am11

am11

ஆசை முகம் 11

மாறனின் திருமணம் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகே வரவேற்பு வைத்திருந்தனர்.

மாறன் தன்னை திருமணத்திற்கு கேட்டதை நினைத்து, திருமணத்தன்று வருவதைத் தவிர்த்திருந்தாள் வாணி.

மாறன் திருமணம் செய்யும் எண்ணத்தோடு அணுகியதை அறியாத முத்துரங்கன் “நம்ம வீட்ல அபி கல்யாணத்துக்கு அப்புறம் நடக்கிற முதக் கல்யாணம்டாம்மா.  நீ இல்லாம எப்டி?”

“பொண்ணு வீட்லதான மாமா கல்யாணம்.  அங்க நீங்கள்லாம் முந்தின நாளே போயிருவீங்க!  அப்டினா நான் அதுக்கு ஒரு நாள் முன்னவே இங்க இருந்து ஊருக்கு வரணும். ஒரு நாள் லீவுனா ஓகே.  ஆனா இத்தனை நாள்னா கஷ்டம் மாமா.  அதுக்காகதான் சொல்றேன். நான் நம்ம ஊருல நடக்கிற வரவேற்புக்கு கண்டிப்பா வந்திரேன் மாமா!”, என சமாளித்திருந்தாள் வாணி.

வாணிக்கு இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

பெண்ணது கூற்றில் இருந்த நியாயம் பிடிபட முத்துரங்கன் ஒரு மனதாக ஒத்துக் கொண்டிருந்தார்.

ஊருக்கு வந்ததும் நேரில் மணமக்களைச் சந்தித்து, பெண்ணிடம் தானாகவே தன்னை அறிமுகம் செய்து கொண்டு வாழ்த்தியதோடு, வந்த விசயம் முடிந்தது என ஒதுங்கியிருந்தாள் வாணி. 

அப்போதே ஊருக்கு திரும்பினால், மாமா மனம் வருந்தும் என்பதால் அன்றைய தினம் இருந்துவிட்டு அடுத்த நாள் மதியம் சென்னை கிளம்பும் உத்தேசத்தில் இருந்தாள்.

மாலையில் துவங்கிய வரவேற்பில் தனது பங்காக ரங்கன் கூறும் பணிகளில் கவனம் செலுத்தினாள் வாணி.

மாறனின் மாறுபட்ட செயலை அவள் நிச்சயமாக கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

திருமணம் வரை வந்தவன், இனி மனைவி, அடுத்து அவனது வாழ்க்கை என மாறிவிடுவான் என நினைத்திருக்க, அது அப்படியல்ல என நிரூபித்திருந்தான்.

திருமணமாகி ஒரு வாரம் கடந்திருக்க, இன்னும் மணமக்களுக்கு இடையே இடைவெளி இருக்கும் என கனவா கண்டாள் பெண்.

அப்படி தானில்லாத வாழ்வை வாழமுடியாது என மாறன் நினைத்திருந்தால், நிச்சயமாக சுகுணா அத்தையை எப்படியேனும் தனது விருப்பத்திற்கு சம்மதிக்கச் செய்து சாதித்துக் கொள்வான் என்றே பெண் நினைத்தாள்.

ரங்கனை விட சுகுணா பிள்ளைகள் எதைக் கேட்டாலும் மறுக்க மாட்டார் என்பதால் அப்படி நினைத்திருந்தாள்.

அப்படி ஒன்று நடக்கவில்லை என்றபோது துளியும் பெண்ணிற்கு வருத்தமில்லை. எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இருக்கிறான் என ஒதுங்கிவிட்டாள்.

நல்ல உறக்கத்திலிருந்து எழுந்து, குளித்து முடித்து வெளிவந்தவளை பெண்ணது வீட்டார் ஒரு விதமாகப் பார்ப்பதை உணர்ந்தாள்.

இரவு தாமதமாகவே வரவேற்பு முடிந்ததால், பெண்ணது வீட்டாரும் அங்கு தங்கியிருந்தனர்.

வாணிக்கு அவர்களை யாரென்று தெரியவில்லை.

தன்னை யாரென்று தெரியாததால் வந்த ஆராய்ச்சிப் பார்வையாக இருக்கும் என அதைக் கண்டு கொள்ளாது கடந்தாள்.

மதியம் கிளம்பினால், மாலையில் சென்னைக்குச் சென்றுவிடலாம் என அனைத்தையும் எடுத்து தனது மோச்சா வேர் ஜியைபில் பேக்கில் வைத்திருந்தாள்.

முத்துரங்கனிடம் மனம் விட்டுப்பேசி நீண்ட நாள் ஆகியிருந்தமையால், சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்னைக்குக் கிளம்பலாம் என மாமனைத் தேட, “உன்னை தோப்பு வீட்டுக்கு அப்பா வரச் சொன்னாங்க”, என திருமாறன், அதாவது இளமாறனின் தம்பி வாணியிடம் கூறினான்.

“சரி திரு அத்தான்”, என கையில் இருந்த மொபைலோடு, அறைக்குள் சென்று தனது லாங்க் வாலட்டையும் எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள்.

பணம், புதிய மொபைல் எல்லாம் அதில் இருந்தது.

கூட்டத்தில் அறையைப் பூட்டி வைக்க இயலாது. அதனால் அதையும் கையோடு எடுத்துக் கொண்டிருந்தாள்.

////////////////

முந்தைய தினம் இரவில் மணப்பெண்ணின் வீட்டினர் வாணியைப் பற்றிய பேச்சைத் துவங்கியிருந்தனர்.

“எங்கட்ட இப்டியொரு பொண்ணு, அதுவும் உங்க பசங்களுக்கு முறைப் பொண்ணு இருக்குங்கற விசயத்தை சொல்லவே இல்லையே”, குற்றம் சாட்டப்பட்ட குரல்

“சொல்லியிருக்கணும்!  அது பெரும்பாலும் இங்க இருந்ததில்லை! அதனால சொல்லாம விட்டுப்போச்சு!”, என ரங்கன் சமாளிக்க

அதன்பின் பெண்ணது வரலாறு அலசப்பட்டது.

“கல்யாணமாகி பத்து மாசத்தில வேலை பாக்கற இடத்தில நடந்த ஆக்சிடெண்ட்ல தங்கச்சி மாப்பிள்ளை தவறிட்டாரு!  அப்ப எழில், அபி வயித்துல ஏழு மாசம்.  அதுலயே அவ ஒடைஞ்சிட்டா! பிரசவத்தில ஒரு உயிரைத்தான் காப்பாத்த முடிஞ்சது. அதுக்கப்புறம் அப்பா, அம்மா காலம் வரை அவங்கதான் பாத்துகிட்டாங்க! அம்மாவும் போனபின்ன எங்க பொறுப்புல இருக்கா! ஆனாலும் முழுக்க ஹாஸ்டல்லதான்.  நல்லது கெட்டதுக்குனு வீட்டுக்கு வந்துட்டுப் போகும்.  மத்தபடி அதையிட்டு ஒரு தொந்திரவும் இருக்காது”, என குடும்ப மானம் காக்க, நடந்தது, நடக்காததது எல்லாவற்றையும் சேர்த்துக் சம்பந்த வீட்டார் மதிக்கும்படி கூறியிருந்தார் ரங்கன்.

“எவ்வளவு பெரிய விசயம்.  இதை நீங்க மறச்சது ரொம்பத் தப்புங்க.  இப்டி தங்கச் சிலையாட்டம் பொண்ணு இருக்கும்போது ஏன் வெளிய பொண்ணெடுத்தீங்க!”, பெருசு

“அது உறவுக்குள்ள வேணானு!”, என ரங்கன் பதில் கூறுமுன் சுகுணா முந்திக்கொண்டு பேச

“நீங்க அப்டி நினைச்சிருக்கலாம்.  ஆனா உங்க பையனோட விருப்பம் என்னனு கேக்கலையா?”, தெனாவட்டாக ஒரு கேள்வி பெண் வீட்டாரிடம் இருந்து வந்தது.

“ஏன் கேக்காம? அவன் விருப்பப்படிதான் எல்லாம் பண்ணோம்!”, சுகுணா சமாளித்துக் கூற

அங்கிருந்தவர் ஒருவர் விசயத்தைப் பிட்டு பிட்டு வைத்திருந்தார்.

“கல்யாணமாகி ஒரு வாரம் எங்க வீட்ல யாருகூடவும் பையன் ஒட்டலை! சரினு வீட்டு பொம்பளை ஆளுககிட்ட சொல்லி பொண்ணு சந்தோசமா இருக்கானு கேக்கச் சொன்னோம். அப்டியெல்லாம் இல்லைங்கறது தெரிய வந்துது.  சிலர் சகஜமாக நாளாகும்னு புள்ளைய அனுசரிச்சு போகச் சொல்லி, சொல்லச் சொன்னோம்.  ஆனா இங்க வந்து பாத்தாவுல விசயம் என்னானு தெரியுது”, மணமகள் வீட்டார் இக்கு வைத்துப் பேசிட

“என்ன சொல்றீங்க?”, என சுகுணா பதறினார்.

“வரவேற்புல கட்டுனவ பக்கத்துல நிக்கறது உங்க மகன் கண்ணுக்குத்  தெரியலை.  ஆனா இந்தப் புள்ளை போற, வர பக்கமெல்லாம் அவரு பார்வை போயி, போயி வருது!”

“இல்ல…! ரொம்ப நாளாச்சு அது இங்க வீட்டுக்கு வந்து! எப்ப வந்துதுனு கேக்கத் திரும்பிப் பாத்துருப்பான்!”, என வராத புன்னகையை வரவழைத்து சுகுணா சமாளிக்க

“சாதாரணமா பாக்கறதுக்கும், வேற மாதிரி பாக்கறதுக்கும் வித்தியாசம் தெரியாமயா வந்து உங்கட்ட கேக்கறோம். இல்லை மாமா மக்க, அயித்த மக்கனு பாக்காம, பழகாம வந்தவங்களா?”, என சுள்ளெனப் பேசிட

“இல்ல அப்டியெல்லாம் தப்பா பேசாதீங்க”, என ரங்கன் முன்வந்து வேண்டினார்.

“எல்லாம் விசாரிச்சாச்சு! அவருக்கு அந்தப் பொண்ணைக் கட்டிக்கணும்னு ஆசை இருந்ததாவும், உங்களுக்கு இஷ்டமில்லனுதான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டுருக்கறதாகவும் அக்கம் பக்கம் ஆளுங்க சொல்லிட்டாங்க!”, என்றதுமே

“நீங்களா ஏதோ பேசுறீங்க அவன் எஞ்சொல்லைத் தட்டாத புள்ளைங்கறது எவ்வளவு உண்மையோ, அதே அளவு அவன் விருப்பத்துக்கு ஒத்துக்கிட்டுதான் உங்க வீட்டுப் பொண்ணைப் பேசி முடிச்சோங்கறதும் உண்மை!”, என சுகுணா இடையில் தனது பங்காக அடித்துப் பேசிட

“நீ கொஞ்சம் சும்மா இரு!”, ரங்கன் சுகுணாவை அமைதியாக இருக்குமாறு பணித்ததோடு, பெண்ணது வீட்டாரை புரியாமல் நோக்கினார்.

“புள்ளைங்க இஷ்டத்துக்கு குறுக்க நின்னு ரெண்டு பேரு வாழ்க்கைய வீணாக்கறதுக்கு, பாழுங்கிணத்துல புடிச்சுத் தள்ளி விட்டுட்டு பேசாம இருந்திரலாம்!”, என பெருசு ஒன்று தனது கருத்தை கருத்தாக சுருட்டைப் பிடித்தபடிக் கூறிட

“எங்க பொண்ணுகிட்ட மாப்பிள்ளையப் பத்தி விசாரிச்சப்ப அவளும் திருப்தியா எதுவும் சொல்ல மாட்டிங்கறா! ஒட்டாத வாழ்க்கை வாழவா காசை இறைச்சு கல்யாணம் பண்ணோம்.  எதுனாலும் இன்னைக்குப் பேசி ஒரு முடிவுக்கு வந்திரது நல்லது!”, என தீர்மானமாக மணப்பெண்ணின் தாய்மாமன் உரைத்திருந்தார்.

இதென்னடா புதுக் கவலை என சுகுணாவும், ரங்கனும் ஒருவரையொருவர் பார்த்திருக்க, “எங்க பொண்ணை வாழ வைக்கிற நினைப்புல உங்க பையன் இருந்தாலும், சில விசயங்களை நீங்க செய்யாம, அவளை இங்க விட்டுட்டுப் போறது மனசுக்கு சரியாப் படலை!”

“அதுக்கு இப்டி ஒரு முடிவுக்கு வரலாமா? எதுனாலும் பேசி சரி பண்ணிக்கலாம்!”, என சுகுணா பணிந்து வேண்டிட

“ஒன்னு அந்தப் பொண்ணை சீக்கிரமா மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணிக் குடுங்க! இல்லை முடியாதுனா எங்க பொண்ணு இங்க இருக்க வேணாம்.  நாங்க கையோட கூட்டிக்கிட்டு கிளம்பறோம்!”, என தங்களது முடிவை திடமாக உரைத்தார் மணமகளின் மாமன்.

சுகுணாவிற்கு அனைத்தும் சுபமாக நடந்ததில் இருந்த மகிழ்ச்சி மணமகளின் வீட்டார் பேச்சில் சட்டென மறைந்திருந்தது.

“எம்பையன் உங்க பொண்ணை வாழவைக்கிறதையும், எழிலை கல்யாணம் பண்ணிக் குடுக்கறதையும் ஏம்போட்டுக் குழப்பறீங்க!”, என ரங்கன் கேட்க

“வேற என்ன செய்யச் சொல்றீங்க!  இந்தப்புள்ளைய இப்டியே விட்டா, உங்க மகன் எங்க பொண்ணை வாழவைப்பாருன்னு எங்களுக்கு நம்பிக்கை இல்லைங்க!”, என ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தவரிடமிருந்து குரல் ஒலிக்க

“அது இப்ப கிளம்பி சென்னை போயிரும். இப்ப இந்தக் கல்யாணத்துக்கே வற்புறுத்திக் கூப்பிட்டதாலதான் வந்திருக்கு! ஆயிரந் தடவை சொன்னதால, ஒரே ஒரு நாள் இங்க வந்து தலைய காட்டிட்டுப் போகுது!  அப்டிப் புள்ளை அது! அந்தப் புள்ளையால எந்தக் கஷ்டமும் உங்க பொண்ணுக்கு கண்டிப்பா வராது சம்பந்தி!”, ரெங்கன் நம்பிக்கையோடு கூற

“அது நல்ல புள்ளையா இருந்துட்டுப் போகட்டும்ங்க.  ஆனா எங்க பொண்ணு வாழறதுல பிரச்சனைனா அதுக்கு ஏத்த முடிவுதான நாங்க எடுக்க முடியும்.  உங்க விருப்பம்போல அந்தப் புள்ளைக்கு எப்ப வேணா கல்யாணம் வச்சிக்கிடுங்க. கல்யாணம் முடிஞ்சதும் சொல்லுங்க. அதுவரை எங்க புள்ளை எங்களோடயே இருக்கட்டும். இப்ப கூட்டிக்கிட்டுக் கிளம்பறோம்.”, என அப்போதே சலசலக்க

“டேய்… எல்லாரும் கிளம்புங்க.  சீரு எல்லாம் அப்பறம் வந்து ஏத்திக்கலாம்.  இப்ப பொண்ணை மட்டும் கூப்பிடுங்க”, என அனைவரும் எழ

பதறிப் போனார்கள் ரங்கனும், சுகுணாவும்.

மாறன் அனைத்தையும் பார்த்தாலும், அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான்.

மகனைப் பார்த்த சுகுணா, “வாயைத் திறந்து அப்டிலாம் இல்லைனு சொல்லலைனாலும் முகத்துல ஒரு பதட்டம்கூட இல்லாம இருக்கறீயே! நீயே எல்லாத்தையும் காட்டிக் குடுத்துருவ போலயே”, என மகனிடம் மெதுவாக முணுமுணுக்க, அதற்கும் அமைதியாக இருந்தான் மாறன்.

கிளம்பியர்களை அமரச் செய்து, “இதோ ஒரு நிமிசம். கொஞ்சம் பொறுங்க.  நான் பேசிட்டு உங்களுக்கு நல்ல முடிவாச் சொல்றேன்”, என ரங்கனை தனியே அழைத்துச் சென்ற சுகுணா, “இத்தனை வருசமா தொங்கச்சி, தொங்கச்சி பொண்ணுனு எங்களை திராட்டுல விட்டமாதிரி உங்க முடிவு இப்பவும் இருந்தா நான் எதாவது பண்ணிக்கிட்டு சாகறதைத் தவிர வேற வழியில்லை. ஒன்னு அவளை யாருக்காது கட்டி வீட்டை விட்டு அனுப்புங்க.  முடியாதுன்னா என்ன செய்யணுமோ அதை நான் பாத்துக்கறேன்”, என்றிட

மனைவியின் பேச்சில் இருந்த திடம் முத்துரெங்கனை அசைத்திருந்தது.

காத்திருந்தவர்களிடம் வந்தவர், “கல்யாணம்னா எடுத்தோம் கவுத்தோம்னு பண்ண முடியாதுல்ல.  மாப்பிள்ளை பாத்து அமைஞ்சதும் பண்ணிரலாம்.  உங்க பொண்ணுக்கு ஒரு குறையும் வராம பாத்துக்க வேண்டியது எங்க பொறுப்பு”, என்றிட

“மாப்பிள்ளைதான.. உங்களுக்கு இன்னொரு பையன் இருக்கான். இல்ல சொந்தம் வேணானா, உடனே மாப்பிள்ளை ஏற்பாடு பண்ண வேண்டியது எங்க பொறுப்பு.  நீங்க கல்யாணத்துக்கு பொண்ணை ரெடி பண்ணுங்க!”

“அவகிட்ட ஒரு வார்த்தை கேக்கணும்”, என ரங்கன் தயங்க

“என்னங்க அந்தப் புள்ளைக்கு என்ன தெரியும்.  நீங்க சொல்றதைக் கேக்காதுன்னா இப்ப நீங்க சொன்ன எதுவும் சரிப்பட்டு வராதுங்க.  நாங்க எங்க பொண்ணைக் கூட்டிக்கிட்டு கிளம்பறோம்”, என மீண்டும் கிளம்புவதிலேயே உறுதியாக நின்றிட

சுகுணா மற்றொரு பக்கம் நின்று ரங்கனை நோக்க, அப்போதே மாப்பிள்ளையை தேடும் படலம் துவங்கியிருந்தது.

விடியலுக்குள் மாப்பிள்ளையும் முடிவாகிவிட, விசயத்தை எழில்வாணியிடம் தெரிவிக்கவே ரங்கனுக்குத் தயக்கம்.

ரங்கனும் மாப்பிள்ளையை பார்க்கவில்லை.

பெண்ணது ஆசைகள் அனைத்தும் தெரிந்தும், தற்போது வேறு எதுவும் செய்ய முடியாத நிலை.

இரவு முழுவதும் யோசித்து, காலையில் இளைய மகனிடம் சொல்லிக் கொண்டு தோப்பு வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

////////////////

ஐந்து நிமிடங்கள் பொதுவான விசயங்களை பேசுவதுபோல பாசாங்கு செய்தவர், “உன்னை நேத்து வரவேற்பில பாத்துட்டு, ஒரு நல்ல வரன் வந்திருக்குமா!” ரங்கன் உரைத்திட

“அதுக்கென்ன இப்ப அவசரம் மாமா.  இன்னும் மூணு, நாலு வருசம் போகட்டும்”

“இல்லமா.. வயசுப் பொண்ணை வச்சிக்கிட்டு இவனுக்கு முடிச்சதை எல்லாரும் தப்பா பேசுறாங்க.  இந்த மாமனுக்காக ஒத்துக்கக் கூடாதா?”

“வேற என்னனாலும் சொல்லுங்க கேக்கறேன்.  ஆனா இந்தக் கல்யாணம் மட்டும் வேணாம் மாமா!”, இரைஞ்சிக் கேட்டாள்.

“புரிஞ்சிக்கோ எழில்!  நீ கல்யாணம் பண்ணிக்கலைனா, அந்தப் பொண்ணை மாறங்கூட வாழவிடாம அவங்க வீட்டுக்கே கூட்டிட்டுப் போயிறேங்கறாங்க!”, என விசயத்தைக் கூறிட

“அதுக்கும், எனக்கும் என்ன சம்பந்தம் மாமா!”

“அவங்க ஏதோ சந்தேகப்படற மாதிரி இருக்கு!”

“என்ன மாமா சொல்றீங்க!”

முந்தைய நாள் நடந்த பேச்சுவார்த்தைகளை இலேசாகக் கோடிட்டுக் காட்டிட

“அதுக்கு நான் என்ன மாமா பண்ண முடியும். எனக்கு படிக்கணும் மாமா!”, என தனது முடிவில் திடமாய் இருந்தாள் வாணி.

“நான் அதெல்லாம் பேசிட்டேன்.  கல்யாணத்துக்கப்புறம் உன்னை உன் விருப்பப்படி படிக்க வைக்கிறதா ஒத்துக்கிட்டாங்கம்மா!, இந்த மாமாவுக்காக சரினு சொல்லக் கூடாதா?”

“இது என்னோட எதிர்காலம் மாமா. எப்டி யோசிக்காம சரினு சொல்ல முடியும்?”

“அப்ப உனக்கு நான் கெடுதல் பண்ணுவேன்னு நினைக்கிறியா?”

“மாறன் அத்தான் பண்ணதுக்கு, என்னைய பலி கொடுக்கப் பாக்கறீங்க மாமா!”

“அப்டிச் செய்வேனா”, என்றவர், “எவ்வளவு செய்திருப்பேன், இந்த ஒரு விசயத்தைக் காது குடுத்துக் கேக்க மாட்டிங்கற!”, ஆதங்கத்தோடு உரைத்திட

“கேக்க எனக்கும் ஆசைதான்.  ஆனா இப்டித்தான் படிச்சிட்டு இருந்தப்பவே அம்மாவையும் கல்யாணத்துக்கு வற்புறுத்தி பண்ணதாக ஆச்சி சொல்லுவாங்க!”, என கண்கலங்கியவள், “படிக்கிறேன்னவளை அப்டியே விட்ருந்தா இன்னேரம் எம்புள்ளை உயிரோடயாவது இருந்திருக்கும்! நீயும் இப்டித் தனித்தீவா ஆதரவில்லாம நின்னிருக்க மாட்டேனு சொல்வாங்க!” என ஆச்சியின் வார்த்தைகளை மாமனிடம் பகிர்ந்தவளின் மனதும் இரயில் தண்டவாளம் போல அதிர்விற்குள்ளாகியிருந்தது.

இதுவரை மாமனிடம் எதற்காகவும் கெஞ்சியிராதவள், “நான் இந்தப் பக்கமே வரலை.  இத்தோட நான் எங்கேயாவது போயி படிச்சு, என் லைஃப்ப பாத்துப்பேன்.  தயவு செஞ்சு கல்யாணத்துக்கு மட்டும் என்னை ஃபோர்ஸ் பண்ணாதீங்க! இப்படியே கிளம்பினாகூட சாயந்திரத்துக்குள்ள சென்னை போயிருவேன்”, என கையெடுத்துக் கும்பிட்டவாறு கெஞ்சலாகக் கூறியபடியே வீட்டைவிட்டு வெளியேறினாள்.

கையில் எடுத்து வந்திருந்த வேலட்டை உள்ளே வைத்தது நினைவிற்கு வந்தாலும் கிளம்புவதே சரியெனத் தோன்ற கையில் இருந்த அலைபேசியோடு நடையை எட்டிப் போட்டாள்.

அதற்குள் சற்று தூரத்தில் நின்றிருந்தவர்கள் சிலர்  அவளை வெளியே செல்ல விடாது முற்றுகை இடுவதுபோல வந்தனர்.

அனைவரும் புதிது.

புரியாமல் மாமனைத் திரும்பிப் பார்த்தவள், அவர்கள் வழிவிடாது மேலும் தன்னை நோக்கி முன்னேறுவதைக் கண்டதும், ரங்கனை நோக்கி மீண்டும் திரும்பி வந்து கேள்வியாக நோக்க, அதுவரை அமைதியாக பேசிக் கொண்டிருந்தவரின் இன்னொரு முகத்தைப் பார்க்கும்படி நேர்ந்திருந்தது எழில்வாணிக்கு.

அதற்கும் காரணம் இருந்தது.  அங்கு தோட்டத்தில் ஆங்காங்கு ரங்கனை கண்காணித்தபடி பெண்ணது வீட்டார் இருந்ததை வாணி அறிந்திருக்கவில்லை.

ஆனால் ரங்கனுக்கு இரண்டு புறமும் நெருக்கடி.

ஒன்று பெண்ணது வீட்டார்.  மற்றொன்று மனைவி.

“நல்லா சொல்றேன் கேட்டுக்கோ!  மாப்பிள்ளை ரெடி!  உங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு நாளைக்கு காலைல தாலி கட்டச் சொல்லலாம்னு நினைச்சுத்தான் இவ்வளவு நேரம் பேசிட்டுருக்கேன்.  உன்னை அப்டியே விட்டா ஊரு, உலகம் எங்களைத்தான் காரித் துப்பும்.  அதனால பேசாம இந்த தோட்டத்து வீட்லயே இரு!”

“இவ்வளவு நாளா அப்ப எம்மேல பாசமா இருக்கற மாதிரி நடிக்கத்தான் செஞ்சீங்களா மாமா!”

“பாசமா இருக்கறதாலதான் வந்து உங்கிட்ட இவ்வளவு நேரம் கேட்டுக்கிட்டு இருந்தேன்.  இல்லைனா நேரா கல்யாணத்தையே முடிச்சிருப்பேன்!”

“புரிஞ்சுக்கோங்க மாமா! மாப்பிள்ளை எப்டி என்ன எதுவும் உங்களுக்காவது தெரியுமா?”

“புரிஞ்சதாலதான் இவ்வளவு நிதானமா உங்கிட்ட பேசறேன்.  எனக்குத் தெரியும் உனக்கு எப்டி மாப்பிள்ளை பாக்கணும்னு! பாத்தாச்சு. இப்ப நீ பேசாம கல்யாணம் பண்ணிக்கோ!”

“ப்ளீஸ் மாமா. யோசிக்கக் கொஞ்சம் டைம் குடுங்க!”

“இதுல யோசிக்க என்ன இருக்கு?”

“ஏன் இல்லை? எடுத்தோம் கவுத்தோம்னு உங்க பொண்ணுனா இப்படித்தான் பண்ணிருப்பீங்களா? பெத்தவங்க, பிறந்தவங்கனு யாருமே இல்லாத புள்ளைனு நீங்க என்ன வேணா சொல்லுவீங்க.  அதுக்கெல்லாம் நான் தலையாட்டணும்னு எதிர்பாக்கறது அராஜகமா இல்லையா உங்களுக்கு.  நியாயமா யோசிங்க.  உங்க பையன் விருப்பத்துக்கு செய்யாதது உங்க தப்பு. உங்க வீட்டம்மா ஏதோ ஆசைப்பட்டு பெரிய இடத்தில பொண்ணையும் எடுத்திட்டு, அவங்க வாழ இப்ப என்னைக் காவு கொடுக்க நினைக்கறீங்க.  அதுவும் மாப்பிள்ளை என்ன ஏதுன்னு கூட தெரியாம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணறது எந்த வகையில நியாயம்.  சொல்லுங்க. எனக்கு யாருமில்லை கேக்க, அப்டிணுதான இப்டியெல்லாம் அநியாயம் பண்றீங்க! மாப்பிள்ளைய பத்தி உங்களுக்கே ஒன்னுந் தெரியலை.  யாரு, என்ன, என்ன படிச்சான். அவன் கருப்பா, சிவப்பா எதாவது தெரியுமா? குடும்பம் எப்டி? பழக்கம் எப்டினு எதுவும் விசாரிக்கலை.  திடுதிப்புனு மாப்பிள்ளை ரெடினா என்ன அர்த்தம். சொல்லுங்க.  நீங்க பண்றது உங்களுக்கே சரினு படுதா? உங்க சம்பந்தகாரவங்க என்னை பாழுங்கிணத்துல பிடிச்சுச் தள்ளச் சொன்னா தள்ளிருவீங்க! அப்டித்தான!”,  மடிந்து அமர்ந்து அழுகையோடு வாணி கேட்டதும், சற்று நிதானித்தவர், “இப்ப வேற வழியில்லை எனக்கு!”, என தனக்குத்தானே கூறிக் கொண்டார் ரங்கன்.

அழுகையோடு நிமிர்ந்தவள், “அதுக்கு என்னை நீங்க கொன்னு போட்ருக்கலாம்”, எனத் தேம்ப

“ரொம்பப் பேசாதே எழில்! யாருக்கிட்ட பேசறேங்கறதை மனசுல வச்சுப் பேசு”, என கோபமாகக் கூற

“நான் அப்டித்தான் பேசுவேன்.  நீங்க இதுவரை நல்லவரு மாதிரி நடிச்சு என்னை ஏமாத்திருக்கீங்க!”, குரல் கமறக் கூறினாள்.

“ஆமா, நடிச்சேன்.  இப்ப சொல்றேன் கேட்டுக்க!  காலையில உனக்குக் கல்யாணம்.  கல்யாணம் முடியறவரை இந்த வீட்டுக்குள்ளயே சத்தமில்லாம இரு!  மீறி எதாவது பண்ணனும்னு நினைச்சே அவ்ளோதான்! போற எடத்தில உன்னோட வீரதீரத்தை போயிக் காட்டு!” அடுத்தடுத்து பேச்சுகள் தொடர்ந்து, வாக்குவாதமாக மாறும்முன், அங்கிருந்த தோட்ட ஆட்களிடம் கூறிக் கொண்டு, வாணியின் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கிக் கொண்டு கோபமாக வெளியேறியிருந்தார் ரங்கன்.

வாணியின் நிலை என்ன?

//////////

பிறந்தது முதல்

போராட்டம்!

தப்பிக்க வழி தேடுது

மனவோட்டம்!

சுணங்கினால் இல்லை

உயிரோட்டம்!

………………………….

Leave a Reply

error: Content is protected !!