Birunthavanam-17

Birunthaavanam-1e8d62b1

பிருந்தாவனம் – 17

மாதங்கியின் வீட்டில் அனைவரும் ஒரே இடத்தில் குழுமி இருந்தனர். அரவிந்த், முகுந்தன் இருவரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருந்ததால், யார் முகத்திலும் ஈ ஆடவில்லை.

 வீட சோகம் சூழுந்து மௌனத்தை அப்பி கொண்டு மயானம் போல் நின்றது.

வீட்டிற்கு சென்ற மாதங்கி அவர்களோடு அமர்ந்து கொண்டாள். அங்கு இருந்த பிரச்சனையில், மாதங்கி எங்கு சென்று வந்தாள், என்று யாரும் அவளை தோண்டி துருவவில்லை.

‘எல்லாத்துக்கும் காரணம் இந்த கிருஷ்.’ மாதங்கியின் மனம் கருவிக் கொண்டது.

‘இதை எல்லார் கிட்டயும் சொல்லுவோமா?’ மாதங்கியின் அறிவு கேள்வி கேட்டு கொண்டது.

‘வேண்டாம்… சொன்னால், அண்ணனும், முகுந்தனும் குதிப்பாங்க. பிரச்சனை இன்னும் பெருசாகும். இரண்டு பேரின் எதிர்காலமும் கேள்விக்குறி ஆகிரும். நான் தான் சரி செய்யணும். இந்த விஷயத்தை நான் சுமுகமா முடிச்சி விடணும். அதுக்கு அப்புறம் வைக்கிறேன் வேட்டு சீனியருக்கு’ மௌனமாக கணக்கிட்டு கொண்டாள்.  

“முகுந்தன் மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட். அவன் ஒரு இன்ஸ்ட்ருமென்ட் செய்யணுமுன்னு சொல்லிருந்தான். முகுந்தனுக்கு என் துறையில் விருப்பம் இருந்ததால், நான் தான் எங்களுக்கு உபயோகம் இருக்கிற மாதிரி ப்ராஜெக்ட் செய்ய சொன்னேன். என்னால் தான் எல்லா பிரச்சனையும்” அரவிந்த் புலம்பலோடு மௌனத்தை களைத்தான்.  

பெரியவர்கள் அமைதியாக இருக்க, “அரவிந்த் நீ என்ன பண்ணுவ? நாம எல்லா  ரூல்சும் ஃபாலோ பண்ணிருக்கோம். நமக்கு வேண்டாதவங்க ஏதோ சிக்கலை உண்டு பண்ணினா, அதுக்கு நீ என்ன பண்ணுவ? நாளைக்கு யாரையோ பார்க்க போகணுமுன்னு சொன்னியே. அங்க போய் பேசுவோம்” முகுந்தன் நம்பிக்கையோடு கூறினான்.

“ஆமா, அண்ணா நாளைக்கு நீ போய் பேசு. எல்லாம் சரியாகிரும்” மாதங்கி நம்பிக்கையோடு கூறினாள்.

“அது என்ன நாங்க எல்லாரும் இப்படி புலம்புறோம். நீ மட்டும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி இவ்வளவு நம்பிக்கையா சொல்லுற?” மரகதவல்லி தன் மகளை கண்களை சுருக்கி பார்த்தார்.

அகப்பட்டுக்கொண்டவள் போல, முழித்த மாதங்கி, “நம்பிக்கை தான அம்மா வாழ்க்கை” சட்டென்று சமாளித்தாள்.

“அது சரி…” அவள் தாய் ஆமோதிக்க, சற்று ஆசுவாசமாக உணர்ந்தாள்.  

மாதங்கி ஏனென்று அறியவில்லை. ஆனால், அவளுக்கு கிருஷ் மீது நம்பிக்கை இருந்தது.

‘அண்ணன், முகுந்தனுக்கு பிரச்சனை இருக்காது.’ அவள் உறுதியாக நம்பினாள். அந்த எண்ணம், அவளுக்கு இன்னும் நிம்மதியை கொடுத்தது.

 கிருஷ் கூறியது போலவே, அரவிந்த் முகுந்த் பிரச்னையை உருவாக்கிய வேகத்தில் தவிடு பொடியாக்கியிருந்தான்.

‘யாராக இருக்கும்?’ என்ற சந்தேகம் அரவிந்தின் மனதை குடைய, அதற்கு பதில் அளிப்பது போல், கிருஷ் வீட்டில் இருந்து மாதங்கியை பெண் கேட்டிருந்தார்கள். அரவிந்திற்கும், முகுந்தனுக்கும் சந்தேகம் வலுப்பட்டிருந்தது.  ஆனால், எதையும் நிரூபிக்க முடியவில்லை.

‘ஆனால்? மாதங்கியின் மனம்?’ இருவரும் மௌனித்து கொண்டனர்.

“பையனை பத்தி விசாரிச்சேன். ரொம்ப நல்ல பையன். பெருசா கெட்ட பழக்கம் கிடையாது. நல்ல குடும்பம்.” என்று மாதங்கியின் தந்தை கூற, பெரியவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.  

“இல்லை முகுந்தனுக்கு மாதங்கியை…” என்று அவர்கள் கூற, “அப்படி ஒரு எண்ணம் எங்களுக்கு இல்லவே இல்லை.” மாதங்கி பதட்டத்தோடு மறுத்தாள்.

அனைவரும், முகுந்தனை பார்க்க, “மாதங்கி சொல்றது தான் சரி” என்று முகுந்தன் மாதங்கி கூற்றுக்கு ஆமோதிப்பு தெரிவித்து கொண்டே, “இந்த வரனில் உனக்கு சம்மதமா?” தன் தோழியை பார்த்து நேரடியாக கேட்டான் முகுந்தன்.  

மாதங்கி சம்மதமாக தலை அசைத்தாள்.  

அவன் பெயரை சொல்லும் பொழுது இருந்த பதட்டம், கிருஷின் பெயரை சொல்லும் பொழுது மாதங்கியிடம் இல்லை. அரவிந்தும், முகுந்தனும் ஒரு சேர மாதங்கியின் மனதை படித்துவிட்டனர்.  

ஆனால், அவள் முகம் காட்டிய பாவனையை மட்டும் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“மேல படிக்கணுமுன்னு சொல்லுவ? இப்ப சொல்லலை?” பாட்டி குறுக்கு விசாரணை நடத்தினார். அவருக்கு முகுந்தனை அவள் மணக்க சம்மதிக்கவில்லை என்ற வருத்தம்.

“சரி அப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம். நான் மேல படிச்சி ரீசேர்ச் பண்ணனும். ஐந்து வருஷத்துக்கு கல்யாணம் வேண்டாம். அப்புறம் எனக்கு கல்யாணம் பாருங்க” என்று மாதங்கி பேச்சை முடித்துவிட, “அடியேய்…” பாட்டி அலறினார்.

‘அப்படி வாங்க வழிக்கு…’ மாதங்கி கெத்தாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள்.

வேணுகோபாலுக்கு பெரிதாக விருப்பம் இல்லை. ஆனால், கிருஷின் விருப்பம் தான் முக்கியம் என்று ரங்கம்மாள், வேதநாயகி இருவரும் பாட்டியும் தாயுமாக கூறிவிட, கிருஷின் தாத்தா எதிர்ப்பு தெரிவிக்காமல் அவர்கள் பக்கம் இணைந்து கொண்டார். குடும்பமே ஒன்று சேர்ந்துவிட, வேணுகோபால் தலை அசைத்துவிட்டார்.

கிருஷ் வீட்டிலிருந்து மாதங்கியை பெண் பார்க்க வந்துவிட்டனர்.

அனைவரின் கண்களும் கிருஷின் மீது இருந்தது. ‘மாப்பிள்ளை சும்மா ஜம்முனு இருக்காரில்லை?’ அனைவரின் கண்களிலும் மெச்சுதல் இருந்தது.

சிரித்த முகமாக கனிவோடு அனைவரிடமும் மரியாதையாக இருந்தான் கிருஷ். பார்த்ததும், அனைவருக்கும் அவனை பிடித்துவிட்டது. பிருந்தாவனத்து மயக்கும் கண்ணனை பிடிக்காமல் இருந்தால் தானே ஆச்சரியம் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு இருந்தது அந்த நிகழ்வு.

“முகுந்தன் எனக்கு எதுவோ தப்பா படுது” அரவிந்த், முகுந்தனின் காதில் கிசுகிசுத்தான்.

“எனக்கும்… நானும் மாதங்கி கிட்ட விதவிதமா பேச்சு கொடுத்து பார்த்துட்டேன் ஒன்னும் பதில் சொல்ல மாட்டேங்குறா” அவன் தன் தோழனின் காதில் கிசுகிசுத்தான்.

“சரி… பாப்போம் எல்லாம் எது வரைக்கும் போகுதுன்னு” அரவிந்த் நிதானமாக தன் பார்வையை கிருஷின் பக்கம் திருப்பினான்.

கிருஷின் முகத்தில் இவர்களை பார்த்து நமட்டு சிரிப்பு. அதில் நிச்சயமாக தோழமை இல்லை.  

“மாதங்கி ஜூஸ் கொடு” மாதங்கியின் தாயார் அவளை அழைக்க, “அதெல்லாம் முடியாது அம்மா” மாதங்கி மறுப்பு தெரிவித்தாள்.  

“நீ சம்மதம் சொல்லி தானே இந்த கல்யாணம் நடக்குது” முகுந்தனின் தாயார் அவளை கிடுக்கு பிடியாக பிடிக்க, “அதுக்காக எல்லாம் இதை நான் செய்ய முடியாது” மாதங்கி மெட்டு விடாமல் நின்றாள்.

உள்ளே என்ன நடக்கும் என்று கணித்தவன் போல், கிருஷ் தன் பாட்டியின் காதில் கிசுகிசுத்தான். “பாட்டி, பொண்ணு ஜூஸ், காபி எல்லாம் கொண்டு வர வேண்டாம். சும்மா இங்க வந்து உட்கார சொல்லுங்க” என்று கூற, “ஏண்டா, பொண்ணு அவ்வளவு சுமாரா சமைக்குமா?” என்று கேட்டார் பாட்டி.

“சுமாராவா? சும்மா சூப்பரா சமைப்பா. என்ன சாப்பிட்டா செத்துருவோம் அவ்வுளவு தான்” அவன் பாட்டியை பார்த்து பெரிதாக புன்னகைத்தான்.

பேரனின் சிரிப்பை பார்த்து நொந்து கொண்டு, “பொண்ணை வர சொல்லுங்க. அந்த காலம் மாதிரி காபி கொடுக்குற பழக்கம் எல்லாம் வேண்டாம்.” பாட்டி பெருமிதத்தோடு கூறுவது போல் பேரனின் சொற்களை கூறினார்.  

 “சமைக்க தெரியாதுன்னு சொல்ற. அப்புறம், எதை பார்த்துடா லவ் பண்ண?” பாட்டி கேட்க, “அவ பேச்சு அப்படி” அவன் கண்களில் ரசனை வந்து அமர்ந்து கொண்டது.

“அவ்வளவு அடக்கமா கிருஷ்? நீ என்ன சொன்னாலும் சரின்னு சொல்லுவாளா?” என்று பாட்டி ஆசையாக கேட்க, “அடக்கம்ன்னா கிலோ எவ்வளவுன்னு கேட்பா? நான் என்ன சொன்னாலும் சுத்தமா கேட்க மாட்டா.” என்று கிருஷ் உல்லாசமாக கூறி கண்சிமிட்டினான்.

அப்பொழுது மாதங்கி வந்து அமர, அனைவரின் கண்களும் அவள் பக்கம் திரும்பியது.  

‘அழகு…’ அனைவரின் கண்களும் கணப்பொழுதில் அதை ஒத்து கொண்டது.  

மாதங்கியின் கண்கள் பேசிய குறும்பு, அதை தாண்டிய நிமிர்வு கிருஷின் தாய்க்கும், பாட்டிக்கும் கிருஷின் மனது புரிந்தது.  

எல்லாருக்கும் சம்மதம்ன்னா, “இன்னைக்கு நிச்சயம் செய்துப்போம். சீக்கிரம் கல்யாணம் வைத்துக்கலாம். கொஞ்சம் அரசியல் வேலைகள் இருக்கு.” வேணுகோபால் பட்டும் படாமலும் பேசினார். அவருக்கு நாகராஜனை எண்ணி சற்று கவலையாக இருந்தது.  

‘நாகராஜன் இடைஞ்சல் கொடுப்பானா? திருமணத்தை விரைவில் நடத்தி விடவேண்டும்’ வேணுகோபாலன் திட்டமிட்டு கொண்டார் .

“நான் பொண்ணு கிட்ட தனியா பேசணும்” கிருஷ் தன் பாட்டியிடம் முணுமுணுக்க, “ஏண்டா, இவ்வளவு நாள் பேசலையா?” பாட்டி கிருஷின் காதை கடித்தார்.  

“ஏன், நீங்களும், தாத்தாவும் எத்தனை வருஷமா பேசுறீங்க? நான் ஏதாவது கேட்டேனா?” அவன் பாட்டியிடம் சண்டைக்கு தயாராக, “பொன்னும் மாப்பிளையும் பேசிக்கட்டுமே?” பாட்டி, கூற, “அதுக்கு என்ன பேசலாம்…” மாதங்கியின் தந்தை சக்திபாலன் கூற, கிருஷ் எழுந்து கொண்டான்.  

‘லவ் மேரேஜ்! இதுல பொண்ணு கிட்ட தனியா பேசணுமா?’ கிருஷின் வீட்டில் அனைவரும் பாட்டியை முறைக்க, ‘மாதங்கி எப்படி பேசுவாளோ?’ என்று மாதங்கியை யோசனையாக பார்த்தனர்.  

அரவிந்தும், முகுந்தனும் கிருஷை மௌனமாக பார்த்து கொண்டிருந்தனர்.

   பின்னே இருக்கும் தோட்டம் அதில் மர ஊஞ்சல். அருகே நின்று கொண்டிருந்தாள் மாதங்கி. சுற்றி இருந்த செடிகள், அவர்களை மறைத்து கொண்டது.

“மாது…” அவன் தன்மையாக அழைக்க, “இதுவரை என்கிட்டே பேசினதே இல்லையா? இன்னைக்கு என்ன பேசணும்?” வெடுக்கென்று கேட்டாள் மாதங்கி.

“இப்ப தான் என் பாட்டி கிட்ட இந்த கேள்விக்கு பதில் சொன்னேன். நீ அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ” அவன் அவளை தன் பக்கம் திருப்பினான்.

அவள் அவனை பார்க்காமல் திரும்பி கொள்ள, அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான்.

“உங்க அண்ணன் விஷயத்தையும், முகுந்தன் விஷயத்தையும் சரி பண்ணிட்டனே. ஒரு சில நாட்கள் தானே அவங்களுக்கு வருத்தம். அதுவும் உனக்கு வருத்தம் தர கூடாதுன்னு தானே நினச்சேன். என் மேல இன்னும் கோபமா?” என்று அவன் கேட்க, “இந்த கல்யாணம் நடக்காது” அவள் உறுதியாக கூறினாள்.

“நான் அதை உன்கிட்ட கேட்கலை மாதங்கி” அவன் குரலில் கடினம் வந்து அமர்ந்து கொண்டது.

அவள் கண்கள் கண்ணீரை ஏந்த எத்தனித்து, அவனை பரிதாபமாக பார்க்கவே எத்தனித்தது. அவள் அப்படி பார்த்திருந்தால், அவர்கள் வாழ்க்கை திசை மாறி இருக்குமோ?  

அவள் தன் உணர்வுகளை மறைத்து கொண்டு, “சொல்வது என் கடமை” என்று கோபமாக கூறினாள்.  

“என் கடமை என்ன தெரியுமா?” கேட்டுக்கொண்டே அவள் முன் ஒரு காலை மடக்கி, அவளிடம் ஒரு பரிசை நீட்டினான்.  

“லவ் யு பேப்ஸ். லவ் யு பேப்ஸ்… என் உயிர் உள்ள வரை உன்னை நான் காதலிப்பேன். ஒருவேளை என் காதல் தோற்றால், என் காதலை நான் இல்லைனு சொன்னால், அன்னைக்கு நான் உயிரோடு இல்லைனு அர்த்தம்.” அவன் குரலில் காதல் வழிந்தோடியது.  

அவன் கண்கள் காதல் மட்டுமே யாசித்தது. அவன் விழிகள், அவளின் காதல் பார்வைக்காக தவித்தது. அவன் மனம் அவள் பக்கம் முழுதாக மண்டியிட்டு அவனை போல் காதலுக்காக நின்றது.  

அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.  

‘இது தான் காதலா?’ அவளுக்கு தெரியவில்லை. அவன் செய்கை அவளை ஏதோ செய்தது. அவனை ஒதுக்க, அவனை வெறுக்க, அவனை காயப்படுத்த தைரியம் இல்லாமல் அவள் மனம் தவித்தது.

‘வாங்கிக்கோ…’ அவன் கண்கள் ஆணையிட்டது. அவள் மறுப்பாக தலை அழைத்தாள்.  

“இந்த கல்யாணம் நடக்காது” அவள் அழுத்தமாகவே கூறினாள். ஆனால், முதலில் இருந்த அழுத்தம் இப்பொழுது இல்லை.  

அவன் எழுந்து கொண்டு, “லவ் யு பேப்ஸ்…” அவள் கன்னம் தட்டி அவன் சொல்ல, அவள் அவனை முறைத்து பார்த்தாள்.  

அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்து இதழ் பதித்து அவன் காதல் பரிசை கொடுத்தான். மறுக்க அவளுக்கு வழி இல்லாமல் போனது.

“பிரிச்சி பார்” அவன் கட்டளையை மறுக்க முடியாமல், அவள் பிரிக்க, அதில் இரண்டு குட்டி பச்சை கிளி பொம்மைகள் இருந்தன.

“லவ் யு மாதங்கி…” அவன் கூற, அதில் இருந்த ஆண் கிளி பெண் பெண் கிளியின் இதழ்களை முத்தமிட, பெண் கிளி வெட்கத்தில் நொடி பொழுது சிவந்து மீண்டும் பச்சை நிறத்திற்கு வந்தது.

 அவனின் விஷம பார்வை அவள் இதழ்களை தொட்டது.

அவன் செய்கை பார்வையாலே, ஆண் கிளியின் செயலை காதல் என்னும் பெயரோடு தொட்டு செல்ல, அவள் முகம் திருப்பிக் கொண்டாள். 

கிருஷ் அந்த ஆண் கிளியை மென்மையாக தடவி கொடுத்தான்.  “உன் ஜோடி உன்னை புரிஞ்சி உன்னை தேடி வரும் நாள் பக்கத்தில இருக்கு” அவன் ஆண் கிளியிடம் சமாதானம் பேசினான்.  

மாதங்கியோ, “எல்லாம் பகல் கனவுன்னு சொல்லு .” அவள் அந்த குட்டி பெண் கிளியை தடவி கொடுத்தாள்.  

“கீச்… கீச்… எல்லாம் பகல் கனவு” என்றது அந்த குட்டி பெண் கிளி.  

“ஹா… ஹா…” சிரித்து கொண்டே வீட்டிற்குள் சென்றாள் மாதங்கி.

அவள் வார்த்தைகள் அவனை வருத்தவில்லை. மாறாக, அவள் சிரிப்பு அவன் நெஞ்சை தீண்டியது. என் செயலை ரசிப்பவள், நிச்சயம் என் காதலை ரசிப்பாள். அவன் தன் நெஞ்சை தட்டி கொடுத்து கொண்டான்.

அவன் உள்ளே செல்ல எத்தனிக்க, அங்கு அரவிந்தும் முகுந்தனும் நின்று கொண்டிருந்தனர்.  

“என்ன மச்சான். நான் தான் சொன்னேனில்லை. தங்கையை கட்டி கொடுக்க போறீங்க கொஞ்சம் பார்த்து பதமா நடந்துக்கோங்கன்னு” அவன் கூற, “எதுவோ தப்பா இருக்கே?” என்று நிறுத்தினான் அரவிந்த்.

“உங்க தங்கை கிட்ட கேட்க வேண்டியது தானே?” கிருஷ் நமட்டு சிரிப்பு சிரித்தான்.

“மாதங்கி எப்ப என்ன பண்ணுவான்னு எங்களுக்கே தெரியாது.” முகுந்தன் அவனை எச்சரிக்கும் விதமாக கூறினான்.

“என் வருங்கால மனைவி பத்தி, என் மாதங்கி பத்தி எனக்கு தெரியும்” அவன் கூற, “அப்ப எதுவோ இருக்கு?” அரவிந்த் கண்களை சுருக்கி சந்தேகமாக கேட்டான்.

“மச்சான்… எப்ப பாரு போலீஸ் புத்தி நல்லதில்லை. தங்கை புருஷன் கிட்ட இப்படி எல்லாம் பேச கூடாது.” அரவிந்தின் தோளை தட்டி கொடுத்து, புன்னகையோடு அனைவரையும் நோக்கி  கிருஷ் எட்டு எடுத்து வைக்க, அவனை சொடக்கிட்டு அழைத்தான் அரவிந்த்.

“தங்கை புருஷனாக இருக்கிற வரைக்கும் தான் இந்த மரியாதை. மாதங்கிக்கு ஏதாவது பிரச்சனை வந்ததுன்னா தெரியும்” என்று அவன் நிறுத்த, “உங்க தங்கையால எனக்கு ஏதவது ஆபத்து வந்தாலும் காப்பாத்துங்க” கிருஷ் அரவிந்தை கேலி செய்து கொண்டு விலகினான்.  

‘இது என்ன பொம்மை? முத்தம் கொடுக்கற மாதிரி. ச்ச்சீ….’ அவள் கிருஷை திட்டியப்படி அதை தன் அறையில் வைத்துவிட்டு அனைவரும் இருக்கும் இடத்திற்கு வந்தாள்.

“எங்களுக்கு சம்மதம். பொண்ணுக்கு சம்மதமா? மருமக வார்த்தை முக்கியம் எங்களுக்கு” என்று வேதநாயகி மாதங்கியிடம் கேள்வியாக நிறுத்தினார்.

கிருஷின் மனம் சற்று தைரியத்தை வரவழைக்க விரும்பினாலும், அவன் இதயம், “தடக்… தடக்…” என்று வேகமாக துடித்தது.

மாதங்கியின் கண்கள் கிருஷை கூர்மையாக பார்த்தன. அவள் இதழ்கள் நமட்டு சிரிப்பில் மடிந்தன. ‘ஒரு பெண்ணை மிரட்டி ஒரு செயலை செய்ய வைக்க முடியுமா? இவனுக்கு எப்படி பாடம் கற்பிப்பது?’

அவள் கண்களில் சுயமரியாதையின் தகிப்பு!

அவன் கண்களில் காதலின் தவிப்பு!

அனைவர் கண்களிலும் மெல்லிய எதிர்பார்ப்பு!

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!