AnthaMaalaiPozhuthil-27

         அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 27

       காலை வேளை. பசுபதி வயல் வேலையில் மூழ்கி இருக்க, அவன் அலைபேசி ஒலித்தது.

         அலைபேசி சத்தத்தில், அவன் அதை கையில் எடுத்தான்.  அவன் புருவம் சற்று சலிப்பாக வளைந்தது.

      “ம்…” என்று முனங்கல் சத்தத்தை மட்டுமே வெளிப்படுத்தினான் பசுபதி.

   “மாப்பிள்ளை, இன்னைக்கு விருந்துக்கு வந்துருங்க.” சுரேஷின் குரலில் அத்தனை பவ்யம்.

   மறுக்க வேண்டும்.என்ற எண்ணம் தோன்றினாலும், அதை அவன் மனம் ஒப்பாததால், “ம்…” மீண்டும் பசுபதியின் முனங்கல் சத்தம் மட்டுமே.

              மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல், சுரேஷ் பேச்சை முடித்துவிட்டான்.

   பசுபதி, வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றான். இந்திரா, வடிவம்மாள் அருகே அமர்ந்திருந்தாள். அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறி கொண்டிருந்தாள். ஆனால், அவள் கவனம் சிறிதும் அங்கு இல்லை என்பதை  அவள் விழிகள் எடுத்து காட்டியது.

   “ஆத்தா, இன்னைக்கு இந்திரா அண்ணன் வீட்டுக்கு விருந்துக்கு போகணும்.” பசுபதி அக்கறை இல்லாமல் கூறினான்.

 அந்த, ‘அண்ணன் வீடு.என்ற சொல்லில் சற்று அழுத்தம் இருந்தது. அண்ணனுக்கு ஏது வீடு, என்ற ஏளனமும் பொதிந்து இருந்ததோ?’ என்ற சந்தேகமும் இந்திராவுக்கு எழுந்தது.

     “ம்… சீக்கிரம் கிளம்புங்க.” என்று வடிவம்மாள் கூற, பசுபதி தலை அசைத்தான்.

  “இந்திரா பட்டு சேலை கட்டிக்கோ.” வடிவம்மாள் கூற, “அதெல்லாம் வேணாம். சுடிதார் போட்டுட்டு கிளம்பு.” சுள்ளென்று விழுந்தது பசுபதியின் வார்த்தைகள்.

 இவன் என்ன சொல்வது?’ என்ற எண்ணம் இந்திராவுக்கு தோன்றினாலும், அவன் சொல்வது அவளுக்கு சாதகமாக இருந்ததால், அவள் மறுப்பு தெரிவிக்க வழி இல்லாமல் மௌனித்து கொண்டாள்.

அதே நேரம், ரகுநந்தன் வீட்டில் அபிநயா மும்முரமாக சமையல் வேலையில் மூழ்கி இருந்தாள்.

     “அம்மா, அவளை கூப்பிடுங்கரகுநந்தனின் அழைப்பு வர, அபிநயா அவனை தேடி வந்தாள்.

  அவள் பிறந்தநாளை முன்னிட்டு, ரகுநந்தன் வாங்கி கொடுத்திருந்த சில்க் காட்டன் சேலையை கட்டி இருந்தாள்.

 டபுள் ஷேட். ஒரு பக்கம் பிங்க் நிறமாகவும், மற்றோரு பக்கம் ஆரஞ்சு நிறத்திலும் இருந்தது. குடை போல் ஜிமிக்கி. அதன் மேலே ஏழு கற்கள் பதித்த வைரத்தோடு.

      வைரம், அவள் முக ஜொலிப்பின் முன் தோற்று கொண்டிருக்க, தன் மனைவியின் பூரிப்பை ரசித்தபடி,        என்ன வாத்தியரம்மா பயங்கர பிஸி போல?” நக்கலாக கேட்டான் ரகுநந்தன்.

   “ஆமா, உங்க அத்தானோட, தங்கச்சி விருந்துக்கு வராக.” நீட்டி முழக்கினாள் அபிநயா.

   “ஏன், உங்க அத்தான் வரலியா?” ரகுநந்தனின் குரலில் கேலி வழிந்தது.

   “இப்ப இதை கேட்க தான் கூப்பிட்டீகளா?” சுள்ளென்று வந்து விழுந்தது அபிநயாவின் கேள்வி.

    “வாத்தியாரம்மாவுக்கு கோபம் என் மேலேயா? இல்லை, உங்க அத்தான் மேலேயா?” ரகுநந்தன் அபிநயாவை ஆழமாக பார்த்தபடி கேட்டான்.

  “உங்க மேல தான். நாம எங்க போறோமுன்னு நீங்க இன்னும் சொல்லலை. அத்தான் மேல கோபப்பட நான் யார்? எனக்கு என்ன உரிமை இருக்கு?” அசட்டை போல் கேட்டாலும், அவள் வார்த்தைகள் பசுபதி மேல் வருத்தத்தை தேக்கி கொண்டு நின்றது.

     ரகுநந்தனின் கண்கள் தன் மனைவியை ஊடுருவியது. “என்ன பார்வை? எனக்கு உங்க மேல தான் கோபம்.” அவள் உறுதியாக கூற, புன்னகையோடு  தன் மனைவியின் போக்கை பின்பற்றியே தன் பேச்சை தொடர்ந்தான் ரகுநந்தன். 

      அவள் வருத்தத்தை போக்கும் விதமாக, “நாம, எங்க போறோம்ன்னு சொல்லட்டுமா?” அவன் கண் சிமிட்டினான்.

   “நான் சொல்லட்டுமா?” தன் காதில் உள்ள ஜிமிக்கி அசைய, தன் முகத்தை அசைத்து, புருவம் உயர்த்தினாள் அபிநயா.

      “உனக்கு தெரியுமா?” என்று ரகுநந்தன் அதிர்ச்சி அடைய, “ம்…” தோள்களை குலுக்கினாள் அபிநயா.

  “எங்க?” என்று ரகுநந்தன் கண்களை சுருக்க, “ஹீ… ஹீ… ஊருக்கு.” என்று கூறிக்கொண்டு, அவள் செல்ல எத்தனிக்க, “என்ன நக்கலா?” என கடுப்பாக வழி மறித்து நின்றான் ரகுநந்தன்.

  “பின்ன? ஒரு ஊர் பெயர் சொல்றதுக்கு இவ்வளவு அலும்பா?” என்று அபிநயா அவனை தாண்டி செல்ல எத்தனித்தாள்.

    “அதெல்லாம் அப்படி தான்.” மீண்டும் வழி மறித்து  நின்றான் ரகுநந்தன்.

   “நிறைய வேலை இருக்குங்க. உங்க அக்கா, டென்ஷன் ஆகிருவாக.” என்று அவள் கண்சிமிட்ட, ‘இதுக்கெல்லாம் நான் அசரமாட்டேன்.என்பது போல, “நான் க்ளூ கொடுக்கறேன்?. நீ கண்டுபிடி.” என்று  சீட்டியடித்தான் ரகுநந்தன்.

   “இது விடுகதை சொல்ற நேரமா?” என்று அபிநயா அவனை முறைக்க, “ஏன், விடுகதை இப்ப தான் சொல்லணுமுன்னு ஏதாவது சட்டம் இருக்கா? இல்லை விடுகதை நேரமுன்னு ஏதாவது வச்சிருக்கியா?” அப்பாவியாக அவன் கேட்டான்.

     “அச்சோ! சரி இப்பவே சொல்லுங்க… ஆனால் சொல்லிட்டு வழிவிடனும்.” அவள் பேரம் பேசினாள்.

   வேலை இருக்கு. போகணும்.என்று அவள் அறிவு கூறினாலும், மனம் அவன் அருகாமையை விரும்பியது. அவனிடம் பேசுவதை விழைந்தது.

     “நம்ம நாட்டிலுள்ள ஒரு இடம் தான்.” என்று அவன் கூற, “ம்…” கொட்டினாள் அவள்.

   பச்சம் பசேல்ன்னு ஓர் அழகான மலைவாசஸ்தலம். அங்க மணக்கும்  டீ நல்ல விளையும்.” அவன் கைகளை விரித்து ரசனையோடு கூற, அபிநயா அவனை முறைத்து கொண்டிருந்தாள்.

   ஏன் இப்படி முறைக்குற. நான் சொல்லும் பொழுதே, உனக்கு ஒரு ரொமான்டிக் பீல் வரலை?” அவன் கோபமாக கேட்க, “எல்லாரும், பொதுவா ஒரு ஹனிமூனுக்கு மலைவாசஸ்தலத்துக்கு தான் போவாங்க. அங்க டீ தான் விளையும். பின்ன முருங்கைக்காய்யா விளையும்?” அவன் கோபத்தின் பிரதிபலிப்பில் அவள் சூடாக கேட்டாள்.

     அவள் கோபத்தில், ரகுநந்தன் பெருங்குரலில் சிரித்தான்.

     வேற பொண்ணா இருந்தா, நீங்க பண்ற அலும்புக்கு, இந்நேரம் ஹனிமூன்னே வேண்டாமுன்னு சொல்லிருப்பா.” அவள் தன் கைகளை இடுப்பில் வைத்து கடுப்பாக கூறினாள்.

.    மத்த பொண்ணுகளை விடு.  நீ சொல்லுவியா?” அவன் சில்மிஷ குரலில் கேட்க, “கண்டிப்பா சொல்லுவேன்.” என்று அவள் வேகமாக நடக்க, “ஒய்… அப்படிலாம் சொல்ல கூடாது.” அவன் அவள் முன்  தன் கைகளை நீட்டினான்.

   ஒரு மில்லிமீட்டர் இடைவெளி அவன் கைகளுக்கும், அவளுக்கும் இடையில்.

   உன்னை தொடலை.” அவன் குரல் கிசுகிசுத்தது.

    வேலை இருக்கு. யாரவது பார்த்திற போறாக.” அவள் கெஞ்சும் குரலில் கொஞ்சினாள்.

  இவ்வளவு பெரிய வீட்டில், இந்த ஓரத்தில் இருக்கிற நாம தான் தெரிய போறோமா?” என்று அவன் வம்பு வளர்த்தான்.

    அவனுக்கு, அந்த நெருக்கத்தில் அவளிடம் பேச பிடித்திருந்தது. அவளை  விட்டு அகல பிடிக்கவில்லை. அவளை அருகாமையில் நிறுத்திக் கொள்ள மனம் விழைந்தது.

         அபிநயா…” பவானியம்மாளின் குரல் கேட்க, அவள் செல்லும்முன், “நான் சொல்லிடுறேன்.” ரகுநந்தன் அவளை நிறுத்து வைத்தான்.

    கணவனின், மனப்போக்கை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் முகத்தில், ரசனையோடு ஓர் புன்னகையும் ஒட்டி கொண்டது.

     எல்லா மலை பகுதியிலும், இவ்வளவு டீ விளையுமான்னு தெரியலை. நாம போற இடத்தில விளையும்.” என்று அவன் கூற, “சரி… நாம போறோம். டீ சாப்பிடுறோம். வரோம். சரியா?” இப்பொழுது அவள் அப்பாவியாக கேட்க, “ஒய்.. என்ன கொழுப்பா?” என்று கேட்டான் அவன்.

உங்களை விட கம்மி தான்.என்பது போல் அவள் பார்க்க, அவள் பார்வையை ஒதுக்கிவிட்டு தொடர்ந்தான் ரகுநந்தன்.

        உலகத்தில் அந்த மலை தான் மூன்றாவது பெரிய மலை.” என்று அவன் கூற, “நான் கண்டுபிடிச்சிட்டேன்.” சொல்லிக்கொண்டு சிட்டாக பறந்தாள் அவள்.

   ஐயோ… நான் கஷ்டப்பட்டு தெரிஞ்சிகிட்ட மத்த விஷயங்கள்.” என்று அவன் காற்றோடு பேச, “இப்ப மாதிரியே காற்றோடு சொல்லுங்க.” சமையலறை வாசலில் இருந்து எட்டி பார்த்து கண்சிமிட்டினாள்.

    அவள் தலை பின்னே சாய்ந்ததில், அவள் கூந்தல் தரையை தொட்டது.

        அவள் இடும் ஆணையை செய் என்பது போல் அவள் ஜிமிக்கியும் ஆடியது.

       சிறிது நேரத்தில், இந்திராவும் பசுபதியும் ரகுநந்தன் வீட்டிற்கு வந்தனர். சுரேஷ், ரேவதி இருவரும் இந்திராவிற்கும், பசுபதிக்கு பலத்த வரவேற்பு கொடுத்தனர்.

     ரகுநந்தன் இந்திராவை தலை அசைப்போடு வரவேற்றான். பசுபதியை கை குலுக்கி வரவேற்றான்.

      பவானியம்மாள், அனைவரையும் இன்முகமாக வரவேற்றார். அபிநயா, நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.

   இந்திராவை வான்னு சொல்லலாம். எப்படியும் பதில் சொல்லமாட்டா.அபிநயாவின் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.

     அவள் கருவிழிகள் ஓரமாக ஒதுங்கி, பசுபதியை பார்வையிட்டது. ஆனால், அவன் அங்கு இல்லாதது போலவும், அவனை  பார்க்காதது போலவும் நடந்து கொண்டாள் அபிநயா.

         பசுபதி ரகுபதியிடம் மட்டுமே பேசினான். மற்ற அனைவரிடமும் முகமன் போல் தலை அசைத்து கொண்டான்.

   பசுபதி ரகுநந்தனிடம் பேசினாலும், அவன் கண்கள் அபிநயாவை அளவிட்டு கொண்டிருந்தது.

       “வாங்கன்னு கூப்பிட்டா குறைஞ்சு போயிருவாளா?” என்று ரேவதி சுரேஷின் காதை கடிக்க, பசுபதி முன் அபிநயாவை குறை பேசும் தைரியம் இல்லாமல், சுரேஷ் தன் வாயை இறுக மூடி கொண்டான்.

    “சாப்பிடலாமா?” என்று ரேவதி அழைக்க, பசுபதி, இந்திரா இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.

   “அபிநயா…” என்று ரேவதி, அபிநயாவை  பம்பரமாக சுழல விடுவது போல் அழைத்தார்.

    அன்று  இந்திராவுக்கு பரிமாறும் பொழுது, ரகுநந்தன் தடுத்தது இந்திரா, ரகுநந்தன், ரேவதி மூவருக்கும் ஒரு சேர நினைவு வந்தது.

          இன்னைக்கு ரகுநந்தன் என்ன சொல்லுவான்? நான் உன் வீட்டு விருந்தாளி.என்ற மெத்தனம் இந்திராவின் முகத்தில் தெரிந்தது. 

               அவள் கால் மேல் கால் போட்டு, ரகுநந்தனை ஏளனமாக பார்த்தாள். இன்னைக்கு உன் பொண்டாட்டி வேலை செய்வதை தடு.என்ற சவால் இந்திராவின் கண்களில் குடிகொண்டது.

          பசுபதிக்கு ரேவதி பரிமாற எத்தனிக்க, “அபிநயாவும், மாப்பிள்ளையும் எங்க கூட உட்காரட்டும். அவங்களும் புது ஜோடி தானே?” பசுபதி அழுத்தமாக கூறிவிட்டான். 

   “மாப்பிள்ளை சொன்னால் சரி தான்.” சுரேஷ் மற்றவர்கள் எதிர்க்கும் முன் முன்திக் கொண்டான்.

    இந்திரா, பசுபதியை கடுப்பாக பார்த்தாள்.

    வேறுவழியின்றி அபிநயாவும் அமர்ந்தாள். ரேவதி பரிமாற, சற்று நேரத்தில், “நாங்க பாத்துக்குறோம்.” என்று அபிநயா கூற, ரேவதி ஒதுங்கி கொள்ளும் சூழ்நிலை உருவாகியது.

    ரகுவும், பசுபதியும் பேசியபடி சாப்பிட ஆரம்பித்தனர்.

சில நிமிடங்கள் கழித்து, “என்ன அம்முக்குட்டி, அத்தானுக்கு பிடிச்ச சொதி இருக்குமுன்னு நினச்சேன்.” அவன் கேலியாக கூறினான்.

        “பொண்ணுக்கு பிடிச்ச வெஜிடபிள் பிரியாணி, சப்பாத்தி, தால், கேரட் ஹல்வா தான் இன்னைக்கு இருக்கு. தயிர் சாதம் வேணுமின்னா உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கு.” தன் தட்டில் கவனமாக கூறினாள் அபிநயா.

     ரகுநந்தன் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது. இந்திராவின் கண்கள் கூர்மையானது.

   “இது எந்த ஊரு வழக்கம் அம்முக்குட்டி? மாப்பிள்ளைக்கு பிடிச்சதை செய்யாமல் பொண்ணுக்கு பிடிச்சதை செய்றது?” என்று பசுபதி, விடமால் அபிநயாவிடம் வம்பு வளர்த்தான்.

   “திருநெல்வேலில எங்க வீட்டு வழக்கம்.” சுள்ளென்று கூறினாள் அபிநயா.

          “அம்முக்குட்டி, இது என்ன அநியாயம்? அராஜகம் பிடிச்ச மீனாட்சி ஆட்சியா இருக்கும் போல?” பசுபதி தனது இடது கைகளால் மீசையை நீவிக் கொண்டு பெருங்குரலில் சிரிக்க, “கரெக்ட்டா சொல்லிடீங்க.” என்று ரகுநந்தனும் பசுபதியோடு சிரிப்பில் இணைந்து கொண்டான்.

     அபிநயா இருவரையும் கோபமாக முறைக்க, இந்திரா எதுவும் புரியாமல் இவர்களை அமைதியாக பார்த்தாள்.

         உணவை முடித்து கொண்டு, சிறிது நேரம் பேசிவிட்டு பசுபதி இந்திராவும் கிளம்ப அவர்களுக்கு இவர்கள் சுருள் வைத்து முறை செய்தனர். பசுபதி கிளப்பிவிட,  அனைவரும் வழி அனுப்ப ஏதுவாக வாசல் பக்கம் நின்றனர்.

   அபிநயா இவர்களை பார்த்தபடி, சற்று உள்பக்கமாக நின்று கொண்டிருந்தாள்.

   பசுபதி, அபிநயா அருகே சென்று தன் சட்டை பையிலிருந்து ஒரு பரிசு பொருளை நீட்டினான்.

    “பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்முக்குட்டி.” அவன் கூற, அபிநயா அவன் முன் அசையாமல் நின்றாள்.

   பசுபதியின் கைகள் நீண்டு கொண்டே இருந்தது.  “ஒவ்வொரு வருசமும் கொடுத்திருவேன். இந்த வருஷம் கொடுக்காமல் இருப்பேனா?” என்று அவன் பேச அபிநயா அழுத்தமாக நின்று கொண்டிருந்தாள்.

 “அம்முக்குட்டி…” பசுபதி ஆழமான குரலில் அழைத்தான். 

         அதற்கு மேல் அவளால் அவள் அத்தானை காக்க வைக்க முடியவில்லை.

   அபிநயா சட்டென்று வாங்கி கொண்டாள்.  அவள் கண்கள் கலங்கியது. அவள் தலைகோதி, “உன் அத்தான் நல்லாருக்கேன். நீ சந்தோஷமா இருந்தா, இன்னும் நல்லா இருப்பேன்.” புன்னகையோடு கூறினான்.

   அபிநயா எதுவும் பேசவில்லை. “நீயும், மாப்பிள்ளையும் சந்தோஷமா இருக்கீங்கன்னு எனக்கு தெரியுது. உன்னை விட மாப்பிள்ளை தங்கமான குணம்.” அவன் கூற, சட்டென்று விழி உயர்த்தி பசுபதியை முறைத்தாள் அபிநயா.

   “உண்மையை சொல்லித்தானே ஆகணும்?” பசுபதியின் கண்கள் அவளிடம் கெஞ்சியது. உதடுகளோ, கேலி புன்னகையில் வளைந்தது.

      அபிநயாவிடம் மௌனம் மட்டுமே. “என்னை பத்தி கவலை படாத. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.” பேசிவிட்டு பசுபதி விடைபெற்றான்.

    ரகுநந்தனின் கண்கள் இவர்களை தான் பார்த்து கொண்டிருந்தது வாஞ்சையோடு. வாத்தியரம்மாவுக்கு பிடிவாதம். பசுபதி கிட்ட பேசினா தான் என்ன?’ என்ற கேள்வியோடு புன்னகையும் எட்டி பார்த்தது.

   அதே நேரம், இந்திராவின்  கண்கள் இவர்களை தான் பார்த்து கொண்டிருந்தது சற்று பொறாமையோடு. 

  நம்ம கிட்ட எகிறுவான். கழுத்தை பிடிப்பான். இவ கிட்ட மட்டும் அம்முக்குட்டி, அம்முகுட்டின்னு இழைய வேண்டியது.என்று மனதிற்குள் கருவி கொண்டு அபிநயா அருகே  செல்ல எத்தனிக்க, ‘எங்கே?’ என்று பசுபதி  கண்களால் வினவினான்.

    “அபிநயா கிட்ட சொல்லிட்டு வரேன்.” என்று கூறி இந்திரா சென்றாள்.

   ரகுநந்தன், பசுபதியிடம் அவர்கள் செல்ல போகும் இடத்தை பற்றியும், இடத்தை பற்றி அபிநயாவுக்கு தெரியாது என்றும் கூறிக் கொண்டிருந்தான்.

அபிநயா அருகே சென்ற இந்திரா அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள். அவள் ஜொலிப்பு, அவள் மன சந்தோஷத்தை எடுத்து கூறியது.

        இந்திரா நிறைய பேசவில்லை. ஒரு சில வரிகள் மட்டுமே பேசினாள். அவள் பேசிய வார்த்தைகளில், ஒரு நொடி அபிநயாவின் உலகம் தட்டாமாலை சுற்றியது.

 ஏற்கனவே கலங்கி இருந்த அவள் கண்கள், ‘ஓ…என்று கதறிவிடுவோமோ? என்று அஞ்சி இறுக மூடி கொண்டது.

   அத்தான்! அத்தான்! அத்தான்!அவள் மனம் ஓலமிட்டது.

   பொழுதுகள் விடியும்…