AnthaMaalaiPozhuthil-29

       அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 29

        மறுநாள் அதிகாலையில் பசுபதி எழுந்துவிட, இந்திராவும் முழித்துக் கொண்டாள். இந்திரா, இந்நேரம் விழிப்பது அவளுக்கு பழக்கமற்ற செயல்.

    பசுபதி, அவளை யோசனையாக பார்த்தான். எதுவும் பேசவில்லை. வயலுக்கு செல்ல கிளம்பினான்.

        “இந்த பார்… ஏதாவது தப்பு பண்ணினா திட்டு. இப்படி பேசாம இருந்தா எனக்கு கோபம் வரும். உன்கிட்ட பயங்கரமா சண்டை போடுவேன்.” இந்திரா, அவனை கூர்மையாக பார்த்து கோபமாக கூறினாள்.

    ‘இப்படி காலையில் எழுந்து ஐந்து மணிக்கு சண்டை போடுறதை விடவா?’ அவனுக்கு புன்னகை எட்டி பார்க்க எத்தனிக்க, அதை மறைத்து கொண்டு, உணர்ச்சி துடைத்த முகத்தோடு அவளை பார்த்தாள்.

       “பேசமாட்டியான்னு கேட்டேன்?” இந்திரா, அவன் சட்டையை பிடித்திருந்தாள்.

         பசுபதி தன் கண்களை சுருக்கி, அவளை கூர்மையாக பார்த்தான். இந்திராவின் முகத்தில் தீயின் ஜுவாலை. 

நான் பேசாதது இவளுக்கு இத்தனை கோபமா?’ அவன் இந்திராவை படிக்க ஆரம்பித்தான்.

    இந்திரா, தன் நிலையில் இல்லை.

 பொம்மை இல்லாமல் இருக்கும் குழந்தையிடம், பொம்மையை காட்டிவிட்டு, ஆசையை தூண்டிவிட்டு, அதை பிடுங்கிவிட்டால், அதற்கு ஏற்படும் ஏமாற்றத்தில் வெளிப்படுத்தும் கோபத்தை பிரதிபலித்தது இந்திராவின் செயல்.

         ‘இதுக்கு மேல நான் பேசாம இருக்க கூடாது.அவன் கிரகித்து கொண்டான்.

     “நான் அப்படி சொல்லலை இந்திரா.” அவன் நிதானமாக கூறினான்.

    தீயின் ஜுவாலை குறைந்து அவள் விழிகளின் அலைப்புறுதல் நிலை பெற்றது.

              “உனக்கு என்ன வேணும் இந்திரா? நான் பேசணும் அவ்வுளவு தானே? பேசுறேன்.” என்று பசுபதி சற்று பக்குமாகவே கூறினான்.

 “நான் ஒன்னும் உன்கிட்ட பேசணுமுன்னு கெஞ்சிகிட்டு நிக்கலை.”  அவள் பதில் அசட்டையாக வெளிவந்தது.

இந்திரா மீண்டுவிட்டாள். அவனும் அதை கணித்துவிட்டான்.

   “நீ கெஞ்சினனு, யார் சொன்னா?” அவன் புன்னகைத்தான்.

    மேலே என்ன பேசுவது என்று இந்திராவுக்கு தெரியவில்லை. அவள் கேட்க நினைத்தை கேட்டுவிட்டாள்.

   இப்பொழுது அவள் மனம் சற்று தவித்தது. இவன் பேசினா என்ன, பேசலைனா என்ன? இத்தனை வருஷம் யாரிடமோ பேசிகிட்டு தான் இருந்தேனா?’ தனக்கு தானே கேட்டுக்கொண்டாள்.

   ‘தேவை இல்லாமல், இவன் கிட்ட கெஞ்சிட்டோமோ?’ தன் தேவை நிறைவேறிய பின், அவள் மனம் தேவையின்மையை பற்றி சிந்தித்தது.

   தன்  எண்ணப்போக்கை ஒதுக்கி, மெத்தனத்தோடு பேச ஆரம்பித்தாள்.

      “உனக்கு ஏதாவது வேணுமா? ஏன் கிளம்பாம என் கிட்ட பேச்சு வளர்க்கிற?” அவள் மெத்தையில் அமர்ந்த படி கேட்டாள்.

      அவள் கேட்ட சந்தர்ப்பத்தை விட மனமில்லாமல், “நான் என்ன கேட்டாலும் தருவியா இந்திரா?” அவன் ஆழமான குரலில் கேட்டான்.

   ‘இது என்ன வம்பா போச்சு?’ அவள் மனம் இப்பொழுது சிந்திக்க ஆரம்பித்தது.

   ‘எதுவும் வம்பு பண்ணுவது போல கேட்க மாட்டான். ஆனால், வில்லங்கமா கேட்கப்போறான்.என்று அறிவு எச்சரித்து, ‘முடியாதுன்னு சொல்லிடு.என்று கட்டளை இட்டது.

   மனமோ, ‘அப்படி என்ன கேட்க போறான்?’ என்று அறிய விழைந்தது.

    ‘சரி…என்று சொல்ல அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

 “யாருக்கும் கொடுக்குற நிலமையில் நீங்க கும்பிடுற கடவுள் என்னை வைக்கலை.” அசட்டையாக இந்திரா தோளை குலுக்கினாள்.

      இந்திரா மறுக்காததை தனக்கு சாதமாக்கி, “தப்பு பண்ணினது நான். நீ காயப்படுத்தணுமின்னா என்னை காயப்படுத்து. அம்முக்குட்டியை வேண்டாம். அவ, தாங்க மாட்டா.” பசுபதியின் குரல் கரகரத்தது.

        இந்திராவின் கைகளை, எடுத்து அவன் நெஞ்சில் மீது வைத்தான் பசுபதி.

இந்திரா மெத்தையிலிருந்து எழுந்து அவன் பிடிமானத்தில் அவன் அருகே நின்றாள்.

   அவள் அவனை திடுக்கிட்டு பார்க்க, அவள் கைகளை, தன் நெஞ்சோடு  அழுத்தினான்.

“உன் குறி நான் தானே?” அவன் குரல் இறைஞ்சியது.

அவள் காயப்படுத்த விரும்பிய அவன் இதயம், அவள் செவி அருகே ஒலித்து அதன் துடிப்பை வெளிப்படுத்தியது.

        ‘நைட் முழுக்க அம்முக்குட்டியை பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தானா? பேசாமல் ஒருத்தி பக்கத்துலயே இருந்திருக்கேன். இவனுக்கு என் நினைப்பே வரலியா? அபிநயா மேல மட்டும் பாசம் வைக்க எத்தனை பேர்?’ இந்திரா கடுப்பாக பார்க்க எண்ணி, தோற்று பசுபதியை ஏக்கமாக பார்த்தாள்.

       ‘என்னை நீ காயப்படுத்த, நான் காத்திருக்கிறேன்.என்பது போல், அவள் உள்ளங்கைக்கு கீழ் அவன் இதயம் துடிப்போடு காத்திருப்பதை தடக், தடக் என்ற அதன் அசைவு உணரத்தியது.

       ‘உன்னால் என்ன முடியும்?’ என்று அவன் சவால் விட்டிருந்தால், அவள் அந்த இதயத்தை, சுக்குநூறாக உடைக்க தயாராகிருப்பாள்.

                       அவன் இதயம், அவளிடம்  மண்டியிட தயாராக, அவள் மனமோ அவளை மீறி அதில் குடியேற விழைந்தது.  

     மனதின் மொழி மதிக்கு புரியுமா?

     பசுபதி, கண்களை இறுக மூடி இருந்தான். அவள் ஏக்க பார்வை அவனை தாக்கவில்லை. அவன் தன் போக்கில் பேசி கொண்டிருந்தான்.

   “நீ, கேட்டது கொஞ்சம் சரி தான். எனக்கும் அம்முக்குட்டிக்கும் பிரச்சனை எல்லாம் இல்லை. ஆனால், அம்முக்குட்டிக்கு என் மேல கோபம். அவளுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை.”

 “ஏன், நான் உனக்கு பொருத்தமில்லைனு சொன்னாளா?” பிரச்சனையின் பாதை சற்று திசை திரும்ப ஆரம்பித்தது.

  அதை புரிந்தவன் போல்  திடுக்கிட்டு கண்களை திறந்தான் பசுபதி.

    “அப்படி இல்லை. உனக்கு விருப்பம் இருக்காதுன்னு நினைச்சிருப்பா.” பசுபதி, அவன் அம்முக்குட்டியை விட்டுக்கொடுக்காமல் பேசினான்.

   “உன் அம்முக்குட்டிக்கு, என் மேல் எவ்வளவு அக்கறை இருக்குமுன்னு எனக்கு தெரியும்?”  இந்திராவின் குரல் ஏளனமாக ஒலிக்க, பசுபதி ஏதோ பேச முயல, தன் கைகளை உருவிக் கொண்டு, தன் தலையை மறுப்பாக அசைத்தாள்.

அதற்கு மேல் அவன் பிடியில், அவள் கைகள் இருந்தால், எல்லாம் தலைகீழாக மாறி விடுமோ, என்ற அச்சம் அவளை சூழ்ந்தது.

  “அவ அப்படியே சொன்னாலும் எனக்கு, கவலை இல்லை. அவ பேச்சு வேண்டாம். பேசாத.” என்ற பசுபதி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் இந்திரா.

   “மொத்தத்தில், உன் அம்முகுட்டிக்காக என்னை மிரட்டாம, கெஞ்சுற?” இந்திரா புன்னகையோடு கேட்டாள். அவள் குரலில், நக்கல் இல்லை. விளையாட்டுத்தனமே மிஞ்சி இருந்தது.

    தன் அருகில், இருந்த மனைவியின் கன்னத்தை தன் ஆள்காட்டி விரலால் தட்டி,”என் பொஞ்சாதி கிட்ட தானே கெஞ்சுறேன்?” அவன் குரலில் வழிந்த கேலி, அவன் கண்களையும் தொட்டது.

     ‘கரடுமுரடான பலா பழத்திற்குள் சுளைகள் இனிக்கும். பசுபதியின் குணம் பலாப்பழம் போல தானோ?’ இந்திரா கணக்கிட்டுக்கொண்டே, “உன் அம்முக்குட்டியை காயப்படுத்துவேன்னு தெரிஞ்சும் என்னை ஏன் அங்க  கூட்டிட்டு போன?” இந்திரா நேரடியாக  கேட்டாள்.

   “காலையில் பேசி என் வேலையை கெடுக்காத.” கூறிக்கொண்டு அவளிடமிருந்து விலகி மடமடவென்று கிளம்பினான் பசுபதி.

   அவனையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள் இந்திரா.

      அவர்கள் அறை கதவு வரை சென்றவன், தன் கால்களை எடுத்து பின்னே வைத்தான். தன் வேஷ்டியை மடித்து, தன் மீசையை முறுக்கி, இந்திராவை பார்த்து புன்னகைத்தான்.

   அவன் புன்னகையில், அவள் சற்று மயங்கி தான் போனாள்.

       தன் உணர்வுகளை மறைத்து, ஒற்றை புருவம் உயர்த்தி, அவள் அவனை கேள்வியாக நோக்க, “எம் பொஞ்சாதி மனசு வருத்தப்பட கூடாதுன்னுதான் கூட்டிட்டு போனேன்.” அவன் வாக்கியத்தை முடித்துவிட்டு புயல் போல் வேகமாக சென்றுவிட்டான்.

    ‘இவனுக்கு அம்முக்குட்டியை விட, என் மனம் முக்கியமா?’ என்ற கேள்வி எழ, தான் அணிந்திருந்த அந்த சாடின் நைட்டியை மறந்து அவன் பின்னோடு ஓடினாள் இந்திரா.

    அவள் வரும் ஓசை கேட்டு, வீட்டு வாசலில் நின்றான் பசுபதி.

    “எனக்கு வீட்டில் போர் அடிக்கும். என்னையும் கூட்டிட்டு போறியா?” இந்திரா, ஆர்வமாக கேட்க, “ஏன், நீயும் என் கூட வயலில் வேலை பார்க்க போறியா?” அவன் நக்கலாக கேட்டான்.

   “ம்… ஹும்…” மறுப்பாக தலை அசைத்தாள்.  “வேடிக்கை பார்ப்பேன். அப்படியே நடப்பேன். உன்கிட்ட சண்டை போடுவேன். இங்க உன் ஆத்தா கூட செம போர்…” அவள் உதட்டை பிதுக்கினாள்.

   “பொஞ்சாதி கூட பேசணுமுன்னா, அப்படியே அவளையும் கூட்டிட்டு போ.” ஆத்தாவின் குரல் பட்டளையில் இருந்து ஓங்கி ஒலிக்க, இந்திராவின் கண்கள் அதிர்ச்சியில் பெரிதாக விரிந்தது.

   அவள் அச்சத்தோடு தலையை குனிந்து, தன் உடையை பார்த்தாள். ஆகாய நிற சாட்டின் நைட்டி, அவள் வடிவத்தை வரைபடம் போல் காட்டியது.

      அவனும், தன் மனைவியோடு சேர்ந்து, அப்பொழுது தான் அவளை முழுதாக பார்த்தான். இப்பொழுது இந்திரா, பசுபதியை தரம்சங்கடமாக பார்த்தாள்.

    தன் கையை கழுத்தின் அருகே வைத்து இடது பக்கமும், வலது பக்கமும் அசைத்து, தலையை சரித்து, நாக்கை வெளியே தொங்கவிட்டாள் இந்திரா.

    ‘அறுத்து தள்ளிருவாங்க. நான் செத்தேன்.இந்திரா செய்கையில் கூற, “ஹா… ஹா…” பசுபதி பெருங்குரலில் சிரித்தான்.

அவன் சிரிப்பை தன் கைகளால் அவன் வாய்மூடி நிறுத்தினாள் இந்திரா. காலை வேளையில், தன் மனைவியின் செயலில், அவன் அவளை ஒரு கிறக்கத்தோடு பார்த்தான்.

   “சிரச்சே, என்னை காட்டி கொடுத்திருவ போல?” அவள் அவன் பார்வை புரியாமல், அவன் அருகே சென்று அவன் செவி அருகே முணுமுணுத்தாள்.

      புன்னகையோடு விலகி நின்று கொண்டான் பசுபதி.

   “ஆத்தா, ஒன்னும் சொல்ல மாட்டாக.” அவன் கூற, அவள் ஏனோதானோ என்று தலை அசைத்தாள்.

       “அப்படி ஏதாவது சொன்னா, நான் தான் கூப்பிட்டேன்னு சொல்லு.” அவன் அவளை பார்த்தபடி ஆழமான குரலில் கூற, அவள் கண்களில் ஒரு மின்னல் கீற்று.

   “என்ன பொஞ்சாதியை கூட்டிட்டு போறியா?” மீண்டும் வடிவம்மாளின் குரல் ஓங்கி ஒலிக்க, இந்திரா வேகமாக திரும்பி வீட்டிற்குள் செல்ல எத்தனித்தாள்.

   “ரெண்டு நாளில் கூட்டிட்டு போறேன் ஆத்தா.” அவன் குரல் கொடுக்க, உள்ளே சென்ற அவள் சிட்டுக்குருவி போல் கழுத்தை திருப்பி, விழிகளை வட்டவடிவில் விரித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்த, பசுபதி சீட்டியடித்தபடி கிளம்பினான்.

    பலாப்பழம் இவனுக்கு முழுதாக பொருந்தும்.என்று எண்ணியபடியே, ஆத்தாவிடம் சிக்காமல், அறைக்குள் நுழைந்து கொண்ட இந்திரா, அவர்கள் அறையில் தூக்கம் வரமால் அலமாரியை நோண்டினாள்.

       அவர்கள் சிறுவயது புகைப்படங்கள் பல இருந்தன. 

அபிநயா குடும்பமும், இவன் குடும்பமும் ஒற்றுமையா தான் இருந்திருக்காங்க? அப்புறம் தான் ஏதோ சண்டை வந்திருக்கும் போல?’ என்று அவள் சிந்தனை ஓடியது.

    ‘என்னவா இருக்கும்?’ என்ற கேள்வி இந்திராவின் மனதில் ஓடினாலும், அதை ஒதுக்கி விட்டு புகைப்படங்களை பார்க்க ஆரம்பித்தாள் இந்திரா.

     அபிநயா, பசுபதியின் புகைப்படங்கள் பல இருந்தன. தவறாக எதுவும் இந்திராவுக்கு தோன்றவில்லை.

            இருந்தாலும்,  ‘ஏன், அபிநயாவும், இவனும் கல்யாணம் செய்துக்களை? அவளும், அத்தான், அத்தான்னு உருகுதா. இவனும் அம்முக்குட்டி, அம்முகுட்டின்னு உருகுதான்.என்ற கேள்வி அவள் மனதில் எழ தான் செய்தது.

    ‘அபிநயா தான் ஏதாவது திமிரா பண்ணிருக்கணும். பசுபதியை பார்த்தா தழைந்து போற ஆள் மாதிரி தான் தெரியுது.என்று அபிநயாவை எதிர் பக்கம் நிறுத்தி, பசுபதியை கணவனாக தன் பக்கம் நிறுத்திக்கொண்டு, அவள் மனம் ஓட ஆரம்பித்தது.

   பல யோசனைகளோடு, புகைப்படங்களை புரட்டினாள் அவள்.

        அப்பொழுது, அவள் பார்த்த புகைப்படத்தில் அவள் புருவம் சுருங்கியது.

        அபிநயாவின் தந்தை, ரகுநந்தனின் தந்தை, பசுபதியின் தந்தை மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம்.

    “மூணு பெரும் நண்பர்களா?” முணுமுணுத்தாள் இந்திரா.

    ‘ரகுநந்தன் அப்பா, இறந்தப்ப தான் பசுபதி அப்பாவும் இறந்து போயிருக்காங்க?’ அவள் அறிந்த செய்தி இந்திராவின் மனக்கணக்கில் ஓடியது.

    ‘எதுவும் சம்பந்தம் இருக்குமோ? சுரேஷ் அண்ணா, ஏன் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னான்? பசுபதி என்ன சொல்லி மிரட்டிருப்பான்? பசுபதி அத்தனை மோசம் போல தெரியலியே?’ அடுக்கடுக்கான கேள்விகள் இந்திராவின் மனதில் தோன்றியது.

பொழுதுகள் விடியும்…