birunthavanam-27

Birunthaavanam-c3cb011c

பிருந்தாவனம் – 27

மாதங்கி தன் கண்களை மூடி கொண்டு, கிருஷின் செய்கைக்காக காத்திருக்க அவன் முகத்தில் மென்னகை.

      அவன் கண்கள் அவளை அளவிட்டது. கல்லூரி காலத்தில் இருந்த கொழு கொழு கன்னங்கள் இப்பொழுது இல்லை. முன்பு சற்று பூசினார் போல் உடல் தோற்றத்தில் இருப்பாள். இப்பொழுது மெல்லிடையோடு, வடிவமாய் இருந்தாள்.

        லெகின்ஸ், டாப்ஸ் அணிந்திருந்தாள். அவள் கண்கள் வளைந்து மிக அழகாக இருந்தது. ‘மீன் போல’ என்று எண்ண அவனுக்கு தோன்றவில்லை.

‘அதை விட அழகு…’ அவனுக்கு தோன்றியது. அவள் இதழ்கள், குவிந்து அழுத்தத்தை காட்ட, அவனுக்கு அது அழகு காட்டியது.

‘முன்னை விட அழகு, இல்லை பேரழகு…’ அவன் மனம் எண்ண, அவன் மென்னகை சற்று விரிந்தது. ‘ஆனால், அதே அழுத்தம்! அதே பிடிவாதம்!’ அவன் அறிவு அவனை எச்சரித்தது.

அறிவின் எச்சரிக்கையை ஒதுக்கிய அவன் கண்கள், அவன் காதல் பரிசு கொடுத்த கன்னத்தை தழுவியது. அவன் இதழ்கள், இன்றும் அவள் ஸ்பரிசத்தை நினைவு கூர்ந்தது.

கிருஷ் அவளை நிதானமாக பார்த்தான்.  கல்லூரி வயதில் வராத நிதானம் அவனுக்கு இப்பொழுது வந்திருந்தது.

‘காதலிப்பது தவறில்லை. ஆனால், எல்லா காதலும் வெற்றியை மட்டும் தான் தழுவ வேண்டுமா என்ன?’ அவனுள் கேள்வி எழுந்தது.

‘எல்லா காதலும் திருமணத்தில் முடிவதில்லை’ அவன் படித்த படிப்பும், அவன் பார்க்கும் வேலையும் அவனுக்கு நிதர்சனத்தை உணர்த்தியது.

 

‘பிரிந்தாலும் அது காதல் தானே? அதுவும் ஒரு அழகான சுகம் தானே?’ அவன் தன் நெஞ்சை நீவிக்கொண்டான்.

பொறுமை இழந்த  மாதங்கி, “தாலி கட்டலையா?” பட்டென்று கேட்டாள்.

அவன் மறுப்பாக தலை அசைக்க, “ஏன்?” அவள் கேள்வியோடு நிறுத்தினாள்.

“எனக்கு வர போற பொண்டாட்டி அழகா இருக்காளான்னு பார்த்துட்டு இருக்கேன்.” அவன் நமட்டு சிரிப்போடு கூறினான்.

“என்ன கொழுப்பா?” அவள் எகிற, “இது என்ன டீ அநியாயமா இருக்கு? தாலி கட்ட சொல்லுற. அழகை ரசிச்சா தப்புன்னு சொல்லுற?” அவன் கண்களில் குறும்பு மின்னியது.

அவன் பேச்சு செல்லும் திசையில் அவள் அவனை குறுகுறுப்போடு பார்த்தாள்.

‘இப்பொழுது கிருஷ் தவறாக பேசவில்லை. எங்கோ, அவன் உரிமையை நிலை நாட்டிக் கொண்டிருக்கிறான்’ அவள் அபாய மணி அடித்தது.

தன்னை சுதாரித்து கொண்டாள் மாதங்கி. “எதுக்கு இப்ப தேவை இல்லாத  பேச்சு. உனக்கு என்னை பிடிக்காது. என்னை தண்டிக்கணும். அவ்வுளவு தானே, கட்டு தாலியை” அவள் அவனுக்கு கட்டளை பிறப்பித்தாள்.

“சரி, கட்டுறேன். அப்புறம்?” என்று அவன் அங்கிருந்த கல்லில் அமர்ந்தான்.

“அப்புறம் என்ன அப்புறம்?” அவள் விழிக்க, அவன் முகத்தில் கேலி புன்னகை வந்து அமர்ந்து கொண்டது.

“உன் வாழ்க்கையை பத்தி, நீ என்னைக்காவது யோசிச்சிருக்கியா?” அவன் அவளை பார்த்து புருவம் உயர்த்தினான்.

“ம்… ஏன் யோசிக்காம? நான் நல்லா படிக்கணும். நல்லா வேலைக்கு போகணும் . நிறைய சாதிக்கணும். இப்ப கூட என் ப்ராஜெக்ட் பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன். அதுக்கு தான் கேமரா வாங்கினேன். நீ தான் இப்ப அதை உடைச்சிட்டியே” அவள் சோகமாக கூறினாள்.

“நீ என்னத்த படிச்ச?” அவன் கடுப்பாக கேட்க, “ஹலோ, நான் எப்பவும் யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர்” அவள் பெருமையாக கூற, “அறிவாளி…” அவன் உதடுகள் ஈ என்று விரிந்து அவளை சிலாகிக்க, அவன் மனமோ, ‘மக்கு… மக்கு… சரியான மக்கு மரமண்டை…’ என்று அவளை திட்டியது.

“நீ என்னை உண்மையா பாராட்டுற மாதிரி தெரியலை” அவள் கூற, “தெரிஞ்சா சரி…” அவன் முணுமுணுத்தான்.

அவளை அருகே அமரும் படி செய்கை காட்டினான்.

அதே நேரம், இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தவர்களின் வழியை ஒரு யானை மறித்து கொண்டு நின்றது.

மாதங்கி யோசனையோடு அவன் அருகே அமர, “நீ எதையாவது யோசிச்சு செய்யறீயா மாதங்கி. ஊரை கூட்டி செய்ய வேண்டியதை இப்படி காட்டுக்குள் செய்ய சொல்லுற? தனியா செய்ய வேண்டியதை ஊரை கூட்டி செய்யுற?” அவள் விழி பார்த்து அவன் கூற, “குத்தி காட்டுறியா கிருஷ்?” அவள் பரிதாபமாக கேட்டாள்.

“….” அவன் இதழ்கள் இறுக மூடிக்கொண்டன. அவன் கண்கள் கலங்கியது.

‘நான் இவளை குத்தி காட்டுவேனா?’ அவன் மறுப்பாக தலை அசைக்க, “நீ குத்தி காட்டினாலும் தப்பில்லை கிருஷ். நீ மட்டுந்தான் என்னை குத்தி காட்டி பேசலை. நீயும் பேசிடு” அவள் மெதுவாகவே கூறினாள்.

தன் விரல்களால் அவள் கன்னங்களை மெல்ல தட்டினான். “வீட்டுக்குள்ள வா மாதங்கி.” அவன் புன்னகையோடு கூறினான். அந்த விரலின் தீண்டல் மெல்லிய உரிமை பாராட்டியது.

“நீ தாலி கட்ட மாட்ட. ஆனால், உனக்கு என்னை சும்மா சும்மா திட்டனும். அது தானே வேணும்? நல்லா திட்டு. திட்டு நல்லா. அது தானே உனக்கு ஆசை. அது தானே உனக்கு சந்தோசம். திட்டு… நீ என் பழைய கிருஷே இல்லை.” அவள் தன் கழுத்தை சரித்து குருவி போல் முகத்தை சுளித்து கொண்டாள்.

‘என் கிருஷ்?’ அவள் கூறிய வார்த்தையில், அவன் கண்கள் அவளை ஆழமாக பார்த்தன.

“மாதங்கி, இனி நான் உன்னை திட்டவே மாட்டேன். சண்டையும் போட மாட்டேன். வீட்டுக்குள்ள போய் பேசுவோமா?” அவன் கேட்க, அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.

அப்பொழுது, யானையின் பிளறல் சத்தம் பயங்கரமாக கேட்க, மாதங்கி அவனை அச்சத்தோடு பார்த்தாள். கிருஷிற்கு ஏதோ தவறாக தோன்றியது.

அவன் மூளை பல விதமாக சிந்திக்க ஆரம்பித்தது.

வேகமாக வாகனம் வரும் சத்தம் கேட்க, அவள் கைகளை தரதரவென்று பிடித்து இழுத்து கொண்டு வீட்டிற்குள் சென்றான் கிருஷ்.

அவளை ஒரு அறைக்குள் தள்ளி விட்டு அவன் வெளியே செல்ல எத்தனிக்க, மாதங்கி அவனை குறுக்கே நின்று தடுத்தாள்.

“எங்க போற கிருஷ்?” அவள் கேட்க, “ஏதோ பிரச்சனை மாதங்கி நான் என்னனு பார்க்க போறேன்.” அவன் அவளை ஒதுக்கிவிட்டு செல்ல முயற்சிக்க, “என்ன பிரச்சனை கிருஷ்?” அவள் மீண்டும் கேள்வியை தொடுத்தாள்.

“ஏய், என் வேலை…” அவன் பற்களை நறநறக்க, “என்கிட்டே கோப பட மாட்டேன்னு சொன்ன கிருஷ்.” அவள் கூற, அவன் சோர்வாக அமர்ந்தான்.

“ஏன் மாதங்கி என்னை படுத்துற?” அவன் கேட்க, அவள் அவன் முன் முட்டியிட்டு அமர்ந்தாள்.

“இந்த நேரம் நீ இங்க இருக்கிறதா உனக்கு திட்டமே இல்லை. என்னால், தான் நாம்ம இங்க மாட்டிகிட்டோம்.” அவள் பிரச்சனையின் ஏதோவொரு ஓரத்தை தொட்டுவிட்டாள்.

“மாதங்கி, யானை இப்படி சும்மா சத்தம் கொடுக்காது. எனக்கு ஏதோ வண்டி சத்தம் கேட்குது. யாரோ தேவை இல்லாதவங்க வந்திருக்காங்க. நான் வெளிய போய் பார்க்கணும்.” அவன் வேகமாக செல்ல எத்தனிக்க, “உனக்கு ஏதாவது ஆகிடுச்சுனா?” அவள் அவன் வழியை மறித்து கொண்டு நின்றாள்.

“மாதங்கி வழியை விடு. சில பிரச்சனையை முடிக்க நான் பல வருஷமா போராடுறேன்.” அவன் கர்ஜிக்க, “என்னை தாண்டி நீ போக கூடாது கிருஷ்.” அவள் அவன் நெஞ்சின் மீது கை வைத்து கூறினாள்.

“மாதங்கி…” அவளை மிஞ்ச முடியாமல் அவன் குரல் கெஞ்சியது.

“நீ என் மேல வச்சிருக்கிற அக்கறை உண்மைன்னா இப்ப வெளிய போகாத. எதுவானாலும், நாம காலையில் பார்த்துக்கலாம். அப்படி நீ, வெளிய போனால், நானும் வருவேன். சேர்ந்தே போய் பார்ப்போம்” அவள் பிடிவாதமாக நிற்க,  ‘ஆபத்தே இவளுக்கு தான்னு நான் எப்படி சொல்ல?’ கிருஷ் மௌனித்து கொண்டான்.

அப்பொழுது வீட்டை பலர் சூழும் சத்தம் கேட்க, கிருஷ் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை எடுத்து வைத்து கொண்டான்.

“இ… இது…து எ… எது…எதுக்கு?” அவள் உதடுகள் அந்த இருளில் தூப்பாக்கியை பார்த்த நொடி மெலிதாக தந்தி அடித்தன.

“உன்னை கொன்னு, இந்த காட்டில் பொதைக்கலாமுன்னு தான்.” அவன் அசராமல் நேரம் காலமில்லாமல் நயாண்டி பேசினான்.

“என்ன, மரணமா இருந்தாலும், உன் கையால் வந்தால் சொர்க்கம்ன்னு சினிமா வசனம் பேசுவேன்னு நினைச்சியா? உன்னை கொன்னு இங்க பொதைச்சிருவா மாதங்கி” கூறியபடி அவன் முன் அமர்ந்தாள்.

“ஹா… ஹா…” அவள் பேச்சை ரசித்து, அவன் பெருங்குரலில் சிரிக்க, “இப்படி சிரிக்காத, நம்மளை தேடி வந்தவங்க பயந்திர போறாங்க” அவள் கரிசனத்தோடு கூற அவன் அவளை மேலும் கீழும் பார்த்தான்.

அங்கு மயான அமைதி நிலவியது. “உனக்கு பயமா இல்லையா?” அவன் கேட்க, அவள் மறுப்பாக தலை அசைத்தாள்.

“ஏன்?” அவன் கேட்க, “எங்க அண்ணன் போலீஸ். நான் பல மிரட்டலை பார்த்திருக்கேன்.” அவள் கூற, அவன் தலை அசைத்து கொண்டான்.

அரவிந்தை வைத்து, கேலி பேச அவனுக்கு இப்பொழுது பல விஷயங்கள் தோன்றினாலும், அவன் பேசவில்லை.

“….” சில நொடிகள் மௌனம் தொடர, “நீ இருக்கும் பொழுது நான் தைரியமா இருப்பேன் கிருஷ். தப்பை நான் செய்தாலும், நான் தான் காரணமுன்னு சொல்லுன்னு சொல்ற நீ என் பக்கத்தில் இருக்கும் பொழுது எனக்கு என்ன நடந்திரும் கிருஷ்?” அவள் அவர்கள் பிரிவிற்கு முன் பேசிய கடைசி வார்தைகளை மனதில் கொண்டு கூற, அவன் எழுந்து நின்றான்.

“மாதங்கி…” அவன் உணர்ச்சி வசப்பட, “அந்த கிருஷ் இப்ப இல்லை. அன்னைக்கு, நான் தப்பு பண்ணின அப்ப கூட நான் வாங்கிய அடியை பொறுக்காமல் பழியை தன் மேல் சுமந்து கொண்ட கிருஷ் இப்ப இல்லை. எனக்கு அந்த நண்பனை பிடிக்கும்.” மாதங்கி அவனை பார்த்து நிதானமாக பேசினாள்.

“நமக்குள்ள கல்யாணம்ங்கிற பேச்சே முன்னால் வராமல் இருந்திருக்கலாமில்லை?” அவள் கேட்க, “ஏதோ தெரியாமல் வந்திருச்சு மாதங்கி. இனி ஒரு நாளும் வராது. நம்ம கிட்ட நட்பு மட்டுந்தான். அதை தாண்டி ஒன்னும் இல்லை.” அவளை சமாதானம் செய்ய அவன் குரல் மன்றாடியது.

அவன் மன்றாடல், அவள் செவிகளுக்கு எட்டவில்லை.

அப்பொழுது  தொலைபேசி ஒலிக்க, அவன் அங்கு விரைந்து சென்றான்.

“அண்ணா, உன் மொபைல் எடுக்கலை. அது தான் நீ கெஸ்ட் ஹவுசில் இருப்பியோன்னு கூப்பிட்டேன்.” பிருந்தா பேச, “அ… அது…”  கிருஷ் தடுமாறினான்.

“அண்ணா, எதுவும் பிரச்சனையா?” பிருந்தா கேட்க, “பிருந்தா, மாதங்கி இங்க இருக்கா” மெதுவாக கூறினான் கிருஷ்.

பிருந்தாவின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

“அண்ணா, அவ மட்டுந்தான் இருக்காளா?” பிருந்தா கேட்க, “ம்…” என்றான் கிருஷ்.

“எப்படி அண்ணா இருக்கா? என்னை பத்தி கேட்டாளா?” பிருந்தா ஆர்வமாக கேட்டாள்.

“நல்லாருக்கா. உன்னை பத்தி மட்டும் தான் கேட்டா” கிருஷ் கூற, “தெரியும் அண்ணா. அவளுக்கு என் மேல பாசம் அதிகம்.” பிருந்தாவின் குரல் நெகிழ்ந்தது.

“பேசுறியா பிருந்தா? ரொம்ப சந்தோஷப்படுவா” கிருஷ் பிருந்தாவிடம் கூற, “இல்லை அண்ணா. நான் நேரில் வரேன்.” பிருந்தா கூற, கிருஷ் மௌனித்தான்.

“பெரியம்மா, அம்மா யாருக்கும் தெரியாமல் வரேன்.” பிருந்தா கூற, “தெரிஞ்சா என்ன நடக்குமுன்னு தெரியும் தானே?” கிருஷ் கேலி போலவே கேட்டான்.

“உன்னை, இத்தனை வருஷமா வீட்டை விட்டு மட்டுந்தான் அனுப்பிருக்காங்க. அப்புறம் உன்னை சட்டப்படி குடும்பத்தில் இருந்து விலக்கிருவாங்க. உன்னோட சேர்த்து, என்னையும் அடிச்சி பத்திருவாங்க.” பிருந்தா நிதர்சனத்தை கூற, “தெரிஞ்சா சரி.” கிருஷ் பேச்சை முடித்துவிட்டான்.

அவர்கள் பேச்சு சிலர் செவிகளுக்கு சிலர் பார்வைக்கும் தப்பவில்லை.

பிருந்தாவிடம் பேசிவிட்டு, மாதங்கி இருக்கும் அறைக்கு வந்தான் கிருஷ்.

இருளில் மெழுகுவர்த்திக்கு வெளிச்சத்தில் மாதங்கி முகத்தில் சிந்தனை ரேகைகள். கிருஷின் புருவம் ஏறி இறங்கியது. அவன் மனதில் குற்ற உணர்ச்சி தோன்றியது.

அதே நேரம் வீட்டிற்கு வெளியில், “மச்சான் ரெண்டு பேர் தான் இருக்காங்க. போட்டுருவோமா?” என்று ஒருவன் கேட்க, “மச்சான் பொண்ணு தான் நமக்கு டார்கெட்” மற்றொருவன் கூறினான்.

“அவசர படவேண்டாம். போலீஸ் குவார்ட்டர்ஸ். இங்க செஞ்சா விஷயம் பெருசாகும்” என்றான் ஒருவன்.

“மச்சான், பொண்ணு ஜன்னலுக்கு நேர் எதிரா இருக்கு. பொண்ணை போடுறோம். ஒரு பிரச்சனையும் வராது” ஒருவன் தூப்பாக்கியின் முனையை அவள் நெற்றியின் நேர் பக்கமாக வைத்து பார்த்து கொண்டிருந்தான்.

வீட்டிற்குள் கிருஷ் மாதங்கி இருவரும் எதுவம் பேசி கொள்ளவில்லை.

ஜன்னல் வழியாக வந்த மெல்லிய தென்றல் காற்று. மழைத்தூறலில் மண்வாசம். இயற்கை நிறைந்த அந்த இடம், அழகை மட்டுமே ஏந்தி கொண்டு நிற்க… மெழுவர்த்தி வெளிச்சத்தில், அவள் அழகு அவனை ஈர்த்தாலும், ‘மாதங்கி எனக்கு தோழி.’ அவன் தன் எண்ணத்திற்கு எல்லை விதித்து கொண்டு, மனதிற்கு கடிவாளமிட்டுக் கொண்டான்.

“நம்ம முதல் சந்திப்பு இப்பவா இருந்திருக்கலாமில்லை?” அவள் அவனை பார்த்து கேட்க, ‘இதுக்கு என்ன அர்த்தம்?’ அவள் கேள்வியின் உள்ளர்த்தம் புரியாமல் அவன் குழம்பி போனான்.

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…