உயிரோவியம் நீயே பெண்ணே – 27

48b9fd3d264e858a4ae600960c2d8cf0

உயிரோவியம் நீயே பெண்ணே – 27

27  

சூர்யா கிளம்பிச் செல்லவும், மனதினில் சுருக்கென்று தைக்கவும், ராஜேஸ்வரியின் ஆறுதலைத் தேட, அவரோ அவளையேத் திட்டிவிட்டுச் சென்றார்.

“போங்க.. எல்லாரும் இந்த சூர்யாவுக்கு தான் சப்போர்ட்டு..” மெல்ல முணுமுணுத்தவளின் பார்வை தனது கையில் இருந்த மொபைலின் மீது படிந்தது.

‘SUJA’S’ என்று பெயரிடப்பட்டிருந்த அவனது வலைத்தளத்தின், ஒரு பக்கமான ‘தி ஆர்ட் ஆஃப் டேஸ்ட்’ டிலிருந்த புகைப்படங்களைப் பார்த்தவளுக்கு கண்கள் விரிந்தது. தன்னை துக்கத்திலிருந்து மீட்டுக்கொள்ள அவன் எடுத்திருந்த முயற்சிகளைப் பார்த்தவளுக்கு மனதினில் பெருமிதம்..

‘ஸ்ட்ரைட் டிரைவ்..’ என்ற கிரிக்கெட் பக்கத்தையும் பார்வையிட்டவள், “அதானே பார்த்தேன்.. இவங்களாவது கிரிக்கட்டை விடறதாவது.. கிரிக்கட் பைத்தியம்..” அவனை செல்லமாக கடிந்தபடி, பார்வையாளர்களைப் பார்க்கத் துவங்கினாள்.

அவளுக்காக காத்திருந்து, உள்ளே வந்த ஜைஷ்ணவியின்  பார்வை அவளை ஆராய்ச்சியுடன் தழுவ, “வாங்கக்கா ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேனா?” என்று கேட்டபடி அவளை பரிசோதிப்பதற்காக உள்ளே அழைத்துச் செல்ல,

“டாக்டர் லேட்ன்னு எங்களுக்கு தான் அப்போவே தெரியுமே.” ப்ராதாப்பின் கேலியில், தனது தலையில் தட்டிக்கொண்டு, நாக்கைக் கடித்து ‘ஹ்ம்ம்..’ என்று சிணுங்கியவள், ஜைஷ்ணவியை பரிசோதித்து விட்டு, “ஆல் ஃபைன் அக்கா.. எக் ரிலீஸ் ஆகிருச்சு.. நீங்க நார்மலா சேர்ந்திருங்க. இதே டேபிலட்ஸ் கண்டின்யூ பண்ணுங்கக்கா.. இந்த சைக்கில் பார்க்கலாம்.. ஆல் தி பெஸ்ட்..” என்று சொல்லிவிட்டு கண்சிமிட்டிச் சிரிக்க, அவளது கையில் செல்லமாக அடித்த ஜைஷ்ணவி, முகத்தைச் சுருக்கி நாணத்துடன் அழகு காட்ட,

“என்னக்கா? எங்களுக்கு எல்லாம் சீக்கிரம் ஒரு குட்டி பாப்பாவைப் பார்க்க வேண்டாமா? கடைக்குட்டின்னு சொல்லி சூர்யாவையே எவ்வளவு நாளைக்கு செல்லம் கொஞ்சிக்கிட்டு இருப்பீங்க? அவங்களுக்கு டஃப் கொடுக்க ஒரு ஜூனியர ரெடி பண்ணுங்க.. மாமாவோட கண்ணுல விரலை விட்டு ஆட்டணும்.. நான் எப்படி ட்ரைன் பண்றேன்னு மட்டும் பாருங்க..” கேலியாகச் சொல்லிக் கொண்டே கையுறையை கழட்ட,

“நல்லா ட்ரைன் பண்ணும்மா.. நீயாச்சு அவனாச்சு..” என்று கேலி செய்துக் கொண்டே ஜைஷ்ணவி எழவும், கண்சிமிட்டிச் சிரித்தவள்,   

“சரி பண்ணிக்கிட்டு வாங்கக்கா..” என்றபடி தனது டேபிளின் அருகே செல்ல, ப்ரதாப் தனது போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். அவளது ப்ரிஸ்க்ரிப்ஷனில் ஒரு குட்டிக் குழந்தையின் உருவத்தை வரைந்தவள், ‘ஆல் தி பெஸ்ட்..’ என்று எழுதவும், ஜைஷ்ணவி வந்து சேர்ந்தாள்.

ப்ரதாப் ஜைஷ்ணவியைப் பார்க்க, அவளது புன்னகையிலேயே புரிந்துக் கொண்டவனிடம்,

“இவளுக்கு ரொம்ப கொழுப்பா போச்சு.. அவனைக் கிண்டல் செய்துக்கிட்டு இருக்கா.. இரு அவன்கிட்டயே சொல்றேன்..” பிரதாப்பிடம் சொல்லிக் கொண்டே சுஜிதாவை பொய்யாக மிரட்ட,

“ஹையோ நான் அப்படியே பயந்து நடுங்கிட்டேன்.. அவங்க பெரிய சூரன்..” என்று வாயடிக்க, அவளைப் பார்த்து சிரித்த ப்ரதாப்,

“அவன் சரியான வெத்து பீசும்மா.. இவ தான் அவ தம்பியை மெச்சிக்கணும்..” என்று சொல்லவும்,

“ஹான் அப்படி எல்லாம் இல்ல..” அவசரமாக அவள் மறுக்கவும், ‘நீயுமா..’ என்று தலையில் அடித்துக் கொண்ட ப்ரதாப்,    

“சரிம்மா.. நாங்க கிளம்பறோம். சூர்யா எங்கயோ அவசரமா போகணுமாம்.. மெசேஜ் அனுப்பி இருக்கான்..” அவளிடம் சொன்னவன், ஜைஷ்ணவியைப் பார்த்து “போகலாமா?” என்று கேட்கவும், தனது மொபைலை எடுத்துப் பார்த்த சுஜிதாவின் முகம் சுருங்கவும், ஜைஷ்ணவியை அர்த்தப்பார்வை பார்த்தவன், சுஜிதாவிடம் விடைப்பெற்று கிளம்பினான்.              

நேரம் விரைந்தோடிச் செல்ல, வந்திருந்த பார்வையாளர்களை பார்த்துவிட்டு, மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தவளுக்கு டேபிளில் இருந்த உணவுகள் டப்பாக்களில் ஏதோ வித்தியாசம்..   

‘ஹ்ம்ம்.. சூர்யா தான் எங்கயோ போயிருக்காங்க போலயே.. இன்னும் வரலையோ? என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லத் தோணலையா?’ தனக்குள் கேட்டுக் கொண்டே குளித்துவிட்டு வந்தவளின் நினைவுகள் அவனிடமே ஓடிச் சென்றது..

‘அக்காவை விட சூர்யா நல்லா சமைக்கிறாங்க.. நாளைக்கு ப்ரைட் ரைஸ் செஞ்சித்தர சொல்லணும்.. அதுல போட்டோவைப் பார்த்ததுல இருந்தே நாக்கு ஊருது..’  அவனிடம் பேச மனம் நிறைந்து ஆசைகள் வழிய, மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றாள்.

மாலையிலும் வந்திருந்தவர்களைப் பார்த்துவிட்டு, இரவு லேபர் அறையில் அவளிருக்க, நேரம் விரைந்தோடிச் சென்றது.. ஒரு அறுவை சிகிச்சையையும் முடித்து ராஜேஸ்வரியுடன் வெளியில் வந்தவள், “அந்த ரெண்டு குட்டியும் செம க்யூட் இல்லம்மா.. அது என் விரலை பிடிச்சது பாருங்க.. எனக்கு உள்ளுக்குள்ள என்னவோ பண்ணிருச்சு..” வளவளத்துக் கொண்டே வந்தவளின் பார்வை, அங்கு அவளுக்காக காத்திருந்த சூர்யாவின் மீது விழுந்தது.

ஒரு நேர்காணலுக்குச் சென்றுவிட்டு நேராக வந்து அவளுக்காக காத்திருக்க, அவனைப் பார்த்தவளின் உதடுகள் தானாக, ‘வாவ்’ என்று முணுமுணுக்க, ராஜேஸ்வரி சிரித்துக் கொண்டார்.

“ஹையோ சூர்யாவை இது போல டக்கின் செய்து ப்ரோஃபஷ்னல் லுக்ல அவங்க காலேஜ் படிக்கும் போது பார்த்தது. அப்பறம் எல்லாம் போட்டோல பார்த்ததோட சரி.. இப்போ என்ன இப்படி மாடல் மாதிரி நின்னுட்டு இருக்காங்க? சார் இப்படி டிப்டாப்பா டிரஸ் பண்ணிக்கிட்டு எங்க போயிட்டு வந்திருக்கார்?” படபடவென்று கேட்டுக் கொண்டே தனது மொபைலில் உன்னிப்பாக எதையோ பார்த்துக்கொண்ருந்தவனின் அருகில், ‘சூர்யா..’ என்றபடி ஓடிச் சென்றாள்..  

“ஹைடா பட்டு.. வந்துட்டியா? வேலை முடிஞ்சதா?” உற்சாகமாக அவன் கேட்க,

“அதெல்லாம் ஆச்சு.. நீங்க என்ன ஷேவ் எல்லாம் பண்ணிக்கிட்டு இப்படி டிப்டாப்பா இருக்கீங்க? என்ன விஷயம்?” ஆவலாகக் கேட்க,

“ஒரு ரெண்டு இன்டர்வியூ அட்டென்ட் பண்ணிட்டு வந்தேன்டா அது தான்.” அவன் சொல்லி முடிப்பதற்குள், ‘என்னாச்சு?’ என்று கண்களாலேயே கேட்க,      

“போகும்போது சொல்றேனே.. உன்கிட்டயும் பேசணும்.. உனக்கு வேலை முடிஞ்சதுன்னா போகலாமா? பசிக்குது. நானும் இப்போ தான் வீட்டுக்கு வந்தேன். வரும் போதே வீடு பூட்டி இருக்கவும், அப்படியே உன் வீட்ல பேக்கை வச்சிட்டு உன்னை கூப்பிட வந்துட்டேன். போகும்போதே சாப்பாடு ஆர்டர் போட்டுட்டு போகலாம்..” எனவும்,

“சொல்லுங்களேன்.. காயா பழமா?” விடாமல் அவள் கேட்க,

“பழம் போல தான்.. ஆனா.. யோசிக்கணும்..” என்று பதில் சொல்லவும், அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே,

“இதோ நான் டிரஸ் சேஞ் பண்ணிட்டு வந்திடறேன்..” என்றபடி அவசரமாக அறைக்குள் செல்ல, ராஜேஸ்வரி அவளைப் பார்த்துக் கொண்டே, அவனது அருகில் வந்தார்..

அவரைப் பார்த்து சூர்யா புன்னகைக்கவும், “என் கூட பேசிட்டு வந்ததைக் கூட மறந்து உன்னைப் பார்த்ததும் ஓடி வந்துட்டா. அம்மா அம்மான்னு சுத்திக்கிட்டு இருந்தவளைப் பாரேன்..” என்று கேலி செய்ய, சூர்யா அமைதியாக புன்னகைத்தான்.        

“இண்டர்வ்யூவா சூர்யா?” அவர் கேட்கவும், தலையை மேலும் கீழும் அசைத்தவன்,

“பார்ப்போம் அத்தை.. அவக்கிட்ட பேசணும்.. அவ ஓகேன்னு சொன்னா வர திங்கள்ல இருந்தே ஜாயின் பண்ணிடலாம்.. நல்ல கம்பனி தான்.. நைட் ஆஃபர் அனுப்பறேன்னு சொல்லி இருக்காங்க. இன்னொரு கம்பனியும் நல்ல கம்பனி தான்.. பார்ப்போம்..” என்று சொன்னவன், ஒருபெருமூச்சுடன் தோளைக் குலுக்க, ராஜேஸ்வரி அவசரமாக உடை மாற்றிக் கொண்டு வந்தவளைப் பார்த்தார்..

“சரி.. பேசி முடிவு பண்ணுங்க.. அவ வந்துட்டா..” என்றவரிடம்,  

“சரி ராஜிம்மா.. நாங்க கிளம்பறோம்.. அவங்களுக்கு பசிக்குதாம்..” அவசரமாக சொல்லிவிட்டு சூர்யாவைப் பார்க்க, சூர்யா அவளை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன பசிக்குதுன்னு சொன்னீங்க இல்ல?” அவள் கேட்க,

“ஆமா.. ரொம்ப பசிக்குது.” அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டே அவரிடம் விடைப்பெற்றவன், சுஜிதாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்..

“இந்த நேரத்துல பிரியாணி தான் இருக்கும்.. நான் உங்களுக்கு தோசை சுட்டுத் தரேன்.. அக்கா எனக்கு ஈவெனிங் மெசேஜ் செய்யவும் வேலை செய்யற அம்மாவை மாவு வாங்கி வைக்க சொல்லி இருக்கேன்..” அவளது நடை வேகமாக, அவளது கையைப் பிடித்துக் கொண்டவன்,

“பசி தான்.. ஆனா.. பொறுத்துக்கலாம்.” என்றபடி அவளது கையை அவன் இறுக பிடித்துக் கொள்ள, சுஜிதா அவனை விழி உயர்த்திப் பார்த்தாள்..

“ஏதோ பேசணும்ன்னு சொன்னீங்க?” அவள் எடுத்துக் கொடுக்க,

“வீட்டுக்கு போய் சாப்பிட்டு பேசலாமே.. மதியமும் எதுவும் சாப்பிடல சரியா சாப்பிடல..” என்றவனின் கையை விடாமல், வீட்டை நோக்கி நடந்தாள்.

வீட்டின் கதவைத் திறந்ததும், அங்கிருந்த அவனது பொருட்களைப் பார்த்தவள் சூர்யாவைக் கேள்வியாகப் பார்த்தாள்.

அவளது பார்வையை கண்டவன், “எப்படியும் உனக்கு இன்னைக்கு ராத்திரியும் கனவு வரும். நீ பயந்து ஓடி வந்து கதவைத் தட்டி அவங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் பாரு. நான் பாட்டுக்கு இங்க ஓரமா உன் கண்ணு முன்னால இங்க தூங்கறேன். உனக்கும் நிம்மதியா இருக்கும்.” என்று சொல்லவும், அவனை விசித்திரமாகப் பார்த்தாள்.

“அதெல்லாம் இன்னைக்கு நான் பயந்து வர மாட்டேன்.. அது சரி.. எதுக்கு இரண்டு தலைகாணி?” என்று கேட்கவும்,

“எல்லாம் முன்னேற்பாடு தான்.. நீ வந்தா அது உனக்கு யூஸ் ஆகும்.. இல்லையா கட்டிப் பிடிச்சிட்டு தூங்க எனக்கு யூஸ் ஆகும்.. எப்புடி?” எனவும், தலையில் அடித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தபடி,  

“கரடி மாதிரி இருந்த முகம் இப்போ தான் பார்க்கற மாதிரி இருக்கு..” முணுமுணுத்துக் கொண்டே தனது அறைக்குச் சென்றவள்,

“நான் குளிச்சிட்டு ரெண்டு நிமிஷத்துல வந்துடறேன். நீங்களும் ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க..” அவளது குரலில் மேலே சென்று குளித்து வந்தவனுக்கு தோசையை தயாராக வைத்திருந்தாள். 

“வாவ்.. தேங்க்ஸ்டி பட்டு..” என்றபடி அவளது கன்னத்தில் முத்தமிட்டவன், அவசரமாக இரண்டு வாய் பிட்டு வாயில் போட்டுக் கொண்டு,

“நீயும் அப்படியே சாப்பிடு.. உனக்கும் டைம் ஆகுது..” என்றபடி அவளது வாயின் அருகே எடுத்துச் செல்ல,

“எனக்கு வேண்டாம்.. உங்களுக்கு செஞ்சித் தந்துட்டு நான் சாப்பிட்டுக்கறேன்..” என்றவளது முகத்தைக் கூர்ந்துப் பார்த்தவன், தோளைக் குலுக்கிக் கொண்டு உண்பதைத் தொடர, வாயை சிறியதாக திறந்துக் காட்டினாள்.

அதை கவனித்தும் கவனிக்காதது போல அவன் தொடர்ந்து உண்ண,  “ஆ..” அவள் குரல் கொடுக்க, அவளது வாயில் தோசையைத் திணித்தவன், அமைதியாக அவளுக்கும் கொடுத்துபடி உண்டு முடித்தான்..

“எனக்கு போதும்..” சொல்லிக் கொண்டே அவளுக்கு அவன் ஊட்டி விட, வாயில் வாங்கிக் கொண்டே,

“இண்டர்வ்யூ என்னாச்சுன்னு கேட்டேனே..” என்று கேட்கவும்,

“ஹ்ம்ம்.. சொல்றேன்.” என்றபடி, மேடையின் மீது ஏறி அமர்ந்துக் கொண்டான்.

“ரெண்டு கம்பெனில இன்னைக்கு அட்டென்ட் பண்ணினேன். காலையில ஒண்ணு அட்டென்ட் பண்ணினேன். நல்ல கம்பனி தான்.. இன்னைக்கு நைட் ஆஃபர் லெட்டர் அனுப்பறேன்னு சொல்லி இருக்காங்க.. ஆனா.. வர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷன்ஸ் ரொம்ப கிடைக்காதுன்னு சொல்றாங்க.” என்றபடி அதன் சம்பள விவரங்களைச் சொன்னவன், 

“நான் அது முடிச்சு வெளிய வந்த பொழுது, யூ.எஸ்.ல இருக்கற என் ப்ரெண்ட் கால் பண்ணினான்..” அவன் முடிப்பதற்குள்,

“விமலா?” என்று கேட்க, மறுப்பாக தலையசைத்தவன்,

“இல்ல.. இவன் கிரிக்கெட் க்ளப் ஃப்ரெண்ட்.. அவனுக்கு நிறைய காண்டாக்ட்ஸ் இருக்கு. ஏதாவது தெரிஞ்ச கம்பனில வேகன்ஸி இருந்தா சொல்லச் சொல்லி அவனுக்கு ரெஸ்யூம் அனுப்பி வச்சிருந்தேன்.. அவன் சாயந்திரம் திடீர்ன்னு கால் பண்ணி, ‘*** இந்த கம்பனியோட சீனியர் விபி என்னை மீட் பண்ணனும்ன்னு சொல்றார்டா.. போயிட்டு வந்திரு’ன்னு சொன்னான். சரின்னு போய் பார்த்துட்டு வர தான் இவ்வளவு நேரம் ஆகிருச்சு.” அவன் சொல்லி முடிக்கவும், கண்களை விரித்தவள்,

“அது பெரிய கம்பனின்னு கேள்விப்பட்டு இருக்கேனே. அந்த கம்பனில நிறைய சலுகை எல்லாம் தருவாங்கன்னு கிஷோர் சொல்லி இருக்கான்.” சுஜிதா சொல்லவும், அவளது கன்னத்தை வருடியவன், ‘ஆம்’ என்று தலையசைத்தான்.

“என்னாச்சு? அவரு என்ன சொன்னாரு?” ஆவலாக அவள் கேட்க,

“அவருக்கு என் ஃப்ரோபைல் ஓகே தான். அந்த கம்பனியை விட இது சேலரியும் அதிகமா தான் கிடைக்கும். வர்க் ப்ரம் ஹோம்க்கு பஞ்சமே இல்ல.. ஆனா.. நான் தான் என் வைஃப் கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொல்லிட்டு வந்தேன்..”  என்று சொல்லவும், “ஏன்?” சுஜிதா திகைத்தாள்.

“அது.. சில சமயம் ரெண்டு மூணு வாரம் போல பிசினஸ் ட்ரிப் போறது போல இருக்குமாம். அதனால தான்.. நான் பாட்டுக்கு ஓகே சொல்லிட்டு வந்து.. என் பெண்டாட்டி கோவிச்சுக்கிட்டான்னா என்ன செய்யறது? இன்னும் ஒரு பத்து வருஷம் தவிக்கறதுக்கு மனசுல தெம்பில்ல..” என்றவனது முகத்தைப் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்..

சூர்யா அமைதியாக தனது மொபைலைப் பார்த்துக் கொண்டிருக்கவும், “லூசாபா நீங்க? நல்ல கம்பனி.. நல்ல ஆஃபர்ன்னு சொல்றீங்க.. ரெண்டு மூணு வாரம் பிசினஸ் ட்ரிப் தானே. அப்பறம் இங்க தானே இருப்பீங்க? அந்த கேப்பை நாம சமாளிச்சுக்கலாமே. அதுல என்ன பிரச்சனை இருக்கப் போகுது? அதுக்குப் போய் யாரவது இப்படி சொல்லிட்டு வருவாங்களா?” அவளது கேள்வியில் அவளை இறுக அணைத்துக் கொண்டவன்,

“அப்போ நான் ஓகே சொல்லிடவா? உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே..” என்று கேட்க, தலையை உயர்த்தி அவனது முகத்தைப் பார்த்தவள், ‘இல்லை’ என்று மறுப்பாக தலையசைக்க, அவளது நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன், அவளுக்கு ஊட்டி முடித்தான். 

“சரி.. நீ போய் தூங்கு..” என்றபடி அவளுக்கு கிச்சனை சுத்தம் செய்ய உதவியவன்,

“நான் இருக்கறதை மறந்து மேல போய் கதவைத் தட்டி அவங்களை டிஸ்டர்ப் பண்ணிடாதே. இங்கயும் ரெண்டு தலைகாணி இருக்கு.. என் கை இருக்கு மறந்துடாதே..” அவளை வம்பு வளர்த்து விட்டு, தனது லேப்டாப்புடன் அமர்ந்தான்..

அவனைப் பார்த்துக் கொண்டே தனது அறைக்குள் உறங்கச் சென்றவளுக்கு, சூர்யா யாருடனோ பேசிக் கொண்டிருப்பது கேட்டது.. பின்பு ஒரே அமைதியாக இருக்க, மெல்ல அறையில் இருந்து எட்டிப் பார்த்தாள்.

தனது ஏர்பாட்சை மாட்டிக்கொண்டு மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டே மும்முரமாக வேலை செய்வதைப் பார்த்துவிட்டு, மீண்டும் படுத்துக் கொண்டவளுக்கு அவனிடம் பேச வேண்டும் என்ற ஆவல் முட்டித் தள்ளியது..

‘சூர்யாக்கிட்ட சாரி கேட்க வேண்டியது பாக்கி இருக்கு.. நியாபகம் இருக்கா?’ அவளது மனசாட்சி சொல்ல,  

‘கேட்கணும் தான்.. ஆனா.. எப்படி போய் கேட்கறது? பழசை எல்லாம் ரொம்ப கிளறி ஹர்ட் செய்யறா போல இருக்குமோ?’ என்று வாதிட்டுக் கொண்டே மீண்டும் எட்டிப்பார்க்க, சூர்யா சுவற்றில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டிருந்தான்.

ஏனோ அவனது அந்த நிலையைப் பார்த்தவளுக்கு மனதைப் பிசைய, ‘ஏன் தான் இவங்க இப்படித் தன்னை வருத்திக்கறாங்களோ?’ மனதினில் நொந்துக் கொண்டே, மெல்ல அடியெடுத்து அவனது அருகில் சென்றாள்..

அருகில் அசைவு தெரியவும் கண்களைத் திறந்து பார்த்தவன், “என்னடா தூக்கம் வரலையா?” என்று கேட்க, மெல்ல அவனது அருகே சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவள், மண்டையை அசைத்தாள்.

“நீங்க என்ன அப்படி யோசிச்சிட்டு இருக்கீங்க?” மெல்லிய குரலில் கேட்க,

“ஒண்ணும் இல்லடா. இந்த வர்க் முடிக்கணும். ரன் பண்ணிட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. அப்படியே கண்ண மூடினா மனசு எங்கயோ சுத்த ஆரம்பிச்சிடுச்சு.. சொல்லும்மா.. என்னாச்சு? கனவு வருதா?” என்று கேட்க, மறுப்பாக தலையசைத்தாள்.

“இல்ல.. நான் கொஞ்ச நேரம் இங்க உட்கார்ந்துக்கவா?” கெஞ்சலான பார்வையுடன் அவள் கேட்க, சூர்யா தலையை அழுந்தக் கோதிக் கொண்டான்..

“சுஜி.. நீ இப்படி கேட்கறது தான் எனக்கு ரொம்ப வலிக்குதுடி. உரிமையா உட்காராம பெர்மிஷன் கேட்டுட்டு இருக்க? நான் உனக்கு அவ்வளவு அந்நியமா இருக்கேனா? நான் தான் உன்னை இழுத்து வச்சு கொஞ்சிட்டு இருக்கற மாதிரி இருக்கு. நீயா என்கிட்டே வரவே இல்லயே. திரும்பவும் நான் அத்துமீரிட்டு இருக்கேனோ?” வலியோடு அவன் கேட்க, சுஜிதா தவித்துப் போனாள்.

“சூர்யா..” அவள் திகைத்துப் பார்க்க,  

“நீ என்னை தள்ளி நிறுத்தறது போல இருக்கு சுஜி. ஏன் என் பக்கம் வந்தா நான் உன்னை ஏதாவது செய்துடுவேன்னு பயமா இருக்கா?” தொண்டையடைக்க அவன் கேட்கவும், சுஜிதா பதறிப் போனாள்..                                    

“ஹையோ என்ன சூர்யா இப்படி எல்லாம் பேசறீங்க? நான் அப்படி எல்லாம் நினைக்கலையே. நான் பேசினது உங்களை ரொம்ப ஹர்ட் பண்ணிருக்கு இல்ல சூர்யா.. நான் பேசினதுக்கு என்ன செய்து சாரி கேட்கறதுன்னே தெரியல.. சாரி செல்லப்பா.. ரொம்ப ரொம்ப சாரி.” என்றவள், அவனது கையை எடுத்து தனது கன்னத்தில் அடித்துக்கொள்ள, சூர்யா அவளது முகத்தைத் தாங்கினான்..

“ஏண்டி இப்படி செய்யற? நான் அன்னைக்கு அடிச்சதுக்கே எவ்வளவு நாள் ஃபீல் பண்ணி இருக்கேன் தெரியுமா? உன்னை எங்க அம்மாக்கிட்ட இருந்து பாதுகாக்க நினைச்ச நானே உன்னை அப்படி பேசி அடிச்சிட்டேனேன்னு நொந்து இருக்கேன்.. இப்போ திரும்பவுமா?” அவன் சொல்லவுமே அவனை தாவி அணைத்துக் கொண்டாள்.  

“ப்ளீஸ் சூர்யா.. உங்களால அப்படி நான் பேசினதை மறக்க முடிஞ்சா மறந்திருங்க சூர்யா.. நான் அன்னைக்கு கோபத்துல அப்படி பேசினதுக்கு சாரி கண்ணா.. நான் அப்படி அன்னைக்கு பேசி நடந்திருக்கக் கூடாது.. என்னை அடிக்க கூட அடிச்சிக்கோங்க.. அப்படி மட்டும் நான் நினைச்சேன்னு சொல்லாதீங்க. கனவுல கூட நான் உங்களை அப்படி நினைக்கல சூர்யா..” தவிப்புடன் அவனது தலையைத் தனது மார்பில் தாங்கியபடி அவள் சொல்ல, அவளது முகத்தை நிமிர்ந்துப் பார்த்தவன்,  

“அப்பறம் ஏன் அப்படி அன்னைக்கு பேசின? நானே உன்னை விட்டு போகப் போறோமே. திரும்ப உன்னை எப்போ பார்க்கப் போறோம்ன்னு எவ்வளவு நொந்து போயிருந்தேன் தெரியுமா? ஆனா.. நம்ம எதிர்காலத்துக்கும், நம்ம குழந்தைங்க நல்ல சூழ்நிலையில வளரணும்ன்னு தான் அந்த முடிவை எடுத்தேன். ஒரு ரெண்டு வருஷம் பிரிஞ்சி இருந்தா அடுத்து நம்ம லைஃப் நல்லா இருக்குமேன்னு நினைச்சேன். நீ படிச்சு முடிக்கிறதுக்குள்ள நான் உன்னை படிக்க வைக்க ரெடி ஆகிடலாம்ன்னு ப்ளான் பண்ணினேன்..” அவன் சொல்லச் சொல்ல, சுஜிதா குலுங்கி அழத் துவங்கினாள்.     

“நீங்க என்கிட்டே யூ.எஸ். போறதைப் பத்திச் சொல்லாம அந்த காயத்திரி கிட்ட எல்லாம் டிஸ்கஸ் செய்தேன்னு நீங்க சொன்னதுனால வந்த கோபத்துல பேசிட்டேன் சூர்யா.. அதை கடைசி நிமிஷம் வரைச் சொல்லாம இருந்ததுனால உங்களுக்கு நான் அவ்வளவு முக்கியமா இல்லையோன்னு தோணிருச்சு.. அந்த கோபத்துல அப்படி பேசிட்டேன் சூர்யா..

ஏன் நீங்க என்கிட்ட முதல்லையே சொல்லவே இல்ல. எல்லாம் முடிச்சு கடைசி நிமிஷத்துல சொன்னா எனக்கு எப்படி இருக்கும்? எனக்கு வேற என்ன தோணும் சொல்லுங்க? நான் உங்களுக்கு முக்கியம் இல்லைன்னு தானே.. அந்த கோபம் எனக்கு வராதா?” என்று கேட்டவள்,

“நான் அப்படி பேசினது தப்பு தான் சூர்யா. உங்களை ஹர்ட் பண்ணனும்ன்னு சொல்லல.. என்னவோ கோபத்துல அப்படி பேசிட்டேன்.. என்னை மன்னிச்சிருங்க.. உங்க கூட கனவுலேயே பேசி, வாழ்ந்துக்கிட்டு இருந்த எனக்கு இப்போ நேர்ல உங்ககிட்ட பேச நிறைய ஆசை இருக்கு.. என்னவோ வார்த்தை தான் வர மாட்டேங்குது சூர்யா. நான் என்ன செய்யறது? உங்களைத் தப்பா நினைச்சு பேசாம இல்ல சூர்யா..” என்றவள் கண்களில் கண்ணீருடன் அவனை அணைத்துக் கொண்டாள்.  

“காயத்திரி.. காயத்திரி.. காயத்திரி.. என் வாழ்க்கையில யாருக்கு முக்கியமான இடம்ன்னு உன்னால புரிஞ்சிக்க முடியலையா? இப்போ நீ கிஷோர் கூட க்ளோஸ்ன்னாலும் நான் உன் மனசுல என்ன இடம்ன்னு எனக்குத் தெரியாதா? உனக்கு ஏண்டி அது புரியவே இல்ல.. இதுல அவ கூட கல்யாணம் வேற ஒரு கேடு..” மனதில் இருந்த அழுத்தத்தில் அவனது குரல் உயர்ந்து ஒலிக்க, சுஜிதாவிற்கு தூக்கிப் போட்டது.

அவளது முகத்தைப் பார்த்து தன்னை அடக்கிக் கொண்டவன்,    “எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைச்ச அந்த யுனிவர்சிட்டி இருக்கற ஊர் எப்படி? நீ வந்தாலும் உனக்கு அங்க மேல பிஜி படிக்க முடியுமா? அங்க பக்கத்துல நல்ல யுனிவர்சிட்டி இருக்கா’ன்னு எல்லாம் கேட்டு விசாரிச்சு தான் அந்த யுனிவர்சிட்டி சூஸ் பண்ணினேன்.. அதைப் பத்தி எல்லாம் நான் தெரிஞ்சவங்கக்கிட்ட தானே விசாரிக்க முடியும்?

அது கேட்டது தப்பா? அதுக்காக என்ன வார்த்தை சொல்லிட்ட? எனக்கு சண்டைப் போட்டு வீட்டை விட்டு தள்ளினது கூட ரொம்ப வலிக்கல சுஜி.. உன்னை யூஸ் பண்றேன்னு சொன்ன பார்த்தியா.. அந்த வார்த்தை தான் என்னை ரொம்ப நாள் தூங்க விடாம படுத்திடுச்சு. ஒருவேளை அன்னைக்கு நான் ப்ளான் பண்ணி உன்னை.. உன்னை..” அவன் சொல்லி முடிப்பதற்குள் அவனது வாயை தனது கரம் கொண்டு மூடியவள்,

“இல்ல சூர்யா.. இல்ல.. நான் அதை மீன் பண்ணவே இல்ல.. அன்னைக்கு நடந்ததுக்கு நானும் தானே பொறுப்பு.. உங்களுக்கு என்னைத் தர அன்னைக்கு எந்தத் தயக்கமும் இல்ல. இன்னைக்கு வரை நான் அதுக்காக வருந்தினதும் இல்ல தெரியுமா? என்னால அந்த உரிமையை யாருக்குமே தர முடியாது..” என்றவள், அவனது கன்னத்தில் இதழ் பதிக்க, சூர்யா அவளை இறுக அணைத்துக் கொண்டான்.  

“என்கிட்டே சொல்லாம நீங்க எப்படி அவ்வளவு தூரம் போகலாம்? என்னை விட்டுட்டு எப்படி நீங்க போகலாம். நீங்க போறதுனால நானும் தானே கஷ்டப்படப் போறேன். அப்போ என்கிட்டே நீங்க சொல்லி இருக்கணும் இல்ல? திடீர்னு நீங்க யூ.எஸ். போகப் போறேன்னு சொன்னா எனக்கு ஷாக்கா இருக்குமா இல்லையா? ஏற்கனவே லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் எல்லாம் ரொம்ப நாள் தாங்காதுன்னு வேற எங்க கிளாஸ்ல சொல்லிக்கிட்டு இருந்தாங்க.. இதுல நீங்க சொல்லாம எல்லாம் ரெடி பண்ணிட்டு, இன்னும் ரெண்டு நாள்ல ப்ளைட்ன்னு சொன்ன உடனே என் புத்தி கெட்டுப் போச்சு..” என்றவள், அவனது மார்பில் முட்டிக் கொண்டு,  

“நீங்க என்னை விட்டு போகப் போறீங்க. நீங்க இல்லாம மூணு மாசமே அவ்வளவு கஷ்டமா இருந்ததே.. இப்படி கொஞ்சம் கூட என்னைப் பிரிய வருத்தம் இல்லாம நீங்க பேசினது போல இருக்கவும், என்னை மொத்தsமா விட்டுட்டு போகப் போறீங்கன்னு என்ன என்னவோ தோணிருச்சு.. அது தான் சூர்யா அப்படி எல்லாம் பேசிட்டேன்.. என்னை மன்னிச்சிருங்க சூர்யா.. சாரி சூர்யா..” என்றபடி அவனது கன்னத்தில் கை வைத்து, தன் பக்கம் திருப்பியவள், எம்பி அவனது இதழ்களில் இதழ் பதித்தாள்.   

“உங்களுக்கு கல்யாணம்ன்னு கேள்விப்பட்டு நான் எப்படி அழுதேன் தெரியுமா? சூர்யாவால என்னை மறந்துட்டு வேற ஒருத்தியை கல்யாணம் செய்துக்க முடியுமா? அவங்களுக்கு குழந்தை பிறந்து இருக்கும் இல்லைன்னு எல்லாம்..” அவள் சொல்லிக்கொண்டே வர சூர்யா அவளை முறைத்தான்.

“கேனைத்தனமான எண்ணம் தான். என்ன செய்யறது? கோபத்துல புத்தி மழுங்கி போச்சு.” தன்னையே நொந்துக்கொள்ள,

“அப்படியே வச்சு சாத்திருவேன் சாத்தி. ஏண்டி நான் என்ன அப்படியே பொண்ணுங்களை பார்த்தா பாஞ்சிருவேனா?” இடக்காக கேட்க, சுஜிதா பரிதாபமாக விழித்தாள்.    

“இதுல அன்னைக்கு என்னைப் பார்த்து என் பொண்டாட்டிக்கிட்ட போக சொல்ற? உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கணும்?” அவன் கேட்கவும்,       

“இல்ல சூர்யா.. உங்க அம்மாவுக்கு சும்மாவே என்னைப் பிடிக்காது.. இதுல வீடு காலி செய்யற அன்னைக்கு அவங்க சண்டைப் போட்டு பேசினதை எல்லாம் எங்க அம்மா கரெக்ட்டா அப்போ தான் என்கிட்ட சொன்னாங்க. அப்போ இருந்த மனநிலைமையில எல்லாம் கேட்டு மனசு நொறுங்கிட்டேன் சூர்யா. மனசு ரொம்ப குழம்பிப் போச்சு.. ஒருவேளை அவங்க உங்களை போர்ஸ் பண்ணியோ இல்ல ப்ளாக்மெயில் பண்ணி பண்ணிட்டாங்களோ? இல்ல.. நீங்க என் மேல உள்ள கோபத்துல ஒருவேளை ஒத்துக்கிட்டீங்களோன்னு..” சூர்யாவின் முறைப்பில் வாயை மூடிக் கொண்டாள்.       

“நான் என்ன செய்யறது? எங்க அம்மா சொன்னது அது தான்.. சண்டை நடக்கும் போது நீங்க உள்ளேயே உட்கார்ந்துக்கிட்டு இருந்தீங்கன்னு வேற அம்மா சொன்னாங்க. எனக்கு அதைக் கேட்டதும் ரொம்ப மனசு விட்டுப்போச்சு. உங்க அம்மா பேசினதா அம்மா சொன்னதும், நீங்க கடைசியா சண்டையில பேசினதும் உங்க ஒரே மாதிரி தானே இருந்தது.. அப்போ நான் உங்க மனசுல அப்படி தான் இருக்கேனா?’ன்னு எல்லாம் தோணிருச்சு சூர்யா..” அவனது மார்பில் ஒண்டிக் கொண்டே கண்ணீருடன் அவள் தனது மனதில் உள்ளதைச் சொல்ல, அவளது கண்ணீரின் ஈரம் அவனது சட்டையை நனைத்தது.

“என்னடா செல்லமே இப்படி அழற? நீ அழக் கூடாதுன்னு எல்லாம் செய்ய நினைச்சே உன்னை ஏற்கனவே நிறைய அழ வச்சிட்டேன்.. உன்னைத் தனியா தவிக்க விட்டுட்டேன். இனிமே அழக் கூடாதுடா என் தங்கமே. போதும் நீ அழுதது.” அவளது கண்ணைத் துடைத்து அவளைத் தனது தோளோடு அணைத்துக் கொண்டான்..  

அவனது மார்பில் சாய்ந்துக் கொண்டவள், “ப்ரெக்னன்ட் ஆக சான்ஸ் இருந்ததுன்னு பயந்து தான் ஒரு வாரம் கழிச்சு ராஜிம்மா கிட்ட போனேன். எனக்கு தெரியும் அது ரொம்ப லேட்ன்னு.. அம்மா வந்து கோவில், கல்யாணம்ன்னு இழுத்துட்டு போனதுனால எனக்கு அதைப் பத்தி நினைவே இல்ல.. அப்பறம் நினைவு வரவும் அம்மாக்கிட்ட பொய் சொல்லிட்டு ராஜிம்மாவைப் பார்க்க போனேன்.

ராஜிம்மா நல்லா திட்டி அனுப்பினாங்க. அப்போ அழுதுக்கிட்டே திரும்ப வரும்போது என்னோட போன் கீழே விழுந்து சிம் எங்கயோ போயிருச்சு. தேடியும் கிடைக்கல. அப்போ இருந்த மனநிலையில எனக்கு அந்த சிம் தொலைந்து போனது நல்லதுன்னு தோணிருச்சு. அதுல இருந்த மெமரி கார்ட் மட்டும் பத்திரமா வச்சிட்டேன்.” அவள் சொல்லவும், அவளது தலையை வருடிக் கொடுத்தவன்,

“இருந்தாலும் என்கிட்டே இப்படின்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல.. எனக்கு அப்படி எல்லாம் ஆகும்ன்னு நிஜமா நினைச்சுக் கூட பார்க்கல.. ப்ளைட் ஏறும்போது உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன். உன் நம்பரை எல்லாம் கோபத்துல ப்ளாக் பண்ணினேன் தான்.. ஆனா.. திரும்பவும் போட்டுத் தேடினா உன் நம்பரும் போகல.. அந்த மடையன் நம்பரும் போகல.. நான் என்ன தாண்டி செய்வேன்? என் ப்ரெண்ட்ஸ் விட்டு தேடினேன்.. எங்கயும் உன்னைக் கண்டுப்பிடிக்க முடியல. அப்பறம் என்னால விசா பிரச்சனையில நாலு வருஷத்துக்கு இந்தியா பக்கம் வரவே முடியல.” என்றவன், அவளை இறுக அணைத்துக் கொண்டான்..  

அவனை அணைத்துக் கொண்டு, அவனது மார்பில் இதழ் பதித்தவள், “நீங்களும் ஒண்ணும் சந்தோஷமா இல்லையேங்க.. என்னைக் காணாம நீங்க தானே கஷ்டப்பட்டு இருக்கீங்க. அக்கா மட்டும் ஹாஸ்பிடல்க்கு வரலைன்னா என்ன ஆகி இருக்கும்? நான் இன்னும் கிறுக்கு மாதிரி உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு நினைச்சிட்டு உங்க மேல கோவிச்சு என்னையே வருத்திக்கிட்டு இருந்திருப்பேன்.. அவங்க வந்ததும் ஒரு விதத்துல நல்லது தான்..” அவனது கன்னத்தில் மெல்ல இதழ் பதித்தவளின் முகத்தை நிமிர்த்தி,     

“எந்த தைரியத்துல அத்தைகிட்ட அந்த குழந்தை வேணும்ன்னு கேட்ட? எனக்கு அதைக் கேட்ட உடனே என்னவோ போல ஆகிருச்சு.. என்கிட்டே இருந்தும் ஒளிஞ்சிக்கிட்டு என்னடி பண்ணிருப்ப?” தவிப்பாகக் கேட்க,

“என் சூர்யா எனக்கு அவங்களோட நினைவா விட்டுட்டு போனதுன்னு தான் அப்போ நினைச்சேன். ஆனா.. அதுவும் அப்படி என்னை விட்டுட்டு போகவும் ரொம்ப தாங்க முடியல சூர்யா.. ராத்திரி தூங்காம ரொம்ப கஷ்டப்பட்டேன். கண்ணை மூடினா நீங்க தான் நினைவுல வந்தீங்க.. அப்பறம் தான் ராஜிம்மா அவங்க வீட்டுக்கே என்னை கூட்டிட்டு போயிட்டாங்க. உடம்பும் ரொம்ப முடியல அப்போ. ரொம்ப ப்ளீடிங் ஸ்டாப் ஆகாம கஷ்டப்படுத்திடுச்சு..” அவனது கண்களைப் பார்க்காமல் சொல்லவும், அவளது நெற்றியில் முட்டியவன், அவளது கன்னத்தில் வருடினான்.

சிறிது நேரம் இருவரும் அணைப்பினில் கட்டுண்டு இருக்க, “ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் தாண்டி.. ஏதோ நம்ம சண்டை போடாம இருந்திருந்தா கூட வீட்ல பேசி ஏதாவது செஞ்சிருக்கலாம். நானும் இங்க இல்ல.. என்கிட்டே பேசாம நம்பரை எல்லாம் ப்ளாக் பண்ணிட்டு அந்த நேரத்துல குழந்தை வேணும்ன்னு அழுதிருக்க? அத்தை சொன்ன பொழுது எனக்கு உள்ள நடுங்கியே போயிடுச்சு.. எனக்கு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் வந்து இருப்பேன்டி.” என்றவன், அவளது முகத்தை நிமிர்த்தி,

“உன்னைப் பார்த்துட்டு வந்த அன்னைக்கு மாமா தனியா வந்து என்கிட்டே பேசினாங்க. அப்போ அவர் கிட்ட எல்லாமே சொன்னேன். அப்போ மாமா சொல்ற வரை நீ கன்சீவ் ஆக சான்ஸ் இருக்குன்னு புரியவே இல்ல.. அவர் சொன்னதும் அது ஒரு பக்கம் பயம். அவங்களை பிடுங்கி தான் இங்க உன் வீட்டை சும்மா பார்த்துட்டு வாங்கன்னு சொன்னேன். மாமா இந்த வீட்டை பார்க்க வந்த அப்போ வேணுண்டே ‘அத்தைன்னு ஏதாவது நண்டு சிண்டு வரும் ஜைஷு’ன்னு கிண்டல் செய்துக்கிட்டே தான் வந்தாங்க..” என்று அன்று நடந்ததைச் சொல்ல, சுஜிதா தலையில் அடித்துக் கொண்டாள்.

“ப்ரதாப் அண்ணா கிட்ட போய் எல்லாம் சொல்லி இருக்கீங்களே? நான் எப்படி அவங்க முகத்துல முழிப்பேன்?” அவள் சிணுங்க,

“மாமா நமக்கு சப்போர்ட் தான்.. அம்மாவை கூட சமாளிச்சிடுவார்..” என்றவனின் தோளில் சாய்ந்தவளுக்கு கண்கள் மூடிக் கொள்ள,

“தூக்கம் வந்தா உள்ள போய் படுத்துக்கோ கண்ணம்மா…” என்றவனின் முகத்தை ஏக்கமாகப் பார்த்தவள்,

“உங்களுக்கு எப்போ வேலை முடியும்?” கண்களைத் திறக்க முடியாமல் சிரமத்துடன் கேட்கவும்,

“ப்ரோக்ராம் ரன் ஆகிட்டா பத்து நிமிஷம் தான் ஆகனும்.. இல்லைன்னா எப்போ முடியும்ன்னு தெரியல. நீ உள்ள போய் படுத்துக்கோ..” என்றவனை முறைத்தவள்,

“இந்தத் தலைகாணி எனக்குத் தானே..” என்று கேட்க,

சிரித்துக் கொண்டே, “இல்ல.. நான் கட்டிப்பிடிச்சு தூங்க.. எனக்கு அது இல்லைன்னா தூக்கம் வராது.. என்ன சாஃப்ட் தெரியுமா?” வம்பு செய்யவும், அதை வெடுக்கென்று எடுத்தவள், தனது தலையின் அடியில் வைத்து படுத்துக் கொள்ளவும், சிரித்துக் கொண்டே அவளது நெற்றியில் முத்தமிட்டவன், தனது வேலையை கவனிக்கத் துவங்கினான்..      

படுத்ததும் அவள் உறங்கி விடவும், வேலையை முடித்து லாப்டாப்பை எடுத்து வைத்துவிட்டு, அவளை அணைத்துக்கொண்டு படுக்கவுமே, நல்ல உறக்கத்தில் இருந்தவள், அவன் பக்கம் திரும்பிப் படுத்து,

“இது என்னை ரொம்ப டெம்ப்ட் பண்ணுது.. செம க்யூட்டா இருக்கு.” என்றபடி அவனது டாட்டூவில் இதழ் பதித்து, அவனது மார்பில் தலைசாய்த்து, அவனை அணைத்துக் கொண்டு உறங்கிப் போனாள்.         

அதிகாலையிலேயே உறக்கம் களைந்தவள், அருகில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவின் தலைமுடியை, முகத்தில் இருந்து மென்மையாக ஒதுக்கிவிட்டு கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..

தான் காண்பது கனவா நினைவா என்றே நம்ப முடியாத நிலையில் அவனை ரசித்துக் கொண்டிருந்தவளை இறுக அணைத்து, அவளது கழுத்தின் அடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டுவன், தனது உறக்கத்தைத் தொடர, அவனது முகத்தை நகர்த்தியவள்,

“கூசுது சூர்யா..” என்று சிணுங்க, கண்களைத் திறந்துப் பார்த்தவன், அவளை செல்லமாக முட்டினான்.

“நான் நேத்து தானே நல்லா ஷேவ் பண்ணி இருக்கேன். எப்படி கூசும்?” என்று கேட்டவனின் மீசையைத் பிடித்துத் திருகியவள், அவனது கன்னத்தில் கையை வைத்து வருடினாள்.

“சூர்யா.. உங்க அம்மா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்களா? ஏற்கனவே அவங்களுக்கு என்னைப் பார்த்தாலே பிடிக்காதே..” கலக்கமாகக் கேட்க, அவளைத் தனது மார்பில் போட்டுக்கொண்டு, தலையை வருடியபடி,

“ஏன் ஒத்துக்காம? அதெல்லாம் அப்பாவும் மாமாவும் பார்த்துக்குவாங்க. மாமான்னா அம்மாவுக்கு கொஞ்சம் பயம் உண்டு. அதுவும் தவிர, அவங்க கேட்ட வீடும், நகையும் தான் வாங்கிக் கொடுத்துட்டேனே.. அப்பறம் சம்மதிக்கிறதுக்கு என்ன? இப்போ போனபோதும், இனிமே எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. அதை நான் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டேன். அப்பாவும் கொஞ்சம் அவங்களை மிரட்டி வச்சிருக்கார். அதுவும் தவிர நம்ம கல்யாணத்துக்கு அவங்களோட சம்மதம் தேவையில்ல.” கடுப்பாகச் சொல்ல, சுஜிதா அவனது முகத்தை நிமிர்ந்துப் பார்த்தாள்.

“என்னப்பா இப்படி சொல்றீங்க? அவங்க உங்க அம்மா..” அவள் சமாதானம் செய்யவும்,

“ம்ப்ச்..” என்றவன்,

“உங்க அம்மாக்கிட்ட உன்னைப் பத்தி அப்படி பேசும்போது அவங்க நல்லநேரமா என்னன்னு தெரியல நான் அங்க இல்ல. இருந்திருந்தா அன்னைக்கு நடந்த கதையே வேற. உங்க வீடு காலி ஆகறதைப் பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்ததுன்னு வெளிய போயிட்டேன். ஜைஷு சொன்னதும் அவங்கக்கிட்ட சத்தம் போட்டு அப்பறம் அவங்கக்கிட்ட பேசறதையே விட்டுட்டேன்..” என்றவனின் வருத்தம் தெரிந்து அவனது மார்பில் வருடிக் கொடுத்தாள்.  

“இப்போ போன பொழுதும் என்கிட்டே நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா ஸ்டடி லோன் யாரு அடைப்பான்னு கேள்வி கேட்கறாங்க? அது எல்லாம் நான் எப்பவோ அடைச்சு முடிச்சு, சேலத்துல ஒரு வீடு வாங்கிக் கொடுத்து, நான் தொலைச்ச செயின்க்காக நகை வாங்கியும் கொடுத்தாச்சு..

இப்போவும் ‘இன்னொரு வீடு பார்த்து வச்சிருக்கேன்.. வாங்கணும்’ன்னு சொல்றாங்க. என்னைப் பத்தியும், எனக்கு ஒரு வாழ்க்கை இருக்குன்னு அவங்க நினைக்கவே இல்லையே. நான் அங்க யூ.எஸ். போனதும் இங்க வேலையை விட்டுட்டாங்க. நான் அவங்களுக்கு ஒரு பணம் காய்க்கிற மெஷின். அவ்வளவு தான். ஒரு அம்மான்னா இப்படியா இருப்பாங்க? இதுல ஜைஷு கல்யாணத்துக்கு நான் எதுவுமே செய்யலைன்னு எவ்வளவு குத்திக்காட்டி இருக்காங்க தெரியுமா?” வருத்தத்துடன் அவன் சொல்லவும், சுஜிதா அவனது தலையை மென்மையாக கோதிக் கொடுத்தாள். 

“இவங்க ரொம்ப பிடுங்கவும், ‘இவ்வளவு தான் என் சம்பளம்ன்னு சொல்லிடு’ன்னு அப்பா சொல்லிட்டார். அதைத் தான் அவரும் செய்வாராம்..” கேலியாகச் சொல்லிவிட்டு,

“அப்பறம் இன்வெஸ்ட்மென்ட் செய்து சேர்த்து வைக்க ஸ்டார்ட் பண்ணிட்டேன். நம்ம ப்யூச்சருக்காக..” சூர்யாவின் பதிலில் அவனை இறுக அணைத்துக் கொண்டவள்,

“ஜைஷு அக்காவுக்கு செய்யலைன்னா என்ன? குட்டி பாப்பா வரும்ல அதுக்கு நிறைய செய்யலாம்.” அவனுக்குத் தேறுதல் சொல்லவும், அவளது முகத்தை கைகளில் தாங்கியவன்,

“அவளுக்கு சீக்கிரம் குழந்தை பிறந்திடும் இல்ல.. அவளுக்கும் ஏன் எதுவுமே நல்லதே நடக்க மாட்டேங்குதுன்னு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். உன்னைப் பார்த்ததும் நீ அவளைப் பார்த்துக்குவன்னு ஒரு நம்பிக்கை வந்திருச்சு.” சூர்யா தனது மனதில் உள்ளதைச் சொல்லவும்,

“கண்டிப்பா சூர்யா.. சீக்கிரமே பாப்பா வரும்.. ரெண்டு பேருக்குமே எந்த பிரச்சனையுமே இல்ல.. உங்களோட கண்ணுல விரலை விட்டு ஆட்ட நாங்க ரெடி பண்றோம் பாருங்க.” என்றவள்,

“சரி.. நான் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வந்து சமையல் செய்யறேன். அக்காவை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். உங்களுக்கு டைம் கிடைக்கும் போது நாம ஷாப்பிங் போய் திங்க்ஸ் வாங்கிட்டு வந்துடலாமா?” என்று கேட்க, அவளை அணைத்து விடுவித்தவன்,

“சரிடா கண்ணம்மா.. இப்போதைக்கு கொஞ்சம் திங்க்ஸ் ஆன்லைன்ல போடறேன். அப்பறம் உனக்கு டைம் கிடைக்கும் போது போகலாம்.. நான் ஹெல்ப் பண்றேன்.. மதியத்துக்கும் சமைச்சிடலாம். நானும் அந்த கம்பனிக்குப் போக வேண்டிய வேலை இருக்கு..” என்று சொன்னவன், அவளது இதழ்களில் இதழ் பதித்துவிட்டு, அடுத்த வேலைகளை கவனிக்கத் துவங்கினான்..             

அவனுடன் அவசரமாக மேலே வந்தவள், அவனது அலமாரியைத் திறந்து, ஒரு கவரை எடுக்க, “ஓய்.. அங்க என்ன எடுத்துட்டு இருக்க?” என்றபடி அவளது அருகில் வர,

“ஹான்.. இதெல்லாம் நீங்க எனக்கு வாங்கி வச்சிருக்கற கிஃப்ட் தானே? என் உரிமை என் சொத்து. எது வேணுமோ அதை எடுத்துப்பேன்.. இப்போ இது.. 21.. தினமும் ரெண்டு எடுத்தேன்னா கரக்ட்டா என் பர்த்டே போது புதுசா வாங்கி வச்சிருக்கறது வந்திரும்..” என்று கண்சிமிட்ட, சூர்யா அசந்து நின்றான்.  

“அடப்பாவிங்களா.. இதை எல்லாம் எப்போடா ஆராய்ச்சி செய்து முடிச்சீங்க? நான் ரெண்டு நாள் தானே ஊருல இல்ல.. இதெல்லாம் செல்லாது.. லஞ்சம் இல்லாம தர மாட்டேன்..’ அவன் அருகில் வருவதற்குள், பழிப்பு காட்டியபடி வேகமாக ஓடிச்சென்றாள்..

அவன் குளித்துத் தயாராகி வருவதற்குள், அவன் வாங்கி வைத்திருந்த அந்த ஃப்ராக் போன்ற உடையையே சுடிதார் போன்று அணிந்து, அதில் இருந்த அணிகலன்களையும் அணிந்து தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்க, தயாராகி கீழே வந்த சூர்யா, அவளைப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான்..

அவளது கழுத்து வளைவில் இதழ் பதித்தவன், “ரொம்ப சூப்பரா இருக்குடி செல்லக்குட்டா.. நான் கற்பனை செய்து வாங்கினது போலவே இருக்கு..” என்றபடி அவளது கழுத்தில் இதழ்களால் உரசியவன்,

“சரி.. நீ ரெடி ஆகிட்டு வா.. நான் எழுந்த உடனே மாமாவை கீழ வரச் சொல்லி மெசேஜ் செய்துட்டேன்..” என்று சொன்னவன், கடகடவென்று காலை வேலைகளை செய்யத் துவங்கினான்.

அவள் வந்ததும் அவளை தனக்கு முன்னால் நிறுத்திக்கொண்டு, அவன் வேலை செய்ய, அவனது முகத்தை நிமிர்ந்துப் பார்த்தவளின் கன்னத்தில் இதழ் பதித்தவன், “இனிமே எல்லாம் ஸ்லிப் ஆக மாட்டேன்.. அய்யா ஸ்டெடி..” கேலியாக சொல்லிக் கொண்டே அவளுக்கு காபியை கலந்துக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு அவனது அருகில் நின்றபடி குடித்தவள், அவனை நகர்த்திவிட்டு மற்ற வேலைகளை கடகடவென்று முடித்தாள்..

சூர்யா, சுஜிதாவின் நாட்கள் அழகாகக் கழிந்தது.. சூர்யாவிற்கும் அந்த கம்பனியிலேயே வேலை கிடைத்துவிட, இடைப்பட்ட பத்து வருடம் செய்யாமல் விடுபட்ட காதலை, திகட்டாமல் செய்தனர். இருவரையும் பார்த்த ஜைஷ்ணவியும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்.. சூர்யாவையும் சுஜிதாவையும் கிண்டல் செய்வது ஒன்றே பொழுதுபோக்காக ப்ரதாப்பிற்கு மாறியது.. மூவருமாக ஜைஷ்ணவிக்கும் ஓய்வு கொடுத்து, அவளை எந்த வேலையும் செய்ய விடாமல் தாங்கிக் கொண்டனர்.     

இரண்டு நாட்கள் சென்றிருந்த நிலையில், அவசரமாக மருத்துவமனைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தவளுக்கு வழக்கம் போல அர்ச்சனா அழைத்திருந்தார். “ஹலோ அர்ச்சு.. என்ன காலையிலேயே கூப்பிட்டு இருக்க?” குரலில் துள்ளலுடன் அவள் கேட்க,

“என்ன சுஜி.. குரலே அவ்வளவு சந்தோஷமா இருக்கு? என்ன விஷயம்?” அவர் கேட்கவும்,

“சும்மா தான்மா.. சுஜி இஸ் பேக் டு ஹோம்.. அது தான் சந்தோஷமா இருக்கோ? சரி என்ன விஷயம்?” பதிலுக்கு அவள் கேட்க, அந்த சந்தோஷ மனநிலையை விட மனமில்லாமல்,

“சும்மா தான் எப்பவும் போல கூப்பிட்டேன்.. சரி.. இப்போ சந்தோஷமா இருக்கயே.. அதே இதோட எங்களையும் சந்தோஷப்படுத்து.. கல்யாணம் பண்ணிக்கறியா? மாப்பிள்ளை பார்க்கலாமா?” ஆவலாக அர்ச்சனா கேட்க,

“அம்மா.. எப்போப் பாரு இது தான் உங்களுக்கு.. ஆனா.. இந்த ஒரு வாரமா நீங்களும் எப்போ இதைப் பத்தி கேட்பீங்கன்னு இருந்தேன்.. சரிம்மா.. நான் கல்யாணம் பண்ணிக்கறேன்.. ஆனா.. இங்க வாங்க நாம மாப்பிள்ளையை நேர்லயே பார்க்கலாம்.” குறும்பான குரலில் அவள் சொல்லவும், அர்ச்சனாவின் உச்சி குளிர்ந்து போனது..

“சுஜி.. நிஜமாவாடி சொல்ற? கல்யாணத்துக்கு ஓகே வா?” அர்ச்சனாவின் குரலில் திகைப்பும், மகிழ்ச்சியும் ஒருங்கே எழ, அந்தக் கேள்வியை எழுப்பினார்.

“குட்டா.. நிஜமா தான் சொல்றியா? ஓகே வா உனக்கு? அப்போ நாங்க உடனே கிளம்பி வரலாமா? நானும் அம்மாவும் கொஞ்சம் பசங்களை எல்லாம் பார்த்து வச்சிருக்கோம். வந்தா நேர்ல மீட் பண்ணலாமா?” வாசுதேவனின் குரலில் அவ்வளவு துள்ளல்..

“அப்பா நீங்க வாங்கப்பா.. உங்க மாப்பிள்ளையை நீங்க நேர்லயே பார்க்கலாம்.. இப்போ நான் வச்சிடவா? ஒரு கேஸ் இருக்கு..” என்று சொல்லிவிட்டு அவள் போனை வைக்க, அவளுடன் நடந்துக் கொண்டிருந்த சூர்யா அவளைத் திகைப்பாகப் பார்த்தான்.           

“என்ன சுஜி இப்படி பொசுக்குன்னு கல்யாணம்ன்னு சொல்லிட்ட? கல்யாணமா? நமக்கா? ஹையோ?” என்று அலறுவது போல நடிக்க, அவனை முறைத்தவள், தனது ஹாண்ட்பேக்கில் கையை விட்டுக்கொண்டே,

“மகனே.. என்ன ஓவரா ரியாக்ஷன் கொடுத்துட்டு இருக்க? கல்யாணம் செய்துக்காம வேற என்ன எண்ணம்? இப்போவே வயசாகுது.. இப்போ செய்துக்காம என்ன அறுபது வயசுல செய்துக்கற எண்ணமா? அப்பவும் நான் தான் பொண்ணு..” என்று மிரட்ட, சிரித்துக் கொண்டே அவளது கையை பேகில் இருந்து எடுத்தவன்,

“விடாது கருப்பு..” அவளை வம்பு வளர்க்க, அவனது புஜத்திலேயே குத்தியவள்,

“போ.. போ.. உங்களுக்கு நான் வேண்டாம்ல..” என்று முகத்தைச் சுருக்க, அவளைத் தன்னுடன் இழுத்துக் கொண்டவன்,

“சும்மா உன்னை வம்பு பண்ணினேன்டா தங்கம். நீ இல்லாம எனக்கு லைஃப் ஏதுடி?” என்று கேட்டவனின் தோளில் செல்லமாக சாய்ந்தவள்,

“எனக்கும் தான்..” என்றவளின் கண்கள், அவனுடனான வாழ்வை கனவு காணத் துவங்கியது.

error: Content is protected !!