AnthamaalaiPozhuthil-35

அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 35

   அந்த இரவு வேளையில், பசுபதி வீட்டில்.                

                       இந்த சில மாதங்களில் இந்திராவிடம் சில மாற்றங்கள்.

 அவள் உடை, நடை பாவனை எல்லாம் கிராமத்திற்கு ஏற்றவாறு மாறிவிட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது.   

    சட்டென்று மாற, நான் என்ன திரைப்பட கதாநாயகியா?’ என்ற இறுமாப்பு அவள் செயலில் இருந்தது. ஆனால், அவள் பார்வையில் சில மாற்றங்கள்.

    அவள் பசுபதியை பார்க்கும் பார்வையில் ஒரு கனிவு. ஒரு மரியாதையும் கலந்திருந்தது. அவனிடம் பேசுகையில் ஓர் ஆர்வம், அவள் கண்களில் மின்னியது.

    பசுபதி, அலைபேசி ஒலிக்க, அதை எடுத்து பேசிய அவன் முகத்தில் கலவரம் தொற்றிக்கொள்ள, இந்திரா அவனை யோசனையாக பார்த்தாள்.

   ஆத்தா, அத்தைக்கு நெஞ்சு வலி. இங்க பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாக போல. மாமா, அவுகளை திருநெல்வேலிக்கு கூட்டிட்டு கிளம்பிட்டாக போல.” அவன் பதட்டமாக கூற, “அகங்காரம் பிடிச்சவன், இப்ப கூட அவன் நம்மகிட்ட சொல்லலை பாரு.” என்று சிடுசிடுத்தார் வடிவம்மாள்.

   பசுபதி, கைகளை பிசைய, “அவன் அப்படித்தேன். நீ கிளம்பு. அம்முக்குட்டி, மருத்துவமனைக்கு கிளம்பிருப்பா. நீயும் கிளம்பு.” அவர் கூற, பசுபதி கிளம்ப, இந்திரா செய்வதறியாமல் திகைத்தாள்.

   அவளை பார்த்த வடிவம்மாள், “சண்டை எனக்கும் என் தம்பிக்கும்தென். நான் வரலை, நீ கிளம்பு.” என்று கூற, இந்திரா தலை அசைத்து பசுபதியோடு கிளம்பினாள்.

  பசுபதி, வாசல் வரை செல்ல, “ஏலே, பசுபதி…” வடிவம்மாளின் குரல் உடைந்திருந்தது.

  என் தம்பிக்கு, அவன் பொஞ்சாதினா உசிரு. வெளியதேன், பார்வதியை அப்படி இப்படி சத்தம் போடுவான். இதெல்லாம், தாங்க மாட்டான். நீ, பார்த்துக்கோ.” அவர் உடைந்த குரலில் கூற, ‘என்ன மாதிரியான மனிதர்கள்?’ இந்திரா அவர்களை மெச்சும் விதமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

     பசுபதி தலையசைத்துக் கொண்டு, வேகமாக கிளம்பினான். மழை, “சொ…” என்று பெய்து கொண்டிருந்தது. பசுபதி, அவன் ஜீப்பை விடுத்து காரை எடுத்துக் கொண்டான்.

     அவன் காரை செலுத்துகையில், ‘என்ன பேசுவதென்று தெரியாமல்?’ இந்திரா மௌனமாக அமர்ந்து கொண்டிருந்தாள்.

   ஆத்தாவும், மாமாவும் எவ்வளவு பாசம் தெரியுமா? எல்லாம்தோ பிசினெஸ், பணம், அப்பா சாவுன்னு எல்லாம் முடிஞ்சி போச்சு.” அவன் வருத்தமாக கூற, “இப்ப பேசி சரி பண்ண முடியாதா?” இந்திரா கேள்வியாக நிறுத்தினாள்.

    வாழ்க்கையில் சில தவறுகளை திருத்தவே முடியாது. சில விஷயங்களை மாத்தவே முடியாது. இது முடிஞ்சி போன விஷயம்.” சலிப்பாக கூறினான் பசுபதி.

        பசுபதி, மருத்துவமனைக்குள்  வேகமாக நுழைய அங்கு ரகுநந்தன், அபிநயா , ராமசுவாமி மூவரும் அமர்ந்திருந்தனர்.

          ரகுநந்தன் இவர்கள் அருகே வந்து, “முதல் அட்டாக், ஆனால் கொஞ்சம் சீரியஸ். உடனே ஆபரேஷன் பண்ணணுமுன்னு சொன்னாங்க.” என்று அவனுக்கு தெரிந்த தகவலை கூற, பசுபதியின் கண்கள் அபிநயாவை துளைத்தது.

   ஏன் ரகுநந்தன் கூட அவ எழுந்து வரலை? ஒருவேளை அத்தைக்கு இப்படி ஆனதில், இப்படி இருக்காளா?’ பசுபதி பல யோசனையோடு அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

     கையெழுத்து வாங்க, செவிலியர்கள் அபிநயாவின் தந்தையை அழைக்க, ரகுநந்தனும், பசுபதியும் அவருடன் சென்றனர்.

           இந்திரா, அபிநயா அருகே அமர்ந்திருந்தாள்.  ரகுநந்தன், தன் தலையை திருப்பி தன் மனைவியை பார்த்தான்.

     அவன் அறைந்த பின், அபிநயா ரகுநந்தனின் தாயிடம் பேசி சென்ற வார்த்தைகளே கடைசி வார்த்தைகள்.

 அதன் பின் எதுவும் பேசவில்லை. அபிநயாவின் தாயின் உடல்நிலை பற்றிய விஷயமறிந்த ரகுநந்தன் அழைத்து வந்ததோடு சரி.

    ரகுநந்தன் தான் அழைத்து வரும் வழியில், பேசிக்கொண்டே வந்தானே ஒழிய அபிநயா அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

        மூவரும் திரும்பி வர, ராமசுவாமி ஒரு ஓரத்தில் அமர்ந்து விட்டார். அவர் முகத்தில் கவலை ரேகைகள்.

    ரகுநந்தன், அபிநயாவிற்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

           ‘நான் அடிச்சது தப்பு தான். ஆனால், இந்த சூழ்நிலையில் கூட, அபி என் தோள் சாய மட்டாளா? அப்படி என்ன பிடிவாதம்?’ என்ற கேள்வியோடு, அவன் அபிநயாவை சற்று கடுப்பாகவே பார்த்துக் கொண்டிருந்தான்.

             ரகுநந்தன் பல முறை பேசியும், அபிநயா பதில் பேசாத கோபம் அவன் முகத்தில்.

   ‘இவுக ரெண்டு பேருக்குள்ள ஏதோ பிரச்சனையோ?’ பசுபதியின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

                  “அம்முகுட்டி…” அவன் அழைக்க, “ம்…” அபிநயா  அவன் முகம் பார்க்க, பசுபதி அவள் அருகே அமர்ந்து கொண்டான்.

     “அத்தைக்கு சரியாகிரும். நீ ஏன் இப்படி இருக்க?” அவன் கேட்க, “அத்தான்” விம்மினாள் அபிநயா.

   ‘மனசுக்கு பிடிச்சவங்க தப்பு பண்ணா, நான் அழுவேன்.’ அபிநயா, அன்று கூறியது நினைவு வர, ரகுநந்தன் தன் மனைவியை வருத்தத்தோடு பார்த்தான்.

    ‘அபி என்னை நினைச்சி அழுதாளா? இல்லை, அத்தையை நினைச்சி அழுதாளா?’ என்ற கேள்வி, ரகுநந்தனிடம்.

   அபிநயாவின் குணம் அறிந்த பசுபதி, ரகுநந்தனை யோசனையாக பார்த்தான்.

       ரகுநந்தனின் முகத்தில் தெரிந்த வருத்தம் பசுபதிக்கு ஏதோ ஒரு செய்தி கூற, பசுபதி அபிநயாவின் தலையை அன்பாக கோத, இந்திரா இவர்களை கூர்மையாக பார்த்து கொண்டிருந்தாள்.

   “அத்தான்…” அபிநயா விம்மிக் கொண்டே, “என் வயத்தில் பாப்பா வந்திருக்கு தெரியுமா? அதை கேட்க கூட, யாரும் இல்லையே அத்தான்.” அபிநயா விம்ம, அனைவர் முகத்திலும் அதிர்ச்சி.

     “நான், அம்மா கிட்ட காலையிலேயே, அம்மா கிட்ட சொல்லிருக்கனும் அத்தான்.” அவள் கண்ணீர் உகுக்க, பசுபதி ஆறுதலாக அபிநயாவின் தலை கோதினான்.

ரகுநந்தன், எழுந்துவிட்டான். அபிநயாவின் அருகே செல்ல, அவன் மனம் துடிக்க, அவன் தன்மானம், அவனை முகம் திருப்பிக்கொள்ள செய்தது.

      எந்த விஷயத்தை, ரசனையோடும், காதலோடும், பரிசுகளோடும் நந்தனிடம் முதலில் சொல்ல வேண்டும், என்று நாள் முழுக்க காத்திருந்தாளோ உணர்ச்சி பெருக்கில் அனைவர் முன்னும் சடாரென்று போட்டு உடைத்தாள் அபிநயா.

      ரகுநந்தனுக்குள் கலவையான உணர்வுகள். மகிழ்ச்சி. தன்னிடம் சொல்லவில்லையே என்ற வருத்தம். சற்று கோபம் என்று கூட சொல்லலாம். 

   கோபம் அதிகரிக்க, ‘இன்று இதை சொல்ல, அவள் காத்திருக்கும் பொழுது தான், நான் அபியை அடித்து விட்டேனோ?’ என்ற கேள்வி எழ, அவனுள் குற்ற உணர்ச்சி.

   ரகுநந்தனின் முகத்தை பார்த்து கொண்டிருந்த, இந்திரா, ‘இது என்ன, இவ விஷயத்தை ரகு கிட்ட கூட சொன்ன மாதிரி தெரியலையே?’ என்ற எண்ணத்தோடு அவர்களை பார்த்து கொண்டிருந்தாள்.

    ‘அதுவும் இவளுக்கு கேட்க, ஆளிலையா? அப்படின்னா, எனக்கெல்லாம் என்னனு சொல்றது?’ என்ற கேள்வி, இந்திராவுக்கு எழுந்தது.

    சூழ்நிலை மறந்து சிரித்தான் பசுபதி. “அம்முகுட்டி, உனக்கு யாருமில்லையா? விஷயம் கேள்வி பட்டா, அத்தை துள்ளி குதிச்சு ஓடுவாங்க. நான் இருக்கேன். நாங்கல்லாம் எதுக்குன்னு கேட்குற மாதிரி  உன்னை தங்க தாம்பூலத்தில் தாங்குற புருஷன்.” என்று சூழ்நிலையை ஒரளவுக்கு கணித்து கொண்ட, பசுபதி, ரகுநந்தனுக்கு சாதகமாகவே பேசி வைத்தான்.

   அபிநயா, எதுவும் பேசவில்லை.

அப்பொழுது தான், நந்தன் பற்றிய  உணர்வுகள் அபிநயாவிற்க்கு.

 அபிநயா, தன் கணவனை தர்மசங்கடத்தோடு பார்த்தாள்.

பசுபதியும், இந்திராவும் அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகினர்.

            ரகுநந்தன், தன் மனைவியை ஆழமாக பார்த்தான்.

‘இவ, எங்கிட்ட இப்ப கூட சொல்ல மாட்டாளா?’ அவன் அவளை ஏக்கமாக பார்க்க, ‘நான் ஆசையா சொல்ல வந்தப்ப தான் இவுக வீட்டில் இவுக கேட்குற சூழ்நிலை இல்லை. விஷயம் தெரிஞ்சி கூட இவுக, எங்கிட்ட வந்து என்னனு கேட்க மாட்டாகளா?’ என்று ஏக்கமாக அவள் அவனை பார்த்தாள்.

   “ஏதோ, பிரச்சனை போல?” என்று இந்திரா, பசுபதியின் காதில் கிசுகிசுக்க, “உலகத்தில் எந்த புருஷன் பொஞ்சாதிக்குள்ள பிரச்சனை இல்லை? நமக்குள்ள இல்லையா?” பசுபதி கேள்வியாக நிறுத்தினான்.

     ‘இந்த ஜோடியும், நாமளும் ஒன்னா?’ என்ற கேள்வி, இந்திராவின் கண்களில் தேங்கி அவன் விழிகளை ஊடுருவ, அவனும் பதிலறியா கேள்வியோடு, தன் மனைவியை பார்த்தான்.

     நீங்கள் கொடுக்கும் தனிமைக்கு அவசியம் இல்லை என்பது போல், ரகுநந்தன் அபிநயா இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

  ரகுநந்தன், தன் மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

   அவன் பார்வை, தன்னிடம் முதலில் இனிப்பான விஷயத்தை நவிழாத அவள் இதழ்களை ஏக்கமாக தழுவி, அவன் அறைந்த கன்னங்களை வருத்தத்தோடு தழுவி, தன் குழந்தையை தாங்கி நிற்கும் அவள் வயிற்று பகுதியை ஆசையாக தழுவி நின்றது.

           அபிநயாவும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

      அவள் சிந்தனையோ, அவள் தாயை சுற்றி இருந்தது. உள்ளே அறுவை, சிகிச்சை நடந்து கொண்டிருக்க, அங்கே ஒரு அசாத்திய இறுக்கமான அமைதியே நிலவியது.

        இரவு மருத்துவமனையிலே கழிய, விடியற்காலை நேரம்.

       பசுபதி, ரகுநந்தன் ஏதோ பேசியபடி சற்று தொலைவில் அமர்ந்திருந்தனர்.

அபிநயா, இலக்கில்லாமல் எழுந்து சற்று நடக்க, அப்பொழுது பதட்டமாக ஒருவர் உள்ளே நுழைய, அவர் கையிலிருந்த குடை அபிநயாவின் வயிற்றை இடிக்க எத்தனிக்க, பசுபதி, ரகுநந்தன் இருவரும் பதட்டமாக எழுந்து அவள் அருகே ஓடி வந்தனர்.

    அதற்குள், அபிநயாவை  இரு மெல்லிய வழுவழுப்பான கரங்கள் தன் பக்கம் இழுத்துக் கொண்டது

    பசுபதியின் முகத்தில் புன்னகை. ரகுநந்தனின் முகத்தில் நிம்மதி. அபிநயா, என்ன நடந்ததென்று புரியமால் விழிக்க, “பார்த்து வர கூடாது? உங்க அத்தான், உன் புருஷன் எல்லாரும் சும்மா தானே இருக்காங்க? ஏதாவது வேணுமின்னா அவங்க கிட்ட கேட்க வேண்டியது தானே?” என்று சிடுசிடுத்தது இந்திராவின் குரல்.

     “குழந்தைக்கு அம்மாவாக போற? அந்த அருமை எல்லாம் உனக்கு எங்க தெரிய போகுது? யாரும் இல்லாதவங்களுக்கு தான் தெரியும்.” என்று இந்திரா, முணங்க, ‘இந்திராவா இது?’ என்ற  கேள்வியோடு அபிநயாவின் கண்கள் அதிர்ச்சியாக விரிந்தது.

     “சரிவிடு இந்திரா. அம்முகுட்டி, ஏதோ நினைபுல கவனிக்காம வந்துட்டா.” என்று பசுபதி கூற, “எதுவும் வேணுமா?” அபிநயாவை தோளோடு அணைத்துக் கொண்டான் ரகுநந்தன்.

     ‘அனைவரும் இருக்கும் பொருட்டு, கரிசனத்தோடு ஒரு சில வார்த்தைகள்’ அபிநயாவின் மனம், அந்த நிலையிலும் ரகுநந்தனின் செய்கையை மனதில் குறித்துக் கொண்டது.

     அபிநயா, பதிலேதும் பேசவில்லை.

 அவன் மனமும், அவள் செய்கையை மனதில் குறித்துக்  கொண்டது.

    இந்திரா, பசுபதி அருகே அமர்ந்திருந்தாள்.  இருவரும் ஏதோ பேசி கொண்டிருக்க, ரகுநந்தனின் கவனம் அவர்கள் பக்கம் திரும்பியது.

      அவர்கள் உறவில் இருந்த முன்னேற்றமும் ரகுநந்தனின் கண்களில் பட்டது. அதே நேரத்தில், அவர்களுக்கு, இடையில் இருந்த தயக்கமும்.

      பசுபதி கண்களில்  தெரிந்த அன்பையும், இந்திராவின் கண்களில் தெரிந்த அவன் மீதான நேசத்தையும், அதையும் தாண்டிய வருத்தத்தையும் ரகுநந்தன் கண்டுகொண்டான்.

 அப்பொழுது, மருத்துவர்கள் அழைக்க, ராமசுவாமி, அபிநயா இருவரும் உள்ளே செல்ல, ரகுநந்தன், பசுபதி இருவரும் எழ, பசுபதியை உள்ளே செல்லும்படி செய்கை காட்டிவிட்டு, ரகுநந்தன் வெளியே அமர்ந்துவிட்டான்.

     ‘எப்படியும் அபிநயா எங்கிட்ட பேச மாட்டா. நான், எதுக்கு அவளை மூட் அவுட் பண்ணிகிட்டு…’ என்ற யோசனையோடு அவன் அமர்ந்து விட, இந்திராவும் ரகுநந்தன் மட்டுமே அங்கு அமர்ந்திருந்தனர்.

    “எப்படி இருக்க ரகு?” இந்திரா ஆழமான குரலில் கேட்க, திடுக்கிட்டு அவளை பார்த்த ரகுநந்தன், தலை அசைத்து கொண்டவன், சில நொடிகள் மௌனித்தான்.

 சில நிமிடங்களுக்கு முன், அவன் கண்ட காட்சி கண்ணில் தோன்ற, “பசுபதி, ரொம்ப நல்லவன்.” ரகுநந்தன் கூற, “என் புருஷனை பத்தி எங்கிட்டவேவா?” இந்திரா புன்னகைத்தாள்.

      இந்திராவின் பேச்சில் ரகுநந்தன் புன்னகைத்துக் கொண்டான்.

    “அண்ணன் எப்படி இருக்கான். அவனை பார்க்க வர முடியலை.” இந்திரா இயல்பாக பேச, ரகுநந்தன் இயல்பாக பேச ஆரம்பித்தான்.

       இயல்பான பேச்சு, இவர்கள் வாழ்க்கையின் பக்கம் திரும்பியது.

     பசுபதி மேல் எந்த தவறும் இல்லை என்பதையும், திருமணம் பற்றி சுரேஷ் கூறிய பொய்யையும் பேச்சு வாக்கில் தெரிவித்து விட்டான் ரகுநந்தன்.

     அது மட்டுமில்லை, சுரேஷின் மொத்த தவறையும்!

     இந்திரா, சில நொடிகள் சமைந்து விட்டாள். அவளால் நம்ப முடியவில்லை. ஆனால், நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

சில, தவறுகளுக்கு அவளும் உடந்தையாக இருந்திருக்கிறாளே!

  ‘நீ எங்க அண்ணனை மிரட்டிருக்கன்னு எத்தனை தடவை பசுபதிகிட்ட சண்டை போட்டுருக்கேன்? ஏன் பசுபதி, ஒரு தடவை கூட, இதெல்லாம் என் கிட்ட சொல்லலை?’ இந்திரா சுயலசலில் இறங்கினாள்.

    “பார்வதி, அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்” என்று மருத்துவர்கள் கூற, பசுபதி வீட்டிற்க்கு சென்று வருவதாக கூறிவிட்டு, இருவரும் கிளம்பினர்.

         அபிநயா, வீட்டிற்கு செல்லவில்லை. பசுபதி, இந்திரா இருவரும் வீட்டிற்கு சென்றுவிட்டு, உணவோடு திரும்பி வந்தனர்.

பசுபதி, “அம்முகுட்டி, அம்முகுட்டி…” என்ற அழைப்போடு அபிநயாவை தாங்கினான்.

  பார்வதி, இன்னும் கண் விழிக்கவில்லை. அன்றைய பொழுது, அப்படியே கழிந்தது.

பசுபதி அபிநயாவின் மீது, பொழிந்த அன்பு இந்திராவிற்க்குள் மெல்லிய பொறாமை உணர்வை  தூண்டியது.

 அன்றைய இரவும், ராமசுவாமி மறுத்தும், “தந்தையோடு மருத்துவமனையில் இருக்க வேண்டும்” என்று அபிநயா பிடிவாதம் பிடிக்க, ரகுநந்தனும் உடன் இருந்தான்.

பசுபதி, இந்திரா இருவரும் வீட்டிற்க்கு திரும்பிவிட்டனர்.

      அபிநயா ரகுநந்தன் இருவருக்கு இடையில் மௌனமே மொழியாக!

       ‘நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்?’ என்ற கேள்வியோடு தன் மனைவியை பார்த்தான் ரகுநந்தன்.

 அவன் செவிகளில் பசுபதியின், ‘அம்முகுட்டி…’ என்ற அழைப்பு மீண்டும் மீண்டும் ஒலித்தது.

       பசுபதியை மன்னிக்காத, தன் மனைவியின் பிடிவாத குணம், அவளை பற்றி அவன் அறிந்த கடந்த கால நாட்களை நோக்கி நகர ஆரம்பித்தது.

அதே நேரம், அந்த இரவில், ஏதோ சிந்தித்த படி பசுபதி மரத்தடியில் கட்டிலில் வானத்தை பார்த்தப்படி படுத்திருக்க, “நீங்க ஏன் உங்க அம்முகுட்டியை கல்யாணம் பண்ணலை?” இந்திரா கேட்க, பசுபதி படக்கென்று எழுந்து அமர்ந்தான்.

அன்று போல் இன்றும், ‘உனக்கு தகுதி இல்லைன்னு சொல்லுவானோ?’ என்று இந்திரா சந்தேகம் கொள்ள, பசுபதி அவள் சந்தேகத்தை ஒதுக்குவது போல, தன் நினைவுகளை இந்திராவிடம் பகிர ஆரம்பித்தான்.

       தன் மனைவியின் நியாயங்களையும், அவள் பிடிவாதத்தையும் அறிந்த ரகுநந்தன், அபிநயாவை பற்றி சிந்திக்க… பசுபதி இந்திராவிடம் நடந்ததை பகிர, அவன் அபிநயாவை பற்றிய நினைவுகளோடு அந்த மாலை பொழுதை நோக்கி பயணிக்க ஆரம்பித்தான்.

பொழுதுகள் விடியும்…

வாசாக தோழிகளே,

        அன்போடும், சில பல வன்முறையோடும் நடந்தது என்ன, என்று அறிந்து கொள்ள பொறுமையாக பயனித்த நல் உள்ளங்களுக்கு நன்றி.

      அடுத்த பதிவில், அந்த மாலை பொழுதில், நடந்ததை பசுபதி உங்களோடு பகிருந்து கொள்வான்.

அடுத்த பதிவோடு உங்களை விரைவில் சந்திக்கிறேன்.