அந்த மாலை பொழுதில்…
அத்தியாயம் – 26
சூரியன் அஸ்தமிக்கும் நேரம். வெயில் குறைந்து, காற்று சிலுசிலுவென்று வீசியது.
பசுபதி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவரிகளிடம் பேசி கொண்டிருந்தான். ‘இவனெல்லாம் புது மாப்பிள்ளை.‘ என்று அவனை கடுப்பாக பார்த்தப்படி அருகே வந்தார் வடிவம்மாள்.
“ஏலே… உம் பொஞ்சாதி உள்ள இருக்கா. நீ வெளிய இருக்க? தாய் தகப்பன் இல்லாத பொண்ணு. யாரும் அவளை ஆசையா வெளிய கூட்டிட்டு போயிருக்க மாட்டாக. நீயும், இப்படி இருந்தா என்ன அர்த்தம். அப்படியே அவளை எங்கனையாவது கூட்டிட்டு போ.” என்று வடிவம்மாள் தன் மகனிடம் கூறினார்.
பசுபதி, தன் தாயை பார்த்தான். ‘ம்… க்கும்… நான் கூப்பிட்டதும் என் கூட வந்திட்டு தான் மறுவேலை பார்ப்பா.‘ என்ற எண்ணம் தோன்றினாலும், அவன் எதுவும் பேசவில்லை.
“ஏலே, உங்க அப்பாரே என் கிட்ட இப்படி எல்லாம் கெத்து காட்டியதில்லை. இந்த காலத்து புள்ளைக கிட்ட நீ இப்படி மெத்தனமா இருந்தா வேலைக்கு ஆகாது.” என்று வடிவம்மாள் தன் மகனின் எண்ண ஓட்டம் புரியாமல் பேசியபடி இந்திராவை அழைத்தார்.
இந்திரா, தாயும் மகனும் இருக்கும் இடத்திற்கு வந்தாள்.
“இந்திரா, பசுபதி வெளிய போறான். அவன் கூட போயிட்டு வரியா? இல்லை என் கூட தோட்டத்து வேலையில் ஒத்தாசை பண்ணுதியா?” என்று கேட்க, ‘ஐயோ, தோட்டத்து வேலையா?’ என்று அதிர்ந்தாள் இந்திரா.
‘இந்த மாமியார் கெத்து மட்டும் உங்களுக்கு தேவையா?’ என்று தன் தாயை பார்த்தபடி, “ஆத்தா, என் கூட வருவா.” என்று பசுபதி இந்திரா பதில் கூறுமுன் முந்திக் கொண்டான்.
இந்திரா என்ன பேசுவாள், என்ற அச்சம் அவனுள். மறுக்க வாய்ப்பில்லாமல் போக, இந்திரா அவன் கூட கிளம்ப தயாராகிவிட்டாள்.
காலையில் கட்டிக்கொண்ட சேலை தான். ‘உடையை மாற்ற வேண்டும்.‘ என்ற எண்ணத்தோடு அவள் தன் உடையை பார்க்க, “நான் காலையில் வாங்கி வந்ததை போட்டுக்கிட்டு வா.” பசுபதி சற்று அதிகாரமாக கூறினான்.
‘எல்லாம் இவன் நினைச்சபடி தான்.‘ சற்று கடுப்பாக உணர்ந்தாலும் மௌனமாக கிளம்பினாள்.
இருவருக்கும் பேச எதுவுமில்லை என்பது போல் மெளனமாக நடந்தனர்.
பசுபதி, இந்திரா இருவரின் சுபாவமும் அமைதி கிடையாது. ஆனால், இருவரும் அவர்கள் சுபாவத்திற்கு மாறாக மௌனித்தனர்.
‘இனி தன் வாழ்க்கையின் போக்கு என்ன?’ பசுபதிக்கு தெரியவில்லை.
‘ஆத்தாவுக்காக எத்தனை நாட்கள் நடிக்க முடியும்?’ என்ற கேள்வியும் அவனுள் எழுந்தது.
‘எல்லாம் செய்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். ஆனால், அம்முக்குட்டி நல்லாருக்கணுமுன்னா என்ன வேணா செய்யலாம்.‘ தனக்கு தானே உறுதி செய்துகொண்டான்.
‘அண்ணன் சொன்னான்னு, இவனை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அடுத்து என்ன? ரகுவை கட்டிக்கிட்டு ஒவ்வொரு நாட்டுக்கு போய் ஊர் சுத்தணுமுன்னு நினச்சேன். கடைசியில் என் வாழ்க்கை இந்த பட்டிகாட்டிலா?’ என்ற எண்ணம் தோன்ற, “ம்… ச்…” சலிப்பை வெளிப்படுத்தினாள் இந்திரா.
இருவரும் நடந்தபடி, ஆற்றங்கரை ஓரத்திற்கு வந்திருந்தனர்.
அவர்கள் வழியில் வரும் பொழுது, ஆங்காங்கு தெரிந்த மனிதர்கள் கூட இங்கு இல்லை. இவர்கள் இருவர் மட்டுமே நின்று கொண்டிருந்தனர்.
அவள் ஏற்படுத்திய சலிப்பு சத்தத்தில் அவள் பக்கம் திரும்பினான் பசுபதி.
அவன் வாங்கி கொடுத்த அரக்கு நிற சுடிதார், அவளுக்கு சற்று தொள தொளவென்று இருந்தது.
“டிரஸ் லூசா இருக்கோ? சரியா தைத்து கொடுக்குற கடை இருக்கு. நாளைக்கி மாத்தி தைச்சுக்கலாம்.” பசுபதி கூற, “அதெல்லாம் கூட உனக்கு தெரியுமா?”என்று இந்திரா நக்கலாக கேட்டாள்.
“ம்… அம்முக்குட்டி சொல்லுவா.” அவன் பெருமையாக கூற, “உனக்கு, அம்முக்குட்டி தவிர வேற ஒண்ணுமே தெரியாதா?” சுள்ளென்று வந்தது அவள் கேள்வி.
“நீ தானே தெரியுமான்னு கேட்ட? ஆத்தா, சுடிதார் போடுறதில்லை. இல்லைன்னா, அவுக போற இடத்துக்கு போகலாம்.” அவன் எதார்த்தமாக கூறினான்.
காதில் குண்டலத்தோடு ஆத்தாவை சுடிதாரில் கற்பனை செய்து பார்த்த இந்திராவுக்கு மெலிதாக புன்னகை தோன்றியது. அவள் புன்னகையின் அர்த்தம் புரிந்தவன் போல், “உனக்கு குண்டலம் போட்டாலும் நல்லாருக்கும்.” பசுபதி நமட்டு சிரிப்போடு கூறினான்.
“என்ன நக்கலா?” என்று அவள் கேட்க, “உன் கிட்ட நக்கல் பேச என்ன இருக்கு. நான் உன்னை வெளிய கூட்டிட்டு வரலைனா, ஆத்தா வருத்தப்படுவாக. அதுக்கு தான் கூட்டிட்டு வந்தேன்.” என்று பசுபதி தூர நின்று கொண்டான்.
‘என் அழகில் மயங்கிட்டியா?’ காலையில் அவள் கேட்ட வரத்தை அவன் நெஞ்சில் ஆழமாக பதிந்திருந்தது.
“ஆமா, பெரிய ஊரு, அதோ அந்த முனையில் தாஜ்மஹால் இருக்கு. இதோ இந்த முனையில் ஈபிள் டவர் இருக்கு. அதோ, இடது பக்கம் திரும்பு, தொங்கு தோட்டம் இருக்கு. சுத்தி பார்க்க, ஆத்தா சொல்லிட்டாங்க. உடனே இவன் கூட்டிட்டு வந்துட்டான்.” மெத்தனத்தோடு கூறினாள் இந்திரா.
சரேலென்று அவளை கீழே தள்ளினான் பசுபதி. இந்திரா, மொந்தென்று தண்ணீரில் விழுந்துவிட்டாள். அவள் அவனின் இந்த செய்கையை எதிர்பார்க்கவில்லை.
“அண்ணா….” என்று அலறினாள் இந்திரா. அந்த, ‘அண்ணா…‘ என்ற அழைப்பு, அவன் ஆழ் மனதை தொட்டது.
‘அம்மா… அப்பா… இப்படி யாரும் அவளுக்கு இல்லை.‘ ஆத்தா சொன்னது அவனை இன்னும் அசைத்து பார்த்தது.
‘ஆபத்துக்கு கூட அண்ணனை தான் அழைப்பாளா? அந்த அண்ணனும் உருப்படி இல்லாதவன்.‘ பசுபதியின் உள்ளம் முழுதாக கரைந்து போனது.
எல்லாம், ஒரு நொடி தான். “யோவ்…” என்று இந்திரா இவனை திட்டும் வரை தான்.
“யோவ்… அறிவு கெட்டவனே” என்று இந்திரா இவனை காட்டுத்தனமாக திட்டி கொண்டிருந்தாள்.
நீர்,அவள் நெஞ்சு வரை மட்டுமே இருக்க, தட்டுத்தடுமாறி எழுந்து நின்றுவிட்டாள்.
“அறிவில்லை, இப்படி தள்ளிவிடுற?” என்று இந்திரா கோபமாக கேட்க, “நீ தானே கேட்ட, என்ன இருக்குனு பார்க்கணும்னு. இப்ப பாரு. தண்ணீர் இருக்கு. குடிச்சி பாரு. தாமிரபாரணி ஆத்து தான் தண்ணீ இங்கயும் ஓடுது. ருசியா இருக்கும்.” அவள் முன் ஒற்றை கால் மடக்கி அமர்ந்து கூறினான்.
அதோ வலது பக்கம் பாரு. அவன் கை நீட்டிய திசையில், ‘அப்படி என்ன?’ என்று அவள் கடுப்பாக பார்த்தாள்.
“செல்வ செழிப்பான வயல். மொத்தமும் நம்மளது தான். பாபிலோன் தோட்டம் நம் வயித்து பசியை போக்குமான்னு தெரியாது. ஆனால், இந்த வயல் போக்கும்.” அழுத்தமாக கூறினான் பசுபதி.
“தாஜ்மஹால், ரசிக்கலாம் வாழ முடியாது. அங்க இருக்கிறது சமாதி தான். நீ என்ன வேணுமுன்னு கேளு. எப்படி வேணுமுன்னு கேளு. நீ வாழற மாதிரி அரண்மனையை நான் கட்டித்தறேன். ஆனால், இப்படி இடக்கு பேசாத. என் ஊரை பத்தி தப்பா பேசாத, எனக்கு பிடிக்காது.” சமரசத்ததோடு ஆரம்பித்து, கர்ஜனையில் முடித்தான் பசுபதி.
பசுபதி பேசி கொண்டிருக்கையில், இந்திரா, மேல ஏற எத்தனித்து முடியாமல் வழுக்கி கொண்டிருந்தாள்.
‘இப்ப இவன் கிட்ட சண்டை போட கூடாது.‘ என்ற எண்ணத்தோடு, “எனக்கு அரண்மனை எல்லாம் அப்புறம் கட்டலாம். முதலில், நீ உன் கையை குடு, என்னை மேல ஏத்திவிடு.” அதிகாரமாக கூறினாள்.
பசுபதியின் குறும்பு எட்டி பார்த்தது. “கேட்குறது உதவி. அதை, கொஞ்சம் பதவிசமா கேட்டா தான் செய்ய முடியும்.” பசுபதி எழுந்து நின்று மீசையை முறுக்கி கொண்டு கூறினான்.
இந்திரா, எத்தனை சாமர்த்தியசாலி என்று நிருபித்தாள். “கையை கொடுங்க. ப்ளீஸ்.” அவள் சட்டென்று குரலை மாற்றி கொண்டாள்.
பசுபதியின் குறும்பு, அவளின் இந்த உடனடி மாற்றத்தில் சற்று அதிகரித்தது.
“முறை சொல்லி கூப்பிடனும் என் அருமை பொஞ்சாதியே.” என்று கேலி பேசினான் பசுபதி.
“அத்தான்னு என்னால கூப்பிட முடியாது. அதுக்கு உங்க அம்முக்குட்டியை தான் நீங்க கூப்பிடனும்.” குளிரில் அவள் உடல் நடுங்கினாலும் உறுதியாக கூறினாள் இந்திரா.
‘அட… அம்முகுட்டின்னு நினைச்சாலே இவளுக்கு கடுப்பு தான் போல.‘ என்ற எண்ணம் தோன்ற மனதிற்குள் புன்னகைத்து கொண்டான்.
இருந்தாலும், இந்திராவின் இந்த பேச்சு, பசுபதிக்கு பிடித்தது. காரணம் தான் புரியவில்லை.
அவன் ரசனையை ஒதுக்கிவிட்டு, “நான் உன்னை அத்தான்னு கூப்பிட சொல்லவே இல்லையே?” அவன் தண்ணீரில் நின்று கொண்டிருக்கும் தன் மனைவியின் முன் மண்டியிட்டு பேரம் பேசினான்.
“என்னங்க…” அவள் தடுமாற, அவன் எதுவும் பேசாமல், அவன் கைகளை கொடுத்தான்.
கததகதப்பான் அவன் கைகளுக்குள், பொதிந்து போன அவள் மென்மையான கரங்களை அவன் ரசித்து கொண்டிருக்க, அவன் கைகளை பிடித்து ஏறிட்டு அவனை தண்ணீருக்குள் தள்ளிவிட்டு சற்று விலகி நின்று கொண்டாள்.
பசுபதி இப்பொழுது தண்ணீரில் நின்று கொண்டு, தன் மனைவியை அதிர்ச்சியாக பார்க்க, “போடா டேய்.” என்று கூறிவிட்டு வேகமாக நடந்து ஆற்றங்கரையில் இருந்து சற்று விலகி நின்று கொண்டாள்.
“ஹா… ஹா…” என்று பெருங்குரலில் சிரித்தான் பசுபதி. அந்த நீரின் சத்தத்தோடு, அவன் சிரிப்பு சத்தமும் கேட்டது.
‘வந்து என்ன பண்ணுவானோ? அவன் என்னை தள்ளி விட்டான். நானும் அவனை தள்ளி விட்டுவிட்டேன். சரிக்கு சரி. பார்த்துக்கலாம்.‘ என்று இந்திரா அழுத்தமாக நின்று கொண்டிருந்தாள்.
பசுபதி நீரில் இருந்து மேலே ஏறி வந்தான். சற்று அழுத்தமான காலடிகள் தான்.
இந்திரா, எங்கோ பார்த்தடி நின்று கொண்டிருந்தாள். அவன் வருவது தெரிந்தும்.
சூரியன் முழுதாக மறைந்திருந்தான். நிலவொளி ரம்மியமாக இருந்தது.
நீல நிற வானம். பால் நிறத்தில் நிலா. வெள்ளி நிற கதிர் ஒளிகள். நிறைய தென்னை மரங்கள். தென்றலின் தீண்டலில் தென்னை ஓலைகள் அசைந்து விசிறி போல் இவர்களுக்கு இதமாக காற்று வீசிக்கொண்டிருந்தது.
பசுபதி நெருங்கவும், இந்திராவின் இதயம் தடக் தடக் என்று துடிக்க ஆரம்பித்தது.
பசுபதி, இந்திராவை பார்த்தான். அவள் முகத்தில் நீர் துளிகள். அரக்கு நிற சுடிதார் அவள் நிறத்திற்கு எடுப்பாக இருந்தது.
முத்து முத்தாக நீர் வடிந்து கொண்டிருக்க, அவள் விழிகளோ அவள் அழுத்தத்தை பறை சாற்றி கொண்டிருந்து.
நிலவொளியில், தென்றல் காற்றில், நீர் முத்துக்கள் வழிய அவள் முகம். அவனுக்கு அந்த காட்சி ரம்மியமாக தோன்றியது. பசுபதி அவளை ஆழமாக பார்த்தான்.
அவள் தோள் மேல் தன் இடது கையை வளையம் போல் போட்டான் பசுபதி. இந்திராவின் கண்களில் தெரிந்த மிரட்சியில், அவன் புன்னகைத்தான்.
“நீ என்னை தண்ணீரில், தள்ளிவிட்டது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நான் செய்ததை தானே நீ செய்த.” அவன் அவள் தோள் மேல் கை போட்டபடியே நடந்தான்.
அவன் கண்களில் கோபம் இல்லை. புன்னகை மட்டுமே.
இந்திராவுக்கு சற்று ஆச்சரியம் தான். அவன் தீண்டலில் நட்பு மட்டுமே இருந்தது.
மென்மை மட்டுமே நிலவி, அவன் மேன்மையை கூற, இந்திராவும் விலகவில்லை.
ஊரை பற்றி, ஊர் மக்களை பற்றி பேசி கொண்டே நடந்தான் பசுபதி.
பசுபதி பேசிய விஷயம், சுவாரஸ்யமாக இருந்தது என்று இந்திரா சொல்ல மாட்டாள். ஆனால், பசுபதி பேசிய விதம் சுவாரசியமாக இருந்ததையும் மறுக்க மாட்டாள்.
நேரம் மாலையை கடந்து, இருளை எட்டி அனைவரும் உறங்கும் நேரத்தையும் எட்டி விட்டது.
ரகுநந்தன் வீட்டில், சற்று அசாத்திய அமைதியே நிலவியது. கவின், அபிநயாவை ஒட்டி கொண்டே அலைந்தான்.
‘தம்பியையும் என் கிட்ட இருந்து பிரிச்சிட்டா. இப்ப பிள்ளையையும்…‘ என்ற குற்றசாட்டு ரேவதியின் கண்களில் தேங்கி நின்றது.
ரகுநந்தன் அபிநயாவிடம் எதையும் தோண்டி துருவவில்லை. அபிநயா, மேலே எதுவும் பேசவில்லை. ‘ஒரு தடவை எதோ கோபமா சொல்லிட்டேன். அதுக்கு இவ்வளவு பிடிவாதம் இவளுக்கு.‘ மனதிற்குள் அபிநயாவை திட்டி கொண்டான் ரகுநந்தன்.
அபிநயா, வேலையை முடித்துவிட்டு அறைக்கு வர, அவளை ஆழமாக பார்த்தான்.
எதுவும் பேசாமல், அவள் படுத்துவிட, அவனும் அருகே படுத்து கொண்டான்.
அவர்களுக்கு இடையில் அதே இடைவெளி!
மணி பன்னிரெண்டை எட்ட, அவன் அவள் காதில் மெல்ல கிசுகிசுத்தான். “ஹாப்பி பர்த்டே வாத்தியாரம்மா…” அவன் குரலில் அவள் கண்களை திறந்து ஆச்சரியமாக பார்த்தாள்.
அவன் அருகாமையில் சற்று குறைந்திருந்த இடைவெளியை மனதில் குறித்து கொண்டாள்.
அவன் பரிசு பொருளை நீட்ட, அவள் கண்களில் அத்தனை மலர்ச்சி.
“எனக்கா?” அவள் ஆச்சரியத்தில் கண்களை விரிக்க, “இல்லை, எங்க அக்காவுக்கு.” அவன் நமட்டு சிரிப்போடு கூற, அவள் தன் கண்களை விரித்து அவனை இப்பொழுது முறைத்து பார்த்தாள்.
“இது தானே உன் ஆசை.” என்று அவன் கூற, “ஒரு மொன்டெஸ்ஸரி ஸ்கூல் ஆரம்பிக்க ரொம்ப செலவு ஆகிருக்குமே. இவ்வளவு எப்படி?” அபிநயாவின் ஆச்சரியம் குறையவில்லை.
“எனக்கு கிட்ஸ் பத்தி ரொம்ப தெரியாது. ஆனால், கல்வி சம்பந்தமான மேனேஜ்மென்ட் கோர்ஸ் பண்ணிட்டு தான் நான் இந்தியா வந்தேன். குடும்ப சூழ்நிலை, அது அப்ப நடக்கலை. இப்ப, பணம் ஒரு பிரச்சனையே இல்லை. நம்ம பிசினெஸ் இப்ப ஸ்டேபிள் ஆகிருச்சு.” அவன் பொறுமையாக விளக்க, அவன் பொறுப்புணர்ச்சியில், அவள் அவனை ரசனையோடு பார்த்தாள்.
ரகுநந்தன் புருவம் உயர்த்தி, ‘என்ன?’ என்பது போல் வினவ, “ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெருவதில்லை. ஆனால், வெற்றி பாதைக்கு நிச்சயம் வழி வகுதிடும்.” அபிநயா அவனுக்கு அனுசரணையாக பேசினாள்.
“வாத்தியரம்மா சொன்னா சரி தான்.” என்று அவன் கூற, “தேங்க்ஸ்…” என்று அவன் கொடுத்த, அவள் எதிர்காலம் கொண்ட காகிதத்தை பார்த்தபடி அவள் கூறினாள்.
“உன் கோர்ஸ் முடிய, ஸ்கூல் ஆரம்பிக்கவும் சரியா இருக்கும். நீ தான் முழுசா பார்த்துக்கணும். நான் ஒன்லி சைட் சப்போர்ட்.” அவன் கூற, அபிநயா மீண்டும் கண்கள் மின்ன, “தேங்க்ஸ்…” என்று கூறினாள்.
“வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா?” அவன் கண்களில் குறும்பு மின்னியது.
“அதுவே அதிகம்.” இப்பொழுது அவள் மிடுக்காக கூறினாள்.
“வாத்தியரம்மா… இதை விட இன்னொரு பரிசு இருக்கு.” அவள் காதில் அவன் கிசுகிசுப்பாக கூற, அவள் முகம் செவ்வனமாக சிவந்தது.
“நீ என்ன சொல்ற?” என்று அவன் கேட்க, “எங்க?” என்று அவள் வெட்கத்தோடு கேட்க, “அது சஸ்பென்ஸ்.” என்று அவன் தலை அசைத்து கூறினான்.
அவன் தோளில், அவள் கைகளை மாலையாக கோர்த்து கொண்டாள் அவள்.
மனைவியின் செயலில், அவன் சற்று மயங்கி தான் போனான்.
“இப்ப மாதிரி, நான் உன்னை தொடைல. அப்படின்னு பயந்துகிட்டே ரகசியம் பேசுவீங்களா?” அவள் அவனை பார்த்து கேலி பேசி கண் சிமிட்டினாள்.
“இன்னைக்கு நீ சரி இல்லை. அப்புறம் நீ தான் குளிக்க போகணும்.” அவன் பூமாலையாய் கோர்த்திருந்த அவள் கரங்களில் உல்லாசமாக சாய்ந்தபடி, அவளை வம்பிழுக்க, வெட்கம் அவளை பிடுங்கி தின்ன, தன் கைகளை உறுவிக்கொண்டாள் அபிநயா.
அவள் முகத்தை அவன் ஆவலாக பார்க்க, அபிநயா தன்னை சரி படுத்தி கொண்டு, “எங்க போறோம்?” என்று மிடுக்காக வாத்தியரம்மாவாக மாறி, அவனை கேள்வி கேட்டாள்.
‘இதில் நான் உன் சிஷ்யப்பிள்ளை இல்லை.‘ என்று கூறுவது போல், “நீயே கண்டுபிடி.” என்று கூறிக்கொண்டு படுத்துவிட்டான் ரகுநந்தன்.
தன் உதட்டை சுழித்துக் கொண்டு, அவனை முறைத்து பார்த்தாள் அபிநயா.
‘நம்மளை எங்க கூட்டிட்டு போக போறாக?’ என்ற கேள்வி அவள் மனதில்.
பொழுதுகள் விடியும்…