mayavanin mayilirage epilogue

அபிலாக்

 

எட்டு வருடங்கள் வேகமாக உருண்டோட, அபிஜித் இப்போது  மதுரையின் கலெக்டர்.

நேர்மைக்கு கிடைத்த பரிசாக பல மாவட்டங்கள் , பல மாநிலங்கள் மாறி இப்போது இங்கு.

நேர்மை என்பது அனைவருக்கும் நேர்மையானவனாக இருந்து தன்னை நிரூபிப்பதல்ல!

தன் மனதிற்கு நேர்மையாக இருப்பது. எவன் ஒருவன் தன் மனதிற்கு பயப்படுகிறானோ அவனைக்கண்டு இந்த உலகம் வியக்கும், பெருமை கொள்ளும், பயப்படவும் செய்யும்.

அபிஜித் அப்படி ஒரு பெருமையை தன் குடும்பத்திற்கு அளித்திருந்தான். 

 பயத்தை தன்னை எதிர்ப்பவர்களுக்கு காட்டியிருந்தான். 

காலை ஓட்டம் எப்போதும் புத்துணர்ச்சியைத் தரவல்லது. அபியும் அதை தவறவிட்டதில்லை. 

அதிகாலை எழுபவன் ஒருமணிநேர ஓட்டத்தை முடித்து அடுத்த ஒருமணிநேரம் வீட்டினுள்ளே உடற்பயிற்சி,யோகா, தியானம் போன்றவற்றை சிரத்தையாக இன்றும் கடைபிடிக்கிறான்.

இன்றும் காலை ஓட்டத்தை முடித்தவன் வீட்டிற்குள் வரும்போதே அவனது சின்ன பாப்புவின் சத்தம் கேட்வரை கேட்டது. 

“இன்னைக்குமா! இதே வேலையா போச்சு இவங்களுக்கு… என்னதான் நினைச்சுட்டு இருக்காங்க…ஐ வாண்ட் ஜஸ்டிஸ்! ” என சத்தம் காதைப் பிளக்க இவன் முகம் புன்னகையைப் பூசிக் கொண்டது.

“ஏன் பாப்பா சத்தம் போடற. அது உடம்பு முடியாமதான படுத்திருக்காங்க…என்ன டிஸ்ஸுன்னு சொல்லு நான் செஞ்சு தரேன்…” என பொன்னம்மா முடிப்பதற்குள், “ஐயோ… கோல்ட் பாட்டி… அது ஜஸ்டிஸ் . நியாயம்! இப்படி ஆள் மாத்தி ஆள்  எல்லாரும் செல்லம் குடுங்க…” என முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்துவிட பொன்னம்மா பாவமாக பார்த்தார்.

அவரால் ஒன்றும் கூறிவிடமுடியாது இவளிடம்! அபியின் ஆளுமை மகளிடம் தானாக வந்திருந்தது. 

அபிதான் மதுவை எழுப்ப வேண்டாம். அவளுக்கு உடல்நலம் சரியில்லை என பொன்னம்மாவிடம் கூறி சென்றிருந்தான். 

இவை அனைத்தையும் கேட்டவாறு அபி உள்ளே வர கோபத்தை முகத்தில் தேக்கி அமர்ந்திருந்த மகளிடம்  சென்று  அமர்ந்தான்.

பொன்னம்மா சைகை காட்ட, நான் பார்த்துக் கொள்வதாக இவன் கண்ணசைக்கவும் அவர் உள்ளே பால் சூடு செய்ய சென்றுவிட்டார்.

” ஹேப்பி மார்னிங் பேபி…”

சின்னக்குட்டியோ முகத்தை திருப்பிக் கொண்டது.

“ஏன்டா…கோபமா இருக்கறபோல சத்தம் வெளிய வரை கேட்டுது” என சாதாரனமாக ஆரம்பிக்க, “ஏன்னு உங்களுக்கு தெரியாதாப்பா? நான் கோபப்பட ஒரே காரனம் உங்க பாப்புதான்…” எனக் கூறி வெட்டும் பார்வை ஒன்றை செலுத்திவிட்டு அது திரும்பிக் கொண்டது. 

‘என்னத்த செஞ்சான்னு தெரியலயே? சின்னக்குட்டி  இந்த பொங்கு பொங்கறாங்க’ என நினைத்தாலும் வெளியில் ஒன்றும் பேசவில்லை.

இவன் ஒன்றும் பேசவில்லை என்றதும்,  “அப்பா!” என கத்தியிருந்தாள் அவனின் இளவரசி ஆராதிகா.

அபிஜித் மதுவின் அன்பில் விளைந்த பரிசு ஆராதிகா. 

“என்னடா குட்டி?” என்றான் சாதாரனமாக.

“நேத்து நீங்க வாங்கிட்டு வந்த என் ஐஸ்க்ரீம முழுசா சாப்ட்டு காலி டப்பாவை ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்காங்கப்பா…” என பாவமாக உரைத்தவள் பின்,  “சொல்லி வைங்க அவங்ககிட்ட  இனி என்னோட ஐஸ்க்ரீம்ல கை வச்சாங்க, நான் என் காயு கூடவே போய் தங்கிக்குவேன்…ஒத்த ஆளா டப்பா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்குவேன். ” என பொரிய,

‘ஆக ஐஸ்க்ரீமுக்குதான் இத்தன பொங்கலா? அடிப்பாவி அதுக்குதான் நைட்டு தண்ணி வேணும்னு கீழ வந்தாளா?என அதிர்ந்தவன் ‘சின்ன பிள்ளைக்கிட்ட கூட பாப்புவா அவதாரம் எடுக்கறாளே?’ என தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக நொந்தபடி, 

“அச்சோ செல்லக்குட்டி ஐஸ்க்ரீம்தான வேணும் அப்பா வாங்கி தரேண்டா…அதுக்காக இப்படி கோபப்படலாமா?” என மகளை வெகுவாக சமாதானம் செய்ய…  

“இப்பயும் அம்மாவ எதாவது சொல்றீங்க… ஏம்ப்பா இப்படி இருக்கீங்க? கலெக்டர்பா நீங்க!”

“வெளில உங்களுக்கு எவ்வளவு மரியாதை… ஆனா இங்க… உங்க வார்த்தைக்கு ஒரு மரியாதை இருக்கு… இதுவரை அம்மாவை ஒரு அதட்டு அதட்டி பாத்ததில்ல… நீங்கதான் இவ்ளோ செல்லம் குடுத்து கெடுத்து வச்சிருக்கீங்க…ஏம்ப்பா நான் குழந்தையா? இல்ல அவங்க குழந்தையா?” என வெடித்த சின்னக்குட்டியை கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தியவன் பள்ளிக்கு நேரமாகிவிட்டதை அறிந்து குளிக்க வைக்க கூட்டிப்போக, “நீங்க இங்கயே இருங்க நானே போய் குளிச்சிட்டு வரேன்” எனக் கூறியவள் சில நிமிடங்களில் குளித்து, சீருடை அனிந்து தயாராகி வர, அபி மெச்சுதலாக பார்த்திருந்தான். 

அதிலெல்லாம் சமத்து சர்க்கரை கட்டிதான். உருவத்தில் மது என்றால் குணத்தில் அப்படியே அபிதான். பொறுப்பு, துணிவு, நேர்மை என. அதனால்தானோ என்னவோ மதுவின் சேட்டைகள் இவளிடமும் தொடர்கிறது. சின்னக்குட்டியும் இப்படி சண்டையிடுமே தவிர தாயை எங்கும் தனியாக விடுவதுமில்லை, யாரிடமும் விட்டுக் கொடுப்பதுமில்லை. 

அபி , டோரா கட் போல இருந்த சின்னக் குட்டியின் தலைமுடியை  வாரிவிட்டு, உணவை ஊட்டி முடிக்க சரியாக வேன் சத்தம் கேட்டது.

வேன் ஏற்றிவிட இவன் வெளியில் வர, வேனிலிருந்த குழந்தைகள் இவனைக் கண்டதும், “ஹாய் அங்கிள்” என குதூகலித்தனர்.

அவர்களுக்கு வழக்கம்போல”ஹாய்” என புன்னகையுடன் கை காட்டியவன், மகளின் முறைப்பில் சின்னக்குட்டியின் எண்ணம் அறிந்து வேன் டிரைவரிடம் திரும்பிகொண்டான். அவரிடம் சில தகவல்களை விசாரித்துவிட்டு,  பத்திரம் என கூறி விடைகொடுத்தான்.

மகளோ,’ எல்லாருக்கும் எங்கப்பான்னா எப்படிதான் இருக்குமோ? வீட்டுல அம்மா, இங்க இவங்க ‘ என உரிமைப் போராட்டத்தில் பொங்கியபடி உம்மென தன் இடத்தில் அமர்ந்துகொண்டாள்.

 அடுத்த சில நிமிடங்களில் நண்பர்கள் வந்து பேசவும் ஆராதிகாவும் அவர்களுடன் இனைந்துகொண்டாள்.

ஆனால் இங்கே அபிக்கோ மகளிடம் வழக்கமாக வாங்கும் முத்தம் கூட கி டைக்கவில்லை. ஏன்? ஒரு “பை” க்கு கூட பஞ்சமாகிப் போனது. 

மணி எட்டாகியிருக்க இன்று யோகா கட்… உடற்பயிற்சி கட்… தியானம் கட். அனைத்தையும் சின்னக்குட்டி பிடித்துக்கொண்டாளே!

மேலே அறைக்குச் சென்றவனை கழுத்து வரை போர்த்திய போர்வையினுள்,  பதுங்கி உறங்கிக் கொண்டிருந்த மனைவியே  வரவேற்றாள். 

அவனுக்கு புரிந்தது இந்த போர்வை மகளின் வேலையென்று. மதுவிற்கு எப்போதும் போர்வை நிக்காது. கணவன் ஒருபுறம் மகள் ஒருபுறம் என நடுவில் இவளை அழுத்தி போர்த்தினாலும் இருவரது போர்வையையும் இழுத்துவிட்டு  இருவரில் ஒருவரை அணைத்துக் கொண்டு உறங்குவாள். எந்த நேரத்தில் தந்தை மகள் என யார் எழுந்தாலும் போர்வையை இழுத்து போர்த்திவிட்டே உறங்குவர். 

ஆராதிகாவிற்கு இது அபியைக் கண்டு வந்ததா என தெரியாது. ஆனால் இயல்பாக தந்தையைப் போலவே தாயை  தாங்குவாள். சில சமயம் சண்டையும்  தாய் மகள் என்ற பாரபட்சமில்லாமல் நடக்கும். 

அபி மெதுவாக மதுவின் அருகில் அமர்ந்தவன், ” பாப்பு எழுந்துக்கோ…மணி எட்டாச்சு…” என நான்கு முறை எழுப்ப அதன்பிறகே சிறிது அசைந்தவள் இவன் மடியில் தலை வைத்து மீண்டும் உறக்கத்திற்குச் சென்றாள்.

“இவள..” என செல்லமாய் சலித்தாலும் தலையை வருடியபடி அமர்ந்திருந்தான்.

“டப்பா ஐஸ்க்ரீம முழுங்கிட்டு தூக்கத்த பாரு… அடிச்சுக்குவாங்கன்னு தனித்தனியா வாங்கிட்டு வந்தா இத்தன சேட்டை பண்ணி வச்சிருக்கா!” என அலுத்துக்கொண்டாலும்,  இத்தனை வருடங்களில் அவளது கலாட்டா செய்கைகள் ஒருபோதும் இவனுக்கு சலித்ததில்லை. 

எட்டு வருடங்களுக்கு முன் கூர்க்கில் இருவரும் தங்களது உணர்வு நிலையைப் பகிர்ந்து கொண்டபின் அவர்களுக்குள் கேள்விகளுக்கும் விளக்கங்களுக்கும் வேலையில்லாமல் போனது. 

 கணவன் மனைவி உறவில் வாய்மொழி விளக்கங்களை விட மனமொழி புரிதல்களே இன்றியமையாததாகின்றன.  

அது இயற்கையாகவே இணையிடம் பெறப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகளே! அந்த வகையில் அபியும் சரி மதுவும் சரி மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.  

அடுத்து நான்குமுறை பள்ளியெழுச்சிக்குப் பின், “ஏன் ஜித்து எழுப்பற எனக்கு தூக்கமா வருது” என கண்ணே விழிக்காமல் சோம்பலாக கூறினாள்.

நிஜமாகவே அவளால் கண் விழிக்க முடியவில்லை. 

“பாப்பு ஸ்கூல் போயாச்சா…” என தூக்கத்திலேயே  அவள் கேட்க,

 “அதெல்லாம் போயாச்சு… காலைலயே ஒரே சத்தம்…”என்றான் சிரிப்புடன்.

“என்னவாம்?” 

“ஏன்? நீ என்ன பண்ணேன்னு உனக்கு தெரியாது?” 

“நானா? ஒன்னுமே பண்ணலயே…இன்னும் கண்ணுகூட முழிக்கல” என்றாள் வாகாக அவன் மடி மீது படுத்துக்கொண்டாள்.

“நிஜமாவா?” என்று உறுதி கேட்டான் கணவன்.

” அது…ஐஸ்க்ரீம் மட்டும்தான் சாப்ட்டேன். ” என்றாள் கொஞ்சமாய் ஒற்றைக் கண்ணை திறந்து,

அதில் முறைத்தவன், “அதுசரி…உன்னோட பங்க மட்டும் சாப்பிட வேண்டியதுதான?” 

“எல்லாமே நம்மள்துதான ஜித்து…”என அவ்வளவு தூக்கத்திலும் நியாயம் பேசினாள். 

“எனக்கு என்னாச்சுன்னே தெரியல… மயக்கமா இருக்கு” என மீண்டும் மடி சாய்ந்து முனக,

விசாரனை மறந்து, சிரிப்புடன்அவள் காதோரமாக குனிந்தவன் ஏதோ கூற பட்டென்று எழுந்தாள்.

“ஹேய் மெதுவா…” என அவளைத் தேற்றி வாகாய் அமரவைத்தவனைப் பார்த்து,  எதிர்பார்ப்புடன், “நிஜமாவா ஜித்து!” என ஆர்வம்பொங்க கேட்டாள்.

சிரிப்புடன் அவள் தலையைக் கலைத்தவன், “நாலுநாள் முன்னவே கண்டுபிடிச்சிட்டேன். நீயா எப்ப உணருவ பார்த்தேன்… ஆனா எங்க? ” என கன்னம் கிள்ளியவன், “இன்னைக்கு  பத்து மணிக்கு டாக்டர் அப்பாய்ண்ட்மெண்ட். இப்ப எழுந்தாதான் குளிச்சு சாப்ட்டு கிளம்ப சரியா இருக்கும்…” எனக் கூற கூறஅவன் முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள். 

இவனை அடையாதிருந்தால் என் நிலை! 

இதுதான் அவள் மனக்கண்ணில் அடிக்கடி ஓடும். 

“பார்த்தது போதும் எழுந்திரு…” என அவளைக் கிளப்பியவன் பத்து மணிக்கு மருத்துவமனையில் இருந்தான். 

மருத்துவர் அவளிடம் கேட்ட கேள்விக்கெல்லாம் அபி பதிலைக் கூற மது சிரித்தபடி அமர்ந்திருந்தாள். மருத்துவர் அவனையும் இவளையும் மாறிமாறி பார்த்தாலும் எதுவும் கேட்க முடியாத படிக்கு அவனது  பதவி அவரைத் தடுத்தது. 

ஒன்றும் பேசாமல் மதுவைப் பரிசோதித்துவிட்டு அபி தெரிந்து வைத்திருந்த பதிலையே கூறினார்.

“வாழ்த்துகள் சார்… இவங்க தாயாக போறாங்க…” எனக்கூறி முடிப்பதற்குள்,  “அதான் எங்களுக்கே தெரியுமே டாக்டர்…வேற எதாவது சொல்லுங்க…” என மது கூறியிருந்தாள். 

மருத்துவரின் ஆயாசப் பார்வையில் அபி இவளை போலி கண்டனப் பார்வை பார்க்க, அவள் விரிந்த புன்னகையை பரிசளித்தாள். வந்த போலியும் பறந்து போனது!

ஒருவழியாக மருத்துவரிடம் மேலும் விபரங்களைக் கேட்டு வீட்டிற்கு வந்திருந்தனர்.  

வந்ததும் வராததுமாக பொன்னம்மாவிடம்  கூற அவர் உடனே, “அதான் புள்ள நாலு நாளா சுணக்கமா இருந்துதா…எல்லாம்  திருஷ்டி” என திருஷ்டி கழித்து இனிப்பு செய்ய சமையலறை சென்றுவிட்டார். 

இங்கு போன் கால் பறந்தது தேனிக்கும், சென்னைக்கும், மும்பைக்கும். மதுதான் போன் செய்து விசயத்தை கூறினாள். 

“ஹலோ அத்தம்மா…” என அவரிடம் மீண்டும் தாயான சந்தோஷத்தைக் கூறியவள், அவர் ஏதோ சொல்ல சொல்ல, ” ம்…ம்…” என தலையாட்டிவிட்டு சிறிது நேரம்  அவரிடம் பேசிவிட்டே வைத்தாள். 

அடுத்து ஷௌரியா, நேனா, சஞ்சய் ,ஜனனி என செய்திகள் பறந்தது.

சஞ்சய்க்கு ஜனனியுடன் திருமணம் முடிந்திருந்தது. சஞ்சய்க்கு ஜனனியைப்  பிடித்து போக இருவீட்டிலும் பேசி  திருமணத்தை முடித்திருந்தனர்.

மது இவ்வளவு மகிழ்ச்சி கொள்ள காரனம் உண்டு. ஆராதிகாவிற்கு பிறகு குழந்தை தங்காது இருந்து இப்போதுதான் தங்கியிருக்க அதனால் வந்த சந்தோஷம்.

அபி இதை ஒரு புன்னகையோடே பார்த்திருந்தான். உண்மையில் அபிதான் குழந்தை பிறப்பை தள்ளி   வைத்திருந்தான். ஆராதிகா பிறக்கும்போதே பெரும் சிக்கல் உருவானது.

என்றோ அவள் வாங்கிய கத்திக்குத்து அவள் கர்பப்பையை லேசாக உரசி சென்றிருக்க ஆராதிகாவை ஆபரேஷன்  செய்துதான் எடுத்தனர். 

அபிக்கு மட்டும் இது தெரியும். அதனாலேயே அடுத்த குழந்தையை தவிர்த்திருந்தான். இடையில் கர்பப்பையை சரிசெய்ய மருந்துகளும் அவளுக்கு சத்து மாத்திரை என்ற பெயரில் கொடுக்கப்பட்டு இப்பொது சரியாகிவிடவே ஒன்றுக்கு நூறு முறை அவளது பாதுகாப்பை உறுதி செய்த பின்பே மதுவின் இன்னொரு குழந்தை ஏக்கத்தை போக்கும் பொருட்டு இந்த  குழந்தை. 

மது பேசி முடிக்கவும் இவளை இறுக அணைத்தவன், “ரொம்ப சந்தோஷமா இருக்க போல…”

“இல்லையா பின்ன? எனக்கு உங்கள மாதிரியே ஒரு பையன் வேணும்…” என அவன் தோளில் சாய்ந்து கொள்ள, அவனும் வாகாக அணைத்தவன்,” ரொம்ப கவனமா இருக்கனும் என்ன? இனி திருட்டு ஐஸ்க்ரீம்ஸ்லாம் இல்லை லிமிட்தான் என்ன புரிஞ்சுதா?” என போலியாக மிரட்ட, அதனை ஒரு கேலிப் பார்வையில் தள்ளியவள் தெனாவட்டாக அவனை நிமிர்ந்து பார்க்க, “பயம் விட்டுப்போச்சுடி உனக்கு!” என காதைத் திருகினான். 

“ஸ்ஸ்ஆஆ…” என அலறியவள், ” என்ன கலெக்டர் சார் வேலை இல்லையா உங்களுக்கு… ஆபீஸ் போகல?”

“நீ பண்ணி வச்சிருக்க வேலைக்கு, எங்க வேலைக்கு போக..” 

“ஏன்? நான் அப்படி என்ன பண்ணிட்டேனாம்… நீங்கதான் என்னை….” அதற்குள் அவள் வாயை அடைத்திருந்தான்.

“அம்மாடி என்ன பேச்சு பேசற! சொன்னா யாரும் நம்பதான் மாட்டாங்க…” 

” யாருக்கும் சொல்லுவீங்களா என்ன!” என குழைய

“என்னன்னு சொல்லுவேன்…” என அவள் காதில் சிலவற்றைக் கூற இப்போது அவன் வாயை அடைப்பது அவளது முறையானது. 

சிறிது நேரத்தில் அவளிடமிருந்து விலகியவன், “இந்நேரம் நீ போன் பண்ணதுக்கு பறந்தடிச்சு வருவாங்களே அவங்கள யாரு பாத்துக்கறதாம்… இவங்களாவது பரவால்ல பக்கம். ஒருத்தன் மும்பைல இருந்தும் பொசுக்கு பொசுக்குன்னு வந்துடறான். எப்படி வரான்னே தெரியல…” என கிண்டலடிக்கவும் அவனை முறைத்தாள். 

“பொறாமை உங்களுக்கு…” 

“ஆமாம். இப்ப அதுக்கு என்னங்குற” என ஒப்புக் கொண்டவன்,” அவங்கலாம் வந்தா என்னை எங்க கண்டுக்கற நீ? 

“கண்டுக்காம இருந்தாதான் பெனால்டி போட்டு வாங்கறீங்களே அப்பறம் என்னவாம்?” என நொடிக்கவும்,

சில நொடிகள் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தவர்கள் பக்கென சிரித்துவிட்டனர்.

அபி கூறியதைப் போலவே ஷௌரியாதான் தன் குடும்பத்துடன் முதலில்  வந்தான்.

அபிகூட, “வரவர மதுரைக்கு தேனி பக்கமா மும்பை பக்கமான்னே தெரிய மாட்டிங்குது” என கிண்டலடித்திருந்தான்.

இதற்கு அந்த பக்கமிருந்து எந்த ரியாக்சனும் வரவில்லை, “போடா…போடா” என ஒரு பார்வை பார்த்து திரும்பிகொண்டான்.

இப்போதெல்லாம் அவர்களுக்கு இடையில் நல்ல நட்பு உருவாகியிருந்தது. 

 அந்த சிண்டு அர்னவ் கூட எப்போதும் மாமா..மாமா…என அபியின் பின்னால் சுற்றுபவன் இன்று அவனும் கண்டுகொள்ளவில்லை. ‘இவனுங்களையெல்லாம் பக்கத்துல வச்சிகிட்டா நான் டம்மி பீஸ்ன்னு எனக்கே சந்தேகம் வரவச்சிருவானுங்க…’ என நொந்தவாறே அமர்ந்திருந்தான்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் சந்திரன், காயத்ரி , சஞ்சய், ஜனனி இவர்களும் வந்திருந்தனர். 

அதன்பிறகு அபியால் மதுவை நெருங்கவே  முடியவில்லை.  அலுவலக வேலை என்று லேப்பை வைத்துக் கொண்டு பொம்மை போல அமர்ந்திருந்தான். 

மாலை மகள் வீட்டிற்கு வரவுமே இத்தனை உறவுகளையும் பார்த்து குதூகலிக்க, மேலும் தனக்கு ஒரு உடன்பிறப்பு வரப் போகிறது என்ற தகவலும் கிடைக்க மிகுந்த சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருந்தாள்.

அதன் பிறகு தாயை அப்படி விழுந்து விழுந்து கவனித்தது அந்த குட்டி. அவளுடனே சுற்றியது. இவள்தான் காலையில் அப்படி பேசியது என சூடம் ஏற்றி சத்தியம் செய்தாலும் யாரும் நம்பமாட்டார்கள். 

இரவு ஒன்பது மணி அளவில் அனைவரும் சாப்பிட்டு ஒன்றாக அமர்ந்து பேசியபடி அமர்ந்திருக்க, “போதும் பேசினது. எல்லாரும் போய் படுங்க. அம்மா ரெஸ்ட் எடுக்கட்டும்” என பிடிவாதமாக மதுவை அழைத்துக் கொண்டு மேலே சென்றுவிட்டாள் ஆராதிகா. இதைப் பார்த்த அனைவருக்கும் தெரிந்தது…இவள் குட்டி அபி என்று. 

பொன்னம்மா வாயைப் பிளந்து ஆவெனப் பார்த்திருந்தார் காலையில் ஆடிய ஆட்டமென்ன இப்போது பாசமழை பொழிவதென்ன என்று. 

பிறகு அனைவரும் உறங்க செல்ல… அபி அவர்களுக்கு இடம் ஏற்பாடு செய்து விட்டு தானும் அறைக்கு வந்திருந்தான்.

அவன் வரும் பொழுது மதுவும் ஆராதிகாவும் அணைத்தபடி உறங்கிகொண்டிருந்தனர். வழக்கம்போல அவர்களுக்கு நெற்றியில் முத்தம் பதித்தவன்  மகளின்புறம்  படுத்து தானும் உறங்கினான்.   

மறுநாள் காலையில் அபி, ஷௌரியா இருவரும் ஓட்டப்பயிற்சி முடித்து வரும் பொழுது கேட் வரையிலும் ஆராதிகாவின் சத்தம் கேட்டது. இன்று என்ன? என்றவாறே அபி வர, ஷௌரியாவும் என்னவென்று வேகமாக வந்திருந்தான். 

மது தூக்க கலக்கத்தில் சோபாவில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள். அனைவரும் ஆராதிகாவின்  சத்தத்தில் ஹாலிற்கு வந்திருந்தனர். 

“உங்கள யாரு இப்ப அவங்கள எழுப்ப  சொன்னது. நானே சத்தம் போடாம எழுந்திரிச்சு குளிக்க போனா, நான் வரதுக்குள்ள  நீங்க வந்து எழுப்பி விட்றுக்கீங்க… “

என அன்னையை எழுப்பிய காரனத்திற்காக பொன்னம்மாவிடம் பொரிந்து கொண்டிருந்தது சின்னகுட்டி.  

காயத்ரி, ஜனனி, நேனா மூவரும் சமையலறையில் மும்முரமாக பேசியபடி வேலை செய்து கொண்டிருந்தனர்.  

பொன்னம்மாவோ பாவமாக, “இல்ல பாப்பா அம்மாக்கு பால் பால் கொடுக்கதான் போனேன். பாத்துட்டு தூங்கறாங்கன்னுதான் எழுப்பாம திரும்பினேன். ஆனா அவங்கதான் முழிச்சிட்டு என்கூட கீழ வந்தாங்க…” என கூறியவர், ” இனி எழுப்பலை போதுமா… நீயே உங்கம்மாவ பாத்துக்க தாயி…” என அவர் உள்ளே சென்றிருந்தார் . 

மற்றவர்கள் இதை சிரிப்புடன் பார்த்திருக்க, அபியும் இதை புன்னகையுடன் பார்த்தவாறு தூக்க கலக்கத்தில் இருந்த மதுவை தூக்கிக் கொண்டு மேலே அறைக்கு சென்றான் .

அவளும் வாகாக அவனின் தோள் சாய்ந்து தூக்கத்தை மீண்டும் தொடர்ந்தாள்.

வீடு முழுவதும் உறவினர்கள், முகம் முழுவதும் மகிழ்ச்சி என …பத்து வருடத்திற்கு முன் இருந்த அபிஜித் ஆளே மாறியிருந்தான்.

தோள் சாய்ந்திருக்கும் அவள் முகத்தைப் பார்த்தான். அத்தனையும் இவள் வந்ததால்… இவள் இல்லையென்றால்! அவனால் அதை யோசிக்கவே முடியவில்லை இன்றுவரை. 

வெற்றுக் காகிதமாய் இருந்த அவன் வாழ்வில் தூரிகையாய் பாப்பு வர இப்போது அவன் வாழ்க்கை வானவில்லாய் நிரம்பி வழிகிறது.

 எங்கிருந்தோ காற்றில் பறந்து வந்து நுழைந்தது ஒரு மயிலிறகு, ஏதோ ஒரு பந்தத்தில் இவன் அதை எடுத்து பாதுகாத்து பாசத்தால் அதற்கு உயிரூட்டி தலையில் கிரீடமாய் சூடிக்கொள்ள இந்த” மாயவனின் மயிலிறகும்” இவனோடு சேர்த்து இவனது வாழ்வையும் வண்ணமாக்கி வசந்தத்தை பரப்புகிறது. இத்தோடு இந்த மாயவனும் அவன் மயிலிறகும் விடைபெறுகிறார்கள்.