உயிரோவியம் நீயே பெண்ணே – 22

உயிரோவியம் நீயே பெண்ணே – 22
22
சண்டையிட்டு பிரிந்த இரு இதயங்களின் அடிமனதில் தங்களது இணையின் தேடல்கள் தொடர்ந்துக் கொண்டு தான் இருந்தது. அவள் தன்னைத் தவறாக எண்ணி விட்டது சூர்யாவிற்கு மனதினில் தீராத வலியுடன் கோபத்தை ஏற்படுத்தி இருக்க, அவளே தன்னிடம் முதலில் பேசட்டும் என்று கோபத்தில் அவளது போனுக்காக காத்திருந்தான்.
பெண்ணவளோ, அவன் தன்னிடம் அனைத்து விஷயங்களையும் மறைத்ததோடு அல்லாமல், தன்னை அடித்தது, அவனது அன்னை பேசும்பொழுது வந்து தட்டிக் கேட்காதது என்று அனைத்தையும் மனதினில் போட்டு குமைந்தவள், வெதும்பி அவன் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டாள்.. கொண்டதாக நினைத்துக் கொண்டாள்.
நாட்கள் அதன் வேகத்தில் ஓட்டமெடுத்துக் கொண்டிருந்தது.. தனது பெற்றவர்களுடன் சந்தோஷமாக இருப்பது போலச் சுற்றிக் காட்டிக் கொண்டவள், இரவின் தனிமையில் அவனது பிரிவைத் தாங்க முடியாம்ல தனது தலையணையை நனைத்துக் கொண்டிருந்தாள்..
என்ன தடுத்தும் அவனைச் சுற்றியே நினைவுகள் சுழன்றுக் கொண்டிருக்க, அழுத சுவடு தனது பெற்றவர்களுக்கும் தெரியக் கூடாது என்று நினைத்தவள், தனது முகத்தை ஒப்பனையின் மூலம் சரி செய்துக் கொண்டாள். அவனது நினைவை மனதில் வரவிடாமல் தடுக்க, தனது கவனத்தை இரவு பகலாக அசைன்மென்ட் எழுதி மாற்ற முயன்றாள்.
இரவிலும் உறங்காமல் எழுதிக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்த அர்ச்சனாவிற்கு பாவமாக இருந்தது.. அவளது அந்த சோர்வைப் போக்க, அவளுக்கு பிடித்த உணவுகளையும் செய்து அவளுக்கு ஊட்டியும், அவளுக்கு பிடித்த பொருட்களையும் வாங்கிக் குவிக்க, சுஜிதாவிற்கோ குற்றவுணர்வு மனத்தைக் கொன்றுக் கொண்டிருந்தது..
‘நீ கேட்கறதுக்குள்ள எல்லாமே வாங்கித் தராங்க இல்ல.. அதெல்லாம் வெளிநாட்டுல சம்பாதிக்கிறதுனால தான்..’ அதற்கும் அவனது நினைவுகளே வந்து மோத, மனதினில் வெம்பிப் போனாள்..
இப்படியாக அவள் ஊருக்குச் சென்று பதினைந்து நாட்களுக்கு மேல் ஓடி இருக்க, அவளது மனதினில் பயம் சூழத் துவங்கி இருந்தது.. எப்பொழுதும் அவளுக்கு வரும் மாதவிடாய்க் காலத்தின் நாட்கள் கூடி இருந்ததும் அதற்கு ஒரு காரணம். அதோடு ஏதோ ஒரு உணர்வும் நெஞ்சைப் பிசைய, அதற்கு மேல் சிரித்து சமாளிக்க முடியாமல், “அப்பா என்னோட டிக்கெட்டை நாளைக்கு இல்ல நாளனிக்கு மாத்த முடியுமா? நான் முக்கியமான ஒரு புக்கை அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்.. அதை வச்சுத் தான் நான் முடிச்சு சப்மிட் பண்ண முடியும் நான் இப்போ போனா தான் காலேஜ் திறக்கறதுக்குள்ள முடிக்க முடியும்..” என்று கேட்க, அவளது முகத்தை வருடியவர்,
“உன் முகமெல்லாம் ரொம்ப வாடி இருக்குடா குட்டா. ரொம்ப டயர்டா இருக்கற மாதிரி இருக்க.. ராத்திரி எல்லாம் உட்கார்ந்து எழுதிட்டு, நேரம் கெட்ட நேரத்துல, உட்கார்ந்த இடத்துலேயே தூங்கிட்டு இருக்கன்னு அம்மா சொல்றாங்க. பேசாம ஒரு வாரம் லீவ் போட்டு இங்க இரேன்.. கொஞ்சம் உடம்பை கவனிச்சிக்கிட்டு போகலாம்.. இல்ல அம்மாவுக்கும் கூட சேர்த்து டிக்கெட் போடவா?” வாஞ்சையாக வாசுதேவன் கேட்க, சுஜிதாவின் மனதிற்குள் பக்கென்ற உணர்வு..
அவளது பதிலுக்காக அவர் காத்திருக்க, “என்னப்பா.. அம்மாவை ஊருக்கு அனுப்பிட்டு இங்க நீங்க ஜாலியா என்ஜாய் பண்ணலாம்ன்னு பார்க்கறீங்களா?” கேலியாகக் கேட்டவள்,
“எனக்கு ஒண்ணும் இல்லப்பா.. இந்த அசைன்மென்ட் எல்லாம் முடிச்சிட்டு ரெண்டு நாள் நிம்மதியா தூங்கி எழுந்தா சரியா போயிடும். இப்போ எனக்கு இது முடிக்கணும் முடிக்கனும்னே டென்ஷனா இருக்கு.. அது தான்..” அவரது தோளில் சாய்ந்தபடி சமாளித்தவள், அடுத்த இரண்டாவது நாள் தனது இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தாள்..
அவளை ஏர்போர்ட்டில் அழைக்க வந்திருந்த கிஷோர், அவளது முகத்தைப் பார்த்து அதிர்ந்தே போனான்.. அவள் ஊருக்கு வந்ததை விட திரும்பி வந்த பொழுது, அவளது கண்ணைச் சுற்றி கருவளையம் சூழந்திருக்க, “என்ன சுஜி இப்படி இருக்க? நான் வேணா அவனைக் கூப்பிட்டு என்னன்னு கேட்கவா? உன்னால அவனை விட்டு இருக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். அவனும் இப்படி தான் இருப்பான் சுஜி.. உன்னை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு..” எனவும்,
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.. பேசாம உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போ.. திரும்பவும் சொல்றேன்.. அவன்கிட்ட நீ பேசினன்னு தெரிஞ்சது.. அது தான் நீ என் கூடப் பேசறது கடைசியா இருக்கும்.. உனக்கு நான் முக்கியமா அவன் முக்கியமான்னு முடிவு பண்ணிக்கோ..” அவனிடம் எரிந்து விழுந்தவள், வேகமாக சென்று ஒரு டாக்சியை அழைக்க, கிஷோருக்கு ஹோவென்று இருந்தது..
நேராக வீட்டிற்குச் சென்றவளுக்கு, அனைத்து இடங்களிலும் அவனது நியாபகம்.. அவளைத் தனியே விட மனமில்லாதவன், அங்கேயே அவளுக்காக காத்திருந்தான்.
அறைக்குச் சென்றவளுக்கு மூச்சு முட்டுவது போல இருக்கவும், வேகமாக சென்று குளித்துவிட்டு வந்தவள், “இன்னைக்கு என்னை எங்கயாவது கூட்டிட்டு போடா.. எனக்கு இங்க இருக்க முடியல.. ஒரு மாதிரி இருக்கு..” என்று சொல்லவும், அவளது நிலையைப் பார்த்து மனம் நொந்தவன்,
“சரி.. நீ ரெடியா இரு.. நான் போய் வண்டியை எடுத்துட்டு வரேன்..” என்றவன், அவளை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான். மதியம் வரைச் சுற்றிவிட்டு, கேள்வியாக அவளது முகத்தைப் பார்க்க,
“அடுத்து வேற எங்க போகலாம்?” அவள் கேட்கவும்,
“வேற எங்க போறது?” என்று கேட்டவன், மீண்டும் சிறிது நேரம் அங்கும் இங்கும் சுற்றிவிட்டு, இருட்டிய பிறகு அவளை வீட்டில் விட்டு வந்தான்.. அதற்கு மேல் அவனை அலைக்கழிக்க முடியாமல் சுஜிதாவும் அமைதியாக அனுப்பி வைத்தாள்.
அவளது தோழியும் ஊரில் இருந்து வந்திருக்கவும், அவனுக்கு சிறிது நிம்மதி பிறந்தது.. “அவ கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருக்கா.. கொஞ்சம் பார்த்துக்கோங்க..” என்று சொல்லிவிட்டு செல்ல, அந்தப் பெண் சுஜிதாவைக் கேள்வியாகப் பார்த்தாள்..
அவளது முகத்தைப் பார்த்தவளுக்கு எதுவோ சரி இல்லை என்று புரிய, கிஷோரிடம் தான் பார்த்துக் கொள்வதாக தைரியம் சொல்லி அனுப்பியவள், சுஜிதாவிற்கு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்க, அவளோ பதில் பேசாமல் எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். இரவும் உறங்காமல் அவள் எதையோ படித்துக் கொண்டு ஹாலில் நடந்துக் கொண்டிருக்க, அவளது அறைத் தோழியோ, எதுவும் புரியாமல் குழம்பினாள்.
மறுநாளும் கிஷோரிடம் அதே போல வெளியில் செல்லக் கேட்டு, சுற்றி விட்டு வந்தவளுக்கு உறக்கம் தொலை தூரமானது..
மறுநாள் காலையிலேயே கண் விழித்த அவளது தோழி, அவளை வீட்டில் காணாது பதறி கிஷோருக்கு அழைத்திருக்க, அவனும் பதறிப் போனான்.. அவளது செல்போனும் அனைத்து வைக்கப்பட்டிருக்க, எங்கு சென்றுத் தேடுவது என்று அவன் தவித்துக் கொண்டிருந்த வேளையில், உள்ளே நுழைந்தவளைப் பார்த்தவனுக்கு நின்றிருந்த மூச்சு வெளியில் வந்தது..
“எங்க சுஜி போன?” கிஷோர் கேட்க,
“ரொம்ப தலைவலி மண்டை உடையுது.. அது தான் மாத்திரை வாங்கப் போனேன்.. கொஞ்ச நேரம் மாத்திரை போட்டுட்டு தூங்கறேன்..” என்றவள், தனது அறைக்குள் புகுந்துக் கொள்ள, சிறிது நேரம் அங்கிருந்த கிஷோர், ஒரு பெருமூச்சுடன்,
“ஏதாவது தேவைப்பட்டா சொல்லுங்க.. நீங்க எப்போ ஹோஸ்டல்க்கு போகணும்?” கவலையுடன் கேட்க,
“அது இன்னும் ஒரு மாசத்துக்குள்ள கிளம்பிருவேன் கிஷோர்..” என்று அவள் பதில் சொல்லவும், ‘ஹ்ம்ம்..’ என்ற பெருமூச்சுடன்,
“பார்த்துகோங்க..” என்றபடி தனது வீட்டிற்குச் சென்றான்..
தனது அறைக்குள் சென்றவளோ, தான் வாங்கி வந்திருந்த கர்ப்ப பரிசோதனை சாதனத்தைக் கொண்டு, தனது சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்ய முயன்றாள்.. அவளது சந்தேகம் ஊர்ஜிதமாக, அவளது இதயம் படபடக்கத் துவங்கியது..
தனது வயிற்றை வருடியவளின் கண்களில் கண்ணர் வழிய, தனது மனதினில் எழுந்த உணர்வை வடிக்கத் முடியாமல் குழம்பியவள், அப்படியே படுத்துக் கொண்டாள்.. கண்களை மூடிக் கொண்டவளுக்கு நெஞ்சை அடைத்தது அவனது நினைவுகள்..
‘தாங்கள் உயிர் உருகி உறவாடிய தருணமே, தங்களது வாழ்வில் இறுதியான, மகிழ்ச்சியான தருணமாக மாறிப் போனது தான் காலத்தின் கோலமோ? அப்படி இல்லாமல் இருந்திருந்தால், இந்த நிமிடத்தில் இருவரும் சந்தோஷத்தில் திளைத்திருப்போமோ? தன்னைத் தூக்கிச் சுற்றி சூர்யா தனது முத்தங்களை வாரி வழங்கி மகிழ்ந்து கொண்டாடி இருப்பானோ? வீட்டில் சொல்லித் தங்களது திருமணமும் நடந்தேறி இருக்குமோ?’ மனமெனும் குதிரை தனது ரக்கையைக் கட்டிக் கொண்டு பறக்கத் துவங்க, அதை அடக்க வழி தெரியாமல் தடுமாறிப் போனாள்.
இந்த நிலைக்கு காரணமானன், தன்னை மறந்துச் சென்றாலும், அவனது நினைவுச் சின்னமாக, தனது கருவில் உதித்து இருக்கும் சிசுவை நினைத்து மனம் கலங்கியது..
தங்களது காதலில் உதயமான உயிரின் வரவை நினைத்து மகிழக் கூட முடியாத நிலையில் தான் இருப்பதையும், தனது பெற்றவர்களின் நம்பிக்கையை முற்றிலுமாக குலைத்து, அவர்களது மகவாக இருக்கும் தகுதியை இழந்து விட்டதையும் நினைத்து மனம் நொந்தவள், இதயம் வெடித்து விடும் அளவிற்கு அழுது தீர்த்தாள்..
அந்த நாளும் அப்படியே கடந்துக் கொண்டிருக்க, அவளது தோழியின் வற்புறுத்தலில் ஏதோ உண்டுவிட்டு, மீண்டும் படுத்துக் கொண்டவள், அப்படியே உறங்கியும் போனாள்..
அவளைக் காண வந்த கிஷோரிடம், “பேருக்கு ஏதோ சாப்பிட்டு படுத்து தூங்கிட்டா.. அவளுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கா?” கவலையுடன் அவனிடம் அந்தப் பெண் கேட்க,
“சூர்யா கூட சண்டை.. அது தான்.. கொஞ்ச நாள்ல எல்லாம் சரி ஆகிடும்..” என்று சொன்னவன், காலையில் வருவதாகக் கூறி விடைப்பெற்றுச் சென்றான்..
இன்னமும் கல்லூரி திறப்பதற்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில், சுஜிதா அப்படி சுருண்டிருப்பது கிஷோருக்கு மனதை மிகவும் வருத்தியது..
மறுநாளும் அவள் அறையிலேயே முடங்கியிருக்க, “இப்போ ஏதாவது சாப்பிடப் போறியா இல்லையா? அவங்க சண்டைப் போட்டா என்ன? கொஞ்ச நாள்ல சுஜிக் குட்டின்னு தான் வந்து நிக்கப் போறாங்க.. உன்னை விட்டுட்டு அவங்க எங்க போகப் போறாங்க? இதுக்கா இந்த ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்க? இப்போ சாப்பிட வரலைன்னா நான் உங்க அம்மாவுக்கு கால் பண்ணப் போறேன்..” அவளது அறைத் தோழி மிரட்ட, அது சரியாக வேலை செய்தது.
ஆனால் உணவை விழுங்கியவளுக்கோ உள்ளே செல்லாமல் உமட்டிக் கொண்டு வர, ‘ஹையோ..’ என்று பதறிப் போனாள். உண்டது மொத்தமும் வெளியில் வர, வயிற்றில் சுளீரென்று வலி எழுந்தது..
நேரமாக ஆக, வலி அதிகரிக்கத் துவங்க, “என்ன சுஜி பண்ணுது? ஏன் திடீர்ன்னு வயிறு வலி?” பதட்டமாக உடனிருந்தவள் கேட்க,
“எனக்கு இங்க பக்கத்துல டாக்டர்க்கிட்ட போகணும் நித்து.. ரொம்ப வயிறு வலிக்குது.. ப்ளீஸ் ஆட்டோவை கூப்பிடறியா?” வலியில் முனகியபடி கேட்க, அவசரமாக அவள் ஆட்டோவை அழைத்துவிட்டு,
“நானும் கூட வரேன்..” என்று கிளம்பவும்,
“வேண்டாம்.. நானே போயிட்டு வரேன்.. இங்க பக்கத்துல தான்.. எனக்கு ஒண்ணும் இல்ல.. மேனேஜ் பண்ணிக்கறேன்..” என்று தான் செல்லும் இடத்தைச் சொல்லிவிட்டு, ஆட்டோவில் கிளம்பிச் செல்ல, நித்யா உடனே கிஷோருக்கு அழைத்து விஷயத்தைக் கூறினாள்..
மீண்டும் தனது க்ளினிக்கில் வந்து தனக்காக காத்திருந்தவளைப் பார்த்த ராஜேஸ்வரிக்கு, அவளைப் பார்த்து உள்ளுக்குள் ஒரு சிறு அதிர்வு.. உள்ளே வருமாறு கைக்காட்டிவிட்டுச் செல்ல, வேகமாக அவரது அருகில் சென்றவள், அவர் கேள்வி கேட்பதற்கு முன்பே, கண்ணீருடன் கையெடுத்து கும்பிட்டு, “எனக்கு ரொம்ப வயிறு வலிக்குது டாக்டர்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னால இருந்து ப்ளீட் ஆகுது.. ரொம்ப பயமா இருக்கு…” என்று படபடக்க,
“உனக்கு எல்லா மாசமும் இப்படித் தான் இருக்குமா?” அவர் கேட்டுக் கொண்டே படுக்குமாறு டேபிளைக் கைக் காட்ட,
“இல்ல.. எனக்கு இவ்வளவு வலி எல்லாம் இருக்காது.. நான் ப்ரெக்னன்ட்டா இருக்கேன்.. திடீர்ன்னு மதியத்துல இருந்து வயிறு வலிக்குது.. இப்போ ப்ளீட் ஆகுது.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்..” என்றவள், அவரது கையைப் பிடித்துக் கொண்டு,
“டாக்டர்.. டாக்டர்.. ப்ளீஸ்.. நான் கெஞ்சிக் கேட்கறேன் டாக்டர். எனக்கு இந்தக் குழந்தை வேணும்.. எப்படியாவது இதைக் காப்பாத்திக் கொடுங்க..” கண்ணீருடன் கெஞ்சத் துவங்க, அவள் கேட்டதில் அதிர்ந்தவர், அவள் மீண்டும் மீண்டும் வலியுடன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அதையேக் கேட்கவும், பரிதவித்துப் போனார்.
“என்னம்மா சொல்ற? இதை எப்படிம்மா?” அவர் முடிக்க முடியாமல் தனது வார்த்தையை பாதியிலேயே விழுங்கிக் கொள்ள,
“இது என் சூர்யாவோட உயிர்.. அவங்க நினைவா விட்டுட்டு போனது.. எனக்கு இது வேணும் டாக்டர்.. ப்ளீஸ்.. எப்படியாவது எனக்கு இதைக் காப்பாத்திக் கொடுங்க..” என்று கெஞ்ச, ராஜேஸ்வரி அதிர்ந்து போனார்..
“என்னம்மா புரியாம பேசற? உங்க அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா அவங்க எவ்வளவு வருத்தப்படுவாங்க? இப்படி கல்யாணம் ஆகாம பிள்ளை பெத்துக்கறது இந்த ஊருல ரொம்ப ஈசின்னு நினைச்சுட்டு இருக்கியா? அவங்களைப் பத்தி கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்தியா? அறிவை எங்கயாவது அடமானம் வச்சிட்டியா? இதுவே இவ்வளவு நாள் சொல்லாம இருக்கறது தப்பு..” என்று திட்டிக் கொண்டே அவளை பரிசோதிக்க, அவரது மனதிலோ ஒரு தாயாய் ஒருவித அமைதி படர்ந்தது..
சுஜிதா அவரது முகத்தையேப் பார்த்துக் கொண்டிருக்க, அவளது முகத்தைப் பாவமாகப் பார்த்தவர், தனது தலையை இடம் வலமாக அசைத்தார். அவரது தலையின் அசைவைப் பார்த்தவளுக்கு, உள்ளுக்குள் எதுவோ பிழன்றதொரு உணர்வு.. கண்களில் கண்ணீர் வடிய ஏக்கத்துடன் அவரைப் பார்த்தவள், “எனக்கு என் குழந்தை வேணும்.. ஏதாவது செஞ்சுக் காப்பாத்திக் கொடுங்களேன்.. உங்களை தான் நான் மலைப் போல நம்பி இருக்கேன்..” என்று கெஞ்சியவளைப் பார்க்க ராஜேஸ்வரிக்கு பாவமாக இருந்தது..
அவளை ஸ்கான் செய்துப் பார்த்தவர், உதட்டைப் பிதுக்கி, “சாரி.. இனிமே ஒன்னும் செய்ய முடியாதும்மா..” என்று வருத்தமாகச் சொல்ல, சுஜிதா மீண்டும் அவரிடம் கெஞ்சத் துவங்கினாள்..
“ஏதாவது செய்ங்களேன்.. உங்களை நம்பித் தானே நான் வந்திருக்கேன். எனக்கு இந்தக் குழந்தை வேணும்..” அவர் சொல்வதை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், மீண்டும் மீண்டும் அவள் கெஞ்சிக் கொண்டிருக்க, அவரது தாயுள்ளம் மேலெழ அவளை அணைத்துக் கொண்டார்..
“இல்லடா கண்ணா.. ஒண்ணுமே செய்ய முடியாது.. எல்லாமே கை மீறிப் போயிடுச்சு.. உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா நான் உங்க அம்மாவை வரச் சொல்லவா?” ராஜேஸ்வரி கேட்க, மறுப்பாக தலையசைத்தவள்,
“நிஜமாவே இங்க யாரும் இல்ல டாக்டர். என் ஃப்ரெண்ட்ஸ் தான் இருக்காங்க.. அவங்களுக்கு எல்லாம் இது தெரியாது.. தெரியவும் வேண்டாம்.. ப்ளீஸ்.. எனக்கு இந்தக் குழந்தையை ஏதாவது செய்து காப்பாத்தி தர முடியாதா?” மீண்டும் அதிலேயே வந்து நிற்க, பதிலே சொல்லாமல் அவளது தலையை அவர் வருடிக் கொடுக்க, அவளது வயிற்றின் வலியோ அவளைச் சுருளைச் செய்தது..
“நான் உனக்கு ட்ரிப்ஸ் போடறேன்.. வயிறு வலி கொஞ்சம் குறையும்.. கொஞ்ச நேரம் தூங்கு..” என்றவர், அவள் கெஞ்சக் கெஞ்ச,
“நீயும் டாக்டருக்கு படிக்கிற தானே.. புரிஞ்சிக்கோம்மா.. டி அன்ட் சி கூட பண்ணத் தேவை இல்லாம எல்லாமே க்ளீனா வெளிய வந்திருச்சு.. நான் என்னம்மா செய்யறது?” என்று கேட்டவர், அவளுக்கு ட்ரிப்சைப் போட்டு விட்டு, ஒரு ஊசியையும் செலுத்த,
“அது எப்படி டாக்டர் அப்படி ஆகும்? சூர்யா போனது போல அதுவும் என்னை விட்டுப் போயிருச்சே..” கண்ணீருடன் அவரிடம் தான் விடை இருப்பது போல கேட்டவள், அவர் செலுத்திய ஊசியின் பலனால் உறங்கத் துவங்கினாள்..
“சூ..ர்..யா.. பா..ப்..பா..” உறக்கத்திலும் அதையே அவள் புலம்பவும், அவளது தலையை ராஜேஸ்வரி வருடிக் கொடுக்க, அந்த ஸ்பரிசத்தில் நல்ல ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள்..
அவள் உறங்கியதும், ராஜேஸ்வரி மற்ற பேஷண்டுகளைப் பார்க்கத் துவங்க, வெகுநேரமாக அவள் வீட்டிற்கு வாராமல் போகவும், அவளைத் தேடிக்கொண்டு கிஷோர் வந்து சேர்ந்தான்.
அவளது பெயரைச் சொல்லி அவன் விசாரிக்க, “அவளுக்கு வலி குறைய ஊசி போட்டு இருக்கேன்.. தூங்கிட்டு இருக்கா.. அவ எழுந்ததும் கூட்டிட்டு போங்க..” என்று சொல்லவும்,
அவளைப் பார்த்துவிட்டு, “அவ நல்லா தூங்க ஏதாவது மருந்து இருந்தா கொடுங்க டாக்டர்.. தூங்க முடியாம ரொம்ப கஷ்டப்படறா..” கிஷோர் கேட்க,
“நான் எழுதித் தர டேப்லட்லையே தூக்கம் வரும்ப்பா. அவளை கொஞ்சம் நல்லா சாப்பிட வைங்க..” என்று அவர் சொல்லவும், தலையசைத்துக் கேட்டுக் கொண்டவன், அவளுக்காக காத்திருக்க, அவள் உறங்கி எழுந்ததும், அவளுக்கு சில மாத்திரைகளைத் தந்து அனுப்ப, தலையசைத்து அவரிடம் இருந்து விடைப்பெற்று கிஷோருடன் கிளம்பினாள்.
“என்ன ஆச்சு சுஜி? ஏன் உனக்கு ட்ரிப்ஸ் போட்டாங்க? நான் வேணா ஆன்ட்டிக்கு போன் செய்து சொல்லவா?” கவலையுடன் அவன் கேட்க, மறுப்பாக தலையசைத்தவள்,
“ஒண்ணும் இல்ல.. இது லேடீஸ் ப்ராப்ளம் தான்.. ரொம்ப வயிறு வலியினால ட்ரிப்ஸ் போட்டாங்க..” அவனிடம் சாதாரணமாக சொல்லிக் கொண்டு வந்தாலும், அவளது கண்களோ வற்றாத நதியாகிப் போனது..
கல்லூரியும் துவங்கி விட, அவளது கவனம் சிறிது படிப்பில் திரும்பினாலும், உறக்கமோ, மன அமைதியோ அவளுக்கு எட்டாக்கனியாகிப் போனது.. உடல் உபாதைகள் வேறு அவளுக்கு தொல்லைத் தந்துக் கொண்டிருக்க, படிப்பிற்கும் உடல் நிலைக்கும் இடையில் தடுமாறத் துவங்கினாள்..
மேலும் பத்து நாட்கள் ஓடிவிட, இன்னமும் உதிரப் போக்கு நிற்காத நிலையில், மிகவும் சோர்வாக உணரத் துவங்கி இருந்தாள். உணவும் தொண்டைக் குழியில் இறங்க மறுக்க, உடல் மெலிந்து போனது.. அவளுடன் இருந்த பெண்ணும் தனது பெற்றோர்களின் விருப்பப்படி மீண்டும் கல்லூரி விடுதிக்கே சென்று விட, தனியாக அந்த வீட்டில் இருந்தவள், மனதளவில் மிகவும் நொடிந்துப் போனாள்.
அவளது உடல்நிலையைப் பார்த்த கிஷோர், அவளை வற்புறுத்தி மீண்டும் ராஜேஸ்வரியிடம் கூட்டிச் சென்றான்..
“என்னடா சுஜி.. இன்னமும் உனக்கு ப்ளீட் நிக்கலைன்னா என்கிட்டே வர மாட்டியா? பேசாமையே இருக்க? பாரு உடம்பு எல்லாம் எப்படி ஆகி இருக்குன்னு?” அவள் படும் துன்பத்தைப் பார்த்தவர் கவலையுடன் கேட்க,
“இல்ல டாக்டர்.. நின்னது போல தான் இருந்தது.. ஆனா.. மூணு நாளா ரொம்ப அதிகமா இருக்கு. தானா சரியா போயிடும்ன்னு பார்த்தேன்.. இவன் தான் என்னை இப்போ கூட்டிட்டு வந்துட்டான்..” என்று சொல்ல, அவளை மீண்டும் பரிசோதித்தவர், அவளுக்கு சில டெஸ்ட்களை எழுதித் தந்து விட்டு, கிஷோரை வெளியில் அனுப்பிவிட்டு, அவளிடம் மனம் விட்டு பேசத் துவங்கினார்..
அவளது மனதினில் உள்ளதை பேசவிட்டு கேட்டுக் கொண்டவர், அவளது இருப்பிடத்தையும் தெரிந்துக் கொண்டார். “நல்லா சாப்பிடணும் என்ன? சாப்பிடாம மாத்திரை மட்டும் போட்டா சரியா வராது.. என்னோட நம்பரை வச்சிக்கோ. எப்போ வேணுமோ கூப்பிடு..” ஆறுதலாகச் சொன்னவர், அவளது கையை வருடிக் கொடுத்தார். அவர் சொன்னபடி டெஸ்டுகளை எடுத்துப் பார்த்தப் பின்பும், அடுத்து வந்த நாட்களும் அதுவே தொடர் கதையானது..
கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்தவளுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.. ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தவள், முகத்தைக் கழுவுவதற்காக எழுந்து செல்ல, அப்படியே மயங்கித் தரையில் சரிந்து விழுந்தாள்..
ராஜேஸ்வரிக்கு அன்று ஏனோ காலையில் இருந்தே அவளது நினைவாகவே இருக்கவும், அவள் கல்லூரியில் இருந்து வரும் நேரத்தைக் கணித்து, க்ளினிக்கிற்குச் செல்லும்பொழுது அவளைப் பார்ப்பதற்காக அவளது வீட்டிற்குச் சென்றார்..
ஏனோ அந்தக் குறுகிய காலத்தில் அவள் மீது அவருக்கு ஒரு பாசம்.. தனது காதலைப் பற்றிச் சொன்ன பொழுதோ, தாங்கள் நிலையிழந்த தருணத்தைக் கூட, அவன் மீது மட்டும் குற்றம் சாட்டாமல், தன் மீதும் சொல்லிக் கொண்டவளை அவருக்கு மிகவும் பிடித்தது..
சண்டைச் சமாதானங்கள் காதலில் சகஜம் தானே என்று நினைத்தவருக்கு, அவளது இந்த நிலையை சூர்யாவிற்கு மறைத்ததில் இருந்த வீம்பு கவலைக் கொடுத்தது..
சுஜிதாவின் வீட்டின் க்ரில் கதவு உள் பக்கமாக பூட்டப்படாமல் வெறும் தாழ் மட்டும் போட்டிருக்க, இரண்டு முறை அவளை அழைத்தவர், அவளைக் காணாது, மெல்ல கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றார்..
அவளது அறையின் வாயிலில் விழுந்துக் கிடந்தவளைப் பார்த்தவருக்கு உள்ளம் பதறியது.. அவளை வாரி எடுத்து தனது மடியினில் கிடத்திக் கொண்டவர், அவளது கன்னத்தைத் தட்டிக் கொண்டே, “சுஜி.. சுஜி..” என்று எழுப்ப, அவள் கண்களைத் திறக்காமல் போனாள். வேகமாக அடுக்களைக்குள் சென்று தண்ணீரை எடுத்து வந்து அவளது முகத்தைத் துடைத்தவர், அவளைத் தட்டி எழுப்பினார்..
சோர்வாக கண்களைத் திறந்து அவரை குழப்பமாகப் பார்க்க, ஒரு நிம்மதி மூச்சுடன், அவளைத் தன் மீது சாய்த்துக் கொண்டவர், “முதல்ல நீ எழுந்து என் கூட கிளம்பு.. உங்க அம்மாவுக்கு போன் பண்ணு..” என்று கறாராகச் சொல்ல,
“ப்ளீஸ் டாக்டர்.. எங்க அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம்.. அவங்க தாங்க மாட்டாங்க..” என்று அழத் துவங்கவும், அவளது தலையை வருடியவர்,
“நான் இப்போ உன்னோட ஹெல்த் மட்டும் சொல்றேன்டா.. இதைச் சொல்லலைன்னா தப்பு.. உங்க அம்மா அங்க இருந்து வர வரை நீ என் கூட இரு.. உன்னை இனிமே தனியா எல்லாம் விட முடியாது.. நான் வராம இருந்திருந்தா என்ன ஆகி இருக்கும்? அப்படி எல்லாம் விட முடியாது..” ஒரு தாயின் பொறுப்பை எடுத்துக் கொண்டவர், அர்ச்சனாவிற்கு வீடியோ கால் செய்து, சுஜிதாவின் நிலையைச் சொல்ல, அர்ச்சனா பதறிப் போனார்.
“ஹையோ.. அவ என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லையே.. நான் உடனே டிக்கெட் பார்த்துட்டு கிளம்பி வரேன்.. நான் வேணா எங்க அண்ணாவை உடனே வரச் சொல்வா? இல்லையே.. அண்ணாவும் அண்ணியும் டூருக்கு போயிருக்காங்களே.. நான் என்ன செய்வேன்?” செய்வதறியாமல் அவர் தவிக்கத் துவங்க, ராஜேஸ்வரி அவரை அமைதிப்படுத்தினார்.
“நீங்க கவலைப்படாதீங்க அர்ச்சனா.. நான் அவளைப் பார்த்துக்கறேன்.. நீங்க பொறுமையா கிளம்பி வாங்க.. நான் அவளை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்..” என்று தன்னைப் பற்றிய விவரங்களைச் சொன்னவர், சுஜிதாவைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்..
சுஜிதாவிற்கோ அவரது வீட்டில் இருப்பது சங்கடமாக இருந்தது.. ஆனால் கணவன் மனைவி இருவருமே ஒரு மகளைப் போல அவளிடம் பொதுவாக பேச்சுக் கொடுத்து, அவளது பாடங்களைப் பற்ற பேசி, அவளது மனநிலையை மாற்ற முயன்றனர்..
மறுநாள் மாலையில் அடித்துப் பிடித்து, அர்ச்சனாவும் வாசுதேவனும் வந்து சேர, ராஜேஸ்வரி அவர்களை வரவேற்று சுஜிதாவின் உடல்நிலையைப் பற்றிக் கூறினார்.. அவளைப் பார்த்த அர்ச்சனா பதறி கண்ணீர் விட, அவளுடன் இருந்த ராஜேஸ்வரி,
“அவளுக்கு ஹார்மோனல் இன்பாலன்ஸ் தான் அர்ச்சனா. அதோட நல்ல மார்க் எடுக்கணும்ன்னு அவ ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிப் படிக்கறா. அதுல அவளுக்கு கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ஆகுது. தூக்கம் வர மாட்டேங்குது.. அது தான் இந்த பிரச்சனைக்கு காரணம்.. வேற ஒண்ணும் இல்ல.. டேப்லெட் கொடுத்திருக்கேன்.. நல்லா சாப்பிட்டு தூங்கினா சரியா போயிடும்.. கவலைப்பட ஒண்ணும் இல்ல..” அர்ச்சனாவையும், அவளைப் பார்த்து கலங்கி நிலைக்குலைந்து அமர்ந்திருந்த வாசுதேவனுக்கும் சமாதானம் சொன்னாலும், அவரது மனதிலும் குற்றம் செய்த உணர்வு..
அதை விட சுஜிதாவின் முழு நிலைத் தெரிந்தால் அவர்களது நிலை என்னவாக இருக்கும் என்று யோசிக்கக் கூட மனது மறுக்க, அவர்களிடம் மனதினில் மன்னிப்பு வேண்டியவர், சுஜிதாவைத் திரும்பிப் பார்க்க, அவளோ அர்ச்சனாவைப் பார்க்காமல் தலைக்குனிந்து அமர்ந்திருந்தாள்.
அழுகையும் ஆத்திரமும் சேர, அவளது அருகே சென்ற அர்ச்சனா, “உன்னோட உடம்புக்கு முடியலைன்னு என்கிட்டே சொல்லாம என்ன செய்யலாம்ன்னு உத்தேசம்? எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டே சொல்லாம மறைச்சிருப்ப? இதுக்குத் தான் வீடியோ கால்ல வரச் சொன்னா வர மாட்டேன்னு அவ்வளவு சாக்கு சொன்னியா? முகம் எல்லாம் ஒட்டிக் கிடக்கு.. ஏண்டி உன்னை விட எங்களுக்கு வேற என்ன முக்கியம்ன்னு நீ நினைக்கிற? சொல்லுடி.. எதுக்கு இதைச் சொல்லாம மறைச்ச?” அவளைப் பிடித்து உலுக்கிக் கேட்க, சுஜிதா குற்றவுணர்வில் கதறத் துவங்கினாள்.
அவளது கதறலைக் காண முடியாமல் அவளை அணைத்துக் கொண்ட வாசுதேவன், “சரி அர்ச்சு.. ஏதோ நமக்கு கவலைக் கொடுக்காம தானே சமாளிச்சுக்கலாம்ன்னு பார்த்திருக்கா.. உடம்பு சரி இல்லாத குழந்தையை ஒண்ணும் சொல்லாதே.. என் குட்டாவுக்கு காலேஜ் போனதும் தானே பெரிய பொண்ணு ஆனதா ரொம்ப நினைப்பு வந்திருச்சு போல..” தனது மகளுக்கு சார்ந்து பேசுவது போல இருந்தாலும், தனது மனத்தாங்கலையும் அவர் வெளிப்படுத்த, சுஜிதா அவரது மார்பில் ஒண்டிக் கொண்டு, “சாரிப்பா.. சாரிப்பா..” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு கண்ணீர் வடித்தாள்..
“இப்படி நீங்க செல்லம் கொடுத்து தான் அவ தான் செய்யறது சரின்னு நிக்கறா.. அவளை ரெண்டு போடாம கொஞ்சிட்டு இருக்கீங்க..” அவரையும் அதட்ட, வாசுதேவன் பாவமாகப் பார்க்க, அவரைப் பார்த்த ராமச்சந்திரன் உதட்டைப் பிதுக்க, இருவருக்கும் ஒரு சிறு சைகைச் சம்பாஷனை..
அவளது உடல்நிலையை கவனித்துக் கொண்ட அர்ச்சனா, அவள் இரவு உறங்காமல் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து கவலையாக ராஜேஸ்வரியிடம் கேட்க, அவளது நிலையைப் புரிந்தவரோ, தனது வீட்டின் பின்பக்கம் இருக்கும் வீடு காலியாக இருப்பதாகக் கூறி, சுஜிதாவைத் தனது மகளாகப் பார்த்துக் கொள்வதாக கூற, அர்ச்சனாவும் மனதினில் நிம்மதிப்பெருகி வீட்டை மாற்றச் சம்மதித்தார்..
அடுத்த மாதமே சுஜிதா அந்த வீட்டிற்கு குடிபெயரவும், அர்ச்சனாவுடன் ராஜேஸ்வரியும் அவளை பார்த்துக் கொள்ள, ராஜேஸ்வரிக்கும் அர்ச்சனாவிற்கும் நல்ல நட்பு மலர, சூழ்நிலையும், இடமாற்றத்தாலும், மெல்ல சுஜிதா தேறி வந்தாள்..
ராஜேஸ்வரி அவளிடம் காட்டும் அன்பில் தைரியம் பெற்றவராய் சில மாதங்கள் அவளுடன் இருந்து விட்டு, சுஜிதாவின் வற்புறுத்தலில் அர்ச்சனாவும் ஊருக்கு கிளம்ப, ராஜேஸ்வரிக்கு சுஜிதா இயல்பு நிலைக்கு திரும்பியது போல இருந்தது..
கல்லூரி.. மாலையில் வந்ததும் ராஜேஸ்வரியுடன் க்ளினிக்.. க்ளினிக்கில் இருந்து வந்ததும் படிப்பு என்று அவளது நாட்கள் ரக்கை கட்டி பறக்கத் துவங்கியது..
தனது உயிரின் உயிரானவளிடம் சண்டைப் போட்டுக் கொண்டு, எதிர்காலக் கனவுகளுடன் அமெரிக்க மாகாணத்தில் காலடி எடுத்து வைத்தவனோ, சில நாட்களிலேயே அவளது அருகாமைக்கும், அவளது குரலுக்கும், அவளது முகத்தைக் காணவும், ஏங்கித் தவிக்கத் துவங்கினான்..
தனது பையில் இருந்த சிம்மை தேடி எடுத்துப் போட்டு சுஜிதாவிடம் இருந்து ஏதாவது தகவல் இருக்கிறதா என்று பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. “இன்னும் உனக்கு என் மேல கோபம் போகலையாடி சுஜி? நீ மட்டும் என்னை அப்படி எல்லாம் பேசலாமா? நான் உன்னை எப்போப் பாரு அப்படியா நடத்தறேன்? என்னை வாடா போடான்னு கூப்பிட்டது கூட வலிக்கல சுஜி.. என்னை ஒரு பொறுக்கி மாதிரி பேசினது ரொம்ப வலிக்குது.. அதோட என்னைத் தள்ளவும் கோபத்துல தான் அடிச்சிட்டேன்டி.. தப்பு தான்.. அதுக்குன்னு இவ்வளவு நாள் என்கிட்டே பேசாம இருப்பியா? நான் நம்ம நல்லதுக்கு தானே இதெல்லாம் செய்யறேன். உன்கிட்ட அம்மா பேசினதைப் பத்தி உண்மையைச் சொன்னா நீ கஷ்டப்படுவன்னு தானே சொல்லல.. என்னை நீ புரிஞ்சிக்கவே இல்லையாடி..” என்று மனதினில் வருந்தி, நொந்துக் கொண்டு, அவளுடன் சண்டையிட்டதை நினைத்து தன்னையே வருத்திக் கொண்டான்..
ஒருநாள் காலையில் குளித்துவிட்டு கண்ணாடியின் முன்பு நின்று ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு, நெஞ்சில் பதிந்திருந்த பல் தடத்தின் வடு கண்ணில் பட்டது. அதில் மெல்ல தனது விரலால் வருடியவன், கண்களை மூடி, அவளது ஸ்பரிசத்தின் வாசத்தை உணர்ந்தான். தங்களது முதல் உறவிற்கு அடையாளமாய் தன்னிடம் அவள் விட்ட சின்னம்..
அதைத் தான் உயிரோடு இருக்கும்வரை அழிய விடக் கூடாது என்று எண்ணியவன், நேராக டாட்டூ நிலையத்திற்குச் சென்று, அந்தப் பல் தடங்களுக்கு மேல் தங்களது பெயரைப் பின்னிப் பிணைந்து ஒரு இதயத்தின் உள்ளே இருப்பது போல போட்டுக் கொண்டான். அதற்கு மேல் அவளிடம் தனது கோபத்தை பிடித்து வைக்க முடியாமல், அவளுக்கு அழைத்து இதைக் காட்டி, தாங்கள் சண்டையிட்டதை கேலி செய்து பேச வேண்டும் என்று பலவேறு மனக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்தவன், அதே ஆர்வத்துடன் அவளிடம் பேசுவதற்காக தனது மொபைலை எடுத்தான்..
மனதினில் அவள் மீது சிறிது வருத்தம் இருந்தாலும், அதை மீறிய அவனது காதல் அவளுக்கு அழைக்கத் தூண்டியது. அவளிடம் பேச ஆவலாக அழைத்தவனுக்கு அவளது நம்பர் உபயோகத்தில் இல்லை என்ற பதிலே கிடைக்க, மனதினில் ஏமாற்றம் பரவ, தன்னைத் தேற்றிக் கொண்டு, அவளது சோசியல் மீடியா பக்கங்களைப் பார்க்க முயல, அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது.. கடைசி முயற்சியாக அர்ச்சனாவின் இந்தியா நம்பருக்கும் அவன் அழைக்க, அதுவும் பயனின்றி போனது..
என்ன செய்வது ஏது செய்வது என்று ஒன்றும் புரியாமல் தவித்தவன், கிஷோரின் சோஷில் மீடியா பக்கங்களைத் தேட அதுவும் அவனுக்கு கண்ணில் படாமல் போனது.. கிஷோரின் பெயரைப் போட்டு தேடித் தேடிச் சலித்தவன், செய்வதறியாது திகைத்தான்..
ஜைஷ்ணவியிடம், அர்ச்சனாவின் நம்பரை வாங்கச் சொன்ன பொழுது, அவளும் தோல்வியுடனேயே திரும்பி, சுஜிதாவின் வீட்டு சுற்றுச் சுவர்கள் உயர்த்தப்படும் விஷயத்தையும் சொல்ல, சூர்யாவிற்கு உலகம் தட்டமாலைச் சுற்றத் துவங்கியது.
என்ன செய்வது ஏது செய்வது என்று குழம்பியபடி திரிந்துக் கொண்டிருந்தவனுக்கு, சட்டென்று யோசனை தோன்ற, தனது நண்பனை அழைத்து, அவளது முகவரிக்குச் சென்று விசாரிக்கச் சொன்ன பொழுதோ, அவனுக்கு சாதகமான பதில் கிடைக்காமல் போனது.. உடனேயே மூளையைத் தட்டி யோசித்தவன், கிஷோரின் முகவரியையும் சொல்லி விசாரிக்கச் சொல்ல, அவனும் வீட்டைக் காலி செய்துக் கொண்டு சென்று விட்டதாக தகவல் வரவும், தடுமாறிப் போனான்.. அவனது அனைத்து முயற்சிகளும் முட்டுச் சந்திலேயே சென்று நின்றது அவனுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், சுஜிதாவின் அந்தப் புறக்கணிப்பு மிகுந்த வலியைக் கொடுத்தது..
ஜைஷ்ணவியின் திருமணத்திற்கு வந்தவனும், “நான் போய் சுஜியைப் பார்த்துட்டு வந்துடறேன் ஜைஷு.. அவளை எப்படியாவது சமாதானப்படுத்தி உன் கல்யாணத்துக்கு கூட்டிட்டு வரேன்.. என்னை நேர்ல பார்த்தா அவளுக்கு கோபம் எல்லாம் போயிடும்..” நம்பிக்கையுடன் அவளிடம் சொல்லிவிட்டு, தனது பைக்கை எடுத்துக் கொண்டு அவளைத் தேடி அவளது கல்லூரிக்குச் சென்று நின்றவனுக்கு அதுவும் தோல்வியில் முடிந்தது..
அவனது போதாத நேரம், அவனுக்கு முன்பு சென்று நிற்க, அன்றைக்கு என்று பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் செய்துக் கொண்டிருக்க, அந்த மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.. வெளியில் வந்த ஓரிருவரிடம் அவளைப் பற்றி விசாரிக்க, அவர்களும் அவனுக்கு சாதகமான பதிலைச் சொல்லாமல் கையை விரித்தனர்.
கிஷோரை காண அவனது கல்லூரிக்குச் சென்றவன், கிஷோரைப் பார்க்க வேண்டும் என்று கேட்க, அவர்கள் அனைவரும் சுற்றலா சென்றிருப்பதாக பதில் வந்தது.. கிஷோரின் முகவரியையும், தொலைபேசி எண்ணையும் அவன் கேட்ட பொழுதோ, அவனைச் சந்தேகமாகப் பார்த்த அலுவலர், அவன் கேட்ட தகவலைத் தர மறுத்தார்.. சூர்யா அவரிடம் கெஞ்சியும் பார்க்க, அதுவும் பலனின்றி, ‘இப்போ நீங்க போகலைன்னா நாங்க வாட்ச்மேன விட்டு வெளிய கூட்டிட்டு போகச் சொல்லவா? இல்ல போலீசை கூப்பிடுவோம்.. இங்க வெளியாளுங்களுக்கு அதெல்லாம் தர முடியாது..’ என்று எரிச்சலுடன் சொல்ல, அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய, அவனுக்கு கண்ணீரே மிஞ்சியது.
கண்ணீர் கண்களை மறைக்க, தன் மீதிருந்த கோபமும், அவளைக் காண முடியாத தவிப்பிலும், வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டு வந்தவன், கவனம் சிதறி கீழே விழுந்து, முட்டியிலும், கையிலும் அடிபட்டு, ரத்தம் கசிய, அருகில் இருந்த மருத்துவனையில் கட்டிட்டு கொண்டு, வீட்டிற்கு வந்து சேர்ந்தவன், தனது தமக்கைக்குத் தெரியாமல், முழுக் கை சட்டையை அணிந்துக் கொண்டு அவளது திருமணத்தில் பங்குப்பெற்றான்..
அவனது முகத்தைப் பார்த்தே அவனால் சுஜிதாவைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று புரிந்துக் கொண்டவள், அவனிடம் அதைக் கேட்டு அவனது வருத்தத்தைக் கிளறாமல் அமைதி காத்தாள்.
சுஜிதாவை சந்தித்து தங்களது உறவை புதுப்பிக்க எண்ணி ஆவலுடன் வந்தவன், ஏமாற்றத்துடன் மீண்டும் விமானம் ஏறினான். அடுத்து வந்த நாட்கள் அவனுக்கும் சோதனையான நாட்களாக மாற, அவளையும் கண்டுப் பிடிக்க முடியாமல், வேலை கிடைத்தும் விசா கிடைக்காமல், மீண்டும் வந்து அவளைத் தேடவும் முடியாமல், விதி அவனுக்கு சோதனையைக் கொடுத்துக் கொண்டிருக்க, நாட்கள் நரகமாகிப் போனது.. அவளைத் தேடிக் கண்டுப்பிடிப்பதும், கண்ணைக் கட்டிக் கொண்டு, காற்றில் துழாவும் கதையாகிப் போனது..
வருடங்கள் உருண்டோட, சுஜிதா ராஜேஸ்வரியுடன் சென்னைக்குச் சென்று விட, நல்ல மதிப்பெண்களுடன் மேல் படிப்பையும் அவள் படிக்கத் துவங்கினாள்..
நடுவில் அவளைப் பார்க்க வழக்கம் போல சென்னைக்கு வந்து திரும்பிய அர்ச்சனா, சேலத்தில் அவர்களது வீட்டிற்கு அருகில் இருந்தவரை விமான நிலையத்தில் சந்தித்தார்..
அவரோ, அர்ச்சனாவைப் பார்த்த சந்தோஷத்தில் அவர்கள் தெருவில் இருந்தவர்களைப் பற்றிய விஷயத்தை சொல்லிவிட்டு, “அந்த நர்சம்மாவோட ஆட்டம் ரொம்ப தாங்கலங்க அர்ச்சனா.. அவங்க பையனுக்கு அமெரிக்காவுக்கே போய் கல்யாணம் செய்யப் போறாங்களாம்.. பொண்ணும் அந்த ஊருல இருக்கற சொந்தக்காரப் பொண்ணு போல. அமெரிக்கா போறோம் போறோம்ன்னு போறவங்க வரவங்களை எல்லாம் புடிச்சு அந்த அம்மா கதை சொல்லிக்கிட்டு இருக்காங்க.. ஒரே தம்பட்டம் தான் போங்க.. தெருவே அவங்களைப் பார்த்தாலே தெரிச்சு ஓடறோம்ன்னா பார்த்துக்கோங்க.. நீங்க தப்பிச்சீங்க..” என்று சொல்லவும், அர்ச்சனா பதில் பேசாமல் தலையசைத்து கேட்டுக் கொண்டு விடைப்பெற்று வந்தவர், சுஜிதாவிடம் அந்த விஷயத்தைச் சொல்லவும் செய்தார்..
அதைக் கேட்டவளோ, அவரிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல், “ஓ.. ரொம்ப சந்தோசம்மா..” என்று பேச்சை மாற்றி சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தவளுக்கோ, நெஞ்சம் முழுவதும் வலி எழுந்தது.. ராஜேஸ்வரியிடம் அதைப்பற்றி சொல்லிவிட்டு, தவிப்புடன் அழுது தீர்த்தவள், அந்த வலியைத் தனது மனதினில் புதைத்து, தன்னை மீட்டுக் கொண்டு மீண்டும் படிப்பில் கவனம் பதிக்கத் துவங்கினாள்..
சூர்யாவின் நினைவுகளில் இருந்து மீண்டு விட்டதாக ராஜேஸ்வரி நினைத்துக் கொண்டிருக்க, அவளுக்குத் திருமணம் செய்து பார்க்க அவளது பெற்றவர்கள் ஆசைப்பட்டனர். தெரிந்தவர்களின் மூலம் வந்த வரன்களில், நல்ல இடம் என்று மனதில் பட்ட ஒரு மாப்பிள்ளையைத் தேர்வு செய்து, இருவரையும் ஒரு ஹோட்டலில் சந்திக்க ராஜேஸ்வரியும், ராமச்சந்திரனும் அழைத்துச் சென்றனர்..
பெண் பார்க்கும் படலமாக அல்லாமல், நட்பின் அறிமுகம் போல இருவரையும் அறிமுகப்படுத்தி, பொதுவான விஷயங்களைப் பேசத் துவங்கினர்.. பேசத் துவங்கிய நால்வரில் இறுதியாக சுஜிதாவும், அந்த மாப்பிள்ளையுமே சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர்.. அவனிடம் எந்த ஒதுக்கத்தையும் காட்டாமல், சுஜிதாவும் பேசிக் கொண்டிருக்கவும், ராஜேஸ்வரியும் ராமச்சந்திரனும் மகிழ்ந்து போயினர்.. நட்பின் ரீதியில் இருவரின் போன் நம்பர்களும் கை மாறவும், அவர்களது மகிழ்ச்சி ரெட்டிப்பானது..
வீட்டிற்குச் சென்றதும், “ஏன் சுஜி.. அந்தப் பையனை உனக்குப் பிடிச்சிருக்கா? அவங்க வீட்ல கல்யாணத்துக்கு பேசலாமா? உங்க ரெண்டு பேரோட ஜோடிப்பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு. எங்களுக்கும் சீக்கிரம் ஒரு பேரனையோ பேத்தியையோ பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு.. என்ன சொல்ற?” ஆவலாக ராஜேஸ்வரி கேட்க, சுஜிதா அவரை ஆச்சரியமாகப் பார்த்தாள்..
அவளது பார்வை புரியாமல் குழம்பியவர், “என்ன இப்படி பார்க்கற? ஏதாவது இன்னும் அந்தப் பையனைப் பத்தித் தெரியனுமா? இல்ல இன்னும் ஒரு தடவ மீட் பண்ணிப் பேசறியா?” ஆவலாக அவர் கேட்க, தலையை இடம் வலமாக அசைத்தவள்,
“ஒரு பொண்ணுக்கு எத்தனை தடவ கல்யாணம் செய்வீங்க ராஜிம்மா?” அவள் கேட்ட கேள்வியில் அவர் ஆடிப் போக, ராமச்சந்திரன் ‘சுஜி..’ என்று திகைத்தார்..
அவரைப் பார்த்தவள், “சூர்யாவைப் பத்தி பேசலைன்ன உடனே நான் அவங்களை மறந்துட்டேன்னு நினைச்சீங்களோ? அது அப்படி இல்ல.. நான் சூர்யாவோட நினைவுகளோட தான் வாழ்ந்துட்டு இருக்கேன்.. இன்னும் சொல்லப் போனா சூர்யாவோட தான் வாழ்ந்துட்டு இருக்கேன். என்னால சூர்யா இருந்த இடத்துல யாரையும் வச்சுப் பார்க்க முடியாது ராஜிம்மா. சூர்யாவைத் தவிர யாரையும் என் மனசுல கூட அனுமதிக்க முடியாது.. இதுல நீங்க பேரன் பேத்தி வரைப் போயிட்டீங்க?” அவரிடம் கேட்டவள்,
“சும்மா பேசறதுக்கு எல்லாம் நீங்க கல்யாணம்ன்னு சொன்னீங்கன்னா நான் இனிமே யாரு கூடவும் பேச மாட்டேன்..” என்று சொல்லிவிட்டு, தனது புத்தகங்களுடன் அமரவும், ராஜேஸ்வரி திகைத்துப் போனார்..
“சரி.. அப்போ சூர்யா கூட பேசு சுஜி.. இல்ல சொல்லு.. நான் அவனைத் தேடிக் கண்டுப்பிடிக்கறேன்.. எனக்கு என்னவோ அந்த அம்மா சும்மா பெருமைக்கு சொல்லி இருப்பாங்கன்னு தோணுது..” ராஜேஸ்வரி முதல் தடவையாக அவனைப் பற்றிப் பேச, மறுப்பாக தலையசைத்தவள்,
“அவங்களுக்கு என்னை விட அந்த கா..யூ.வைத் தான் ரொம்ப பிடிக்கும்.. அவ தான் ரொம்ப முக்கியம். அதனால அவங்க சொன்னது உண்மையா தான் இருக்கும்.. அவங்க ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க ராஜிம்மா..” அசட்டையாகச் சொன்னவள், தனது வேலையில் கவனம் பதிக்கத் துவங்கினாள்.
அதற்குப் பிறகு, அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க அவர்கள் செய்த முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இரைத்த நீராகிப் போக, சுஜிதாவைத் தேடும் முயற்சியும் சூர்யாவிற்கு அவ்வாறே ஆகியது..
நாட்களின் ஓட்டத்தில் சுழன்றவர்கள் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தனர்.. அதே அளவில் குறையாத காதலுடன்..