birunthaavanam-13

Birunthaavanam-6cd2394b

birunthaavanam-13

பிருந்தாவனம் – 13

 கிருஷின் கால்களில் ரத்தம் வழிய, “டேய் கிருஷ் என்னடா?” என்று கால்களை பார்த்தார் பாட்டி.

வெளியே நீட்டிக்கொண்டிருந்த வளையை கையில் எடுத்தப்படி, “கண்ணாடி வளையல் துண்டு மாதிரி இருக்கு?” என்று அவர் கூர்மையாக கேட்டபடியே தன் பேரனின் கால்களை சுத்தம் செய்தார்.

“தெரியலை பாட்டி” அவன் குரல் நிதானமாக பொய்யை உண்மை போல் சொல்லியது.

“நம்ம வீட்ல யார் இப்படி ஒரு வளையல் போட்டிருக்கா?” அவர் அடுத்த கேள்வியை தொடுக்க, “இப்ப இது அவசியமா பாட்டி? என்னை எதுக்கு கூப்பிட்டிங்க?” அவன் கோபமாக கேட்பது போல் திசை திருப்பினான்.

“உங்க அப்பா, உனக்கு கல்யாணம் விஷயம் பேசினாங்க. உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்னு உன் கிட்ட கேட்கலாமுன்னு தான் கூப்பிட்டேன். உன் கல்யாண விஷயம் பேச ஆரம்பிக்கும் பொழுது நீ இப்படி காலில் ரத்தத்தோடு வந்து நிக்குற” என்று பாட்டி கூற, அவன் இதயம் திக்கென்று ஒரு நொடி நின்று துடித்தது.

“உங்க அம்மா கல்யாணம் செய்து வந்தப்பவும் இந்த வீட்டில் ஆயிரம் பிரச்சனை. உங்க சித்தி வந்தப்பவும் ஆயிரம் பிரச்சனை. பிருந்தா பெரியவளானப்ப, இந்த குடும்பமே பிரிஞ்சி போச்சு. நம்ம வீட்டுக்கும் பொண்ணுக்கும் அப்படி ஒரு ராசி.” அவர் கூற, கிருஷின் மனம் ஒரு நொடி தன்னவளையும், அவளுடனான பிரச்சனையையும் எண்ணி கொண்டது.

‘ச்சி… ச்சீ… இது என்ன முட்டாள்தனம்’ தன்னை சரி செய்து கொண்டு, “இதெல்லாம் ஒரு மொக்கை காரணமா உங்களுக்கே தெரியலையா பாட்டி. எல்லாத்துக்கும் மனசு தான் காரணம்” தன் பாட்டியின் கைகளை தனக்குள் புதைத்து கொண்டு தைரியம் கொடுப்பது போல் பேசினான் கிருஷ்.

அவர் சோகமாக ‘உம்…’ கொட்ட, “பாட்டி, பிருந்தா கிட்ட பேசணுமா?” தன் பாட்டியின் வருத்தத்தை உள்வாங்கி கொண்டு கேட்டான் கிருஷ்.

“அவளுக்கு என் மேல பாசம் எல்லாம் இருக்கா?” அவர் கழுத்தை நொடிக்க, “இல்லாமல் போகுமா பாட்டி?”அவன் புன்னகையோடு கேட்டான்.

“அதெல்லாம் இருக்காது” அவர் கோபமாக கூற, “அப்படி எல்லாம் இல்லை பாட்டி. பிருந்தா என் கிட்ட பேசினா” கிருஷ் பாட்டியிடம் சமாதானம் பேசினான்.

அவர் கண்களில் மின்னல் போன்ற சந்தோஷ கீற்று சட்டென்று தோன்றி மறைந்தது. “காலேஜ் வந்து இத்தனை வருஷம் பேசாம, இப்ப மட்டும் ஏன் பேசினா?” அவர் முகத்தை திருப்பி கொண்டு கேட்க, “இத்தனை வருஷம் நான் பேசுவேன்னு நினைச்சிருக்கலாம் பாட்டி” அவன் பொறுமையாக கூறினான்.

“என்னடா உன் தங்கச்சிக்கு வக்காலத்து வாங்குறியா? அவ இந்த வீட்டிலிருந்து போனதிலிருந்து நீ எத்தனை தடவை அவ கிட்ட பேசிருப்ப. அவ பேசலைன்னு நீ தானே சொன்ன?” அவர் கேள்வியை தொடுக்க, “பாட்டி, அவ அப்ப சின்ன பொண்ணு பாட்டி. இப்பயும் சின்ன பொண்ணு தான் பாட்டி” அத்தனை பாட்டி போட்டு, அவன் சமரசம் பேசினான்.

“என்ன உன் தங்கை, இப்ப உன் கிட்ட ஒரு தடவை பேசினவுடனே உன் மனசு அப்படியே மாறிடுச்சு” பாட்டி கேலி போல கேட்க, “பாட்டி, உங்க கிட்ட பேசினா நீங்களும் மாறிடுவீங்க.” அவன் சிரித்தான்.

“போடா…” அவர் அவன் கைகளை தட்ட, “பாட்டி, பிருந்தாவை கூட்டிட்டு வரட்டுமா?” ஆசையாக கேட்டான்.

“வேண்டாம் கிருஷ். இந்த வீட்டு மனுஷங்க எப்ப எப்படி நடந்துப்பாங்கன்னு தெரியலை.” அவர் மறுக்க, “பாட்டி…” கிருஷ் மேலும் பேச ஆரம்பிக்க, “வேண்டாம் கிருஷ் . நான் புது வீடு எப்படி இருக்கனுமுனு பிருந்தா கிட்ட பல தடவை சொல்லிருக்கேன். அவளுக்காக தான் இந்த வீட்டுக்கு அவள் பெயர் வர்ற மாதிரி வச்சேன்…” மேலும் பேச முடியாமல் தன் நெஞ்சை தடவி கொண்டு ரங்கம்மாள் பாட்டி தடுமாறினார்.

“பாட்டி, இந்த பேச்சு வேண்டாம்.” அவன் பேச்சை மாற்ற, “சரி… சரி… உன் கல்யாணத்தை பத்தி பேசுவோம்” ஆர்வமானார் பாட்டி.

‘ஐயோ எனக்கு நெஞ்சு வலி வந்திரும் போலயே!” அவன் திருதிருவென்று விழித்தான்.

“என்னடா, கல்யாணம்ன்னா இப்படி முழிக்குற? உன் கல்யாணத்தை வைத்து தான் நான் குடும்பத்தையே ஒன்னு சேர்க்கலாமுன்னு பார்க்குறேன்.” பாட்டி கூற, “பாட்டி, நீங்க உங்க குடும்பத்தை ஒண்ணு சேர்க்க, நானா கிடைச்சேன்?” அவன் தள்ளி நின்று கொண்டான்.

“என்ன டா? இப்படி உன் குடும்பம்முனு பிரிச்சி பேசுற?” அவர் நீட்டி முழக்க, “பாட்டி, நான் இப்ப தான் படிச்சிட்டு இருக்கேன்.” அவன் கூற, “மேற்படிப்பு…” அவர் இடையில் சொருவினார்.

“ரொம்ப முக்கியம். அப்படி இருந்தாலும் பொண்ணுகளுக்கு தான் இப்ப கல்யாணம் பண்ணுவாங்க. பசங்களுக்கு இல்லை.” என்று கிருஷ் உறுதியாக மறுப்பு தெரிவித்தான்.

“அதெல்லாம் வேலை தேடணும். வேலையில் செட்டில் ஆகணும்னு சொல்றவங்களுக்கு தான். நமக்கு பிசினெஸ் இருக்கு. அப்ப, காலாகாலத்தில் கல்யாணம் பண்ணிட வேண்டியது தானே? உங்க அப்பாவும்…” அவர் ஆரம்பிக்க, “பாட்டி, அப்பா கிட்ட சொல்லிடுங்க. எனக்கு இன்னும் ஒரு மூணு வருஷமாவது டைம் வேணும்.” அவன் மாதங்கியை எண்ணியபடி கூறினான்.

பாட்டி கண்களை சுருக்கி சந்தேகமாக பார்த்து, தலை அசைத்தார். அங்கு மேலும் நின்றால், தனக்கு ஆபத்து என்று அவன் வேகமாக நடையை கட்டினான்.

“காலை பார்த்துக்கோ” பாட்டியின் வார்த்தை காற்றோடு தான் சென்றது.

கிருஷ் தன் அறைக்குள் சென்று விலை உயர்த்த கல்லில் செய்யப்பட்ட அவன் வீட்டின் மினியேச்சர் முன் நின்றான். அழகாக இருந்த அந்த வடிவமைப்பை இன்று ரசித்து பார்த்தான்.

 ‘பிருந்தாவனம்…’ பெயரை தடவி பார்த்தான். ‘எல்லாத்தையும் சரி செய்யறேன்’ அவன் தன் குடும்பத்தை மனதில் கொண்டு புன்னகைத்து கொண்டான்.

அவன் கண்கள் சட்டென்று அருகே இருந்த உடைந்த வளையலை தீண்டியது.வளையளோடு, அவள் காதல் பார்வையும் அவன் மனக்கண்ணில் தோன்றியது.

உடைந்த வளையலை எடுத்து ஒட்டி வைத்தான். அதன் உருவம் அத்தனை அழகாக இல்லை. ஆனால், ‘எப்படி இருந்தாலும் உன்னை விட மாட்டேன்’ என்பது போல அவன் அவள் வளையலை ஆசையாக தடவினான்.

தன் அலைபேசியில் இருந்த மாதங்கியின் உருவத்தை அந்த பிருந்தாவனம் பெயர் அருகே வைத்தான். “சீக்கிரம் இந்த பிருந்தாவனத்துக்கு வருவ மாதங்கி.” அவன் உதடுகள் முணுமுணுத்து கொண்டன.

அதே நேரம் பிருந்தா அலைபேசியில், பிருந்தாவன வீட்டின் புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தாள்.

அந்த வீட்டை ஆசையாக தடவினாள். ‘இது என் வீடு. என் சொந்தபந்தம் இங்க தான் இருக்கு. நான் அங்க போகணும். எப்படி?’ அவள் கண்களில் ஏக்கத்தோடு கண்ணீர் சூழ்ந்து கொண்டது.

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து. பிருந்தா கிருஷோடு அதன் பின் பேசவில்லை. மாதங்கி, கிருஷின் பக்கம் திரும்புவதே இல்லை. பார்வை, புன்னகை, பேச்சு என அனைத்தையும் முழுதாக நிறுத்தி கொண்டாள் மாதங்கி. கிருஷின் பார்வை மாதங்கியை ஏக்கத்தோடு தழுவியது. ஆனால், அவன் அவளை சிறிதும் தொந்திரவு செய்யவில்லை.

அன்று கிருஷிற்கு கல்லூரியின் கடைசி நாள்.

 ‘இன்னைக்கு நான் மாதங்கி கிட்ட பேசியே ஆகணும்.’ கிருஷ் தன் விழிகளை மாதங்கியை தேடி சூழவிட்டான்.

 பிருந்தா, மாதங்கி இருவரும் வண்டி எடுக்கும் இடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

 “அச்சோ…” தன் கைகளில் தலையை வைத்து கொண்டு நின்றாள் மாதங்கி.

“என்ன ஆச்சு?” பிருந்தா கேட்க, “நீ போய்கிட்டே இரு. நான் இதோ வந்திடுறேன்” கூறிக்கொண்டு ஓடினாள் மாதங்கி.

மாதங்கி தனியே சென்றதை கிருஷ் கவனிக்க தவறவில்லை.

‘கம்ப்யூட்டர் லேப்பில் லூசு மாதிரி மறந்து போய் என் ஹால் டிக்கெட்டை மறந்து வச்சிட்டேன்’ எண்ணியபடியே லேபிற்குள் நுழைந்தாள் மாதங்கி.

காலியாக இருந்தது அந்த கம்பியூட்டர் லெப். மாதங்கி ஹால் டிக்கெட்டை தேட, பின்னே கதவு திறந்து மூடும் சத்தம் கேட்க, மாதங்கி திரும்பி பார்க்க அங்கு கிருஷ் நின்று கொண்டிருந்தான்.

மீண்டும் மாதங்கி தேடுதல் வேட்டையில் இறங்க, ‘திமிர் பிடித்தவள். இப்படி தான் பார்த்தும் பார்க்காத மாதிரி நடந்துப்பா. இன்னைக்கு தான் கடைசி நாள். அவ, என்ன பேசினாலும் சண்டை வளர்க்க்காம உன்னை புரிய வை கிருஷ்’ தனக்கு தானே கூறிக்கொண்டு அவளுக்காக காத்திருந்தான் கிருஷ்.

தன் ஹால் டிக்கெட்டை எடுத்துவிட்டு, அவள் வெளியே செல்ல எத்தனிக்க, கை நீட்டி அவளை வழிமறித்தான்.

தன் கைகளை கட்டிக்கொண்டு அவள் அவனை மௌனமாக பார்த்தாள்.

‘சீனியர் நிக்குற தோரணையே சரி இல்லை. மாதங்கி, பொறுமை. எதுவும் பேசி சண்டை வளர்க்காம போய்டு’ தனக்கு தானே அறிவுறுத்தி கொண்டாள்.

“மாதங்கி…” அவன் குரல் தேனாய் வழிந்தது.

“நான் இனி உன்னை எங்க பார்ப்பேன், எப்படி பார்ப்பேன்னு தெரியலை. நான் உனக்கு அடிக்கடி ஃபோன் பண்ணுவேன்” அவன் ஏக்கத்தோடு கூற, அவள் விழிகள் அதிர்ச்சியில் பெரிதாக விரிந்தது.

“பதில் சொல்லு மாதங்கி” அவன் கூற, ‘எதுக்கு?’ என்பது போல் அவள் அப்பாவியாக பார்த்தாள்.

“இப்படி புரியாத மாதிரி பார்க்காத. நான் என்ன கேட்குறேன்னு உனக்கு தெரியும்” அவன் கேட்க, “என் பதிலும் உங்களுக்கு தெரியும்” அவள் நிதானமாக கூறினாள்.

“நான் உன்னை விரும்புறேன் மாதங்கி. நீயும் என்னை விரும்புற” அவன் கூற, “அதை நான் சொல்லணும்” அவள் அழுத்தமாக கூறினாள்.

அவள் உதாசீனத்தில், “பொய் சொல்ற. உங்க அண்ணனுக்காக நீ பொய் சொல்ற” அவன் குரல் ஏறியது.

“உண்மையா பொய்யான்னு நான் தான் சொல்ல முடியும்” அவள் குரலில் நக்கல் எதிரொலிக்க, “நான் உன்கிட்ட மட்டும் தான் இவ்வளவு பொறுமையா பேசிட்டு இருக்கேன்” அவன் பொறுமையை இழுத்து பிடிக்க, “அவசியமில்லை. நீங்க என் கிட்ட பேசவே வேண்டாம். பேசுறதுக்கு ஒண்ணுமில்லை” அவள் அவன் பொறுமையை சோதித்தாள்.

“நான் அத்தனை நல்லவன் இல்லை மாதங்கி” அவனுடைய இத்தனை நாள் காத்திருப்பை தகடுபொடியாக்கி கொண்டிருந்தது அவள் நிராகரிப்பு.

‘இந்த மிரட்டலுக்கு நான் ஆள் இல்லை’ என்பது போல, “அப்படி தான் என் அண்ணனும், முகுந்தனும் சொல்லுறாங்க. உண்மை தான் போல” தன் முடியை அசட்டையாக சிலுப்பிக் கொண்டாள் மாதங்கி.

அவளது அண்ணன் முகுந்தன் என்ற பேச்சில், “ஏய்…” அவன் அவள் கழுத்தை பிடித்து சுவரோடு சாய்த்தான்.

அவன் அருகாமையில், அன்றைய நிகழ்வு ஞாபகம் வர அவள் விழிகள் அவனை ஆழமாக பார்த்தது.

அவன் விழிகளோ, அவளை ரசித்து பார்த்தது. ‘என்ன தைரியம்? யாரும் இல்லை. நான் அவள் கழுத்தை பிடிச்சிருக்கேன்! இப்படி அசராம என்னை பார்குறா?’ அவன் அவளை கண்களை சுருக்கி பார்த்தான்.

“கழுத்தை பிடித்தலும் சரி, காலை பிடித்தாலும் சரி. என் பதில் எனக்கு உங்களை பிடிக்கலை” அவள் குரல் பிசிறில்லாமல் வெளிவந்தது.

அவன் இப்பொழுது அவள் பேச்சில் பெருமிதத்தோடு சிரித்தான். “உனக்கு என்னை பிடிக்குமுன்னு நான் நிரூபிக்கட்டுமா?” அவன் ஆள்காட்டி விரல் அசட்டையாக சிலுப்பிய அவள் முடியை ஒதுக்கியது.

அவன் விரல் அவள் முகவடிவை அளந்தது. நெற்றி, கன்னம் என்று அவள் முகம் அருகே சென்று தீண்டாமல் வலம் வந்தது. அவன் விரலோடு அவன் சுவாசமும், அவன் வாசமும்.

 அவன் தீண்டலின் விருப்பமின்மையை, “தடக்… தடக்…” என்ற அவள் இதய துடிப்பு வெளிக்காட்டி கொண்டிருந்தது.

 அவனோ, அவள் அழகில் அவள் விழி பேசும் தைரியத்தில், அவள் கொழுகொழு கன்னம் காட்டும் ஈர்ப்பில் கிறங்கி நின்றான். அவள் அருகாமை அவனுக்கு முதல் நாள் தீண்டலை நினைவு படுத்த, அவள் கன்னங்களோ அவன் கொடுத்த காதல் பரிசை நினைவு படுத்தியது.

 அவள் இதய ஓசைக்கு சிறிதும் குறையாத இதய ஓசையை அவன் இதயமும் “தட்… தட்…” என்று காதல் ராகம் பாடியபடி எழுப்பியது.

தீண்டாமல் தீண்டிய அவன் விரல்கள் அவள் இதழ் அருகே சென்று அவள் உதட்டை மென்மையாக தீண்டி, “உனக்கு என்னை பிடிக்கும்முனு இந்த வாயால் சொல்ல வைக்கட்டுமா?” புருவம் உயர்த்தினான்.

“ம்ச்…” அவள் தன் முகத்தை அசட்டையாக திருப்பி கொள்ள, “பேசமா, என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க சீனியர்ன்னு உன்னை கதற வைக்கட்டுமா?” அவள் அசட்டையில் அவன் தன்மானம் சீண்டப்பட்டு கேட்டான்.

இப்பொழுது அவள் பெருமிதமாக சிரித்தாள். “நான்? உங்க கிட்ட?” அவள் நக்கலாக கேட்டாள்.

அவள் நக்கலில் அவன் சினம், காக்கும் விரதத்தை கைவிட்டது.

“நான் நினச்சா என்ன வேணுமின்னா நடக்கும். மாச சம்பளம் வாங்குற போலீஸ்காரன் தங்கை உனக்கே இவ்வளவு இருந்தா, ஒரு அரசியல்வாதி பையன் எனக்கு எவ்வளவு இருக்கும்?” அவன் பற்களை நறநறத்தான்.

“நான் போலீஸ்காரன் தங்கையா பேசலை. சாதாரணமா சொல்றேன். எனக்கு உன்னை இப்ப சுத்தமா பிடிக்கலை. உன்னை பார்த்தால் உன் திமிர் தான் எனக்கு ஞாபகம் வருது. உன் பின்புலம், அதனால் உனக்கு இருக்கிற திமிர். எங்க அண்ணன் கிட்ட நடந்துகிட்ட விதம். வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்ற பெண்ணை நீ கட்டாயப்படுத்திற உன் கேவலமான குணம் இதெல்லாம் தான் ஞாபகம் வருது. எனக்கு உன்னை பிடிக்கலை… உன்னை…” அவள் மேலும் பேச முடியாமல் அவன் ஆள் காட்டி விரலால் அவள் சங்கை அழுத்தினான்.

மூச்சு திணறிய மாதங்கி பேச முடியாமல் தவித்தாள். அவள் கண்கள் வலியை வெளிப்படுத்த, அவன் கண்கள் வலி நிறைந்த அவள் முகத்தை காண சகியாமல் சட்டென்று இறுக மூடி கொண்டது. அவள் உடல் நடுக்கம், அவன் இதயத்தை தொட்டது. இதயமோ காதலை யாசிக்க, மூடிய அவன் விழிகளோ இரு சொட்டு கண்ணீர் விடுத்து அவள் வலியை தன் வலியாக்கி அவள் பாதத்தை தொட்டது.

வலியிலும் அவள் விழிகள் கண்ணீரை சிந்தவில்லை. பிடிவாதமாக விழிவிரித்து அவனை முறைத்து பார்த்தது.

‘நம்ம வீட்டுக்கும் பொண்ணுக்கும் ராசி இல்லை’ பாட்டி சொன்னது அவனை ஒருபக்கம் உறுத்த, தன் நெஞ்சை தடவி கொண்டு விலகி நின்றான்.

எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து, அவளிடம் பொறுமையாக பேச ஆரம்பித்தான்.

“இந்த பார் நான் நினச்சா உன்னையும் உன் குடும்பத்தையும் என்ன வேணும்ன்னாலும் பண்ண முடியும். யானையோடு எறும்பு மோத கூடாது” அவன் நிறுத்த, “யானை காதில் எறும்பு போனால் தெரியும் சேதி” அவள் அவன் பேச்சில் குறுக்கிட்டாள்.

பாழாய்ப்போன அவன் மனம், அவள் பேச்சை அப்பொழுதும் ரசிக்க தான் செய்தது. தோன்ற எத்தனித்த குறுஞ்சிரிப்பை அடக்கி கொண்டான்.

“குடைச்சல் கொடுத்தாலும் உன் அருகாமையை நான் ரசிப்பேன் பேப்ஸ்” அவன் சிரிக்க, “ஒரு நாளும் நடக்காது” அவள் உறுதியாக கூறினாள்.

“நடக்கும் பேப்ஸ். இப்ப அவசரமில்லை. நான் உன் சம்மதத்தை கேட்டு உன் முன்னாடி நிற்கலை. அதுக்கு இப்ப அவசரமும் இல்லை. அவசியமும் இல்லை. நீ என்ன பண்றன்னா, நான் மெசேஜ் பண்ணினா, ஃபோன் பண்ணினா எடுக்கணும் அவ்விளவு தான். இதுக்கு சரின்னு சொல்லிட்டு கிளம்பு” என்று அவன் கூற, “நான் பொய் வாக்குறுதி எல்லாம் தர முடியாது” அவள் கூற, அவன் சிரித்து கொண்டான்.

“அது தெரிந்து தானே பேப்ஸ், உன்னை சரின்னு சொல்ல சொல்றேன். நீ சொன்னா, செய்வ” அவன் அவள் பதிலுக்காக காத்திருக்க, “மாட்டேன்… மாட்டேன்… நான் செத்தாலும்…” அவள் கடுப்போடு சத்தம் செய்ய, அவன் அவள் அதரங்களை தன் கைகளால் மூடி இருந்தான்.

மறுப்பாக வலி நிறைந்த கண்களோடு தலை அசைத்தான். அதில் இப்பொழுது காதல் இல்லை. அக்கறை மட்டுமே நிறைந்து இருந்தது

“என்ன பேசுற மாதங்கி. நீ சரின்னு சொல்ற, இல்லைனா நீ இங்க இருந்து போக முடியாது” அவன் சட்டென்று மீட்டுக்கொண்டு பேசினான்.

“என்னை மிரட்டுறியா?” அவள் அதரங்கள் அவன் கைகளுக்கு இடையிலும் அழுத்தமாக ஒலித்தது.

“நீ தான் மிரட்ட வைக்குற” அவன் குரல் இயலாமையை வெளிப்படுத்தியது.

“என்ன பண்ண முடியும் உன்னால?” அவன் கைகளை தட்டிவிட்டு, அவள் குரல் சவால் விட்டது.

அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ‘என்னை இவளும் விரும்புற. ஆனால், ஒத்துக்க மாட்டேங்குறா. விட்டு பிடிக்கலாமுன்னு நினைச்சா அதுவும் நடக்கலை. இன்னைக்கு விட்டா, ஒரு நாளும் பிடிக்கவே முடியாது. மாதங்கி படிப்பை முடிச்சதும், இவ அண்ணனும் முகுந்தனும் சுதாரிச்சிருவாங்க. நான் ஏதாவது செய்யணும்’ அவன் மனம் உறுதியாக நம்பியது.

“நீ இங்க இருக்கிறது காலேஜ் முழுக்க தெரிஞ்சா உனக்கு தான் அசிங்கம். நான் நினைக்குறது தன்னை போல நடக்கும்” அவன் கற்பனை கோட்டை கட்ட, “லூசா நீ. அப்படி எல்லாம் பேரு கேட்டு போச்சுன்னு நான் உன்னை கல்யாணம் பண்ண மாட்டேன். இன்னைக்கு கல்யாணம், நாளைக்கி டைவர்ஸ் பொண்ணுங்க போயிட்டு இருக்காங்க. நாட்டாமை மாதிரி உனக்கு தீர்ப்பு சொல்லுவாங்க, நான் உன்னை கட்டிப்பேனு நினைச்சியா. சின்ன புள்ளை மாதிரி விளையாடிகிட்டு. வழிய விடு கிளம்புறேன்” அவனை ஒதுக்கி கிளம்ப எத்தனித்தாள் மாதங்கி.

“நான் உன்னை கஷ்டப்படுத்த கூடாதுன்னு நினைக்குறேன். ஆனால், நீ விட மாட்டேங்குற! யாரும் இப்ப இங்க வரமாட்டாங்க. நீ அத்தனை சீக்கிரம் இங்கருந்து கிளம்ப முடியாது. நம்ம விஷயம் உங்க வீடு வரைக்கும் இன்னைக்கு எட்டியே ஆகும்” அவன் குரலில் சவால் இருக்க, மாதங்கியின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

அவன் வழி விடாமல் நிற்க, ‘உன்னால் முடிந்ததை நீ செய்து கொள். உன்னுடனான, எந்த பேச்சு வார்த்தைக்கும் நான் இடம் கொடுக்க மாட்டேன்’ என்பது போல் அவன் எதிரே அசட்டையாக அமர்ந்திருந்தாள் மாதங்கி.

‘அவள் தொடர்ந்து பேசினால், நிச்சயம் என் காதலுக்கு வழி கிடைக்கும்’ என்று அவன் பிடிவாதம் பிடிக்க, ‘அவனிடம் பேசினால் எங்கு காதலுக்கு வழி பிறந்திடுமோ?’ என்று அவள் பிடிவாதமாக நிற்க, வானம் அதன் பொழிவை இழந்து இருள் சூழ ஆரம்பித்தது.

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!