காவல்துறை அதிகாரி கூறிய விசயத்தைக் கேட்டதும் விளக்கெண்ணைய் குடித்ததுபோல மாறியிருந்தது வேந்தனது முகம்.
இப்படி ஒரு திருப்பம் எழுந்து, தன்னை திகைக்க வைக்கும் என வேந்தன் கனவில்கூட நினைத்தது இல்லை.
அது மட்டுமல்லாது தனக்குத்தானே ஒரு நியதி கற்பித்து, அதற்கேற்றாற்போல தன்னையே சிரமப்பட்டு மாற்றிக் கொண்டிருக்க, விசயம் கேட்டதும் மனதில் சந்தோசம் எழவில்லை.
மாறாக, ‘இதுவரை நல்லாத்தானே இருந்தா! சின்னப் பொண்ணு மனச இப்டி யாரு கெடுத்தது! ரெண்டே நாள்ல யாரு இப்டி இவளை மாத்தினது? அம்மாவா? இல்லை வேற யாருமா?’, எனக் குழம்பியபடி வெளியே வந்தவனை, ‘உள்ள போகும்போது நல்லாத்தானே போனாரு! இப்ப என்னவாம்!’, எனப் பார்த்தபடியே வந்திருந்தாள் வாணி.
உண்மையில் வாணியின் அனைத்து மாற்றங்களுக்கும் தானே காரணம் என்பதை அறியாமல் போயிருந்தான் அந்த திறன்மிக்க தொழிலதிபன்.
மனதைத் தொடாதவரை, தேமே என இருக்கும் பெண்ணது மனம், சிறு தூண்டலில் உயிர்ப்பித்து, உயிரைக் கொடுக்கவும் துணியும் என அறியவில்லை வேந்தன்.
வேந்தனது மனம் பல விடையறியா வினாக்களோடு இருக்க, வாணி கேட்டதற்கு மட்டுமே பதில் என யோசனையோடு வந்தான்.
மதிய உணவிற்கு உயர்தர உணவகத்தின் முன் வண்டியை விட்டு இறங்கியவன், வாணியையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றிருந்தான்.
வேந்தன், வாணியை கவனித்துப் பார்த்தான். பெண்ணிடம் மாற்றம் எதுவும் புலப்படவில்லை.
‘நெத்தியிலயா எழுதி ஒட்டிட்டுத் திரிவா’!, என தனக்குத்தானே தனது செயலில் கிண்டல் செய்து கொண்டவன், பெண்ணது நடவடிக்கைகளைப் பார்த்தும், பாராமல் ஆனால் மனம் கண்காணிக்கும் எண்ணத்தில் கவனமாக இருந்தது.
வாணி சாதாரணமாக, எப்பொழுதும்போலவே இருப்பதாகத் தோன்றியது.
பெண்ணது வித்தியாசம் எதுவும் வேந்தனது கண்ணிற்குத் தெரியவில்லை.
சாப்பிட என்ன வேண்டும் எனக் கேட்டு ஆர்டர் செய்தவன், பேரர் உணவை எடுத்துவர நேரம் எடுத்திருக்க, குரலை செறுமிக் கொண்டு, “எல்லா இடத்திலயும் சின்னப் புள்ளைத்தனமா நடந்துக்கக் கூடாது வாணிமா!”, மெல்லிய குரலில் வாணியிடம் கூறிட
வேந்தனது வாணிமாவில் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்க, “அப்டி என்ன பண்ணேன் மாமூ?”, மெனு கார்டில் கவனம் பதித்தபடியே கேட்டாள்.
“சீனியர் எஸ்பீ-கிட்ட என்ன சொன்ன?”
“அவங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன்!”, என்றவள், நிமிர்ந்து, “ஏன் மாமூ?”
“நான் அதைக் கேக்கலை. நம்ம பத்தி என்ன சொன்ன?”
வேந்தனது கேள்வியில் பழையபடி குனிந்து கொண்டு, “ம்ஹ்ம்! உண்மையத்தான் சொன்னேன்!” முணுமுணுப்பான பதில். மெனுகார்டில் இருந்து பார்வையை எடுக்கவில்லை.
“நிமிந்து, எம்முகத்தைப் பாத்து சத்தமாப் பேசு வாணி!”, என்றவனின் குரலுக்கு நிமிர்ந்தவளின் முகம் பார்த்து, “எது உண்மை?”, என வேந்தன் கேட்க
வாணிக்குமே தோன்றியது. சம்பந்தப்பட்டவனிடம் எதுவும் கூறாது, முதலில் காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்தது தப்போ என்று.
வாணியின் கண்களில் இதுநாள்வரை இருந்த தொனி தற்போது இல்லை என்பதை நொடியில் கண்டு கொண்டவன், ‘கேடி எல்லாம் தெரிஞ்சேதான் வாயை விட்ருக்கு! சின்னப்புள்ளைனு பாத்தாக்கா, விசமா இருந்திருக்காளே!’, என அதற்குமேல் எதுவும் பேசாமல் வந்த உணவை அமைதியாக உண்ணத் துவங்கினான்.
அவனுக்கு வேண்டியதை மட்டுமே கவனத்தில் கொள்வதுபோல ஒதுங்கிய வேந்தனது செயலில் வாணிக்கு கோபம் எழுந்தது.
“மாமூ! அவங்கட்ட விஷ் வாங்க நினைச்சு, உங்க ஒப்பீனியன் கேக்காம சொன்னது தப்புதான்! அதுக்கு என்னை நீங்க அவாய்ட் பண்ணுவீங்களா?”, என வேந்தனது ஒதுக்கத்தை நீக்க எண்ணி பேசியவளிடம்,
“அதுக்குனு வாயிக்கு வந்ததைச் சொல்லுவியா?”
“வாயிக்கு வந்ததெல்லாம் இல்ல! நல்லா யோசிச்சு சரினு தோணுனதைத்தான் சொன்னேன்!”, என விடாமல் தனது நிலையில் இருந்து பேசினாள்.
“எனக்கே தெரியாம என்னைப் பத்தி வெளி ஆளுங்ககிட்ட இப்டி சொன்னது சரியா?”
“இப்பதான் உங்களுக்குத் தெரிஞ்சிருச்சே!”, என அசால்டாக உரைத்தாள் வாணி.
“இருக்கறதைத்தான் சொன்னேன்!”, என ஆணித்தரமாகக் கூறினாள் வாணி.
பெண்ணது பதிலில் ஜெர்க்காகி இருந்தான் வேந்தன்.
‘ஏதே…’ எனும் பார்வையை மட்டும் பெண்ணிடம் வீசியவன், அதற்குமேல் பொது இடத்தில் தர்க்கம் வேண்டாம் என நினைத்ததைவிட, ஒரு வேளை தன்னை அடையாளம் கண்டு கொண்டாளோ எனப் பதறித் தயங்கி, சற்று நேரம் அமைதியாக இருந்தான்.
ஏனெனில், வேந்தனுக்கும் அப்டி ஒரு எண்ணம் இருந்தது உண்மைதானே!
தனக்குத்தானே சுய அலசலில், அப்படி வாணிக்குத் தெரியும் வகையில் தனது செயல் இருந்திருக்க வாய்ப்பில்லையே என திடமாய் சமாதானம் செய்து கொண்டு, “உனக்கு இந்த வயசில சரினு தோணுறது, இன்னும் சில வருசம் போனதும் தப்புனு தோணலாம் வாணி. அதனால தேவையில்லாததைப் பத்தி இனி யோசிக்காத!”, நீண்ட இடைவெளிக்குப்பின் வேந்தன் தன்மையாகக் கூறினான்.
“இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை?”, என வேந்தனிடம் நேராக விவாதத்திற்கு வந்தவளைக் கண்டவன்
“ஏன் முடியாது? இன்னிக்குத்தானே முடிவெடுத்த. உடனே அது சரியா வராதுனு சம்பந்தப்பட்ட நான் சொன்னப்பறமும் பிடிவாதம் பிடிச்சா என்ன அர்த்தம்?”
“ஒரே அர்த்தம்தான். இனி என்னால மாத்திக்கலாம் முடியாது. உங்ளுக்கு அப்டியொரு எண்ணம் இதுவரை இல்லாம இருந்தா, உங்களை மாத்திக்கங்க! வெரி சிம்பிள்! அதுவரை வயிட் பண்ணுறேன்!”, தோளைக் குலுக்கியபடி தெளிவாக உரைத்தாள்.
“ச்சு… இந்தப் பேச்சு இப்ப வேணாம் வாணி. இனியும் யாருகிட்டயும் போயி உளறிராத!”, கெஞ்சலோ எனும்படியாக இருந்தது வேந்தனது குரல்.
“உங்ககிட்ட சொல்லாம சார்கிட்ட சொன்னது கோபமா?”, என வாணியின் மனதில் தோன்றியதைக் கேட்டாள்.
“இந்த மாதிரி ஒரு எண்ணம் வந்ததே உனக்குத் தப்புன்னு சொல்ல வந்தேன்!”
“நீங்க சொல்ற மாதிரி நான் யாருகிட்டயும் இனி இதைப் பத்திச் சொல்லல! ஆனா கண்டிப்பா என்னை மட்டுமே மேரேஜ் பண்ணிக்குவேன்னு இப்பச் சொல்லுங்க! இனி யாருகிட்டயும் இதை நான் மூச்சு விடமாட்டேன்!”, என்றவளை முறைத்துப் பார்த்துவிட்டு, உள்ளுக்குள் ஏனோ அந்தப் பேச்சினை ரசித்தாலும், இதை இப்படியே விட்டால் பெண்ணது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமே என கடுமை பூசிய முகத்தை மாற்றாமல் அப்படியே இருந்தான்.
தான் காவல் அதிகாரியிடம் தங்களைப் பற்றிப் பேசிய கோபத்தில் பாராமுகம் காட்டுகிறானோ என எண்ணியவள், “…நான் உங்களை கேட்டுட்டே இனிமே எல்லாம் பண்றேன். ஆனா இன்னிக்கு அந்த எஸ்பீகிட்ட சொன்னதுக்கு சாரிலாம் கேக்க மாட்டேன்!”, செல்லங் கொஞ்சிய குரலில் துடுக்காகப் பேசியவளிடம் வாயைக் குடுக்காமல் உணவில் கவனமாக இருந்தான். இல்லை அதுபோல நடித்தான்.
‘முடியலைடா சாமி! இதே ரேன்ஞ்ல போனா கன்ஃபார்மா க்ளீன் போல்ட்! இவகிட்ட இருந்து என்னைக் காப்பாத்தி கரைசேத்துரு காரணீஸ்வரா!’, என மனதினுள் இறைவனை நினைத்து வேண்டியபடியே உண்டான்.
நிமிர்ந்து வாணியைப் பார்த்தவனிடம், “என்ன முடியலையா? நீங்கதான் கடைசிவரை என்னை சமாளிக்கணும். எஸ்கேப்பாகிரலாம்னு நினைச்சிங்களோ? அவ்ளோதான்! தாலி கட்டுங்கனு நான் சொல்லும்போது நீங்க ரெடியா இருக்கற மாதிரிப் பாத்துக்கோங்க!”, என உறுதியான குரலில் கூறினாள் வாணி.
“என்னைப் பத்தி எதுவுமே தெரியாம தப்பா ஒரு முடிவுக்கு வந்திருக்க!”, என வேந்தன் இலகுவான குரலில் பதிலளிக்க
“தெரியாதுதான்! ஆனா நீங்க சொன்னா, தெரிஞ்சுப்பேன்! எப்போ சொல்வீங்க?”, என்ற கேள்வியில் பெண்ணது எதிர்பார்ப்பின் அளவு புரிய, உள்ளம் தொட்டவளின் வளர்ந்த குழந்தைத் தோற்றத்தைக் கண்டு, மனம் சுருங்கிட சுணங்கிப் போனான்.
‘கொஞ்சம் முன்னமே என் கண்ணுல நீ பட்டிருக்கக்கூடாதா! இல்லை இன்னும் பெரியவளா இருந்திருக்கலாம்’, என வேந்தனது ஆழ்மனம் ஏக்கத்தோடு நினைத்திருந்தது.
அதற்குமேல் தானாகவே ஒரு வார்த்தைகூட பேசவில்லை வேந்தன்.
வாயைக் கிளறியவளிடமிருந்து தப்பிக்க எண்ணி, வேகமாக வண்டியை விடுதியை நோக்கி விட்டான்.
உண்டு முடித்து கிளம்பியவர்கள், வரும் வழிநெடுக வேறு பேசிக் கொள்ளவில்லை.
வாணியின் புறம் வேந்தன் திரும்பவே இல்லை.
எதாவது பேசினாலும் இயந்திரம் போன்றிருந்தது வேந்தனது செய்கை.
இது புதிது.
வாணிக்கு உறுத்தியது.
ஆனாலும் எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்தாள்.
கண்களை மூடி எப்போதிருந்து இந்த மாற்றம் என்பதையும் குறித்தபடி வந்தவளை, “ஹாஸ்டல் வந்திருச்சு வாணி!”, என்ற குரல் எழுப்ப
“ஹாஸ்டல்லா!”, என பதறிக் கேட்டவளிடம்
“ம்ஹ்ம்”, என்றதும் முகத்தை தூக்கி வைத்தபடியே இறங்கி, வேந்தனது புறமாக வந்து ஆராய்ச்சியோடு பார்த்தவளிடம், அருகே இருந்த வாணியின் வாலட்டை தூக்கிக் கையில் கொடுக்க, வாங்கிக் கொண்டவள், “எப்ப உங்களைப் பத்தி சொல்லுவீங்க!”, என
“இது விளையாட்டு இல்ல வாணி, வாழ்க்கை!”, என்றிட
“வாழத்தானே கேக்கறேன்!”, என்றபடியே இடம், பொருள் உணர்ந்து, “என்னோட பேக்கெல்லாம் வீட்லதான் இருக்கு! எப்போ கொண்டு வருவீங்க!”, என அதிகாரமாக வினவினாள்.
வாணி விடுதிக்குள் நுழைந்ததும் பின்னே வந்த வேந்தன் விடுதி காப்பாளரிடம், வாணியது திடீர் திருமணப் பிரச்சனைகளை சுருக்கமாகக் கூறிவிட்டு, “வாணிய புதுசா யாரும் பாக்க வந்தாங்கன்னா, அவளைக் கூப்பிடாம எதாவது சொல்லி சமாளிச்சு அனுப்பிருங்க!”, என்றுவிட்டு, மீரா அல்லது தன்னைத் தவிர வேறு யாரையும் அவளைப் பார்க்க அனுமதிக்க வேண்டாம் என்றதோடு கிளம்பியிருந்தான்.
===============
வீட்டிற்கு வந்த வேந்தனை பிலுபிலுவென சண்டை பிடித்திருந்தார் அனுசியா.
“எப்டி அதுக்குள்ள புள்ளைய ஹாஸ்டல்ல கொண்டு போயீ விடுவ! ரொம்ப சோந்து போயி இருந்தா! எந்த ஆதரவும் இல்லாத புள்ளைய கொண்டுபோயி தள்ளிவிட்டுட்டு வந்திருக்க? ரெண்டு நாளைக்கு இங்கன இருந்தா அதுக்கும் ஒரு ஆறுதல். எனக்கும் அதுல சின்ன சந்தோசம்”
“ம்மா.. புரியாம பேசாதீங்க! அவ சின்ன வயசில இருந்து ஹாஸ்டல்லதான் வளந்திருக்கா. இப்ப திடீர்னு எதுக்கு அவளைக் குழப்பறீங்க?”
விடுதியில் வாணியை அழைக்கும்படி கூறிவிட்டு, அனுசியாவிடம் இருந்து விலகி வெளியே சென்றிருந்தான் வேந்தன.
“போடா! நானே பாத்திட்டு வந்துக்கறேன்!”, என வாணிக்காக காத்திருந்தவர், பெண் வந்ததும், “வா வீட்டுக்கு!”, என அழைக்க, “இங்க இருந்து காலேஜ் போயிட்டு வரதுதான் பாட்டீமா எனக்கு வசதியா இருக்கும்”, என உடன் வர வாணி மறுத்துவிட்டாள்.
வாரயிறுதி நாள்களில் வீட்டிற்கு வந்துவிடுமாறும், அப்டி வாணி வரவில்லையெனில் தானே இங்கு வந்துவிடுவதாகவும் கண்டிப்பான மிரட்டலோடு கூறிவிட்டுக் கிளம்பியிருந்தார் அனுசியா.
////////////
விட்டுப்போன வேலைகளை முடிக்க, வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்தான் வேந்தன்.
வந்தாலும் ஒன்றிரண்டு நாள்கள் இருந்துவிட்டு மீண்டும் போகக்கூடிய நிலை.
ஆகையால், முதல் இரண்டு மாதங்கள் அனுசியாவிடம் பணம் கொடுத்து, வாணியின் மாத செலவினங்களுக்கு கொடுத்துவிடுமாறு கூறியிருந்தான் வேந்தன்.
வாணி பணத்தை வாங்க மறுத்திட, இரண்டு மாதங்களுக்குப்பின் திரும்பிய வேந்தனிடம் புலம்பிவிட்டார் அனுசியா.
அப்போதுதான் அனுசியாவிற்கு மகனோடு பேச நேரம் வாய்த்திருந்தது. தாய் கூறியதும், தானே நேரில் வாணியைக் காணச் செல்ல முடிவெடுத்திருந்தான்.
அதற்குள் வாணிக்கு, முதல் பருவத் தேர்வுகள் துவங்கி முடிந்திருந்தது.
வேந்தன் வந்திருப்பதை அறிந்தவள், வீட்டுப் பக்கம் வருவதை சற்றுத் தவிர்த்திருந்தாள்.
இதை அறியாதவனோ, விடுதியில் வைத்துப் பேச, பணம் கொடுக்க சங்கோஜமாக உணர்ந்தவன், வெளியில் வாணியை அழைத்து வந்திருந்தான்.
வாணிக்கு வேந்தன் தனியே அழைத்து வந்தமைக்கான காரணம் புரியாமல் உடன் கிளம்பி வந்திருந்தாள்.
இரண்டரை மாதங்கள் கழித்து ஒருவரையொருவர் தற்போதுதான் சந்திக்கின்றனர்.
விடுதிக்கான தொகை, செலவுக்கான தொகையை வாணியிடம் கொடுக்க, வேந்தனிடமும் மறுத்திருந்தாள்.
“இல்ல மாமூ! எங்கைல பணம் இருக்கு! வேணும்னா நானே கேட்டு வாங்கிப்பேன்!”, என்றிட, யார் கொடுத்து உதவியது என்கிற கேள்வி வந்ததுமே, தனது பெயரில் சொற்பத் தொகை இருப்பதாகவும், அதனை டெபாசிட் செய்து அதிலிருந்து வரும் தொகையை வைத்துத்தான் இதுவரை தனது விடுதித் தங்கல், படிப்பு இதர, இத்யாதிகளுக்கு பயன்படுத்துவதாகக் கூறியதும் ஏற்றுகொள்ள என்பதைவிட, நம்ப மறுத்திருந்தான் வேந்தன்.
சற்று நேரம் யோசித்தவன், பெண் பழையதை இன்னும் மனதில் வைத்துத்தான் இப்படி நடந்து கொள்கிறாள் என்பது புரிந்ததும், முடிவுக்கு வந்தவனாக பேசத் துவங்கியிருந்தான்.
“நம்ம வயசு வித்தியாசம் என்னனு தெரியுமா?”
“ம்”
“தெரிஞ்சுமா யோசிக்காம இப்டிப் பேசுற?”
“வயசுக்கும், கல்யாணம் பண்ணிக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?”
“ஏன் இல்லாம!”
“எனக்கொன்னும் சம்பந்தமிருக்கறமாதிரித் தெரியலை!”
“ஏறத்தாழ பதினேழு, பதினெட்டு வருசம்! இன்னிக்கு ஒன்னுந் தெரியாது. இன்னும் பத்து வருசத்துல ஏண்டா இப்டி ஒரு முடிவெடுத்தோம்னு ரொம்ப வருத்தப்படுவ!”
“….”
“உன்னோட எதிர்காலத்தை தேவையில்லாத விசயத்துல செலுத்தி வீணாக்கிறாத! உன்னோட வயசுக்கு ஏத்த மாதிரி மாப்பிள்ளையைப் பாத்து கல்யாணம் பண்ணிட்டாதான் உனக்கு நல்லது!”, என்றவனிடம்
“உங்களை கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவெடுக்கறதுக்கு முன்னாடியே இதையெல்லாம் யோசிச்சிட்டேன் மாமூ! உங்களை எனக்குப் பிடிச்சிருக்குங்கறதைவிட, ஒருத்தருக்கொருத்தர் எல்லா சூழல்லயும் மனமொத்து வாழவும், சகிக்கவும், சமாதானம் செய்யவும் எல்லாருக்கும் எல்லார்கிட்டயும் முடியாது.
ஆனா உங்களோட நான் வாழக்கூடிய வாழ்க்கையிலயும், என்னோட நீங்க வாழப்போற வாழ்க்கையிலயும் ரெண்டு பேராலயும் இதெல்லாம் முடியும்னு, சாத்தியம்னு மனசுக்குள்ள தோணுச்சு. எப்பவும் அது மாறாது.
“நமக்குள்ள எல்லாம் சாத்தியம்னு சொல்ற மனசு ஒன்னு போதும், நாம சேந்து கடைசிவரை ஒத்துமையா வாழறதுக்கு!
வயசுங்கறது இந்த உருவத்துக்குத்தானே தவிர, உங்க மனசுக்கும், என்னோட மனசுக்கும் இல்ல! நாம ரெண்டு பேரும் சேந்துட்டா, நம்ம மனசு இப்போபோல எப்பவும் ஒரே மாதிரி, இப்ப இருக்கற மாதிரியே, இருக்கும்னு நான் நம்பறேன்.
ஏஜ்ஜை, நான் ஒரு நம்பரா மட்டுந்தான் பாத்தேன், இனியும் பாப்பேன்!
இந்த ஏஜ்தான் நமக்குள்ள பிரச்சனைனு, என்னை ஒதுக்கினா நம்ம ரெண்டு பேருக்கும் ஃபியூச்சர்னு ஒன்னு இல்லாமலே போயிரும் மாமூ!”, என திடமான குரலில் இயம்பியவள், “வாழ்க்கைங்கறது பிச்சையில்ல! ஒருத்தவங்க கேட்டு, இன்னொருத்தவங்க பிரயாசப்பட்டுக் குடுக்க! ரெண்டு பேருக்குமே ஈக்வல் ரெஸ்பான்சிபிலிட்டிஸ் அண்ட் ரைட்ஸ் இருக்கு!”, என்றவள்
சற்று நிதானித்து, “இனிமே இது சம்பந்தமா நான் பேசலை! உங்களை இதுக்குமேல எதுக்கும் தொந்திரவு பண்ண மாட்டேன்”, என ஒதுக்கமாக பதிலளித்தவள்
“இன்னொன்னு!”, என தனது கைகளைப் பார்த்தபடியே, சற்றுத் தவிப்போடு வேந்தனை நிமிர்ந்து நோக்கியவள், “மூணாம் மனுசங்கிட்ட உதவி வாங்கினா பாக்கறவங்க தப்பா பேசுவாங்க! அதான் பணம் வேணானு சொன்னேன். இனி எதுக்காகவும் உங்களைத் தொந்திரவு பண்ணமாட்டேன்!”, என்றவளது பேச்சு வேந்தனை உலுக்கியிருந்தது.
“நான் மூணா மனுசனா?”
“அது நீங்கதான் முடிவு பண்ணணும்”, என பந்தை வேந்தனது பகுதிக்கே அடித்து அனுப்பியிருந்தாள் வாணி.
“உன்னோட நல்லதுக்குனு சொன்னேன். அதுக்கு இப்டி ஒரு டெசிசன்லாம் எடுக்காத வாணி! இந்தப் பேச்சே இப்ப வேணாம்!”, என்று பதறியவன்
“முதல்ல டிகிரி முடி! அடுத்துப் பாக்கலாம்!”, என விடுதி வாயிலில் வந்து வண்டியை நிறுத்தியபடி, “உன்னையே நீ ரொம்ப வருத்திக்காத வாணி! எதாவது வேணுனா காண்டாக்ட் பண்ணு! உனக்குச் செய்ய நான் இருக்கேன்!”, என விடுதியில் விட்டுச் சென்றிருந்தான்.
வாணி தன்னோடு கிளம்பும்போது இருந்த மலர்ந்த மலரைப் போலிருந்து வதனம், தற்போது இறக்கிவிடும்போது வாடியிருப்பதையும் வேந்தன் கவனித்திருந்தான்.
உறுத்தினாலும், பெண் பின்னாடி வருந்திவிடக்கூடாதே என இடைவெளி தந்து தன்னையே தண்டித்து வாழ்கிறான்.
சிறு பெண் எவ்வளவு யோசித்திருக்கிறாள். என்ன மாதிரியெல்லாம் பேசுகிறாள் என வாணி பேசியதையே நினைத்து ஆச்சர்யத்தோடு அசைபோட்டபடி வந்தவனுக்கு, இதயமெங்கும் கனமாக உணர்ந்தான்.
இனி எதுக்காகவும் உங்களைத் தொந்திரவு பண்ணமாட்டேன், மூணாவது மனுசன் என்கிற வாணியின் வார்த்தைகளெல்லாம் உண்டாக்கிய தாக்கம் வார்த்தைகளால் வடிக்க இயலாதது.
பெண் கூறியது சரிதான் எனப் புரிந்தாலும், வேந்தனால் இலகுவாக அந்த வார்த்தையைக் கடக்க இயலாமல் தவித்தான்.
வேந்தனுக்கு, வாணியின் அண்மை தேவையாக இருக்க, பெண்ணது ஒதுக்கமான பேச்சு வலியைத் தந்திருந்தது.
ஆனாலும், வாணியின் முடிவு தவறல்லவே என்கிற எண்ணமும் வேந்தனிடம் இருந்தது.
இருபக்கமும் மனம் ஒன்றிற்கு முரணாக வாதாட, வழியறியும் நிலை புரியாமல் தவித்தான்.
அதே நேரம் அனுசியா புதிய பிரச்சனையை கொண்டு வந்திருந்தார்.