Brinthavanam-32

Birunthaavanam-950a350d

Brinthavanam-32

பிருந்தாவனம் – 32

அன்றிரவு.

மாதங்கி மாடியில் நின்று கொண்டிருந்தாள். மணி, இரவு பதினொன்றை தொட்டிருந்தது.

 ‘நான் இங்க வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. அதுக்குள்ள எவ்வளவு நடந்திருச்சு?’ அவள் மனம் அரங்கேறிய சம்பவங்களை கணக்கிட்ட ஆரம்பித்தது.

அனைத்திலும் அவள் எண்ணம், ‘சீனியர்… சீனியர்… சீனியர்…’ என்ற சொல்லையே சுற்றி வந்தது.

‘எத்தனை வருடங்கள் ஓடினாலும், அவர் எனக்கு சீனியர் தான். என் சீனியர் தான்’ அவள் மனதில் மெல்லிய வருடல்.

“தூங்கலையா மாதங்கி?” கிருஷின் குரலில் அவள் தன்னை மறந்தாள். அவள் உடலில், சொல்லிவடிக்க முடியாத உணர்வு ஏற்பட, அவன் அருகே ஓடினாள். அவள் தலை, அவன் தோளில் சாய்ந்து நிம்மதி தேடவே முயற்சித்தது. அவள் சுவாசம் அவனை தீண்ட, அவன் வாசம் அவளை தீண்டியது.

அவள் செய்கை அவனுக்கு புரிய, அவளுக்கு ஆறுதல் தர அவன் மனம் துடித்தது.

சற்றுமுன் நிகழ்ந்த சம்பவம் மாதங்கியை தொட, அவள் அவனை தீண்டுமுன் விலகி நின்றாள். அவனும் சுதாரித்து கொண்டான்.

அவள் முகத்தில் பதட்டம். “என்ன ஆச்சு மாதங்கி? ஏன் இப்படி பயப்படுற?” என்று அவன் கேட்க,”உங்க அம்மா…” அவள் குரலில் அச்சம்.

‘எனக்காக நீ நிறைய யோசிப்ப, ஆனால் திருமணத்தை ஊரறிய நிறுத்தும் பொழுது ஒரு தடவை கூட எனக்காக நீ ஏன் யோசிக்கலை மாதங்கி.’ கேட்க அவன் சிந்தை துடித்தது. மனமோ, ‘நான் ஏதாவது கேட்டுவிட்டால் அவள் உடைத்து போவாள்’ என்று அவனை மௌனம் காக்க செய்தது.

“அம்மா தூங்கிட்டாங்க. அம்மாவுக்கு நிறைய மனஉளைச்சல். பாட்டியும், பிருந்தாவும் தான் பேசிட்டு இருக்காங்க. நான் தான் அம்மாவுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கேனே? ஒன்னும் பிரச்சனை இல்லை.” அவன் முகத்தில் புன்முறுவல்.

அவளும் சிரித்து கொண்டாள்.

“சாப்பிட்டியா மாதங்கி?” அவன் அக்கறையோடு கேட்க, “…” அவள் மறுப்பாக தலை அசைத்தாள்.

“ஏன் இப்படி பண்ற மாதங்கி?” அவன் சற்று கோபம் கொள்ள, “நீங்க ஏன் இப்படி பண்றீங்க சீனியர்?” அவள் நக்கலாக கேட்டாள்.

“எத்தனை வருஷம்? எதுக்காக இப்படி பண்ணறீங்க? எதை நினைச்சி இப்படி பண்ணறீங்க? இல்லை, எது நடக்கும்னு இப்படி பண்ணற கிருஷ்?” அவள் உரிமையோடு கேட்க, “மச்… தெரியலை” ஒற்றை வரத்தையில் சுளிப்போடு தன் பதிலை முடித்துவிட்டான்.

“ஒருவேளை, நான் சமைத்து தந்து சாப்பிடணும்னு இருக்கியா கிருஷ்?” அவள் கண்களை உருட்ட, “ஹா… ஹா…” அவன் பெருங்குரலில் சிரித்தான்.

“என்ன சிரிப்பு?” அவள் முறைக்க, “உன் கல்லு கேசரி, பென்ச் ஆடுதே ன்னு பென்ச்சுக்கு கீழே வச்ச தேங்காய் பரப்பி இதெல்லாம் நினச்சேன் சிரிச்சேன்.” அவன் கூற, அவள் தன் உதட்டை சுளித்து கொண்டாள்.

“எத்தனை அருமையான காலமில்லை?” அவன் கேட்க, அவள் ஆமோதித்தாள்

“இப்பவாது சமைக்க தெரியுமா?” அவன் கேலி போல வினவ, “ம்… மார்னிங் க்ரீன் டீ, அப்புறம் கார்ன் ஃபிளக்ஸ், அப்புறம் சண்ட்விச்…” அவள் நிறுத்த, “இடையில் கொத்தமல்லி அரைச்சி, அதெல்லாம் வைத்து சண்ட்விச் செய்வியா?” அவன் ஆச்சரியப்படுவது போல் கேலி பேசினான்.

“ஐயோ… கொத்தமல்லி எல்லாம் வைத்து செய்யுற சண்ட்விச் ரொம்ப ரொம்ப கஷ்டம். அப்படியே பிரெட் வைப்பேன், பச்சை காய்கறி நானே கட் பண்ணுவேன்” அவள் கூற, “நீயே கட் பண்ணுவியா? ரொம்ப பெரிய வேலை தான்.” அவன் அவளை பாராட்ட, அவள் பெருமிதமாக தலை அசைத்து கொண்டாள்.

“அதில் சீஸ் வைத்து டோஸ்டரில் வைத்து சாப்பிட்டிருவேன்.” அவள் மிக பெருமையாக கூற, “உனக்கு வரப்போறவன் நிலைமை ரொம்ப பாவம்.” அவன் மீண்டும், “ஹா… ஹா…” என்று பெருங்குரலில் சிரித்தான்.

அப்பொழுது மாடிப்படி ஏறி வந்த பாட்டியும், பிருந்தாவும் கிருஷின் சிரிப்பு சத்தத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“ஏண்டி பிருந்தா, இன்னைக்கு இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு. எப்படி உன் அண்ணனால இப்படி சிரிக்க முடியுது?” பாட்டி, பிருந்தாவிடம் தீவிரமாக சந்தேகம் கேட்டார்.

“இது தான் லவ்வோ?” பிருந்தா, தன் சந்தேகத்தை பாட்டியிடம் திருப்பினாள்.

“கிருஷ் நீ என்னை ரொம்ப கிண்டல் பண்ற, இது நல்லதுக்கில்லை.” அவள் முகத்தை திருப்பி கொள்ள, “நான் சொல்றதில் என்ன தப்பு?” அவன் புன்னகையோடு புருவம் உயர்த்தினான்.

முன் மாலையில் அரங்கேறிய சம்பவம் இருவருக்கும் அழுத்தத்தை கொடுத்திருந்தது. இப்படி இன்று இலகுவாக பேசுவார்கள் என்று கூறினாலும், இருவரும் நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால், ஒருவரின் அருகாமை மற்றோருவருக்கு ஆறுதலை கொடுக்கிறது என்பதை அவர்கள் மனம் புரிந்து கொண்டது.

“என்ன சீனியர்? ஹீரோயின் அப்படினா, சேலை தான் கட்டணும், பொறுமையா இருக்கனும், விதவிதமா சமைக்க தெரியணும், எல்லாரையும் அனுசரிச்சு தான் போகணும் அப்படி எல்லாம் சட்டம் இருக்கா என்ன? கொஞ்ச முன்ன பின்ன இருந்தா இந்த சமுதாயம் ஏத்துக்காதா?” அவள் பட்டென்று கேட்டாள்.

“ஹா… ஹா… ஏன் ஏத்துக்காது? அதெல்லாம் மனப்பூர்வமா ஏத்துக்கும்” கிருஷ் தன் மனதையே படம் பிடித்து காட்டினான். அவன் கண்களில் வழிந்த காதலில், அவள் மயங்கி நிற்க, அவர்களை கலைத்தது அந்த குரல்.

“எல்லாரையும் அனுசரித்து போகணுமுன்னு அவசியம் இல்லை. ஆனால், எடுத்தெறிந்து பேச கூடாது மாதங்கி. அதுவும், பல பேர் கூடியிருக்கிற ஒரு சபையில் ஒரு பொண்ணுக்கு நிதானம் வேணும். எடுத்தோம், கவுத்தோம்முனு ஒரு செயலை செய்ய கூடாது.” பாட்டியின் குரல் நிதானமாக, அழுத்தமாக ஒலித்தது.

கிருஷ், பிருந்தா இருவரும் பாட்டியின் இந்த நேரடி தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. இருவரும் பாட்டியை அதிர்ச்சியாக பார்க்க, மாதங்கி சூழ்நிலையை தனதாக்கி கொண்டாள்.

சட்டென்று அவள் பாட்டியின் கால்களை தொட்டாள். “நான் அன்னைக்கு செய்தது பெரிய தப்பு தான் பாட்டி. என்னை மன்னிக்க கூடாதா?” அவள் குரலில் கலக்கம் இல்லை. ஆனால், அவள் குரல் மனமுவந்து மன்னிப்பை மட்டுமே யாசித்தது.

அவள் குரலில் பாட்டி நெகிழ்ந்து போனார். “எழுந்திரு மாதங்கி. உன் மேல கோபப்பட முடியுமா? நீ என் பேரனின் மனதை ஆளும் பெண்ணில்லையா?” அவர் மாதங்கியின் தலையை வாஞ்சையோடு தடவினார்.

“மன்னிப்பை மட்டுந்தான் மாதங்கி என்னால் தர முடியும். நீங்க ரெண்டு பெரும் செய்து வைத்த சிக்கலை, சரி பண்ற வழி என்கிட்டே இல்லை மா. என் பேரனின் வாழ்க்கையை நான் எப்படி சரி செய்ய போறேன்னு எனக்கே தெரியலை” அவர் குரல் தழுதழுத்தது.

“நான் உங்க குடும்பத்திற்கிட்டே இருந்து மன்னிப்பை மட்டுந்தான் பாட்டி எதிர்பார்க்குறேன். அதுக்கு மேல, எதுவுமே நான் எதிர்பார்க்கலை.” எழுந்திருக்கும் குழப்பத்தை சரி செய்யவே மாதங்கி சிந்தித்தாள்.

கிருஷ் புன்னகைத்து கொண்டான். பாட்டி, பிருந்தா, கிருஷ், மாதங்கி அனைவரும் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

பேசிவிட்டு, பாட்டி கிளம்ப, பிருந்தா அவர்களுக்கு தனிமை கொடுத்து பாட்டியோடு சென்றுவிட்டாள்.

“அம்மா…” கிருஷ் தடுமாற, “அவங்க கோபப்படுறது நியாயம் தானே?” மாதங்கி சமாதானம் பேசினாள்.

அவன் மேலே எதுவும் பேசவில்லை.

“நான் இதை கொடுக்க தான் வந்தேன்.” அவன் அவளை அறைந்த பொழுது கீழே விழுந்த கேமராவை போல் வேறு ஒன்று புதிதாக வாங்கி கொடுத்தான்.

“புதுசா?” அவள் கண்களை விரிக்க, உடைந்து போன புகைப்பட கருவியில் உள்ள மெமரி கார்டை எடுத்து கொடுத்தான். அதோடு, அவள் எடுத்திருந்த யானை புகைப்படங்களை பெரிதாக்கி கொடுத்திருந்தான்.

யானை படத்தை பார்த்த அவள் கண்களில் மலர்ச்சி. “இன்னும் சில படங்கள் இருந்தது.” அவன் குறும்பு புன்னகையோடு மெமரி கார்டை கொடுக்க, அவள் முகத்தில் வெட்க புன்னகை.

அன்று இயற்கையோடு, அவள் அவனையும் படம் பிடித்திருந்தாள் பல கோணங்களில். அவன் மக்களோடு பேசுவது, அவர்களுக்கு உதவி செய்தது என!

பல புகைப்படங்கள் காட்சியாக அவள் முன் விரிய, “அது இயல்பா எடுத்தது” அவள் தடுமாற, “ம்…” அவன் தலை அசைத்து கொண்டான். அவனிடம் ஒரு புன்னகை மட்டுமே.

இருவரும் உணர்ச்சியின் பிடியில்!

“தேங்க்ஸ்…” அவள் உணர்ச்சியின் பிடியிலிருந்து வெளிவர துடிக்க, “நீ சந்தோஷமா இருக்கணும். நீ விரும்பியதை மட்டுந்தான் செய்யணுமுன்னு நான் நினைக்குறேன். ஆனால்…” அவன் தடுமாற, கேட்கவா வேண்டாமா என்று அவள் மனம் ஒரு நொடி சிந்தித்தது.

“ஏன் சீனியர், அப்ப அப்படி நடந்துகிட்டீங்க? நீங்க அன்னைக்கு அப்படி நடக்காம இருந்திருந்தா இன்னைக்கு நமக்குள்ள பிரச்சனையை வந்திருக்காதில்லை. நீங்க அப்படி நடந்துக்கிட்டதால தானே நானும் அவசரப்படுற மாதிரி ஆகிருச்சு. எனக்கு கொஞ்சம் டைம் கொடுத்திருக்கலாம் இல்லை?” அவள் கேட்டேவிட்டாள்.

அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“உனக்கும் என் மேல கோபம் இருக்கும் கிருஷ். ஆனால், நீ கேட்க மாட்டா? ஏன்னா, கேட்டால் நான் காயப்பட்டிருவேன். நீ நல்லவன். நீ நல்லவனாவே இருந்துட்டு போ. நான் கெட்டவளாவே இருந்துட்டு போறேன்.” அவள் விம்மி வெடிக்க, அவன் அவளருகில் வந்து அவளை தோளோடு சாய்த்து கொண்டான்.

“மாது…” அவன் குரல் கரகரப்பாக ஒலித்தது.

“ஐயோ… என்னால எதுவும் நினைக்காமல் இருக்க முடியலையே… எதுவும் பேசாமல் இருக்க முடியலையே” அவள் கதறினாள் அவன் அரவணைப்பில்.

“நீ பேசினது என் அறிவுக்கு புரியுது கிருஷ். என் மனசுக்கு புரியலை. இதை எல்லாம் எப்படியாவது சரி பண்ண முடியுமான்னு நான் பார்க்குறேன். எனக்கு தெரியலை…” அவள் கதறினாள்.

“நான் இங்கு வந்திருக்க கூடாது. உன்னை பார்த்திருக்க கூடாது. எனக்கு இப்பவும் தெரியலை இது தான் காதலான்னு. ஆனால், நீ எனக்கு மட்டும் தான் சொந்தமுன்னு என் மனசு சொல்லுது. உங்க அம்மா உன் கிட்ட உரிமையா பேசுறது கூட எனக்கு பிடிக்கலை. இதெல்லாம் தப்புன்னு என் அறிவுக்கு தெரியுது. ஆனால், என் மனசுக்கு புரியலை” அவள் தோள் குலுங்க, அவள் முடியோடு, தலையை அழுத்தி அவள் முகத்தை நிமிர்த்தினான்.

அவன் எதுவும் பேசவில்லை. அவன் தலையை இருபக்கமும் அசைத்தான்.

‘அழக்கூடாது…’ என்று கட்டளையை அவன் தலையோடு, கண்களும் பிறப்பித்தது.

‘என்று உன் சொல்லை கேட்டேன். இன்று மட்டும் கேட்பதற்கு?’ என்பது போல் அவள் கண்கள் கண்ணீரை வடித்தது.

“என் மாது அழமாட்டா.” அவன் அதரங்கள், அவள் செவியோடு ரகசியம் பேசியது.

அவள் தேகத்தை தீண்டாத அவள் செவியை தீண்டிய அவன் சொற்கள், அன்றைய மின்தூக்கியின் நிகழ்வை நினைவுபடுத்த இருவரும் விலகி கொண்டனர்.

 

“நீங்க படுக்க போங்க சீனியர்” அவள் படபடத்தாள். “நீயும் இங்க தனியா நிற்காத.” அவன் கூற, “நீங்க இருக்கிற இடத்தில எனக்கு ஆபத்து வருமா?” அவள் கலகலத்தாள் சூழ்நிலையை சரிசெய்யும் நோக்கோடு.

அவன் சிரித்து கொண்டு அவளை அவள் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தாழிட செய்து, அவன் அறைக்கு சென்றுவிட்டான்.

மறுநாள் காலையில், மாதங்கி திலக், ஹென்றியோடு காட்டு பகுதிக்கு கிளம்பினாள். மாதங்கியோடு செல்ல வேண்டும் சென்ற எண்ணம் தான் கிருஷிற்கு. ஆனால், அவன் வேலை. அவளை தன்னோடு இருத்தி கொள்ள முடியாத சூழ்நிலை என்பதால் அவர்களோடு அனுப்பி வைத்தான்.

பலமுறை, திலக்கிடம் பல விதமாக அறிவுரை கூறி தன் அலுவலகத்தை நோக்கி கிளம்பினான் கிருஷ்.

கிருஷின் அலுவலகத்தில்.

கிருஷ் தன் வேலையில் மூழ்கி இருக்க அவனை சந்திக்க அரவிந்த் வந்திருப்பதாக செய்தி வந்தது.

‘மாதங்கி அண்ணன் ஏன் இப்ப வரணும்?’ கேள்வியோடு கிருஷின் நெற்றி சுருங்கியது.

‘எதுவும் பிரச்சனை செய்வானோ?’ கிருஷிற்கு அரவிந்த் மேல் சந்தேகம் எழுந்தது.

‘என்ன பிரச்சனை செய்தாலும், நான் பொறுமையா போகணும்.’ தீர்மானம் எடுத்து கொண்டு கிருஷ், அரவிந்தை உள்ளே வர அனுமதி கொடுத்தான்.

‘…’ இருவரும் பேசிக்கொள்ளவில்லை. கிருஷ் அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியை நோக்கி  கைகளை கட்டினான் மரியாதை நிமித்தமாக, அரவிந்தும் அமர்ந்து கொண்டு தலை அசைத்தான். மரியாதை நிமித்தமாக.

இருவரும் இதற்கு முன் பேசி இருக்கிறார்கள். ஆனால், ஒரு முறை கூட சுமுகமாக பேசி கொண்டதில்லை.

“ம்… க்கும்…” இருவரும் கனைத்து கொண்டார்கள். என்ன பேசுவது என்று தெரியாமல்.

‘மாதங்கியின் அண்ணன் பிரச்சனை செய்ய வரவில்லை.’ கிருஷ் கணித்து கொண்டான்.

‘தேடி வந்திருக்கிறேன் பேசினால் என்ன?’ அரவிந்தின் தன்மானம் மெல்ல எட்டி பார்த்தது. ‘தேடி வந்திருக்கிறான். பேசினால் தான் என்ன?’ கிருஷின் தன்மானமும் சிலிர்த்து கொண்டு ஒரு நொடி நின்றது.

இருவரின் மனதிலும் வந்தமர்ந்தாள் மாதங்கி. கிருஷ் தன்னை நிலை செய்து கொண்டான். “மாதங்கி…” எதை ஆரம்பித்தால் பேச்சு எளிதாக இருக்குமோ, அதை ஆரம்பித்தான் அரவிந்த் கெட்டிக்காரனாக.

கிருஷின் முகம் பணிந்தது. அவன் முகபாவனையில் அரவிந்த் அவனை ஆழமாக பார்த்தான்.

“மாதங்கி செய்தது தப்பு தான். நானாவது இன்னும் பொறுமையா நடந்திருக்கலாம். அவ மன்னிப்பு கேட்டிருப்பாளான்னு எனக்கு தெரியலை. ஆனால், குற்ற உணர்ச்சியில் தவிக்குறா. அவ வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு போகணும். ” கிருஷை குற்றம் சாட்டாமல், தன் மேல் உள்ள தவறை மட்டும் கூறி, பெருந்தன்மையோடு பேசினான் அரவிந்த்.

“தப்பு என் மேலையும் இருக்கு.” கிருஷ் தன் கண்களை இறுக மூடி திறந்தான்.

“பழசை பேசி என்னவாகப்போகுது?” அரவிந்த் பேச, கிருஷ் தலை அசைத்து கொண்டான்.

“நீங்க இங்க இருக்கிறது தெரிந்து தான், நான் மாதங்கியை இங்க அனுப்பினேன். எதுமே சரியாகாது எதுக்கு மாதங்கியை இங்க அனுப்பினேன்னு வீட்டில் அம்மா, அப்பா ஒரே திட்டு. எதுவும் மாறாது. சரியாகாதுன்னு எனக்கும் தெரியும். ஆனால், எனக்கு என் தங்கை வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு போகணும்.” அரவிந்த் நிறுத்த, அவனை புரியாமல் பார்த்தான் கிருஷ்.

” நீ… நீங்க… நல்லாருக்கீங்கனு தெரிஞ்சா அவ மனசு மாறும். நீங்க ஒரு கல்யாணம் செய்துகிட்டா, அவ செய்த தப்பு உங்க வாழ்க்கையை பாதிக்கலைன்னு அவளுக்கு ஒரு நிம்மதி வரும். நான் கொஞ்சம் சுயநலவாதி தான். அவ குற்ற உணர்ச்சியிலிருந்து வெளிய வர, உங்க உதவி வேணும். அவ செய்த தப்பை மன்னிக்க கூடாதா?” அரவிந்த் நாசுக்காக பட்டும்படாமலும் கிருஷிடம் எப்படி பேசவேண்டுமோ அப்படி பேசி விட்டான்.

“இப்படி எல்லாம் நீங்க மன்னிப்பு கேட்குற விஷயம் மாதங்கிக்கு தெரிந்தா, எங்களுக்குள்ள இப்ப உருவாகிட்டு வர சுமுகமான நிலைமை திரும்பவும் கெட்டு போய்டும். இல்லை எங்க நட்பு கெட்டு போகணுமுங்கிறதா உங்க திட்டமா?” கண்களில் கேலியோடு, தன் மனதை நாசுக்காக பட்டும்படாமலும் வெளியிட்டுவிட்டான் கிருஷ்.

கிருஷின் பேச்சில், அரவிந்த் கலகலவென்று சிரித்தான்.

இருவருக்கும் நட்புக்கரம் நீட்ட வேண்டிய கட்டாயம். பகைமை பாராட்டி கொள்ள காரணமுமில்லை.

“மாதங்கியை நான் இன்னும் பார்க்கலை. அவ, எங்க வீட்டில் இத்தனை வருஷமா சாந்தோசமா இல்லை. நீ இருக்கிற இடத்தில் சந்தோஷமா இருப்பான்னு எனக்கு ஒரு எண்ணம்.” அரவிந்த் கூற, கிருஷின் முகத்தில் ஓர் பெருமித புன்னகை.

“எல்லா காதலும் கல்யாணத்தில் முடியறதில்லை. அது, அந்த வயசில் தெரியலை. சேர்ந்தால் மட்டுந்தான் காதலா? இப்ப புரியுது. கடந்து போகிற பக்குவம் எனக்கு வந்திருக்கு. சேர்ந்து முடியலைனாலும், தனித்தனியாவது, நாங்க எங்க வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு சீக்கிரம் கொண்டு போயிடுவோம்.” கிருஷ் உறுதி மொழி கொடுக்க, அரவிந்த் தன் கைகளை அவன் பக்கம் நீட்டி, விடைபெற எத்தனித்தான்.

கைகளை குலுக்கி விட்டு, கிருஷ் எழ அவன் அலைபேசி ஒலித்தது.

“ஒரு நிமிடம்…” கூறிவிட்டு, கிருஷ் அலைபேசியை எடுத்தான்.

“எத்தனை நாள் நீ மாதங்கிக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும்? இப்ப உன் காதலி என் கையில். அவளை கொல்லலாமுன்னு தான் நினைச்சேன். ஆனால், எனக்கு இப்ப ஒரு புது யோசனை தோணுது. கை கால் இல்லாமல் உன்கிட்ட முடமா அனுப்பி உன் காதலின் அளவை சோதிக்கலாமுன்னு யோசிக்குறேன்.” கரகரப்பான குரலில் ஒரு சிரிப்பு சத்தம் எழுந்தது.

எதிர்முனை துண்டிக்கப்பட்டது. கிருஷ் தன் உலகமே துண்டிக்கப்பட்டது போல் சிலையாக நின்றான்.  

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!