Birunthaavanam-30

Birunthaavanam-30
பிருந்தாவனம் – 30
மாதங்கியின் வீட்டு வாசலில்.
முகுந்தன் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்.
தன் போலீஸ் ஜீப்பை நிறுத்திவிட்டு அரவிந்த் இறங்க, முகுந்தன் தன் தோழனை நோக்கி ஓடி வந்தான்.
“என்ன ஆச்சு முகுந்தன்? ஏன் என்னை அவசரமா வீட்டுக்கு வர சொன்ன?” அரவிந்த் தன் தோழனிடம் வினவினான்.
“ஒரு தப்பு நடந்து போச்சு. மாதங்கி போயிருக்கிற ஊரில் தான் கிருஷும் இருக்கிறான்னு நான் பேசும் பொழுது உளறிட்டேன். இப்ப ஆண்ட்டி, செம்ம டென்ஷனா இருக்காங்க” முகுந்தன் பதட்டமாக பேசினான்.
“ஓ…” அரவிந்தின் முகத்தில் யோசனை பரவியது.
“என்ன பண்றது?” முகுந்தன் யோசனையாக கேட்க, “நல்லது தான் முகுந்தன். எப்படியும் தெரிஞ்சி தான் ஆகணும். எப்படி சொல்றதுன்னு நான் நினைச்சிட்டு இருந்தேன். நீ சொல்லிட்ட” அரவிந்த் கூற, “என்ன நக்கலா?” என்று முகுந்தன் சிடுசிடுத்தான்.
“உள்ள போவோம். என்ன நடக்குதுன்னு பார்ப்போம்?” என்று அரவிந்த் கூற, முகுந்தன் பின்னே சென்றான்.
மொத்த குடும்பமும் அங்கு குழுமி இருந்தது.
“ஏன்டா இப்படி பண்ண?” கோபமாக வெளி வந்தது மாதங்கியின் தாய் மரகதவல்லியின் குரல்.
“அம்மா…” அரவிந்த் சற்று தயங்கினான்.
“உங்களை கொலை செய்ய நினைச்சது கிருஷ் அப்படிங்கற சந்தேகம் எனக்கு இன்னும் இருக்கு. ஆனால், அவங்க அரசியல் பலத்தை வைத்து, அதெல்லாம் இல்லைன்னு எல்லா கேஸையும் ஒன்னுமில்லாம ஆகிட்டாங்க. அவன் பெரிய ஆஃபீஸ்ர் ஆகிட்டான்.” அவர் முகத்தில் வருத்தம் ஒரு தாயாக.
மூச்சை உள்ளிழுத்து தன் பேச்சை தொடர்ந்தார்.”நம்ம பொண்ணு கூட நம்ம பக்கம் இல்லை.” மரகதவல்லி நிறுத்த, மொத்த குடும்பமும் அவர் சொல்வது சரி என்பது போல் மௌனித்து கொண்டு இருந்தது.
“ஆண்ட்டி, கிருஷ் அதை செய்திருக்க மாட்டான். எனக்கு கிருஷை பத்தி தெரியும்.” முகுந்தனின் குரலில் உறுதி.
“அம்மா, கிருஷ் மோசமானவன் கிடையாது.” என்று அரவிந்த் கூற, “ஓ, அது தான் நம்ம வீட்டு பொண்ணை மிரட்டி கல்யாணம் வரைக்கும் கொண்டு போனானா?” என்று மரகதவல்லி தன் மகனை மடக்கினார்.
“அம்மா, கிருஷ் ரொம்ப நல்ல பையன்னு நான் சொல்லலை. ஆனால், அவன் நல்லவன் தான். அவன் காதலை ஒரு நாளும் யார் கிட்டையும் மறைக்க நினைக்கலை. அவன் மாதங்கி கிட்ட காதலை சொல்றதுக்கு முன்னாடி என் கிட்ட சொன்னான் அம்மா. காதலியோட அண்ணன் கிட்ட காதலை சொல்ற ஒரு பையன் ரொம்ப கெட்டவனா இருக்க முடியாது அம்மா” அரவிந்த் நிறுத்த, மரகதவல்லி அவனை யோசனையாக பார்த்தார்.
“என்னடா, இத்தனை வருஷம் இல்லாம உன் காத்து கிருஷ் பக்கம் வீசுது?” மரகதவல்லி கேள்வியாக நிறுத்தினார்.
அரவிந்த் ஒரு நொடி சிந்தித்தான். காலத்தின் போக்கில், தான் கிருஷிற்கு சாதகமாக பேசுவோம் என்று அவனும் நினைக்கவில்லை.
ஆனால்… அவனால் மேலும் சிந்திக்க முடியவில்லை.
“தெரியலை அம்மா” தன் முகத்தை திருப்பி கொண்டான் அரவிந்த்.
“இப்ப, நீ என்ன தான் சொல்லவர?” நழுவ எத்தனிக்கும் தன் மகனை கிடுக்குப்பிடியாக பிடித்தார் மரகதவல்லி.
“குறைந்தபட்சம் மாதங்கி இருக்கிற காரை கண்டிப்பா கிருஷ் ஆக்சிடென்ட் பண்ணிருக்கவே மாட்டான்” அரவிந்த் போலீஸ்காரனாக பேசினான்.
“அதுக்கு…” அவர் அரவிந்தை கோபமாக பார்க்க, “ஆண்ட்டி, சுத்தி வளைத்து பேச ஒன்னுமில்லை. மாதங்கி கிருஷை தவிர யாரையும் கல்யாணம் செய்ய மாட்டா. உங்க திட்டுக்கு பயந்து இங்க வராம போற ஆள் கிடையாது மாதங்கி. வீட்டுக்கு வந்தா நீங்க என்னை கல்யாணம் செய்ய சொல்லுவீங்க. நாங்க ரெண்டு பேரும் அப்படி பழகலை. இதை சொன்னா, நீங்க வேறு யாரையாவது கல்யாணம் பண்ண சொல்லுவீங்க ” என்று முகுந்தன் இடைபுகுந்தன்.
“நான் என்ன அந்த பையனை கல்யாணம் செய்ய வேண்டாமுன்னா சொன்னேன். ஊரை கூட்டி கல்யாணத்தை அவ தானே நிறுத்தினா?” மரகதவல்லி கோபத்தின் உச்சிக்கே சென்றார்.
“அது அன்னைக்கு… அன்னைக்கு இருந்த சூழ்நிலை…” அரவிந்த் தடுமாற, “என்ன அண்ணனும், தங்கையும் விளையாடுறீங்களா? ஊரை கூட்டி கல்யாணத்தை நிறுத்திட்டு… அவங்க வீட்டு ஆளுங்க உங்களை கொல்ல வேண்டாம். நானே கொல்லுவேன். அந்த பையன் தான் வேணுமுன்னு அவ மட்டும் சொல்லி பார்க்கட்டும். அப்ப தெரியும் சேதி… நான் கொல்லுவேன் அவளை.” என்று மரகதவல்லி ருத்திரதாண்டவம் ஆகிவிட்டார்.
அரவிந்தும், முகுந்தனும் சற்று மிரண்டுவிட்டனர்.
“என்ன தைரியத்துல, நீ அவளை அவன் இருக்கிற ஊருக்கு அனுப்பி வைப்ப? உங்களுக்கு எல்லாமே விளையாட்டா இருக்கா?” தன் மகனை பார்த்து கோபமாக கேட்டார்.
“அந்த பையன் அவளை ஏதாவது செய்திட்டா என்ன செய்ய முடியும்? நாம இங்க இருக்கோம்?” தாயாய் அவர் மனம் பதற, “அப்படி எல்லாம் எதுவும் நடக்காது அம்மா.” அரவிந்த் கூற, அவன் கன்னத்தில் , “பளார்…” என்று அறைந்தார்.
“அம்மா…” என்று அரவிந்த் தடுமாற, “பொண்ணுகளை பெத்து வளர்த்தவங்களுக்கு தான் வலி புரியும் அரவிந்த். ஒரு பொறுப்பான அண்ணனா நீ நடந்துருக்கியா?” அவர் கேட்க, அரவிந்த தடுமாறினான்.
“ஊரை கூட்டி அவனை வேண்டாமுன்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்தி, ஒரு பையனை அவமான படுத்தி இருக்கீங்க. அந்த பையனுக்கு மனசில் எவ்வளவு வலி இருக்கும். அதுவும் சாதாரண பையன் இல்லை. அரசியல்வாதி வீட்டு பையன். அவங்க வீட்டில் நம்ம குடும்பம் மேல எவ்வளவு துவேஷம் இருக்கும்?” இப்பொழுது மாதங்கியின் தந்தை பேச, மாதங்கியின் தாய் தன் தலையில் அடித்து கொண்டு அழுதார்.
“இப்ப அவனை பார்த்து மனசு மாறி, அவனை தான் கல்யாணம் பண்ணுவேன்னு மாதங்கி சொன்னா, என்ன பண்றது? இந்த கல்யாணம் நடக்குமா? நாம, எந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு, அவங்க கிட்ட பேச முடியும்?” மாதங்கியின் தந்தை பொறுமையாக தன் மகனை பார்த்து கேட்டார்.
“எங்க கிட்ட எதையும் கேட்கனுமுன்னு உங்களுக்கு தோணவே இல்லைல? அவளா கல்யாணத்தை நிறுத்தினா. இப்ப அந்த ஊருக்கு போகணும்னு நீங்களா முடிவு பண்ணிடீங்க” மரகதவல்லி கேட்க, “அம்மா, கிருஷ் அங்க இருக்கிற விஷயம் மாதங்கிக்கு அங்க போற வரைக்கும் தெரியாது. கிருஷ் இப்ப வரைக்கும் யாரையும் கல்யாணம் பண்ணிக்கலை” முகுந்தன் தன் தோழனுக்கு கரம் கொடுத்து, தானும் இதில் கூட்டு, என்று காட்டிக்கொண்டான்.
“கிருஷ் காலேஜ் படிக்குற வயதில் கொஞ்சம் முன்ன பின்ன இருந்திருக்கலாம் அம்மா. ஆனால், அவன் இப்ப ஜெம் ஆஃப் எ பெர்சன். அவன் இருக்கிற இடத்தில், ஒழுங்காவும், அவ்வளவு நல்லதும் செய்யறான் அம்மா. ஹி இஸ் எ ரோல் மாடேல். இல்லைன்னா, நான் என் தங்கையை அவன் இருக்கிற இடத்துக்கு நம்பிக்கையா அனுப்பி வைப்பேனா?” அரவிந்த் கேள்வியாக நிறுத்தினான்.
“சரி, நீங்க ரெண்டு பேரும் சொல்ற மாதிரியே வச்சிப்போம். எதுக்கு மாதங்கியை அவன் இருக்கிற ஊருக்கு அனுப்பி வச்சீங்க? அவ வேலை விஷயமா மட்டுந்தான் போயிருக்கான்னு நீங்க சொல்லாதீங்க…” குடும்பத்தினர் வினவ, “…” அரவிந்த், முகுந்தன் இருவரும் மௌனம் காத்தனர்.
“அவங்க ரெண்டு பேரும் பார்த்து பேசினா, எல்லாம் சரியாகுமுன்னு யோசிச்சீங்களா? நின்னு போன கல்யாணத்தை திரும்ப நடத்தவா? உங்களாலையே சொல்ல முடியலை தானே? ஏன்னா, எதுமே நடக்காது. அந்த பையன் நல்லவனா இருந்தாலும், எதுவும் மாறாது. அவங்க வீட்டு ஆளுங்க, மாதங்கியை ஏத்துப்பாங்களா?” என்று மரகதவல்லி கேட்டார்.
“ஏத்துக்கிட்டாலும், மாதங்கி அந்த வீட்டில் சந்தோஷமா வாழ முடியுமா? ஊரை கூட்டி வேண்டாம்முனு சொன்னவ தானே. அப்படிங்குற எண்ணம் அந்த பையனுக்கு ஆயுசுக்கும் இருக்கும். அந்த வீட்டு ஆளுங்க மாதங்கியை ஒரு நாளும் மன்னிக்க மாட்டாங்க. இப்படி சிக்கல் இருக்கிற இடம், மாதங்கிக்கு ஒரு நாளும் வேண்டாம்.” மாதங்கியின் தந்தை உறுதியாக கூறிவிட, அரவிந்தும் முகுந்தனும் பெரியவர்கள் கூற்றுக்கு ஆமோதிப்பாக தலை அசைத்தனர்.
“நீங்க ரெண்டு பேரும் போறீங்க. அவளை கையோட வீட்டுக்கு கூட்டிட்டு வரீங்க.” அரவிந்துக்கும், முகுந்தனுக்கும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
அதே நேரம் பாணதீர்த்தம் அருவி அருகே…
கிருஷ் மாதங்கியிடம் மௌனம் மட்டுமே நிலவி இருந்தது. மாதங்கி அங்கிருந்த பாறையில் அமர்ந்திருந்தாள்.
கிருஷ் அவள் எதிரே கைகளை கட்டிக்கொண்டு, மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.
அவள் திருப்பி கொடுத்த காதல் பரிசை தன் விரல்களால் தடவி பார்த்தான்.
‘நான் கொடுத்த காதல் பரிசை வேண்டாமுன்னு திருப்பி கொடுத்தா, உடனே கொடுத்திருக்கணும். அது என்ன இத்தனை வருஷம் அவ கிட்ட பத்திரமா வச்சிருந்து இப்ப திருப்பி கொடுக்கறது?’ அவன் மனம் அவளிடம் இப்படி கேட்க தான் துடித்தது.
அவன் அவளை பார்த்தான். அவள் எங்கோ பார்த்தபடி வேறு சிந்தனையில் சஞ்சரிக்க, ‘வேண்டாம் கிருஷ். இப்படி எல்லாம் பேசி எதை வளர்க்க போற? காதல்ங்கிற பெயரில் பிரச்சனையையா?’ அவன் அறிவு அவன் முன் கேள்வி எழுப்ப, தன் வாயை இறுக மூடிக்கொண்டான்.
அவன் அறிவு அவன் மனதை கட்டுப்படுத்தினாலும், விரல்களை கட்டுப்படுத்த முடியாமல் தோற்று போனது. அவன் விரல்கள் அவன் கன்னத்தை ஆசையாக வருடி கொண்டது.
‘அட, நான் ஒரு விடலை பையன் கூட இல்லை. எவ்வளவு பெரிய ஆஃபீஸ்ர். ஒரு பெண்ணின் ஸ்பரிசம் என்னை இப்படி நிலைகுலைய செய்யுமா?’ சற்று முன் அவள் அருகாமையில் துள்ளிய மனதை எண்ணி புன்னகைத்து கொண்டான். சற்று அச்சமும் கொண்டான்.
“நல்லதுக்கில்லை…” அவன் தனக்கு தானே முணுமுணுக்க, அவன் குரலில், “ம்…” என்று திக் பிரமை பிடித்தவள் போல் அவனை பார்த்தாள் மாதங்கி.
“மாதங்கி…” அவன் அழைக்க, “கிருஷ்…” அவள் குரலில் நிதானம் வந்திருந்தது.
அவள் முன் மண்டியிட்டான். அவள் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.
அவள் கைகளை தன் கைகளுக்குள் எடுத்து வைத்து கொண்டான். நட்பாய்! ஆறுதலாய்!
“மாதங்கி, நான் சொல்றதை நீ சரியான கோணத்தில் புரிஞ்சிக்கணும்” அவன் அத்தனை மென்மையாக பேசினான்.
“ஏதோ ஒரு எண்ணம் உனக்குள்ள வந்திருச்சு. அதை தூக்கி போட்டிரு” அவன் கூற, அவள் தலை அசைத்தாள்.
“நமக்குள்ள நட்பு மட்டுந்தான்.” அவன் கூற, அவள் தலை அசைத்தாள்.
“உங்க வீட்டிலும், இது நடக்காது. என் வீட்டிலும் இது நடக்காது” அவன் கூற, அவள் தலை அசைத்தாள்.
“சில எண்ணங்களை வளர்த்துக்கிட்டா, அது நடக்கலைனா அது ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆரம்பத்திலிலேயே கிள்ளி தூக்கி போட்டுரனும்.” அவன் அனுபவித்த வலியை குரலில் தேக்கி கொண்டு கூற, அவள் தலை அசைத்து கொண்டாள்.
“நீ இந்த எண்ணத்தை வளர்த்துக்கிட்டு, அது நடக்காம போய் நீ வருத்தப்பட்டா சும்மா போகிற உன் மனசில் இப்படி ஒரு எண்ணத்தை வளர்த்து, உன்னை கஷ்டப்படுத்தியது நான் தான் அப்படிங்கிற குற்ற உணர்ச்சி என்னை கொன்னுடும்.” அவன் கூற, அவள் அவனை கூர்மையாக பார்த்தாள்.
“நீ ஊரை கூட்டி என்னை வேண்டாமுன்னு சொல்லிட்ட, உன்னை பழிவாங்குற மாதிரி நான் இப்படி பேசுறேன்னு நீ என்னை தப்பா நினைச்சுக்க கூடாது” அவளுக்கு புரிய வைக்க அவன் அரும்பாடு பட, “என் சீனியர் அப்படி எல்லாம் செய்ய மாட்டார்ன்னு எனக்கு தெரியும்.” அவள் பளிச்சென்று கூற, அவன் முகத்தில் புன்னகை தோன்றியது.
“நடந்துக்கிட்டே பேசுவோம்” அவன் கூற, அவளும் எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.
பேசுவோம் என்றானே ஒழிய, என்ன பேசுவது என்று அவனுக்கு தெரியவில்லை.
அவர்களிடம் சில நொடிகள் அமைதி நீடித்தது.
“மாதங்கி…” அவன் அழைக்க, “ம்…” என்றாள் அவள்.
“நீ உங்க வீட்டில் சொல்ற மாதிரி முகுந்தனை கல்யாணம் செய்துக்கோயேன். எல்லா பிரச்சனையும் சரியாகிரும்.” அவன் கூற, அவன் சட்டையை கொத்தாக பிடித்திருந்தாள் அவள்.
“உன் மனசில் என்ன நினைச்சுகிட்டு இருக்க?” அவள் கண்களில் கோபம்.
அவள் கூந்தல் அலையலையாக பறந்து அவன் முகத்தை தீண்டியது. அவள் சுவாசம், அவள் வாசம் அவனை வருடியது. வருடலும், தீண்டலும் காதல் மொழி பேசி அவன் மனதை இம்சிக்காமல் அவனை இம்சித்தது.
“நீ உன்னை லவ் பண்ணுன்னு சொன்னா, நான் பண்ணனும். உன்னை கல்யாணம் செய்யணுமுன்னு சொன்னா பண்ணிக்கணும். லவ் பண்ணாதன்னு சொன்னா பண்ண கூடாது.” அவள் அவன் சட்டையை பிடிக்கும் ஜோரில் அவனை நெருங்கி இருந்தாள்.
அவன் கண்கள் அவள் உதட்டின் மேல் நின்றது. சற்று முன் அவள் கொடுத்த பரிசு நினைவுக்கு வந்து அவனை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியது.
“உன்னை பத்தி மட்டும் தான் இத்தனை வருஷம் சொல்லிக்கிட்டு இருந்த, இப்ப முகுந்தனை கல்யாணம் பண்ணுனு சொல்ற. என்ன கொழுப்பா? உன்னை காதலிக்க கூடாதுன்னு சொல்ற உரிமை மட்டுந்தான் உனக்கு இருக்கு. அவனை கல்யாணம் பண்ணு இவனை கல்யாணம் பண்ணுனு சொல்ற உரிமை எல்லாம் உனக்கு கிடையாது. புரியுதா?” அவள் கேட்க, அவன் உதட்டில் நமட்டு சிரிப்பு வந்தது.
“இந்த அட்வைஸ் பண்ற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்” அவள் கூற, “ஆமா, நான் ஏதாவது அட்வைஸ் பண்ணா நீ கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்ப” அவன் உதட்டை சுளித்தான்.
“கேட்க மாட்டேன்னு தெரியுதில்லை. அப்புறம் எதுக்கு அட்வைஸ் பண்ற?” அவள் அவன் சட்டையிலிருந்து கைகளை எடுத்து கொண்டாள்.
அவள் நடக்க, அவனும் அவளோடு நடந்தான்.
“அப்புறம், நான் உன்னை லவ் பண்ணறேன்னு எல்லாம் சொல்லவே இல்லை. அதனால், உன்னை லவ் பண்ண வேண்டாமுன்னு அட்வைஸ் எல்லாம் பண்ண வேண்டாம். எனக்கு எது காதல்னு தெரியாது.” அவள் தோள்களை குலுக்கினாள்.
“ஹா… ஹா…” அவன் பெருங்குரலில் சிரிக்க, “என்ன சிரிப்பு?” அவள் அவனை முறைத்து பார்த்தாள்.
“தெரியாமல் போன காதல், தெரியாமலே போகட்டும்முனு தான் நானும் சொல்றேன்.” அவன் கூற, “அதான் தெரியலைன்னு சொல்றேனில்லை” அவள் முகத்தில் ஒரு ரகசிய புன்னகை தோன்றியது.
அவன் முகத்திலும் மெல்லிய புன்னகை.
அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், அவர்களை வருடி சென்ற தென்றல் காற்று அவர்களுக்கு இடையே காதல் பேசியது. அவள் விலகி நடக்கவில்லை. நடக்கும் பொழுது, அவள் தோள்கள் அவன் கைகளை உரசியது.
அவன் கண்கள் அவள் அருகாமையை குறித்து கொண்டது. அவள் அவன் அருகாமையை ரசித்து நடந்தாள். உரிமையாய் நடந்தாள்.
அவனும் ரசித்தான். விரும்பினான் தான்.
‘நட்பு…’ என்று எடுத்து கொள்ளலாம். அவன் வரையறுத்துக் கொள்ள விரும்பினாலும், நட்பு என்று பழகிய காலத்தில் ஒரு நாளும், மாதங்கி இந்த நெருக்கத்தை அனுமதிக்கவில்லை, என்ற உண்மை அவனுக்கு உரைத்தது.
இல்லையில்லை என்று அவள் பேசிய காதல் மொழி அவன் மனதை வருட, அவள் எடுத்து கொண்ட உரிமை அவனுக்கு அபாய மணி அடித்தது. ‘இவளை நம்ப முடியாதே. எப்ப என்ன பண்ணுவாளோ?’ அவன் இதயம் ஒரு பக்கம், ‘பக்… பக்…’ என்று துடிக்க ஆரம்பித்தது.
பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…