UMUV17

FB_IMG_1612410989961-0908b525

17

 

“எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டியா?” என்றபடி வந்த தாத்தா, “பார் பர்ஸை இப்படி சோஃபால போட்டு வச்சுருக்க. அவசரத்துல பண்ணாதன்னு அதான் சொன்னேன். டிக்கெட் எடுத்து வச்சுருக்கியா”

 

“தாத்தா நீ கொஞ்சம் நிம்மதியா இங்க உட்காரு, ஏன் இப்படி?” அவர் கையைப் பிடித்துக் கட்டிலில் உட்கார வைத்த வர்ஷா, விஷ்ணுவின் மெசேஜை பார்த்தாள்.

 

“தாத்தா தாத்தா! நந்தாவும் விஷ்ணுவும் கீழ கார் பார்க் பண்ணிட்டாங்க! வாவ் நந்தா நம்ம வீட்டுக்கு வரான்! கையும் ஓடல காலும் ஓடலையே! நந்தா நந்தா நந்தா!” சந்தோஷமாகக் குதித்தவள், “தாத்தா என் டிரஸ் ஓகேவா?” கண்ணாடியில் பார்த்துக்கொண்டபடி கேட்டாள். 

 

தாத்தா, “அந்த பையன இவ்ளோ பிடிச்சுருக்கு அப்புறம் எதுக்கு வேண்டாம்னு சொல்லிட்டு ஊருக்கு போற?” தனது மூக்குக் கண்ணாடியைத் துடைத்தபடி கேட்க,

 

“ரொம்ப பிடிச்சுருக்கு அதான்” என்று கண்ணடித்தவள், வீட்டு அழைப்புமணி அடிக்க, “நந்தா வந்தாச்சு! ஹை ஹை!” என்று குதித்தபடி கதவைத் திறக்க ஓடினாள். 

 

அதற்குள் கதவைத் திறந்திருந்த மது, ஆண்கள் இருவரையும் வரவேற்றாள். 

 

தாத்தா, “வாங்கபா, உட்காருங்க” இருவரையும் தன் அருகே சோஃபாவில் அமரும்படி அழைத்தவர், இருவரில் யார் நந்தா என யோசித்திருத்து நின்றார். 

 

அவரிடம் பழங்கள் அடங்கிய பையைக் கொடுத்துப் புன்னகைத்த ரிஷிநந்தன் தன்னையும் விஷ்ணுவையும் அறிமுகம் செய்துகொண்டான். 

 

விஷ்ணு, மதுவுடன் பேசுவதில் மும்முரமாகிவிட, ரிஷியோ தன் அறை வாசலில் தயங்கி நின்றிருந்த வர்ஷாவிடம், “பேக்கிங் ஆச்சா? பொறுமையா எல்லாம் செக் பண்ணிக்கோ”

 

“ம்ம் ஆ…” திணறியவள், வேகமாகச் சமையலறைக்குச் சென்று அனைவருக்கும் பழச்சாறு கொண்டுவந்தாள். 

 

“அம்மா ரொம்ப கேட்டதா சொன்னாங்க. ஒரு நிமிஷம் ஃபோன் பண்ணறேன் பேசறியா?” 

 

“ம்ம் தாங்…” அவள் வழக்கமான திணறலில் திக்க, சிறு புன்னகையுடன் ரஞ்சனியை அழைத்த ரிஷி ஃபோனை வர்ஷாவிடம் கொடுத்தான். சில நிமிடங்கள் அவருடன் பேசிய வர்ஷா, மொபைலை அவனிடம் தந்து விட்டு நன்றி என்பதுபோலத் தலையசைக்கப் புன்னகைத்த ரிஷி மேற்கொண்டு என்ன பேசுவது என்று தயங்க, 

 

மது “வாங்க வீட்டை சுத்தி காட்டறேன்” என்று ரிஷியையும் விஷ்ணுவையும் அழைத்துச் சென்றாள். 

 

ஒரு வழியாகத் தயாரான வர்ஷா அனைவருடன் விமான நிலையம் புறப்பட்டாள். 

 

ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அமர்ந்துகொண்டு ரிஷியுடன் பேசிக்கொண்டிருந்தார் தாத்தா.

 

“பிப்ரவரி மாசத்துல மழை வெளுத்து வாங்குது” என்றவர், “நீயும் அங்க தானே வேல பார்த்ததா சொன்ன எவ்ளோ வருஷம் அங்க இருந்த பா?” ரிஷியைக் கேட்க,

 

“காலேஜ் முடிச்சவுடனே போயிட்டேன் தாத்தா. பார்ட் டைம் வேலை பார்த்துகிட்டே பிஜி படிச்சேன் அப்படியே அங்கேயே வேலைக்கும் சேர்ந்துட்டேன். இருக்கும் ஒரு அஞ்சு, ஆறு வருஷம்” 

 

“அங்கேயே இருந்திருக்கலாமே பா, ஏன் திரும்பிட்டே?”

 

“போதும்னு தோனுச்சு தாத்தா” என்று புன்னகைத்தவன், “என்னால விஷ்ணுவை விட்டு இருக்க முடியாது அதுவும் ஒரு காரணம். இதுக்கே அடிக்கடி அவனை அங்க வர வச்சுடுவேன்” என்றவனைத் தாத்தாவுக்கும் ஏனோ பிடித்துப்போனது. 

 

ரியர்வியு கண்ணாடியில் வர்ஷாவை ரிஷி அவ்வப்போது பார்த்தபடி காரை ஓட்ட, அவளோ குழந்தைபோலக் கார் கண்ணாடியின் மேலே மூக்கை வைத்தபடி  மழையை ரசித்திருந்தாள். 

 

சிறிது நேரத்தில் விமான நிலையத்தை அடைந்தவர்கள்  விரைவாக வந்து விட்டதால் காத்திருக்க ஓரமாகப் போடப்பட்டிருந்த நாற்காலிகளில்  அமர்ந்து கொண்டனர். 

 

“செக் இன் திறக்க இன்னும் அரைமணி நேரம் ஆகுமாம்”  என்ற வர்ஷா, “மெதுவா வந்திருக்கலாம் தாத்தா” என்று முனக, 

 

“பரவால்ல சீக்கிரம் வந்தா டென்ஷன் இருக்காது” என்று சொல்ல அவரைச் செல்லமாக முறைத்தவள் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்க, மது தாத்தாவின் தோளில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். 

 

சில நிமிடங்களில் காரைப் பார்க் செய்துவிட்டு ரிஷியும் விஷ்ணுவும் வந்து சேர்ந்தனர். 

 

ரிஷி, “செக்கின் பண்ணல?” 

 

“சீ… அ…” 

 

“நீ இன்னும் திக்குறத விடலையா?” கொட்டாவி விட்டபடி மது கேட்க, 

 

திரு திருவென விழித்த வர்ஷா, “காபி வாங்கிட்டு வரேன்” என்று நழுவ, “துணைக்கு…” என்ற ரிஷியும் அவள் பின்னால் சென்றான்.

 

காபி தயாராகும்வரை அமைதியாகவே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அவ்வப்போது புன்னகைத்துக் கொண்டிருக்க, காஃபீ கப்புகளை ட்ரேவில் அடுக்கிக் கொண்டவன், “நான் அவங்களுக்கு கொடுத்துட்டு வரேன். நமக்கு நீ எடுத்துக்கோ வந்துடறேன்” என்று ரிஷி நகர்ந்தான்.

 

அவர்களுக்கானக் கப்புகளை எடுத்துக்கொண்டவள் மழையை வேடிக்கை பார்த்தபடி ஓரமாக ஒரு தூணின் அருகே நின்றிருந்தாள். 

 

ரிஷி வந்ததும் அவனிடம் கப்பைத் தந்தவள் மீண்டும் மழையைப் பார்க்க, 

 

“வர்ஷா, ரீச் ஆனதும் மெசேஜ் பண்ணு, முடிஞ்சவரை ரொம்ப இருட்டின அப்புறம் வெளில தனியா போகாத, ஐ மீன் ஊர் பழகுற வரை. எந்த ஹோட்டல்? ஆஃபீஸ் பக்கமா?”

 

“ஆ…பக்…” என்றவள் கண்களை மூடி ஆழ்ந்து சுவாசித்து கொள்ள, 

 

“பக்கத்துலதான்னா வெரி குட்” என்றவன், “சரி கிளம்பலாமா?” என்று அவளைப் பார்க்க,  அவள் ஏதோ சொல்ல விரும்புகிறாளன்று உணர்ந்தவன், “என்ன மா? ஏதாவது சொல்லனுமா?” என்றான்.

 

அவன் கண்களைப் படபடத்து பார்த்தவள், “ஐ லவ் யு நந்தா!” என்றாள் வர்ஷா தீர்க்கமாக.

 

அதிர்ந்து நின்ற ரிஷி, அவள் தானா பேசியது என்பதைப் போல அவளை உற்றுப் பார்க்க, வர்ஷா மீண்டும் அதே உறுதியுடன், 

 

“ஐ லவ் யு நந்தா. நான் உங்கள விரும்பறேன். ரொம்ப ரொம்ப நேசிக்கறேன்” அவன் கண்களைப் பார்க்க வலிமையின்றி பார்வையைத் தாழ்த்திக்கொண்டாள். 

 

மழையோடு வீசிய சில்லென்ற காற்றிற்கு சம்பந்தமில்லாத குளிர் உயிர்வரை பரவுவதை உணர்ந்தவனோ, அவளையே விழிகள் விரிய வெறித்திருந்தான். அவளின் சொற்கள் அவன் இதயத்தில் ஈடில்லா சந்தோஷத்தையும் தாங்கமாட்டாத வலியையும் ஒரே நேரத்தில் தருவது ஏனென்று உணரமுடியாமல் தவித்திருந்தான். 

 

“எ… எ… சொ… தெ…சா” இப்போது அவன் அவளிடம் திணற, 

 

“நான் தான் சாரி!” குறுக்கிட்டவள், “நான் சொல்லவே வேண்டாம்னு தான் இருந்தேன், என்னமோ சொல்லாம கிளம்ப முடியல”  மெல்லப் பார்வையை உயர்த்தியவள் அவன் முகத்தில் தெரிந்த உணர்வைப் புரிந்துகொள்ள முடியாமல்,

 

“உங்களை சங்கடப்படுத்த வேண்டாம்னு சொல்லாம இருந்தேன். ஆனா மனசுக்குள்ளவே வச்சுக்கவும் முடியல, நீங்க டென்ஷனாகாதீங்க ப்ளீஸ்… நீங்க எனக்கு எதுவும் சொல்ல வேண்டாம். பிடிச்சுருக்கான்னு கேக்க மாட்டேன். எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்னு சொல்ல தான் நினைச்சேன்” 

 

சுவாசிப்பதே கடினமாக உணர்ந்தவன், அவளைப் பார்த்தபடி அமைதியாக இருந்தான். 

 

வர்ஷா,  “எவ்ளோவோ நாள் உங்ககிட்ட பேச ஆசைப்பட்டிருக்கேன்… இப்படி வேற வழியே இல்லைனு ஆனா தான் பேச்சே வருமோ என்னமோ” சிரித்துக்கொண்டாள். 

 

“உங்களுக்கு என் மேல காதல் இல்லைனு தெரியும்…” இதழ் மடித்து மழையை சில நொடிகள் பார்த்தவள், “பாத்து பாத்து அழகா எழுதுற பரீட்ஷை பேப்பர்ல நேரமில்லையேன்னு கிறுக்கி வைக்கிற கடைசி பக்கம் மாதிரி ஆகிப்போச்சு. இப்படி ஏர்போர்ட்ல மொக்கையா ப்ரொபோஸ் பண்ணுவேன்னு நினைக்கல” 

விரக்தியாகச் சிரித்து, “வாங்க நேரம் ஆச்சு” என்று பேப்பர் கப்பைக் குப்பைத் தொட்டியில் இட்டாள்.

 

“சாரி வர்ஷா” என்றவன், அதற்குமேல் ஏதும் பேச தெரியாதவன் போல உதட்டைக் கடித்துக்கொண்டான்.

 

“இல்ல இல்ல நான் தான் சாரி” என்றவள், “சொல்லிருக்க கூடாது சாரி” என்று வருத்தமாக சொல்ல, 

 

“இல்லமா…மன்னிச்சுடு…”

 

“நோ நோ… விடுங்க… கிளம்பலாம் நேரமாச்சு” என்று அவனை அழைக்க, ரிஷியோ அமைதியாக நகராமல் நின்றான். 

 

“வர்ஷா…”

 

“ஃபிரெண்டா பழகிட்டு லவ் பண்றேன்னு சொன்னேன்னு என் மேல கோவமா? வெறுத்திட மாட்டீங்கல்ல?”

 

“ஹே சீ நோ! ஏன் இப்படிலாம் யோசிக்கிற?” 

 

“பின்னாடி மீட் பண்ணா முகத்தை பார்க்காம திருப்பிக்கிட்டு போக கூடாதுல்ல, ஒரு ஸ்மைலாவது பண்ணுவீங்களா?”

 

“வர்ஷா என்ன இது?” கடிந்துகொண்டவன் மனதில் வலி கூட, “எனக்கு என்ன சொல்லனும்னு தெரியல, சாரி” என்று கண்களை மூடிக்கொண்டான்.

 

“இட்ஸ் ஓகே! ஃபீல் பண்ணாதீங்க. இப்போ சொல்லலைனா பின்னாடி வருத்தப்படுவேன், சொல்லிருக்கலாமேன்னு அதான் இல்லாட்டி இப்போவும் சொல்லிருக்க மாட்டேன். 

 

பாருங்க என் கண்ல தண்ணியே இல்ல! நான் சிரிச்சுக்கிட்டு தானே இருக்கேன்? ப்ளீஸ் நந்தா இப்படி உம்முன்னு இருந்தா வருத்தமா இருக்கு” என்றவள் அவனை நெருங்கி அவன் பார்வை செல்லுமிடமெல்லாம் கையை ஆட்டி அவனைச் சிரிக்க வைத்தாள். 

 

“சாரி வர்ஷா” என்றவன் முகம் மீண்டும் இறுக, 

 

“அய்ய இதென்ன வம்பா போச்சு? நீங்க என்ன என்னை காதிலிக்கறேன்னு சொல்லி ஏமாத்திவிட்ட மாறி எதுக்கு இவ்ளோ சாரி? நான் தான் லூசு!” பின்னந்தலையில் தன்னை தானே அடித்துக்கொண்டவள், “வாய வச்சுக்கிட்டு சும்மாயில்லாம கொஞ்சூண்டு நம்பிட்டேன் அதான்… சாரி” என்றவள் கண்களில் கசியத் துடித்திருந்த கண்ணீரை மறைத்து கொண்டாள்.

 

“வாங்க கிளம்பலாம்” என்று வேகமாக நடக்க, ரிஷியோ ‘சொல்லிவிடு சொல்லிவிடு’ என்று தவித்த மனதைக் கல்லாக்கிக் கொண்டு அமைதியாகவே அவளுடன் நடந்தான். 

 

சூட்கேஸை எடுத்துக்கொண்டவள், தாத்தாவிடமும்  மதுவிடமும் விடை பெற்றுக்கொள்ள, உர்ரென்று  இருந்த விஷ்ணுவிடம் புன்னகையுடன், “இன்னும் கோவம் போலயோ?” என்று கேட்க, 

 

“கோவமா தான் இருக்கேன்” என்றான் கையைக் கட்டிக்கொண்டு. 

 

சிரித்துவிட்டவளோ, “என்ன பண்ணா போகுமாம்?” 

“தினமும் மெசேஜ் பண்ணா போகுமாம்” என்றான் மிடுக்காக.

 

“அப்போ பண்ணிடுவேனாம்” என்றாள் அவளும் சிரிப்புடன். சிரித்துவிட்ட விஷ்ணு, “டேக் கேர் வர்ஷா! உடம்ப பாத்துக்கோ. ரீச் ஆனதும் மெசேஜ் பண்ணு”

 

“கண்டிப்பா” என்றவள் பார்வை ரிஷியின் பக்கம் திரும்ப, புன்னகைத்தவன், “பத்திரம்” என்றான்.

 

“ம்ம் ஆன்ட்டிகிட்ட சொல்லிடுங்க… உங்களுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆனதும் சொல்லுங்க நான் கண்டிப்பா வருவேன்” என்றாள்.

 

“ஹே ஹே வர்ஷா நீ நந்தா கிட்ட பேசிட்டியா?” மதுவும் விஷ்ணுவும் ஒன்றுசேரக் கேட்க, சிரித்துவிட்டவளோ, “எப்போவோ!” என்று கண்ணடித்துவிட்டு, “கிளம்பறேன். பிளேன் ஏறினதும் மெசேஜ் பண்றேன்”

 

“நீ இம்மிகிரேஷன் முடிச்சதும் சொல்லு அதுவரை இங்க இருக்கோம்” என்றான் ரிஷி, சரி என்று தலையசைத்து  புன்னகையுடன் விடைபெற்றாள் வர்ஷா. 

 

சில நிமிடங்களில், “எல்லாம் ஆச்சு, கேட்டுக்கு போயிட்டு இருக்கேன். பிளேன் ஏறினதும் மெசேஜ் பண்றேன்” என்று தாத்தாவை அழைத்துச் சொன்னவள், கையோடு ரிஷியை அழைத்தாள்.

 

“ஹாய் ரிஷி, ஏர்போர்ட்ல இருக்கேன், இப்போ தான் கேட்டுக்கு….” அவள் கவனத்தைக் கலைத்தது ரிஷியின் பக்கத்திலிருந்து கேட்ட விமான நிலையத்தின் ஏதோ ஒரு விமானத்திற்கான அறிவிப்பு.

 

குழப்பமாக ஒருமுறை காதிலிருந்து ஃபோனை எடுத்தவள், அதே அறிவிப்பு அவளருகேவும் கேட்பதை உணர்ந்து, 

 

“ரிஷி இருக்கீங்களா?” என்று கேட்க, 

 

“எஸ் எஸ்” என்று பதட்டமாகச் சொன்னவன், அனைவருடனும் வாகனங்கள் நிறுத்துமிடத்தை நோக்கி நடக்க, விமானநிலைய அறிவிப்பின் சத்தம் குறைவதைத் தெளிவாக உணர்ந்தாள் வர்ஷா. 

 

“வெளில இருக்கீங்களா?” 

 

“எஸ் கொஞ்ச நேரத்துல கால் பண்ணவா?” என்றான் பதட்டமாக. 

 

“ம்ம்” என்று அழைப்பைத் துண்டித்தவள், குழப்பத்துடன் அவள் பயணிக்கும் விமானத்திற்கான கேட்டில் அமர்ந்துகொண்டாள். 

 

‘இல்ல நீ டென்க்ஷன்ல இருக்க அதான் என்னென்னமோ தோனுது… கூல்…’ தன்னை சமன்செய்ய முயன்று கொண்டிருந்தவள் கவனத்தைக் கலைத்தது அவள் குர்தாவை இழுத்த பிஞ்சு குழந்தையின் சிரிப்பு. 

 

சக பயணியின் குழந்தையைக் கொஞ்சியபடி நேரத்தைக் கடத்தியவள், விமானத்திற்குள் குழந்தையைக் கையில் பிடித்துக்கொண்டு, அதன் தாயுடன் பேசியபடி நுழைந்தாள். 

 

தாத்தாவையும் மதுவையும் வீட்டில் இறக்கி விட்டவர்கள் தங்கள் குடியிருப்பில் காரை நிறுத்த, இறங்கிய விஷ்ணு, “டேய் ரிஷி… இறங்காம என்ன பண்றே?” என்று எட்டிப்பார்க்க, ஓட்டுநர் இருக்கையில் ஸ்டேரிங் வீலில் முகத்தைப் புதைந்திருந்த ரிஷி அழுவதைக் கண்டு திகைத்தான். 

 

“டேய் என்னடா? ஹேய்!” பதறியவன் கதவைத் திறந்து ரிஷியின் தோளைப் பற்ற, கேவலுடன் விஷ்ணுவின் மீது சாய்ந்துகொண்டவனோ, “ஐ லவ் யு சொன்னவளை போடின்னு பிளேன் ஏத்தி விட்ருக்கேன் டா” என்று தேம்பினான். 

 

“என்னடா சொல்ற? காதலிக்கிறேன்னு சொன்னாளா?” 

 

“முகத்தை பார்த்து என்கிட்ட பேசின முதல் வார்த்தையே… ‘ஐ லவ் யு நந்தா’ன்னு தான் டா!” என்று முகத்தை மூடிக்கொண்டு பலமாக அழத்துவங்கியவன் கண்ணீரே அவன் மனதின் வலியை உணர்த்தியது. 

 

விஷ்ணு, “ஏன்டா இப்படி பண்ண?” ஆதங்கத்துடன் ரிஷியின் முதுகை தடவிக்கொடுக்க, 

 

“போகாதன்னு சொல்ல முடியலடா…” தேம்பியவன், “எனக்காக உன் கனவை விட்டுட்டு என்கூடவே இருன்னு சொன்னா, சுயநலம் டா. அவ நல்லா இருக்கட்டும் போதும்”

 

“ஆஹான்! அப்போ ஏன் இப்படி அழற?” என்றான் கோவமும் கிண்டலுமாய். 

 

“லவ் பண்றேனே டா!” என்று கேவியவன் கண்களை மீண்டும் மீண்டும் துடைத்துக்கொண்டு, “என்னோட சந்தோஷத்தை எப்பவும் நான் வெளில தேடினதே இல்ல, ஆனா அவளோட மொத்த சந்தோஷத்தையும் எனக்குள்ள வச்சுருக்கா, அதை… அத்தனையும் திருப்பி கொடுக்க நினைச்சும்… அவ பல நாள் கனவுக்காக அமைதியா இருந்தேன்டா!

 

இப்போ எனக்குள்ள இருக்கிற சந்தோஷம் எல்லாம் பிளைட்ல போகுது அவ கூடவே” முகத்தை மூடிக்கொண்டவன் உடைந்துவிட, “என்ன சொல்றதுன்னு தெரியல” என்ற விஷ்ணு ரிஷியைத் தேற்ற முயற்சித்தான். 

 

நீண்ட நேரத்திற்குப் பிறகு வீட்டிற்குள் நுழைந்தவர்கள் முன்பு கோவமாக அமர்ந்திருந்தார் ரஞ்சனி. 

 

“வாடா வர்ஷாவை பிளேன் ஏத்தி விட்டியா? இப்போ சந்தோஷமா இருக்குமே? உன்ன மாதிரி உணர்ச்சியே இல்லாதவனை காதலிச்சதுக்கு அந்த பொண்ணுக்கு வேணும்” என்று கடுகடுத்தவர், எழுந்து சென்றுவிட, ரிஷி மெளனமாகத் தன் அறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டான்.

 

வர்ஷாவின் டிரஸ்ஸிங் டேபிளின் மேலிருந்த மோதிரத்தை அவள் நினைவாக இருக்கவென, அவளறியாமல்  எடுத்திருந்தவன், அதை உள்ளங்கையில் வைத்துச் சிலநொடிகள் பார்த்திருந்தான். 

 

மென்மையாக அதை முத்தமிட்டுச் சுண்டு விரலில் அணிந்துகொண்டு, “ஐ லவ் யு வர்ஷா!” என்றவன் குரல் உடைந்தது.  

 

‘மூனு வருஷம் அன்பா இருந்தவ என்னை புரிஞ்சுக்காம, விஷ்ணு வேணுமா? அவ காதல் வேணுமா?ன்னு நின்னப்போவே எனக்கு காதல் மேலயிருந்த நம்பிக்கை மொத்தமும் குலைஞ்சுபோச்சு!  

 

என்னிக்காவது நீயும் அதே கேள்வியை கேட்டா, என்னால கண்டிப்பா உங்க ரெண்டு பேரையும் விட்டுக்கொடுக்க முடியாது. விஷ்ணு இல்லாம என்னால இருக்க முடியாது, உன்னையும் இழக்க முடியாது… நாம இப்படியே இருக்கிறதுதான் நல்லது. என் காதல் உனக்குத் தெரியாமலே போகட்டும்…’ 

 

ரிஷியின் கண்களினோரம் நீர் துளிர்க்க, விமானத்தில் கண்ணாடி ஜன்னலில் தலையைச் சாய்த்தபடி அமர்ந்திருந்த வர்ஷாவின் கண்களிலும் நீர் வழியத் துவங்கியது. 

 

‘ஒரு நாள் ஒரு நிமிஷம் இல்ல ஒரு நொடியாவது என்னை நீ காதலிச்சிருப்பியா நந்தா’ கண்களை மூடிக்கொண்டவள், “இல்லல?” தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். 

 

‘இருந்திருந்தா சொல்லியிருப்ப’ உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தவள், விமானப் பணிப்பெண் வருவதை உணர்ந்து வேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

 

“மேடம் ஹேண்ட் பேகை மேல ஸ்டோரேஜ்ல வைங்க இல்ல முன்னாடி சீட்டிற்கு கீழ வைங்க ப்ளீஸ்” என்று ஏர் ஹோஸ்டஸ் புன்னகையுடன் சொல்லிவிட்டு நகர,  கைப்பையை மேல அதற்குரிய இடத்தில் வைக்க நினைத்தவள், தன்னையும் அறியாமல் அதிலிருந்த சிறிய நோட்டை எடுத்துப் பார்த்தாள். 

 

அதில், 

ஆங்கிலத்தில்,  ‘உன் வாழ்க்கைல நீ ஆசைப்படுற எல்லாம் கிடைச்சு, இப்படியே அழகா எப்போவும் நீ சிரிச்சுகிட்டே இருக்க வாழ்த்துக்கள் – ரிஷிநந்தன்’ 

 

அன்று நந்தா கையெழுத்திட்ட ஆட்டோகிராஃப், ‘ரிஷி நந்தன்’ என்ற பெயரை மீண்டும் மீண்டும் உச்சரித்தவள், ‘நீ தான் ரிஷியா?’ என்று கேட்கக் கோவமாக ரிஷியை அழைக்க, அவனோ மூன்றாவது முயற்சியில் தான் அழைப்பை ஏற்றான். 

 

மெல்லிய கேவலுடன், “வ…வர்ஷா” என்றவனின் குரலில் அவள் கோவம் நொடியில் கரைய,

 

“ம்ம் ரி…ரிஷி…பிளேன் ஏறிட்டேன் அதான் சொல்லலாம்னு…”

 

“பத்திரம்”

 

“ரிஷி…”

 

“…”

 

“சரி ரிஷி, அங்க ஹோட்டல் ரூமுக்கு போனதும் மெசேஜ் பண்றேன்” என்றவள், “தூங்கறீங்களா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? சாரி”

 

“மிஸ் யு வர்ஷா” என்றவன் கேவலை கட்டுப்படுத்த முடியாமல், மௌனமாக. 

 

ஏனோ அதில் மொத்தம் உடைந்தவள் தன் உணர்வை வெளிப்படுத்தாமல், “நானும். மிஸ் யு ரிஷி” என்று அழைப்பைத் துண்டித்தாள். 

 

என்ன மாதிரி உணர்வு தன்னுள் எழுகிறதென்று உணர முடியவில்லை அவளால். ரிஷியும் நந்தாவும் ஒன்று என்று இப்பொழுது மனம் பல நிகழ்வுகளை ஒன்றாகக் கோர்த்து அவளுக்கு உணர்த்தியது.  

 

‘ஒரே மாதிரியான குரல்னு சொன்னதுக்கு எஸ்பிபி மனனோன்னு… லூசு நான் நீ சுத்தின ரீல் எல்லாத்தையும் நம்பி தொலைச்சேனே…’ கண்களை மூடிகொண்டவள், 

 

‘மாலதி?’ என்று வேகமாக கண்களை திறந்தாள். ‘அட படவா! உனக்கு இன்னும் பொண்ணு தேடுறதா தானே ஆன்ட்டி சொன்னாங்க? எல்லாம் டூப்பா?’

 

மீண்டும் கோவம் தலை தூக்க, ‘டுபுக்கு! இவ்ளோ நாளா ஏமாத்திட்டா இருந்திருக்க?’  

 

‘நீ ஏமாந்துட்டு அவனை குறை சொல்ற?’ மனசாட்சி குறுக்கே வந்து கேள்வி கேட்க,

 

‘அதுக்குன்னு ஏமாத்துவானா?’ இவள் முறுக்கிக் கொண்டாள்.

 

‘ஏன் கூடாதா?’ 

 

‘எப்படி ஏமாத்தலாம்? ஒன்னொன்னா யோசிச்சா கோவமா வருது’

 

‘கோவம் மட்டுமா வருது?’

 

‘இல்ல… கொஞ்சம் சந்தோஷமாவும் இருக்கு…’  அவன் எழுதிய பக்கத்தை தடவி பார்த்தவள், ‘எவ்ளோ அழகா இருக்குடா உன் கையெழுத்து உன்னாட்டுமே! லவ் யு டா…’ என்று புன்னகைத்தாள். 

 

கண்கள் விரிந்து, 

‘ஐயோ உன்கிட்டயே உன்னை காதலிக்கிறேன்னு சொல்லி வச்சுருக்கேன், உன்னையே உன் கிட்ட கொஞ்சி பாராட்டி… ஐயோ ஐயோ! லூசுன்னு நினைச்சுருப்பல?’ வெட்க புன்னகையை மறைக்க முடியாமல் தவித்தவள்  கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்.

 

‘நீதான் ரிஷின்றத்துக்கு வருத்தப்படனுமா சந்தோஷ படனுமா? உனக்கு என்னை பிடிக்காதுன்னா எதுக்கு அவ்ளோ தூரம் நந்தாவான உன்னை வச்சு நீயே என்னை கிண்டல் பண்ண? அப்போ உனக்கு என்னை பிடிக்கும் தானே? ஐயோ தெரியலையே! மண்டையே வெடிச்சுடும் போல இருக்கே. டேய் ஏன்டா இப்படி சோதிக்கிறே?’ மனதில் சொல்ல தெரியாத சந்தோஷமும் நிம்மதியும் குழப்பமும் பரவிட தவித்துப் போனாள்.

 

‘உனக்கு என்னை பிடிக்கும்! மிஸ் யு சொல்லும்போது நீ கேவின சத்தம் கேட்டுது. எஸ் எஸ்…’ சீட்டில் எம்பி எம்பி அமர்ந்தவள், பக்கத்துக்கு வரிசையில் இருந்த பெண்ணின் பார்வையில், அசடு வழிந்தபடி அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

 

வெளியே விமான ஓடுதளத்தில் நடப்பவற்றை பார்த்தபடி, ரிஷியை பற்றி யோசித்திருக்க, ‘ஓஹ் நோ! கேவினேனா… எனக்காக அழறியா நந்தா… ரிஷி… சே ரிஷிநந்தா… ரிஷிநந்தன்… ஐயோ யாரோ போ!’ 

 

அதற்குள் ரிஷியின் மெசேஜ் வாட்சப்பில் வந்தது.

 

‘ஏர்போர்ட்கள்ல ஃபிரீ வைஃபை இருக்கும், உன் பிளையிட்லையும் இன்டர்நெட் ஃபிரீ, அப்போ அப்போ அப்டேட் பண்ணு, நான் ஆன்லைன்ல உன் பிளேனை ட்ரேக் பண்ணிக்கிட்டே இருப்பேன்’

 

‘லேண்ட் ஆனதும் ஏர்போர்ட்ல மறக்காம சிம் கார்ட் வாங்கிக்கோ, கீழ இருக்க கம்பெனி நல்லா இருக்கும், அப்புறம் அப்போ அப்போ பிளேன்ல கொஞ்சம் நட, கால் மரத்து போகாம இருக்கும்’

 

இன்னும் மெசேஜுக்கள் வேகமாக வந்த வண்ணமிருக்க, பொறுமை இழந்தவள் அவனுக்கு கால் செய்ய மொபைலை எடுத்தாள். 

 

“மேடம் மொபைல் ஃபோனஸ் ஆப் பண்ணுங்க ப்ளீஸ்” பணிப்பெண் விடாப்பிடியாய் நிற்க, ஒரே நிமிஷம் கெஞ்சி,  அவனை அழைத்தாள். 

 

அவன் பேசும் முன்னே, 

“தேங்க்ஸ், நீங்க சொன்ன எல்லாமே பண்றேன், எதுக்கு இப்போ கூப்ட்டேன்னா… நந்தா என்னை லவ் பன்றான்னு எனக்கு இப்போ தெரிஞ்சுபோச்சு! நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றாள் உற்சாகமாக. 

 

அதிர்ந்தவனோ, “என்ன? எப்படி?” என்று பதற, 

 

ஓசைப்படாமல் சிரித்துக்கொண்டவள், “என்னமோ மனசு சொல்லுது, அவனுக்கும் என்னை பிடிக்கும்னு… ஏதோ காரணத்துக்காக என் காதலை அவன் ஏத்துக்கல, அவன் காதலையும் வாய்விட்டு சொல்லல, ஆனா அவனுக்கும் என் மேல லவ் இருக்கு” 

 

“ஆனா வர்ஷா…”

 

“பரவால்ல ரிஷி… இது போதும் நான் சந்தோஷமா தான் கிளம்பறேன்.  சேர்ந்து வாழ்ந்தா தான் காதல் ஜெயிச்சதா அர்த்தமா? நமக்கு பிடிச்சவங்களுக்கும் நம்மளை பிடிக்கும்னு தெரிஞ்சாலே போதும். என் காதல் ஜெயிச்சுடுச்சு. இதுவே ஆயுசுக்கும் போதும். நிம்மதியா வாழ்ந்துடுவேன்”

 

“பட் வர்ஷா…”

 

“ஒன்னு தெரியுமா நீங்களும் நந்தாவும் ஒரே ஆளா இருந்திருக்க கூடாதான்னு நிறைய தடவை  தோனியிருக்கு” என்று போட்டு வாங்க, 

 

‘நான் தான்ன்னு இப்போ சொன்னா என்ன பண்ணுவா? சந்தோஷப்படுவாளா, கோவப்படுவாளா?’

 

“ஸ்ஸ்ஸ் ரிஷி ஏர்ஹோஸ்டஸ் முறைக்கிறாங்க நான் ஃபோன் ஆப் பண்றேன். ரீச் ஆனதும் மெசேஜ் பண்றேன். ஊருக்கு போனாலும் உங்களை தொந்தரவு பண்ணுவேன்” என்று படபடப்பாக சொல்லிவிட்டு சிரித்தாள். 

 

சிந்தனை ஒரு நொடி மறந்து சிரித்துவிட்ட ரிஷி, “தொந்தரவா? காத்துகிட்டு இருக்கேன் வர்ஷா, சேஃப் ஜெர்னி, பை”

 

“பை ரிஷி” என்றவள் ‘லவ் யு சோ மச்’ என்று தனக்குள்ளே சொல்லி கொண்டு, உற்சாகமாக பயணத்தை துவங்க, ரிஷியின் நிலை தான்  குழப்பமானது. 

 

‘நான் லவ் பன்றேன்னு தெரிஞ்சுருச்சா? நோ! வாய்ப்பே இல்ல! எப்படி? விஷ்ணு! உளறிட்டானா?’ வேகமாக அவன் அறைக்கு ஓடினான்.

 

***