birunthavanam-33 (PreFinal Part – 1)

birunthavanam-33 (PreFinal Part – 1)
பிருந்தாவனம் – 33
கிருஷின் முகமாற்றத்தை கண்டு, “என்ன ஆச்சு?” என்று கேட்டான் அரவிந்த்.
அப்பொழுது திலக் அழைக்க, தன் அலைபேசியை ஸ்பீக்கரில் ஆன் செய்தான் கிருஷ்.
“சார்… மாதங்கி எங்க கூட தான் வந்துகிட்டு இருந்தா. இப்ப காணும்.” என்றான் பதட்டமான குரலில்.
அரவிந்த் திக் பிரமை பிடித்தவன் போல நிற்க, இப்பொழுது கிருஷ் சுதாரித்து கொண்டான்.
“எவ்வளவு நேரம் ஆச்சு?” கிருஷ் தன் உணர்வுகளை அடக்கி அதிகாரியாய் வினவ, “கொஞ்ச நேரம் தான்…” திலக் திணற, “கொஞ்சம் நேரம்னா?” கிருஷின் குரல் கர்ஜித்தது.
“ஐந்து நிமிஷத்துக்குள்ள தான் இருக்கும் சார். எங்க பின்னாடி தான் வந்துட்டு இருந்தா சார். அவ ஹேண்ட் பேக், ஃ போன் கீழ கிடக்கு. கொஞ்சம் பிளட் ஸ்போட்ஸ்” திலக் கூற, கிருஷ், அரவிந்த் இருவரின் இதயமும் ஒரு சேர நின்று துடித்தது.
“நீங்க அந்த இடத்தையே சுத்தி தேடுங்க. நான் பார்த்துக்கறேன். ஏதாவது தகவல் இருந்தா கால் மீ பேக்.” என்று கூறி கிருஷ் அலைபேசி பேச்சை துண்டித்தான்.
“நாம இப்படியே அங்க போறது வேஸ்ட் இல்லை?” என்று அரவிந்த் கேட்க, “ம்…” ஆமோதிப்பாக தலை அசைத்தான் கிருஷ்.
மாதங்கி சென்ற காட்டு பகுதியின் மொத்த வழியையும் அவன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தான் கிருஷ்.
“யாரும் வெளிய போக முடியாது.” கிருஷ் தன் புருவ மத்தியை அழுத்தி கொண்டு தன் உணர்வுகளை கண்ணீரை அடக்கி கொண்டான்.
“கிராமத்து மக்கள் கிட்ட பேசுறேன். நமக்கு உள்ள ஆள் இருக்காங்க.” கிருஷ் கூற, “எக்ஸ்டெர்னல் ஃபோர்ஸ் எதுவும் வேணுமா?” அரவிந்த் சகோதரனாய் உடையும் குரலை கட்டுப்படுத்தி அதிகாரியாகவே கேட்டான்.
“தேவைப்படாதுன்னு நினைக்குறேன். அவங்க ரொம்ப தூரம் போய்ட முடியாது. அதுவும் ஊர் மக்கள் கண்களில் இருந்து தப்பிக்கவே முடியாது. காட்டுக்குள்ள தான் இருப்பாங்க. காட்டுக்குள்ள தான் இருப்பாங்க. வெளியூர் ஆளுங்களுக்கு இந்த காடும் புதுசா தான் இருக்கும். சட்டுன்னு வழி கண்டுபிடித்து போக முடியாது.” கணக்கிட்டப்படியே பேசினான் கிருஷ்.
“நாம வீட்டுக்கு போயிட்டு, அங்க போவோம்.” கிருஷ் கூற, ‘எதுக்கு வீட்டுக்கு?’ என்ற எண்ணம் தோன்றினாலும், அரவிந்த் ஏதுவும் கேட்காமல் சம்மதமாகவே தலை அசைத்தான்.
மேற்கொள்ள வேண்டிய வேலைகளை உரியவரிடம் பணித்துவிட்டு, படபடப்பாக வீட்டை நோக்கி சென்றனர் கிருஷ் மற்றும் அரவிந்த். இவர்கள் இருவரும் அங்கு சென்று தனியாக செய்யப்போவது எதுவும் இல்லை.
கிருஷின் மூளை ‘வேறு வழி இருக்கிறதா?’ என்று தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்தது. அரவிந்த் சற்று குழம்பியே இருந்தான். ‘அம்மா சொன்ன மாதிரியே ஆகிருச்சு. இப்ப நான் வீட்டிற்கு என்ன பதில் சொல்லுவேன்?’ அரவிந்த் மேலும் சிந்திக்க முடியாமல் தவித்தான்.
இருவரின் முகமும் இறுகி இருந்தது.
அரவிந்த், கிருஷ் இருவரும் வீட்டிற்குள் நுழைய, கிருஷின் தாயார் வேதநாயகி அவர்கள் வழியை மறித்து நின்றார்.
“நீ ஏன் இங்க வந்த? உன் தங்கை என் பையன் வாழ்க்கையை கெடுத்து, எங்க குடும்பத்து மானத்தை வாங்கினது போதாதா?” என்று அவர் கோபமாக கேட்டார்.
“அம்மா, கொஞ்சம் வழி விடுங்க.” கிருஷ் கூற, “நீ சும்மா இருடா. இவனெல்லாம் நல்லாவே இருக்க மாட்டான். அதுவும் அந்த பொண்ணு… நாசமா தான் போவா. நம்ம குடும்பத்தை சந்தி சிரிக்க வச்சிட்டு, அவ மட்டும் நல்லாவா இருப்பா? அவள் எல்லாம்…” வேதநாயகி பேச, கிருஷின், “அம்மா…” என்ற அலறல் அவரை திகைக்க செய்தது.
அரவிந்த் அவர் முன் கையெடுத்து கும்பிட்டான்.
“உங்க வாயால் வேற எதுவும் சொல்லிடாதீங்க. எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. தப்பு பண்ணினது அவங்க வீட்டு பையன் மட்டுந்தான். ஆனால், நீ தண்டனையை மொத்த குடும்பத்துக்கும் கொடுத்திட்டேன்னு. உங்க கண்ணீர் மாதங்கியை வாழ விடாதுன்னு சொல்லுவாங்க.” அரவிந்த் கூற, கிருஷ், அவன் பாட்டி, அவன் அம்மா பிருந்தா என அனைவரும் மௌனமாக நின்றனர்.
“மாதங்கி செய்தது தப்பு தான். ஆனால், அவ செயலுக்கு பின்னாடியும் ஒரு காரணம் இருக்கு. எங்க அப்பாவும், எங்களை மாதிரியே ஒரு கவர்மெண்ட் செர்வென்ட் தான். அவர் ஒரு அரசியல்வாதியை எதிர்த்ததால், அந்த பெரும்புள்ளி எங்க அப்பா மேல லஞ்ச புகார் கொடுத்து வேலையை விட்டே தூக்குற அளவுக்கு செய்திட்டார். எங்க அப்பாவால் எதுவுமே செய்ய முடியலை. அப்பா உதவிக்காக போகாத இடமில்லை. கதறாத இடமில்லை.” அரவிந்த் கண்ணீர் மல்க நிறுத்தினான்.
“நாங்க பணக்காரங்க தான். அந்த வேலையை நம்பி நாங்க இல்லை. இருந்தாலும், அவமானம் அவமானம் தானே? எங்க கிட்ட அரசியல் செல்வாக்கு இல்லை. மீடியா கிட்ட போறதுக்கு அப்ப, எங்க அப்பாவுக்கு தைரியமில்லை. பட்ட அவமானமே போதுமுன்னு இருந்துட்டாக. மீடியாவுக்கு போய், ஊரளவு பட்ட அவமானம் உலகமளவு ஆகிருமோன்னு அப்பா பயந்துட்டாங்க. எனக்கும், மாதங்கிக்கும் ஓரளவுக்கு விவரம் தெரியுற வயசு. ஆனால்…” மேலே பேச முடியாமல் தவித்தான்.
“அப்பாவுக்கு நடந்த மாதிரியே என் மேலையும் தப்பான புகார் கிருஷ் கொடுக்கவும், மாதங்கி உண்மையில் பயந்திட்டா. அரசியல் குடும்ப உறவு வேண்டாமுன்னு தான் அவ நினைச்சிருக்கா. ” அரவிந்த் பேச, பிருந்தாவின் கண்களில் கண்ணீர். கிருஷின் மூளை மட்டும் எதையோ சிந்தித்து கொண்டே இருந்தது.
“நான் மாதங்கி செய்தது சரின்னு சொல்லலை. அவ விஷயத்தை வீட்டுக்குள்ளையே பேசி முடிச்சிருக்கலாம். ஆனால், ஏற்கனவே நாங்க அரசியல்வாதி குடும்பத்தை எதிர்த்து சரியா கையாள தெரியாம பாதிக்கப்பட்டவங்க. “
“இந்த சூழ்நிலையில் உங்களை எதிர்க்க கூடாதுன்னு அம்மா, அப்பா நினைச்சிருக்காங்க. ஆனால், மாதங்கிக்கு வயசு கம்மி இல்லையா? பயந்து ஒதுங்குற மாதிரி நாங்க வளர்க்கப்படலை. சீண்டப்பட்டதும், மீடியா பலத்தோடு எதிர்க்கணும்னு நினைச்சிட்டா. தப்பு தான். அவளை மன்னிச்சிருங்க.” அரவிந்த் கை எடுத்து கும்பிட்டான் கண்ணீர் மல்க.
“உங்க வாயால், அவளை சபிக்காதீங்க. மாதங்கி எங்களுக்கு முழுசா வேணும். நான் அடிபட்டு கிடந்தப்ப கூட, எங்க அம்மா அவளை திட்டினாலும் உயிரோட இருந்தாங்க. ஆனால், மாதங்கிக்கு ஏதாவது ஒன்னுனா, எங்க அம்மா, அப்பா உயிரோடவே இருக்க மாட்டாங்க.” அரவிந்த் அதிகாரி என்றதை மறந்து, கதறினான்.
“அண்ணா, மாதங்கிக்கு என்ன ஆச்சு?” பிருந்தா அரவிந்த் அருகே வந்திருந்தாள்.
அரவிந்த் குலுங்கி அழ, “எது நடக்க கூடாதுன்னு நினச்சேன்னோ, அது நடந்திருகிச்சு” கிருஷ் அழுத்தமாக கூறினான்.
“இல்லை அம்மா, நீங்க எதுக்கு ஆசை பட்டீங்களோ அது நடந்திருச்சு” தன் தாயை பார்த்து கடுமையாக கூறினான் கிருஷ்.
வேதநாயகி புரியாமல் பார்க்க, “மாதங்கி ஏன் இங்க வந்தா? ஏன் நான் இருக்கிற வீட்டில் தங்கினானு கேட்டீங்களே? அவளா வரலை. நான் இருக்கிற ஊருக்கு அவ வரணும்னு அவ எடுத்த முடிவு, எதேச்சலா நடந்தது. ஆனால், நான் இருக்கிற வீட்டுக்கே வரதுக்கு இது என்ன சினிமாவா? நான் வர வச்சேன்.” நிதானமாக கூறினான் கிருஷ்.
“அவளுக்கு ஏதோ ஆபத்து இருக்குனு அவளை நான் இருக்கிற வீட்டுக்கு வர வச்சேன். மாதங்கியை என் பாதுகாப்பில் வச்சிக்கிட்டேன்” கிருஷ் கூற, அனைவரும் அவனை அதிர்ச்சியாக பார்த்தனர்.
“மாதங்கியை தனியா விடாம, நான் என் வேலையை கூட விட்டுட்டு அவ கூட போனேன். இல்லை, என் வேலைக்கும் காரணம் சொல்லாமல் அவளை என் கூடவே கூட்டிட்டு போனேன். என் பாதுகாப்பில், அவளுக்கு எதுவும் நடக்காதுன்னு நான் நம்பினேன்.” கிருஷ் தன் தாயை பரிதாபமாக பார்த்தான்.
“இன்னைக்கும் போய் தொலைச்சிருப்பேனே அம்மா. உங்களுக்கு பயந்து போகாம இருந்து நானே என் தலையில் மண்ணள்ளி போட்டுட்டேன்.” கிருஷ் படார் படாரென்று அவன் தலையில் அடித்து கொண்டான்.
“கிருஷ்…” அவன் தாயார் அவனை நெருங்க, “வேண்டாம் அம்மா… மாதங்கி செய்த தப்புக்கு ஆரம்ப புள்ளி நான் தான். அது உங்களுக்கும் தெரியும். உங்க பையன் மட்டும் நல்லாருக்கணும். மாதங்கி மட்டும் நாசமா போகணுமா?” கிருஷ் கண்ணீர் மல்க கேட்டான்.
“நான் தப்பு பண்ணினவன்னு இத்தனை வருஷமா என்னை ஒதுக்கி வச்சீங்கள்ல? நான் இப்படியே இருந்துட்டு போறேன் அம்மா. ஒரு வார்த்தை மாதங்கி நல்லாருக்கட்டும்னு சொல்லுங்க அம்மா. உங்க வார்த்தை அவளை காப்பாத்தும். மாதங்கி வாழ்க்கை இப்படி ஆகிருச்சேன்னு குற்ற உணர்ச்சி என்னை அணுஅணுவா கொன்னுட்டு இருக்குமா? நான் மாதங்கியை கல்யாணம் செய்ய மாட்டேன். ஆனால், அவளுக்கு ஏதாவது ஒன்னுனா நான் உயிரோட இருக்கவே மாட்டேன்.” கிருஷ் மடமடவென்று மாடி ஏறி சென்றான்.
வேதநாயகி தன் மகன் செல்லும் பாதையை பார்த்தபடி சிலையாக நின்றார்.
அரவிந்த் தனக்கு தெரிந்த பலத்தை உபயோகித்து, மாதங்கி இருக்கும் இடத்தை நோக்கி கிளம்பினான்.
அதே சமயம் கிருஷ் மாதங்கியின் அறைக்குள் நுழைந்திருந்தான். ஒரே வீட்டில் இருந்தாலும் இதுவரை, அவன் அவள் அறைக்கு சென்றதில்லை. இன்றே முதல்முறை, “மாது… மாது…” அவன் உதடுகள் முணுமுணுத்தன.
‘உங்களை மாதிரி ஆஃபிசரை கடத்திட்டு போனால் கூட, எங்க ட்ரோன் கண்டுபிடிக்கும்’ மாதங்கி அன்று கூறியது, அவன் செவிகளில் ஒலிக்க, அவன் அவள் அறை முழுக்க அவள் செய்து கொண்டிருந்த ட்ரோன் சம்பந்தமான பொருட்களை தேடினான்.
அவ்வப் பொழுது திலக்கிடம் பேசினான். “முழுசா வேலை முடியலை சார். ஆனால், ஒரு பேஸிக் மாடல் ரெடியா இருக்கு சார். ஆனால், சாஃப்ட்வேர் டீடைல்ஸ் மாதங்கிக்கு தான் தெரியும்.” திலக் கூற, “நான் பார்த்திக்குறேன்…” பேச்சை துண்டித்தான் கிருஷ்.
அவன் அவள் மடிக்கணினியை எடுக்க, “கீச்…. கீச்…” என்று சத்தம் எழுப்பிய அவன் பரிசளித்த பொம்மை கிளிகள் அவள் பையில்.
‘இதை இன்னும் இவள் வைத்திருக்கிறாளா?’ அவன் அந்த கிளிகளை தடவியபடி, “லவ் யு மாதங்கி…” அவனையும் மீறி அவன் உதடுகள் முணுமுணுக்க, அதில் இருந்த ஆண் கிளி பெண் கிளியின் இதழ்களை முத்தமிட, பெண் கிளி வெட்கத்தில் நொடி பொழுது சிவந்து மீண்டும் பச்சை நிறத்திற்கு வந்தது.
‘ஐயோ… ஐயோ… என்னுடைய இந்த காதல் தான் எல்லாத்துக்கும் காரணம்’ அவன் உடைய, “சீனியர்…” கிளியின் குரல் கேட்க, அவன் சரலென்று நிமிர்ந்து அமர்ந்தான்.
“கீச்… கீச்…” என்றது ஆண் கிளி.
“எனக்கு தெரியலியே சீனியர்… எனக்கு எது காதல்ன்னு தெரியலையே சீனியர். நான் உங்களை காதலிக்குறேன்னா இல்லையான்னு தெரியலியே சீனியர். ஆனால், எனக்கு உங்களை பிடிக்கும் சீனியர்.” பச்சை பெண் கிளி, ஆண் கிளியை உரசிக்கொண்டே கேட்க, ஆண் கிளி, பெண் கிளியை ஆறுதலாய் தடவி கொடுக்க, “சீனியர்… சீனியர்… என் சீனியர்…” என்று பெண் கிளி ஆண் கிளியின் தோளோடு சாய்ந்து கொண்டது.
‘நான் இந்த ஆதரவை மாதங்கிக்கு கொடுக்கலையோ?’ கிருஷ் பச்சாதாபத்தில் இறங்க, ‘இதுக்கெல்லாம் நேரம் இல்லை…’ விறுவிறுவென்று இறங்கினான் கிருஷ்.
வேதநாயகி தன் மகனை பார்த்தார்.
“அம்மா, நாம ஒரு நல்ல அரசியல்வாதி குடும்பமா இருக்கலாம். ஆனால், எல்லாரும் அப்படி இல்லை. அன்னைக்கு, மாதங்கி போன கார் ஆக்சிடென்ட் ஆனதுக்கு நான் தான் ஏதோ ஒரு வழியில் காரணம். இன்னைக்கும் நான் தான் காரணம். நான் மாதங்கியை கல்யாணம் செய்ய நினைச்சதை பிடிக்காதவங்க இதை பன்றாங்க. அந்த பழியை என் மேல போட நினைக்குறாங்க.” அவன் நிறுத்த, வேதநாயகி எதுவும் பேசவில்லை.
“சந்தியா வீட்டில் இதில் சம்பந்தப்பட்டிருக்காங்க. ஆனால், கூடவே நம்ம வீட்டு ஆளுங்களும் இருக்காங்கன்னு நான் நினைக்குறேன். யாரா இருந்தாலும் நான் விட மாட்டேன். மாதங்கியை வச்சி தான் நான் அவங்களை பிடிக்கணும். அது தான் இத்தனை வருஷம் காத்துகிட்டு இருந்தேன்.” கிருஷ் சற்று அழுத்தமாக கூறிவிட்டு கிளம்பியவன் முன் நின்றாள் பிருந்தா.
“அண்ணா, நான் மாதங்கியை பார்க்கணும். என்னை கூட்டிட்டு போ.” கண்ணீர் மல்க கேட்டாள் பிருந்தா.
மறுப்பாக தலை அசைத்தான் கிருஷ். “என் மாதுவுக்கு ஒன்னும் ஆகாது. காட்டிலும் என் ஆளுங்க இருக்காங்க. போற வழியிலும் என் ஆளுங்க இருக்காங்க. காட்டுக்குள்ள கொஞ்ச நேரம் என் மாது எதையும் சமாளிப்பா. அவளுக்கு ஏதாவது ஆகிருந்தா, என் உள் மனசு எனக்கு சொல்லிருக்கும். அவளுக்கு எதுவும் ஆகலை. நான் அதை நம்புறேன்.” கிருஷ் தனக்கு தானே கூறிக்கொண்டான்.
“நீ அம்மாவையும், பாட்டியையும் பார்த்துக்கோ.” கூறிவிட்டு வண்டியில் ஏறியவன், தன் ஜீப்பை மின்னல் வேகத்தில் செலுத்தினான் மாதங்கி கடத்தப்பட்ட இடத்தை நோக்கி.
பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…