am8

am8

ஆசை முகம் 8

காலையிலிருந்தே வேந்தனுக்கு நல்ல அலைச்சல்.

ஒவ்வொரு அலுவலகத்திற்கும் சென்று நேரில் பார்வையிட்டு, அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தரும் நகரின் பரபரப்பான பகுதியில் இயங்கும் தங்களது பைலட் அலுவலத்திற்கு வந்தவன், இன்னும் ஒரு கிளை மட்டுமே பாக்கி என்பதால் நிதானமாக வேலையை முடித்துக் கொண்டு கிளம்பினான்.

இரண்டு நாள்களாகவே அதிக வேலைப் பளு.

மனம் ஏதோ அமைதிக்காக அலைய, ஆனாலும் இன்னும் பணிகள் தனக்காக காத்துக்கிடப்பதை பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம்.

இன்னொரு மூலையில இருந்த வேறு பைலட் அலுவலகத்திற்கு கிளம்ப எத்தனித்து லிஃடிற்குள் நுழைந்தவனுக்கு, அவன் நின்றிருந்த இடம் தேடி வந்தது தேவதையின் தரிசனம்.

மனமெங்கும் குற்றாலச் சாரல்!

நிறைவில்லா நிறைவு!

லிஃடிற்குள் நுழைந்தவளையே பார்த்திருந்தவனுக்குள் இதம் வந்து சேர்ந்திருந்தது. ‘இவ இங்க எப்டி?’ என மனதில் ஓடினாலும், ‘என்ன விசேசம்? ஒரே அமர்க்களமா இருக்கா!’ என ஆண்மனம் யோசித்தது. அவனையும் மீறி இதழில் மென்னகையும் வந்தமர்ந்திருந்தது.

பதற்றத்தோடு இருந்தவளைப் பார்த்தபடியே இருந்தான் வேந்தன்.

‘என்னவாம்!’ இப்படித்தான் அவனுக்கு கேட்கத் தோன்றியது.

நீண்ட நாள்கள் நினைவோடு வாழ்ந்தவளை, நிஜத்திலேயே அப்டி எண்ணத் தோன்றிய நெருங்கிய மனதின் உரிமையான வெளிப்பாடு அது!

அவளோடு நுழைந்த கூட்டத்தின் சலசலப்பில் கேட்ட விசயத்தை எடுத்துக் கொண்டு, தானாகவே யூகித்துப் புரிந்து கொள்ளும்முன், அவகாசம் தராமலேயே தரைத்தளம் வந்திருந்தது.

ஏதோ கொண்டாட்டம் என்பது மட்டும் வேந்தனுக்குப் புரிந்தது.

சுற்றிலும் நின்றவர்களைக் கண்டதும், ‘தனது மனம் கொய்தவளும் இவர்களோடா…!’ எனும் தவிர்க்க இயலாத கேள்வியும் எழுந்திருந்தது.

ட்ரெண்டி உடையில் பலவித கெட்டப்! 

தந்தையின் உழைப்பில் தயாளனாகக் காட்டிக் கொள்ள விரும்புகின்ற மனதோடு அனைத்திற்கும் தயாரான நிலையில் இருந்தது தெரிந்தது.

ஆணது உள்ளும் புறமும் சொல்லித் தெரிய வேண்டியதில்லையே!

தனது கல்லூரிக் காலத்தை நினைவுறுத்தினாலும் இதுபோலெல்லாம் அப்போது கிடையாது என்பதும் புரிந்தது.

அதே நேரம் எழில்வாணியும் வேந்தனைக் கவனித்துவிட்டாள்.

வாணியின் முகம் பதற்றத்தை உதறத் துவங்கியிருந்தது.

முகம் தவுசண்ட் வாட்சை விட பிரகாசமானது போன்றிருந்தது.

கடற்கரையில் கண்டபிறகு இன்றுதான் நேரில் சந்திக்கிறாள்.

மனம் முழுக்க தன்னோடு லிப்டில் ஏறியவர்களை எண்ணி, ‘இவங்களையெல்லாம் எப்டி சமாளிச்சு, தனியா கிளம்பப் போறேனோ தெரியலையே!’, என யோசித்தபடியே நின்றிருந்தவளுக்கு வேந்தனைக் கண்டதும் உண்டான உணர்வில் நிம்மதிப் பெருமூச்சு ஒன்று வந்தது.

சுற்றிலும் இருந்த ஆடவர்களின் எண்ணத்தை மாற்ற நிச்சயம் இவர் தனக்கு பயன்படுவார் என ஆணித்தரமாகச் சொன்னது மனம்.

புதியவன் என்றே தோன்றாததால் உண்டான உணர்விது.

வேந்தனைக் கண்டது முதலே தைரியமாக உணர்ந்தாள்.

உள்ளுணர்வு ஏனோ அவனைத் தவறாக கணிக்கவில்லை.

வேந்தனைக் கண்ட நிமிடங்களில், தயக்கமோ, பயமோ எதுவும் இல்லை.  ஒரு உரிமை உணர்வு. அத்தோடு சாதகமாய் மட்டுமே எதையும் எண்ண முடிந்த உள்ளுணர்வால் உண்டான ஒருவித மனநிலை.

ஆனால் இன்னதென்று பெண்ணால் யூகிக்க முடியவில்லை.

பிரித்தறிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தமும் அப்போது அவளுக்கு இருக்கவில்லை.

வாயிலின் அருகே நின்றவள் லிப்ட் நின்று கதவு திறந்ததும் இறங்கியதுமே, ‘எங்கூட வா, உன்னை நான் ட்ராப் பண்றேன்’, என சீனியர்கள் சிலர் முன்வர, ஏனையவர்கள் இறங்கி வேடிக்கை பார்த்தபடியே சூழ்ந்திருக்க, அந்த இடத்தை விட்டு வெளிவர வழி தேடினாள் வாணி.

‘யாருடன் சென்றாலும் பின்னாளில் துன்பமே’, மனம் சொன்னது.

அதன்பின் லிப்டை விட்டு வெளியே வந்தவன் கவனித்தும், கவனிக்காததுபோல அவ்விடம்விட்டு அகன்றான்.

வேந்தன் செல்வதைப் பார்த்தவளுக்கு அவனை விட்டால் இன்று தனது நிலை சிரமம் என உணர்ந்திருந்தமையால், ‘ஐயோ போறாங்களே!’ என பதறியவள் கூட்டத்தை விட்டு விலக்கிக் கொண்டு, “எங்க அங்கிள் போறாங்க!”, என்றவாறே விடைபெறும் விதமாய் வலக்கையை மேலே தூக்கிக் காட்டியபடியே வெளியே வந்திருந்தாள்.

நிதானிக்காமல் நடந்து செல்பவனை நோக்கி அழைத்தாள்.

மாமா என அழைக்க ஆசைதான்.  ஆனால் இங்கு அது கேலியாகிவிடும் என அதையே அங்கிளாக்கியிருந்தது பெண்.

நான்கு எட்டுகள் எடுத்து வைத்தபோது, “அங்கிள்”, என்ற அழைப்பு

‘யாரோ, யாரையோ அழைக்கிறார்கள்’, என எண்ணி வேந்தன் அடுத்த அடியை எடுத்து வைக்க

“அங்கிள்ள்ள்.. உங்களத்தான்!”, என வேந்தனருகே சத்தம் கேட்டுத் திரும்பினான்.

அவளது அழைப்பில் இதயம் ஒரு கனம் துடிக்க மறந்தது.

இளநகையோடு தன்னை நோக்கி வந்து கொண்டிருந்தவளைக் கண்டதும், அவளது சிரிப்பில் சிதைந்தபடியே ‘நான் அங்கிளா…’ இதயத் துடிப்பின் ஓசை பலமானது.

அவள் அழைத்தது பிடித்திருந்தாலும், சொன்ன முறைமை ஏனோ மனதில் முரண்டியது.

ஆசை முகத்தவளை தனதருகே கண்டதும், மனவோட்டங்கள் பின்னே சென்றிட, உள்ளம் மகிழ்ச்சியை முன்னெடுத்திருந்தது. 

ஆனாலும் குழப்பம்!  செய்கையால் என்னையா! என அவளிடம் கேட்க, ஆமாம்! என சிரிப்போடு இன்னும் அருகில் வந்தவளை, ‘மித்ராவோட ஃபிரண்டோ! அதுதான் பாத்த மாதிரியிருந்ததோ!  ஆனா அவளைப் போல சாயல்ல இதுவரை சென்னையில யாரையும் பாத்ததில்லையே!’, என ஆராய்ச்சியோடு யோசித்தான்.

தேங்கி நின்றிருந்த வேந்தனிடம், “நடந்திட்டே பேசலாமா?”, எனக் கேட்டபடியே, கையை அதற்கு ஏதுவாக முன்னே காட்டியபடி நடையை எட்டிப் போட்டாள்.

அதில் சிறுபிள்ளைத்தனம் இல்லை.  முதிர்வான செயல்.

தலையசைத்தபடியே யோசனையுடன் நடந்தபடியே, பின்னே நின்றவர்களைக் கவனித்தான் வேந்தன்.

அவளுடன் வந்தவர்கள் தங்களைக் கவனித்தபடியே நிற்பதைக் கண்டதும் ஏதோ புரிந்தாலும், மனதில் நிற்கவில்லை.

“நீங்க இங்கதானா! இல்லை வேற ஊரா?”, தைரியமாக பெண் கேட்டது.

சுற்றி வளைக்காமல் விசயத்திற்கு வந்தது, பிடித்திருந்தது.

தைரியம் என்பதைவிட ஏதோ பொறுப்புணர்வால்தானே வாயைத் திறக்க! என்ன பேச! எப்படித் துவங்க! என யோசித்துக் கொண்டிருக்கிறான்.

‘தன்வீட்டுப் பெண்ணை இப்படி நடத்த இயலுமா!’, என பெண்ணது பக்கமும் யோசித்ததால் எழுந்த தயக்கம் அது!

அன்றி அதற்கு வேறு கற்பிதம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

அவளுக்கு வேந்தன் யார்? என்ன? எதுவும் இதுவரை தெரியவில்லை என்பதைவிட, அவளும் தன்னைத் தெரிந்து கொள்ள எண்ணியதை அறிந்ததும், இன்னும் நெருங்கிய உணர்வு.

“லாஸ்ட் ஃபிப்டீன் இயர்ஸா இங்கதான்!  ஏன்?”, அவ்வளவே வேந்தனால் பேச முடிந்தது.

“இல்ல உங்களை அன்னிக்கு பீச்ல பாத்தப்போ, ஏற்கனவே எங்கோ பாத்த மாதிரி இருந்தது!  ஒரு வேளை எங்க ஊர் பக்கமோனு நினைச்சுக் கேட்டேன்!”, அவள் கையை ஆட்டி, ஆட்டி பேசியதோடு,  கண்களும் அவளது உணர்வுகளுக்கு ஏற்ற பாவனை காட்டிட, வாணியின் செயல் அவனுக்குள் நடனத்தை நினைவுறுத்தியது.

வயதை, தனது தோற்றத்தைக் கொண்டு பிறர் இருபத்தேழு என அனைவரும் மதித்திட, எப்படி அங்கிள் என்று அழைத்தாள் என்கிற கேள்வி வேந்தனது மனதைக் குடைந்தபடியே இருந்தது.

‘அங்கிள் என அழைக்கும்படியான தோற்றத்திலா நான் இருக்கிறேன்’ என மனம் துவண்டது.

உண்மையில் பெண் யாரோடும் இந்தளவு பேசியிருக்க மாட்டாள்.

முதன்முறையாக காட்டாற்று வெள்ளம்போல வேந்தனைக் கண்டதும் அவளைமீறி வந்திருந்தது.

பெண்ணது பதிலைக் கேட்டதும், வேந்தனது அடிநெஞ்சின் ஆழம்வரை ஏதோ மின்சாரம் பாய்ந்த உணர்வு.

எப்படி சாத்தியம்!

தனக்குத் தெரிந்ததால் வந்த உணர்வைப்போல, தன்னை இதுவரை அறியாதவளுக்கு தன்னைப் பற்றிய உணர்வு வந்தது என்று!

“நீ.. நீங்க எந்த ஊர்!” தயக்கத்தோடு வேந்தன்

“திண்டிவனம் பக்கம் கிராமம்!”

‘அப்ப அவளுக்கும், இவளுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை போலயே!’, மனம் சொன்னது.

“ஓஹ்!”, என்றவன் துணிச்சலோடு, ‘இங்கே எங்க?’ எனத் துவங்கி, அடுத்தடுத்து தனக்கு வேண்டியவற்றை நடந்தவாறே கேட்டுத் தெரிந்து கொண்டான்.

கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறாள்.  கணிதவியல் துறை. கல்லூரியின் பெயர். தற்போது வரவேற்பு கொண்டாட்டத்திற்கான இங்கு வந்திருக்கிறாள்.

பெண்ணது வயதை யூகித்தவனுக்கு, தனது அக்காளின் பிள்ளைகளைவிட வயதில் சிறியவள் என்பதும் உரைத்தது.

மாமா என அவர்களின் உறவுமுறை சொல்லி அழைப்பையே, இவள் அங்கிள் என்றிருக்கிறாள் என நல்ல மனம் சாடியது.

ஆனாலும் நடப்பிற்கு வந்தவன், இறுதிவரை பெயர் என்னவென்று தெரியாமலேயே சென்றால் நன்றாகவா இருக்கும். 

அதையும் துணிந்து கேட்டாயிற்று.

அவளை முதன் முறையாகக் கண்டதும் எழுந்த திகைப்பைக் காட்டிலும் அதிகமாயிருந்தது! பெண்ணது பெயரைக் கேட்டதும்!

பெண் கூறியதும் வேந்தனை மீறி, “எழில்வாணியா?”

“ம்ஹ்ம்!”, என தலையசைத்து ஆமோதித்தவளின் காதிலிருந்த கம்மலின் கதகளி ஆட்டம், வேந்தனது முழு உருவத்தையும் ஆட்டம் காணச் செய்தது.

உணர்வுகளின் ஆரவாரம்!

‘வயசானாலும் இளமையும், அழகும் இன்னும் உன்னைவிட்டு துளிகூடக் குறையலடா வேந்தா!‘, என நீலாம்பரி பண்பேற்றத்தில்(மாடுலேசன்) மனதிற்குள் அவனாகவே சொல்லிக் கொண்டான்.

“எதுக்கு, ஏன் இவ்ளோ ஷாக்’!”, என்றிட்டவளை

‘ஷாக்கா…! எனக்கா! அப்டி ஒன்னும் இல்லையே!’, என்பது போல தோள்களைத் தூக்கி, தலையை அசைத்து மறுத்துச் சமாளித்தான் வேந்தன்.

“அப்ப எங்கிட்டகூட என்னனு சொல்ல மாட்டீங்க!”, என்ற அவளின் உரிமைக் கேள்வியை ரசித்தபடியே, “சரி, என்னை ஏன் அங்கிள்னு கூப்டீங்கனு தெரிஞ்சிக்கலாமா?”

கோபமில்லை.  ஆனால் அதில் வருத்தமிருந்ததோ!

மனதைக் குடைந்திருந்ததைக் கேட்டறியாது போனால், நிச்சயம் மண்டை வெடித்தாலும் ஆச்சர்யமில்லை.

ஆனாலும் வயது வித்தியாசம் இருப்பதை உணர்ந்த மனம், ‘வேற…! எப்டிக் கூப்டறதாம்! சித்தப்பா, தாத்தானு கூப்பிடலையேன்னு சந்தோசப்படு!’, என்றது.

“ரொம்ப பழகின முகம் மாதிரி தெரிஞ்சது.  சாருனு கூப்பிட்டா ரொம்ப தூரமா தோணினது. அவங்கட்ட இருந்து தப்பிச்சு வரணும்னா, வேற என்ன சொல்லலாம்னு யோசிச்சேன்.  மாமாதான் மனசுக்குள்ள டக்குனு தோணுச்சு!  அதை அவங்க முன்ன கூப்பிட ஒரு மாதிரியா இருந்தது! அதான்! இந்த அங்கிள்!”, என வெட்கத்தோடு சிரித்தவளின் காரணத்தைக் கேட்டதும், இன்னும் நெருங்கிய உணர்வு.

எழில்வாணிக்காக காத்திருந்தவர்களை பார்வையாலேயே அளந்திருந்தான்.  அதில்  பெரும்பாலும் ஆண்களே.

ஏனோ வேந்தனுக்குப் பிடிக்கவில்லை.

தெரிந்தும் தெரியாததுபோல, “எங்க வீடு?”

“இங்க ஹாஸ்டல்தான்!” என்றவள் பெயர் சொன்னாள்.

அறியாததுபோல, “ஓஹ்… எப்டிப் போவீங்க!”, என்றான்.

“பஸ்ல போயிக்குவேன்!”

அதற்குமேல் முதல் நாளிலேயே அதிகம் வேண்டாம் என யோசித்து, “எதாவது ஹெல்ப் தேவைன்னா காண்டாக்ட் பண்ணுங்க!”, என தனது பிஸினெஸ் கார்டை எடுத்து அவளிடம் நீட்டிக் கூற

தயங்காது உடனே பெற்றுக் கொண்டவளின் பார்வை அதில் போக, அவளையே பார்த்தபடியே வந்தான் வேந்தன்.

கண், மயில் தோகையைப் போல விரிந்ததை ஆசையோடு பார்த்திருக்க, இப்போது ஷாக்காவது பெண்ணது முறையாயிற்று.

வாயை ஆவெனத் திறந்து கைகள் இரண்டையும் உதறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவள், ‘அதெப்படி இரண்டு பேருக்கும் ஒன்னுபோல பேருக்கு முதல்ல எழில்னு’, எனக் கேட்டபடியே குதூகலித்தது பெண்.

அதே குதூகலம் வேந்தனையும் தொற்றிக் கொண்டது.

எழில்வேந்தன் எனும் வேந்தனது பெயரைக் கண்டதும் உண்டானதில் எழுந்த மலர்ச்சி அது.

“அப்ப இதுதான் அந்த ஷாக்கா!’, என்றாள்.

முகமெல்லாம் பெண்ணுக்கு அத்தனை சந்தோசம்!  அது வேந்தனையும் தொற்றிக் கொண்டது.

தலையை அசைத்து மகிழ்ச்சியோடு ஆமோதித்தான்.

வளர்ந்தாலும் இன்னும் சிறுபிள்ளைதான் அவள் என்பது புரிந்தது.

“ஒரு சின்ன சஜஜன்!” என்றாள்.

‘இப்பத்தான சின்னப் புள்ளைனு நினைச்சோம்.  அதுக்குள்ள சஜஜனா.. டக்குனு பெரியாளாகிட்டா!’, என அவள் கூறப் போவதை கேட்க ஆயத்தமானான்.

மனம் என்னவோ எனும் பதட்டத்திற்கு சென்றிட, “என்ன?”

“இல்லஅஅ நான் உங்களை விட நிச்சயமா சின்னவளாதான் இருப்பேன்.  இப்டி வாங்க, போங்கலாம் வேணாமே! வாணினே பேர் சொல்லிக் கூப்பிடுங்க!”, கெஞ்சலோ…!

அதுவும் அத்தனை அழகு!

‘ஒரே நாள்ல ரொம்பத் திகட்டத் திகட்ட சந்தோசத்தைத் தரியே ஆண்டவா!  இது இப்டியே தொடரணும்!’, மனம் வேண்டுதலை வைத்தது.

இழந்த வேதனை வேந்தனை அவ்வாறு வேண்டச் சொன்னது.

“ம்ஹ்ம்”, என தலையை அசைத்து ஆமோதித்து சிரித்தபடியே அதற்குமேல் என்ன பேச எனப் புரியாமல் அமைதியாகவே வெளியே வந்திருந்தார்கள்.

அருகே பேருந்து நிறுத்தம் எங்கிருக்கிறது என்றவளிடம், “நீங்… நீ இப்போதான் சென்னைக்கு வந்திருக்கியா?”, என்றதும் அதை ஆமோதித்தவளிடம் வழி கூறியபின்

“போயிருவதான!”, என அக்கறையோடு கேட்ட வேந்தனை உண்மையில் பெண்ணுக்கு அவ்வளவு பிடித்திருந்தது.

தான் பேசியதைக் கொண்டு, என்னோடு வா என்றழைக்கவில்லை. ஆனால் ஊருக்குப் புதிது என்றதும் சரியாகச் சென்று விடுவாளா? என்கிற பதைபதைப்பது வந்ததும் கேட்டுவிட்டான்.

“இல்லைனா கேப் எதாவது அரேன்ஞ் பண்ணவா?”, என்றவனை மறுத்தவள்,

“இல்லை நான் போயிருவேன்”, என்றாள்.

பொறுப்புணர்வோடு வேந்தன் மீண்டும் கேட்டதும் அவனது தயக்கம் கண்டு, “வேணுனா நான் போயிட்டு உங்களுக்கு டெக்ஸ்ட் பண்றேன்!”, என கையில் இருந்த அவனது பிஸினெஸ் கார்டைத் தூக்கிக் காட்டினாள்.

கட்டைவிரலைத் தூக்கிக் காண்பித்தவனிடம், சிரித்தபடியே “ப்பைய் மாமூ!”, என அகன்றவள் தயங்கி  வேந்தனை நோக்கித் திரும்ப

‘என்ன’ என செய்கையால் கேட்டவனிடம்

“இந்த அங்கிள்..! மாமூ உங்களுக்கு கஷ்டமா இருக்கா?”, முகம் மாறுதலோடு கேட்டாள்.

மனதில் வலி!

“இட்ஸ் யுவர் விஷ்!”

வேந்தனுக்குமே அவளது அழைக்கும் முறைமை மட்டுமல்லாது, அந்த பண்பேற்றம்(மாடுலேசன்) பிடித்திருந்தது.

“தாங்க்ஸ்!”, என்றபடியே மீண்டும் அதே பண்பேற்றத்தில் நன்றியோடு மாமூவை உச்சரித்துவிட்டு விடைபெற்றிருந்தாள்.

‘நம்மதான் ஸ்லோ போல! நம்ம ஆளு எள்ளுன்னு எண்ணையா இருக்கா!’, என அதே மகிழ்ச்சியோடு கிளம்பியிருந்தான் வேந்தன்.

அந்த மாமூவில் வேந்தனது ஏக்கங்கள் அனைத்தும் கரைந்தாற்போலிருந்தது. மாறாக அவளது அழைப்பில் ஓய்ந்த மனம் தற்போது உற்சாகத்தில் இருந்தது.

வருத்தம் இனி எழாது! 

எப்படி இவ்வளவு தைரியம் இன்று தனக்கு வந்தது என்பதை யோசித்தபடியே விடுதிக்குக் கிளம்பினாள் வாணி.

தாமதிக்காது வேந்தனும் கிளம்பியிருந்தான்.

வேந்தனது இன்றைய வளர்ச்சி என்பது, சிதறவிடாத ஒழுக்கமான செயல், பண்பு, எண்ணம் இவற்றால் விழைந்தது.

அதை எதற்காகவும், யாருக்காவும் விரையம் செய்திட விரும்பமாட்டான்.

அதேசமயம் மற்றவர்கள் எக்கேடோ கெடட்டும் எனும் மனநிலையும் இல்லாதவன்.

ஆகையினால் வாணியின் நிலையையும் யோசித்ததால் எழுந்த தயக்கமே இதுவரை எழுந்த தாமதங்களுக்கான காரணம்.

ஆண் சிங்கத்தையொத்த மனநிலை அது.

சீர்தூக்கி இருபக்கமும் பார்ப்பது.  இது அனைவருக்கும் எளிதாக வராது.

 

எழிலாய்

எழிலெனும் நாமம்

தாங்கி

வருவாய் என

எதிர்பாராதிருந்தவனுக்குள்

எண்ணிலடங்கா

ஆச்சர்யங்கள்

தந்திட்டாய்

ஆசை முகமே!

 

அரணாய்

எழிலெனும் நாமம்

தாங்கி

ஆச்சர்யங்கள்

தந்ததோடு

ஆளரவம் இன்றி

என்னுள் உயர்வாய்

எழுந்திட்ட

ஆண் சிங்கமே!

/////////

Leave a Reply

error: Content is protected !!