anthamaalaipozhuthil6

anthamaalaipozhuthil6

         அந்த மாலை பொழுதில்…

 அத்தியாயம் – 6

திருமணம் முடியும் வரை, ‘இந்த திருமணம் தேவையா?’ என்ற கேள்வி ரகுநந்தனுக்குள் இருந்து கொண்டே இருந்தது.

       ஆனால், முடிந்தபின் அவன் எண்ணங்கள் சற்று திசை மாறி ஓட ஆரம்பித்தது.

           எத்தனை பெண்களை அவன் சந்தித்திருந்தாலும், அவனுக்கு யார் மேலும் அத்தனை ஈர்ப்பு வந்ததில்லை. இப்பொழுது மனைவி என்ற பெயரில் அருகில் நின்று இருப்பவளும் அதில் அடக்கம்.

 

         அவன் எந்த பெண்களையும் இத்தனை உற்றுப் பார்த்ததில்லை. இன்று அபிநயாவைப் பார்த்தான். அவன் கண்கள் அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியை உற்றுப் பார்த்தது.

 

     அந்த தாலி இரண்டு கண்களால் அவனை  உற்றுப் பார்ப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தியது.

 

        ஏனோ, அந்த மஞ்சள் கயிறு இரும்பு சங்கிலி போல் உருவமெடுத்து அவனை இறுக்குவது போல எண்ணம் தர, தலை அசைத்து தன்னை சிலிர்த்துக் கொண்டு அமர்ந்தான் ரகுநந்தன்.

 

    தலை உயர்த்தி அவளைப் பார்த்தான். அவள் வடிவம் அவன் மனதில் பதியவில்லை. அவள் முகம் காட்டிய உணர்ச்சியைப் படித்துக் கொண்டிருந்தான்.

 

    ‘சந்தோசம், வெட்கம் இப்படி எல்லாம் சொல்ல முடியாது. அழுது வடிகிறாள் என்றும் சொல்லமுடியாது.அவளை அளவிட்டுக் கொண்டான்.

 

    ‘கல்யாண பெண்ணென்று வெட்கப்பட்டுக்கொண்டு நாணி கோணி எல்லாமில்லை. நிமிர்வாகத் தான் இருக்கா. வாத்தியார் அம்மா இல்லை?’ என்று அவனே காரணம் கற்பித்துக் கொண்டான்.

 

     ‘எனக்கு இவளிடம் மாட்டிக்கொண்டு மூச்சு முட்டுவது போல், இவளுக்கு இல்லையா?’ என்ற எண்ணம் தோன்றத் தொண்டையை கனைத்துக் கொண்டான்.

 

     அந்த சத்தத்தில் அவனைத் திரும்பிப் பார்த்தாள் அபிநயா. புன்னகைத்துக் கொண்டாள். ரகுநந்தனும் ஓர் அசட்டுச் சிரிப்பு சிரித்து வைத்தான்.

 

     ‘இவள் என்னிடம் பேசக் கூட முயற்சி செய்யலியே? ஒருவேளை இவளுக்கும் இந்த திருமணத்தில் இஷ்டமில்லையோ?’ என்ற எண்ணம் தோன்றியது.

    ‘அப்படி இருந்தால் ரொம்ப நல்லது.என்று எண்ணிக்கொண்டான் ரகுநந்தன்.

 

அதற்கு மேல் சிந்திக்க இடமில்லாமல், பல சடங்குகள் அரங்கேறியது.

 

     மாலை திருமண வரவேற்பு தொடங்கியது. 

 

               “சார்… நெருக்கமா நில்லுங்க.” என்று போட்டோக்ராபர் கூற, வேறு வழியின்றி இருவரும் நெருக்கமாக நிற்க முயற்சித்தனர்.

 

     “சார்… இடையில் ஓர் குழந்தையே நிற்கலாம்.” போட்டோக்ராபர் கேலியாகக் கூற, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சற்று நெருங்கி வந்தனர்.

 

   “தோளில் கைபோடுங்க.” என்று போட்டோக்ராபர் கூற, ரகுநந்தன் அபிநயாவைத் தர்ம சங்கடமாகப் பார்த்தான்.

 

     “க்ளுக்…” என்று மணமேடை அருகே நின்ற இந்திரா சிரிக்க, உரிமையோடு தன் கைகளை அபிநயாவின் தோள் மீது வைத்தான் ரகுநந்தன்.

 

      அந்த ஸ்பரிசத்தில் சற்று தடுமாறினாள் அபிநயா. “சாரி…” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு கிசுகிசுத்தான் ரகுநந்தன்.

 

 

         ‘சாரி…அவனை அளவிடும் விதமாகப் பார்த்தாள் அபிநயா. அவன் தீண்டலில், அவன் பார்வையில் உள்ள விலகல் தன்மையை நொடிப் பொழுதில் புரிந்து கொண்டாள்.

 

     ‘எல்லாம் நல்லதுக்கு தான். எனக்கும் எல்லா விஷயங்களையும் கூற வேண்டும். என்னை இந்த வாழ்க்கைக்குத் தயார்ப் படுத்திக் கொள்ள சில நாட்கள் தேவை.என்று சூழ்நிலையைச் சாதமாக்கி எண்ணிக் கொண்டாள்.

 

   அவர்கள் பேசிய முதல் வார்த்தை, ‘சாரி…இவர்கள் வாழ்வும், ‘சாரி… என்று சொல்ல கூடிய நிலைக்கு வந்துவிடுமோ?’ என்ற எண்ணத்தோடு இவர்களைச் சேர்த்து வைத்த விதி யோசனையாகப் பார்த்தது.

 

    அபிநயா மெல்லிய புன்னகையோடு தலை அசைத்துக் கொண்டாள்.

 

    ‘பேச மாட்டாளோ? நான் சாரி சொன்னா, அப்படியே தலை அசைக்குறா? ஏதோ தொட்டதால் சாரி சொன்னேன். இப்படியே எல்லாத்துக்கும் இவ கிட்ட வந்து நிப்பேன்னு நினைச்சிட்டாளோ?’ என்ற கேள்வியோடு விலகி நின்று கொண்டான் ரகுநந்தன்.

 

    அதன் பின் பலர் வரவேற்புக்கு வர, இவர்களுக்கு புகைப்படைத்திற்க்காக சிரிப்பதற்கு மட்டுமே நேரம் இருந்தது.

 

  

 

          இதற்கிடையில், கவின் ஓடி வந்து அவர்களுக்கு இடையே அமர்ந்து கொண்டான்.

 

   “ரேவதி! அவனைக் கூப்பிடு.” என்று பவானியம்மாள் கூற, “அம்மா! குழந்தையை என்ன சொல்ல முடியும்? நான் வேணா அவனை கூப்பிட்டுட்டு மண்டபத்தை விட்டுட்டு கிளம்பட்டுமா?” வெடுக்கென்று கேட்டாள் ரேவதி.

 

    சுரேஷ் தன் மாமியாரை ஏளனமாகப் பார்த்தான்.  எங்களை மீறி, திருமணம் செய்து ரகுநந்தன் ஓர் பெண்ணோடு வாழ்ந்து விடுவானா?’ என்ற கேள்வி அவன் கண்களிலிருந்தது.

 

   இந்திரா முதல் வரிசையில் அமர்ந்து கண்டும் காணாமலும் இருப்பது போல் தன் அண்ணனையும் அவன் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

     “அம்மா… கவின் இங்க இருக்கறதுல என்ன பிரச்சனை?” என்று கூறிக்கொண்டு தன் அக்கா மகனை அவனோடு அமர்த்திக்கொண்டான் ரகுநந்தன்.

 

   குட்டி பையன் கவின், அவர்களுக்கு இடையில் தான் அமருவேன் என்று பிடிவாதம் பிடித்து அவர்கள் இடையில் அமர்ந்து கொண்டான்.

 

 

       அபிநயாவின் தாய் பார்வதிதன் கணவன் ராமசாமியைக் கோபமாக முறைத்தார்.

 

    மேடையில் அரங்கேறிக் கொண்டிருந்த கூத்தைப் பார்த்து, “தெரியாத தேவதையை விட, தெரிஞ்ச பிசாசே மேல்.” என்று பசுபதியை மணமுடிக்காததை குத்திக் காட்டினார் பார்வதி.

                      அவர் குரலில் மகள் வாழ்க்கையைப் பற்றிய கவலையே மண்டி கிடந்தது.

 

  ‘தான் செய்ததே சரிஎன்று இறுமாப்பாக நின்று கொண்டிருந்தார் அவர்.  இதற்கு எதுவும் சம்பந்தம் இல்லாதவள் போல் அமர்ந்திருந்தாள் அபிநயா.

 

    அப்பொழுது, பல குழந்தைகள் மணமேடையில் ஏறினர்.

 

      “அக்கா! நீ கல்யாணமாகி வேற ஊருக்கு போறியா?” என்று குழந்தைகள் கேட்க, ரகுநந்தன் குழந்தைகளின் பேச்சில் கவரப்பட்டு அவர்களைப் பார்த்தான்.

   

     கவின் வயதை ஒத்த, சற்று வயது கூடிய குழந்தைகளை அவனுக்குப் பிடித்திருந்தது.

 

பக்கத்துக்கு ஊரு தான் செல்லங்களா. அடிக்கடி வருவேன்.” என்று அபிநயா, குழந்தைகளின் கன்னத்தை வருடிக் கூறினாள்.

 

    “அட போ அக்கா! நீ நம்ம ஸ்கூல்க்கு டீச்சரா வருவன்னு நாங்க எல்லாரும் நினைச்சுகிட்டு இருந்தோம். உன்கிட்ட இப்ப டியூஷனுக்கு வர மாதிரி, நீ கல்யாணத்துக்கு அப்புறமும் இங்னத்தேன்  இருப்ப. உன்கிட்ட டியூஷனுக்கு வரலாமுன்னு நினைச்சோம்.” என்று அவர்கள் கூற, அங்கு வேலை செய்து கொண்டிருந்த பசுபதி சற்று பதட்டமானான்.

 

   மேலும் குழந்தைகள் பேச எத்தனிக்க, ‘இதுக இன்னும் என்னென்ன பேசுமோ?’ என்று அஞ்சி அவர்கள் அருகே சென்றான் பசுபதி.

 

    குழந்தைகளுக்கு ஏதோ பதில் கூற ரகுநந்தன் எத்தனிக்க, “உங்க டீச்சர் கிட்ட ஒரு பாட்டு பாட சொல்லுங்க. அதை விட்டுட்டு என்னன்னவோ பேசிகிட்டு இருக்கீக? பாட்டு கச்சேரி நடக்கு. உங்க டீச்சர் அம்மாவையும் பாட சொல்லுங்க.” என்று கூறினான் பசுபதி.

  “அக்கா… நீ கல்யாண மாலை நல்லா பாடுவியே அக்கா அதைப் பாடு.” என்று குழந்தைகள் ஒரு மனதாகக் கேட்க அபிநயா தர்ம சங்கடமாக நெளிந்தாள்.

 

 

           ‘இவன் ஏன் இப்படி தேவை இல்லாத வேலை பாக்குறான்? மாப்பிள்ளை என்ன நினைப்பாக?’ என்று ராமசாமி, பசுபதியை வெளியே திட்ட முடியாமல், மனதிற்குள் திட்டியபடி அபிநயா அருகே வந்தார்.

    அவர் பார்வையோ, ‘நீ ஏன் இங்கு வந்தாய்?’ என்பது போல் பசுபதியைச் சுட்டெரித்தது.

 

    ‘அம்முக்குட்டி கல்யாணத்தில் எனக்கு இல்லாத உரிமையா?’ என்று அவரை எதிர் பார்வை பார்த்தான் பசுபதி.

     ரகுநந்தன், அவளை பாடுமாறு செய்கை காட்ட, “அது தான் மாப்பிள்ளை பாட சொல்லுறாகல்ல. பாடு.” என்று கூற அபிநயா பாட  ஆரம்பிக்க எத்தனித்தாள்.

 

   “என் தம்பியும் நல்லா பாடுவான்.” என்று தலை சிலுப்பினாள் ரேவதி.

 

   ‘இந்த ஜம்பம் இப்ப தேவையா?’ என்று தன் தமக்கையைப் பார்த்தான் ரகுநந்தன்.

 

  “ஓ…. ஜோரா போச்சு. ஏத்த ஜோடி தான்.” என்று பசுபதியைப் பார்த்தபடி கூறினார் ராமசாமி.

 

      அந்த வார்த்தையில் மகிழ்வாகப் புன்னகைத்தான் பசுபதி.

 

சேர்ந்தே பாடிருங்க.” என்று அங்கு வந்திருந்த கச்சேரி குழுவினர் கூற, ‘அவனுக்கு இந்த கல்யாணமே பிடிக்கலை. இதுல பாட வேற செய்வானா? இப்ப வர பிரச்சனையை பாருங்க.என்று தன் கணவனைக் கர்வமாகப் பார்த்தாள் ரேவதி.

 

அனைவரும் பாட சொல்லி  கேட்கரகுநந்தன் வேறு வழி இன்றி தலை அசைத்தான்.

 

    “அவங்க ஆரம்பிக்கட்டும்.” ரகுநந்தன் கூற, அவள் பாட ஆரம்பித்தாள்.

 

 கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்

சுதியோடு லயம் போலவே இணையாகும்

துணையாகும் சம்சார சங்கீதமே…”   அபிநயா பாட்டை அங்கு நிறுத்தினாள்.

 

         மேலும் பாடலை ரகுநந்தன் தொடர்ந்தான்.

 

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது

மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே அறியாதது…”  

 

      ரகுநந்தன் அபிநயாவைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், அவனை அறியாமல் அவன் கண்கள் அவளைத் தொட்டு மீண்டது.

 

அழகான மனைவி அன்பான துணைவி…”

     

     ‘அழகு தான் அவன் மனம் இப்பொழுது தடுமாறியது. ஆனால், அன்பு? பதில் அறியா கேள்வியாக  அவன் முன் நின்றது.

 

அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள் பயில

மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி

நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி”   என்று அனைத்தையும் மறந்து இசையோடு கலந்து பாடினான் ரகுநந்தன்.

 

     ‘நான் ஏன் பாட சொன்னேன்?’ என்று ரேவதி தன்னை தானே நொந்து கொள்ள, “உன் தம்பி பாடுற பாவனையே சரி இல்லை டீ. நீயே இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிருவ போல?” என்று தன் மனைவியின் காதில் கிசுகிசுத்தான் சுரேஷ்.

 

    “நாரதர் கலகம் நன்மையில் முடியும். என் மக எப்பவுமே நாரதர் வேலை தான் பார்ப்பா வீட்டில்.” என்று பவானியம்மாள் சிரித்த முகமாக மகளை மறைமுகமாக இடித்துவிட்டு மகன் பாடும் பாட்டை ரசிக்க இணைந்து கொண்டார்.

 

  அபிநயாவின் கண்களோ அவர்களை ஒற்றை மரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த பசுபதி மேல் விழுந்தது.

 

சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்

சிரிக்காத நாளில்லையே

துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்

மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே

என் சோகம் என்னோடுதான்…”

 

           வெளி வர துடித்த கண்ணீரை அடக்கிக் கொண்டு, புன்னகையோடு பாடினாள் அபிநயா.

 

      ‘என் அம்முக்குட்டியை நான் ஏன் வருத்தப்படுத்தினேன்.பசுபதியின் கண்கள் கலங்கியது.

 

     மற்றவர்கள் இசையில் மூழ்கி இருக்க, ரகுநந்தனின் கண்கள் இவர்கள் இருவரையும் கணக்கிட்டுக் கொண்டது.

 

      எல்லாரும் கைதட்டி ஆர்ப்பரிக்க, தன்னை மீட்டுக்கொண்டாள் அபிநயா.

 

    அதன் பின் அனைத்தும் மளமளவென்று நடந்தது.

 

ரகுநந்தன் திருமண இரவன்று அபிநயா வீட்டுக்கு வர மறுத்துவிட்டான். இதில் ராமசாமிக்கும் சற்று வருத்தம் தான். அபிநயா எதிலும் தலையிடவில்லை. மண்டபம் மாப்பிள்ளை வீட்டின் அருகே இருப்பதும் அவன் விருப்பத்திற்கு ஏதுவாக இருந்தது.

 

     மாப்பிள்ளையின் விருப்பமே அங்கு மையமாக இருந்ததால் ரேவதி அவள் குடும்பத்தோடு இவர்களை வரவேற்க முன்னே சென்றுவிட்டாள்.

 

ரகுநந்தனும், அபிநயாவும்  ரோஜா பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் சென்றனர்.

 

    இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அங்கு மௌனம் மட்டுமே நிலவியது.

   

விருப்பு, வெறுப்பு அப்படின்னு எதுவும் இல்லை. பெற்றோர்களால், நிச்சியிக்கப்பட் திருமணம். எனக்கு எந்த எதிர்பார்ப்பும், இந்த சினிமாக்களில் வர்ற மாதிரி இல்லையேதிருமணம் முன் நடந்த சம்பவங்களிருந்து நான் இன்னும் முழுசா வெளிய வரலியா? இல்லை பசுபதி அத்தான் வாழ்க்கை பத்தி யோசிக்குறேனா? அதைத் தான் அப்பா பாத்துக்குறேன்னு சொல்லிருக்காங்கல்ல. அது எல்லாம் சரியாகிரும்.என்று தனக்கு தானே கூறிக் கொண்டாள்.

   அபிநயா, ரகுநந்தனை பார்த்தாள்.  தன் கவனத்தை கணவனிடம் திருப்பினாள்.

இவளிடம் பேச வேண்டும். வாத்தியார் அம்மா கறார் பேர்வழியா? இல்லை எப்படின்னு தெரியலை. எப்படி பேச்சை ஆரம்பிக்க?’ அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

 

 ‘எனக்கு தான் ஏதேதோ யோசனை. இவுக ஏன் கடுங்காப்பி குடிச்ச கடுவன் பூனை மாதிரி இருக்காக?’ என்று ரகுநந்தனை யோசனையாகப் பார்த்தாள் அபிநயா. 

 

   காரில் இருந்து இறங்கி அவர்கள் வீட்டிற்குள் செல்ல தயங்க, ‘இவ என்ன பெரிய மாகாராணியா? வீட்டுக்கு தானே வந்திருக்கா? அப்புறம் என்ன தயக்கம்?’ என்று விடுவிடுவென்று முன்னே சென்றான் ரகுநந்தன்.

    பவானியம்மாள் ரேவதியை வைத்து ஆரத்தி எடுக்கச் சொன்னார்.

 

      ‘இவுக பெரியா ஆளு, வான்னு என்னை கூப்பிட்டா  முத்து உதிர்ந்திருமாக்கும்? இல்லை வாயில் தான் கொழுக்கட்டை வச்சிருக்காகளா? நான் ஏன் பக்கத்தில் நிற்கணும்?’ என்று அபிநயா ஒரு மைல் தள்ளி நின்றுகொண்டாள்.

 

    வெளியே வந்த ரேவதி, “ரெண்டு பேருக்கும் சேர்த்து சுத்தணுமா? இல்லை தனித்தனியா சுத்தணுமா?” அவர்கள் இருவரையும் பார்த்து இடக்காகக் கேட்டாள்.

 

    ‘ஒன்னு அவுக பக்கத்துல வரட்டும். இல்லை என்னை பக்கத்துல வான்னு கூப்பிடனும்.அசையாமல் உறுதியாக நின்றாள் அபிநயா.

 

     ‘கூப்பிட்டா தான் வருவாளா? அவளுக்கே தெரியாதா?’ என்று இறுமாப்போடு நின்றான் ரகுநந்தன்.

 

      “பக்கத்துல போய் நில்லுடா.” என்று பவானியம்மாள் கூற, ‘ஐயோ! நான் பக்கத்தில் போறதா? அதை விட கூப்பிடறலாம்.என்று எண்ணிக்கொண்டு, “பக்கத்துல வா.” என்று அழைத்தான் ரகுநந்தன்.

 

     அபிநயாவின் முகத்தில் மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது.

 

             ஆரத்தி எடுத்து உள்ளே சென்ற ரேவதி தன் கணவனிடம், “ஆரத்தி எடுக்க கூட பக்கத்துல நிக்க மாட்டேங்குறாங்க. இவளை அனுப்பிட்டு இந்திராவை சீக்கிரம் கூப்பிட்டு வந்திறலாம்” என்று கூறினாள்.

 

    “எனக்கு அப்படி தோணலை ரேவதி. ஆரத்தி எடுக்கும் பொழுது கூட, இவ்வளவு அழுத்தம் அந்த பொண்ணு கிட்ட இருக்கும் பொழுது நம்ம திட்டம் எதுவும் நடக்காதோன்னு தோணுது. உன் தம்பி தான் இறங்கிப் போனான். அபிநயா சரித்திரமும் அப்படி தான் சொல்லுது.” என்று யோசனையாகக் கூறினான் சுரேஷ். தன் கணவனை புரியாமல் பார்த்தாள் ரேவதி.

 

     “ரேவதி, பாலும், பழமும் கொடு.” பவானியம்மாள் குரல் கொடுக்க, ரேவதி முணுமுணுத்துக் கொண்டே உள்ளே சென்றாள்.

       

     ‘அது என்ன வாத்தியார் அம்மாவுக்கு இவ்வளவு அழுத்தம். என்கிட்டே பேசாமலே சட்டம்  போடுறா?’ என்று அபிநயாவை பற்றி சுயசிந்தனையில் மூழ்கி இருந்தான் ரகுநந்தன்.

    

   அப்பொழுது சற்று நேரத்திற்கு முன் நடந்து கொண்டதற்கு நேர்மாறாக, “அம்மா…” என்று அலறிக்கொண்டு அருகே இருந்தவனின் சட்டையை இறுகப் பற்றினாள் அபிநயா.

 

       ரகுநந்தன் விலகி எத்தனித்து விலக மனமில்லாமல் தன் மனைவியின் முகத்தை பரிதவிப்போடு கைகளில் ஏந்தினான்.

               

பொழுதுகள் விடியும்…

Leave a Reply

error: Content is protected !!