உயிரோவியம் நீயே பெண்ணே – 23

OIP (4)

உயிரோவியம் நீயே பெண்ணே – 23

23

“டேய் நாளைக்கு ட்ரைன்ல ஏறின உடனே எனக்கு கால் பண்ணு.. நான் வந்து உன்னை ஸ்டேஷன்ல பிக்கப் பண்ணிக்கறேன்.. ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம் என்ன? நான் நைட் பஸ்ல ரெண்டு பேருக்குமே டிக்கெட் புக் பண்றேன்..” ட்ரைனில் இருந்து கீழே இறங்கி சூர்யா சொல்ல, அவனுக்கு விடைக் கொடுக்க முடியாமல் ட்ரைன் வாயிலில் நின்றிருந்த கிஷோர்,

“இது நல்ல ஐடியா சூர்யா.. நான் காலையில கல்யாணம் முடிச்சதும் கிளம்பி வந்துடறேன்.. நாம சேர்ந்தே போகலாம்.. போய் அந்த எருமையை ஒரு வழி செய்யலாம்..” என்று கூட்டணி அமைக்க, சூர்யா புன்னகைக்க, அவசரமாக அவனது கையைப் பிடித்துக் கொண்டவன்,

“இப்படியே சிரிச்சிட்டே இருடா.. உன் முகமே பார்க்க சகிக்கல.. கண்ணு எல்லாம் இடுங்கி போயிருக்கு..” மனதாரச் சொன்ன கிஷோர், விசில் சத்தம் கேட்கவும், அவனைப் பார்த்துக் கொண்டே ரயிலில் ஏறி நின்றவன், கண்ணுக்கு மறையும் வரை சூர்யாவைப் பார்த்துக் கொண்டே சென்றான்..

வீட்டின் அருகே செல்லச் செல்ல சூர்யாவிற்கு தன்னவளுடன் எந்தக் கவலையும் இன்றி சந்தோஷமாகச் சுற்றிய நினைவுகள் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.. இந்த நிலை எப்பொழுது சரி ஆகும் என்று நினைத்தவனுக்கு பெருமூசொன்றே வெளி வந்தது..

‘எல்லாமே நல்லபடியாக சென்றிருந்தால் இப்பொழுது அவளுடன் சந்தோஷமாக அல்லவா வாழ்ந்துக் கொண்டிருப்போம்? இந்த வெறுமையும் தனிமையும் இருந்திருக்காதே. அவ்வளவு அருகில் இருந்தும் சாதாரணமாக பேச முடியாத அவல நிலை தங்களுக்கு நேர்ந்திருக்காதே.. ஆயிரம் கதைகள் பேச நினைத்தாலும், வார்த்தைகள் தடுமாறுவது ஏனோ?’ மனதில் நினைத்துக் கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தான்..

தனது வீட்டின் கேட்டைத் திறக்க, மடைத் திறந்த வெல்லமாக அவனது மனதினில் அவளுடன் கழித்தத் தருணங்கள் முட்டி மோதின. அனிச்சைச் செயலாக தனது வீட்டின் பக்கத்து வீட்டைப் பார்த்தவனுக்கு, சுஜிதா நிற்பது போலவே தோன்றியது.. உதட்டில் தானாக முறுவல் பூக்க, அந்த வீட்டையேப் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்த அவனது தந்தை கோபால கிருஷ்ணன், “யாரு.. சூர்யாவா?” என்று ஆச்சர்யமாக கேட்டபடி வெளியில் வர, கேட்டைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றவன்,

“என்னப்பா.. என்னை மறந்துட்டீங்களா? இல்லை அடையாளம் தெரியலையா? பெத்த பிள்ளையைப் பார்த்து இப்படி கேட்கறீங்களே?” கிண்டலாகக் கேட்க,

அவனது முதுகில் ஒன்று வைத்தவர், “நானும் கிண்டலுக்கு தாண்டா கேட்டேன்..” என்றபடி அவனது கன்னத்தை ஆசையுடன் வருடி,

“என்னடா இப்படி இளைச்சுக் கிடக்க? வீடியோ கால்ல பார்க்கும்போது இவ்வளவு தெரியலையே..” மனத்தாகளாகக் கேட்க, அவரது கையைப் பிடித்துக் கொண்டவன்,

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைப்பா.. நானே சமைச்சு சாப்பிட்டதுனால இருக்கும்.. ஜிம்க்கு வேற போறேன்ல.. இனிமே ஜைஷு சமைச்சுத் தந்தா சரியா போயிடும்..” என்று சொல்லிக் கொண்டே அவருடன் வீட்டின் உள்ளே சென்றான்..

வழக்கம் போல வீட்டின் உள்ளே நுழையும்பொழுதே அவனது தலை தானாக பக்கத்து வீட்டை நோட்டம் விட, தன்னை நினைத்தே சிரித்துக் கொண்டவன், தலையில் தட்டிக் கொண்டு வீட்டின் உள்ளே சென்றான்..

“வசுந்தரா.. இங்க யாரு வந்திருக்கான்னு பாரு..” ஆசையாக அவனது வரவை அறிவிக்க, வேகமாக அடுக்களைக்குள் இருந்து வந்தவர், அதே வேகத்துடன் அவனது அருகில் வந்தார்..

“சூர்யா? என்னடா திடீர்ன்னு வந்திருக்க? உனக்கு லீவ் விட்டுட்டாங்களா? பெட்டி எதுவும் எடுத்துட்டு வரலையா? ஒரே பையோட வந்திருக்க?” அவனைச் சுற்றி பார்வையை ஓட்டியபடி கேட்க, சூர்யா மறுப்பாக தலையசைத்துக் கொண்டே தனது தந்தையைப் பார்த்தான்..

அவரும் அவனைப் பார்த்து ‘சொல்’ என்பது போல தலையசைக்க, “நான் வேலையை விட்டுட்டு இங்கயே வந்துட்டேன்.. இனிமே இங்க வேற வேலைத் தேடனும்.. நான் வந்து ரொம்ப நாள் ஆகுது.. பெட்டி எல்லாம் ஜைஷு வீட்ல இருக்கு..” சூர்யா சொல்ல, வசுந்தரா அதிர்ந்து போனார்..

“என்ன? என்னடா சொல்ற? லட்ச லட்சமா கைக்கு வர வேலையை வேண்டாம்ன்னு சொல்லுவியா? உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? உன் படிப்புக்கு வாங்கின கடனை யாரு கட்டுவா? நான் வேற உன்னை நம்பி இங்க இன்னொரு பெரிய வீடா பார்த்து வச்சிருக்கேன்.. எல்லாத்தையும் இப்படி குட்டிச்சுவர் பண்ணிட்டயேடா.. இவரு உன்னை வேலையை விட்டுட்டு வரச் சொன்னாரா?” அவர் சத்தமிட,

“அவருக்கே இப்போ தான் நான் வந்தது தெரியும்.. ஆமா.. இன்னுமா என் படிப்புக்கு வாங்கின கடன் அடையல? என் பிள்ளைங்க படிப்புக்கும் சேர்த்து லோன் வாங்கி இருப்பீங்களோ?” என்று நக்கலாகக் கேட்டவன்,

“அது தான் நான் அங்க வேலைக்கு சேர்ந்த உடனே அடைச்சு, உங்களுக்கு நகை வாங்கிக் கொடுத்து, உங்களோட ஆசைக்கு ஒரு பெரிய வீடும் கட்டிக் கொடுத்துட்டேனே.. இன்னும் நான் என்ன செய்யணும்ன்னு நீங்க நினைக்கறீங்க? நீங்க பார்க்கற வீட்டை எல்லாம் என்னால வாங்க முடியாது.. எனக்குன்னு ஒரு வாழ்க்கை இல்ல?” கோபமாக சூர்யா கேட்க, வசுந்தரா அவனை ஏளனமாகப் பார்த்தார்.  

“அதுக்குத் தான் உன்னை காயத்திரியை கல்யாணம் செய்துக்கச் சொன்னேன். அங்கேயே அவளும் வேலைப் பார்க்கறா.. நல்ல சம்பளம்.. ஒண்ணு இல்ல ரெண்டு என்ன? மூணு நாலு பெரிய வீடே வாங்கிப் போட்டு வாடகைக்கு விட்டு இருக்கலாம்ல.. நீ தான் அவளைக் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொல்லிட்ட? நீ ஒண்டிக் கட்டையா நிக்கறதுக்கு நானா பொறுப்பு? இப்போ கூட நீ முயற்சி செஞ்சா வெளிநாட்டுல திரும்ப வேலை கிடைக்கும்.. அதை வச்சே உனக்கு எப்படி பொண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன்னு பாரு..” வசுந்தரா சொல்லவும், நெடுநாட்களுக்குப் பிறகு தன்னைப் பார்க்கும் அவர், தன்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட விசாரிக்காமல், பணத்தைப் பற்றி மட்டுமே பேசவும் கோபம் மூள, தொப்பென்று தனது கையில் இருந்த பையை சோபாவில் விட்டு எறிந்தான்..

கோபாலகிருஷ்ணன் அவனது கையைப் பிடித்துத் தடுக்க, வசுந்தரா அதிர்ந்துப் பார்க்க, “பணம்.. பணம்.. பணம்ன்னு எங்களை எல்லாம் இத்தனை நாளா படுத்தி எடுத்தது போதாதா? உங்க தொல்லை தாங்களைன்னு தானே நான் வெளிநாட்டுக்கு போற முடிவையே எடுத்தேன்.. அதுனால நான் இழந்தது எவ்வளவுன்னு உங்களுக்குத் தெரியுமா? உங்களோட நிழலே பட வேண்டாம்ன்னு நான் நினைச்சு செஞ்ச காரியத்துல என்னோட வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நிக்கறேன். இப்போ அதை எப்படி மீட்டு எடுக்கறதுன்னு தெரியாம தவிச்சிட்டு நிக்கறேன்.. உங்களால நாங்க எல்லாம் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம்..” வெறி கொண்டவன் போல கத்திவிட்டு, தலையை பிடித்துக் கொண்டு அமர, கோபாலகிருஷ்ணன் அவனது தோளை வருடிக் கொடுத்தார்..

“சூர்யா.. என்னடா பெரிய வார்த்தை எல்லாம் பேசற? என்ன நடந்துச்சு? ஜைஷுவுக்கு பெரிசா ஏதாவது சொல்லிட்டாங்களா? சொல்லுடா..” தவிப்பாக அவனது தந்தை கேட்க, அவரது முகத்தைப் பார்த்தவன், அதில் இருந்த பதட்டத்தில் தன்னை சுதாரித்துக் கொண்டு,

“இல்லப்பா.. ஜைஷுக்கு பயப்பட எதுவும் இல்லன்னு சுஜி சொல்லிட்டா.. அவளை அவ பார்த்துப்பா.. கூடிய சீக்கிரம் நமக்கு நல்ல நியூஸ் கிடைக்கும்..” என்று சொல்லவும், அவனது அருகில் ஆவலாக அமர்ந்த கோபாலகிருஷ்ணன்,

“சுஜின்னு யாரடா சொல்ற? நம்ம சுஜியையா? ஜைஷு நம்ம சுஜிக்கிட்ட தான் ட்ரீட்மெண்ட் பார்க்கறாளா? அவ அவ்வளவு பெரிய டாக்டர் ஆகிட்டாளா?” ஆசையும் ஆவலுமாக அவர் கேட்க, சூர்யா புன்னகையுடன் தலையசைத்தான்.

“ஆமாப்பா.. ஜைஷுக்கு அவளைப் பார்த்ததுல இருந்தே ரொம்ப நம்பிக்கை வந்திருக்கு.. என்னோட சுஜி பார்த்துக்கறதுனால நமக்கு கவலை வேண்டாம்..” என்று சொல்ல, அவன் சொன்னதை கவனமுடன் கேட்டுக் கொண்டிருந்த கோபால கிருஷ்ணன்,

“சூர்யா.. என்ன சொன்ன? என்ன சொன்ன? திரும்பச் சொல்லு..” அவர் கேட்க வருவது புரிந்து,   

“என்னோட சுஜி அவளை பத்திரமா பார்த்துக்குவான்னு சொன்னேன்ப்பா..” அழுத்தமாகச் சொல்ல, அவனது கையைப் பிடித்துக் கொண்டவர்,

“டேய்.. டேய்.. வாழ்க்கையில நீ உருப்படியா செஞ்ச காரியம் இது தான்.. நீ எப்போப் பாரு அவ படிக்கும்போது மொட்டை மாடியில சுத்திட்டு இருந்த போதே நினைச்சேன்டா.. இது இப்படி தான் வந்து முடியும்ன்னு.. சரி சொல்லு.. எப்போ கல்யாண தேதியை வச்சுக்கலாம்? இத்தனை நாளா ஏண்டா கல்யாணத்தைத் தள்ளிப் போட்டீங்க? அவ படிச்சு முடிக்கட்டும்ன்னா? கல்யாணம் பண்ணிக்கிட்டே படிச்சு முடிச்சு இருக்கலாமே.. போடா.. கொஞ்சம் கூட அறிவே இல்ல..” அவன் சொன்ன செய்தியில் மகிழ்ந்தவர் வரிசையாக தனது கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றார்.       

அவரது மகிழ்ச்சியைப் பார்த்து சூர்யா புன்னகைக்க, “என்னது? யாரு சுஜிதா? அந்த பக்கத்து வீட்டு பிடாரியையா? அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்..” வசுந்தரா சொல்ல, அவரைப் பார்த்த சூர்யா,

“நீங்க அவளைப் பிடாரின்னு சொல்றீங்க பார்த்தீங்களா.. அது தான் இருக்கறதுலையே பெரிய காமெடி..” ஏளனமாகச் சொன்னவன்,

“உங்க சம்மதத்தை இங்க யாரும் கேட்கல.. எனக்கு உங்க சம்மதம் தேவையும் இல்ல.. நான் சுஜியை தான் கல்யாணம் செஞ்சிக்கப் போறேன்.. அதுக்கு இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் நான் வெயிட் பண்ணுவேன்..” அவனது பதிலைக் கேட்ட அவனது தந்தை குழம்பி,

“என்னடா இன்னும் வெயிட் பண்ணறது? ரெண்டு பேருக்குமே வயசாகிட்டே போகுது.. இதுவே லேட்ன்னு சொல்லிட்டு இருக்கேன்.. இன்னும் எவ்வளவு நாளானாலும் வெயிட் பண்ணுவேன்னு வேற சொல்ற?” என்று கேட்க, சூர்யா வருத்தமாக புன்னகைத்தான்.

“என்னடா உன்னோட சிரிப்பே சரி இல்ல.. சுஜி கல்யாணத்தை தள்ளிப் போடராளா?” படபடப்பாக அவர் கேட்க, மறுப்பாக தலையசைத்தவன்,   

“இவங்க கிட்ட இருந்து அவளைக் காப்பாத்த என்ன என்னவோ யோசிச்சு, வெளிநாட்டுக்கு போயிட்டா பிரச்சனை தீர்ந்ததுன்னு கிறுக்குத்தனமா முடிவெடுத்து தான் யூ.எஸ்.ல படிக்க முடிவெடுத்தேன். அதை அவக்கிட்ட கடைசி நிமிஷத்துல சொன்னதுனால, நான் கிறுக்குத்தனமா பேசினதுனால இந்த பத்து வருஷ தண்டனை.” நொந்த குரலில் அவன் சொல்ல, அவனது தந்தை அவனது தோளை வருடிக் கொடுத்தார்.

“அவளுக்கு நான் போறதுல இஷ்டம் இல்லப்பா.. அதனால சண்டைப் போட்டு போனேன். அவளை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்பா. அவ என்னை விட்டு ஓடி ஒளிஞ்சிட்டா.. இனிமே அவ மனசு நோகற படி எந்த விஷயமும் செய்ய மாட்டேன்.. இத்தனை நாளா அவ எங்க இருக்கான்னு தெரியாம இருந்தது. இப்போ ஜைஷு அவளைப் பார்த்துட்டு சொன்னதும் எனக்கு வேற எதுவுமே தோணல..

அவ தான் முக்கியம்ன்னு வேலையை விட்டுட்டு வந்துட்டேன். என்னை மன்னிச்சிருங்கப்பா.. நான் சீக்கிரம் இங்கேயே ஒரு வேலையைத் தேடிக்கறேன்.. நீங்க அதை நினைச்சு கவலைப்படாதீங்க என்ன?” என்று ஆறுதல் சொல்ல, வசுந்தரா அதிர்ந்துப் பார்க்க, கோபாலகிருஷ்ணன் அவனது தோளைத் தட்டிக் கொடுத்தார்..

“என்னடா கண்ணா இப்படி சுரத்தே இல்லாம பேசற? என்ன நடந்துச்சுன்னு மனசு விட்டு சொல்லுடா.. எதா இருந்தாலும் உன் அப்பா நான் இருக்கேன்.. பிள்ளைங்க ஆசையை நிறைவேத்தாம நான் இருந்து என்ன உபயோகம் சொல்லு? சுஜிதா தான் என் மருமக அதை யாரும் தடுக்க முடியாது.. தடுத்தா என்னோட இன்னொரு முகத்தைப் பார்ப்பாங்க.. சொல்லுடா கண்ணா.. என்ன நடந்துச்சு?” கோபாலகிருஷ்ணன் ஊக்க, அவர் சொன்ன அந்த இன்னொரு முகத்தைப் பற்றி அறிந்த வசுந்தரா, அமைதியாகிப் போனார். 

“நான் வசுந்தரா பையனா ஒரே ஒரு நாள் சுயநலமா நடந்துக்கிட்டதால வந்த வினை.. எல்லாம் சொல்றேன்ப்பா.. உள்ள வாங்க.. இங்க எதுவும் பேச வேண்டாம்.. எனக்கு இவங்க முன்னால எதுவுமே சொல்லப் பிடிக்கல..” என்றவன், தனது அன்னையை ஒரு பார்வைப் பார்த்து,

“சுஜிதா தான் என் பொண்டாட்டி.. நான் அவளைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.. முடிஞ்சா வந்து அட்சதை போட்டு ஆசிர்வாதம் செய்ங்க.. இல்ல அவளை எப்பவும் போல கரிச்சுக் கொட்டப் போறீங்கன்னா வரவே வேண்டாம். நானும் இங்க வர மாட்டேன்..” என்றவன், தனது தந்தையைக் அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்று, இறுதியில் தனது சறுக்கலை தவிர்த்து நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்..

அனைத்தையும் கேட்ட கோபாலகிருஷ்ணன் சூர்யாவின் முகத்தை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தார். “என்னப்பா அப்படி பார்க்கறீங்க?” அவரது முகத்தைப் பார்த்தவன் கேட்க,

“அவ மேல அப்படி ஆசையா இருந்துட்டு எப்படிடா சண்டைப் போட்ட? உங்க அம்மா குணம் தலைக் காட்டுது இல்ல? இனிமே அந்தத் தப்பைப் பண்ணிடாதே..” என்றவர், அவனது தலையை வருடி,

“எனக்கு சுஜியைப் பார்க்கும்போது எல்லாம் அவ மருமகளா வந்தா நல்லா இருக்கும்ன்னு தோணும். உனக்கும் அவ மேல ஒரு இஷ்டம்ன்னு தெரியும்.. ஆனா.. இப்படி லவ் பண்ணிட்டு சுத்தி இருப்பேன்னு நினைக்கல.. என் பையனுக்கு அந்த அளவுக்கு தைரியம் போதாதோன்னு நினைச்சிட்டேன்..” என்று கேலி செய்ய, சூர்யா அவரை முறைக்க, அவனது கன்னத்தைத் தட்டியவர்,

“எப்படியாவது அவளை சமாதானம் செஞ்சு சீக்கிரம் எங்களுக்கு நல்ல செய்தியைச் சொல்லுங்க. நாங்க கல்யாணத்துக்கு ரெடி ஆகணும்.. எவ்வளவு வேலை இருக்கு..” என்று சந்தோஷத்துடன் சொன்னவர், அவனது தலையை வருடி, அவனது தலையைத் தனது மடியில் சாய்த்துக் கொண்டார்..

அந்த அன்பில் நெகிழ்ந்தவனின் கண்கள் கலங்க, அவரது கையை எடுத்து தனது தலையில் வைக்கவும், புன்னகையுடன் அவனது தலையை வருடிக் கொடுத்தார். அவனது கண்கள் சொருகவும், “சூர்யா.. போய் நல்ல சுடுதண்ணியில குளிச்சிட்டு வா.. நான் உனக்கு சாப்பிட ரெடி செய்யறேன்.. சாப்பிட்டு தூங்குவியாம்..” எனவும், அவன் எழுந்து குளித்துவிட்டு வர, தனது மகனை சந்தோஷமாக கவனித்துக் கொண்டார். அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட வசுந்தரா, வாயடைத்துப் போனார்..

மறுநாள் அவன் ஊருக்கு கிளம்பவும், “என் மருமகளை கேட்டேன்னு சொல்லுடா சூர்யா. அவளை நான் ரொம்ப மிஸ் பண்றேன்னு சொல்லு. நான் இங்க வேலை முடிச்சிட்டு ரெண்டு நாளுல கிளம்பி வரேன்.. என் பொண்ணோடயும், பையனோடயும் சேர்ந்து இருந்து ரொம்ப நாளாச்சு..” என்று கூறி விடைக் கொடுக்க, அவரைப் பார்த்துச் சிரித்தவன்,

“அந்த அழுத்தக்காரியை வந்து என்னன்னு கேளுங்கப்பா.. ரொம்ப தான் மூஞ்சியைத் தூக்கறா..” சிறுபிள்ளையென சொல்பவன், சொல்லாமல் விட்டதும் எதுவோ இருப்பதாக அவருக்குத் தோன்ற, சிரித்துக் கொண்டே தலையசைத்தார். அவனுடன் செல்வதற்காக காத்திருந்த கிஷோரின் பார்வை வசுந்தராவை எரித்துக் கொண்டிருப்பதை கவனித்தவருக்கு எதுவோ மனதை உறுத்தியது..  தனது தாயை பார்த்து தலையசைத்துவிட்டு, கிஷோரை அழைத்துக் கொண்டு, ஊருக்கு கிளம்பினான்..

அன்று ஜைஷ்ணவி வந்து சென்றதும், ஹாஸ்பிடலில் இருந்து திரும்பி வந்த சுஜிதாவிற்கு சூர்யாவின் நினைவாகவே இருந்தது.. ஜைஷ்ணவி சொன்ன விஷயம் அவளுக்கு அதை விட அதிர்ச்சியாக இருக்க, வீட்டிற்கு வந்து உறங்க முயன்றவளுக்கு, அவனது முகமே கண்களில் வந்து நின்றது..

அவனது புகைப்படத்தையே வருடிக் கொண்டிருந்தவளுக்கு அவனை அப்பொழுதே பார்க்கும் ஆவல் எழுந்தது. தனது மனதை நினைத்து தானே சிரித்துக் கொண்டவள், அதை அடக்க வழி தெரியாமல் தவித்து, தனது லேப்டாப்புடன் அமர்ந்தாள்..

குவியல் குவியலாக இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அவளது லாப்டாப்பை நிறைத்துக் கொண்டிருந்தது.. அனைத்தையும் மீண்டும் ரசனையுடன் பார்த்துக் கொண்டு வந்தவள், வழக்கம் போல அதைத் தொகுத்து, பின்னணியில் பாடலையும் ஓட விட்டு, அதை வீடியோவாக மாற்றத் துவங்கினாள்..

“இப்படித் தான் இத்தனை வருஷமும் வாழ்ந்துட்டு இருந்தேன்.. இப்போ நேர்ல வந்து நின்னா எனக்கு நெருங்கவும் முடியல.. உங்க மேல முழுசா கோபப்படவும் முடியல. ஆனா உங்க மேல நிறைய நிறைய கோபமும் இருக்கு.. அப்படியே கத்தி சண்டைப் போடணும் போல இருக்கு.. நான் என்ன செய்யட்டும்?” அவனது புகைப்படத்தைப் பார்த்து கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தவள் அவனது முகத்தை ஆசையுடன் வருடிக் கொடுத்தாள்.

கனவில் லயிதிருந்தவளை காலிங் பெல் சத்தம் கலைக்கவும், “யாரு இந்த நேரத்துல?” என்று யோசித்தபடி கதவைத் திறக்க, முகத்தைத் துடைத்துக் கொண்டு, ராஜேஸ்வரி நின்றுக் கொண்டிருந்தார்..

“என்ன ராஜிம்மா.. என்னாச்சு திடீர்ன்னு வந்திருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே அவருக்கு வழியை விட்டு நகர்ந்து நிற்க, உள்ளே நுழைந்தவர்,

“உன் போன் என்ன ஆச்சு? எவ்வளவு நேரமா போன் செய்யறது?” என்று கேட்க, லேப்டாப்பின் அருகில் இருந்த தனது போனைத் திரும்பிப் பார்த்தவள், தலையில் தட்டிக் கொண்டு, அவசரமாகச் சென்று அதன் சத்தத்தை அதிகரித்து, அவரைப் பார்த்து திருட்டு முழி முழிக்க, அதற்குள்ளாகவே ராஜேஸ்வரி கணிணித் திரையைப் பார்த்திருந்தார்..

அவள் செய்து வைத்திருந்த வீடியோவை ஓட விட, இருவரின் புகைப்படங்களும் அதில் பாடலுடன் அணிவகுக்கத் துவங்கியது.. அதைப் பார்த்தவர், அவளை கேலியாகப் பார்த்து புருவத்தை உயர்த்தினார்.

உதட்டைக் கடித்துக் கொண்டு அவள் நிற்க, அவளது கன்னத்தைத் தட்டி, “போனை எடுக்கலையேன்னு பயந்து போய் வந்தேன்.. இவ்வளவு முக்கியமான வேலையில இருந்திருப்பன்னு நான் நினைக்கல.. சரி நான் கிளம்பறேன்.. கொஞ்சம் வெளிய வேலை இருக்கு..” என்றவர், அவளது பதிலுக்குக் காத்திருக்காமல்,

மீனம்மா…

அதிகாலையிலும் அந்தி மாலையிலும்

உந்தன் ஞாபகமே

அம்மம்மா முதல் பார்வையிலே

சொன்ன வார்த்தையில் தான் ஒரு காவியமே

சின்னச் சின்ன ஊடல்களும்

சின்னச் சின்ன மோதல்களும்

மின்னல் போல வந்து வந்து போகும்

மோதல் வந்து ஊடல் வந்து

முட்டிக் கொண்டபோதும்

இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்

இது மாதங்கள் நாட்கள் செல்ல

நிறம் மாறிடும் பூக்கள் அல்ல..          

என்று பாடிக் கொண்டே கிளம்பிச் செல்ல, தனது தலையில் தட்டிக் கொண்டவள், அப்படியே லேப்டாப்பின் மீது கவிழ்ந்துப் படுத்துக் கொண்டாள்..

சிறிது நேரம் அதே நிலையில் இருந்தவள், மெல்ல எழுந்து தனது மொபைலையும் வீட்டின் சாவியையும் எடுத்துக் கொண்டு, படிகளில் ஏறினாள்..

ஜைஷ்ணவியைப் பார்க்க வீடு வரை சென்றவளுக்கு ஏனோ ஒரு விதத் தயக்கம். “ஹும் ஹும் வேண்டாம்.. அக்கா தூங்கிட்டு இருக்கப் போறாங்க..” என்று நினைத்துக் கொண்டு திரும்ப எத்தனிக்க, சரியாக அந்த நேரம் கதவைத் திறந்துக் கொண்டு ப்ரதாப் வெளியில் வந்தான்..

அவளை அந்த நேரம் அங்கு எதிர்ப் பார்க்காதவன், அவளைப் பார்த்து “ஹான்..” என்று திகைக்க, அதை விட, அவனிடம் வசமாக மாட்டிக்கொண்ட உணர்வில் அவள் விழித்துக் கொண்டு நிற்க, அவளது முகத்தைப் பார்த்தவனுக்கு சிரிப்பே மிஞ்சியது..

“என்னம்மா.. வாசல் வரை வந்துட்டு திரும்பிப் போற? எங்களை டிஸ்டர்ப் பண்றோம்ன்னு நினைச்சிட்டயா?” இயல்பாக அவன் கேட்க, மண்டையை மேலும் கீழும் அசைத்தவள்,

“அக்காகிட்ட சும்மா கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்ன்னு வந்தேன்..” தயங்கித் தயங்கி அவள் சொல்லவும்,

“இப்போ என்னத்துக்கு புதுசா ஒரு இடத்துக்கு வந்தா மாதிரி தயங்கிக்கிட்டு இருக்க? உள்ளப் போம்மா.. அவளும் போர் அடிச்சுக்கிட்டு உட்கார்ந்து இருக்கா.. நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்..” என்றவன்,

“ஜைஷு.. இங்க யாரு வந்திருக்கா பாரு..” என்று குரல் கொடுத்துவிட்டு, உள்ளே செல்லுமாறு கைக் காட்டிவிட்டு, படிகளில் இறங்க, சுஜிதா தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள்..

சுஜிதாவைப் பார்த்ததும் சந்தோஷமாக அவளது அருகில் வந்த ஜைஷ்ணவி, “வா.. வா.. சுஜி.. நானே கொஞ்ச நேரத்துல நீ ஃப்ரீயா இருந்தா உன்னைப் பார்க்க வரலாம்ன்னு இருந்தேன்.. வா.. காபி குடிக்கிறயா?” என்று கேட்டு அவளை உபசரிக்க,

“அதெல்லாம் வேண்டாம்க்கா.. எனக்கும் போர் அடிச்சது அது தான் பேசிட்டு இருக்கலாம்ன்னு வந்தேன்..” என்றவளின் பார்வை அந்த வீட்டைச் சுற்றி வளம் வந்தது..

அவளது பார்வையைக் கண்டுக் கொண்டவள், “வா.. உனக்கு வீட்டைச் சுத்திக் காட்டறேன்..” என்று அழைக்க, அவளுக்கோ சூர்யாவின் அறையைப் பார்க்க ஆவல் எழுந்தது..

அவள் அழைத்ததும் எழுந்துச் சென்றவளுக்கு வீட்டைச் சுற்றிக் காட்டிய ஜைஷ்ணவி, “இந்த ஃப்ளாட்ல எல்லா வீடும் ஒரே போல தான் இருக்கும்ன்னு வள்ளிம்மா சொன்னாங்க..” என்று பேச்சுக் கொடுத்துக் கொண்டே,

“இது சூர்யாவோட ரூம்..” காட்டிய ஜைஷ்ணவி, சுஜிதாவின் முகத்தைப் பார்க்க, அவளது பார்வை தலையணையின் அருகே இருந்த அவர்களது புகைப்படத்தில் நிலைத்திருந்தது..  

அவளது பார்வையைப் பார்த்த ஜைஷ்ணவி தனக்குள் சிரித்துக் கொண்டு, தான் மடித்து வைத்திருந்த துணியை அவனது செல்பில் அடுக்குவது போலத் திறந்து, அதில் அவன் தொங்க விட்டிருந்த படங்களை அவளது பார்வையில் படுமாறு செய்ய, அதனைப் பார்த்த சுஜிதாவின் கண்கள் நிறைந்தது..

“இவன் என்ன தான் பெட்டியில இருந்து எல்லா பொருளையும் எடுத்து அடுக்கி வச்சிருக்கானோ தெரியல? ஒரே கவர் கவரா இருக்கு..” என்று புலம்பியபடி, அவன் அடுக்கி வைத்திருந்த கவர்களை ஜைஷ்ணவி எடுக்க, சடசடவென்று அனைத்து கவர்களும் சரிய, அவசரமாக சுஜிதா அதைச் சென்று பிடித்தாள்..

ஆனால் ஒரு கவரைப் பிரித்த ஜைஷ்ணவி திகைப்புடன் சுஜிதாவைப் பார்க்க, “என்னக்கா? என்னாச்சு?” என்று அருகில் அவளது கையில் இருந்த அட்டையை எட்டிப் பார்த்த சுஜிதா, தனது கையில் இருந்த கவர்களைப் பார்த்தாள்..

“ஜைஷு..” என்று அங்கு வந்த ப்ரதாப் இருவரும் இருந்த நிலையைப் பார்த்து, ஜைஷ்ணவியின் கையில் இருந்த அட்டையைப் பார்த்தவன் இருவரையும் பார்த்து கண் சிமிட்டினான்.

“ஹாப்பி பர்த்டே மை தங்கம்ஸ்..” என்று இருந்த வாழ்த்து அட்டையைப் பார்த்தவன், அவளது கையில் இருந்த கவரை பெட்டின் மீது கொட்டிக் கவிழ்க்க, அதில் இருந்து விழுந்த பொருட்களைப் பார்த்த ப்ரதாப்,

“ஓ.. அவ பர்த்டே வயசுக்குக் கணக்குக்கு கிஃப்ட் வாங்கி வச்சிருக்கான் போல இருக்கே..” என்றவன் அவசரமாக அதை எண்ணத் துவங்கினான்.

“இதுல இருபத்தி ஒண்ணு இருக்கு..” என்று சொன்னவன், வரிசையாக ஒவ்வொரு கவராக எண்ணி, ’22, 23,’ என்று    இருபத்தி ஒன்பது வரை கணக்கைச் சொல்ல, சுஜிதா தவிக்கத் துவங்கினாள்.          

“தோடு எல்லாம் அழகா இருக்கு இல்ல.. டிரஸ் கூட எல்லாம் அழகா இருக்கு..” ஜைஷ்ணவியும் ப்ரதாப்பின் அருகில் சென்று அமர, சுஜிதாவிற்கோ நெஞ்சம் அடைத்தது.  

“என் மச்சான் ரசனைக்காரன் தான்.. எவ்வளவு அழகா எல்லாம் வாங்கி வச்சிருக்கான் பாரேன்..” என்றவன், ஒரு கவர் புதிதாக இருப்பதைப் பார்த்தவன், அனைத்துமே கிஃப்ட் கவர் கொண்டு மூடப் பட்டிருக்கவும், சுஜிதாவைக் கேள்வியாகப் பார்க்க,

“அவளுக்கு இன்னும் கொஞ்ச நாள்ல பர்த்டே வருது.. அது தான் முன்னாலேயே வாங்கிட்டு வந்திருக்கான் போல..” ஜைஷ்ணவியின் பதிலில் சுஜிதாவிற்கோ ‘ஹோ’ என்று இருந்தது.  

அவளது கையில் அனைத்து கவர்களையும் எடுத்து வைத்தவன், “இதெல்லாம் உங்க சொத்து.. உங்க சொந்தம்.. அதனால நீயே திரும்ப எடுத்து அடுக்கிடு.. இதுக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்ல..” சுஜிதாவிடம் சொன்னவன்,

“ஜைஷு.. உனக்கு இளநீர் வாங்கிட்டு வந்திருக்கேன்.. சீக்கிரம் வந்து குடி.. உனக்கு சமோசா பிடிக்கும்ன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்மா.. அதை வச்சிட்டு வா.. எடுத்து வைக்கிறேன்.” என்ற ப்ரதாப் ஜைஷ்ணவியை அழைத்துக் கொண்டு செல்ல, சுஜிதாவோ திகைத்து நின்றாள்..   

“நானா?” அவளது குரல் காற்றாகித் தான் வெளியில் வந்தது..

“அதுல என்ன இருக்குன்னு பார்க்கணும்னு ஆசையா இருந்தா, எல்லாம் ஓபன் பண்ணி பார்த்துட்டு அப்படியே ஒட்டி வச்சிரு.. நான் அவன்கிட்ட சொல்ல மாட்டேன்..” ப்ரதாப்பின் குரல் கேட்க, சுஜிதா பேந்த விழித்துக் கொண்டு நின்றாள்.        

ஒரு பெருமூச்சொன்றை வெளியிட்டவள், ஒவ்வொரு கவரையும் மெல்ல வருடிக் கொடுத்து அதே இடத்தில் அடுக்கி வைத்து, அந்த கதவில் தொங்க விடப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்துவிட்டு, அந்த அறையை மீண்டும் ஒருமுறை பார்த்தவள், கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு, அறையை விட்டு வெளியில் வந்தாள்.

அதற்கு மேல் அதைப் பற்றிப் பேசாமல், அவளிடம் சமோசாவை நீட்டிய ப்ரதாப், பொதுவாக அவளிடம் பேசி, அவளையும் பேச விட்டு, கேலி செய்து சிரிக்க, அதற்கு பிறகு இரவு வரை நேரம் போனதே தெரியாமல் சென்றது. வெகுநாட்களுக்குப் பிறகு சுஜிதாவும் இயல்பாக பேசி சிரித்துக் கொண்டு, ப்ரதாபிற்கு சரியாக வாயடித்துக் கொண்டிருக்க, அன்றைய பொழுது இனிமையாக கழிந்தது.

மனம் லேசானது போன்றதொரு உணர்வில் அன்றைய இரவும் சுகமானதொரு உறக்கத்தைத் தொடர்ந்து, இனிமையான மனநிலையில் காலையில் எழுந்தவள், ஏதோ பாடல்களை முணுமுணுத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு தயாரானாள்.

அழகாக புடவையை உடுத்தி, மிதமான ஒப்பனை செய்துக் கொண்டு கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டவளின் இதழ்களில் மெல்லிய புன்னகை.. அதே மனநிலையில் மருத்துவமனைக்குள் அவள் நுழையும் பொழுதே எதிர்ப்பட்ட ராஜேஸ்வரி, “ஹையோ யாரோ புதுசா புடவை எல்லாம் கட்டிக்கிட்டு வராங்களே.. நீங்க யாருங்க? உங்க பேர் என்ன?” என்று கேட்டு கேலி செய்ய, அழகாக முகம் சிவந்தவள்,

“போங்க ராஜிம்மா.. என்னைக் கிண்டல் செய்யறீங்க..” என்று சிணுங்கியபடி தனது வேலையை கவனிக்கத் துவங்கியவளின் உள்ளம் முழுவதும் அவனது நினைவுகள்..     

நண்பர்கள் இருவருமே நெடுநாள் கதையை பேசிக் கொண்டே பஸ் பிடித்து ஊருக்கு வந்து சேர, “மேடம் வீட்டுல தான் இருக்கா போல பூட்டு தொங்கல.. என்ன அதிசயம்?” சூர்யா கேலியாகச் சொல்ல,

“அவ கதவைத் திறந்தா நீ அடி தான் வாங்குவ. உனக்கு இருந்தாலும் இவ்வளவு தைரியம் ஆகாதுடா..” என்று கேலி செய்த கிஷோர்,

“சரி.. நம்ம ப்ளான செயல் படுத்துவோம் என்ன? நீ கீழ இருந்து வா..” என்று சொல்லவும்,

“இது தேவையா? எனக்கு சந்தேகமா இருக்கு..” சூர்யா இழுக்க, கீழே செல்லுமாறு கைக் காட்டி முறைக்க, சூர்யா படிகளில் இறங்கிச் செல்ல, கிஷோர் சுஜிதாவின் வீட்டின் காலிங் பெல்லை அமுக்கினான்..

 

error: Content is protected !!