலேயே, “ஏய்” என்று சஞ்சயை பார்த்து கை நீட்ட, அவனின் கரத்தை பிடித்த சஞ்சய், “தண்ணியை போட்டா.. பெரிய *** நீ?” என்று விடாது அவனின் முதுகில் சாட்டையை போன்று இழுக்க, அவனோ துடிதுடித்து போக, மற்றவர்கள் சஞ்சயின் விளாசலில் பயத்தில் அப்படியே அமர்ந்துவிட்டனர்.

ட்ராபிக் போலீஸ் இதை கண்டு ஓடிவர, மாணிக்கம், “யோவ் எங்க போற?” என்று கேட்க, “யோவ் மாணிக்கம் அங்க பாரு ஒருத்தன் பாட்டுக்கு ரோட்டுல நாலஞ்சு பேரை அடிக்கிறான்.. பாத்துட்டு நிக்கற?” என்று கேட்க, மாணிக்கத்தின் அருகே இருந்த ரியா அந்த போலீஸை முறைத்தாள்.

“என் டாடியை மரியாதை இல்லாம பேசாதீங்க” என்று தன் கீச் குரலால் அவனை மிரட்டினாள்.

ட்ராபிக் போலீஸ் புரியாது மாணிக்கத்தை பார்க்க, “அவரு தான்யா புது டிசிபி சஞ்சய் கிருஷ்ணன்” என்று கூற, ட்ராபிக் போலீஸ் சில்லிட்டு போய் சஞ்சயை பார்க்க, ஐந்து பேரையும் ரோட்டிலேயே முட்டி போட்டு உட்கார வைத்து, கைகளை பின்னே கட்ட வைத்திருந்தான் டெபுட்டி கமிஷ்னர் ஆஃப் போலீஸ் சஞ்சய் கிருஷ்ணன்.

error: Content is protected !!