Antha Maalai Pozhuthil-4

அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 4

அந்த மாலைப் பொழுதில் அபிநயா வீட்டிற்குள் நுழைய, எதிர்பாராத விதமாக அவள் மேல் விழுந்த நீரில் சற்று நடுங்கினாள். தன் கைகளில் உள்ள புத்தகங்கள் மேலும்  நீரில் நனையாமல் இருக்க, அவள் கைகளிலிருந்த பையைத் தூக்கி எறிந்தாள்.

“ஏம்மா! கல்லூரி கடைசி நாளுன்னு சொன்ன… நேரமாகமுன்னு சொன்ன… ஆனால், கண்டவனோடு வரேன்னு சொல்லலை.” என்று அபிநயாவின் தந்தை வெளியே ஜீப்பிலிருந்த பசுபதியை பார்த்தபடி காட்டமாகக் கேட்க, அந்த ‘கண்டவன்…’ என்ற சொல்லில் அபிநயாவின் முகம் சுண்டைக் காயாக சுருங்கியது.

 

பசுபதியின் முகத்தில், ஓர் ஏளன புன்னகை குடிகொண்டது.  ‘அபிநயாவுக்கு நான் கண்டவனா?’ அவன் தன் மாமனை நக்கலாகப் பார்க்க, அபிநயா நின்ற கோலம் அவனை கடுப்புற செய்தது.

 

வேகமாக ஜீப்பை விட்டு இறங்கியவன், “அத்தை விரசலா துண்டு எடுத்துட்டு வாங்க.” என்று அபிநயாவின் தாய் பார்வதியிடம் அதிகாரமாக கூறி தன் மாமனை வெட்டவா, குத்தவா என்று பார்த்து வைத்தான் பசுபதி.

 

நீரோடு நின்று  கொண்டிருந்த மகளைப் பார்வதி பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு, துண்டை எடுக்க உள்ளே செல்ல எத்தனிக்க, “பார்வதி! இங்கனயே நில்! புறவாசல் போய், அவளைத் தலை முழுகிட்டு வர சொல்லு.” என்று கூறினார் ராமசுவாமி.

 

“அம்முக்குட்டி… பாவம்! காலைலேருந்து படிச்சிட்டு அசதியா வரா. அவளை இந்த நேரம் படுத்தாதீக. முதல்ல அவளுக்கு காபி தண்ணி குடுங்க அத்தை.” என்று பசுபதியின் அதிகாரம் மாமா என்ற சொல்லை விடுத்து தூள் பறந்தது.

 

‘இவுக பேச்சு நீண்டு கொண்டுதேன் போகும்.’ என்று அபிநயாவின் மனம் உறுதியாகக் கூற, அங்கிருந்த திண்டில் அமர்ந்தாள்.

 

‘அத்தை என்ன நொத்தை? இவனுக்கு நான் சொந்தமா இல்லை எம் பொஞ்சாதி சொந்தமா? மாமென் உறவில்லாம ராக்கெட்டில் வந்தாளா இந்த அத்தை?’ ராமசுவாமியின் கோபம்  ராக்கெட்டை விட அதிவேகமாக விர்ரென்று ஏறியது

 

“அத்தை…” என்று மீண்டும் பசுபதி அழைக்க, ‘உரலுக்கு ஒரு பக்கம் அடி. இந்த மாமென் மருமகனுக்கு இடையில் மத்தளம் மாதிரி எனக்கு ரெண்டு பக்கமும் இடி.’ என்று பார்வதி பசுபதியை சோகமாகப் பார்த்தார்.

 

‘அடியோ? இடியோ? அதெல்லாம் கண்டு கொள்வேனா?’ என்று மீண்டும் ஆரம்பித்தான் பசுபதி.

 

“அம்முக்குட்டிக்கு…” என்று பசுபதி அழைக்க, “அபிநயா… என் மக! எனக்கு அவ மேல இல்லாத அக்கறையா?” என்று கேட்டார் ராமசுவாமி.

 

“அந்த லட்சணத்தைத்தேன் நான் பாக்குறேன்ல? அக்கறை இருக்கறவக தான் இப்படி பச்ச புள்ளை மேல வந்ததும் வராததும் ஜன்னி வர மாதிரி  தண்ணியை ஊதுவாகலா அத்தை?” என்று  மாமனை பார்த்தப்படி அத்தை என்ற சொல்லோடு சீறினான் பசுபதி.

 

‘பச்சை புள்ளையா?  நானா? அத்தான்! இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.’ என்பது போல் தன் அத்தானை பார்த்தாள் அபிநயா. அந்த வெயிலுக்கு அந்த குளிர் தண்ணீர் சற்று சுகமாக இருப்பது போல் இருந்தது அவள் செய்கை.

 

‘அப்படியா அம்முக்குட்டி?’ என்பது போல் கண்களால் கேள்வி கேட்டு கொண்டே தலை அசைத்தான் பசுபதி. ‘ஆம்!’ அவள் குழந்தை பாவத்தோடு மேலும் கீழும் வேகமாகத் தலை அசைக்க, பசுபதி, அபிநயாவின் மௌன பாஷையைப் புரிந்து கொண்டு வந்த சிரிப்பை அடக்க அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தார் பார்வதி.

 

‘இவர்கள் நம்மை கேலி செய்கிறார்களோ?’ என்ற எண்ணம் ராமசாமிக்கு வலு பெற, “அபிநயா! இவன் உறவு நமக்கு வேண்டாம். இவனை தலை முழுக்கிட்டு உள்ள வா!” என்று கறாராகக் கூறினார்.

 

மீண்டும் தலை முழுகல் என்ற வார்த்தை எரிச்சலை தர, “அப்பா… என்னை அத்தானுக்கு கல்யாணம் பண்ணி குடுகீகளோ? இல்லையோ? அது உங்க விருப்பம். நான் உங்க பேச்சை மீற மாட்டேன். ஆனால், பசுபதி அத்தான் எனக்கு உறவு தான். நீங்களும், அத்தையும் சண்டை போட்டுக்கிட்டா, அது உங்க பிரச்சனை. அதுக்கெல்லாம், நாங்க எங்க உறவை முறிச்சிக்க முடியாது. எப்பவும், அத்தான் எனக்கு அத்தான் தான். நான் அவுகளுக்கு மாமா பொண்ணு தான்.” என்று அவள் உறுதியாகக் கூறினாள்.

 

“நீங்க பேசுறது நியாயம் இல்லை அப்பா.” என்று தன் தந்தையை அதட்டும் விதமாக அபிநயா கூற, “என் அம்முக்குட்டி எப்பவும் நியாயம்தேன் அத்தை.” என்று பசுபதி தன் மீசையை முறுக்கிக் கொண்டு, வேஷ்டியை மடக்கிக்கொண்டும் கூறினான் பசுபதி.

“எது அபிநயா நியாயம்? என் மேல தப்பு இருக்கானு உங்க அத்தானை  ஒரு நொடி யோசிக்க சொல்லு. அப்ப, தெரியும் சேதி!  உங்க அத்தானை அவுக ஆத்தாவை பத்தி தெரிஞ்சிக்க சொல்லு. அவுக அப்பன் பண்ண தப்பு என்னனு தெரிஞ்சிக்க சொல்லு. தப்பான புருசனுக்கு வக்காலத்து வாங்கிட்டு புருசனையும் இழந்துட்டு, இந்த தம்பியையும் உயிரோட இழந்துட்டு நிக்கா இவன் ஆத்தா. மன்னிப்பு கேட்கணும். தம்பி! என் மேல தான் தப்புன்னு மன்னிப்பு கேட்கணும் இவன் ஆத்தா.” என்று ராமசாமி கர்ஜிக்க, பசுபதியின் கை முஷ்டி இறுகி அவன் மீசை துடித்தது.

 

ஒல்லியான தேகம் கொண்ட பார்வதிக்கு, பசுபதியின் கோபம் அறிந்து அவர் கால்கள் நடுங்கியது.

 

‘ஏலே! உனக்கு நான் மாமென்லே. வயசு எனக்கு அனுபவத்தை மட்டுந்தேன் கொடுத்திருக்கு. முதுமையை இல்லை.’ என்பவர் போல் கட்டுமஸ்தான தோளோடு முறுக்கிக் கொண்டு நின்றார் ராமசாமி.

 

“எங்க ஆத்தா மன்னிப்பு கேட்கணுமா? அட… அக்கான்னு நீர் காலில் விழணும். வெட்டி சாச்சிருவேன் உம்மை.” என்று நெஞ்சை நிமர்த்தினான் பசுபதி.

ஊர் மக்கள், இவர்கள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் என அனைவரும் மாமன் மருமகன்  சத்தம் கேட்டு திரும்பி பார்த்தனர்.  ‘சம்பவம் எதுவும் நடக்காது. இவர்கள் எப்படியும் ஒருவர் ஒருவரை வெட்டி சாய்த்துக் கொள்ளப்போவதில்லை.’ என்று உறுதியாகத் தெரிந்ததால், மீண்டும் அவர்கள் வேலையில் மூழ்கினர்.

 

“என் ஆத்தாவை பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்கீக?  மன்னிப்பு கேட்கணுமாமில்லை மன்னிப்பு. நான் அம்முக்குட்டியை கல்யாணம் பண்ண யார் அனுமதியும் தேவை இல்லை. இந்த நிமிஷம் ஊரை கூட்டி தாலி கட்டுவேன். பாக்கரீயளா? எவனும் எனக்கு தேவை இல்லை.” என்று சவால் விடும் விதமாகக் கேட்டான் பசுபதி.

 

‘தன் கணவன் என்ன செய்ய போகிறாரோ?’ என்ற அச்சம் தோன்ற, பார்வதி சற்று மிரட்சியோடு தன் கணவனைப் பார்த்தாள். ஆனால், சூழ்நிலையை அபிநயா கையில் எடுத்துக்கொண்டாள்.

 

“அத்தான்!” என்று கண்டித்தாள் அபிநயா.

 

“அம்முக்குட்டி…” என்று இறங்கினான் பசுபதி.  “உங்க அப்பன் பேசினது…” என்று அவன் ஆரம்பிக்க, “அவுக என் அப்பா.” என்று அதட்டலாக கூறினான் அபிநயா.

“என் அப்பா சம்மதம் இல்லாம, ஏதாவது நடக்குமா அத்தான்? எதுவா இருந்தாலும் முறைப்படி நடக்கணும். தப்பு செஞ்சவங்க யாரையும் என்னால் மன்னிக்கவும் முடியாது. தப்பு செஞ்சா என்ன தப்பா பேசினா கூட என்னால் ஏத்துக்க முடியாது அத்தான்.” என்று உறுதியாகக் கூறினாள் அபிநயா.

“என் மவ நியாயஸ்தி. தப்பை யார் செஞ்சாலும் சொல்லுவா. என் வளர்ப்பு அப்படி.” என்று பெருமையாக இப்பொழுது மீசையை முறுக்கினார் ராமசுவாமி.

 

பசுபதி, காயப்பட்டு வெளியேற, மனம் தாங்கத்தவளாக  “அத்தான்!” என்று அழைத்தாள் அபிநயா.

 

பசுபதி, தன் உடலை முழுதும் திருப்பாமல், தன் தலையை மட்டும் திருப்பி பார்த்தான்.

 

“நான் செத்தாலும், இவுக என் அப்பா! நீங்க என் அத்தான்.” என்று அவள் கூற, “அம்முக்குட்டி…” என்று பதறிக்கொண்டு திரும்பினான் பசுபதி.

 

“இது ஒருநாளும் மாறாது.” என்று அவள் அழுத்தமாக கூற, அவள் அருகே வந்து அவள் தலை கோதினான் பசுபதி. மறுப்பாகத் தலை அசைத்தான். அவன் கண்கள் கலங்கியது. “இப்படி பேசாத அம்முக்குட்டி.” செய்கைக்கும், குரலுக்கும் சம்பந்தம் இல்லாமல் கண்டிப்போடு கூறினான் பசுபதி.

 

அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு, தலை அசைத்தாள் அபிநயா. மேலும், அங்கிருந்து அவளைக் காயப்படுத்த விரும்பாமல் விறுவிறுவென்று கிளம்பினான் பசுபதி.

 

அபிநயா, தன் துணிமணி ஈரமாக இருந்ததால், பையை தன் தாயிடம் கொடுத்துவிட்டு, பின்பக்கமாகச் சென்றாள்.

 

“பாசக்கரான்!” என்று பார்வதி, தன் கணவனிடம் பசுபதியைப் பற்றி சிலாகிக்க, தன் மனைவியை முறைத்தார் ராமசுவாமி.

 

“அப்பனும் சரி இல்லை. ஆத்தாளும் சரி இல்லை. அவுகளை பார்த்து வளந்திருக்கான். சொன்னாலும் புரியலை.” என்று அவர் கூற, “ஒருவேளை, பசுபதி அவன் மாமனை போல இருக்கலாமில்லை?” என்று பார்வதி சற்று பயந்தாலும் கேட்டுவிட்டார்.

 

அவர் கால்களுக்குக் கீழே கிடந்த முற்காலியை எட்டி உதைத்தார் ராமசுவாமி. அது சுவரில் அடிபட்டு மீண்டும் வந்து நின்றது.

 

“உங்க பிடிவாதத்தால், அபிநயா வாழ்க்கை இப்படி தான் அடிபடப்போகுது.” பார்வதி வீட்டிற்குள் வந்ததும் முறுக்கி கொண்டார்.

 

‘வாசலில் வேற மாதிரி இருப்பா, உள்ள வந்ததும் இவ நடவடிக்கை வேற மாதிரி இருக்கும்.’ என்று எண்ணியவராக, “பசுபதியை நினைக்குற வரைக்கும் இப்படி தான் அடிபடும். அவன் ஆத்தா சரியாகிட்டா, இல்லை அவனை ஒதுக்கிட்டா, எவ்வளவு அடிபட்டாலும், இப்படி நேரா நிற்கும்.” என்று சுவரில் மோதி மீண்டும் நேராக நின்ற முற்காலியை பார்த்தபடி நக்கலாக கூறிக்கொண்டு, பட்டாளையில் இருந்த தூண் மேல் சாய்ந்து அமர்ந்தார்.

 

பசுபதியின் ஜீப் சர்ரென்று அவன் வீட்டிற்குள் நுழைந்தது.

 

“என்னாலே பசுபதி? உங்க மாமன் வீட்டுக்கு போய், அவமான பட்டுட்டு வாரியலோ?” என்று கையிலிருந்த மண்வெட்டியால், அங்கிருந்த செடிக்கு பாத்தி கட்டிவிட்டு நிமிர்ந்தபடி கேட்டார் வடிவம்மாள்.

 

சற்று வன்னம் பூசிய உடல்வாகு. சேலை எட்டு கஜம் இருக்கும் என்று கூறுவது போல், தாராளமாக இருந்தது. காதில் குண்டலம் உருண்டை உருண்டையாக தொங்கியது.   எத்தனை கிலோ தங்கம் என்ற எண்ணம் தோன்றுமளவுக்கு அது அசைந்து ஆடியது.

அவரது வயது, ராமசுவாமிக்கு அக்கா என்றாலும், அதீத வயது வித்தியாசம் என்றும், பசுபதி வருடங்கள் கழித்துப் பிறந்திருக்கிறான் என்றும் கூறுகிறது.

 

பசுபதி எதுவும் கூறாமல் திண்ணையில் அமர, “என்னலே! இப்படி முவறையை தொங்க போட்டுட்டு இருக்க?என்ன சொன்னா உன் மாமென் மவ?” என்று மண்வெட்டியை ஓரமாகக் கடாசிவிட்டு, அவன் முன் அமர்ந்தனர்.

 

“அம்முக்குட்டி என்ன சொல்லுவா? பாவம்.” என்று கூறினான் பசுபதி.

 

“ஹா… ஹா…” என்று சிரித்து, “ஒரே சிரிப்பனியா இருக்குலே.” என்று சிரித்தார் வடிவம்மாள்.

 

வெத்தலை சாப்பிடுவதைக் குறிப்பது போல், அவர் கரை படிந்த பற்கள் இன்னும் சிரித்தது.

 

‘இதுல ஹாஸ்யம் பண்ண என்ன இருக்கு? ஆத்தாவுக்கு, அம்முக்குட்டியை பத்தி சொன்னாலும் புரியாது.’ என்று பசுபதி மௌனித்தான்.

 

“குட்டின்னு கூப்பிடுத அளவுக்கு அவ சின்ன ஆளு கிடையாதுலே.  யமகாதகி! அவ அப்பனுக்கு அவந்தேன் ஊரில் நியாஸித்தேன்னு நினைப்பு. அவ மவளுக்கு, சிங்கத்துக்கு  பிறந்த சிங்ககுட்டின்னு நினைப்பு. அப்படியே சட்டம் பேசுவா. அவளை நீ நம்பாதல. நான் சொல்லுதேன் கேளு. அவளை தூக்கியாந்து குடும்பம் நடத்து. அப்பனும், மவளும் நம்ம சொல்லுக்கு கட்டுப்பட்டு காலடியில் கிடப்பாக.” என்று கூறினார் வடிவம்மாள்.

 

‘நான் இன்னைக்கு ஒரு வார்த்தை சொன்னதுக்கே மொவரையை தூக்கிட்டா அம்முக்குட்டி… இதுல இப்படி வேறையா?’ என்ற எண்ணத்தோடு, பசுபதி தன் தாயை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

“என்னாலே இப்படி பாக்குற? ஊரு உலகத்தில் இல்லாததையா சொல்லுதேன்? ராஜா காலத்துல இருந்து ராணியை தூக்கி தானலே ராஜாவுக்கு பழக்கம். அந்த ராணியும் நாட்டை ஆண்டாளும், ராஜாவுக்கு கட்டுப்பட்டு தானலே இருப்பா. காலம் காலமா நடக்குறதை தானாலே நான் சொல்லுதேன்.” என்று அவர் குண்டலம் வேகமாக ஆடுமளவுக்குத் தலை அசைத்தார்.

பசுபதி மறுப்பாக தலை அசைக்க, “யாரையோவா தூக்கியாரா சொல்லுதேன். உன் மாமன் மவளைத்தானே? மாமன் மவ மேல, உனக்கு முழு உரிமையும் இருக்குல்ல. மாமன் மவளும் உனக்குத்தேன். மொத்த சொத்தும் உனக்குத்தேன். இந்த கிராமத்துக்கு நீதேன் ராசா.” என்று கழுத்தை நொடித்தார் வடிவம்மாள்.

 

‘சொத்து யாருக்கு வேண்டும்?’ என்பது போல், தன் தாயின் சொற்களை வேண்டா வெறுப்பாகப் பார்த்தான் பசுபதி.

 

அன்றிரவு திருநெல்வேலியில்! ரகுநந்தன் இல்லத்தில்.

இரவு உணவு தயாராக, “ரகு…” என்று அழைப்பில் வந்தான் ரகுநந்தன்.

 

“மாமா!” என்று அழைத்துக் கொண்டு அவன் அருகே அமர்ந்தான் கவின்.

 

சடார் என்று தட்டை கவின் வந்த வேகத்தில் தட்டிவிட, அவனை “நொங்…” என்று அடித்தாள் ரேவதி.

 

“அக்கா அவனை ஏன் அடிக்கிற?” என்று காட்டமாகக் கேட்டான் ரகுநந்தன்.

 

“ம்… கண்டிச்சு வளரக்கலைனா, அப்புறம் அம்மாவை, அக்காவை எதிர்த்து கேள்வி கேட்கும்.” என்று சாடை பேசினாள் ரேவதி.

 

ரகுநந்தன் தன் தாயைப் பார்க்க, “ரேவதி! பேசாமல் சாப்பிடு.” என்று தன் மனைவியை அதட்டினான் சுரேஷ்.

 

“நான் அப்படி என்ன சொல்லிட்டேன். என் மகனை நான் கண்டிக்க கூடாதா?” என்று கண்ணைக் கசக்கினாள் ரேவதி.

 

“அதை என் முன் செய்யாத. கவின் அப்படி என்ன தப்பு பண்ணிட்டான்? எதோ தெரியாம நடந்திருச்சு…” என்று ரகுநந்தன் எகிற, ரேவதி விசும்பினாள்.

 

“நீ அழாத ரேவதி.” தன் மனைவியை சமாதானம் செய்தான் சுரேஷ்.

 

‘தான் பேச வந்த விஷயம் எங்கோ திசை திருப்ப படுகிறதோ?’என்ற சந்தேகம் ரகுநந்தனுக்கு எழ, அரங்கேறிக் கொண்டிருக்கும் நாடகத்தைத் தவிர்த்து, “அத்தான்! நான் உங்க கிட்ட பேசணுமுன்னு நினச்சேன்.” என்று விஷயத்தை ஆரம்பித்தான் ரகுநந்தன்.

 

“நானும் பேசணும்னு நினச்சேன் ரகு. இந்திராவுக்கும், உங்களுக்கும் கல்யாணம் பண்ணலாமுன்னு நாங்க முடிவு பண்ணிருக்கோம்.” என்று சுரேஷ் கூற, “அதை நீங்க எப்படி முடிவு பண்ண முடியும்?” என்று நேரடியாக கேட்டான் ரகுநந்தன்.

 

ரகுநந்தனின் அறிவோ, ‘மீண்டும் உன் பேச்சைத் திசை திருப்பும் முயற்சி.’என்று எச்சரித்தது.

 

அவனுக்குச் சற்று கடுப்பாகவும் இருந்தது. அவனின் கோபம் மெல்ல மெல்ல ஏற ஆரம்பித்தது.

 

“மாப்பிள்ளை! மாமாவுக்கு அப்புறம், நான் தானே இந்த குடும்பத்திற்கு எல்லாம். அது தான் இந்த முடிவு. இந்திராவுக்கு முழு சம்மதம்.” என்று கூறினான் சுரேஷ்.

 

“பெண்ணோட சம்மதம் எவ்வளவு முக்கியமோ? அதே போல் மாப்பிள்ளை சம்மதமும் முக்கியம்.” என்று கூறிக்கொண்டு ரகுநந்தன் சாப்பிட ஆரம்பித்தான். கவின் தன் தாய் அடித்ததில் விசும்பிக்கொண்டு சாப்பிடக் கொண்டிருந்தான்.

 

‘கழுவுற மீனில் நழுவுற மீனாக இருக்கானே?’ என்று ரகுவை யோசனையாகப் பார்த்த சுரேஷ், அடுத்துக் கூறிய வார்த்தையில் ரகுநந்தனுக்கு புரை ஏறியது.

 

தன் தாயை அவன் கேள்வியாகப் பார்க்க, பவானியம்மாளின் கண்களில் ஓர் பதட்டம் தெரிய ‘என்ன நடக்குது இங்க?’ என்ற கேள்வியோடு ரகுநந்தனின் புருவங்கள் சுருங்கியது.

 

பொழுதுகள் விடியும்…