Chakaraviyugam 1

Chakaraviyugam 1

சக்கரவியூகம்

1

அதிகாரம் கேடு விளைவிப்பதாக இருக்கிறது. வரம்பற்ற அதிகாரம் வரம்பு இல்லாமல் கெடுத்து விடுகிறது.

-ஆக்டன் பிரபு

“ம்மா… ப்ளீஸ் சொன்னா கேளேன்… இன்னும் ரெண்டு நாள்ல என்னோட ப்ராஜக்ட் முடிஞ்சுடும். அப்புறம் கிளம்பி வரேனே… கல்யாணத்துக்குத் தான் இன்னும் பத்து நாளுக்கு மேலேயே இருக்கே…” தமிழ்நதி நூறாவது முறையாக லோகாம்பாளிடம் கெஞ்சிச் சலித்து போயிருந்தாள்.

“வருஷம் முழுக்க தான் உன்னோட ப்ராஜக்ட்ட கட்டிட்டு அழற தமிழ்… இப்போ கூடவா? இது என்ன அக்கம் பக்கத்து வீட்டுக் கல்யாணமா? உன்னோட கல்யாணம்டி… உன் கல்யாணத்துக்கு நாங்க இப்படிப் படாத பாடு பட்டு உன்னை அழைக்கணுமா? பத்து நாள்னா… இன்னும் எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா?” என்று பொரிந்து கொண்டிருந்தவர்… மறுபுறத்தில் பதில் வராமல் இருப்பதைப் பார்த்து. சந்தேகமாகச் கைப்பேசியை கையில் பிடித்துப் பார்த்தார்.

லைனில் தான் இருந்தாள் தமிழ்நதி.

“ஏய்… தமிழ்… இருக்கியா? இல்லை. போனை ஆன்ல வெச்சுட்டு உன் வேலைய பார்த்துட்டு இருக்கியாடி?” கடுகடுவென லோகா கேட்டார்.

“ம்ம்ம்… இங்க தான் இருக்கேன்… என்னைத் தப்பிக்கவா விடுவ? எங்க போனாலும் இழுத்துட்டு வந்துற மாட்டீங்க… ஐயனும் அம்மாளும்… எனக்கு என்ன சுதந்திரம் இருக்கு?” தமிழ்நதி ஒரு புறம் சலித்துக் கொள்ள, அதில் எந்த அளவு உண்மை என்பதும் லோகாம்பாளுக்கு தெரியும்.

அவள் கேட்ட வேலை ஆகவில்லை என்றால் இப்படி பேசிக் கரெக்ட் செய்வதையே அவள் பிழைப்பாக வைத்திருந்ததால் அவளது இந்தப் புலம்பல் அவரை எதுவும் செய்யவில்லை.

“ஆமா… உனக்குச் சுதந்திரம் கொடுக்காம தான் உன்னை ஊர்ல இல்லாத சீமைல படிக்க வெச்சமாக்கும்?”

“ஒரு ஃபேஷன் டெக்னாலஜி படிக்க வெச்சது பெரிய படிப்பா போச்சா யுவர் ஆனர்…?” கிண்டலாக மகள் கேட்ட கேள்வியில் அவர் குதிக்க துவங்கினார்.

“கேப்படி கேப்ப… அங்காளி பங்காளிய எல்லாம் பகைச்சுகிட்டு உன்னை ஆம்பிளை பொம்பளை எல்லாம் சேர்ந்து படிக்கிற காலேஜுல படிக்க வெச்சதுமில்லாம…” என்று அவர் நீட்டி முழக்கிக் கொண்டிருக்க அவசரமாகக் குறுக்கிட்டாள்.

“ம்மா… அது கோ எஜுகேஷன்… உனக்கு எத்தனைத் தடவை சொல்றது?” தமிழின் முகம் சிறியதாகி விட்டிருந்தது. அவர் தனிமையில் மட்டுமல்ல… எத்தனைப் பேர் இருந்தாலும் இது போன்ற விஷயங்களை நான்கு பேர் நடுவிலேயே போட்டு உடைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அதிலும் தன் உறவுப் பெண்கள் பையன்கள் இருக்கும் போதே லோகா இப்படிப் போட்டு உடைப்பது அவளை நிறைய நேரங்களில் சங்கடத்தில் நெளியச் செய்திருக்கிறது.

“ஆமா… இப்படியே என் வாயை அடைக்கப் பாருடி… உலை வாயை மூட முடியும். ஆனா ஊர் வாயை மூட முடியுமா?” பழமொழியை எடுத்து விட்டு அவளை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தார் லோகா.

“ம்மா… நான் எதுக்கு ஊர் வாயை மூடனும்? உன் வாயை மூடினா போதாதா? அதே என்னால் முடியல… இந்த லட்சணத்துல நான் எங்க இருந்தது ஊர் வாயை மூட?”

“தெரியுதில்லை. அப்புறம் என்ன இத்தனை கதை பேசிட்டு இருக்க? ஒழுங்கா புறப்பட்டு வர வேண்டியதுதானே…”

“ம்மா… நானாம்மா கதை பேசுறேன். இது உனக்கே அடுக்குமா? நான் ஒரு வார்த்தை சொன்னதுக்கு அப்ப இருந்து என்னை நீதான் ம்மா வறுத்து எடுத்துட்டு இருக்க,” விட்டால் அழுது விடுபவள் போலக் குரலில் அப்பாவித்தனத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு அவள் கூறினாலும் இருக்கின்ற அத்தனை தில்லாலங்கடி வேலையையும் செய்து விடுவாள் என்பதை லோகா முழுவதுமாக அறிந்திருந்தார்.

அதனாலேயே அவளுக்கு அவர் செல்லம் கொடுப்பது மிகவும் குறைவு… அவரிடம் எந்தச் சலுகையும் அதிகமாக இராது. ஆனால் அதற்குச் சேர்த்து வைத்துச் சுந்தரத்திடம் பெற்று விடுவாள்.

வீட்டில் இருக்கும் போதெல்லாம் லோகா தமிழிடம் எகிறும் போதெல்லாம் மகளின் கண்ணசைப்பை கொண்டே அவளுக்காக வக்காலத்து வாங்கி தன்னுடைய முகத்தை வீங்க வைத்துக் கொள்பவர்… மனைவி சாத்தியமே இல்லையென்று குதிக்கும் விஷயத்தை எல்லாம் மகளுக்காகச் சாத்தியமாக்கி தந்து. அவளைப் பார்த்து ரசிப்பவர்.

தீவிர தமிழ் பற்றாளர்… அதனாலேயே மகளுக்குத் தமிழ்நதி என்று அழகான தமிழ்ப்பெயரை வைத்து அழகு பார்ப்பவர்.

ஒற்றைப் பெண்ணிடம் எப்படியெல்லாம் பாசத்தை கொட்டுவது என்பதைச் சுந்தரத்தை கொண்டு அறிய முடியும் என்றால்… அப்படி பாசத்தை கொட்டும் தந்தையிடமிருந்து மகளை எப்படிப் பேணி பாதுகாக்க வேண்டும் என்பதை லோகாவை கொண்டு அறியலாம்.

அவரது பேச்சுதான் நீளுமே தவிர… அவருக்கும் உள்ளுக்குள் அதீத பாசம் உண்டு தமிழ்நதியிடம்… ஆனால் அதை அவர் காட்டி கொள்வதில்லை.

அடியாத பிள்ளை படியாது என்பதில் தீர்க்கமாக இருப்பவர்… அதை ஒட்டியே… அடி வாங்காமல் மகளும் எப்போதும் பணிந்து போனதில்லை.

உள்ளூரில் இருந்தவரைத் தினமும் ஏதாவது ஒரு பஞ்சாயத்துக்கு அவள் அடியை வாங்கிவிடுவாள் என்றாலும் இப்போது வேலைக்காகச் சென்னை சென்றது முதல் லோகவிடமிருந்து தப்பித்திருந்தாள்.

“பேசலை பேசலைன்னு சொல்லிட்டே அத்தனையும் பேசி முடிச்சுருடி… இவ்வளவு வாய் ஆகாதுடி தமிழு… போற இடத்துல ஒரு பக்கம் மாமியா ரெண்டு இடி இடிச்சா, நாத்தி ரெண்டு இடி இடிப்பா… வாயைத் தச்சு வெச்சுட்டு தான் மணவரைல உக்காரணும்… சொல்லிபுட்டேன்…”

“ம்ம்ம்… அதுங்க இடிச்சா என் கை என்ன பூப்பறிக்குமா என்ன? வகுந்துட மாட்டேன் வகுந்து…”

அசல் மதுரைக்காரியாகச் சிலிர்த்து கொண்டு தமிழ் பதில் கொடுக்க, லோகா வாய்மேல் கையை வைத்துக் கொண்டார்.

“அடியே மகளே… என்னோட பேரையே கெடுத்து விடுவ போல இருக்கே… அடக்க ஒடுக்கமா இருக்கவே மாட்டியாடி கழுதை?”

விட்டால் கைப்பேசியில் உள்புகுந்து மகளின் முடியைப் பிடித்து ஆட்டிவிடும் கடுப்பில் தான் இருந்தார். ஏனென்றால் அவளது குறும்புத்தனங்கள் அப்படி!

“ம்ம்மா…” குறும்பாக அவள் சிணுங்கினாலும் அவள் வேறு ஏதோ திட்டத்தில் இருப்பதாகப் பட்டது லோகாவுக்கு. அவள் தான் எந்த நேரத்தில் எந்த விதியை மீறுவாளோ? யார் அறிய முடியும்?

அவர் எவ்வளவுக்கு எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்திருந்தாரோ அதை மீறுவதில் அலாதி சுகம் தமிழுக்கு!

சற்றும் பயமில்லாத அவளது தன்மை அனைத்தையும் பரிட்சித்து பார்க்கக் கூற, ஒவ்வொரு முறையும் லோகாவுக்கு நெஞ்சு வலி தான் மிச்சமாகும்… இப்போதும் அதே!

திருமணத்தையே எதிர்ப்பாள் என்று எதிர்பார்த்தவருக்கு அவளது எதிர்க்கேள்வியில்லாத தலையாட்டல் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தாலும் உள்ளூர சந்தேகங்கள் எழாமல் இல்லை. ஏதாவது கிறுக்குத்தனமாகச் செய்து வைப்பாளோ என்று எண்ணியிருந்தவருக்கு அழகாகப் பாந்தமாகச் சேலையில் வந்து அனைவரது காலிலும் விழுந்து எழுந்து அவரது மடியில் பாலை வார்த்து இருந்தாள் தான்.

குறைந்தபட்சம் அவளது எதிர்ப்பைக் கூடக் காட்டாமல் ஒப்புக் கொண்டதே சற்று சந்தேகத்தைத் தான் விதைத்து இருந்தது. இப்போதும் அந்தச் சந்தேகம் வேர் விட்டுக் கிளை விட்டுப் பரவி நிற்க.

“தமிழு… சொல்லிடுடி… அப்பா மானத்த வாங்கிடாதே… முழு மனசோட தானே சம்மதிச்ச?” ஒரு மாதிரியான குரலில் பெண்பார்த்த நாளில் அவர் நம்பாமல் கேட்டார்.

“ம்மா… எத்தனைத் தடவை சொல்றது? நான் வேலை பார்க்கறது என்னோட தனிப்பட்ட சுதந்திரத்தைக் காப்பாற்றி கொள்ளத்தான். கல்யாணம் எல்லாம் நீங்கச் சொல்ற ஆளைத்தான் செய்துக்குவேன்… பயப்படாதம்மா…”

ஒரு வழியாக ஆயிரத்து ஓராவது தடவையாக அவள் அதைக் கூறி முடித்தாள். அவருள் நிம்மதி பெருமூச்சு!

ஆனால் இப்போது அந்த நிம்மதி அவ்வப்போது தவணை முறையில் காணாமல் போய்க்கொண்டிருந்தது. நலங்கு, தாய்மாமன் விருந்து, சீர் என்று திருமணத்திற்கு பத்து நாட்கள் முன்னரே அவர்களது சமூகத்தில் களைக் கட்டிவிடும்.

ஆனால் இந்தப் பெண்ணோ ஒரு வாரத்திற்கு முன் வருவதே பெரிய விஷயம் என்பது போலப் பிடிவாதமாக இருக்க, அவ்வப்போது லோகாம்பாளுக்கு திக் திக் என்றது!

ஒரு வேளை அவளது கிறுக்குத்தனத்தை ஆரம்பித்து விட்டாளோ? மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லையா? அதெப்படி பிடிக்காமல் போகும்? அவர்

பார்த்த மாப்பிள்ளையின் படிப்பும் பதவியும் அந்தஸ்தும் அவரைத் தலைகிருகிறுக்க வைத்திருந்தன.

விட்டால் ஒரு நிமிடத்தில் அமெரிக்காவையே தலை சுற்ற வைக்கும் கேள்விகளை அனாயாசமாகக் கேட்பதில் நம்மூர் பெண்கள் கில்லாடிகள். அந்தத் திறமை லோகாம்பாளுக்கு மட்டுமில்லாமல் போய் விடுமா?

அவரது ஒவ்வொரு கேள்விக்கும் பதிலைக் கூறி முடிப்பதற்குள் தமிழ்நதிக்கு தான் போதுமென்றாகி விட்டது.

“சரிடி… இப்ப எனக்கு முடிவா சொல்லு… எப்ப நீ புறப்படற? கல்யாணத்துக்கு இன்னும் எண்ணி பன்னிரண்டு நாள் தான் இருக்கு… சொந்தபந்தம் முன்னாடி எங்களைத் தலைகுனிய வச்சுடாதே ஆத்தா…” கெஞ்சுவது போன்ற தோரணையில் கேட்ட அன்னையிடம் எப்படி நிலையை உரைப்பது என்றே புரியவில்லை.

தமிழ்நதி வேலை பார்ப்பது ஃபேஷன் துறையில்… அவளது ஆசை கனவு லட்சியம் என அனைத்தும் சிறந்த ஃபேஷன் டிசைனர் என்ற பெயரை வாங்க வேண்டும் என்பதுதான்.

பொறியியல் படிக்கக் கூறிய தந்தையைச் சமாளித்து, ஏதாவது கலை அறிவியல் படிப்பை எடுத்துப் படித்தால் போதுமென்ற தாயைச் சமாளித்து ஃபேஷன் டெக்னாலஜி படித்து விட்டு இப்போது தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கவெனப் போராடி கொண்டிருப்பவள்.

இப்போதும் கூட அமேசான் தளத்தில் புதிய டிசைன்களை அறிமுகப்படுத்துவதற்காக இடைவிடாத வேலைகள் நடந்து கொண்டிருந்தன… இணைய ரீடெயில் வர்த்தகத்தில் அவர்களது டாரஸ் முழு மூச்சாக இறங்கியிருந்தது. ஃப்ளிப்கார்ட், அமேசான், ஈபே, ஸ்நாப்டீல், ஷாப்க்ளுஸ் என்று ஒரு தளத்தையும் விடாமல் அனைத்து இடத்திலும் தங்களது முத்திரையைப் பதித்து இருந்தனர்.

இப்போதைய சூழ்நிலையில் டிஜிட்டல் ஷாப்பில் ஒரு இடத்தைப் பிடித்து விட்டாலே வியாபாரம் சுலபமாகி விடுகிறது.

பொருள் எதுவாக இருந்தாலுமே இணையத்திலேயே விற்றுத் தீர்ந்து விடுகிறது.

அதிலும் தரம் நன்றாக இருந்து விட்டால் அவர்களுக்கென்று ஒரு வட்டம் இயங்கத் தயாராகி விடுகிறது.

அப்படிப்பட்ட வட்டம் டாரசுக்கும் உண்டு… அந்த வட்டமும் மிகவும் பெரியது.

அந்த வட்டத்தை அவர்கள் தக்க வைத்துக் கொள்வதற்காக மாதத்திற்குப் பல புதிய டிசைன்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தனர்.

உரிமையாளர்கள் மும்பையில் இருக்க, பேக்என்ட் அலுவலகம் சென்னையில் இருந்தது. மும்பையிலும் டிசைனர்கள் இருந்தாலும் தெற்கத்திய டிசைன்களுக்கு சென்னையைத் தான் நம்பிக்கொண்டிருந்தனர்.

அதனால் மும்பை கிளைக்கும் சென்னை கிளைக்கும் எப்போதும் போட்டி இருந்து கொண்டேயிருந்தது. அந்தப் போட்டியினாலேயே எந்தப் புதிய அறிமுகங்களைச் செய்வதாக இருந்தாலும் யார் முதலில் என்ற முனைப்பு இருக்கும்… மேலதிகாரிகளும் பிழிந்து எடுத்து விடுவார்கள்.

டிசைனை அறிமுகப்படுத்துவது என்பது எளிதான விஷயம் இல்லை. எத்தனையோ நிலைகளைக் கடந்து வந்து கடைசி கட்டமாக டிசைன் ஆல்பம் தயாரிக்கும் வேலையில் இருந்தனர்… வேலைகள் கழுத்தளவுக்கு இருக்க, அந்த நேரத்தில் தான் தமிழ்நதி சிக்கிக்கொண்டது.

அதன் முழு விவரமும் தமிழ்நதியும் அவளது தோழி ரூபிகாவுமே அறிந்தது.

ரூபிகா ஹைதராபாத்தை சேர்ந்தவள். மிக அவசரமென்று திடீரென்று ஒரு வாரத்திற்கு முன் அவள் கிளம்பி விட, முழுப் பொறுப்பும் இப்போது தமிழ்நதியின் தலையில் மட்டுமே!

எங்குமே இப்படியொரு பழக்கம்… யாராவது ஒருவர் உண்மையாக வேலைகளைச் செய்துவிட கூடாது. அவர்களது தலையில் அத்தனை வேலைகளையும் கட்டி விட்டு மற்றவர்கள் பொழுதைப் போக்குவார்கள்.

அத்தனை இடத்திலும் இப்படியல்ல என்றாலும் அவள் வேலை பார்க்கும் டாரஸ்ஸில் அப்படித்தான். அதிலும் சற்று சிரித்து விடக் கூடாது. செய்வாயா? உன்னால் முடியுமா? என்ற கேள்வி கூடக் கேட்காமல் ரூபிகா கிளம்பி போனது போலத்தான் ஒவ்வொரு முறையும் அவளுக்கான அனுபவம்.

இவர்களிடம் சண்டையிடவும் முடியாது. இருப்பதிலேயே ஜூனியரும் அவள் தான் எனும்போது அவர்களது இந்த அநியாயங்களை யார் தட்டி கேட்பது. அதுவும் இல்லாமல் இது போன்ற விஷயங்களுக்கு எல்லாம் அழுது ஆர்ப்பாட்டம் செய்யுமளவு அவளும் தைரியமில்லாதவள் இல்லையே… இன்னும் ஒரு வருடம் முழுதாக முடிந்தால் அவர்கள் அனைவரது கண்ணிலும் இவள் விரலை விட்டு ஆட்டிவிடும் சாத்தியக்கூறுகளைப் பற்றி அவர்கள் அறியவில்லை என்று நினைத்துச் சிரித்து கொண்டாள்.

இந்த விஷயங்களை எல்லாம் தாயிடம் பேச முடியாது. பேசினாலும் அவருக்கு விளங்காது. விளங்கினாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அவளது எண்ண ஓட்டம் இப்படியே சுற்றி கொண்டிருக்க, லோகா மீண்டும் சற்று சப்தமாகவே கேட்டார்.

“ஏய் எருமை… ஒரு தடவை கேட்டா காதுலையே விழாதா?”

பொறுமை பறந்து எப்போதும் அழைப்பது போல அன்பாக அழைக்க ஆரம்பித்தார்.

“ம்மா… சொல்லு… கடுப்படிக்காதே…” பதிலுக்கு அவளும் எகிற.

“ஏன்டி… எப்ப வர்ற… எப்ப வர்றன்னு கழுதையா கத்திட்டு இருக்கேன்?! நீ என்னடான்னா வெக்கன கொக்கா வெறிகொக்கான்னு விட்டத்தை பார்த்துட்டு இருப்ப போல இருக்கே… சொல்லித் தொலைடி ஆத்தா… கடைசி நேரத்துல எங்களைப் பாழுங்கிணத்துல தள்ளி விட்டுடாதே…”

“நீ என்னைக்குத்தான் மனுஷியா இருந்திருக்க?” தனக்குள்ளாக முணுமுணுத்ததை லோகாவும் கேட்டு விட.

“என்னடி ஆத்தா முணுமுணுக்குற?”

இதற்கு மேலும் பேசாமல் இருந்தால் இங்குத் தேடி வந்து லோகா அடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. அடி வாங்குவதை விட இந்த அரைவேக்காடு டீம் மேனேஜரிடம் எப்படியாவது லீவை வாங்கி விட வேண்டியதுதான் என்று முடிவெடுத்தவள்.

“ம்மா… இப்படிக் குதிக்காதே… இதென்ன உங்க அப்பாரு கட்டி வெச்ச ஆபீசா? நினைச்சப்ப எல்லாம் விட்டுட்டு ஓடியார? ஃபேஷன் ஹவுஸ்ம்மா… உனக்கு அதெல்லாம் புரியாது…” தமிழ்நதி அவளது பங்குக்குக் குதிக்க ஆரம்பிக்க.

“ஆமான்டி ஆத்தா… எனக்கு ஒன்னும் புரியாதுதான். அதான் அப்பாரும் புள்ளையுமே குசுகுசுன்னு பேசியே தானே அங்க மெட்ராசுல உக்கார்ந்துட்டு இருக்க,”

“ம்மா… அது சென்னை… ஒழுங்கா சொல்லு…” சிரிப்பை அடக்கிக் கொண்டு லோகாவை வாரிக்கொண்டிருந்தாள்.

“ம்ம்… ஆமா தமிழ் புலவி… சொல்ல வந்துட்டா… எங்களுக்கு அது மெட்ராஸ் தாண்டி…” லோகா சிலிர்த்து கொண்டு கூற, தமிழ்நதி சிரித்து கொண்டாள்!

“சரிம்மா… ட்ரை பண்றேன். நீ என்னை இப்போ முதல்ல வேலை செய்ய விடு…” விட்டால் போதுமென்ற மனநிலைக்கு வந்திருந்தாள் தமிழ்… கண் முன்னே வேலைக் குவிந்து கிடந்தது. விரைவாக முடித்தால் தான் நாளைக்காவது கிளம்ப முடியும்.

“அதென்ன… ட்ரை பண்றேன். மரியாதையா நைட்டு கிளம்பி வர்ற… சொல்லிட்டேன். என்ன விளங்குதா…” தாயின் தொனியே இதுதான் என்றெண்ணிக் கொண்டு சிரித்துக் கொண்டாள். அன்பைக் கூட அதிகாரமாக வெளிப்படுத்தத்தான் அவருக்குத் தெரியும்… அப்படியே பழகி விட்டவர்.

ஆனாலும் அப்படியே விட்டுவிட்டால் அவள் லோகாம்பாளின் புத்திரி இல்லையே.

“ட்ரைன் என்ன உங்க தாத்தாவா விட்டு இருக்காங்க? நினைச்சவுடனே ஏறிட?… இன்னும் புக் கூடப் பண்ணலை… அதுவும் இல்லாம நவராத்திரி லீவ் நேரம்… ரிசர்வேஷனே கிடைக்காது. விளையாடாதே ம்மா…”

“ஏன்டி… கல்யாணத்தை வெச்சுட்டு ரிசர்வ் கூடப் பண்ணாம இருக்க நீ… எம்புட்டு தெகிரியம் உனக்கு இருக்கும்…”

“ம்மா… லூசாம்மா நீ… இன்னும் மூணு நாள் கழிச்சு புக் பண்ணி வெச்சதை மறந்துட்டியா? உன் இஷ்டத்துக்கு இப்ப கிளம்பி வான்னு சொன்னா உங்க தாத்தா தான் ட்ரைன் விடனும்…”

தமிழ்நதி கடுப்பில் எகிற… லோகாம்பாள் சற்று அடங்கினார்… அவர் எப்போதுமே இப்படித்தானே… கெஞ்சினால் மிஞ்சுவது. மிஞ்சினால் கெஞ்சுவது.

“தமிழு… நல்ல பொண்ணுல்ல… நாளைக்கு உங்க அத்தையம்மா வர்றாங்கம்மா… நல்ல நாள்லயே எதுலடா குறை கண்டுபிடிக்கலாம்ன்னு காத்துட்டு இருப்பாங்க… இப்ப நீயும் இல்லன்னா அவங்களுக்கு வெறும் வாய்க்கு அவள் கிடைச்ச மாதிரி… கொஞ்சம் தயவு பண்ணி வந்துடு தங்கம்…”

மிஞ்சி இவளிடம் ஒன்றுமாகப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்தவர் அவளிடம் கெஞ்ச ஆரம்பித்தார்… அவளும் ஒருவாறாக அவரைச் சமாதானப்படுத்திவிட்டு வைத்தபோது அப்பாடா என்றிருந்தது. ஒரு போரை முடித்து விட்டு வந்த உணர்வு.

அப்பப்பா… இந்தத் திருமணம் முடிவதற்குள் தன்னுடைய நிலை என்னவாகுமோ என்று எண்ணியபோது மனம் சோர்ந்தது.

திருமணம் என்ற பெயர் மட்டும் தானே தவிர… பெண் பார்த்து நிச்சயம் செய்தவன் இன்னமும் தன்னிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லையே… அவனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்றும் கூடத் தெரியாமல், பெற்றவர்கள் கூறியதற்காகத் தலையை ஆட்டி விட்டாகி விட்டது.

திருமணம் நிச்சயமானவுடன் அவர்களது வருங்கால துணையுடன் போனே கதியென்று இருந்ததெல்லாம் போய் இப்போதெல்லாம் எவ்வளவோ நடக்கும் இந்தக் காலத்திலும் கூடப் பெண்ணிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாத ஒருவனா?

அதை நினைக்கும் போதெல்லாம் மனம் சோர்ந்தது. அவனாக அழைக்கவில்லை எனும்போது தானாக அழைத்துப் பேசப் பிடிக்கவில்லை. பெற்றோருக்காகத் தலையாட்டி வைத்திருந்தவள் தன்னுடைய எதிர்காலத்தை எண்ணி சற்றே கலக்கமுற துவங்கியிருந்தாள். ஒரு வேளை மற்றவர்களைப் போல ஆர்வமாக அவன் பேசித் தன்னிடமும் அந்த ஆர்வம் வந்திருக்கலாம்… தனக்கு ஆர்வம் வந்திருந்தால் வெகு ஆர்வமாகத் திருமணத்திற்கு தயாராகி இருந்திருக்கலாம்.

க்கலாம்… க்கலாம்… என்று பல க்கலாம்களை சொல்லிக் கொண்டது மனது.

ஆனால் எத்தனைச் சமாதானம் சொல்லிக் கொண்டாலும் சற்றும் அறிமுகமில்லாத ஒரு குடும்பத்தில் ஒருத்தியாக, ஒருவனுக்கு மனைவியாக அடியெடுத்து வைக்கப் போகும் நிலைமை அவளது அடிவயிற்றைக் கலக்கியது.

அவனது கனவுகளைத் தான் சுமக்க வேண்டும். தனது எதிர்காலத்தை அவனிடம் ஒப்புவிக்க வேண்டும். அவனுக்காகத் தன்னுடைய ஆசைகளை எல்லாம் குழி தோண்டிப் புதைக்க வேண்டும்.

அந்த நிலைமையை நினைத்துப் பார்க்க முடியாமல்… நினைத்துப் பார்க்கப் பிடிக்காமல் தவித்தது மனது.

திருமணம் என்பது ஃபேஸ்புக்கில் சிங்கிளிலிருந்து கமிட்டட் என்று ஸ்டேடஸ் மாற்றுவதோ… அல்லது மேரீட் என்று மாற்றுவதோ அவ்வளவு எளிதான ஒன்றல்ல என்பது அவளுக்கும் புரிந்து தானிருந்தது.

இத்தனை நாட்களில் வராத குழப்பம் இன்று திருமணத்திற்கு கிளம்பியாக வேண்டும் எனும்போது தீவிரமாகத் தாக்க, தன்னையுமறியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு டிசைன் டேபிளில் சரிந்து தலைசாய்த்து கொண்டாள்.

இது போன்ற கேள்விகளை வாஸந்தி தனக்காக லோகாம்பாளிடம் வரிந்து கட்டிக் கொண்டு கேட்டிருந்தாள்.

வாஸந்தி அவளது சித்தப்பாவின் மகள். தன்னை போலவே குணமனைத்தும்… ஆனால் அதீத சுதந்திர விரும்பி… அவளுமே சென்னையில் தான் படித்துக்கொண்டிருந்தாள்.

ஆனால் அதையெல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்திருந்தார் லோகா.

“ஆமான்டி… பேசணும்… பழகனும்… இன்னும் டேட்டிங் போகணும்ன்னு சொல்லுவீங்க… ரெண்டு பேருமா…” என்று அவர் நீட்டி முழக்க.

“ஹய்யோ… தமிழ்… பெரிம்மாவுக்கு டேட்டிங் பத்தியெல்லாம் தெரிஞ்சுருக்கு…” என்று வாஸந்தி சிரித்தாள்.

“தெரிஞ்சு வெச்சுக்காட்டி உங்களை மாதிரி அராத்தையெல்லாம் எப்படிடி சமாளிக்க? ஆனா அந்த வேலைக்கெல்லாம் வேற ஆளைப் பாரு… சொல்லிபுட்டேன்…” வெட்டு ஒன்று துண்டு இரண்டாக முடித்து விட.

“அதுக்கு தனியா ஆளைப் பார்த்தா உங்களுக்கு ஓகே வா ஆபீசர்…!” கண்ணடித்துக் கொண்டே வாஸந்தி கேட்டாள். தமிழ் அவளுக்கு ஹைபை கொடுத்தாள்.

“அடி பழி காரிங்களா…” அவர் வாய்மேல் கை வைத்து விட, இருவராலும் அப்போது சிரிப்பை அடக்க முடியவில்லை.

“பின்ன என்ன? நிச்சயமாகி ஒரு மாசமாச்சு… இன்னும் அந்தப் பையன் அக்கா கிட்ட ஒரு வார்த்தை கூடப் பேசலை… ஏன் இப்படின்னு கேட்டா நாங்க அராத்தா? இது எந்த ஊரு நியாயம் பெரியம்மா… அக்காவுக்குப் பேசத் தெரியாலைன்னு நீ அக்காவை ஏமாத்துற…” சிரிக்காமல் வாஸந்தி கேள்விகளைக் கேட்டாள். லோகா கழுத்தை நொடித்து திருப்பிக் கொண்டாள்.

“என்ன… உன் அக்காவுக்குப் பேசத் தெரியலையா? அடியே… அப்படியே மேற்கால ஓடிடு… சொல்லிபுட்டேன். ரெண்டு அப்பாவி முகரைகட்டைங்களையும் பாரு…”

லோகாவுக்கு அப்போது பொறுமை பறந்து போய் அருகில் இருந்த விறகுக் கட்டையைத் தூக்கியிருக்க, சுந்தரம் தான் நடுவில் வந்து இருவரையும் காப்பாற்றி விட்டார்.

“ஏதோ எங்க பெரியப்பாவுக்காக விட்டுட்டு போறேன் பெரிய கிழவி… பாத்து சாக்கிரதை…” என்று கூறி கொண்டே ஓட.

அவளது பெரிய கிழவி என்ற வார்த்தை லோகாவை வெகுண்டு எழச் செய்தது. அவரை எப்போதுமே அவள் கலாய்க்கும் வார்த்தை அது.

லோகா பெரிய கிழவி… அவளுடைய தாய் சித்ரா சின்னக் கிழவி… ஆனால் தகப்பன்மார்கள் மட்டும் விதிவிலக்கு… வாஸந்தியின் தந்தை சந்திரன் அப்படியே தனது அண்ணனைப் போலவே!

தமிழ்நதிக்கு எப்படி சுந்தரம் செல்லம் கொடுத்துக் கெடுத்து வைப்பாரோ அதைப் போலவே சந்திரன் வாஸந்திக்கு!

ஆனால் சற்று அளவோடு இருக்கும்… ஏனென்றால் அங்கே வாஸந்தியின் தம்பி புகழேந்தி இருந்தான்.

அனைத்தையும் சரிசமமாகப் பிரித்தேயாக வேண்டும் என்ற அரும்பெரும் கோட்பாட்டை உடையவன். பாகப்பிரிவினை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லித் தருபவன்.

அவனது அந்த முயற்சிகள் எல்லாம் மதியம் சிக்கன் குழம்பில் இருந்தே ஆரம்பித்து விடும். இருக்கிற இரண்டு லெக் பீசும் தனக்கே என்ற கொள்கையை மாற்றிக் கொள்ளாதவன். தப்பித் தவறி லெக் பீஸை வாஸந்தி லவட்டிவிட்டால் அந்த இடம் குருஷேத்திரம் தான். அதில் தமிழ்நதியும் சேர்ந்து விட்டால் அந்த இடம் சந்தை கடையாகி விடுவதுண்டு.

அடுத்து வரும் சில்லி சிக்கனுக்காக மூவரும் அடித்துக் கொள்ளும்போது பின்னாளில் சொத்துக்காகக் கூட இப்படி இந்த மூன்றும் இப்படி அடித்துக் கொள்ளாது என்று தலையைச் சுவற்றில் இடித்துக் கொள்வார் லோகா.

இவையெல்லாம் வாஸந்தியும் சென்னைக்கு தமிழ்நதியுடனே படிக்கச் செல்லும் வரை தான். திரும்ப அவள் வரும் வரை தமக்கைகள் இல்லாததை நினைத்து வருந்திக் கொண்டிருந்தாலும்… வந்த அடுத்த நிமிடமே இருவருக்குமான இல்லை மூவருக்குமான குடுமிப் பிடி சண்டைகள் ஆரம்பமாகி விடும்.

இருவருமாகக் கிளம்பத்தான் பதிவு செய்திருந்ததும்… ஆனால் லோகாம்பாள் திடீரென்று குண்டைத் தூக்கி போடுவாரென்று யாருக்குத் தெரியும் என்று நினைத்துக் கொண்டாள். பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்தவளுக்குத் தான் தலை சாய்த்து படுத்திருப்பது டிசைன் டேபிள் என்பது கூட நினைவில் இல்லை. உலகையே மறந்து இந்தக் கவலைகளில் ஆழ்ந்திருக்க, அவளுக்குப் பின்னால் வந்து நின்ற அந்த உருவத்தைச் சற்றும் கவனிக்கவில்லை.

error: Content is protected !!