நிலவு – 15
முயற்சி என்பது இதயத்துள் மூளும் வெறும் உணர்வு மட்டுமல்ல, ஆற்றலைக் கிளப்பும் தூண்டுகோல் அது – தாகூர்.
சுடர் விளக்காயினும், நின்று எரிய தூண்டுகோல் ஒன்று வேண்டும். உத்வேகமும் சக்தியும் இருந்தாலும் வழிகாட்டி ஒன்று இல்லாவிட்டால், வாழ்வில் முன்னேறுவது அத்தனை சாத்தியமில்லை. மிதுனாவின் விசயத்தில் இது உண்மையாகிப் போனது.
இரண்டு நாட்களில் வரவு செலவுகளை சரிபார்த்து கணக்கை ஒப்படைத்த ராமமூர்த்தி, அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார். மறுநாள் காலை எட்டுமணிக்கு தொழிற்கூடத்திற்கு சென்ற மிதுனா, நடக்கும் வேலைகளை கவனிக்கத் தொடங்கியவள், இரவு எட்டுமணிக்கு வீட்டிற்கு திரும்பினாள்.
உலர்சலவையின் அடுத்தடுத்த நிலைகளை கண்கூடாக கவனித்து வியந்து போனாள். சாதாரண துணி துவைக்கும் வேலை என்று எளிதாக ஒதுக்கித் தள்ளும் காரியத்தில்தான் எத்தனை எத்தனை பக்குவங்களை கையாள வேண்டி இருக்கிறது?
அதற்கென இருக்கும் தனித்தனியான இயந்திரங்களும் அவற்றின் நெறிமுறைகளும் அவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தன.
உலர் சலவைமுறை, சாதாரண சலவை முறை, அயர்னிங், ஸ்டீமிங், புஷ்ஷிங், கெமிக்கல் மிக்சிங் போன்ற பல வழிமுறைகளை நன்றாக அறிந்து கொள்வதற்கு ஒரு வாரம் பிடித்தது.
பின்னர் எவ்வாறு தொழிலை மேம்படுத்தலாம் என்று இணையத்தை தஞ்சம் அடைந்தவளுக்கு, அது பல்வேறு கருத்துக்களை எடுத்துக் காட்டியதில், சிலவற்றை செயல் படுத்த முனைந்தாள்.
மூளை தனது புதிய பொறுப்புகளை திறம்பட நடத்தத் திட்டமிட்டுக் கொண்டிருக்க, மனம் கணவனை ஏறிட்டும் பார்க்க மறந்து போனது. வீட்டுச் சமையலை வெகுவாகத் தள்ளி வைத்து வெளியில் வயிற்றை நிரப்பி கொண்டார்கள்.
தயாவின் உதவியோடு காலையில் இயன்றதை செய்து முடித்துப் புறப்படுபவள், மீண்டும் இரவு அன்றைய நாளின் தொழில் அனுபவத்தை கணவனிடம் பகிர்ந்தவாறே, உறங்கச் செல்ல ஆரம்பித்தாள்.
தனது மனச் சுணக்கங்களை மறந்து போய், முற்றிலும் புதியவளாக மாறியிருந்தாள் மிதுனா.
“யக்காவ்! இந்த அரைகுறைய தேடுனியாம்… அண்ணாத்தே சொன்னாரு” என்றபடியே வந்து நின்றான் குமரன். தயாவின் வலது கையாக, அவனுடன் எந்த நேரமும் சுற்றிக் கொண்டு இருப்பவன்.
“நான் சொன்னத கொஞ்சமும் மாத்தாம, உங்க அண்ணன் ஒப்பிச்சுட்டாரு போல… நீயும் அப்டியே, எங்கிட்ட வந்து கொட்டிட்ட” என்று அரைகுறையை சுட்டிக் காட்டிட,
“விடுக்கா, நாமெல்லாம் அப்படிதான்” என்றவன், அழைத்த காரணத்தை கேட்க,
“பார்ட் டைமா வேலை பார்க்க பசங்க ரெண்டு பேர் வேணும்டா… டெய்லி சாயந்தரம், நீங்க போற லயனுக்கு அவங்களையும் கூட்டிட்டுப் போயி, நம்ம ட்ரை கிளினிங்க்கு ஆர்டர் எடுத்து வரணும், பாயிண்ட் டூ பாயிண்ட் மாதிரி எல்லாமே டோர் டெலிவரிதான்… பேமண்ட் கூட ஜீ-பே, பேடிஎம், ஃபோன்பே-ல பண்ணச் சொல்லிடலாம்” தன் யோசனையை முன்வைத்தாள் மிதுனா.
“நிறைய இடத்துல இப்படி இருக்குக்கா… பெரியவர்கிட்ட எத்தனையோ தடவ சொல்லிட்டேன். அவர், தானா தேடி வர்றது மட்டும் போதும்னு சொல்லிட்டாரு…”
“நாம ஆரம்பிப்போம் குமரா… உருப்படி கொண்டு வர்றவங்களுக்கு, எண்ணிக்கையை பொறுத்து கமிஷன் குடுப்போம். பிளஸ் டெய்லி சாலரி சொன்னா பசங்க சுறுசுறுப்பா வேலை பார்ப்பாங்க தானே? பசங்க மெண்டாலிட்டிக்கு கரெக்டா மாட்ச் ஆகும்தானேடா?” தனது கணிப்பைப் பற்றி, குமரனிடம் கேட்க, அவனும் சந்தோசத்துடன் ஆமோதித்தான்.
மனைவியின் மாற்றங்களை கண்கூடாக கவனித்து வரும் தயானந்தனுக்கும், மகிழ்ச்சியே! விருப்பம் இல்லை, தெரியாத விஷயம் என்றெல்லாம் தள்ளி நிற்காமல், புதிய யுக்திகளை கையாள, முயற்சி செய்பவளை மனதிற்குள் மெச்சிக் கொண்டான்.
“குமரா… ஃப்ரீயா மார்க்கெட்டிங் பண்ண முடியாது. முதாலாளி அம்மாகிட்ட பெட்ரோலுக்கு சரி பங்கு குடுக்க சொல்லு… புக்கிங் எடுத்து, டெலிவரி ஒழுங்கா குடுக்கணும். இதுக்கெல்லாம் டபுள் சார்ஜ் வேணும்னு சொல்லி வைடா…” இடையினில் புகுந்த தயா, பொய் சீண்டலுடன் வம்பை வளர்க்க,
“ஆமாக்கா… கம்பெனி ரூல்ஸ் எல்லோருக்கும் பொருந்தும். ஒரு ரூபா குறைஞ்சாலும், வசூல்ராஜா விடமாட்டாரு…” குமரனும் தயாவுடன் சேர்ந்து கொண்டான்.
‘வர்ற லாபமெல்லாம் உங்க மகாராஜாவுக்கு தானேடா, வேலைய மட்டும் என்னோடதுன்னு ஏன் பிரிக்கிற?” கேலிப் பேச்சில் சிரித்தபடியே மிதுனா கேட்க, அவளின் புன்சிரிப்பில் மயங்கியவன்,
‘சக்கரகட்டி, என்னையும் துணி துவைக்க நிப்பாட்டிருவாளோ? உஷாரா இருந்துக்கோடா ஆனந்தா!’ மனதிற்குள் அலறிக் கொண்டான். வெகு நாட்களுக்குப் பிறகு இலகுவான மனநிலை இருவருக்கும்.
பகுதி நேர வேலைக்கு ஆட்கள் வந்து சேர்ந்து, திட்டமிட்டபடி வேலையை ஆரம்பிக்க முதல் வாரத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை. தினமும் சென்று கேட்டு கொண்டே இருக்க, மெதுமெதுவாக சலவைக்கு உருப்படிகள் வர ஆரம்பித்தது.
வீட்டு உபயோக துணிகளை போடுபவர்களுக்கு சில பல பேக்கேஜ் அடிப்படையில், தொகை நிர்ணயம் செய்ய பலர் வாடிக்கையாளராக சேர்ந்து கொண்டனர். சிறுசிறு அலுவலகங்கள், தங்கும் விடுதிகள் போன்ற இடங்களிலும் கேட்டுச் செல்ல, நல்லதொரு முன்னேற்றம் ஆரம்பமானது.
நிலையான சுழற்சி முறை வசப்பட்டு, நிமிர்ந்த பொழுது முழுதாக மூன்று மாதங்கள் முடிந்திருந்தது. தொழிற்கூடத்தில் மட்டுமல்லாது, வெளியே சென்று வருவதற்கும் நான்கு பேர் என்ற முறையில் புதிய ஆட்கள் வேலைக்கு சேர்ந்திருந்தார்கள்.
தயானந்தன் செல்லும் பகுதிகளில், அவன் அறிமுகப்படுத்தி வைக்க, மிச்ச வேலைகளை மற்றவர்கள் கவனித்துக் கொண்டனர்.
இரவு எட்டு மணிக்கு இவள் வீட்டிற்கு திரும்பும் பொழுதே தயாவும் வந்து விடுகிறான். தனியாக இருக்க தயக்கம் மேலிட, கணவனின் துணையின்றி வீட்டிற்கு மிதுனா வருவதில்லை.
ஒரு போர்ஷனை காலி செய்து வாடகைக்கு விட தயானந்தன் ஒப்புக் கொள்ளவில்லை. சிறிது நாட்கள் கழித்து சிந்துவை, இங்கே அழைத்துக் கொள்ளும் எண்ணம் இருக்க, வீட்டை அப்படியே உபயோகப் படுத்த ஆரம்பித்திருந்தனர்.
காலை வேளையில் மனைவிக்கு உதவி செய்பவன், இரவு நேரத்தில் வேலைகளை, அவளிடம் தள்ளிவிட்டு அன்றைய நாளின் கணக்கு வழக்குகளை வீட்டிற்கு வந்து பார்த்துக் கொண்டான்.
“கூட்டி கழிச்சு போடறதுக்கு, எவ்வளவு நேரம் எடுப்பீங்க? இருக்குற வேலையெல்லாம், நான் மட்டுமே செஞ்சு, கை, கால் எல்லாம் வலி எடுக்குது” அலுப்புடன் சிணுங்கிக் கொண்டாள் மிதுனா.
“உட்கார்ந்த இடத்துலயே கணக்கு முடிக்கிறதுக்கு, நான் என்ன, உன்ன மாதிரி முதலாளியா? வண்டியில சுத்துற தொழிலாளிக்கு, கொஞ்சம் முன்ன பின்னதான் ஆகும். இப்போதான், நீ உட்கார்ந்து வேலை பாக்குறியே உனக்கெதுக்கு அலுப்பு வருது?” தீராத சந்தேகம் கணவனுக்கு வந்து விட,
“நீங்க பார்த்தீங்களா? நான் ஒரே இடத்துல உட்கார்றத? உள்ளே வெளியேன்னு, மங்கத்தா ஆடிக்கிட்டு இருக்கேன்…” முகத்தை தூக்கி வைத்துச் சொல்லிய பாவனையில், விழுந்தே விட்டான்.
“ரொம்ப வலிக்குதா மித்துகுட்டி? மருந்து போட்டு விடவா?” வாஞ்சையாக கேட்டவன், அவள் அருகில் அமர்ந்து, தன் கடமையை செய்ய முற்பட,
“இப்படி கூப்பிட வைக்க, எப்படியெல்லாம் பேச வேண்டியிருக்கு. எல்லாத்துக்கும் நாந்தான் அடி எடுத்து வைக்கனுமா?” கோபத்தோடு முகத்தை சுளித்தாள் மிதுனா.
“சக்கரகட்டி… இப்படி கூப்பிட்டா, என்னோட பெர்ஃபார்மன்ஸ் வேறமாதிரி இருக்குமேடி… கொஞ்சம் நல்லவனா இருக்குறது தப்பா? உன்னோட புது வேலையில நல்லா செட்டில் ஆகிக்கோ மிது! இனிப்பு சாப்பிட நமக்குதான் வாழ்நாள் முழுக்க நேரம் இருக்கே…” கண்களை சிமிட்டி, குறும்புடன் தயா சொல்ல, உள்ளன்போடு அவனை அணைத்துக் கொண்டவள்,
“ஆஹா, இப்படிபட்ட நல்லவருக்கு நியாயம் செய் மிதுனு என் மனசு ஆர்டர் போடுதே தயா…” என்றவாறே அவன் முகமெங்கும் முத்திரைகளைப் பதிக்க,
“மேலிடத்து உத்தரவ தட்டிக் கழிக்காதே மித்துகுட்டி… உடனே செஞ்சு முடி” என்றவனின் உல்லாச பேச்சிற்கு பிறகு. முழுதாய் ஒருவருக்குள் ஒருவர் சரணடைந்திருந்தனர்.
“சந்தோஷமா இருக்கியா மிது? புது வேலை ரொம்ப கஷ்டத்த குடுக்குதா?” அணைப்பை இறுக்கிக் கொண்டு, ஆழ்ந்த குரலில் கேட்க,
“நீங்க பக்கத்துல இருக்கும் போது, எனக்கு எதையும் பிரிச்சு பார்க்க தெரியல… எது வந்தாலும் தைரியமா சமாளிக்க முடியுங்கிற எண்ணம், உங்க கூட இருக்கும்போது உணர்றேன். அதுதான், எப்பவும் என்னை சுறுசுறுப்பா நடமாட வைக்குது தயா” உணர்ச்சி மேலிட்ட குரலில் சொன்னவள், அவன் அணைப்பில் அடங்கினாள்.
“மித்துக்குட்டி புல்லரிக்க வைக்கிறடி… நெஜமாவா சொல்ற? உனக்கு அவ்வளவு தைரியம் குடுக்கிறேனா நானு… என்னை வச்சு காமெடி பண்ணலையே?” இவன் கிண்டலில் இறங்க,
வெடுக்கென்று விலகிக் கொண்டவள், “போடா கிறுக்கா! உனக்கெல்லாம், பொழுதுக்கும் கரிச்சு கொட்டிட்டு இருக்குற பொண்டாட்டி கிடைக்கணும். அப்போதான் என் அருமை தெரியும்” பொய்யாக முறுக்கிக் கொண்டாள்.
“ஹஹா… உன்னை பத்தி, நீயே சொல்லிக்காதே சக்கரகட்டி… என் பொண்டாட்டிய பத்தி, யாரும் குறை சொல்ல, நான் விடமாட்டேன்” என்றவனின் பாவனையில், முறைத்து பார்க்க எண்ணியவள், அவனது பார்வையில் சிரிக்க, சந்தோஷ தூறல்கள் இருவரின் மனதிலும்…
****************************************
குழந்தை விபாகரன் பிறந்து மூன்று மாதங்கள் முடிந்திருக்க, குடும்பத்துடன் கோவிலுக்கு வந்திருந்தார்கள். பொங்கல் வைத்து, அர்ச்சனை தட்டு, குழந்தை சகிதம் மரகதத்துடன் இறைவனின் சன்னதி முன்பு நின்றிருந்தாள் சிந்து.
தீபாராதனை முடிந்து பிரசாதம் பெற்று கொள்ளும் நேரம் தமிழ்செல்வன் அங்கே வந்து நிற்கவும், சகல சம்பத்துக்களோடு, தம்பதி சமேதராய் தீர்க்காயுசுடன் வாழுமாறு மந்திரம் சொல்லி, இருவருக்கும் விபூதி பூசி விட்டார் கோவில் பூசாரி,
சிந்து கையில் குழந்தையுடன் நிற்க, அர்ச்சனை தட்டை தமிழ் வாங்கிக் கொள்ள, பார்ப்பவர் யாருக்கும் இருவரும் கணவன் மனைவி என்றே எண்ணத் தோன்றும்.
தற்செயலாக நடந்த செயலால் அனைவரும் தர்ம சங்கடத்தில் நெளிந்திட, உள்ளே சென்ற பூசாரியை அழைத்து விளக்கம் சொல்ல முடியவில்லை.
இதனை பார்த்திருந்த தமிழ் செல்வனின் தாய் அலமேலுவிற்கு கோபம் பொங்கியது. மகனின் திருமணத்திற்கு பெண் பார்க்க ஆரம்பித்திருந்தவர், சிந்துவின் பிரசவம் மற்றும் அடுத்தடுத்த நிகழ்வுகளினால், சிறிது நாட்கள் நிறுத்தி வைத்திருந்தார்.
சிந்து தனக்கில்லை என்று தெரிந்ததும் தன் மனதை சமாதானம் செய்து கொண்டு, அன்னையிடம் திருமணத்திற்கு சரியென்று சம்மதித்திருந்தான் தமிழ்செல்வன்.
ஆனால் சிந்து கிராமத்திற்கு வந்த நாள்முதல், தமிழ், அவள் மேல் காட்டும் அக்கறையை, அலமேலுவால் சாதாரணமாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
மகனின் போக்கை தடுக்க முடியாமல், தனது அதிருப்தி பார்வையை சிந்துவின் மேல் காட்டத் தொடங்கினார். இன்றும் அதே போல கடுகடுக்கும் பார்வையை சிந்துவின் மேல் படர விட்டார்.
“அவன்தான் விவரமில்லாம வந்து நிக்கிறான்னா, உனக்கு இந்த பக்கம் வரத் தெரியாதா? எங்களோட சேர்ந்து நில்லு சிந்தா!” என்று கடிந்து கொள்ள, மறுபேச்சு பேசாமல், சிந்துவும் மாறிக் கொண்டாள்.
காலையில் கோவிலுக்கு புறப்படும் நேரத்திலும், தமிழை வலுக்கட்டாயமாக, வெளி வேலைக்கு அனுப்பிவிட்டே, இந்த பக்கம் வந்தார் அலமேலு. ஆனால் அவன் வேலையை முடித்து நேராக கோவிலுக்கு வந்துவிட, எதுவும் சொல்ல முடியாத நிலை இப்பொழுது.
மரகதம் பேரனையும் தாய் தேனரசியையும் கவனித்துக் கொள்ள, அலமேலுவின் பார்வை மாற்றத்தை அறிந்து கொள்ளவில்லை. தன் எதிர்காலத்திற்கான புதிய முயற்சிகளை யோசித்துக் கொண்டிருந்த சிந்து இதனை கண்டு கொள்ள, காரணத்தையும் யூகித்துக் கொண்டாள்.
எத்தனையோ முறை வெளி வேலைக்கு முயன்றாலும் வீட்டில் அனைவரும் ஒரு சேர, பிள்ளை பெற்றவளுக்கு ஒய்வு அவசியம் என்று தடுத்து விட்டனர்.
அதையும் மீறி ஏதாவது செய்தால் தாய்மாமனின் கண்டனப் பார்வைக்கு ஆளாக வேண்டியிருந்தது. பன்னிரண்டு வருடங்கள் வளர்ந்த வீடு, தந்தை பாசத்தை உணர வைத்த, நாராயணனை எதிர்த்துப் பேச முடியவில்லை.
அலமேலுவும் தாய்க்கு நிகரான பாசத்தை அளித்தவர்தான். பெண்பிள்ளை இல்லாத வீட்டில் சிந்துவை சீராட்டி வளர்த்தவர்தான் என்றாலும், தன் மகனின் எதிர்காலம் என்று வரும்போது அவரால் சிந்துவின் தற்போதைய இருப்பை சகஜாமாய் எடுத்துக் கொள்ளவில்லை.
கணவனைப் பிரிந்தவளை, திருமணத்திற்கு நிற்கும் ஒருவன் விழுந்து விழுந்து கவனித்தால் என்ன மாதிரியான பேச்சுக்கள் கேட்க வேண்டி வரும் என்று உணராதவர் அல்ல. ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் கௌரவக் குறைவு உண்டாக்கும் செயலை ஆதரிக்க இவருக்கும் மனமில்லை
பிரசவம் முடிந்து புகுந்த வீடு சென்று விடுவாள் என்றிவர் நினைத்திருக்க, சிந்துவோ தனக்கு திருமண வாழ்க்கையே வேண்டாம் என வந்தது, அலமேலுவின் மனதில் நெருஞ்சி முள்ளாய் உறுத்தத் தொடங்கியது.
மகனுக்கு விரைவில் பெண் பார்த்து, திருமணத்தை முடித்து வைப்பதில் பெரும் முனைப்புடன் இறங்கி விட்டார். வரன்களை கொண்டு வரும் தரகரும் சிந்து மற்றும் மரகதம் இவர்களை குறிப்பிட்டு பொடி வைத்துப் பேசிவிட, அலமேலு தனது பிடித்தமின்மையை பகிரங்கமாக வெளிபடுத்தி விட்டார்.
சமீப நாட்களாக, வீட்டில் அனைவரிடமும் சகஜமாக பேசுபவர், சிந்துவிடம் மட்டும் ஒதுக்கத்தை காட்டி, மகன் அவளுடன் பேசுவதை, தடுத்து நிறுத்துவதே பெரிய வேலையாக, தூக்கி சுமக்க ஆரம்பித்து விட்டார்.
தாங்கள் இங்கிருத்து சென்றாலோழிய, அலமேலு அத்தை, தனது எண்ணப் போக்கை மாற்றிக் கொள்ள மாட்டார் என்பதை நன்றாக அறிந்து கொண்ட சிந்து, தங்களது சொந்த கிராமத்தில் வீட்டோடு, வேலையும் சேர்த்து தேட ஆரம்பித்தாள்.
தயானந்தன் வளைக்காப்பிற்கு அணிவித்த தங்க வளையல் இருக்க, அதை அடகு வைத்து அடுத்த அடியை எடுத்து வைக்கலாம் என்று மனதில் கணக்கு போட்டுக் கொண்டாள்.
தன் முடிவை வெளியே சொல்லும் போது எப்படியும் அனைவரிடமும் பேச்சு வாங்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிந்தாலும், தன் முடிவில் பின் வாங்கவில்லை. அனைத்தையும் முடித்து விட்டு சொல்லிக் கொள்ளலாம் என்று அமைதியுடன், செயல்பட ஆரம்பித்தாள்
ஏற்கனவே வாழ்ந்த விருப்பாச்சி கிராமத்தில், எளிதாக வீடும் அமைந்து விட்டது. அடுத்து நடக்க வேண்டிய வேலைகளுக்கு பணம் கணிசமான அளவு தேவைப்பட, நகையை அடகு வைக்க, ஒட்டன்சத்திரம் சென்று விட்டாள்.
திரும்பிய பக்கம் எல்லாம் தெரிந்த முகங்கள் இருக்க, இவள் வந்த வேலை வெகு சீக்கிரத்திலேயே, தமிழுக்கு தெரிவிக்கப்பட்டு, வீட்டில் உள்ள அனைவருக்கும் அறிவிப்பாகிப் போனது.
“யாருக்கும் தெரியாம தனியா வீடெடுத்து போற அளவுக்கு பெரிய மனுஷி ஆகிட்டியா சிந்தா? இங்கே என்ன குறை கண்டுட்டேன்னு இந்த காரியம் செய்ய பார்த்த? உன்னோட இந்த வேலை எங்களுக்கு, எத்தனை தலைகுனிவு கொடுக்கும்னு உனக்கு தெரியாதா?” தந்தையாக, சிந்துவின் ஒவ்வொரு வளர்ச்சியை, இன்றுவரை பொக்கிசமாக மனதில் பதித்து கொண்ட, நாராயணணின் முகம் கோபத்தில் கடுகடுக்க, சிந்துவை வன்மையாகக் கண்டித்துக் கொண்டிருந்தார்.
சிந்து செய்த காரியத்தை கேள்விப்பட்டதும், பெரியவரால் தாள முடியவில்லை. பலபேர் மதிக்கும் அந்தஸ்த்தில் இருப்பவர், இயல்பிலேயே பாசம் மிகுந்தவர். மகள் என்ற உரிமையில் மட்டுமே, சிந்துவை பார்ப்பவரின் மனநிலை மிகுந்த வேதனையில் தத்தளிக்கத் தொடங்கியது.
சிந்துவின் காதல் கல்யாணம் போன்ற அவசரபுத்தியில் கூட, தனது வளர்ப்புதான் சரியில்லையோ என்று தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டவர். என்ன செய்தால் மகளின் வாழ்வு சீரடையும் என்று ஒவ்வொரு நிமிடமும் மனதிற்குள் உரு போட்டுக் கொண்டிருப்பரிவரின் அன்பு அங்கலாய்ப்பாக வெளிப்பட்டது.
இப்பொழுது இவரது கண்டனத்திற்கு தலை குனிந்து நின்றால், நிச்சயம் தன் முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று முடிவில், வளர்த்தவரையே எதிர்த்து பேச ஆரம்பித்தாள் சிந்து.
“எனக்குனு ஒரு அடையாளம் தேடிக்கதான், என் அண்ணன் பேச்சையும் தட்டிக் கழிச்சுட்டு, கிராமத்துக்கு வந்தேன். இன்னும் எத்தன நாளைக்குதான், நீங்க சொல்றத கேட்டு உங்க வீட்டுல இருக்குறது?” சற்றே வேகமாக பேசிவிட,
“அப்படியெல்லாம் உன் இஷ்டத்துக்கு அனுப்பி வைக்க முடியாது சிந்தா… நாங்க இருக்குற தைரியத்துலதான் மச்சான், உன்னை இங்கே அனுப்பி இருக்காரு. ஒழுங்கா பெரியவங்க பேச்சை கேட்டு இங்கேயே இருக்கப்பாரு… பட்டணத்து வாசம், பெரியவங்கள எதிர்த்து பேச சொல்லிக் குடுத்திருக்கா?” தமிழ் செல்வன் தனது முறையாக முறைப்புடன் கடிந்து கொண்டான்.
“கொஞ்சநாள் பொறு ராசாத்தி… உனக்கு என்ன தெரியும்னு நீ துள்ளிக்கிட்டு திரியுற? இங்கே உள்ள பாதுகாப்பு வெளியே போன கிடைக்குமா? வேலியில போற ஓணானை வேட்டியில எடுத்து விட்டுகிட்ட கதையாட்டம் ஆகிடக் கூடாது… உனக்கான ஒரு ஏற்பாடு நடக்காம, நீ வெளியே போக, நாங்க விடமாட்டோம்” தனது முடிவை, உறுதியாகச் சொல்லி விட்டார் தேனு பாட்டி.
“நான் தனியாதான் வாழப்போறேன், என் பிள்ளைதான் என்னோட எதிர்காலம். இந்த முடிவுல எந்த மாற்றமும் இல்ல” என்று அவள் பிடிவாதத்தில் நிற்க, மரகதம் சிந்துவை அடிக்க முன் வந்துவிட்டார்.
“யார் சொல்லிக் குடுத்த பழக்கம்டி இது, பெரியவங்க முன்னாடி குரல் ஒசத்தி பேசுறது?” கோபமாக மரகதம் கையை தூக்கி விட்டார்.
நடப்பது அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அலமேலு. தான் மனதில் நினைத்ததை இவள் புரிந்து கொண்டு விட்டாளோ? எங்கே அனைவரும் வற்புறுத்திக் கேட்க, தன்னை இவள் கைகாட்டி விடுவாளோ என்ற குற்ற உணர்வு மனதில் அலையடிக்க, பேச்சின்றி நின்று விட்டார்.
“அவளை அடிக்காதே தங்கச்சி… சின்ன வயசுல இவள கண்டிச்சு வளர்க்காம போனதுக்கு, எனக்கு தண்டனை குடு… அப்படியாவது, இந்த பொண்ணுக்கு, எங்க மனசு புரியுதான்னு பாப்போம்” ஆற்றாமையில், மனம் வெறுத்துப் போய், அமர்ந்து விட்டார்.
வளர்த்தவரின் வேதனை, மனதை அசைத்து விட, “உங்க வளர்ப்பு எப்போவும் தப்பா போனதில்ல மாமா… உண்மைய சொல்லிடறேன், தமிழ் மாமாவுக்கு கல்யாணம் முடியுற வரைக்கும், நான் ஒதுங்கி இருக்குறது நல்லது” அவரின் மடியில் தலை சாய்த்து, தன்னை அலைகழித்த விஷயத்தை சொல்லி விட்டாள் சிந்து.
“நீ இந்த வீட்டுப் பொண்ணுடா… ஒரு தடவ எங்கள விட்டுப் போய், நீ பட்டபாடு போதும். யார் என்ன சொன்னாலும் உன்னை, இங்கே இருந்து அனுப்ப மாட்டேன்” ஆதூரமாக அதே சமயத்தில் கண்டிப்புடன் சிந்துவின் தலை தடவி சொல்ல,
“இல்ல மாமா… தனியா நடக்க எனக்கும் ஆசையா இருக்கு. அளவுக்கு மீறி எல்லோரும் தாங்கி, என்னை சோம்பேறி ஆக்காதீங்க மாமா” என்றவளின் தோற்றத்தில், வீம்பு பிடிக்கும் சிறுவயது சிந்துவைக் கண்ட நாராயணன்,
“நீ என்ன செய்ய நினைக்கிறியோ, அத இங்கே இருந்தே செய். நான் தடுக்கல…” என்றவர், பெண்ணின் பேச்சில் சமாதானம் ஆகாமல் முகத்தை திருப்பிக் கொண்டார்.
ஒரு முடிவில்லாமல் பேச்சு அந்தரத்தில் தொங்கி நிற்க, அனைவரும் தங்களது கண்டனத்தை ஒருசேர அமைதியாக இருந்தே வெளிப்படுத்தினர்.
“கட்டினவன் சரியில்லன்னு தள்ளி நிக்கிறவ, ஏன் அவனை நினைச்சு வாழ்க்கை பூராவும் இருக்கனும். இன்னொரு வாழ்க்கையை நல்லபடியா அமைச்சு குடுக்குறோம் ஆத்தா… உன் மனசுல எந்த வேறுபாடும் இல்லாம இங்கனயே இரு” தேனு பாட்டி தன் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்தி, சிந்துவின் மனதை மாற்றப் பார்த்தார்.
“என்னதான் நல்லவனா தேடிபிடிச்சாலும், வர்றவன் ஒரு பொழுதாவது, என்னை குத்திக் காமிக்காம இருக்க மாட்டான், அம்மாச்சி! யாரோ ஒருத்தன் கூட, வாழுற வாழ்க்கைக்காக என் பிள்ளைய, நானே ஒதுக்கி வைச்சு பார்க்க வேண்டி வரும்.
எனக்கு அந்த சக்தி இல்ல. என்னோட அவசரபுத்திக்கு தண்டனைதான், நான் தனியா வாழப் போறது. அந்த வாழ்க்கைக்கு ஒரு தூண்டுகோல்தான் என் பையன். எனக்கு இன்னொரு கல்யாணம் வேண்டாம்.” அழுத்தமாக தனக்கான முடிவுகளை சிந்து, தயங்காமல் உரைத்து விட,
“அந்த யாரோ ஒருத்தன், நானா இருந்தாலும் உன் பதில் இதுதானா சிந்தா?” என்று கேட்டது தமிழ் செல்வனே…
இப்படி ஒரு கேள்வி அவனிடமிருந்து வரும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை. ஆனாலும் இதுவும் நல்ல முடிவாக தெரிய, பெரியவர்கள் யாரும் மறுப்பு சொல்லவில்லை. அனைவரின் மனமும் நொடியில் அதனை நடத்தி பார்க்க ஆசை கொண்டது.
ஒன்றாய் வளர்ந்தவர்கள், ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள், இதை விட வேறன்ன பொருத்தம் பார்க்க வேண்டும் என்றே தேனு பாட்டியும் தனது உளமார்ந்த சம்மதத்தை பேரனை நெட்டி முறித்தே தெரிவித்தார்.
“என் பேராண்டிக்கு இணை யாரும் வரமுடியாது… எம்பூட்டு அழகா யோசனை பண்ணி இருக்கான்” என்று சிலாகித்துக் கொண்டவர், பதிலுக்காக பேத்தியின் முகத்தைப் பார்க்க, பாறாங்கல்லை முழுங்கியவளைப் போல் அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள் சிந்து.
“என்னை மன்னிச்சிருங்க மாமா… தெரிஞ்சோ தெரியாமலோ உங்களுக்கு, என் மேல ஆசை வர, நானே காரணமாயிட்டேன்” பதட்டத்துடன் சிந்து தன்நிலை விளக்கம் கொடுக்க முற்பட,
“மன்னிப்பு எல்லாம் எதுக்கு சிந்தா? முன்னாடியே, எனக்குள்ள இந்த எண்ணம் இருந்ததுதான். எப்போ உனக்கு கல்யாணமாச்சோ அப்போவே நான், அந்த நினைப்ப மறந்திட்டேன்” என்று சொல்ல, அனைவரும் வாயடைத்துப் போய் நின்றனர்.
“இது எங்க அண்ணனுக்கும் தெரியுமா? மாமா!”
“ம்ம்… தெரியும் ஏன் கேக்குற?”
“அன்னைக்கு, அவங்க வீட்டுல கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல, இழுத்தடிச்ச நேரத்துல, நடந்தத கெட்ட கனவா மறந்திடு சிந்து, எந்த கேள்வியும் கேக்கமா, உன்னை ஏத்துக்க, என் மாப்பிள்ளை இருக்கான்னு, அண்ணே பெருமையா சொல்லிச்சு… ஆனா என் மனசுல அப்படி ஒரு எண்ணம் இல்லையே மாமா…” என்றவளின் கரகரத்த குரல், அன்றைய நாட்களுக்கு சென்று, நடந்தவைகளை அசை போட்டுக் கொண்டது.
வயதில் சிறிய பெண்தான். விவேகம் இல்லாதவள்தான். ஆனாலும் மனதில் பதித்துக் கொண்ட முதல் நேசம், நெஞ்சில் வலியோடு ஆழமாய் ஊன்றிக் கொள்ள, அதனை வேரோடு பிடுங்கி எறியவும் முடியாமல் அத்தனை துக்கப்பட்டாள் சிந்து.
“இப்பவும் சொல்றேன் சிந்தா… உன் சம்மதம்தான் வேணும் எனக்கு. கொஞ்ச நாள் கழிச்சு கூட கல்யாணத்தை நடத்திக்கலாம்” மீண்டும் தமிழ் வலியுறுத்த,
“என் கனவுல கூட, உங்கள அப்படி நினைக்க மாட்டேன் மாமா… என் அண்ணனுக்கும் உங்களுக்கும் இடையில நான் எந்தவொரு வித்தியாசத்தையும் பார்த்ததில்ல… சின்ன வயசுல அவர் கூட விளையாடினத விட, உங்க மேல, உப்பு மூட்டையா சவாரி செஞ்சதுதான் அதிகம்.
என் பன்னெண்டு வயசு வரைக்கும் பெரிய மாமாவ, அப்பான்னு கூப்பிட்டது, எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. பள்ளிகூடத்துல என் அண்ணேன்னு, உங்களைத்தானே நான் கை காட்டியிருக்கேன்” என்று தனது உள்ளத்தை மறைக்காது சொல்லி விட்டாள்.
ஐந்து வயதில் தனக்கு அப்பா இல்லையா என்று சிந்து கேட்டிருக்க, பிஞ்சு மனதில் பாரத்தை ஏற்ற விரும்பாமல், நாராயணன் தன்னை அப்பா என்றும் அம்மா மற்றும் அண்ணனாக மனைவியையும் மகனையும் அவளுக்கு கை காட்டி இருந்தார்.
அந்த வயதில் விழுந்த விதை, அப்படியே மாறாமல் தொடர, பெரியவளாகி பிறந்த வீட்டிற்கு வந்த பிறகுதான், உண்மையான உறவின் நிலையை விளக்கிக் கூறி, மாற்றி அழைக்க வைத்திருந்தார் மரகதம். சிந்தாசினியும் சிந்துவாக மாறியது, அந்த காலகட்டத்தில்தான்.
“அறியா வயசுல செஞ்சதெல்லாம் கணக்குல எடுத்துக்க கூடாது ராசாத்தி! கட்டிக்க வேண்டிய முறையும் இருக்கப் போயி தானே ஆசைபட்டிருக்கான்” தேனு பாட்டிக்கு பேத்தியை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்று அவசரம் அவரது பேச்சில் தென்பட்டது.
“யார் எடுத்து சொன்னாலும், என்னால வேற நினப்புல ஒரு நொடி கூட நினைக்க முடியாது. காலத்துக்கும் மனசுல சஞ்சலசத்தோட உறவா இருக்குறத விட, தூரமா இருந்து, அவர் நல்லா வாழ்றத வேடிக்கை பார்க்கிறேனே? உறவு விட்டுக் போகாம இருக்க, என் உணர்வுகளை பலி கொடுக்க நான் விரும்பல மாமா?” பரிதவிப்புடன் தமிழ்செல்வனை பார்த்து சொல்ல, அவனுக்கும் சிந்துவின் நிலை தெளிவாக விளங்கியது.
இவள் சொல்வதும் சரிதானே? நண்பனாக, உடன் பிறந்தவனாக இருந்தவனை, காதலனாக பார்க்கும் கலாச்சார சீர்கேடில் வளர்ந்தவர்கள் அல்லவே இவர்கள்… சின்னஞ்சிறு வயதில் இவள் முகத்தில் சிரிப்பை காண்பதற்காகவே,
“இந்த அண்ணன் பக்கத்துல இருக்கும் போது, நீ எதுக்கும் பயப்படக் கூடாது” என்று அவளுக்கு தைரியம் அளித்தவன்.
அவளை விட ஏழு வயது பெரியவனே ஆனபோதிலும், அவள் விருப்பத்திற்கு செவி சாய்த்தே, தன் உறவினை மாற்றிக் கொண்டவன்.
இப்பொழுது இல்லை என்றாலும், சிறு வயதில் அவனும்தானே, அவளை தங்கையாக பாவித்து வளர்ந்திருக்கிறான்.
சிந்து சொல்வதை உணர்ந்து கொண்டவன், தன்னை தானே நினைத்து வெட்கிக் கொண்டான். அவளுக்கு இருக்கும் பக்குவம் தனக்கு இல்லாமல் போய் விட்டதே என்று மனதோடு நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது.
சிந்துவை புரிந்து கொண்டவனுக்கு, அவள், தனக்கு தங்கை என்ற நினைப்பே அத்தனை ஆனந்தம் அளிக்க, இந்த உணர்வைதான், தான் காதல் என்று தவறாக எண்ணிக் கொண்டோமா என்ற சந்தேகமும் வலுப்பெற்றது.
முடிவில் அவளின் மேல் தனக்கு இருப்பது உடன் பிறந்தவனின் பாசமே அன்றி காதல் அல்ல என்று நடப்பை உணர்ந்து கொண்டான்.
“நீ சொன்னது சரிதான் சிந்தா… உன்னோட நெலம எனக்கு நல்லாவே புரியுது. நான்தான் தப்பு கணக்கு போட்டு அர்த்தமில்லாத ஆசைகள மனசுல வளர்த்துக்கிட்டேன். இனி நான் தெளிவாகிட்டேன். என் பேச்சை மறந்திடுடாம்மா” என்று சிலாகித்து சொல்ல, இவர்களின் பேச்சில் அனைவரும் நெகிழ்ந்திருந்தனர்.
பிள்ளையின் சிணுங்கல், அனைவரையும் நடப்பிற்கு கொண்டு வர, பிரச்னையை மறந்து விட்டு, அவரவர் போக்கில் உள்ளே சென்று விட்டனர். ஆனால் அலமேலுவிற்கு சிந்துவிடம் பேசியே ஆக வேண்டும் என்ற அவசியம் இருக்க, அவளை நாடிச் சென்றார்.
சிந்துவின் விருப்பம் நிறைவேறுவதும் அவளது தனி ஆவர்த்தனம் சாத்தியமாவதும் இன்னமும் கேள்விக்குறியே???
,