AnthaMaalaiPozhuthil-31

       அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 31

        நந்தன்… நந்தன்… நந்தன்…” அவள் அழைப்பு, அவள் ஆழ் மனதிலிருந்து, உயிரோடு கலந்து ஒலிக்க, அவள்நந்தன்!’ என்ற அழைப்பு, விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்திருந்த மலையில் எதிரொலித்தது.

    அவள் அழைப்பு அவன் உயிரை தொட, அங்கிருந்த பல மரங்களுக்கு இடையில் ஒரு மரத்தின் பின்னிருந்து, “வாத்தியாரம்மா!” அவன் குரல் இனிய கானமாக ஒலித்தது.

   ஒரு நொடி, தன்னையும் மறந்து, “நந்தன்…” அவன் பரந்த மார்பில் சரண் புகுந்தாள் அபிநயா.

    தன் மனைவியின் இந்த பரிமாணத்தில், அவன் கிறங்கி நிற்க, “இது என்ன முட்டாள்தனமான விளையாட்டு?” அவள் அவன் நெஞ்சில் குத்தியப்படி கோபமாக கேட்டாள்.

   ஒய்… அங்க குத்தாத, என் அபி அங்க இருக்கா. அவளுக்கு வலிக்கும்.” என்று  அவன் கெத்தாக கூறினான்.

      அபி?” அவள் கேள்வியாக நிறுத்த, “ம்ம்ம்…. என் காதல் மனைவி, கொஞ்சம் வித்தியாசமான ஆளு. நட்புக்கு தண்ணீரில் குதிக்கணும். கணவன் அந்தஸ்துக்காக, மலையிலிருந்து குதிக்கனுமோன்னு நினச்சேன்.” அவன் பேசி முடிக்குமுன், அவன் இதழ்களை தன் கை கொண்டு மூடினாள் அபிநயா.

   என்ன பேசறீக?” அவள் அவன் மார்போடு ஒட்டிக் கொண்டே  கண்டிக்க, “அதெல்லாம் முடியாதுன்னுதான், இந்த அத்துவான காட்டில் ஒளிந்து விளையாடினேன்.” அவன் கேலியோடு கைவிரித்து, ரசனையாக கூறுகையில், அவன் சட்டை ஈரத்தில் நனைய, பதட்டமாக, “அபி…” தன் மனைவியின் முகத்தை நிமிர்த்தினான்.

    அவள் நிமிரவில்லை. “ஒய்… நீ அழுவியா?” அவன் கேட்க, “மனசுக்கு பிடிச்சவங்க தப்பு பண்ணினா நான் அழுவேன்.” என்று கூறிக்கொண்டே அவள் விலக, “சும்மா விளையாட்டா…” அவன் அவளை தன்னோடு இழுத்துக் கொண்டான்.

  அவன் அவளை அணைத்திருப்பதை உணர, “என்னை ஏன் தொட்டீங்க?” அவள் உதட்டை சுழிக்க, “அது… நீ இப்ப வாத்தியரம்மா இல்லை. என் மனைவி அபி. உன் மனசு தெரியாமல் தான் நான் தொடாமல் இருந்தேன். அது தான் கண்ணீர் எல்லாம் விட்டு உன் மனசை படம் போட்டு காட்டிட்டியே.” அவன் கேலியாகவே  பேசி அவளை சமாதானம் செய்தான்.

      நான் ஒன்னும் உங்களை காணுமுன்னு அழலை. நீங்க என்ன சின்ன குழந்தையா காணாமல் போறதுக்கு? நல்லதா போச்சு, ஒரு வார்த்தை உங்க கிட்ட சொல்லிட்டு நம்ம ஊருக்கு   கிளம்பலாமுன்னு தான் தேடினேன்.”

 கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் அவள் பேச, “ஹா… ஹா…” என்று பெருங்குரலில் சிரித்தான் ரகுநந்தன்.

  அவனிடமிருந்து விலகி, “நீங்க என்கிட்டே ரெண்டு நாள் பேசலை.” அவள் குரல் உடைய, அவன் சிரிப்பு சட்டென்று நின்றது.

                    அவளை தன் பக்கம் இழுத்து, “வாத்தியாரம்மா….” என்று அவன் அழைக்கையில், அவன் குரலும் சற்று பிசறியது.

     நீயும் தான் பேசவில்லை.அவன் அறிவு குற்றம் கூற விழைந்தாலும், குனிந்து, அருகில் உள்ள கம்பை எடுத்து தன் மனைவியிடம் நீட்டினான் ரகுநந்தன்.

    இந்தா பிரம்பு. சிஷ்யப்பிள்ளைக்கு என்ன தண்டனை?” அவன் விளையாட்டாகவே தன் உணர்ச்சியை வெளிக்காட்ட, “அடிக்க மாட்டேன்னு எல்லாம் நினைக்காதீங்க. அடி வெளுத்திருவேன்.” அவள் மிரட்ட, “அடி பாவி… ஒரு பேச்சுக்கு சொன்னா.” என்று கம்பை வேகமாக  தூர வீசினான் ரகுநந்தன்.

    அபிநயா, கலகலவென்று சிரிக்க, அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் ரகுநந்தன்.

கையை எடுங்க. யாரவது பார்த்திர போறாக.” என்று அவள் மிரட்டினாள்.

 அபி… உன் மனசு தெரியாமல் மட்டும் தான் விலகி நின்னேன். நானே பேசி உன்னை நிறைய குழப்பிட்டேன். நான், விதியென்னு உன் கூட வாழறேன்னு நீ நினச்சிற கூடாது. அதுக்கு தான் இந்த காத்திருப்பு. இந்த விலகல். உன் மனசும் எனக்கு தெரியணும். இனி, வாத்தியாரம்மா மாதிரி சில விஷயங்கள்ல, நீ என்னை மிரட்ட கூடாது. நான் சொல்றதை தான் கேட்கணும். நான் விலக மாட்டேன். உன்னை விலகவும் விட மாட்டேன்.” அவன் கூற, அவள் பக்கம் மௌனமே நின்றது.

       என்ன?’ என்று அவன் புருவம் உயர்த்த, “என் மனசு உங்களுக்கு இவ்வளவு நாளா தெரியலையா?” அவள் ஏக்கமாக கேட்க, அவன் அவளை ஆழமாக பார்த்தான்.

    அவன் முகத்தில் ஒரு புன்னகை.

 மனமோ, ‘நான் எக்குத்தப்பா ஏதாவது, செய்ய நீ பிரம்பால் என்னை அடிக்கவா?’ என்று கேட்டுக்கொள்ள, அவன் புன்னகை இன்னும் விரிந்தது.

         அவர்கள் சற்று தூர நடந்துவிட்டு, புல்வெளியில் அமர்ந்தனர்.

          ஊப்…” என்று உடலை சிலிர்த்துக் கொண்டாள் அபிநயா.

குளிருதா?” அவன் கேட்க, தன் தலையை மேலும் கீழும் அசைத்து, “ஆனால், நல்லாருக்கு.” அவள் சிலிர்த்துக் கொண்டே கூற, அவன் அவள் தோள் மேல் கைபோட்டு,தன் தோளில் சாய்த்து கொண்டான்.

       இப்ப இன்னும் நல்லாருக்கு.” அவள் அவன் முகம் பார்த்து கூறினாள்.

         அவனிடம் புன்னகை மட்டுமே. இருவரும் சற்று மலை சரிவில் அமர்த்திருந்தனர்.

    எதிர்பக்கம், மேகங்களும், மலை உச்சியும் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டு நின்றது. நீலமும்,பசுமையும் கண்களை கவர, இருவரும் அதை ரசித்து பார்த்தனர்.

    மேகங்கள்… பார்க்க யானை மாதிரி இருக்கில்ல?” அபிநயா தவழும் மேகங்களை ரசித்தப்படி கேட்க, அவன் ஆமோதித்தான்.

      மலையும், மேகமும் நம்மை போல, அந்நியோன்யமா இருக்கில்ல?” அபிநயா மேகத்தின் அசைவுகளை உள்வாங்கியபடி கேள்வியாக நிறுத்த, “அவங்களுக்குள்ள எந்த ரகசியமும் இல்லை அபி.” அவன் ஆழமான குரலில் கூறினான்.

     அவன் பேசுவது புரிவது போல், அவள் ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.

        நாமளும், அப்படி இருக்கனும். நீ என்கிட்டே எதையும் மறைக்க கூடாது. எனக்கு வருத்தமுன்னு யோசிக்க கூடாது. நீ வருந்தினா  தான் எனக்கு வருத்தம். நீ எதையாவது மறைச்சா மட்டும் தான் எனக்கு வருத்தம்.” அவன் தன் மனைவியை கைவளவிற்குள் நிறுத்தி மென்மையாக கூறினான்.

 புரியுதா?” அவன் புருவம் உயர்த்த, அவள் முகத்தில் புன்னகை மட்டுமே.

    அங்கு மௌனமே நிலவியது. பேச்சை விட, மௌனம் சிறந்த மொழி என்று அந்த அமைதி அவர்களுக்கு நிரூபித்தது.

  

    எனக்கும் பசுபதி அத்தானுக்கு இடையில்…” அவள் திணற, அவள் தோள்களை தட்டி கொடுத்தான் ரகுநந்தன்.

   எனக்கு எல்லாம் தெரியும் அபி. நான் அதை பத்தி கேட்கலை. மாமா சொல்லிட்டாங்க. நான் வேண்டாமுன்னு சொல்லியும், பசுபதியும் என்கிட்ட நடந்ததை எல்லாம் சொல்லியாச்சு. நான் கேட்க விரும்பலை. ஆனால், தப்பு எல்லாம் அவர் மேல தான்னு, உங்க அத்தான் என்கிட்டே எல்லாம் சொல்லியே ஆகணுமுன்னு சொல்லியாச்சு.” ரகுநந்தன் கூற, அபிநயா புன்னகைத்து கொண்டாள்.

   அத்தான் அப்படி தான்…அவள் மனம், பசுபதியை மெச்சி கொண்டது.

     அக்காவால் எதுவும் பிரச்சனையா?” நேரடியாக விஷயதிற்குக்கு வந்தான் ரகுநந்தன்.

   ச்…ச்ச… அதெல்லாம் இல்லை.  கவினுக்கு தான் பிரச்சனை.” அவள் தயங்க,  ஆட்டிசம்?” அவன் கேள்வியாக நிறுத்தினான்.

       அப்படி தான். ஆனால், அதை முழுசா இப்படி தான்னு சொல்லவும் முடியாது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்பு இருக்கும். கவின் சிரிச்சி நீங்க பார்த்திருக்கீங்களா?” அவள் கேள்வியாக நிறுத்த, ரகுநந்தன் யோசித்தான்.

  எப்ப…வாது…” அவன் தடுமாற, மறுப்பாக தலை அசைத்தாள் அபிநயா.

   அவன் சிரிக்கறதே இல்லை.” அவள் சுருக்கமாக  கூறினாள்.

     சில குழந்தைகள் கவனிக்க மாட்டாங்க. சில குழந்தைகள் ஒரு இடத்தில் நிற்க மாட்டாங்க. சில குழந்தைகள் அழ மாட்டாங்க. இப்படி கவின் சிரிக்கறதே இல்லை.” அவள் நிறுத்த, “எனக்கும் அவன் பிரச்சனை கொஞ்சம் தெரியும். டாக்டர் கிட்ட பேசினேன். அவனை, கேர் எடுத்து பார்த்துகிட்டா ஓகே. கொஞ்சம் நாள் போனா, சரியாகிருமுன்னு சொன்னாங்க.” அவன் கூறினான்.

    சில மெடிசின் கூட எடுக்கிறான். வயசு ஏற, ஏற, அவன் கொஞ்சம் நிலையாகுவான்.” என்று அவன் இழுக்க, “என்ன கேர் எடுத்தீங்க? ஸ்கூலுக்கு போனீங்களா?  அவங்க மிஸ் கிட்ட பேசினீங்களா?” அவள் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க, அவன் அவளை யோசனையாக பார்த்தான்.

              இதற்கு என்ன காரணம் என்று தெரியுமா?’ என்று அவள் அடுத்த கேள்வியை கேட்க நினைத்தாலும், அவளுக்கே உறுதியாக தெரியாத விஷயத்தை எப்படி கூறுவது என்று தெரியாமல், அவள் அதை பற்றி பேசவில்லை.

   இதற்கு தான் இவ கிளாசுக்கு போகமா லீவு எடுத்துட்டு ஸ்கூலுக்கு போனாளோ?’ அவன் எண்ண, அவளும் அதை கூறினாள்.

      அக்கா, புரிஞ்சிக்க மாட்டேங்குறா. கவினுக்கு, வேற யாரும் கிடையாது. அத்தானுக்கு இதெல்லாம் அக்கறை இல்லை.” மேலே கூற வருவதை அவன் கூற முடியாமல் தடுமாற, “உண்மைதாங்க, கவின் நம்ம கூடத்தான் இருக்கனும். உங்க அக்காவை நான் சாமாளிச்சிப்பேன்.” அவள் புன்னகையோடு கூறினாள்.

   அவன் கண்களில், ஒரு நன்றி உணர்வு.

    உன் அத்தானுக்கு சொன்னது தான், என் அக்காவுக்கும். யாருக்காகவும், என் மனைவியின் சுயமரியாதையை என்னால் இமி அளவும் விட்டு கொடுக்க முடியாது. எதுனாலும், என்கிட்டே மறைக்காம சொல்லணும்.” அவன் மிரட்ட, “நான் தான் வாத்தியாரம்மா.” என்று கூறி அவள் கிண்கிணியாக சிரித்தாள்.

      இருள் கவ்வ, இருவரும் அவர்கள் தங்கி இருக்கும் இடம் நோக்கி நடந்தனர். 

    எனக்கு ட்ரீ ஹவுஸ் ரொம்ப பிடிச்சிருக்கு.” அவள் படி ஏறிக் கொண்டே கூற, “அதை தான் நீ ஏறும் அழகிலே நான் கண்டு பிடிச்சிட்டேனே.” அவன் கேலி பேச, அவள் வெடுக்கென்று திரும்பி அவனை முறைக்க எத்தனிக்க, அவள் பின்னே சரிந்து விழ, அவளை அவன் கைகளில் ஏந்தினான்.

வாகாக, பூமாலையாக அவள் அவன் தோள் சேர்ந்தாள்.

 அவன் அவளை கண்ணாடி முன் இறக்கி விட்டு, கதவை தாழிட, என்றும் இல்லா ஒரு படபடப்பு அவள் இதயத்தில்.

 அவள் கண்ணாடி முன் நின்று கொண்டிருக்க, அவளை அவன் பின்னோடு அணைத்து கொண்டு, “டிரஸ் பிடிச்சிருக்கா?” அவன் கண்ணாடி வழியாக அவள்  அங்க வடிவை ரசித்தபடி கேட்டான்.

   உங்களுக்கு இவ்வளவு ரசனையா?” அவள் கேட்க, “உன்னை நினைச்சாலே வந்திருந்து.” அவன் தன் முகத்தை அவள் தோள் மீது வைத்தபடியே கூறினான்.

     அவள் இமைகள் இப்பொழுது படபடப்பை வெளிப்படுத்த, அவன் விலக எத்தனிக்கஅவள் டாப்ஸின் கயிறு, அவன் சட்டை பட்டனில் சிக்கி கொள்ளஅதை விடுவிக்க அவள் போராட, அவன் கைகள் அவள் பணியை எடுத்து கொண்டது.

    விலக எண்ணினாலும், விலக மனமில்லாமல் அவன் அவளை நெருங்கினான்.

         அவன் கண்கள், கண்ணாடி வழியாக செய்ததை, அவன் கரங்கள் செய்ய துவங்கியது.

    ஒரு பாட்டு பாடேன்” அவன் ஆசையாக, கேட்க, “எந்த சாமி பாட்டு பாடணும்?” அவள் கண்களை விரித்து, அவள் நீளமான தோடு அசைய அப்பாவியாக கேட்க, அவன் அவள் பேச்சுக்கு தற்காலிக தடை விதித்து, இனிய தண்டனையை  அவன் கொடுக்க, அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது.

   மண்டபத்தில் பாடினியே, அந்த மாதிரி சிட்டுவேஷன் சாங். இந்த சூழ்நிலைக்கு ஏற்ப….” அவன் இழுக்க, அவள் பாடினாள்.

ஒன்றா ரெண்டா ஆசைகள்

எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா?”

      அவள் நிறுத்த, அவன் பாடினான்.

அன்பே இரவைக் கேட்கலாம்

விடியல் தாண்டியும் இரவே நீளுமா

என் கனவில் நான் கண்ட

நாள் இதுதான் கலாபக் காதலா

பார்வைகளால் பல கதைகள்

பேசிடலாம் கலாபக் காதலா…”

         பார்வையோடு, அவன் செய்கையும் பல கதைகள் பேச, அவள் தன்னை மறந்து மயங்கி நின்றாள்.

      அவள் உதடுகளோ அவளை மீறி, பாடல் வரிகளை மெல்ல முணுமுணுத்தது.

பெண்களை நிமிர்ந்து பார்த்திடா

உன் இனிய கண்ணியம் பிடிக்குதே

கண்களை நேராய்ப் பார்த்துதான்

நீ பேசும் தோரணை பிடிக்குதே

தூரத்தில் நீ வந்தாலே

என் மனசில் மழையடிக்கும்

மிகப்பிடித்த பாடலொன்றை

உதடுகளும் முணுமுணுக்கும்

மழைவாசம் சிந்தும் உந்தன் முகம்

மரணம் வரையில் என் நெஞ்சில் நங்கும்

உன் கண்களில் எனது கனவினைக் காணப்போகிறேன்…”

 

   இருவரும் ஒருவர் கனவை மற்றவர்கள் தனதாக்கத்தான் நினைத்தார்கள்.

 அவளின் முணுமுணுப்பே போதுமானதாக, அவன் பாடலை தொடர்ந்தான்.

 

“சந்தியாக் கால மேகங்கள்

பொன் வானில் ஊர்வலம் போகுதே

பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே

உன் நடையின் சாயலே தோணுதே

நதிகளிலே நீராடும் சூரியனை நான் கண்டேன்

வேர்வைகளின் துளிவழியே நீ வருவாய் என நின்றேன்

உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம்

நான் உன் சொந்தம் என்ற எண்ணம் தரும்

மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே…”

 

ஆம், மகிழ்வையே அவர்கள் விரும்பினார்கள்.

 அவன் புன்னகையை, அவள் விரும்பினாள்.

 அவள் புன்னகையை, அவன் விரும்பினான்.

ஆனால், காலம்?  

பொழுதுகள் விடியும்…