cn- 17

cn- 17

நிலவு – 17

ஒட்டன் சத்திரம் காய்கறி சந்தையில் அமைந்துள்ள வணிக வளாகம்பதினாறுக்கு இருபது பரப்பளவு கொண்ட கட்டிடம்,  தமிழ் காய்கறி மண்டி மற்றும் காகித உறைகள் (காக்கி பேப்பர் கவர்கள்) என்ற பெயர் பலகையை தாங்கி நின்றது.

மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்று வட்டாரத்தில் விளையும் அனைத்து வகை காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவித்து, நேரடியாக மொத்த விற்பனை செய்வதை தந்தை நாராயணனுடன் ஆரம்பம் தொட்டு செய்து வருபவன் தமிழ்செல்வன்.

திருமணத்திற்கு பிறகு மனைவி கயல்விழி வேலைக்கு செல்கிறேன் என்று ஒற்றை காலில் நிற்க, அவளுக்கென தனியாக காகித உறைகள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை ஆரம்பித்து கொடுத்து விட்டான்.

வெளியிடத்தில் வேலைக்கு அனுப்புவதை குடும்பத்தார் அனுமதிக்க மாட்டார்கள் என்பது ஒரு புறமிருக்க, இதன் காரணமே அவளும் சில நாட்கள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நடமாட, அவளின் விருப்பத்திற்கு நியாயம் செய்யும் பொருட்டு இந்தத் தொழிலில் இறங்கினான்.

எப்படியும் கூடுதலாக வேறு வகையில் வருமானம் ஈட்டும் முறையை யோசித்துக் கொண்டு இருந்தவனுக்கு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல் இந்த புதிய தொழில் அமைந்து விட்டது. இதனை கயல் விழியின் மேற்பார்வையில் விட்டு விட்டு, அவளுக்கு உதவியாக சிந்துவையும் அதில் கோர்த்து விட்டான். அவளும்தானே வருமானம் ஈட்ட வேண்டும், தன் சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்று மிகுந்த முயற்சிகளை எடுத்து வருகிறாள்.

வயதுப் பெண்களை வெளியிடத்திற்கு அனுப்பாமல் தொழில் அமைத்துக் கொடுத்ததில் வீட்டுப் பெரியவர்களுக்கும் ஏக சந்தோஷம். பெண்களின் பாதுகாப்பிற்கும் பங்கம் வராமல் அதே சமயத்தில் அவர்களின் ஆசையையும் நிறைவேற்றி வைத்த, இந்த ஏற்பாடு அனைவருக்கும் பிடித்துப் போனது.

வலையபட்டி கிராமத்தில், அவர்களுக்கு சொந்தமான கோடவுனில் நலிந்த ஆதரவற்ற தொழிலாளர்களை வைத்து அனைத்து அளவிலான காகித உறைகள் தயாரிக்கப்பட,  இவர்களது காய்கறி மண்டியில், நேரடி விற்பனை நடைபெறுகிறது.

காலையில் ஒன்பது மணிக்கு கடைக்கு வரும் சிந்து, கணக்கு வழக்குகளை மெதுவாக, அதே சமயத்தில் தெளிவாக கற்றுக் கொள்ளப் பழகிக் கொண்டாள்.

பள்ளி இறுதியாண்டில் படித்த கணக்கு பதிவியல் அவளுக்கு நன்றாக கைகொடுத்தது. காகிதஉறை தயாரிக்கும் இடத்து வேலைகளை மேற்பார்வை பார்த்து விட்டு, கயல்விழி கடைக்கு வந்து சேர்வதற்கு நண்பகலைத் தாண்டி விடும்.

மதிய உணவோடு வரும் கயல், சிந்துவுடன் இணைந்து கொள்ள, வரவு செலவும் வியாபாரமும் எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

இரவு ஏழு மணிக்கு நாராயணன், தமிழ்செல்வன் இருவரும் வந்து, ஒருவர் கடையில் இருக்கவும், மற்றவர் பெண்களை இருவரையும் அழைத்து செல்லவும், அன்றைய வேலை நேரம் முழுமை அடையும்.

குறிப்பிட்ட தொகையை சம்பளமாக சிந்துவிடம் தமிழ் கொடுக்க, வேண்டாம் என்று மறுத்து விட்டாள்.

“அப்பா மாசாமாசம் கைசெலவுக்குன்னு பணம் குடுக்குராரு… பத்தாததுக்கு அண்ணனும் பாங்க்ல பணம் போட்டு விடுது. பேரனுக்கு வர்ற செலவை எல்லாம் அம்மா சத்தமில்லாம செஞ்சு முடிக்கிறாங்க. இதுக்கு மேலயும் நான் சம்பளம் வாங்கி என்ன செய்யப் போறேன் மாமா?” என்று தமிழிடமே கேட்க,

“உனக்குனு வருமானம் வேணாமா சிந்தா? நீ செய்யுற வேலைக்குதானே சம்பளம் குடுக்குறேன்னு சொல்றேன்” என்று தமிழ் நியாயத்தை எடுத்துக் கூற,

“வீட்டுல இருக்குறதுக்கு பதிலா, அங்கே போயி உட்கார்றேன். இதுக்கு சம்பளம் வாங்கிகிட்டா, திங்குற சோறு ஜீரணம் ஆகாது மாமா” என்று ஒரே பேச்சில், முடித்து வைத்தாள். 

தமிழின் திருமணம் முடிந்து ஒன்றரை வருடங்கள் கழிந்த நிலையில்அன்றைய தினம், காலை நேர பரபரப்பு குறைந்து, சற்று நிதானமாக பேப்பர் கவர்களின் இருப்பை சிந்து கணக்கிட்டு கொண்டிருக்க, தமிழ்செல்வன் அங்கு வந்து சேர்ந்தான்.

“நல்ல சேதிதானே மாமா? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள் சிந்து.

கயல்விழிக்கு நாள் தள்ளிப் போயிருக்க, வீட்டிலேயே கணித்துக் கொண்டவர்கள், உறுதிப்படுத்திக் கொள்ள மருத்துவமனைக்கு இன்று சென்று வந்திருந்தனர். அதனையே தற்போது சிந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

“சந்தோஷமான சேதிதான் சிந்தா! மூணு மாசம் ரெஸ்ட்ல இருக்க சொல்லி இருக்காங்க… மச்சானுக்கும் இப்போதான் ஃபோன்ல சொன்னேன்” புன்னகை பூரிக்க தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் தமிழ்.

“நல்ல கூட்டாளிங்க மாமா நீங்க ரெண்டு பேரும்… உங்க மச்சானுக்கு அப்புறம்தான் பிள்ளை பெத்துப்பேன்னு நீங்களும் சாதிச்சுடீங்க! இந்த ஒன்றரை வருசத்துல அம்மாச்சிதான் புலம்பித் தள்ளிருச்சு”

“ஹாஹா… மச்சான கொஞ்சம் பின்னுக்கு தள்ளினாலும் என்னை வயாசானவன்னு முத்திரை குத்திட்டு, வாழ்நாள் முழுக்க வாரிகிட்டே இருப்பான்என்று கேலியோடு சொன்னவன்,

என்னோட அண்ணனா அவன பாக்குறேன்… எந்த ஒரு நல்லதும், அவனுக்கு பிறகு எனக்கு வந்தா போதும்” என்று உள்ளார்ந்து சொன்னான்.

“தங்கச்சி வளைகாப்பு விஷேசத்துக்கு, இன்னும் நாலு நாள்தான் இருக்கு. நீ எப்போ கெளம்புற? அம்மா அப்பா உனக்காகதான் வெயிட் பண்றாங்க சிந்தா!” சென்னையில் மிதுனாவிற்கு வளைகாப்பு நடத்த நாள் குறித்திருக்க, அங்கு செல்வதற்கான விவரத்தை கேட்டுக் கொண்டிருந்தான் தமிழ்.

“ரெண்டு நாள் கழிச்சு கெளம்புறேன் மாமாஎல்லாரும் போயிட்டா, உங்க ஒத்தாசைக்கு ஆள் வேணாமா?”

“நான் இங்கன இருக்குற கூட்டாளிகள வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன் சிந்தா… கயலோட துணைக்கு, வீட்டுல பாட்டி இருக்கு. நீ புறப்படுற வழிய பாரு. டிரைவர அனுப்பி வைக்கிறேன். கார்ல போயிட்டு வந்துடலாம்என்றவனின் பேச்சை, மறுக்க முடியாமல் சரி என்று தலையாட்டினாள்.

தொலைதூர பயணத்திற்கென மாருதி வேகன்ஆர் புதிதாக வாங்கியிருக்க, அதில் சென்னைக்கு சென்று வருவது என முடிவு செய்யபட்டது.

சென்னை என்று சொன்னாலே, சிந்துவிற்கு இப்பொழுதும் வேப்பங்காயாக கசக்கின்றது. அவளது அகமும் புறமும் அங்கு பட்ட அவஸ்தைகளை நினைத்து இன்னமும் கொதிப்படைவதை ஏனோ தடுத்து நிறுத்த முடிவதில்லை.

அதிலும் தான் மருமகளாக வாழ்ந்த வீட்டில் போய் நிற்க வேண்டுமென்று நினைத்தாலே, அவள் பட்ட அவமானங்கள் நிராகரிப்புகள் எல்லாம் ஒன்றாக படையெடுத்து மனதை பந்தாடி விடுகின்றன. 

இதன் காரணம் தொட்டே, தமிழின் திருமணம் முடிந்த பிறகு தயா தன்னுடன் வந்து விடுமாறு, தாயையும் தங்கையையும் வற்புறுத்தி அழைக்க, சிந்து வம்படியாக மறுத்து விட்டாள்.

வளர்ப்பு பெற்றோரின் வாஞ்சையும் உடன் சேர்ந்து கொள்ள, தயாதான் அவர்களை விட்டுச் செல்லும்படி ஆகிற்று. அதற்கடுத்த ஒன்பது மாதம் கழித்து, மிதுனா தாய்மை அடைந்துவிட, மரகதம் மருமகளை பார்த்துக் கொள்ளவென சென்னைக்கு வந்து விட்டார்.

அந்த சமயம்தான் தமிழ் புதிய தொழில் தொடங்கி, சிந்துவும் அங்கே போக வர ஆரம்பித்திருக்க, மரகதம் மகளை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இப்படியாக சிந்து சென்னை செல்வதை தவிர்த்த வண்ணமே இருக்க, இப்பொழுது சென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில், நின்றாள்.

இவர்களின் பயண விவரத்தை தமிழ் மரகதத்திடம் தெரிவித்து விட, அவர் மகளுக்கு அழைத்து விட்டார்.

“வீட்டு மனுசியா, ரெண்டு நாளுக்கு முன்னாடி வந்து சேர மாட்டியா சிந்து? உங்க அண்ணன் உன்னை கூப்பிட்டு அலுத்துப் போயிட்டான்டி… அப்டி என்ன பிடிவாதம் உனக்கு?” என்று சத்தம் போட, மகளிடம் மௌனமே பதிலாக வர, அடுத்தடுத்த கேள்விகளுக்கும் சரியான பதில் வராமல் போனதில், கோபத்துடன் பேச்சை முடித்துக் கொண்டார் மரகதம்.

“என்ன சொல்றா அத்த? இங்கே வர இன்னும் அவ நல்லநாள் பார்த்துட்டு இருக்காளா?” என்று கேட்ட வண்ணமே மெதுவாக வந்து அமர்ந்தாள் மிதுனா.

அடுத்த இரண்டு நாட்களில் ஒன்பதாவது மாதம் ஆரம்பிக்கும் நிலையில் இருக்க, சலவையகத்திற்கு செல்வதை நிறுத்தி, இரண்டு நாட்களாக வீட்டில் ஓய்வாக இருந்து வருகிறாள் மிதுனா.

தொழில் ஆரம்பித்த ஒரு வருடத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு ஆகியிருக்க, வருமானமும் எதிர்பாராத அளவில் மிகையாகவே வர ஆரம்பித்திருந்தது. அட்டவணை போட்டு ஆட்களை நியமித்து, திருப்தியான முறையில் வேலைகளை முடித்து தருவதில், மிதுனா மிகுந்த பிரயத்தனப்பட்டிருக்க, அது நல்ல முறையில் பலன் அளித்தது.

ஒரு வருடத்திற்கு லீசிற்கு விட்ட ராமமூர்த்தியும் திரும்பி வந்து, தொழிலின் அதிவேக வளர்ச்சியைக் கண்டு வியந்து பாராட்டினார். இவரிடம் ஒப்பந்தம் முடிந்து விட்டால், புதிய உலர்சலவை கூடத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகளில் தயானந்தன் முயன்று கொண்டிருக்க, பெரியவர் தடுத்து விட்டார்.

“வேலை செய்யுறவங்களையும், கஸ்டமர்ஸையும் உன் பக்கம் நீ நிச்சயம் திருப்பிக்குவ… அடுத்து நான் சும்மா உட்காரவா? அது போக எனக்கு இது சைடு பிசினஸ்தான்.  உனக்கே இந்த தொழில முழுசா குடுக்குறேன். பேர் மாத்தி லோனுக்கு அப்ளை பண்ணு” என்று மனமுவந்து சொல்லிவிட, கணவன் மனைவி இருவருக்கும் மனதிற்குள் ஆர்பாட்டம்தான்.

யது ட்ரை கிளீனர்ஸ் என்று பெயர் மாற்றி, இருபத்தைந்து சதவிகித அரசு மானியத்துடன் வங்கிக் கடனும் கிடைக்க, அவர்களின் சொந்த தொழிலாக அந்த சலவையகம் உருவெடுத்தது.  

அதற்கடுத்து முன்பை விட, அதிக முயற்சிகளை இருவரும் மேற்கொள்ள, குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கொண்டது. நகரின் மையப் பகுதியில் அமைந்த அலுவலகம், ஹோட்டல், தங்கும் விடுதிகள் போன்ற அனைத்து வர்த்தக மையங்களிலும் சலுகை முறையில் முதலில் சேவை செய்து கொடுக்க, பல நிறுவனங்கள் தானாக தேடி வர ஆரம்பித்தது.

எந்த ஒரு இடத்திலும் தரம் நிலையாக இருந்தால், அதற்கான செலவினம் அதிகமானாலும் பின்பற்ற செய்வர். வேலையில் நேர்த்தியும், காலம் தவறாமையும் இவர்களின் நிறுவனத்தை அடையாளப் படுத்த, இரண்டு வருட வளர்ச்சியில் யது ட்ரை கிளீனர்ஸ் பிரபலமடையத் தொடங்கியது.

மிதுனா இல்லாத பொழுதும் பொறுப்பாக கவனித்துக் கொள்ள, நம்பிக்கையான ஆட்களும் அமைந்து விட, தற்பொழுது அவளால் நிம்மதியாக வீட்டில் ஓய்வெடுக்க முடிந்தது.

சிந்துவை தன்னுடன் தொழில் முறையில் இருத்திக் கொள்ள மிதுனாவும் வற்புறுத்தி சென்னைக்கு அழைக்க, அவளோ செவி சாய்க்கவில்லை. மகளின் இந்த அசட்டுப் பிடிவாதம் மரகதத்திற்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்த, மருமகளிடத்தில்  அதனை வெளிப்படுத்தினார்.   

“இந்த பொண்ண எந்த வகையில சேர்க்கிறதுன்னு தெரியல…  ஊர் உலகத்துல நடக்காததா, இவளுக்கு நடந்து போச்சு? இப்படி முறுக்கிட்டு அங்கேயே உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்? கொஞ்சமாவது நன்றியுணர்ச்சி வேண்டாமா, மிதுனா…?” என்றவருக்கு, மகளின் பிடிவாதம் அத்தனை அலுப்பை ஏற்படுத்தியது.  

“நீங்க இத சொன்னா, நானும் பாஸ்கரை சொல்ல வேண்டி வரும் அத்த… என்ன எப்போ நடக்கணும்னு இருக்கோ, அப்போ நடக்கட்டும். அதுவரைக்கும் வேடிக்க பார்ப்போம்” மிதுனாவிற்கும் சிந்துவின் செயல் பிடித்தமில்லை என்றாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

பாஸ்கரைப் பற்றி குறிப்பிடவும் மரகதம் முகத்தை சுருக்கினார்.

“பதினைஞ்சு நாளுக்கு ஒருதடவ பேசுறான். இங்கேயே வந்துருடான்னு சொன்னா, மூணு வருஷம் எழுதிக் குடுத்திருக்கேன்னு சாக்கு போக்கு சொல்லி, பேச்சை மாத்துறான். புனேல இருக்கேன்னு சொல்றவன், தங்கி இருக்குற அட்ரசையும், வேலை செய்யுற இடத்தையும் பத்தி இதுவரைக்கும் ஒண்ணும் சொல்லல… இவன பத்தி தெளிவான முடிவுக்கு வர முடியல” பெருமூச்சுடன் தனது ஆதங்கத்தை மிதுனாவும் சொல்லி முடித்தாள்.

ஏனோ மரகதத்திற்கும் பாஸ்கரைப் பற்றி இன்னமும் நல்ல விதமாக நினைக்க முடியவில்லை. மனைவியையும் பிள்ளையையும் விட்டுச் சென்றவனை எந்த கண்ணோட்டத்தில் நல்லவனாக பார்க்க?

மருமகளின் முன்னாள் அவனை நிந்தித்துப் பேசவும் முடியவில்லை. சிந்து, அனைவரின் முன்னிலையில் ஒரு கேள்விக்குறியாகவே இருப்பதை பார்த்து மனம் தவிக்கதான் செய்கிறது. இதற்கு விடிவு காலம் என்று வருமோ என்று அடிக்கடி மனதோடு புலம்ப ஆரம்பித்து விடுகிறார் அந்த அப்பாவித் தாயார்.

மனைவியின் தொழில் முயற்சியில் தன்னாலான உதவிகளை செய்து, அவளுக்கு பக்கபலமாக தாங்கியதில் தயானந்தன் பங்கு அசாத்தியமானது. சொந்த தொழிலை எடுத்துச் செய்தாலும், தனது கேன் குடிநீர் சப்ளையையும் தொடர்ந்து செய்து வந்தான்.

மிதுனா தன்வசம் வாங்கியிருந்த கடன் தொகையையும் மாத தவணையாக மாற்றி சிறிது சிறிதாக கட்டி வருகிறான். இனி அவளது அடமான நகைகளை திருப்புவது மட்டுமே எஞ்சியிருக்க, மனபாரங்கள் அகன்ற, நிம்மதியான வாழ்க்கை முன்பை விட சுவாரசியமாகியது.

“நான், உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். நீங்களும் எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்களாம்…” மனைவியின் கொஞ்சல் பேச்சில், காதலில் தத்தளிப்பவனுக்கு அடியோடு வீழ்ந்த நிலைதான்…

ஆரம்பிச்சிட்டியா… அஞ்சு நாள் ஹோட்டல்ல வாங்கி சாப்பிடும் போது கால ஆட்டிட்டு தானே இருக்க? ரெண்டு நாள் சமையல் செய்ய மாட்டியா? எனக்குதான் எப்போவும் வேலை குறையிறதில்ல மனைவியின் கொஞ்சலுக்கு நொடித்துக் கொண்டாலும், கைவேலைகளை செய்து கொடுப்பதில் அவன் தவறுவதில்லை.

“நீங்களா தேடிகிட்ட வேலைக்கு, இப்போ புலம்பி பிரயோஜனமில்ல, தயா சார்!” என்றவள் வலுக்கட்டாயமாக சமையலறைக்குள் இழுக்க,   

“வேண்டாம் தாயே! உனக்கு எனக்கும் அந்த அடுப்படியிலதான் ஏழரை பிடிக்குது. சொந்தமா ட்ரை கிளினீங் வச்சிருந்தும், டெய்லி நான்தான், நம்ம துணிகள துவைச்சுப் போட்டுட்டு இருக்கேன்… அதோட நிறுத்திடுவோம். இதுக்கும் மேல போனா என் வருங்காலம் என்னை காறித் துப்பும்” ஏகத்திற்கும் தயா புலம்பி விட்டான்.

அது யார் சார்? உங்க வருங்காலம்?

“என் பிள்ளைங்கதான்… நாளைக்கு என் வரலாற எழுதும் போது, என்னோட நாலு பசங்களும் ரெண்டு பொண்ணுங்களும் வந்து, ஷேம் ஷேம்னு சொல்லிடக் கூடாது பாரு” என்றவனின் பேச்சிற்கு, சிரிப்பு வந்தாலும் முறைத்துக் கொண்டு,

“நாட்டை பத்தி நினைக்காம, இப்டி பேசினா தேசதுரோகின்னு பிடிச்சு உள்ளே தூக்கிப் போட்ருவாங்க தயா… உங்கள பிடிச்சு குடுக்குற இன்ஃபார்மரா நான் மாறிடுவேன்” மிரட்டலில் இறங்கினாள் மிதுனா.

இருவரின் மனமும் தெளிந்த நீரோடையாக இருக்க, வம்புப் பேச்சில் ஒருவரையொருவர் வாரிக் கொள்வதில் போட்டி போட்டுக் கொண்டார்கள்.

மனைவியின் கர்ப்ப காலத்தில் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து, மனைவியை மிக பத்திரமாய் தாங்கிக் கொண்டான் தயானந்தன்.

தன் உடன் பிறப்புகளின் கர்ப்பகால இன்னல்களை கண்முன்னே பார்த்து பழக்கப் பட்டவனுக்கு, மனைவியை தாங்கிக் கொள்வதில் அத்தனை சிரமம் தோன்றவில்லை. மரகதமும், மருமகளின் மசக்கைக்கு ஏற்ற, உணவுகளை பாசத்தோடு பரிமாற, மிதுனாவிற்கு கர்ப்பகாலம் பொற்காலமாக கழிந்தது.

மனைவியின் வளைகாப்பை விமரிசையாக நடத்த தயானந்தன் ஆசை கொண்டாலும் மிதுனா தடுத்து விட்டாள். புதிதாக ஆரம்பமாகி இருக்கும் வங்கிக் கடன் மற்றும் தமிழ்செல்வன் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை, அதோடு சிந்து பாஸ்கர் பிரச்சனை என்ற காரணங்களைக் காட்டி மறுத்து விட்டாள்.

பிறந்த வீட்டு சார்பாக சீர்வரிசை செய்வதற்கோ, தன்னைத் தாங்கிப் பார்ப்பதற்கோ யாரும் இல்லாத அனாதரவான நிலை, மிதுனாவை வெகுவாக தவிக்கச் செய்ய, அவளது மறுப்பிற்கான இந்த உண்மையான காரணத்தை அவள் வெளிப்படுத்தவில்லை.    

அவளது அக்கா சாந்தினி பாசத்தை காட்டுபவள்தான் என்றாலும் பொறுப்பை கையில் எடுத்துச் செய்யும் அளவிற்கு, பெரிய மனமில்லை அவளுக்கு… சூழ்நிலையை காரணம் சொல்லியே, எப்பொழுதும் தள்ளி நிற்பதை வாடிக்கையாக்கிக் கொண்டவளிடத்தில், எவ்வாறு பிறந்த வீட்டுக் கரிசனத்தை எதிர்பார்க்க முடியும்?

மரகதமும் தயாவும் கண்ணுக்குள் வைத்து தாங்கிக் கொள்வதால் எந்தவொரு அலைப்புறுதலும் இல்லாமல் நாட்களை கடத்திக் கொண்டு வருகிறாள். இந்த நல்ல உள்ளங்கள் இல்லையென்றால் இவளின் கதி என்னவாகி இருக்குமோ?

விஷேசத்திற்கு வரும் சொந்தங்கள் தனது பிறந்த வீட்டை முன்னிறுத்தி பலவிதமாய் கேள்வி கேட்டு, அதுவே தயாவிற்கு தலைகுனிவாகி விட்டால், அவன் மனம் சடுதியில் கோபமும் துக்கமும் கொள்ளும் என்றே முடிந்தவரை எளிமையாக நடத்திக் கொள்ள தீர்மானித்தாள்.

பாசமான புகுந்த வீடு கிடைத்ததில் அதிர்ஷ்டசாலியாக கொடுத்து வைத்திருக்க, பாராமுகமான பிறந்த வீட்டைக் கொண்டதில் பரிதாபத்திற்குறிய பாவியாக தன்னை நினத்துக் கொண்டாள்.

கணவன் தன்னை எந்த ஒரு தன்னிரக்க நிலையிலும் தவித்திடா வண்ணம் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டாலும், பெண்ணிற்குரிய பிறந்த வீட்டு அருகாமையை தேடுவதை மிதுனாவால் தடுக்க முடியவில்லை. 

இவர்கள் என் பிறந்த வீட்டு சொந்தங்கள் என்று பெருமையாக சொல்ல முடியாத தனது உடன்பிறப்புகளிடம், வெறுமை உணர்வு வந்து விட, சமீப காலமாய் சிந்துவையும் அவ்வாறு பார்க்க ஆரம்பித்திருந்தாள் மிதுனா.

இருவீட்டு உறவாக சிந்து இருந்தும் தனது வீம்பையே பற்றுகோலாக கொண்டு, மற்றவர்களை ஏறிட்டு பார்க்காமல் இருப்பவளை, வேறு எவ்வாறு பார்க்க முடியும் என்றே மிதுனாவின் மனதும் எடையிட்டுக் கொண்டது.

தான் உண்மையாக நேசித்த சொந்தங்கள் யாவும் தூரமாக விலகிப் போய் நின்றிருக்க, இவளும் அனைவரையும் தள்ளி வைத்தே பார்க்க ஆரம்பித்திருந்தாள்.

தான் செய்ததற்கு நன்றிக்கடன் காட்ட வேண்டாம், சராசரி மனிதனுக்குரிய பாச உணர்வு கூடவா சிந்துவிற்கு வற்றிப் போய் விட்டது? என்றே மிதுனாவின் மனது சமீப நாட்களாய் அலைபாயத் தொடங்கி இருந்தது.  

எதிர்மறை சிந்தனைகள் இரு பெண்களின் மனக்கடலிலும் அலைகளாக ஆர்பரித்த வண்ணம் இருக்க, மன தடுமாற்றங்களோடு விழாவை எதிர்கொள்ளத் தயாராகினர்.  

விஷேசத்திற்கு முன்தினம் மாலையில் சிந்து, வளர்ப்பு பெற்றோருடன் வந்து இறங்கி விட, அப்பொழுதும் அவளைக் கரித்துக் கொட்டினார் மரகதம்.

“வீட்டு ஆம்பளையா, மூணு பொண்ணுங்களோட பொறுப்ப தலையெடுத்து செஞ்சதுக்கு, அவன ரொம்ப பாசமா கவனிக்கிறீங்கடி… வளையல் கூட அவனாதான் போயி வாங்கிட்டு வந்திருக்கான். கூடப் பொறந்த பொறப்புன்னு அவன்தான் உங்கள பார்க்குறானே தவிர, நீங்க எல்லாம் எதுக்கும் லாயக்கில்லை” தனது மனப் பொருமலை மொத்தமாக கொட்டித் தீர்த்தார் மரகதம்.

மூத்த பெண்கள் இருவரையும் இரண்டு நாட்கள் முன்பே வரச் சொல்லி அழைக்க, பிள்ளை, வேலை என்ற காரணங்களை சொல்லி, விஷேசமன்று காலையில் வருவதாக பதில் கூறியதில், மகனைப் பெற்றவராக பெரிதும் மனமுடைந்து போயிருந்தார்.

பெண்களை கரையேற்றியதில் மகனின் பொறுப்பினை சொல்லியே, மரகதம் மகள்களை சாடிக் கொண்டிருக்க, அலமேலுவும் நாராயணனும் சமாதானப் படுத்த முனைந்தனர்.

“அவங்க சூழ்நிலை என்னன்னு தெரியாம நாம பேசக்கூடாதுமா… என் பொண்டாட்டிக்கு, எல்லாம் நானே செய்யும் போது எனக்கும் சந்தோசம்தான்…” என்று தயாவும் தாயின் பேச்சினை, புறந்தள்ளி விட்டு, நடக்க வேண்டிய வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.

சென்னையில் உள்ள நட்புறவுகள் மற்றும் சக ஊழியர்களை மட்டுமே அழைத்திருக்க, வீட்டில் விழா நடத்த தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

வளைக்காப்பு நாளின் அதிகாலையில் மரகதத்தின் மூத்த பெண்கள் நர்மதா கங்கா வருகை புரிய, அவர்களைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பாஸ்கர் வந்து சேர்ந்தான்.

இவனது வருகை அனைவரின் மனதிற்கும் நிறைவை அளித்ததா? சிந்து, இவனது வரவை எப்படி ஏற்றுக் கொண்டாள்? இரண்டு வருடம் கழித்து வந்தவன் மனைவி மகன் என்று பாசத்துடன் அவர்களை ஏறிட்டானா? தனது பொறுப்புக்களை உணர்ந்து திருந்தி திரும்பி வந்தானா?  என்பதை அடுத்த பதிவில் காண்போம்….      

 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!