am22
am22
ஆசை முகம் 22
நிஜத்தில் தன்னைக் கண்டு கொள்ளாதவன், உறக்கத்தின்போது உறவாடுவது, நெற்றி முடியை ஒதுக்கி நெற்றியை நீவி விடுவது, விரல்களைக் கோர்த்த வண்ணம் புறங்கையில் சூடான மூச்சுக்காற்றின் இதம் தந்து, குறுகுறுத்த மீசையின் உணர்வோடு முத்தமிடுவது, இதமாய் இனிமையாகப் பேசுவது போன்ற செயல்வழியே கனவின் வழி, பெண்ணது ஏக்கங்கள் தீர்த்தானோ!
‘கனவுல மட்டுந்தான் பேசுவீங்களா?’
‘நிஜத்துலயும் பேசுவேனே!’
‘என்னைக் கண்டுக்கறதேயில்லை’
‘கண்டுக்கறதுக்கு என்ன செய்யனும்’
‘கட்டிக்கணும்’, இப்படி ஒவ்வொரு நாளும் நீளாக் கனவுகள் சமீபமாக நீண்டு தொடர்ந்தது வாணிக்கு.
வேந்தனை கண்ணால் பருகி, காதால் அவனது பேச்சை இன்னிசையாய் கேட்டு, நினைவால் நெக்குருகி காதல் வளர்த்தாள் வாணி.
அவளறியாமலேயே வெட்கம் அமோகமாய் விளைந்திருந்தது. அதனை வேந்தனைக் காணும்போதெல்லாம் அறுவடை செய்து மகிழ்ந்தாள்.
விலகிச் செல்பவன் தனது செயலால் தன்னை விலக்கிவிட எண்ணிடக் கூடாதே என்று இயன்றவரை அவனெதிரில் வருவதைக் குறைத்துக் கொண்டிருந்தாள்.
பாழாப்போன வெட்கம்வேறு அவனெதிரில் வந்து தன்னை கீழிறக்கிவிட்டால்! அந்த பயமும் இருந்தது.
தன் வயதொத்தவர்கள் காதல் என்கிற பெயரில் அரங்கேற்றும் செயல்களைக் கண்டு முகம் சுழிப்பவளுக்கு, வேந்தனது பாராமுகம் வலித்தாலும், அவனது நினைவே சுகமான சுமையாகியிருந்தது.
பார்வையால் சேதி சொல்லி, சமூக வலைதளத்தின் வழியே காதலைப் பகிர்ந்து, விடியல்வரை கடலை போட்டு, விடிந்ததும் வகுப்பில் தூங்கி வழிந்து, கல்லூரி விட்டதும், விட்டதைத் தொடர சிட்டெனப் பறக்கும் சீவன்களின் செயலில், பிறப்பெடுத்ததே இதற்கென்று தெரிபவர்களைக் காணுறும்போது ஏக்கம் எழவில்லை வாணிக்கு.
மாறாக அருவெருப்பே மிகுந்தது.
பொறுப்புகளைத் தட்டிக் கழித்து, பொது இடத்தில் அப்டி என்ன காதல் வளர்த்து, அதனை நிலைநாட்டிவிடப் போகிறார்கள் என்பதே அவளது எண்ணமாக இருந்தது.
வேந்தன் காதலிக்கத் துவங்கினாலும் இதுபோன்ற கிறுக்குத் தனங்களை அவள் ஆதரிப்பாளா? இடங்கொடுப்பாளா? என்று புரியவில்லை வாணிக்கு.
இரண்டொரு நாள் தொடர்ச்சியாக பெண்ணைக் காணாதிருந்தால், அவள் உறங்கியிருந்தாலும் அவளது அறைக்குள் சென்று உறங்குபவளை கண்களால் நிரப்பி, கனன்ற இதயத்தைக் குளிரச் செய்தபின்பே தனது தளத்திற்குச் செல்வதை வாடிக்கையாக்கியிருந்தான் வேந்தன்.
இதனை ஒரு முறை கண்ணுற்ற அனுசியா, “எதுக்கு இவ்ளோ கஷ்டப்படணும். முன்னாடியே எங்கிட்ட சொல்லியிருந்தா வைகாசியிலேயே கல்யாணத்தை வச்சிருந்துருக்கலாம்ல”, என மகனைக் கடிந்து கொண்டார்.
அனுசியாவிற்கு இனி எல்லாம் சுகமாகிவிடும் என்கிற நம்பிக்கையில், மகனது ஏக்கம் நிறைந்த இச்செயல் வருத்தத்தைத் தந்திருந்தது.
“ம்மா.. இந்த சந்தோசம் கல்யாணத்துக்கப்புறம் கிடைக்காதும்மா!” என புன்னகையோடு கூறிக் கடந்தவனைப் புதிராகப் பார்த்திருந்தார்.
காதல் கிறுக்குத்தனங்களை ஆமோதிப்பதோடு, ஆராதிக்கிறது!
முன்பைவிட பெண்ணது ஒதுக்கம் வேந்தனுக்குள் மனம் புரியாத ஏக்கத்தைத் தரத் துவங்கியிருந்தது.
பெண் மனதால் தன்னை நெருங்க, நெருங்க, நிஜத்தில் ஒதுங்குகிறாள் என்பதை யார் வந்து கூறுவார்?
பக்குவமும், பண்பும், பொறுப்பும் மிகுந்தவனால். அதை உடைத்துக் கொண்டு, இளம் பருவ வயதொத்தவன்போல வாணியிடம் நெருங்க இயலாத நிலையில் வேந்தன்!
காதல் வளர்ந்து, கனியத் துவங்கியிருந்தது!
காதலிப்பார் இருவரும் காய் கனியாது கண்டிப்போனதாக எண்ணியிருந்தனர்.
பொழுதுகள் மனதோடு இனிமையாக இருவருக்குமே கழிந்திட, நிஜத்தில் வெகு தூரத்தில் இருந்தனர்.
…………………………
கல்லூரிக்கு தேடி வந்த திருமாறனை வாணி சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் எழுந்த திகைப்பு ஒருபுறம். உதிரத் தொடர்பான உறவாக இருக்கும் மனிதனை நீண்ட நாளுக்குப்பின் கண்டதால் எழுந்த ஆனந்தம் மறுபுறம்.
இளமாறனைப்போல இதுவரை எழிலிடம் தனது மனதைத் திறந்து காட்டியிராதவன் என்பதால் தயக்கம் எதுவுமின்றி இயல்பாக உரையாடினாள் வாணி.
ஆனாலும் பெண்ணிற்கே உண்டான முன்னெச்சரிக்கை உணர்வும் இருந்தது.
வாணியின் அலைபேசிக்கு முதலில் அழைப்பு விடுத்தான். ஆனால் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அதுவரை காத்திருக்க பொறுமையில்லை திருவிற்கு.
முதலில் விடுதிக்கு சென்று பார்த்திருந்தான். ஆனால் அங்கு பெண் தற்போது தங்கியிருக்கவில்லை என்பதை தெரிந்து கொண்ட பிறகுதான் கல்லூரிக்கு வந்திருந்தான்.
கண்டதுமே, “ஏன் இப்ப அந்த ஹாஸ்டல்ல நீ இல்லையா?”
“இல்லை!”
விடுதியை விட்டு வந்ததற்கான உண்மைக் காரணத்தை மறைத்து, அசௌகர்யம் காரணமாக வேறு இடம் பார்ப்பதாகவும், அதுவரை தோழமையின் வீட்லதான் தங்கியிருக்கேன் என்றிருந்தாள்.
அதற்குமேல் திருவும் அதைப்பற்றி எதுவும் தோண்டித் துருவிக் கேட்கவில்லை.
வாணிக்கு வேறு நபரோடு திருமணம் நடக்க இருந்ததைப் பற்றி, “நம்ம ஊருப் பக்கம் இப்பலாம் டிகிரி படிக்க வைக்காம எந்தப் பொம்பளைப் புள்ளைகளையும் கட்டிக் குடுக்கறது இல்ல. இந்த அப்பா மாறன் மாமியா வீட்டு ஆளுங்க பேச்சைக் கேட்டு இப்டி அவசரப்பட்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்க வேணாம். கொஞ்சம் யோசிச்சு நிதானமா முடிவெடுத்திருக்கலாம்”, எனத் துவங்க
“முடிஞ்சதைப் பத்தி இனி பேச வேணாம்”, என பட்டென்று கத்தரித்துப் பேசியவள், பொதுவான பேச்சுகள், விசாரிப்புகள் எனத் தொடர்ந்தாள்.
இளமாறனைப் பற்றிக் கேளாமலேயே, “அவன் அதுக்கப்புறம் இங்க வந்தாலும், தங்கறதுகூட இல்லை. அம்மாதான் ரொம்ப நொந்து போயிருக்கு!”, என்றிட
சற்று நேரம் சுகுணாவைப் பற்றிய பேச்சுகள் தொடர்ந்தது.
அந்தஸ்து, அந்தஸ்தோடு இணைந்து, ஊருக்குள் பகட்டாக காட்டிக் கொள்ள எண்ணியது அனைத்தையும், முறியடித்து ஒன்றுமில்லாது செய்திருந்தனர் சம்பந்த வீட்டார்.
“இப்ப அவன் மாமியா வீட்ல இருந்துட்டு, சொத்தைப் பிரிச்சுக் குடுக்கச் சொல்லிட்டுருக்கான். அவங்க வீட்டு ஆளுங்களும் ரெண்டு, மூனு தடவை அதைப்பத்தி வந்து நேருல பேசிட்டுப் போயிட்டாங்க”, எனக் கூற வாணிக்குமே வருத்தம்தான்.
ஆனால் வாணி மீது எந்த இணக்கமோ, இளக்கமோ தனது பெற்றோருக்கு வரவில்லை என்பதையும் சாடையாகக் கூறி வருத்தப்பட்டான் திரு.
அதையே வாணியிடமும் கேட்டான். “அப்டி நீ என்ன பண்ணிப்புட்டேனு எங்க அம்மா மாதிரி. இப்ப அப்பாவும் திட்டிக் குமிக்க ஆரம்பிச்சிட்டாரு”
சம்பவ தினத்தன்று காவல்துறை முன்னிலையில் பேச்சுவார்த்தைகள் நடந்தபோது திரு அங்கில்லை என்பதே அப்போதுதான் வாணிக்குத் தெரிய வந்தது.
மருத்துவமனையில் இருந்து வாணியை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்ததுமே, அங்கிருந்து அகன்றிருந்தான் திரு.
திருவின் பேச்சிற்கிடையே புகாமல், அமைதியாகக் கேட்டுக் கொண்டாள்.
அதைப்பற்றிய பேச்சை வளர்க்க விரும்பாதவள், பேச்சை மாற்ற எண்ணியதோடு, கடந்த சில நாள்களாகவே மனதில் அறிந்து கொள்ளத் துடித்த தனது பெற்றோரைப் பற்றிக் கேட்க, “ஏன் உனக்கு எதுவும் தெரியாதா?”, அதில் ஆச்சர்யம் மிகுந்திருந்தது.
“தெரியாததாலதான் கேக்கறேன். ஆச்சி இருந்தவரை எதுவும் சொன்னதில்லை. எனக்கு அப்ப கேக்கணும்னு தோணினதும் இல்லை”, உண்மையை உரைத்திட
“ஆமா சின்னபுள்ளைல அதெல்லாமா கேக்கத் தோணும்!”, வாணிக்கு பரிந்து பேசினான் திரு.
“உங்களுக்கு தெரிஞ்சவரை சொல்லுங்களேன்!” அறிந்துகொள்ளும் ஆவல் கொட்டிக் கிடந்தது.
“எனக்கு நாலஞ்சு வயசு இருக்கும்போதுதான், அத்தைக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்தாங்க! புது ட்ரெஸ் எல்லாம் எடுத்ததால அது நல்லா நினைப்பிருக்கு. பெரியவங்க எல்லாம் அத்தையைக் கூட்டிக் கொண்டு போயி அவங்க வீட்டுல விடப்போனப்ப அந்த வண்டியில கூடவே நானும் போனேன். ஆனா அந்த வயசுல விளையாட்டு, தீனி இதுதான் நினைப்பா இருக்கும். வேற எதுவும் பெருசா ஞாபகத்துல இல்லை!”
“எங்க அப்பாவைப் பத்தி எதாவது தெரியுமா?”
“ரொம்பல்லாம் நம்ம வீட்டுக்கு வந்ததில்லை. ஆனா கொஞ்ச நாள்ல மாமா செத்துட்டாங்கனு பேசிக்கிட்டாங்க. நீ பிறக்கறதுக்கு கொஞ்ச நாள் முன்னதான் அத்தைய இங்க கூட்டிட்டு வந்தாங்க. நீ பிறந்து கொஞ்ச நாள்ல அத்தையும் செத்துருச்சு! இதுதான் எனக்கு லைட்டாஹ் நியாபகம் இருக்கு!” என்றவனிடம், வாணி தனது தந்தை வீட்டாரைப் பற்றி வினவ,
“நம்ம அப்பாயி இருந்தாங்கள்ல அவங்க அண்ணன் பையந்தான் உங்க அப்பா”
“அப்ப ஏன் நாமளோ, அவங்களோ போக வர இருந்ததில்ல!”, என தனக்குத்தானே வினவியவள், “அதப்பத்தி ஏதும் உங்களுக்கு தெரியுமா?”
“அது எதனாலனு சரியா தெரியலையே!”
“இப்பப் பாத்தா உங்களுக்கு அவங்களை, அவங்க வீட்டுல உள்ளவங்களைத் தெரியுமா?”
“ரெண்டு மூனு தடவை சின்னப் புள்ளைல பாத்தது! அவ்வளவா ஞாபகமில்லை! அது ஏதோ ரெண்டு குடும்பத்துக்கும் இடையே பிரச்சனைனு தெரியும். ஆனா என்ன பிரச்சனைனு சரியாத் தெரியலையே. இதையெல்லாம் இப்ப ஏன் தோண்டித் துருவிக் கேக்கற?”
“சும்மாதான்! எதுவுமே தெரியாமலேயே இருக்கேன்ல! அதான் தெரிஞ்சுக்க கேட்டேன், வேற எதுவும் நியாபகம் இருக்கா? மெதுவா யோசிச்சுச் சொல்லுங்க!”, என்றிட சற்று நேரம் அமைதியாக இருந்தவன்
“உங்க அத்தையும், எங்க அத்தையும் அதான் உங்க அம்மாவும் ஒன்னா படிக்கும்போது ஏதோ பிரச்சனையாம். அதுல உங்க அத்தை பண்ணத் தப்புத் தெரியாம, அபி அத்தைதான் பண்ணிருச்சுன்னு உடனே கல்யாணம் பண்ணிக் குடுத்திட்டதா சொல்லுவாங்க. நீ பிறந்து கொஞ்ச நாளிருக்கும். ஏதோ திரும்பவும் பிரச்சனையில தற்கொலை பண்ணிக்கிட்டு அத்தை செத்துட்டதா கேள்விப்பட்டிருக்கேன்.”, என்றவன்,
“இதெல்லாம் அக்கம் பக்கத்துல உள்ளவங்க அரசல்புரசலா பேசிக்கறதை வச்சி நானா யூகிச்சுத் தெரிஞ்சிட்டது. ஆனா உண்மையா என்ன நடந்ததுன்னு எனக்கு சரியாத் தெரியாது. மாறன் என்னையவிட பெரியவன்னால அவனுக்கு எதுனா தெரிஞ்சிருக்கலாம்”, என திருவும் தனது நிலையை வாணியிடம் கூறியிருந்தான்.
அதற்குமேல் எதுவும் பெண்ணுக்குக் கேட்கப் பிடிக்கவில்லை. பொதுவான படிப்பு விசயங்களைப் பேசிவிட்டு, என்ன திடீர்னு இவ்ளோதூரம் மெனக்கெட்டு என்னைப் பார்க்க வந்திருக்கீங்க எனும் கேள்விக்கு வாணி வர, “உன் கல்யாணத்தை நிறுத்தனதுக்கு எனக்கு ஒரு தேங்க்ஸ்கூட சொல்லவே இல்லையே!”, என வருத்தத்தோடு திருமாறன் கேட்க, அதிர்ந்து போனாள் வாணி.
எல்லாம் அறிந்திருந்தவள், திருவின் பேச்சில் குழப்பத்தோடு சற்றே அமைதியானாள்.
நண்பர்களைக் கொண்டு, அருகே இருந்த ஊருக்குச் சென்று காயின் போனில் துப்பு கொடுத்து திருமணத்தை நிறுத்தியதாக திருமாறன் கூறியதைக் கேட்டதும், அதனை பொறுமையாகக் கேட்டுக் கொண்டவள், காவல்துறை அதிகாரியை வேந்தனோடு தான் சென்று சந்தித்தபோது, அவர் தன்னிடம் கேட்டது நினைவில் வந்திட, ‘ஓஹ் என்னோட அந்த நலன் விரும்பி நீங்கதானா!’, என ஆச்சர்யத்தோடு கேட்டுக் கொண்டாள்.
விசயம் அறிந்து கொண்டதோடு, ‘உடனே ஏன் என்னைத் தேடி வரவில்லை’ என்று திருவிடம் கேட்டாள்.
“அப்பவே தேடி வந்தா, நாந்தான் ஏதோ பண்ணிருக்கேன்னு வீட்ல உள்ளவங்களுக்குத் தெரிஞ்சிரும்னுதான் வரலை”
“என்னை அங்க வந்து கூட்டிட்டுப் போனவங்களைப் பத்தி எதாவது தெரியுமா? அவங்க எப்டி அந்நேரத்துக்கு வந்தாங்கன்னு யோசிச்சீங்களா?” வாணி கேட்க
“யாரு உன்னைக் கூட்டிட்டுப்போனா? நீயாதான சென்னைக்கு போயிருப்ப?”
“நீங்க அப்ப எங்க போயிருந்தீங்க?”
“போலீஸெல்லாம் வீட்டுப்பக்கமா வந்து போயிட்டு இருக்கவும், நாங்க பண்ணது எதுவும் தெரிஞ்சா வம்பா போயிரும்னு பயலுககூட, கிளம்பிப் போயிட்டேன்”, என்றவனிடம் அதற்குமேல் பேச விரும்பாது, விடைபெற எண்ணியவள், சென்னைக்கு வந்தமைக்கான காரணத்தைப் பற்றிக் கேட்க, திருவின் எதிர்பார்ப்பும் பெண்ணுக்குத் தெரிய வந்தது.
“நீ நடந்தது எதுவும் மனசுல வச்சிக்காத எழிலு. நான் அம்மா, அப்பாகிட்ட எப்டியாது பேசி, நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிருவேன். உனக்கு இன்னும் இரண்டு வருச படிப்புதானே. அது முடிஞ்சதும் நாம கல்யாணம் பண்ணிக்கலாம். அவன் இனி நம்ம ஊருப்பக்கமா வருவான்னு எனக்குத் தோணலை. நாம அங்கேயே இருந்துக்கலாம்.” குண்டைத் தூக்கி எறிந்திட, பெண் திகைத்துப் போயிருந்தாள்.
சுற்றி வளைக்காது தனது நிலையைக் கூறியிருந்தாள்.
“சாரி அத்தான். உங்கம்மாவுக்கு ஏனோ என்னைக் கண்டாலே ஆகாது. அதனால நீங்க அத்தை பாக்கற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கங்க!”, என்றவள், “நான் வேற ஒருத்தவங்களைக் கல்யாணம் பண்ணிக்கறதா பிராமிஸ் பண்ணிட்டேன்” எனத் தன்மையாக மறுத்துவிட்டாள் வாணி,
அதற்குமேல் திருமாறனும், அவளது வருங்கால மாப்பிள்ளை பற்றி வினவ, உங்க நம்பர் எங்கிட்ட இருக்கு. அதனால கண்டிப்பா என்னோட கல்யாணத்துக்கு கூப்பிடறேன் என்றதோடு, வேறு எதையும் கூறாமல் சமாளித்திருந்தாள்.
இனி வாணியை வற்புறுத்துவதில் பலனில்லை என சற்று நேரத்தில் தன்னை சுதாரித்துக் கொண்டு, வந்த வழியே கிளம்பியிருந்தான் திருமாறன்.
திருமாறன் விசயம் தெரிந்தால் வேந்தனது நிலை என்ன?
……………..
நிதானம்
தரும்
வெகுமானம்
பேரின்பம்,
காரியசித்தி,
நிம்மதி!
………………