இந்திரனின் சுந்தரியே

இந்திரனின் சுந்தரியே

?15?

கார் கிளம்பும் வரை சிலை போல நின்றுக் கொண்டிருந்தவன், கார் அந்த சாலையிலும் வேகமெடுக்கவும், மீண்டும் உயிர் வந்தது போல தொப்பென்று தரையிலேயே அமர்ந்தான்.. அவனது மனம் முழுவதும் வலி.. உயிர் வலி.. தன்னுடைய உயிரையே தானே பிரித்து தனியே எரிந்தது போல எழுந்த வலியில், அவன் உடல் முழுவதிலும் ஒரு வித நடுக்கம் பரவியது..

‘சுந்தரி.. அம்மும்மா..’ அவனது மனம் அந்தப் பெயரை அரற்ற, அவனது மனக்கண்ணில் அவளது அந்த அதிர்ந்த முகம் தோன்றி வதைக்கத் துவங்கியது..

“என்னை மன்னிச்சிடுடி.. என்னை மன்னிச்சிடு.. எனக்கு வேற வழியே தெரியல.. உன்னை இந்த அசிங்கத்துல இருந்து காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல..” என்று புலம்பிக் கொண்டே அமர்ந்திருக்க, வழமை போல காலையில் கதவைத் திறந்து வெளியில் வந்த ராணி, பக்கக் கதவு தாழ் இல்லாமல் காற்றில் அசைந்துக் கொண்டிருக்கவும்,

“அதுக்குள்ள தம்பி எழுந்துட்டானா என்ன? இவனோட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையே..” என்று புலம்பியபடி உள்ளே எட்டிப் பார்க்க, அவன் தரையில் அமர்ந்திருந்த கோலம் அவளது வயிற்றில் கிலியைப் பரப்பியது..

“தம்பி..” மனதின் பதைபதைப்புடன் அவள் அழைக்க, அவன் எந்த அசைவுமின்றி இருக்கவும், மெல்ல அவன் அருகில் சென்றவள், அவளது தோளைத் தொட, கண்ணீர் நிறைந்த விழிகளுடன் அவளை ஏறிட்டுப் பார்த்தவன், சிறு குழந்தையென, “அக்கா..” என்று அவளது மடி சாய்ந்து கதற, ராணிக்கு வயிற்றை எதுவோ பிடித்துக் கொண்டது போல இருக்க, அவனது தலையை மெல்ல நிமிர்த்தி,

“தம்பி.. என்னாச்சு? ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க? சுந்தரி எங்க?” கண்களை சுழற்றியபடி ராணி கேட்கவும், இந்திரனின் உடல் அழுகையில் குலுங்கியது..

“டேய்.. என்னடா? என்ன ஆச்சு?” பதைபதைப்புடன் ராணி கேட்க, உறக்கம் களைந்து எழுந்து வந்த தாஸ் அவனது அழுகைக் குரல் கேட்டு அங்கு ஓடி வந்தான்..

“டேய்.. இந்திரா.. என்னடா.. என்ன ஆச்சு?” தாசும் பதட்டத்துடன் கேட்க, அவன் பதில் பேசாமல் அழுதுக் கொண்டிருக்கவும், அவசரமாக எழுந்த ராணி, அறைக்குச் சென்று சுந்தரியைத் தேட, அங்கு அவள் இல்லாமல் போகவும், பதட்டத்துடன்,

“டேய்.. சுந்தரி எங்கடா? சுந்தரி எங்க போனா?” உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ராணி கேட்க,

“அவங்க அம்மா நேத்து ராத்திரி வந்துட்டாங்க.. சுந்தரியை நான் அவங்க வீட்டுக்கு போகச் சொல்லிட்டேன்..” என்றவன்,

“எனக்கு வலிக்குதுக்கா.. எனக்கு ரொம்ப வலிக்குது.. என்னால முடியலைக்கா.. அவ இல்லாம நான் என்ன செய்வேன்னே எனக்கு ஒண்ணும் புரியலக்கா.. ஆனா.. அவ இங்க இருக்க முடியாதேக்கா.. அவளை அவங்க ஏதாவது செய்துட்டா என்னால தாங்க முடியாதேக்கா” என்று கதறியவன், அவள் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தாஸ் அவனைப் பிடித்து உலுக்கினான்..

“டேய்.. என்னடா சொல்ற? சொல்றதை ஒழுங்கா சொல்லு..” என்று அதட்ட, நடந்த மொத்தத்தையும் இந்திரன் கண்ணீருடன் சொல்லவும், ராணி தொப்பென்று அமர, தாஸ் தனது தலையிலேயே அடித்துக் கொண்டான்..

“ஏண்டா. ஏண்டா அப்படி செஞ்ச? அந்தப் பொண்ணு எப்படி கிளம்பிப் போனா? அவ போயிருக்க மாட்டாளே..” தாஸ் புரியாமல் கேட்க,

“இல்ல.. அவளை நானே காயப்படுத்திட்டேன்.. எனக்கு வேற வழி தெரியலையே.. அவனுங்க அப்படி எல்லாம் சொல்லும்போது நான் என்ன செய்யறது?” என்று அவன் புலம்ப, அதைக் கேட்ட இருவருக்குமே வரையறுக்க முடியாத குற்ற உணர்வு மனதினில் அறுக்க, செய்வதறியாது திகைத்தனர்.

“ஹையோ பாவி.. அவளை கொண்டு விடுவேன்.. கொண்டு விடுவேன்னு சொல்லிட்டு.. இப்படி அனுப்பி வச்சிட்டியேடா.. உனக்கு எல்லாம் ஒரு பொண்ணு மனசு புரியுமா புரியாதா? அந்த ஆதவன் அப்படி என்னடா செஞ்சிடுவான்.. அவன் சொன்னான்னு அவளை அனுப்பி இருக்கியே.. சத்தம் கேட்ட பொழுதே நான் எழுந்து வந்திருக்கணும்.. எல்லாத்தையும் இப்படி ஒரே நாள்ல மொத்தமா முடிச்சு வச்சிட்டியே.. உனக்கு என்னடா அப்படி ஒரு இது..” தலையில் அடித்துக் கொண்டு ராணி கதற, தாசிற்கும் கண்களில் கண்ணீர் வழிந்தது.. தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தவன்,

“உனக்கு இப்போ அவ யாரு என்னன்னு தெரியும் இல்ல.. வா.. நாம போய் கூட்டிட்டு வந்துடலாம்.. நம்ம கூடவே அவளை வச்சு பார்த்துக்கலாம்.. இல்ல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து அவனை உள்ள தள்ளலாம்..” தாஸ் அவனது கையைப் பிடித்து இழுக்க,

“இல்ல மாமா.. அந்த ஆதவனும் பாஸ்கியும் பேசறதைக் கேட்டாலே உடம்பு எல்லாம் பதறுது மாமா.. அன்னைக்கு சுந்தரியைத் தள்ளி விட்டது அந்த மலரு தான். அன்னைக்கே அவ உடம்புல என்னவோ ஊருதுன்னு சொன்னாளே.. அது அந்த மலர் சுந்தரியோட சுடிதார கழட்ட பார்த்து இருக்கா.. அது மாதிரி மட்டும் செஞ்சு இருந்தா அவ என்ன ஆகிருப்பான்னு யோசி.. அந்த இதுலேயும் அவ இழுத்து பிடிச்சு இருக்கா மாமா.. இவனும் அப்போ அங்க இருந்தானா என்னன்னு தெரியல.. ஆனா.. அவனும் அதே போலவே சொல்றான்.. அது எல்லாம் நம்மளை மீறி நடந்துட்டா நம்மளால தாங்க முடியுமா மாமா? சொல்லுங்க..” அவன் கண்ணீருடன் கேட்கவும், தாஸ் ராணி இருவருமே செய்வதறியாது நின்றனர்..

“அவ விழுந்த நாள்ல இருந்தே நான் இதை ரொம்ப யோசிச்சிட்டு இருக்கேன்.. அதனால தான் அவளை இங்க அடைக்க வேண்டாம்ன்னு நினைச்சு அவகிட்ட இருந்து மனசை மறச்சவன், உடனே கல்யாணம் செஞ்சுக்கலாம்ன்னு சொல்லிட்டேன்.. ஆனாலும் என்ன தான் நாம ஒருத்தர் மாத்தி ஒருத்தர் அவளுக்கு துணைக்கு இருந்தாலும்.. ஆபீஸ்ல அவ கூடவே போய் இருக்க முடியாதே மாமா.. அங்க அந்த ஆளு அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து ஏதாவது பண்ணிட்டான்னா.. இல்ல நான் அவளை ஆபீஸ்க்கு போக வேண்டாம்ன்னு வீட்டுலையே இருக்க வச்சாலும்.. வெளிய போக வர இருக்கற சமயம் அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்துட்டா நான் என்ன செய்வேன்?” இந்திரன் கண்ணீருடன் தனது காரணங்களைச் சொல்ல, ராணி அவனை கவலையுடன் பார்த்தாள்.  

“அவங்க அம்மாவும், அந்த ஆளும் உன் கண்ணு முன்னாலேயே அப்படி அடிச்சாங்கன்னு சொல்றியேடா.. அப்படி இருக்கும்போது அந்தப் பொண்ணு தனியா அங்கத் தாக்கு பிடிக்குமா? வேண்டாம்.. நீ வா.. பேசாம நாம போய் கூட்டிட்டு வந்துடலாம்..” தாஸ் சொல்லவும், இந்திரன் மறுப்பாக தலையசைத்தான்.

“இல்ல மாமா.. அங்க யாரோ வயசானவர் இருக்கார் போல.. அவரு வந்து சுந்தரிக்கு எது வந்தாலும் அவங்க அம்மாவுக்கு பிரச்சனை போல.. அதனால தான் உன்னை அப்படி பார்த்துக்கறேன்னு அவங்க அம்மா கோபத்துல சொன்னாங்க.. இங்க அவளை எதுவும் செய்ய முடியாதுன்னு தான் அவளை வெளிநாட்டுக்கு அனுப்பி அந்த ஆளை விட்டு இவளை ஏதாவது செய்து அங்கேயே கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க முயற்சி பண்ணி இருக்காங்க.. அதுல இருந்து தப்பித் தான் அவ இங்க வந்திருக்கா.. அவ அத்தனை தடவ எங்க அம்மாவை பார்த்துட்டு நீங்க எங்க அம்மாவுக்காக பேசுங்கன்னு சொன்னாக்கா.. நிஜமா இப்படி ஒரு அம்மாவைப் பார்த்ததே இல்ல.. நிஜமா சுந்தரி அவங்க பொண்ணான்னு இருந்தது.. ஜாடை மட்டும் இல்லன்னா கண்டிப்பா நம்பி கூட இருக்க மாட்டேன்..” என்று புலம்பியவன், மீண்டும் கண்ணீரில் கரைய, ராணியும் தாசும் செய்வதறியாது தவித்தனர்…

சுந்தரியை ஏற்றிக் கொண்டு கார் சீறிப்பாய, சூர்யா அவர்களைத் தொடர்ந்து தங்களது காரில் சென்றுக் கொண்டிருந்தார்.. அப்பொழுது அவர்களது காரைத் திரும்பிப் பார்த்த வத்சலா, சூர்யாவிற்கு அழைத்து, “சூர்யா.. உங்களுக்கு தேவையான அமவுண்ட்டுக்கு மேலேயே செக் அனுப்பறேன்.. உங்க வேலையை கரக்டா செஞ்சிட்டீங்க..” அவ்வளவு தான் பேச்சு என்பது போல போனை வைக்கவும், அவர்களைப் பின்தொடர்ந்து தங்களது காரில் சென்றுக் கொண்டிருந்த சூர்யாவிற்கு கோபம் துளிர்த்தது..

“நாலு மாசமா அந்த அலப்பறை பண்ணிட்டு.. செக் அனுப்பறாங்களாம் செக்.. ச்சே.. ஒரு பொண்ணு அப்படி கெஞ்சுது.. செத்து போயிட்டேன்னு கூட நினைச்சிக்கோன்னு சொல்லுது.. அதுக்கு கூட மனசு இறங்காம.. என்ன அம்மா இவங்க. பார்த்து வச்சிருக்கற மாப்பிள்ளையும் அவன் மூஞ்சியும்..” கோபமாக ஸ்டீரிங்கில் குத்தினார்..

“இப்போ என்ன சார் செய்யலாம்? அந்த அம்மா அந்தப் பொண்ணை எங்க கூட்டிட்டு போறாங்கன்னு தெரியலையே.. அந்தப் பொண்ணுக்கு வேற ஆபத்து வந்தா? பாவம் சார் அந்தப் பையன்.. இவங்க மேல உயிரையே வச்சிருக்கான்.. நம்ம வேலையைச் செய்யறோம்ன்னு ஒரு அழகான தம்பதியைப் பிரிச்சிட்ட பாவத்தை செஞ்சிட்டோமோ சார்.. இனிமே அவங்க ரெண்டு பேரோட கதி என்ன சார்?” கவலையாக அவர் கேட்க,

“அதுக்கு ஒரு வழி இருக்கு..” என்றவர், ஒரு எண்ணிற்கு அழைத்து நடந்த விஷயத்தைச் சொல்ல, முதலில் திகைத்தவர், பின்பு சுதாரித்து,  

“ஓ.. அப்படியா? நான் பார்த்துக்கறேன்.. நீங்க அங்க அந்தப் பையனைப் பாருங்க.. உறுதியா தெரியுமா? நல்ல பையன் தானே..” அந்தப் பக்கம் இருந்த குரல் கேட்கவும்,

“ரொம்ப நல்ல மாதிரி தான் தெரியுது.. சுந்தரி கூட வர மாட்டேன்னு அழுதுச்சு”

“அப்போ எதுக்கு இவளை அவ அம்மா கூட அனுப்பினானாம்?” அந்தப் பக்கம் கேட்ட குரலில்,

“அந்தப் பொண்ணை அனுப்பினதுக்கும் வேற காரணம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. ஏன்னா அதுவரை அவளை அவங்க அம்மா அடிக்காம தடுக்க போராடினவன், திடீர்ன்னு அப்படி சொல்லும்பொழுது நாங்களும் அதிர்ச்சியா தான் பார்த்தோம்.. அப்போ அவனோட முகமே அப்படி ஒரு வலியை காட்டிடுச்சு… நல்ல பையன் தான்.. இத்தனை நாளுமே திவ்யசுந்தரிக்கு எதுவுமே அனுகாம பார்த்துட்டு இருந்திருக்கான்.. அது நல்லாவே தெரிஞ்சதுங்க.. சுந்தரியும் அவனை ரொம்ப லவ் பண்றாங்க.. என்னை அவரோட சந்தோஷமா வாழ விடுங்கன்னு ரொம்ப அழுதாங்க.. நீங்க அங்க பார்த்துக்கோங்க.. ஏதோ ஒரு நம்பிக்கைல தான் அந்தப் பையன் அங்க அனுப்பினான்னு நினைக்கிறேன்.. ஜாக்கிரதை சார்.. நான் அந்தப் பையனைப் போய் பார்க்கறேன்.. ரொம்ப உடைஞ்சு போயிருக்கான்..” என்றவர், போனை வைத்துவிட்டு, மீண்டும் இந்திரனைத் தேடிச் சென்றார்.

பொழுது புலர்ந்து மெல்ல சூரியனின் கிரணங்கள் பூமிப் பந்தின் மீது பட்டுத் தெறிக்க, பறவைகள் தங்களது கூட்டை விட்டு கூட்டை விட்டு இரைத் தேடிச் செல்ல, மக்கள் அனைவரும் தங்களது வேலைகளை கவனிக்கத் துவங்க, அந்த வீடு மட்டும் துக்கத்தில் தோய்ந்து முழுகி இருந்தது..

இந்திரன் ஒரு பக்கம் சிலையென அமர்ந்திருக்க, ராணி தலையில் கை வைத்திருக்க, தாஸ் ஒரு பக்கம் இடிந்து போய் அமர்ந்திருக்க, அதற்குள் ஆதவனின் கைங்கரியத்தில், இந்திரனின் வீட்டின் முன்பு கூட்டம் கூடி இருந்தது..

கன்னத்தில் கை வைத்து பலர் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, உள்ளே வந்த சிலர், “என்ன ராணி.. உன் தம்பி பொண்டாட்டி ராவோட ராவா ஓடிப் போயிட்டா போல.. என்ன பிரச்சனை? உன் தம்பி சரியா நடந்துக்கலையா? வேற என்ன சமாச்சாரம்..” என்று துக்கம் விசாரிக்கத் துவங்க, இந்திரன் அங்கிருந்து எழுந்து அறைக்குள் சென்றான்.

அங்கு சுந்தரி மடித்து வைத்திருந்த பட்டுப்புடவையை எடுத்து அதில் முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்கி அழத் துவங்கினான்.. அவனது குரல் கேட்டதும் ராணி பதறி அவன் அருகில் வர, எதுவும் பேசாமல் அந்தப் புடவையில் முகம் புதைத்திருந்தவனுக்கு தேறுதல் சொல்ல முடியாமல், ராணியும் அமர்ந்திருக்க, அங்கிருந்த கும்பலை விலக்கிக்கொண்டு சூர்யா உள்ளே வந்தார்..

“என்ன எல்லாரும் இங்க நின்னுட்டு இருக்கீங்க?” அவர் சத்தமிட, ஆளுக்கு ஒன்றாக குரல் கொடுக்கவும்,

“நான் போலீஸ்.. எல்லாரும் இங்க இருந்து கிளம்புங்க முதல்ல.. காலைல பல்லு விலக்கினோமோ இல்லையோ, அடுத்த வீட்ல என்னன்னு வந்துட வேண்டியது.. போய் உங்களுக்கு வேலை வெட்டி இருந்தா அதை பார்க்கப் போங்க.. இங்க நீங்க நினைக்கிற மாதிரி எந்த விஷயமும் நடந்துடல.. போங்க போங்க..” என்று அவர் விரட்டவும்,

“அப்போ அந்தப் பொண்ணு எங்கப் போச்சு?” ஒருவர் முன்வந்து கேட்க,

“அந்தப் பொண்ணு அவங்க வீட்டுக்கு தான் போயிருக்கு.. உடனே அவங்களை வெளிநாட்டுல இருந்து வரச் சொல்லி தகவல் வந்தது.. அந்தப் பொண்ணுக்கு வெளிநாட்டுல நிறைய ஆபீஸ் இருக்கு.. அதுல ஒரு முக்கிய வேலைன்னு கூப்பிட்டாங்க.. அது தான் கிளம்பிப் போயிருக்காங்க.. கூடிய சீக்கிரம் அந்தப் பொண்ணு திரும்ப வந்துடுவா.. உடனே கண்ணு மூக்கு காது வச்சு பேச வேண்டாம்.. உயிருக்கு உயிரா காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க எதுக்கு உடனே விட்டுட்டு போறாங்க.. வந்துட்டாங்க காலையிலேயே.. கிளம்புங்க எல்லாம்..” சூர்யா தனது குரலை உயர்த்த, அங்கிருந்து கும்பல் கலைந்தது..

“அதுக்கு எதுக்கு இவங்க இப்படி முகத்தை வச்சிட்டு உட்கார்ந்து இருக்காங்க..” ஒருவர் குரல் கொடுத்துக் கொண்டே நகர, அந்த நபரை கண்டுப்பிடித்து நிறுத்திய சூர்யா,

“உங்க பிள்ளைக்கு கல்யாணம் நடந்து.. அந்தப் பொண்ணுக்கு முதல் நாள்லையே ஒரு முக்கியமான வேலை வந்து கிளம்பிப் போனா.. சந்தோஷமா இருப்பீங்களா?” என்று கேள்வி கேட்கவும், அவர் அமைதியாக நகர்ந்து விட, தாஸ் சூர்யாவைப் பார்த்து கை எடுத்துக் கும்பிட்டான்..

“நீங்க யாரு சார்?” தாஸ் கேட்க,

“இந்திரன் எங்க இருக்காங்க? எங்களுக்கு இந்திரனைப் பார்க்கணும்..” சூர்யாவின் உதவியாளர் கேட்கவும், தாஸ் அவர்களை அவன் இருந்த அறைக்குள் அழைத்துச் செல்ல, அங்கு சுந்தரியின் புடவையை முகத்தில் வைத்து அழுத்திக் கொண்டிருத்த இந்திரனைப் பார்த்து சூர்யாவிற்கு மனம் கனத்தது..

“இந்திரன்..” மெல்ல அவர் அழைக்க, ராணி நிமிர்ந்து அவனை கேள்வியாகப் பார்க்க, இந்திரன் அவனை நிமிர்ந்துப் பார்த்தான்.

அவனது கண்கள் அழுததினால் சிவந்து வீங்கி இருக்க, அவன் அருகே சென்ற சூர்யா, “ஹாய்.. என் பேர் சூர்யா.. நான் ஒரு டிடெக்டிவ்..” அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், இந்திரனின் பார்வை அவனை குற்ற சாட்டியது..

“ஏன் சார்.. ஏன் சார்.. நீங்க தான் அவங்க வீட்ல கூட்டிட்டு வந்தீங்களா? இவங்களை பிரிச்சு வச்சு என்ன சார் ஆகப் போகுது? அது என்ன சார் நடுராத்திரில வந்து வீட்டு கதவைத் தட்டறது? உங்களுக்கும் குடும்பம் எல்லாம் இருக்கு இல்ல.. அந்தப் பொண்ணு பாவம் சார்.. அத்தனை வசதி இருந்தும் இங்க வந்து தங்கறதுக்கு அந்தப் பொண்ணுக்கு அங்க எவ்வளவு கசப்பான விஷயம் நடந்திருக்கணும்? அது கூடவா உங்களுக்கு புரியல.. இப்படி சந்தோஷமா வாழ ஆரம்பிச்சவங்களைப் பிரிச்சிட்டீங்களே..” மனமாறாமல் ராணி புலம்ப,

“ராணி.. அய்யா தான் இங்க இருந்தவங்களை எல்லாம் சமாளிச்சு நல்லவிதமா சொல்லி விரட்டி விட்டாரு.. கொஞ்சம் பொறுமையா இரு.. என்னத்துக்கு வந்திருக்கார்ன்னு நாம கேட்டு தெரிஞ்சிக்கலாம்..” தாஸ் அவளை அமைதிப்படுத்த, இந்திரன் அவரைக் கேள்வியாகப் பார்த்தான்.

“சார்.. சுந்தரி.. அவங்க வீட்டுக்கு பத்திரமா போயிட்டாளா? ரொம்ப அழுதாளா சார்? அவங்க அம்மா அப்பறம் அவளை அடிக்கலையே.. அவங்க வீட்ல அந்தப் பெரியவர் அவளை பத்திரமா பார்த்துப்பார் இல்ல..” உதடு துடிக்க, அவன் கேட்க, அவருக்கு மனதினில் ஒரு தெளிவு கிடைத்தது..

‘ஓ.. அந்த அம்மா கோபத்துல பேசினதைக் கேட்ட தைரியம் தானா? பரவால்ல பையன் நல்ல புத்திசாலி தான்..” என்று நினைத்துக் கொண்டவர்,

“அவங்க இன்னும் வீட்டுக்கு போகல.. ஆனா.. அவளுக்கு ஒண்ணும் ஆகிடாது.. அதை நான் பார்த்துக்கறேன்.. நீங்க சொல்லுங்க.. நீங்க ஏன் அவளை அனுப்பினீங்க? அவங்க தான் அவ்வளவு கெஞ்சினாங்களே..” சூர்யா ஆழம் பார்க்க, இந்திரன் தனது முகத்தைத் துடைத்துக் கொண்டான்..

அவன் பதில் பேசாமல் அமர்ந்திருக்க, “உங்க பொண்டாட்டியை ஏன் அப்படி அனுப்பினீங்க? அதுவும் அவங்க அழ அழ..” மீண்டும் மீண்டும் அவர் கேட்க,

ஏற்கனவே அவள் சென்ற கோலம் அவனை வதைக்க, “எனக்கு மட்டும் என் பொண்டாட்டியை அப்படி அனுப்ப பைத்தியமா என்ன? முகத்தைக் கூட கழுவாம.. போட்டு இருந்த நைட்டியோட.. எனக்கு அப்போ அவளோட பாதுகாப்புக்கு அவங்க வீட்டுக்கு அனுப்பறதைத் தவிர வேற வழி தெரியல.. அவ எனக்கு எங்க இருக்கான்னு இப்போதைக்கு முக்கியம் இல்ல.. அவ பத்திரமா இருந்தா போதும்ன்னு தோனுச்சு.. அது தான் அனுப்பிட்டேன்.. அதுவும் இன்னும் கொஞ்ச நாள் தான்.. நான் ஒரு பெரிய வீடு கட்டி அங்க போற வரை தான்.. அப்பறம் அவளை கூட்டிட்டு வந்துடுவேன்.. இது போல அந்த ஏரியால இருக்காது.. ரொம்ப நல்ல ஏரியா.. அவளை ராணி மாதிரி வாழ வைப்பேன்..” இந்திரன் கோபமாகச் சொல்ல, அவனது நினைப்பை நினைத்து மனதில் வியந்தவர், மேலும் அவனை ஆழம் பார்த்தார்.

“ஓ.. அப்போ சுந்தரியை அனுப்பிட்டு அங்க இருந்து பணம் வாங்கி வீடு கட்டலாம்ன்னு பார்க்கறீங்களா?” சூர்யா கேட்க, ‘சார்..’ அவரது உதவியாளர் அழைக்க, அவரைக் கைக் காட்டித் தடுத்தவன், இந்திரனை ஆழ்ந்து நோக்கினார்..

“யாருக்கு சார் வேணும் சுந்தரியோட பணம்.. அவளை ராணி மாதிரி வாழ வைக்க எனக்கு தெம்பிருக்கு.. நானும் ஒரு நிலத்தை சிறு சிறுக பைசா சேர்த்து இங்க பக்கத்துல இருக்கற ஏரியால வாங்கி இருக்கேன்.. அதுல வீடு கட்டவும் பணம் சேர்த்துட்டு இருக்கேன்.. எனக்கு என் உழைப்பு மேல நம்பிக்கை இருக்கு.. நான் வாங்கிக் கொடுத்து கட்டிட்டு வர புடவையோட அவ இங்க வந்தா போதும்.. அவங்க வீட்ல இருந்து எனக்கு ஒரு குந்துமணித் தங்கம் எனக்கு வேண்டாம்.. நான் சம்பாதிக்கிறது எல்லாம் அவளுக்கு தானே” என்றவன், சுந்தரியின் ஹான்ட்பேக்கையும், அவளது லாப்டாப்பையும் எடுத்து அவரிடம் கொடுக்க, அதை அவனிடமே திருப்பிக் கொடுத்தவர்,

“சுந்தரி திரும்பி வரும்பொழுது கொடுங்க.. இது இங்கயே இருக்கட்டும் என்ன?” என்றவர், அவன் அருகில் அமர, ராணி குழப்பமாக அவரைப் பார்க்க, இந்திரன் புரியாமல் அவரைப் பார்த்தான்.

“நான் உங்க மைண்ட்ல என்ன வச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்க தான் வந்திருக்கேன்.. நீங்க சுந்தரியை காப்பாத்த போராடினதையும் பார்த்தேன்.. கடைசியில வீட்டுக்கு அனுப்பினதையும் பார்த்தேன்.. சொல்லுங்க உங்க ப்ளான்ஸ் என்ன? ஏன் அவளை அங்க அனுப்பினீங்க?” அவர் கேட்கவும், அவரை நம்பி சொல்லலாமா வேண்டாமா என்று இந்திரன் சில நிமிடங்கள் யோசிக்கத் துவங்கினான்.

“நம்பி சொல்லலாம்.. நீங்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. ஒரு பொண்ணு.. அதுவும் பணக்கார வீட்டு பொண்ணு.. திடீர்ன்னு காணும்.. தேடித் தேடி ஓஞ்சுப் போற சமயத்துல யாரையோ கல்யாணம் பண்ணி இருக்கான்னு எங்களுக்கு நியூஸ் வருது.. நீங்க ‘ஓ அவ வாழட்டும்’ன்னு விடுவீங்களா? இல்ல அவ கல்யாணம் பண்ணிக்கிட்டவன் நல்லவனா கெட்டவனான்னு தெரிஞ்சிக்க ட்ரை பண்ணுவீங்களா?” அவரது கேள்விக்கு,

“கண்டிப்பா அவன் எப்படிப்பட்டவன்னு பார்ப்பேன்..” தன்னிச்சையாக செயலாக அவன் பதில் சொல்லவும்,

“அது தான் நானும் செஞ்சேன்.. எனக்கும் உங்களைப் பத்தி தெரிய வேண்டி இருந்தது.. அவங்க அம்மாவைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்.. அதனால தான் எந்த அளவு நீங்க ஸ்டாண்ட் பண்ணறீங்கன்னு பார்த்தேன்.. பரவால்ல நல்லவன் தான்னு நான் நினைச்சு அடுத்து என்ன செய்யலாம்ன்னு நான் யோசிக்கிறதுக்குள்ள.. திடீர்ன்னு அந்தப் பொண்ணை அழ அழ ஏன் அவங்க அம்மா கூட அனுப்பினீங்கன்னு எனக்கு தெரிஞ்சிக்க வேண்டி இருந்தது.. என்னோட கெஸ் சரின்னா.. அவளோட பாதுக்காப்புக்கு தான் நீங்க அப்படி செஞ்சீங்கன்னு எனக்குத் தோணிச்சு.. என்ன சரி தானே..” அவர் கேட்கவும், இந்திரன் ‘ஆம்’ என்று தலையசைத்தான்.

“அந்த ரெண்டு பேரும் அவளை என்ன வேணா செய்வாங்கன்னு எனக்கு தோணிச்சு.. அவனுங்க பேசினதைக் கேட்டு எனக்கு ஒரு நிமிஷம் அவளை இங்க இருக்க விடறதுக்கு கூட மனசு இல்ல.. அதனால அவளுக்கு ஒரு பாதுக்காப்பான நல்ல வசதியான இடம் ஏற்பாடு பண்ணற வரை அவங்க வீட்ல இருக்கட்டும்ன்னு தான் நான் மனசை கல்லாக்கிக்கிட்டு அனுப்பி வச்சேன்..  வீடு கட்டி முடிச்சதும் அவளை கூட்டிட்டு வந்துடுவேன்..” அவன் சொல்லவும், உதவியாளர் அவனது தோளைத் தட்டிக் கொடுக்க,

“அதுக்கு நானும் உழைக்கணும்.. ராவா பகலா உழைக்கணும்.. அவ இங்க இருந்தா.. அவளுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு என்னால வியாபாரத்துல கவனம் செலுத்த முடியாது.. அதுக்குத் தான் அவளை அனுப்பி வச்சேன்.. 

அவ ரொம்ப மென்மையான பொண்ணுங்க.. அவளுக்கு ஏதாவது தப்பா நடந்துச்சுன்னா அவ உசுரையே விட்டுடுவா.. எனக்கு என் சுந்தரி வேணும்.. அவ கூட நான் சந்தோஷமா வாழணும்.. அவளை மகாராணி போல நான் வாழ வைக்கணும்.. ஆனா.. அதுக்கு முன்னால அவ பாதுகாப்பா இருக்கணும்.. அது போதும் எனக்கு” என்று அவன் சொல்லவும், சூர்யா அர்த்தப் பார்வை பார்த்துவிட்டு, இந்திரனுக்கு தட்டிக் கொடுத்தார்..

“கண்டிப்பா.. என்னோட கெஸ் சரி தான்.. சரி.. இப்போ என்ன செய்யலாம்ன்னு இருக்கீங்க? சொல்லுங்க என்னால உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுதான்னு பார்க்கறேன்..” சூர்யா சொல்லவும்,

“இல்ல சார்.. எனக்கு பணம் எல்லாம் எதுவும் வேண்டாம்.. எனக்கு சுந்தரியே ஒரு வழி காட்டிட்டு போயிருக்கா.. அதுல நல்லா வருவேன் சார்.. கொஞ்சம் மேல வியாபாரத்தை பெருக்க என்ன செய்யறதுன்னு பார்க்கணும்.. கண்டிப்பா சீக்கிரம் அங்க வீடு கட்டத் தொடங்கணும்.. சுந்தரியை கூட்டிட்டு வந்துடனும்..” அவன் தனது திட்டங்களைச் சொல்ல, சூர்யாவின் மனது நிறைவாக இருந்தது..

“நான் உனக்கு பணம் எல்லாம் தரல.. என்னால முடிஞ்சது நான் உங்களுக்கு ஒரு பாங்க்ல லோன் ஏற்பாடு செய்யறேன். வீடு கட்ட ஆரம்பிங்க.. ரொம்ப நாளைக்கு அங்க அவங்க வீட்லயும் நீங்க சுந்தரியை விட வேண்டாம்.. அடுத்து.. உங்களுக்கு தொழிலுக்கு வேற ஏதாவது ஹெல்ப் வேணும்ன்னா கேளுங்க.. செய்யறேன்..” சூர்யா சொல்லவும்,

“நான் வீடு கட்ட கொஞ்சம் பணம் சேர்த்து வச்சிருக்கேன்.. வட்டிக்கு விட்டத கூட கொஞ்சம் ரோடேட் பண்ணிக்கலாம்.. மீதிக்கு தான் பார்க்கணும்.. ஆனா.. இப்போ எனக்கு அது எல்லாம் வேண்டாம்.. சுந்தரி அங்க பத்திரமா இருப்பா இல்ல சார்.. அவளை அந்த ஆளு அடிக்க மாட்டான் இல்ல.. என் கண்ணு முன்னாலயே அவளை அப்படி அடிக்கிறான்.. எப்படி சார் இப்படி எல்லாம் ஒரு அம்மா இருப்பாங்க.. சுந்தரி சொல்லும்போது எல்லாம் நான் நம்பலை.. ஆனா.. நேர்ல பார்த்து ‘என்னோட சுந்தரிக்கு இப்படி ஒரு அம்மாவா’ன்னு நான் ரொம்ப நொந்துட்டேன்..” இந்திரன் வருந்திக் கொண்டிருக்க, அப்பொழுது தான் சூர்யாவின் பார்வை அந்த அறையில் பதிந்தது..

“இது தான் உங்க வீடா?” சூர்யா கேட்க,

“ஹ்ம்ம்.. இங்க தான் சுந்தரி வாடகைக்கு வந்தா.. இதுவும் பக்கத்துல இருக்கறதும் எங்க வீடு தான்” என்றவன், அங்கிருந்த சுந்தரியின் பொருட்களைப் பார்த்து, அவனுக்கு நெஞ்சம் விம்மியது..

அந்த அறை முழுவதும் ரோஜா மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்க, அது எதற்காக என்று புரிந்தவர், தனது உதவியாளரைப் பார்த்துவிட்டு, ‘ம்ப்ச்.. பாவம் ரெண்டு பேரும்..’ என்று நினைத்துக் கொண்டவர்,

“அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.. அதை நான் பார்த்துக்கறேன்..” என்று உறுதி கூறினார்.

“உங்களுக்கு எந்த ஹெல்ப்னாலும் கேளுங்க.. நான் நாளைக்கு வரேன்.. ஏதாவது ஐடியா யோசிச்சு வைங்க.. நானும் ஏதாவது பார்க்கறேன்” என்றவர், இந்திரனின் தோளைத் தட்டிவிட்டு, கிளம்பிச் சென்றார்..

சீறிப்பாய்ந்த சுந்தரியின் கார் ஒரு பெரிய ஹோட்டலில் சென்று நிற்க, தனது கையில் இருந்த கோட்டை எடுத்து சுந்தரியின் மீது போட்ட வத்சலா, அவளை இழுத்துக் கொண்டு அவர் ஏற்கனவே போனில் சொல்லி ஏற்பாடு செய்திருந்த அறைக்கு அழைத்து சென்றார்..

உள்ளே சென்றதும், வேகமாக சென்று பாத்ரூமின் கதவைத் திறந்து, அவளை உள்ளேத் தள்ளி, “போய் குளிடி.. எப்படி அந்த இடத்துல எல்லாம் இருந்த.. கருமம் கருமம்.. பால்ல குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும் எதுலயோ விழுந்து பிரலுமாம்.. அது போல செய்துட்டு வந்திருக்க.. சீ.. எனக்கு அங்க அந்த கொஞ்ச நேரம் இருக்கவே அறுவறுப்பா இருந்தது.. எப்படிடி இப்படி எல்லாம்.. அதுவும் உனக்கு கல்யாணம் பண்ணிக்க ஒரு காய்காரன் தான் கிடைச்சானா?” என்றவர், அவளது கழுத்தில் இருந்த திருமாங்கல்யத்தில் கை வைத்து, அதை இழுக்கப் போக, வெறி கொண்டது போல அவரைப் பிடித்துத் தள்ளியவள்,

“இதுல கைய வச்சீங்க.. நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்.. இது தான் உங்க லிமிட்..” என்று உருமியவள், பாத்ரூம் கதவை அறைந்து சாத்திவிட்டு, ஷவரின் அடியில் நின்றவளுக்கு உடல் முழுவதும் வலி.. மனதின் வலி உடலில் பிரதிபலிக்க, அப்படியே சுவற்றில் சாய்ந்தவளின் கண்களில் கண்ணீர் வழிய, இறுதியாக இந்திரன் கூறிய அந்த வார்த்தைகளே எதிரொலிக்க, சுந்தரி துடித்துப் போனாள்.

இந்திரன் வருவான்.. ???

????????❤️❤️❤️❤️❤️❤️

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!