நிலவு – 19
மனதின் கசப்புகளை தூசி போல தட்டிவிட்டு மனையில் அமர்ந்திருந்தாள் மிதுனா. எளிதான அரக்குநிற கல்யாணப் பட்டும் அவளுக்கு தனி சோபையை கொடுத்தது. புன்னகை சிந்திய முகத்துடன் அனைவரிடமும் பேசிய படியே, தன் வலிகளை மறைத்து கொண்டாள்.
மரகதம் சொன்னது போல, விழா முடிந்த பிறகே தனது கோபத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள்.
மூத்த பெண்மணி நலங்கு வைத்து, வளையலிட்டு விழாவை ஆரம்பித்து வைத்த பிறகு, நர்மதா, தயாவை வளைபூட்ட அழைத்தாள். கல்யாண பட்டு வேஷ்டியில் மாப்பிள்ளை தோரணையுடன் வந்தவன், அழகான இரண்டு தங்க வளையல்களை மனைவியின் கரங்களுக்கு சொந்தமாக்கினான்.
காலையில் இருந்து மனைவியை கோபப் பார்வையில் மேய்ந்து கொண்டிருந்தவன்தானா இவன் என்று சந்தேகப் படும் அளவிற்கு, மனங்கனிந்த புன்னகையுடன் மிதுனாவை பார்த்திருந்தான்.
அவனைப் பொறுத்தவரை, இன்று காலை நடந்தது வழமையாய் இருவருக்குள்ளும் நடக்கும் வாதங்கள்தானே, சிறிது நேரத்தில் மறந்து விடுவாள் என்ற கணிப்பில், தன் வேலையை பார்க்க சென்று விட்டான்.
தனக்கு உடனடியாக பதிலடி கொடுத்து ஓய்பவள், இன்று வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டதை கருத்தில் கொள்ளவில்லை.
மனைவியின் நிறைமாதத்தையும் இன்றைய நாளின் முக்கியத்துவத்தையும் கவனத்தில் கொண்டிருந்தால், அவளின் முகவாட்டத்திற்கான கராணத்தை, எளிதில் அறிந்திருப்பான். மொத்தத்தில் அவன், அவளை இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.
அவசரபுத்தியும் முன்கோபமும் எந்த பொறுப்பானவனையும் தன் தகுதியில் இருந்து கீழிறக்கி விடும் என்பதை தெரிந்து கொள்ளாத, கணவனாகவே இருந்தான்.
ஐந்து பவுனில் அழகான டெம்பிள் டிசைன் வளையல்கள் மிதுனாவின் கரங்களை அலங்கரிக்க, கன்னத்தில் சந்தனம் பூசியவாறே அவளை பார்த்து புன்னகை புரிந்தவன்,
“பிடிச்சிருக்கா மிது? நேத்து நைட்தான் எடுத்துட்டு வந்தேன். உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கணும்னு சொல்லல” என்று மனைவியிடம் கிசுகிசுக்க,
“இதப் போடும் போதாவது என்கூட பேசணும்னு தோணிச்சே, சந்தோஷம்…” சுருக்கென்ற வார்த்தையில், அவனை பார்க்காமல் தலை குனிந்தாள்.
“என்னடி சொல்ற?” என்று துணுக்குற்றவனின் முகபாவம் குற்றம் சுமத்தப்பட்ட குழந்தையின் மனநிலையுடன், மனைவியை உற்று நோக்கியது.
தன்னை நிராகரித்ததின் வலியை இத்தனை நேரம் மறைத்துக் கொள்ள நினைத்தாலும், கணவனிடம் தானாக வெளிப்பட்டு விட்டதில் மிதுனாவும் நொந்து கொண்டாள்.
“எல்லாரும் வெயிட் பண்றாங்க தயா…” என்று சூழ்நிலையை மிதுனா உணர்த்த, சுற்றும் முற்றும் பார்த்து, அவளின் கைகளுக்கு மென்மையான முத்தம் பதித்து விலகிக் கொண்டான்.
மனைவி எதனால் கோபம் கொண்டிருக்கிறாள் என்பது தெரியாமல், காலையில் இருந்து நடந்ததை மனதில் அசை போட ஆரம்பித்தவனுக்கு, அவளை வாழ்த்தி ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்ற விடயம் மறந்து போயிருந்தது.
“என்ன தம்பி? வெறுமனே வளையலை மாட்டிட்டு கிளம்புற… நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டுப் போடா” என்று நர்மதா அவனை தடுத்து நிறுத்தும் போதுதான், அவனுக்கு நடக்கும் நிகழ்வுகள் உரைத்தது.
“என்னக்கா அப்படி சொல்லிட்ட… இந்த தயா மகாராஜா இருக்குற வரைக்கும் எம் பொண்டாட்டி மகாராணிதான்! நான் நல்லா இருக்கணும்னு, நீங்கதான் எனக்கு ஆசீர்வாதம் பண்ணனும்” நொடியில் தன்னை சகஜமாக்கிக் கொண்டு, தயா கலாய்க்க,
“பொழைக்கத் தெரிஞ்சவன்டா நீயி… வாயில நல்லா வடை சுடுற! ராஜா சார், ரெண்டு வளையலோட ரொம்ப சிம்பிளா முடிச்சிட்டீங்களே… என்னவாம்?” கங்கா காரணம் கேட்க,
“இப்போதைக்கு கஜானால அவ்வளவுதான் சொரண்ட முடிஞ்சது. இதுக்கு மேல ராணிக்கு தெரியாம கைவச்சா, ராஜாக்கு கூஜா தூக்குற வேலை கூட கிடைக்காது அக்காஸ்…” பார்வை முழுவதும் மனைவியின் மீதிருக்க, சிரியாமல் பதில் சொல்லிய விதத்தில், வந்திருந்த அனைவருமே சிரித்துவிட, மிதுனாவிற்கும் லஜ்ஜையாகிப் போனது.
கணவனின் பேச்சில், மனைவி தலைகுனிந்து மெலிதாக புன்னகைத்ததைப் பார்த்து,
“லஜ்ஜாவதியே… என்னை அசத்துற ரதியே…” என்று பாடலை முணுமுணுக்க,
“கொஞ்சம் அடக்கி வாசிங்க, தயா…” கிசுகிசுத்த பொய்யான கண்டனப் பார்வையில், அவன் கையை கிள்ளி வைத்தாள் மிதுனா.
“ராஜா, கொஞ்சம் தள்ளிப்போனா, வந்தவங்களும் உங்க மாகாராணிய வாழ்த்திட்டுப் போவாங்க” என்ற நமட்டுச் சிரிப்போடு நர்மதா, அவனை நகலச் செய்தவள், மரகதத்திடம்,
“நீயே வந்து, உன் மருமகளுக்கு போட்டு விடுமா” என்று அழைக்கும் பொழுது, கங்கா சற்று பெரிய அளவிலான நகைப் பெட்டியை கைகளில் வைத்திருந்தாள்.
“இல்ல, அது சரிபடாது… நீங்களே போட்டு விடுங்க” என்று மரகதம் தவிர்க்க,
தயாவும் சிந்துவும் சேர்ந்து, தாயை வலுக்கட்டாயமாக கைகளைப் பிடித்து இழுத்தாலும் மரகதம், சட்டமாக தனது இடத்திலேயே நின்று விட்டார்.
“அத்தை, உங்க கையால போட்டு விடலன்னா, எனக்கு எதுவும் வேண்டாம்” என்று மிதுனா உறுதியாக கூறிவிட,
“இந்த காலத்தில இதெல்லாம் பார்க்குறதில்லம்மா, எந்த காரியத்துக்கும் நெறஞ்ச மனசு இருந்தா போதும்” என்று வந்திருந்த விருந்தினர்களும் பச்சைக்கொடி காட்ட, அவர் தயங்கியபடியே முன்வந்து நகைகளை மருமகளிடம் கொடுத்தார்.
நல்ல கெட்டியாக, பழைய கால டிசைனில் செய்யப்பட்ட தங்க ஒட்டியானமும், காசுமாலையும் மிதுனாவின் கைகளில் இருக்க,
“இந்த பரம்பரை நகைகள பத்திரப் படுத்துறதுல, உன் மாமியாரும் அவங்க மாமியாரும் பிஹச்டி பட்டமே வாங்கிட்டாங்க, மிதுனா!” என்று கங்கா கிண்டலோடு அங்கலாய்க்க,
“பேரனுக்கு வாரிசு வரும்போதுதான், இத வெளியே எடுக்கணும்னு ஊர் பெரிய மனுசங்க சாட்சியோட, பாங்க் லாக்கர்ல வச்சு பத்திரப்படுத்தியிருச்சு எங்க அப்பத்தா…” நர்மதா தொடர்ந்தாள்.
“எத்தன கஷ்டம் வந்தாலும் குடும்ப கௌரவம் மாதிரி, இந்த நகையையும் காபாந்து பண்ணணும்னு அடம் பிடிச்சு, கஷ்டப்பட்ட காலத்திலயும் இந்த நகைகள தொடவிடல, எங்க வீட்டு பெருசு” என்று கங்கா ஆதங்கத்துடன் சொன்னாலும், அவளின் குரல் என்னவோ, அவர்களின் குடும்பப் பெருமையை முரசு கொட்டியது.
“அந்த பெரிய மனுஷிக்கேத்த பேரன்தான் இந்த பய… வார்த்தைக்கு வார்த்தை ராஜா, மந்திரினு சொல்லிட்டு கெடப்பான்” என்று சந்தோசத்துடன் நொடித்துக் கொண்ட நர்மதா, தயாவை பார்த்து,
“குழந்தைக்கு பேர் வைக்கும் போது, முழுபேரும் சொல்லிக் கூப்பிடுற மாதிரி வைக்கணும் ஆனந்தா… தாணுமாலையன் தயாவாகி, எங்களால உன்னை முழுசா கூப்பிடக் கூட முடியல” என்று குறைபட்டுக் கொள்ள,
“நீங்க சொல்றது புரியல அண்ணி?” என்று மிதுனா கேட்க
“எங்க தாத்தாவோட பேர் சுருக்கமாதான் தயாவோட சேர்த்து ஆனந்தன்னு வச்சாங்க மிதுனா… ஆனா அப்பத்தா யாரையும் முழுப்பேர் சொல்லி கூப்பிட அனுமதிக்கல… அதையும் மீறி கூப்பிட்டா, அன்னைக்கு, அவன் காது கிழியுற வரைக்கும் திட்டித் தீர்த்திடும்” கங்கா, பெயர் காரணத்தை விளக்கி விட்டாள்.
“அப்பத்தா இப்போ இருந்திருந்தா, அண்ணி கூப்பிடுறதுக்கு தெனமும் கபடி விளையாண்டிருக்கும். ஊர்ல எல்லாரும் அதுக்கு பயந்தே, தம்பிக்கு அடுத்த வார்த்தைய கூட சேர்த்து கூப்பிட மாட்டாங்க” என்ற சிந்துவும் சகஜ நிலைக்கு திரும்பி இருந்தாள்.
மிதுனாவிடம் சிந்து முகம் திருப்பிக்கொண்டு நடமாடியதை பார்த்த மரகதம், மகளை தனியே அழைத்து கண்டித்து விட்டார்.
“உனக்கு மட்டுந்தான் கஷ்டம்-ங்கிற நினப்புல இருந்து வெளியே வா சிந்து! உனக்காக உன் அண்ணி செஞ்சதெல்லாம் மறந்து போயிட்டியா? இல்ல அவ்வளவுக்கு நன்றி கெட்டவளா மாறிட்டியா? உன்னோட பிரச்சனை புருசனோட மட்டுந்தானே? எதுக்கு அவள முறைச்சுக்கிட்டு நிக்கிற” என்று புத்திக்கு உறைக்கும் படி எடுத்துச் சொல்லும் போதுதான், தனது சுயநலத்தை நினைத்து வெட்கிக் கொண்டாள் சிந்து.
சற்று தனிமை கிடைத்தாலும் தன் அண்ணியிடம் சென்று மன்னிப்பை வேண்டவும் அவள் தயாராகி இருக்க, இப்பொழுது அவளை பார்த்து நேருக்கு நேராக மனதில் எந்த விட நெருடலும் இல்லாமல் பேசிவிட்டாள்.
“சொல்லியிருந்தா நானும் அவாய்ட் பண்ணிருப்பேனே…” என்று மிதுனா, நாத்தனார்களின் முகம் பார்க்க,
“இதையெல்லாம் அவங்கவங்க பிரியத்துக்கு விடணும் மிதுனா! ஆசையா கூப்பிடத்தானே பேர் வைக்கிறது… பெரியவங்க பேர வச்சாலும் வாய் நெறைய கூப்பிடனும். அது நெறைய இடத்துல நடக்க மாட்டேங்குது” என்ற நர்மதா பேசிக்கொண்டே நகைகளை மிதுனாவின் உடம்பில் பூட்டி, கொக்கி மாட்ட தாயை அழைத்தாள்.
மரகதமும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அணிகலனை போட்டுவிட்டு,
“நாலாவது தலைமுறையா இந்த நகை, உன் கைக்கு வந்திருக்கு மிதுனா. இந்த காலத்துல இதெல்லாம் சொல்லக்கூடாதுதான். ஆனா, குடும்ப கௌரவத்த விட்டுக் கொடுக்க முடியாது. அதான், உனக்கு விளக்கம் சொல்லியே போட்டு விடுறேன். எத்தனை சொத்து வந்தாலும் இது கைவிட்டுப் போகாம பார்த்துக்கோ” என்றபடியே நகன்றவரை, பிடித்து வைத்து,
“எங்கள ஆசீர்வாதம் பண்ணிட்டு போம்மா…” என்ற தயா சந்தனக் கிண்ணத்தை கைகளில் கொடுக்க, தட்ட முடியாமல் மகன் மருமகளுக்கு பூசிவிட்டு, மனம் நிறைந்து ஆசீர்வாதித்தார்.
அலமேலுவும் நாராயணனும் பின்னோடு வந்து அவர்களின் சார்பாக மிதுனாவிற்கு ஒரு ஜோடி வளையலும், தயாவிற்கு தங்கச் செயினும் மாட்டி விட,
“விசேஷம் என் பொண்டாட்டிக்குதான் மாமா! எனக்கு எதுக்கு இதெல்லாம்?” கழுத்தில் போட்டதை பார்த்தபடியே தயா கேட்க,
“அவசர கோலத்தில கல்யாணம் நடந்து, நீயும் செய்முறை வேணாமுனு அந்த சமயத்துல சொல்லிட்டே மாப்ளே… சிந்தா வளைகாப்பு நேரத்துலயும் சரியான சந்தர்ப்பம் அமையல… அதுக்கெல்லாம் சேர்த்துதான் இப்போ போடுறேன். இனி உன்கிட்ட கேக்காம செய்றதுணு முடிவும் எடுத்துட்டேன்” என்று சிரித்துக் கொண்டே நாராயணன் விளக்கம் சொல்ல,
“இந்த வீம்பு பிடிச்ச கழுதையும் இப்ப வரைக்கும், எதுவுமே வேண்டாம்னுதானே ஒத்தகால்ல பிடிவாதமா நிக்கிறா…” அலமேலு சிந்துவை கடிந்து கொண்டே தனது மனக்குறையை இறக்கி வைத்தாலும், மனப்பூர்வமான ஆசிகளை தம்பதிகளுக்கு வழங்கினார்.
“உங்களுக்கு மட்டுமில்ல மாமா… எங்களையும் தானே செய்ய வேணாம்னு தடுத்துட்டான். நாங்களும் எத்தன நாளைக்குத்தான் கல்யாண சீர் செய்யாம இருக்குறது.. இப்போ எல்லாத்துக்கும் சேர்த்து போட்டுக்கோ ராஜா!” என்றவாறே கங்கா தன் சார்பாக கைச்செயின் போட்டு தயாவை அழகு பார்க்க, நர்மதா மிதுனாவிற்கு கைசெயின் மாட்டி விட்டாள்.
“அண்ணி நீங்களுமா?” என்ற மிதுனாவின் பார்வை சிந்துவின் மீதே நிலைத்தது.
ஏற்கனவே இனந்தெரியாத வெறுப்பை தன் மேல் சுமந்து கொண்டிருப்பவள், இதை பார்த்து தன்னை ஒதுக்கி விட்டார்களே என்ற தாழ்வு மனப்பான்மை அவளுக்குள் வந்து விடக் கூடாதே என்று பதட்டத்துடன் சிந்துவைதான் பார்த்தாள்.
அவளோ நடப்பதை சந்தோஷமாக ரசித்துக் கொண்டு, தன் மகனுக்கு விளையாட்டு காண்பித்துக் கொண்டிருந்தாள். குழப்பங்கள் நீங்கிய மனதை, சிந்துவின் தெளிவான முகம் வெளிப்படுத்த, மிதுனாவும், தன் தவிப்பு குறைந்ததைப் போல் உணர்ந்தாள்.
மூத்த சகோதரிகள் இருவரும் அதோடு நின்று விடாமல், சாந்தினியை அழைத்து, பாஸ்கர் எப்பொழுது வருவான் என்று கேட்க, அடுத்த பத்தாவது நிமிடத்தில் மனோகரனுடன் வந்து நின்றான் பாஸ்கர்.
அவன் வந்தவுடன் சிந்துவையும் அவனையும் அருகே நிற்க வைத்து, சாந்தினியிடம் சொல்லி, தங்களது செய்முறையாக இருவருக்கும் கைச்செயினை போட்டு விட, அப்பொழுதுதான் மிதுனாவிற்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.
“அக்கா, எனக்கு எதுவும் வேண்டாம்னு ஏற்கனவே சொல்லி இருக்கேனே…” சிந்து அதனை தவிர்க்க முயல,
“வந்த சீரை வேணாம்னு சொல்லக்கூடாது சிந்து” என்று தங்கையைக் கண்டித்த நர்மதா, சாந்தினியை பார்த்து,
”இவ கல்யாணத்துக்கே செய்ய வேண்டியது, அப்போ சூழ்நிலை யாருக்கும் சரியில்ல… அதான் இப்போ செய்றோம். தப்பா எடுத்துக்காதீங்க” என்று விளக்கம் சொல்ல, அவளும் சரியென்று ஒத்துக் கொண்டாள்.
சாந்தினியும் தனது சார்பாக, தங்கமுலாம் பூசிய வெள்ளி வளையலை பரிசாக அளித்து தங்கையை வாழ்த்தினாள். ஆக மொத்தம் அனைவரும் தங்களின் செய்முறையை செய்து முடித்திருக்க, சிந்து மட்டும் எதுவும் செய்யாமல் நின்றது, அனைவரின் முன்னிலையிலும் தன் தலைதாழ்ந்து போனதாய் எண்ணினாள்.
தனது சேமிப்பில் சிறிய அளவில் ஏதாவது வாங்கலாம் என்று சகோதரிகளிடம், சிந்து யோசனை கேட்டதற்கு, தன்னை விட சிறியவள் என, அவளிடம் எந்த செய்முறையும் தயா வாங்கிக் கொள்ள மாட்டான் என்றும், மீறி செய்தால் அவனது கோபத்தைதான் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவளைத் தடுத்திருந்தார்கள்.
ஆனாலும் இருவீட்டு உறவுமுறை உள்ளதே அவளுக்கு! அதன் படி தம்பியின் மனைவியாக செய்யவும் முடியாமல், தன் கைகளை, தானே கட்டிப் போட்டுக் கொண்டதைப் போல் உணர்ந்தாள். கணவன் வேண்டாம் என்று சொல்பவள் எந்த உரிமையில் செய்முறை செய்வாள் என்ற கேள்வியே மனதில் ஓங்கி நின்றது.
இதற்கு எல்லாம் காரணம் கணவன் தன்னுடன் வாழாமல், தான் தோன்றித் தனமாக சென்றதுதானே என்ற எண்ணம் வர, அது கோபமாக உருவெடுத்து பாஸ்கரை வெறுப்புடன் பார்க்க தூண்டியது. திருமண வாழ்வை முதலில் மறுத்து சென்றது தான்தான் என்று சுலபமாக மறந்து போயிருந்தாள் சிந்து.
இவளது வெறுத்த பார்வை கணவனிடம் பதிந்த நேரத்தில், அவனும் சற்று முன்னர் தன் கையில் மாட்டிய கைச்செயினை கழற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். அதனை கண்ணுற்றவள் அவனை எரித்து விடுவதைப் போல் பார்த்து, சுற்றுப்புறம் மறந்து பெருங்கோபத்துடன் குழந்தையை தூக்கிக் கொண்டு மேலே சென்று விட்டாள்.
‘இவன் என்னதான் நினைத்திருக்கிறான்? மனைவி முக்கியம் இல்லை… அவளைச் சார்ந்தவர்கள் செய்ததையும் ஏற்றுக் கொள்ளும் மனமில்லை. யாரிடமும் பேசவும் மாட்டான்… அத்தனை தலைக்கனம் பிடித்தவனா இவன்?’ என்று மனதோடு பாஸ்கரை கரித்துக் கொண்டே படியேறினாள்.
சென்னைக்கும் தனக்கும் ராசியில்லை போலும்… முதல் முறை வந்து, தன் வாழ்க்கையை சிதற விட்டுச் சென்றவள், இரண்டாம் முறையாக இப்பொழுதும் மனச்சஞ்சலத்துடன் அலைக்கழிக்கப் படுவதாக நினைத்து, தன்னிரக்கத்துடன் மேலே தஞ்சம் அடைந்தாள்.
விழா சுவாரசியமாக நடக்க, சிந்து சென்றதை மரகதம் சாந்தினியை தவிர யாரும் கவனிக்கவில்லை. நடக்கும் நிகழ்வுகளும் கணவனின் பாராமுகமும் வெகுவாக சஞ்சலப்படுத்துகிறது என்ற சிந்துவின் மனப்போக்கினை நன்றாக கண்டு கொண்டாள் சாந்தினி..
“மேலே போயி சிந்துகூட பேசிட்டு, அவளை கீழே கூட்டிட்டு வா பாஸ்கர்” சிந்து செல்வதைப் பார்த்த சாந்தினி, தம்பியின் காதினில் மெதுவாக சொல்ல,
“நான் எப்படிக்கா… என்கிட்ட பேசமாட்டா… நான் போகமாட்டேன்!” பதிலுக்கு அவன் தட்டிக் கழிக்க,
“திட்ட வைக்காதே பாஸ்கி! போயி கூட்டிட்டு வா” அழுத்தக் குரலில் தள்ளி விடாத குறையாக பாஸ்கரை அனுப்பி வைத்தாள் சாந்தினி.
சரி என்று எழுந்தவன், கழற்றிய கைச்செயினை அவளிடம் கொடுத்து விடலாம் என்ற எண்ணத்துடன் மேலே செல்ல, அவனை வரவேற்றது விபுகுட்டி.
காலையில் அரைமணிநேரம் அவனிடம் விளையாடியதை குழந்தை ஞாபகத்தில் வைத்திருக்க, தந்தையைப் பார்த்தவுடன், தன்னை தூக்கச் சொல்லி கையை விரித்துக் கொண்டு நின்றது.
“ப்பா…” என்று கிளுக்கிச் சிரித்த மகனை, புன்சிரிப்புடன் தூக்கிக் கொண்டவன், அதே புன்னகையில் மனைவியைப் பார்க்க, அவளோ கொதிநிலையில் அவனைக் கண்டாள்.
‘இப்பொழுதுதான் நான் இருப்பது இவனுக்கு தெரிய வந்ததா? தானாக வந்திருக்கிறானா அல்லது யாராவது அனுப்பி வைத்தார்களா?’
கணவனைப் பற்றி நன்கு அறிந்து கொண்டவளாய், மனதில் தன் எண்ணத்தை கணக்கிட்டுக் கொண்டாள் சிந்து.
பார்வையாலேயே எரித்து விடுவதைப் போல, வந்தவனைப் பார்த்து நின்றவள், அவன் பிள்ளையை தூக்கிக் கொண்டதும் விரைந்து சென்று பிடுங்கிக் கொள்ள முயன்றாள்.
தன் கைப்பொம்மையை தவறவிட்ட குழந்தையின் மனநிலையில் சிந்து செயல் பட, அவளைத் தடுத்து நிறுத்தியவன், நகையை அவளது கைகளில் திணித்து விட்டு, குழந்தையை அணைத்தபடியே கீழே வந்து விட்டான்.
அவனது இந்தச் செயலை, நீயும் உன்னை சார்ந்த எந்தவொரு பொருளும் எனக்குத் தேவையில்லை என்பதைப் போல, அவளாக உருவகப் படுத்திக் கொண்டு, வெகுவாக கொதித்துப் போனாள்.
குழந்தையைக் கொடு என்று சிந்து பேசியிருந்தால் அவனும் பதில் சொல்லி இருப்பானோ? இவனும் பிள்ளையை, ‘நான் தூக்கிக் கொள்ளக்கூடாதா’ என்று கேட்டிருந்தால், அவளும் உரிமைச் சண்டைப் பிடித்திருப்பாளோ? அப்படியாவது இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை நடந்திருக்குமோ? அது, சம்மந்தபட்ட இருவருக்குமே வெளிச்சம்.
குழந்தை தன் கைமீறி சென்ற அதிர்ச்சியில் ஒருநிமிடம் அசையாது நின்றாள் சிந்து. பின்பு மனதோடு எழுந்த ஆவேசத்தில், பிள்ளையை கைபற்றிக் கொள்ளும் வேகம் வர விரைந்து கீழே வந்தவளை, சாந்தினியின் குரல்தான் ஓரிடத்தில் நிறுத்தியது.
“பொறந்த வீட்டு சீரா, பாஸ்கர் ரெண்டு வளையல் வாங்கிட்டு வந்திருக்கான், சிந்து…” என்ற சாந்தினி, அந்த தங்க வளையல்களை அவளிடம் கொடுத்து,
“வீட்டு மருமகளா, எல்லார்கிட்டயும் காமிச்சிட்டு, மிதுனாவுக்கு போட்டு விடு!” என்று உத்தரவாக சொல்லி முடித்தாள்.
மூன்று பவுன் பெருமானமுள்ள தங்க வளையலை பார்த்தவளுக்கு, மிதுனாவின் மீது பொறாமை எண்ணம் தோன்றவே செய்தது.
ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு செய்முறைகள் செய்யும் சொந்தங்கள்… எந்தவொரு விகல்பமும் இல்லாமல் அவளை அரவணைத்துச் செல்லும் உறவுகள்… எல்லாற்றிக்கும் மேல் அவளை கண்களில் தாங்கிக் கொள்ளும் கணவன்… இவர்கள் எல்லாம், தனது திருமணம் தொட்டுதானே இவளுக்கு கிடைத்தார்கள்!
காதலித்து திருமணம் செய்த தனது உறவு பொய்யாகிப் போய் நிற்க, சந்தர்ப்பவசத்தால் ஒன்று சேர்ந்தவர்களின் இல்லற வாழ்க்கை பூத்துக் குலுங்கியதைக் கண்டு, அவள் உள்ளம் மேலும் மேலும் விம்மித் தெறித்தது.
இதோ! தமக்கைக்கு என்று பிறந்த வீட்டு சீரை கொண்டு வந்தவன், அன்றைய தினம் மனைவிக்கென்று என்ன செய்தான்? செந்தணலில் நிற்பதைப் போலத்தானே, தன்னை நிறுத்தி, வேடிக்கை பார்த்தான்!
இன்றைய நாளில், தன் பிறந்த வீட்டு சொந்தங்களையும் பொருமலோடு பார்க்க வைக்கும் தனது இறங்கிய நிலைக்கும், இவன்தானே காரணம் என்று பாஸ்கரின் மீது மேலும் காழ்ப்புணர்ச்சி பொங்கியது.
அந்த உணர்வுகளின் அழுத்தம் தாளாமல், வளையலை ஏந்திக் கொண்ட கைகள் நடுங்கத் தொடங்க, பொறாமைப்படும் தனது மனதைத் தானே காறித்துப்பிக் கொண்டாள்.
தன் மனதை ஆட்டிப் படைக்கும் இந்த கீழ்தரமான இழிநிலையிலிருந்து, உடனடியாக என்னை விடுவித்துவிடு கடவுளே என்று நொடிக்கு நொடி தனது வேண்டுதலை அதிகரித்துக் கொண்டவள், தனது அண்ணி நல்ல முறையில் பிள்ளை பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும் தெய்வமே என்று மானசீகமாக இறைவனிடம் மன்றாடிக் கொண்டாள்.
இன்று ஏனோ மனம் பெரிதும் அலைப்புற்று, வானத்திற்கும் பூமிக்கும் தாவி விளையாடுவதைப் போல், நல்லவைகளும், தீயவைகளும் சம அளவில் அவளைப் பந்தாட, மேற்கொண்டு அங்கே நின்று எந்த செயலையும் செய்யும் மனதைரியம் சிந்துவிற்கு வரவில்லை.
மனதோடு உணர்வுப் போராட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தவளின் கைகளோடு உடலும் சேர்ந்து இன்னும் அதிகமான நடுக்கம் கொள்ள, ‘எனது இரக்கமற்ற கொடூர மனதை காவு வாங்கி விடு இறைவா! என் அண்ணிக்கு நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை சுகந்தமாய் என்னுள் பரப்பி விடு ஆண்டவா!’ என்று மீண்டும் மீண்டும் மனனம் செய்தவாறே, சிந்து சாந்தினியை நோக்க,
“என்ன பார்த்துட்டு நிக்கிற சிந்து? சீக்கிரம் வளையலை எல்லார்கிட்டயும் காமிச்சுட்டு வா” என்று சாந்தினி துரிதப்படுத்தினாள்.
அவளுக்கு, தனது தம்பி முற்றிலும் புதிய மனிதனாக மாறிவிட்டதை, பிறந்த வீட்டுப் பொறுப்புகளை தன் தலை மேல் ஏற்றுக் கொண்ட பெருமையை அனைவருக்கும் தெரியபடுத்திவிட வேண்டும் என்ற ஆர்வமே மேலோங்கி நின்றது.
சாந்தினியின் உத்தரவிலும் சிந்து வேகமாக செயல்படாமல் நொடிநேரம் கல்லாய் சமைந்து நிற்க, அவள் கைகளில் இருந்ததை பிடுங்கிக் கொள்வதைப் போல, வளையல்களை வாங்கிக் கொண்டான் பாஸ்கர்.
அனைவரிடமும் காண்பித்து விட்டு, கணப்பொழுதில் மிதுனாவின் கைகளுக்கு ஒரு வளையலை மாட்டியவன், மற்றொன்றை சிந்துவிடம் கொடுத்து ‘போட்டு விடு’ என்று சைகை காட்ட, சாவி கொடுத்த பொம்மையைப் போல, அதனைச் செய்து முடித்தாள்.
கண்களை விரித்து, மகிழ்ச்சிப் பார்வையில் பாஸ்கரை நோக்கிய மிதுனா,
“பாஸ்கி… நான் கனவு காணலையே? நெஜமாவாடா? என் தம்பிக்கு இவ்வளவு பொறுப்பு வந்துருச்சா?” நம்ப முடியாத பாவனையில் தம்பியை ஏறிட்டவள், பெருமையுடன் தன் கணவனிடம், அவனது செயலை பார்வையால் அறிவிக்க,
சன்னமான சிரிப்பில் “இப்படியே எல்லா விசயத்திலேயும் பொறுப்பா நடந்தா, ரொம்ப சந்தோஷம் மிது!” பூடகமான பேச்சில் மனைவியை கடந்து சென்று விட்டான் தயானந்தன்.
‘என் தம்பி, என்ன செஞ்சாலும் குத்தமா பாக்குறதே வேலையா வச்சிருக்காரு… ரெண்டு வார்த்தை அவன்கூட நின்னு பேசினா என்ன?’ என்று மனதில் கணவனை நொடித்துக் கொண்டவள், தம்பியை வாஞ்சையாகப் பார்த்து பேச்சினைத் தொடர்ந்தாள்.
“உன்னுடைய இந்த மாற்றத்தை பார்த்து ரொம்ப சந்தோஷப் படுறேன்டா…” என்று பூரித்துக் கொண்ட மிதுனா,
“இதப் பார்க்க நம்ம அம்மா இல்லையே!” என்று வருத்தம் கொள்ள,
“இங்கே நடக்கிற எல்லாமே, அம்மாவும் பார்த்துட்டு இருப்பாங்க மிதுனா! வருத்தப்படாதே” என்று தங்கையை சமாதானப் படுத்தினாள் சாந்தினி.
உடன்பிறந்தவன் பொறுப்பானவனாக மாறி விட்டான் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும் என அனைவரிடமும் கூக்குரலிட்டு சொல்ல வேண்டும் என்றே அந்த சகோதரிகளின் மனம் ஆசைப் பட்டது.
“அக்கா, நீங்க நினைக்கிற அளவுக்கு நான் நல்லவனா மாறல… இப்போதான் சம்பாதிக்க ஆரம்பிச்சுருக்கேன் இன்னும் திட்டம் போட்டு வாழப் பழக்கப் படுத்திக்கல… கொஞ்சம் நீங்க பாசமா பேசினாலும் பழைய பாஸ்கர் வந்து சோம்பேறித் தனத்தை காட்டிட்டுவான்கா” அந்த நேரத்து கனத்தை மாற்ற, சிரிப்போடு அசராமல் பேசியவனை, பார்த்து உடன்பிறந்தவர்கள் சிரிக்க, அவனுக்கு அருகில் நின்றிருந்த சிந்து வாயடைத்து நின்றாள்.
“இவனுக்கு இப்படியெல்லாம் கூட பேச வருமா? இவனுடய கஞ்சத்தனம் எல்லாம் என்னிடம் மட்டும்தானா?” என மனதோடு மருகியவள், தான் மட்டுந்தான் இவனை உயிராய் நேசித்தோமா? இவனுக்கு என் மேல் காதலே இல்லையா? என்று பெருத்த சந்தேகமும் கொண்டாள்.
தெரிந்தோ தெரியாமலோ அவனுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டதை நினைத்து, அந்த நேரம் தன்னையே அருவெறுக்கத் தொடங்கினாள்.
கணவனின் மேல் ஐயம் கொண்டவளுக்கு, அவளது மனசாட்சி, சந்தேகத்தையே தீர்ப்பாக வழங்கியது. அதன் முடிவு இவன் என்னிடம் கொண்டது காமம் மட்டுமே, காதல் அல்ல என்று அரிய பெரிய விஷயத்தை அவளுக்கு சாதகமாக சொல்லி முடித்தது.
அன்றைய தினம் மனதளவில் உலைக்கலனாய் கொதித்துக் கொண்டிருந்தவள் சிந்து மட்டுமே! மிதுனா கூட அடுத்தடுத்து நடந்த சந்தோஷ நிகழ்வுகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு, தனது மனஸ்தாபத்தை ஏறக்குறைய மறந்தே போய் விட்டாள்.
விருந்து முடிந்து, விழாவும் இனிதாக நிறைவடைய, பாஸ்கரை எங்கும் செல்லக் கூடாதென்று மிரட்டல் பாணியில் ஆணையிட்டு, அனைத்தையும் ஒதுக்கி வைக்கச் சென்றான் தயா.
எப்பொழுதும் பாஸ்கரிடம், தயா கடைபிடிக்கும் இந்த தோரணை மிதுனாவிற்கு சற்றும் ஒப்பவில்லை. முன்னர்தான் இவன் சரியில்லை என்று இளக்காரமாகப் பேசியவன், இப்பொழுதாவது தனது எண்ணப்போக்கை மாற்றிக் கொள்ள மாட்டானா என்றே ஏங்கித் தவித்தாள்.
தங்கையின் மேலுள்ள பாசம், திருமணம் தொட்டு அவள் படும் துயரங்கள் என அனைத்தும் சேர்த்து, பாஸ்கரை எப்பொழுதும் பொறுப்பற்றவனாக பண்பாற்றவனாக தனக்குள் சித்தரித்து வைத்திருந்தான் தயானந்தன்.
கணவனின் எண்ணத்தை மாற்ற வைத்து, அவனை புரிந்து கொள்ளச் செய்வது எவ்வாறு என்று கலக்கம் கொண்டாள் மிதுனா.
தன் தம்பி, சிந்துவோடு மீண்டும் மகிழ்ச்சியுடன் வாழ தொடங்கும் வரை, தயாவை மாற்ற முடியாது என்று அறிந்து கொண்டவள், இப்பொழுதே இவர்களின் பிரச்சனையை பேசி முடித்து விடுவோம் என்று தனக்குள் முடிவெடுத்தாள்.
ஆனால் மிதுனாவிற்கும் வேலை வைக்காது, தயாவின் ஆணையையும் அறியாது, சிந்து புதியதொரு முடிவுடன் அனைவரின் முன்பும் வந்து நின்றாள்…