birunthaavanam-36 (Final Episode – Part 2)

Birunthaavanam-ea4e36a6

birunthaavanam-36 (Final Episode – Part 2)

பிருந்தாவனம் – 36

“என் கிட்ட சொல்லிட்டு கிளம்பணுமுன்னு சொன்னியாமே? அது தான் உன்னை பார்க்க வந்தேன். எப்ப கிளம்புற?” கிருஷ் மௌனத்தை கலைத்தான்.

“ம்…நீங்க தான் உங்க அம்மா பார்த்த பொண்ணை கல்யாணம் செய்யணுமே. உங்க அம்மா, வேற என்னை நோண்டி நோண்டி பார்க்குறாங்க. அது தான் …” மாதங்கி துடுக்காய் கூற, “அம்மா, பார்த்த பொண்ணே நீயா இருந்தா?” அவன் புருவங்களை உயர்த்தினான்.

அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிய, “இப்படி எல்லாம் கண்ணை விரிச்சா, நான் எதுக்கும் பொறுப்பில்லை.” அவன் காதலனாய் பேச, “சீனியர்…” அவள் செல்லமாக சிணுங்கினாள்.

“மாது, உனக்கு வெட்கம் எல்லாம் கூட வருமா?” அவன் கேட்க, “உங்க அம்மா, எதுக்கு என்னை பார்த்தாங்க உங்களுக்கு. அவங்களுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா?” அவள் குறும்பாக கேட்டாள்.

“நானும் அதையே தான் கேட்டேன் மாதங்கி. வேற நல்ல பொண்ணே கிடைக்கலையானு!” அவனும் குறும்பாக கூற, “சீனியர்…” அவள் குரலில் கண்டிப்பு இருக்க, அவன் கலகலவென்று சிரித்தான்.

“நீங்க அப்படி சொல்லிருக்க மாட்டீங்க.  இதை நீங்க மட்டுமில்லை, இந்த உலகமே சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்?” அவள் புன்னகையோடு அவனை ரசித்த படி கூறினாள்.

அவன் அவள் முகம் தொட்டு, அவள் கண்களை பார்த்து,”அவ்வளவு நம்பிக்கையா மாது?” அவன் ஆசையாக கேட்க, அவள் மறுப்பாக தலை அசைத்தாள்.

“காதல்… இரண்டும் ஒன்னு தானே?” அவள் கூற, அவன் அவளை வாஞ்சையோடு பார்த்தான்.

“எல்லா பிரச்சனையும் முடிந்ததா?” அவள் குரலில் தீவிரத்தோடு கைகளை உருவிக்கொள்ள, அவள் அருகே அமர்ந்து அவளை அவன் மீது சாய்த்து கொண்டான்.

“என்ன பிரச்சனை?” அவன் ஆறுதலாக, அவள் தலை கோதி கேட்க, “என்னை எப்படி அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிசீங்க?” அவள் தன் சந்தேகத்தை கேட்டாள்.

“என்னை கடத்தி கொண்டு போனா, என்னை கண்டுபிடிக்க ஒரு ட்ரோன் கண்டுபிடிக்கறேன்னு சொன்னியே, அந்த ட்ரோன் வைத்து தான். நல்லா டிசைன் பண்ணிருக்க. உன் காலடி பாதம் அதில் தெளிவா தெரிஞ்சிடுச்சு. மிருகம் பாதத்தை வைத்து அவங்க நடமாட்டத்தை கண்டுபிடிக்க நீ நல்லா கோட் பண்ணிருக்க.” அவன் அவளை சிலாகித்தான்.

“அந்த திலக், ஹென்றி ரெண்டு பேருக்கும் லாஜிக் தெரியாதே. நான் இன்னும் முழுசா கூட முடிக்கலையே?” அவள் ஆச்சரியமாக கேட்க, “மேடம், நாங்க உங்களுக்கு சீனியர்” அவன் காலரை தூக்கி விட்டு கொள்ள, அவள் அவனை பொருமிதத்தோடு பார்த்தாள்.

“மேல இருந்து பார்க்குற கோடிங் எல்லாம் முடிஞ்சிருச்சு. இன்னும் டிஸ்டன்ஸ் கவரேஜ் முழுசா முடியலை.” அவள் தொழில்நுட்பம் கலந்து பேச, அவன் ஆமோதிப்பாக தலை அசைத்தான்.

“உங்களை கடத்திட்டு போவாங்க, நான் இந்த ட்ரோன் வைத்து உங்களை காப்பாத்தி ஹீரோயிசம் பண்ணலாமுன்னு நினச்சேன்.” அவள் சோகம் போல கூற, “இப்படி தப்புத்தப்பா யோசிக்கறவங்களை தான் கடத்துவங்க” அவன் அவள் காதை திருகினான்.

“சீனியர், இப்படி எல்லாம் வன்முறையா நடந்துக்கிட்டிங்கன்னா, நான் கல்யாணம் வேண்டாமுன்னு சொல்லிருவேன்.” அவள் அவனை மிரட்ட, “ஓ, அப்ப மேடம் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடீங்களா?” அவன் கேலி போலவே கேட்டான்.

“சொல்லலாமா, வேண்டாமான்னு யோசிக்குறேன்…” அவள் தலை அசைக்க, “அவசரமே படாத மாதங்கி. நல்லா நிறுத்தி நிதானமா யோசி, நாமா நிதானமா அறுபதாம் கல்யாணமே செய்துக்கலாம்” அவன் கூற, அவள் அவன் தோள்களை பட்டென்று தட்டினாள்.

அவள் முகம் வாட, “என்ன மாது?” அவன் அக்கறையோடு கேட்டான்.

“எங்க வீட்டில் சம்மதிக்கலைனா, நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல மாட்டேன் கிருஷ்.” அவள் ஆழமான குரலில் கூறினாள்.

“உன் வீடு மட்டுமில்லை, என் வீடும் பிருந்தாவனம் தான். அவங்களை கஷ்டப்படுத்துற இந்த காதல் நமக்கு வேண்டாம்.” மாதங்கி கூற, கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த அரவிந்த், முகுந்தன், பிருந்தா மூவரும் திகைத்து நிற்க, கிருஷ் சட்டென்று விலகி நின்று கொண்டான்.

“மாதங்கி, எங்க வீடும் பிருந்தாவனம், உன் வீடும் பிருந்தாவனம், இந்த காடும் பிருந்தாவனம் தான். அதுக்காக எல்லாம் நீங்க காதல் வேண்டாமுன்னு சொன்னா நாங்க தாங்க மாட்டோம். உனக்கு கல்யாணம் முடிந்த பிறகு தான், அரவிந்த் அண்ணாவுக்கு பொண்ணு தேடணும். நான் உன்னை நாத்தனார் அதிகாரம் எல்லாம் செய்த பிறகு தான் கல்யாணம் பண்ணனும்.” பிருந்தா அடுக்கி கொண்டே போனாள்.

அவர்கள் பேச்சோடு திருமணமும் நிச்சியக்கப்பட்டது. சில வருடங்களுக்கு முன், எந்த நாளில் திருமணம் நிறுத்தப்பட்டதோ, அதே நாளில் தான் திருமணம் வைக்க வேண்டும் என்று கிருஷ் உறுதியாக கூறிவிட்டான்.

பிருந்தாவனம்!

         பிருந்தாவனம் கோலாகலமாக காட்சி அளித்தது. திருமண மேடையில் அமர்ந்திருந்தான் கிருஷ். அன்றைய பதட்டம் இன்று கிருஷிடம் இல்லை.

ஒரு பெண்ணின் முழு சம்மதம் எத்தனை முக்கியம் என்பதை அவன் முகம் காட்டியது.

மணப்பெண் கோலத்தில் மாதங்கி நடந்து வந்தாள். அவள் பாதம் தான் அவன் கண்களுக்கு முதலில் தட்டுப்பட்டது. அதில் தெரிந்த மருதாணி சிவப்பில் அவன் மனம் மயங்கியது. அவள் கொலுசின் சலங்கைகள் அவள் நடைக்கு ஏற்ப முத்துமுத்தாய் ஆடியது.

அவன் மெல்ல தன் கண்ணுயர்த்தி, தன்னவளை பார்த்தான். அவள் ஒட்டியாணம், அவள் இடையின் அளவை காட்ட, அவன் அதன் பின் கண்களை உயர்த்தி அவளை பார்த்து கண்சிமிட்டினான்.

“சீனியர், உங்க பார்வையே சரி இல்லை.” அவள் அவன் அருகில் வந்தமர்ந்ததும் அவன் காதில் கிசுகிசுக்க, “இன்னும் கொஞ்ச நேரத்தில், நான் உன் கணவன். என் பார்வை பத்தி எல்லாம் நீ இனி பேசவே கூடாது.” அவன் அசட்டையாக கூறினான்.

“சீனியர்…” அவள் பற்களை நறநறக்க, “பொண்ணுக்கு கல்யாணத்தில் விருப்பமா?” மீடியா மத்தியில் இப்பொழுது சலசலப்பு.

“பொண்ணுக்கு இப்பவும் விருப்பம். அப்பவும் விருப்பம் தான். எங்க பையன் கிருஷ் காதல் விஷயம் தெரியாமல், நாங்க நாகராஜன் பொண்ணு சந்தியாவை பேசிட்டோம். அந்த கல்யாணம் நடக்காத காரணத்தினால் நாகராஜன் கோபப்பட்டு செய்த வேலை தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்.” என்று பாதி உண்மையும், கதையும் கலந்து பேச ஆரம்பித்தார் கிருஷின் தாத்தா.

“நாகராஜன் வீட்டு ஆளுங்க, கல்யாணம் செய்தா கிருஷை கொன்னுடுவோம்முனு கல்யாண பொண்ணை மிரட்டி இருக்காங்க. கல்யாண பொண்ணும் கிருஷ் மேல இருக்கிற அன்பினால் பயந்து கல்யாணம் வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க. இப்பவும் எங்க வருங்கால மருமகளை கடத்தி பல பிரச்சனை கொடுத்திட்டாங்க.” தாத்தா கோர்வையாக பேசி முடித்தார்.

கிருஷின் தந்தையும் அதற்கு ஏதுவாக சில பல கதைகளை கூறி மொத்த ஊரையும் நம்ப வைத்தார்கள். சிறுசிறு சலசலப்பு இருந்தாலும், அவர்களுக்கு வேறு வழி இல்லை. நம்பித்தானே ஆக வேண்டும்.

மாதங்கி சிரித்த முகமாக கிருஷிடம் மணமேடையில் கதை பேசி கொண்டிருக்கிறாளே!

“சீனியர், உங்க தாத்தா உங்களை விட பெரிய கேடியா இருப்பாங்க போலியே?” மாதங்கி கண்களை விரித்தாள்.

“என்ன பண்றது உன்னை மாதிரி ஒரு பெண்ணை கல்யாணம் செய்ய எல்லா கேடித்தனமும் பண்ண வேண்டியிருக்கு.” கிருஷ் கண்சிமிட்ட, அவள் அவனை முறைக்க அங்கு விழிகளுக்கு இடையே மெல்லிய யுத்தம் அரங்கேறியது.

“கெட்டிமேளம்… கெட்டிமேளம்…” என்ற சத்தத்தில் அவன் அவள் கழுத்தில் தாலியை கட்டினான்.

அரவிந்த் முகத்தில் நிறைவான புன்னகை. மாதங்கி வீட்டினர் மனதில் நிம்மதி பரவியது. பிருந்தா தன் தோழியை கட்டிக்கொண்டாள். தோழி உறவாகி போன சந்தோசம் அவள் முகத்தில்.

அனைவரும் சாப்பிட செல்ல, கிருஷ் தன் மனைவியோடு சாப்பிட அமர்ந்தான்.

“இத்தனை வருஷம் கழித்து, இந்த நாளில் இப்ப தான் சாப்பிட போறீங்க. அப்படி தானே சீனியர்?” மாதங்கி சற்று கோபமாக கேட்க, ஆமோதிப்பாக தலை அசைத்தான் கிருஷ்.

“பிடிவாதம்… பிடிவாதம்…” அவள் மனைவியாய் கண்டிக்க, “உன்னை விட எனக்கு பிடிவாதம் அதிகமா மாது?” என்று அவன் கணவனாய் முறுக்கி கொள்ள, “ஆமா, இதுல உங்களுக்கு சந்தேகம் வேறையா சீனியர்?” அவர்கள் திருமணம் முடிந்த கையோடு, கணவன் மனைவி சண்டையை ஆரம்பித்தனர்.

“பேசினது போதும். மாப்பிள்ளைக்கு ஊட்டி விடு. நாங்க போட்டோ எடுக்கணும்.” முகுந்தன் தோழனாய் களத்தில் இறங்க, ‘இவனல்லவா சிறந்த தோழன்’ என்பது போல் கிருஷ் முகுந்தனை பார்த்தான்.

மாதங்கி, அவனுக்கு இனிப்பை கொடுக்க, அதை சந்தோஷமாக வாங்கி கொண்டு, அவளுக்கும் கொடுத்தான்.

“இப்படி கொடுத்தா தான் சாப்பிடணும்னு இந்த நாளுக்காக தவம் இருந்திருக்கோம்மில்லை” கிருஷ் மாதங்கியின் காதில் வெற்றி பூரிப்போடு கிசுகிசுக்க, அவள் தன்னை மறந்து அவனை காதலோடு பார்த்தாள்.

“நாங்க படம் பிடிச்சிட்டோமில்லை.” பிருந்தாவின் குரலில், மாதங்கி நனவுலகத்திற்கு திரும்பினாள்.

அன்றிரவு…

 அனைவரும் அவர்களை தேட, கிருஷ் மாதங்கி இருவரும் வெளியே கிளம்பி கொண்டிருந்தார்கள்.

“இப்ப எங்க டா கிளம்புறீங்க?” அனைவரும் கேட்க, “கொஞ்சம் வெளிய போகணும் அம்மா.” என்று கிருஷ் கூற, வேறு வழியின்றி அனைவரும் தலை அசைக்க, இருவரும் காரில் பயணித்தனர்.

“எங்க போறோம்?” மாதங்கி கேட்க, “பேசாமல் வா…” என்று கூறினான் கிருஷ்.

“என்ன கல்யாணமானவுடன் அதிகாரம் எல்லாம் தூள் பறக்குது?” அவள் கோபமாக கேட்க, அவன் சிரித்து கொண்டான். அவன் கார் அவர்கள் கல்லூரி முன் நின்றது.

அவன் ஏற்கனவே சொல்லி வைத்திருந்ததால், வாட்ச்மென் கேள்வி கேட்காமல் கதவை திறந்துவிட்டார்.

அவள் கண்களில் கண்ணீர். ஆனந்த கண்ணீர்!

“கல்லூரி காலம் எவ்வளவு அழகான காலம் இல்லையா?” மாதங்கி குரலில் உணர்ச்சி பொங்க கேட்டாள்.

“ம்…” அவன் அவளை தன்னோடு சேர்த்து கொண்டு அந்த கல்லூரியை பார்த்தான்.

அவர்கள் இருவரும் சந்தித்த முதல் இடத்திலிருந்து அனைத்து இடங்களையும் கைகோர்த்தபடி பவனி வந்தனர்.

“நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்னில்லை? ரொம்ப காக்க வச்சிட்டேன்னிலை? ” மாதங்கி கேட்க, அவன் மறுப்பாக தலை அசைத்தான்.

“படிக்குற வயசில் என்ன லவ்? நீ சொன்னது தான் சரி. நீ செய்தது தான் சரி” அவன் கூற, “காலேஜில் படிக்கும் பொழுது, நீங்க இப்படி ஃபாரஸ்ட் ஆஃபீஸ்ர் ஆகுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை.” மாதங்கி வெளிப்படையாக கூற, “நானும் தான் நினைக்கலை” அவன் சிரித்தான்.

“நான் கவர்ன்மெண்ட் வேலைக்கு போனதுக்கு நீ தான் காரணம். அப்படி என்ன உங்க அண்ணன் பெரிய அப்பாட்டக்கருன்னு யோசிச்சேன். அது அந்த வேலைக்கு போன பிறகு தான் தெரிந்தது. அந்த வேலைக்கு எவ்வளவு மதிப்பு. அந்த வேலையில் இடைஞ்சல் கொடுத்தா எவ்வளவு கோபம் வருமுன்னு…” கிருஷ் பேச, இருவரும் அவர்கள் முதலில் தங்களை உணர்ந்து கொண்டு மரத்தடிக்கு வந்திருந்தார்கள்.

“என் சீனியர் கிட்ட நான் சாரில்லாம் கேட்க மாட்டேன். ஆனாலும், நான் செய்தது தப்பு தான். நான் அவசரப்பட்டிருக்க கூடாது. என் பொறுமையின்மை எவ்வளவு பேருக்கு இடைஞ்சலை கொடுத்திருச்சு.” அவள் வருத்தமாக கூற, அவன் மரத்தின் மீது சாய்ந்து கொண்டு அவளை தன் அருகே நிறுத்திக்கொண்டான்.

“படிக்குற வயசில், உன்னை குழப்பினது நான். பழசை பேச கூடாது. நான் செய்த தப்பை நீ மறக்கலையா? நானும் நீ செய்ததை மறந்துட்டேன்.” அவன் கூற, “ஆஹான்…” அவன் மனமறிந்து, அவளும் குறும்பை கையில் எடுத்து கொண்டாள்.

“காதலிக்கிற வயசும் அது இல்லை. காதலிக்கிற இடமும் இது இல்லை” கல்லூரியை  பார்த்து அவன் பல பொருள் பொதிந்து கூற, அவள் முகத்தில் வெட்க புன்னகை.

இருவரும் சில மணித்துளிகள் அங்கு பேசிவிட்டு, வீட்டிற்கு திரும்பி இருந்தார்கள்.

அவர்கள் அறைக்கு வந்த கிருஷிடம், “இருந்தாலும், உங்களுக்காக சந்தியாவும், அவங்க அப்பாவும் இத்தனை செய்திருக்க வேண்டாம். என்கிட்டே கேட்டிருந்தால், நானே அவங்களுக்கு…” அவளை பேச விடாமல், அவன் இதழ்வரி கவிதை படித்தான்.

அவன் கவிதையில், அவள் மயங்க, “தேவை இல்லாமல் பேசினா, இப்படி தான்…” அவன் அவளை இடையோடு அணைத்து அவள் செவியோரமாய் கிசுகிசுக்க, “சீனியர்…” அவள் செல்லமாக கோபித்து கொண்டாள்.

“எங்க அப்பாவும் தப்பு…” அவன் எதையோ விளக்க முற்பட, அவள் தன் கைகளால் அவன் வாயை மூடி மறுப்பாக தலை அசைத்தாள்.

” சீனியர், பழைய கதை வேண்டாமே, ஏதாவது புதுசா பேசுவோமா? பழைய கதை ரொம்ப போர் அடிக்குது சீனியர்.” அவன் வருந்துவது பிடிக்காமல், அவள் கூற, அவன் சட்டென்று அவளை தன்பக்கம் இழுத்து தன் மேல் சாய்த்துக்கொண்டு, தன்  பின்னே இருந்த அலமாரியில் இருந்து ஒரு பெட்டியை எடுத்தான் கிருஷ்.

“என்ன பண்ணறீங்க சீனியர்?” அவள் அவன் மேல் வாகாக சாய்ந்து கொண்டு கேட்க, அவன் அவள் கை நிறைய சத்தம் எழுப்பும் வைரம் பதித்த தங்க வளையல்களை அணிவித்தான்.

அவள் கைகளை தன் செவியோரமாக அசைத்து, “இந்த வளையோசை தான் என்னை பல வருஷம் வாழ வைத்தது. நீ எப்பவும் என் கூடவே இருக்கணும். இந்த வளையோசையை நான் கேட்டுகிட்டே இருக்கணும்.” அவன் கூற, அவள் அவன் கைவளைவிற்குள் அவன் பக்கம் திரும்பி, அவன் மேல் வாகாக சாய்ந்து கொண்டாள்.

“நான் சொல்றது. புரியுதா?” அவன் கேட்க, “ம்…” அவள் அவன் அணைப்பில் அவன் அன்பில் வேறு உலகத்திற்கு சஞ்சரித்து கொண்டிருந்தாள்.

“நான் ஃபாரஸ்ட் ஆபீஸரா எங்க போனாலும், நீ என் கூடவே வரணும். அங்க வந்து என்ன ரீசேர்ச் வேணும்ன்னாலும் பண்ணு. ஆனால், எப்பவும் என் கூட தான்” அவள் செவியோரமாக, அவள் வாசத்தை உணர்ந்து, அவன் சுவாசத்தை உணர்த்தி கொண்டிருந்தான்.

“புரியுதா மாது?” அவன் குரல் அன்பில் வழிய, “சீனியர்…” அவள் குரலில் குறும்பு வந்து அமர்ந்து கொண்டது.

“ஒன்னு மட்டும் புரியவே இல்லை சீனியர்” அவன் கைகளின் பிடிமானத்தில் பின்னே சாய்ந்து, அவன் முகம் பார்த்து கேட்டாள் அவள்.

‘என்ன?’ அவன் புருவம் உயர்த்த, ” எது காதல்ன்னு ஏதோ சுமாரா சொல்லி கொடுத்துடீங்க. ஆனால், அந்த காதல் எப்ப வருமுன்னு நீங்க சொல்லியே கொடுக்கலியே? என்ன சீனியர் நீங்க?” அவள் அங்கலாய்க்க, அவன் கண்களில் ஒரு ரசனை கலந்த புன்னகை.

“வரும் பொழுது லயிட் எரியுமா? மழை பெய்யுமா? சினிமாவில் வர்ற மாதிரி பெல் அடிக்குமா?” தன் கண்களை விரித்து தலை அசைத்து அவள் அப்பாவியாக சந்தேகம் கேட்டாள்.

அவள் கேள்வியில் அவன் ரசித்து சிரித்தான்.  “சிரிக்காதீங்க சீனியர். பதில் சொல்லுங்க…” அவள் கேட்க, அவன் அவள் செவியோரமாக ரகசியம் பேசினான்.

காதல் வரும் பொழுதுகள் ரகசியம் அல்லவா? அது அவர்களுக்கான ரகசியம். அவர்கள் வாழ்க்கைக்கான ரகசியம்.

மறுநாள் காலை…

பிருந்தாவனம் பெயரை தாங்கி கொண்டிருந்த அந்த பிரமாண்டமான மாளிகையை அந்த விடியற்காலை பொழுதில் அழகாக காட்டியது வீட்டின் முன் பகுதியில் இருந்த அந்த கருநீல கண்ணனின் சிலை.

 ஒரு காலை மடக்கி பசு மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்த கண்ணனின் கழுத்தில் செம்மஞ்சள் நிறத்தில் பூமாலை. கண்ணனின் கண்களில் குறும்பும், அவன் உதட்டில் சிரிப்பும் மிக அழகாய். கண்ணன் சிலையை சுற்றி பலவண்ண பூக்கள் நிறத்தாலும், மணத்தாலும் மயக்கினாலும் அந்த இடத்தை இன்னும் ரம்மியமாக்கி கொண்டிருந்தது என்னவோ அந்த இனிய குரல் தான்.

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்

புருஷோத்தமன் புகழ் பாடுங்களே

வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே

எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே

 

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள்

பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே

தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள்

ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே – எங்கள்

ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே

 

     இனிமையாய் பாடி கொண்டிருந்தாள் மாதங்கி.  வீட்டினர் அனைவரும்  ஜன்னல் வழியாக, அவள் பாடலை கேட்டு கொண்டிருந்தனர்.

ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பை மெய்சிலிரித்து பார்த்து புன்னகைத்து கொண்டனர் கிருஷின் குடும்பத்தினர்.

அவளருகே தூணில் சாய்ந்து நின்றபடி, கண்களில் குறும்பும், காதலும் வழிய உதட்டில் புன்னகையோடு அவளை பார்த்து கொண்டிருந்தான் கிருஷ்.

அவள் “கிருஷ்” என்ற வார்த்தையை பாடும் பொழுது அவனை பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள். அவள் குரலில் பக்தியை தாண்டிய அன்பு வழிந்தது. அவள் அசைவில் அவள் வளையல்களும் அசைந்து வளையோசை எழும்பியது.

அவள் அன்பின் பார்வையும், அவள் நேசத்தின் குரலும் அவன் அன்பின் வளையோசையும் சேர்ந்தே ஒலிக்க, கிருஷின் முகத்தில் நிறைவான புன்னகை.

     அவர்கள் செய்த தவறும் அவர்கள் அன்பில் மறைந்து போனது. அன்பு மட்டுமே அங்கு நிரம்பி இருந்தது. தெய்வத்தின் இருப்பையும், மீறி அவர்கள் அன்பு அந்த இடத்திற்கு இன்னும் அழகை கூட்டியது.

     அவர்கள் அன்பில், பிருந்தாவனம் இன்னும் வண்ணமயமாக காட்சி அளித்தது.

அன்பு நிறைந்த அனைத்து இல்லங்களும் பிருந்தாவனம் தானே!

Leave a Reply

error: Content is protected !!