VVO7
VVO7
வெல்லும் வரை ஓயாதே!
வெல்! ஓயாதே – 7
தந்தையின் அலுவலகத்தில் பணிபுரியும் சகபணியாளரான சசிகலாவை, அதிதீ நிச்சயமாக அங்கே எதிர்பார்க்கவில்லை.
அவர் இங்கு எப்படி? மனம் யோசனைக்குத் தாவி, ஒரு முடிவுக்கு வர இயலாமல் முடங்கிக் கொண்டது.
சசிகலா அதிதீயை நோக்கி வந்ததும், மேலண்ணத்தோடு நாவு ஒட்டிக் கொண்டாற்போன்றிருந்தது அதிதீக்கு.
இவரால்தான் ஆரம்பத்தில் வீட்டில் பிரச்சனை துவங்கியது என்பது அப்போதும் நினைவில் வந்து அதிதீயை விழிப்போடு பேச எச்சரித்தது.
தீனதயாளன் வீட்டிற்குள் மட்டுமே தனது வீரபிரதாபங்களை பெண்களிடம் காட்டுவார். வெளியில் அதற்கு முற்றிலும் மாறாக நடந்து கொள்வார்.
பெண்களை அம்மா என்று மரியாதையோடு அழைத்துப் பேசுவது, அமைதியான, அக்கறையோடுடனான செயல்களின் மூலம் காண்பவரை தன்னோடு கட்டிப்போடுவார்.
வயதானவர்கள், தனக்கு இப்படி ஒரு மகன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற ஏக்கத்தோடும், அவரின் வயதையொத்த பெண்களிடம் இப்படி ஒரு அருமையான கணவன் கிடைத்திருக்க அவரின் மனைவி புண்ணியம் செய்திருக்கிறார் என்றோ அல்லது தங்களுக்கு அந்தக் கொடுப்பினை இல்லையே எனும் பொறுமலோடுடனான ஏக்கமான புலம்பலாகவும், அலுவலகத்தில் உள்ள சில பெண்கள் தனக்கு இப்படி ஒரு சகோதரன் கிடைத்திருந்தால் தங்களுக்கு வேண்டியிருக்கும் சகலமும் சங்கடங்கள் இல்லாமல் சாத்தியமாகியிருக்குமே என்றும், சிறு பெண்கள் தனக்கு இப்படி ஒரு தகப்பன் கிடைத்திருந்தால் தங்களது வாழ்வு சிறந்திருக்குமே என்றும் ஏங்கும் வகையிலும் நேர்த்தியாகவும், பண்போடும் நடந்து கொள்வார்.
அதனால் அவரைச் சுற்றிலும் உள்ள பெண்களிடம் தீனதயாளனைப் பற்றிக் குறை கூறினாலும் நம்பமாட்டார்கள்.
சுருங்கச் சொன்னால் வீட்டிற்கு வெளியே உள்ள பெண்களிடம் தகைந்து செல்வதில் செவாலியர் சிவாஜியையே மிஞ்சும் கெட்டிக்காரர்.
அதனால் சசிகலாவும் காணும்போதெல்லாம் தீனதயாளன் புகழ் பாடுவதில் சளைத்ததில்லை.
இந்தப் பெண்மணி, தன் தந்தையிடம் அன்று தான் கண்டதைக் கூறியிராது போயிருந்தால், நந்தாவுடனான வாழ்வு சாத்தியமாயிருக்காது என்றே பெண்ணுக்குத் தற்போதும் தோன்றியது.
நந்தா அதற்கு முன்பே வந்து தன்னிடம் காதலைக் கூறியிருந்தாலும், அதெல்லாம் ஒத்துவராது நமக்கு என்று பேச்சைக் கத்தரித்ததோடு, கத்தி அனுப்பியிருந்தாள் அதிதீ.
அதுவரை நந்தா மீது கிஞ்சித்தும் காதல் என்கிற எண்ணத்தை தனக்குள் வளர விட்டாளில்லை.
பருவம் தந்த தேர்வில் எந்த இடையூறும் இன்றி தேர்ச்சியடையும் நிலைக்குச் சென்றவளை, குழப்பியது சசிகலா கூறியதைக் கேட்டு தனது தந்தை தன்னை நம்பாமல் செய்த பிரச்சனைகளும், முடிவுகளுமே!
தற்போது தன்னைப் பார்த்துவிட்டுச் சும்மாயிருக்க மாட்டார் சசிகலா என்பதும் அதிதீக்குத் திண்ணமே.
இன்றும் பார்த்துவிட்டு, நிச்சயமாகத் தந்தையிடம் கூறுவார். தந்தை இவரின் பேச்சைக் கேட்டபின் என்ன செய்யப்போகிறாரோ என்கிற எண்ணம் மனதில் ஓட, நினைவுகள் கசந்துபோக நிம்மதியில்லாமல் இருக்கும் தனது நாள்களை எண்ணி நொந்தபடியே நின்றிருந்தாள்.
அப்படியொரு இக்கட்டு வருமுன்னே, ரயில் தண்டவாளத்தில் செல்லும்போது, பிளாட்ஃபார்ம் அதிரும்படியாக இதயம் அதிர்ந்தபடி இருந்தது அதிதீக்கு.
இதனால் தன்னைவிட அதிகம் பாதிக்கப்படுபவர், தாய் மட்டுமே என்பதை நினைத்ததும் அழுகை வந்தது.
தாய் கௌசல்யாவிற்கு தன்னால்தான் நிறையப் பிரச்சனைகள் என நினைத்தாலே வேதனையாக இருந்தது அதிதீக்கு.
வேதனையை முயன்று அடக்கிக் கொண்டு நின்றவள், இன்று தான் வெளியில் வந்தது தவறோ, நாளை நந்தா வந்தபின்னே தேவையானவற்றை அவனிடமே வாங்கிவரக் கூறியிருக்கலாம் என்கிற எண்ணம் தோன்றியது.
இனி அதைப்பற்றி யோசித்து ஒன்றுமாகப் போவது இல்லை.
வந்த வெள்ளம், கழுத்தோடு செல்லுமா, இல்லை தன்னையே இழுத்துக் கொண்டு செல்லுமா என்கிற பதைபதைப்பு முகத்தில் தெரிந்தது.
அருகே வந்தவர், “என்ன அதிதீ இப்டிப் பண்ணிட்ட! நல்ல மனுசனுக்கு இப்டி ஒரு தலை குனிவக் குடுத்திட்ட!”
சசிகலாவின் பேச்சைக் கேட்டு, ‘வேசம் போட்டு தெரியற மனுசங்களைப் பத்தி யாரு என்ன சொன்னாலும் நம்ப போறதில்லை’, என நினைத்தவாறே தலைகுனிந்த அதிதீயைக் கண்டு தவறாகப் புரிந்து கொண்டிருந்தார் சசிகலா.
“இப்ப நீ வருத்தப்பட்டு ஒன்னுமாகப் போறதில்லை! வெளில தலைகாட்ட முடியாம மெடிக்கல் லீவு போட்டுட்டு வீட்லயே அடஞ்சு கிடக்கார் சாரு! பாவம் அந்த அப்பாவி மனுசனுக்கு இப்படி ஒரு அசிங்கத்தை நீ ஏற்படுத்தியிருக்க வேணாம்! நீ செலக்ட் பண்ண மாப்பிள்ளையவிட அந்தஸ்து, பணம், படிப்பு எல்லாத்துலயும் நல்ல பையனாப் பாத்துதான பேசி முடிச்சார்! அந்தப் பையனைக் கட்டிக்கிட்டு அமோகமா இருக்கறதை விட்டுட்டு இப்டி உந்தலையில நீயே மண்ணை அள்ளிப் போட்டுட்டு நிக்கற! உன்னைப் பாத்தா எனக்கு சங்கடமா இருக்கு!”
“கூட்டிட்டு வந்தவன்னுதான சொல்லும் இந்த உலகம்! இந்தக் கெட்ட பேரை எப்டி மாத்த முடியும்? யோசிச்சுப் பாத்தியா மொதல்ல! அப்டியும் வந்தது வந்த! சந்தோசமா இருக்கற மாதிரியும் உம் முகத்தைப் பாத்தா தெரியல!”, என அதிதீயின் வெளித்தோற்றத்தைக் கண்டு கூற
கடந்திருந்த நாள்களில் மிகவும் நந்தாவை மிஸ் பண்ணியிருந்தாள் அதிதீ.
அருகில் இருந்தபோது அவனோடு, ஒட்டி, உறவாடி ஊன் உருகிடாதவளுக்கு, தற்போது நந்தாவைக் காண துடித்த கண்களையும், தேடித் தேடி வாடிய உள்ளத்தையும், என்ன செய்தும் தேற்ற இயலாது தோற்றிருந்தாள் அதிதீ.
வீட்டில் இருந்தால் அவனது நினைவு அதிகமாக இருக்கிறதே, வெளியில் சென்று வந்தால் சற்று நேரம் அதை மறந்து வேறு விசயங்களில் கவனம் செலுத்தலாம் என்று எண்ணி வந்தவளுக்கு, நடந்தது என்னவோ வேறாக இருந்ததோடு, ஊறாகிப் போனது.
அதனால் பெண் மிகவும் வாடிக் காணப்பட்டாள்.
சசிகலாவின் பேச்சிற்கு மறுபேச்சு, எதுவும் பேசவில்லை அதிதீ. என்ன பேசினாலும் ஒன்று நான்காக தந்தையிடம் சேரும் என்பதைத் தெரிந்திருந்தமையால் அமைதியாகவே பேசத் தூண்டிய நாவை பற்களுக்கிடையே சிறை செய்து தன்னைத்தானே கட்டுப்படுத்தியபடி நின்றிருந்தாள்.
“இப்ப இந்த ஊருலதான் இருக்கியா?”
“…”, இல்லை என தலையசைத்து மறுத்தாள். வேறு வழியில்லை. உண்மை சொன்னால் உடனே பிரச்சனை வரும். பொய் சொன்னால் சற்று தாமதமாகும். அதனால் அவ்வாறு சொன்னாள்.
“அப்ப இங்க எதுக்கு வந்திருக்க?”
“இங்க ஒரு ஸ்கூல்ல வேகண்ட் இருக்குன்னு சொன்னதால வந்தேன்”
“அப்ப எங்க தங்கி இருக்கீங்க?”, விடாமல் கேட்டார் சசிகலா.
“கந்தர்வக்கோட்டையிலதான்!”, என மீண்டும் ஒரு பொய் கூறினாள் பெண்.
இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தைக் கூறி தப்பிக்க நினைத்தாள் பெண்.
அனைத்தையும் அமைதியாகப் பார்த்திருந்தார், இருளாயி.
“அந்தப் பையன் என்ன பண்றான்?”, என விசாரித்தார்.
“கந்தர்வக்கோட்டைலதான் வேலை பாக்கறாஅஅஅஅ… ங்க”
“என்ன வேலை?”
“இன்ஜினியரிங்க் காண்ட்ராக்டர்”
“ம்.. அப்புறம் ஏன் பஞ்சத்துல அடிபட்ட மாதிரியிருக்க! உனக்கு நீயே இப்டி ஒரு கஷ்டத்தை இழுத்திட்டு இப்ப சங்கடப்படற..”
சசிகலாவின் வார்த்தையைக் கேட்டதும் எங்கிருந்து அத்தனை கோபம் வந்ததோ அதிதீக்கு, “நீங்க உங்களையும், உங்க வீட்டையும் மொதல்ல நல்லா கவனிங்க ஆண்ட்டி. என்னைப் பத்தி கவலைப்படாம வந்த வேலையைப் பாத்துட்டு சிவனேனு போனாலே எல்லாருக்கும் நல்லது.
உங்க அக்கறையை உங்க புள்ளைங்ககிட்டயும், உங்க அனுசரணைய உங்க வீட்டுக்காரர்கிட்டயும் காமிங்க.
இதை எதுக்கு நான் சொல்றேன்னா.. உங்களாலதான் ஆரம்பத்தில பிரச்சனைனு ஒன்னு எனக்கு ஆரம்பிச்சது.
நீங்க அன்னைக்கு அப்பாகிட்ட சொல்லாம இருந்திருந்தா.. இன்னைக்கு கண்டிப்பா இந்த இடத்தில வந்து நான் நின்னுருக்க வேண்டியிருந்திருக்காது.
அடுத்தவங்க வீட்டுலயும், அவங்க வீட்டுப் பிள்ளைங்களையும் பாத்துக்க ஆளில்லாம இல்ல.
சர்வீஸ் மைண்டோட இருந்தா அனாதைகளா இருக்கற எத்தனையோ பேருக்கு உங்களால முடிஞ்ச நல்லது செய்யுங்க.
பெத்தவங்க இருக்கும்போது அவங்கவங்க புள்ளைங்கள அவங்களே நல்லாப் பாத்துப்பாங்க.
அக்கறைங்கற பேருல உங்களமாதிரி சிலர் எடுக்கற அரைவேக்காடுத்தனமான முடிவால பாதிக்கப்படறது என்னமோ என்னை மாதிரிச் சிலர்தான்.
நீங்களா எதாவது நினைச்சிட்டு ஒன்னை நாலா பேசுறதால நிறைய பிரச்சனைகள். அது உங்களுக்குப் புரியாத மாதிரியே நடந்துக்கிறீங்க.
உங்க திருவாயை வச்சிட்டு எதாவது உளராம இருந்தாலே மத்தவங்களுக்கு எந்தப் பிரச்சனை வராது.
இன்னைக்கும் இதைப் போயி ஒன்னுக்கு ரெண்டா எங்கப்பாகிட்ட வத்தி வைக்கிற நேரத்தில, பஸ்ஸைப் புடிச்சி நேரங்காலத்தில ஊருக்குப் போற வழியப் பாருங்க ஆண்ட்டி”, என இத்தனை நாள்கள் தந்தை தன்னைப் பேசும்போதெல்லாம் வளர்ந்திருந்த கோபம் சசிகலாவின் பேச்சில் வீறுகொண்டு வெளிவந்திட, அவ்வாறு பேசச் செய்திருந்தது அதிதீயை.
கோபமும் ஆதங்கமும் குரலில் சேர்ந்து ஒலித்திடக் கூறியவள் அங்கிருந்து அகன்றிருந்தாள்.
“வா ஆயா நாம போற பஸ்ஸூ வந்திரப் போகுது”, என இழுத்தபடியே பேருந்து நிற்கும் இடத்தை நோக்கிச் சென்றாள் அதிதீ.
அதிதீ பேசியதைக் கண்ட சசிகலாவிற்கு, “திமிரப் பாரேன். இது திமிருக்குத்தான் இப்டி வந்து இங்க நிக்குது. இதல்லாம் எங்கிட்டு உருப்பட”, என்றபடியே தன்னைப் எதிர்த்துப் பேசியதால் எழுந்த மன உளைச்சலில் பெண்ணை மேலும் வசைபாடியவாறே அதிதீ செல்வதைக் கவனிக்காமல் போனை எடுத்தார்.
எடுத்தவுடன் தீனதயாளனுக்கு பேச நினைத்திட, எதிர்முனையில் அழைப்பை ஏற்கவில்லை.
மீண்டும் மீண்டும் முயற்சித்து ஓய்ந்ததோடு, ‘மிஸ்டு கால் பாத்துட்டு கூப்பிடட்டும்.’, என்றபடியே அடுத்து வேறு எண்ணுக்கு அழைத்தார்.
மூன்றாவது ரிங்கிலேயே அழைப்பு எடுக்கப்பட, “உனக்குப் பாத்தமே…”, எனத் துவங்கி அதிதீயைப் பற்றிய செய்தியை ஒன்றுவிடாமல் அப்படியே உரைத்துவிட்டு தான் செல்ல வேண்டிய ஊருக்கான பேருந்தை தேடத் துவங்கினார்.
சசிகலாவைப் பற்றி சில விசயங்கள் தாய் சொல்லக் கேட்டிருந்தாள் அதிதீ.
சாதாரணமாக எதாவது பேசும்போது பதிலுக்கு எதேனும் கூறினால், அதையே ஒன்றை பலமடங்காகத் திரித்து பேசுவதில் வல்லவர் என்று.
அத்தோடு வம்பு வளர்ப்பதிலும், புரணி பேசுவதிலும் அதிக நாட்டம் என்பதையும் அறிந்திருந்தாள்.
அதனால் அவரின் முன்பு வீட்டிற்கு செல்லுவதை ஒத்தி வைத்தவள், இருளாயியை அழைத்துக் கொண்டு பேக்கரியினுள் நுழைந்துவிட்டாள்.
ஒரு காஃபியோடு, பலகாரத்திற்கும் சொன்னவள், இருளாயி வேண்டாமேன்று கூறியும் வற்புறுத்தி வாங்கித் தந்து மெதுவாகவே உண்ணுமாறு கூறினாள்.
பாதி பற்கள் போன நிலையில் பெண் வாங்கித் தந்த பக்கோடாவுடன் போராடிக் கொண்டிருந்தார் இருளாயி.
பெண்ணுக்கு சிந்தனை முழுவதும் சசிகலாவைப் பற்றியே இருந்தது.
நேரத்தைப் பார்த்தபடியே இருந்தவள், ஒரு மணித் தியாலத்திற்குப்பின் வெளியில் வந்து சுற்றிலும் பார்வையை செலுத்தினாள்.
இருளாயிடம், “நம்ம வீட்டுக்கு போறதுக்கு வேற எதுவும் வழியிருக்கா?”, எனக்கேட்டு, அந்த வழியாக இருளாயுடன் வீட்டிற்குத் திரும்பியிருந்தாள் அதிதீ.
இருளாயிக்கு பெண்ணது நிலை புரிந்தாலும், எதுவும் பேசாமல் அமைதியாகவே வீடு வரை வந்தவர், “எதுனாலும் தனியா வெளிய போகாத” என பெண்ணை எச்சரித்ததோடு, “அப்படியே எதுவும் வாங்கனுமின்னா என்னைக் கூப்பிடு”, என்று தைரியம் கூறிவிட்டு அவரின் வீடு உள்ள பகுதிக்குச் சென்றிருந்தார்..
அதிதீக்கு, மனமே சரியில்லை. நிச்சயமாக தன்னைச் சந்தித்து சென்றவுடனே தந்தையிடம் விசயத்தைக் கூறியிருப்பார்.
தந்தையும் அமைதியாக இருப்பார் என்று தோன்றாததால், தான் கூறியதை எந்தளவிற்கு சசிகலா நம்பினாரோ என்ற எண்ணமும் தோன்ற, எதிலும் கவனமின்றி அதைப்பற்றிய சிந்தனையோடே அமர்ந்திருந்தாள் அதிதீ.
பெண்ணிற்கு, நேரம் செல்லச் செல்ல சற்றே பயமும் வந்தது.
வீட்டைப் பூட்டிக் கொண்டு இரவு உணவை முடித்து படிப்பவளுக்கு புத்தகத்தில் நாட்டம் செல்லவில்லை.
படுத்தால் உறக்கமும் வரவில்லை.
///////////////
தூரத்துச் சொந்தம் வீட்டில் நிகழ்ந்த மரணத்திற்கு வந்துவிட்டு திரும்பும்போது, அதிதீயை எதிர்பாராமல் சந்தித்திருந்தார் சசிகலா.
அப்போதும், அதிதீ இந்த ஊரிலா என்கிற சந்தேகத்தோடு பதினைந்து நிமிடங்கள் பார்த்திருந்தார்.
பின், ஒருவாராக அவளேதான் என ஊர்ஜிதம் செய்துகொண்டே, பெயரைச் சொல்லி அழைத்திருந்தார்.
பெண் பதறி, எதிர்கொண்டபோது வெளுத்திருந்த முகமே அவள்தான் அதிதீ என்பதை தெளிவாக உணர்த்தியிருக்க, வழமைபோல பெண்ணிடம் பேசத் துவங்கியிருந்தார்.
இதுவரை என்ன பேசினாலும், அமைதியாக கடந்து விடுபவள், இன்று எதிர்த்துப் பேசியது மனதில் சஞ்சலத்தைத் தந்திருந்தது.
சஞ்சலத்தோடு நின்றிருந்தவரைக் கடந்து சென்றவள் எங்கே சென்றாள் என்பதைக் கவனிக்கத் தவறியிருந்தார் சசிகலா.
ஆனாலும் சஞ்சலம் போகவேண்டுமென்றால், இந்த விசயத்தைக் கண்டிப்பாக வேறு யாரிமாவது பகிர்ந்து கொள்ள வேண்டுமென தீவிரமாக எண்ணியவர், தன்மூலமாக அதிதீக்கு ஏற்பாடு செய்திருந்த மாப்பிள்ளை வீட்டாருக்கு அழைத்துப் பேசியிருந்தார்.
மனம் சற்றே ஆசவாசப்பாட அங்கிருந்து கிளம்பியிருந்தார்.
//////////////
ஒன்பதரை மணியளவில் பதற்றத்தோடு கதவு தட்டும் சத்தத்தில், விதிர்விதிர்த்துப் போயிருந்தாள் அதிதீ.
இருளாயியின் அழைப்பைக் கேட்டு ஆசுவாசமடைந்தவள், கதவைத் திறக்க, வெளியில் அந்த காம்பவுண்டில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி நிற்க, ஒன்றும் புரியாது விழித்தாள் அதிதீ.
“இப்பத்தான் உம் போட்டோவக் காட்டி வெளியில கேட்டானுகன்னு வந்து சொன்னேன். அதக் கேட்டதும் நம்ம இருளாயிதான் உடனே உன்னை நம்ம கவுன்சிலர் வீட்டுல கூட்டிட்டுப்போயி பத்திரமா விட்றலாம்னு சொல்லுது. வீட்டைப் பூட்டிட்டு வாரியா”, என அழைக்க
கவுன்சிலர் யார் என்பதே தெரியாமல், இவர்கள் கூறுவதைக் கேட்டு உடன் எவ்வாறு செல்வது என்கிற குழப்பத்தில் நின்றிருந்தவளை, வலுக்கட்டாயமாக வீட்டைப் பூட்டச் செய்து அழைத்துக் கொண்டு, பொது வழியில் செல்லாது, வீடுகளுக்கிடையே உள்ள சந்துகளின் வழியே அழைத்துச் சென்றனர்.
இருளில் பாதையும் தெரியாமல், அவர்கள் இழுத்த இழுப்பிற்கு குத்து மதிப்பாக பாதங்களை வைத்து தடுமாற்றத்தோடு நடந்தாள் அதிதீ.
உடன் வந்த இருளாயி, மற்றுமொருத்தி இருவரும் பழக்கமான பாதையாதலால் இலகுவாகவே நடந்து சென்றதையும் ஆச்சர்யத்தோடு பார்த்தவாறே அவர்களுக்கு நடுவே நடந்தாள்.
திக்கும் தெரியாமல், திசையும் தெரியாமல் என்ன செய்வது என்பதும் புரியாமல், மறுக்கவும் முடியாமல், அருகில் உள்ளவர்கள் கூறக் கேட்டதை செவிமடுத்து, குழப்பத்தோடு அந்தத் தெருவில் நுழைந்தாள் அதிதீ.
அது அவள் குடியிருக்கும் பகுதி போல் குண்டு பல்பின் மங்கிய வெளிச்சத்தில் ஒடு வேய்ந்த சிறு சிறு வீடுகள் போலல்லாது, இரண்டு தளங்களைக் கொண்ட பெரிய கான்கிரீட் வீடுகளுடன் பளிச்சென்று காட்சியளித்தது.
ஆனாலும் தங்களின் வீட்டைப் போலல்லாமல் இருந்ததையும் மனம் குறித்துக் கொண்டது.
சென்ற இடம் அதிதீக்கு பாதுகாப்பளித்ததா?
அடுத்த அத்தியாயத்தில்…