Eedilla Istangal – 11.1

Eedilla Istangal – 11.1

ராஜசேகர், ஒரு மருத்துவர்.

கோவையில் ஒரு சிறிய கிளினிக் வைத்து நடத்திக் கொண்டிருந்தார். திருமணமானவர். சரத், ஜெகன் என்று இரு பிள்ளைகளின் தந்தை. மனைவியை இழந்தவர்.

அவர் மனைவி ஜெகனைப் பிரசவிக்கும் போது இறந்துவிட்டார்.

அவருக்கு உறவுகள் பக்கபலமாக இருந்ததால்… பிள்ளைகள், வீடு, வேலை என எல்லா இடங்களிலும் பொறுப்பாகத் தன் கடமையைச் செய்ய முடிந்தது.

சிறு கிளினிக் என்றாலும், அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்தமான மருத்துவர். காரணம்? அவரது எளிமை, கனிவு, பொறுமை இதெல்லாம் கூட இருக்கலாம்!

சரத், ஜெகன்… இருவரும் கீதா வேலை செய்யம் பள்ளியில்தான் படித்து வந்தார்கள்.

இந்தச் சுழலில்தான்,

சரத்தின் படிப்பிற்காக உதவி கேட்டு, அவன் படிக்கும் பள்ளியை ராஜசேகர் நாடினார்.

அறிவியல் பாடத்திற்கென பிரத்யேக வகுப்புகள் வேண்டுமென சரத்தின் வகுப்பாசிரியரிடம் கேட்டார்.

அறிவியல் ஆசிரியரைக் கேளுங்கள் என வகுப்பாசிரியர் கீதாவைக் கை காட்டினார்.

சரத்தின் அறிவியல் ஆசிரியர் என்ற முறையில்தான், ராஜசேகர் முதன் முதலில் கீதாவைச் சந்தித்தார்.

அப்படித்தான் அவர்களின் அறிமுகம் நடந்தது.

ராஜசேகர், தன் வேண்டுகோளைக் கீதா முன் வைத்தார்.

தான் யாருக்கும் அதுபோல் சிறப்பு வகுப்புகள் எடுப்பதில்லை என்று கீதா மறுத்தார்.

மேலும் மேலும் ராஜசேகர் வற்புறுத்தி கேட்கவே, கீதா ஒத்துக் கொண்டார்.

அதன்படி, பள்ளி முடிந்ததும், அமுதாவையும் சரத்தையும் கீதா வீட்டிற்குக் கூட்டிச் செல்வார்.

ஜெகனை, ராஜசேகர் வந்து அழைத்துச் செல்வார்.

சற்று நேரம், கீதா சரத்திற்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார். பின் கிளினிக் முடிந்ததும் ராஜசேகர் வந்து, சரத்தை அழைத்துச் செல்வார்.

ஒருநாள் ஜெகனை அழைத்துச் செல்ல, ராஜசேகர் வரத் தாமதம் ஆனது. அன்று ராஜசேகருக்குத் தகவல் சொல்லிவிட்டு, ஜெகனையும் தன்னுடன் கீதா அழைத்துச் சென்றார்.

பின் அதுவே வழக்கமாயிற்று! பின்னர் அதுவே பிடித்துப் போயிற்று!!
யாருக்கு?? – கீதா? சரத்?? ஜெகன்?

பதில் மூவருக்கும்தான்!!

கிளினிக் முடிந்த பின், கீதா வீட்டிற்கு வந்து சரத்தையும் ஜெகனையும் ராஜசேகர் அழைத்துச் செல்லுவார்.

ராஜசேகர் தாமதமாக வரும் நாட்களில்… சரத்தும், ஜெகனும் இரவு உணவைக் கீதா வீட்டிலே முடித்துக் கொள்ளவர்கள்.

சில சமயம் ஜெகன் தூங்கிவிட்டால், ராஜசேகர் வரும் வரையில் சரத்தும் கீதாவும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

அது, அவர்கள் இருவருக்கும் மிகப் பிடித்தமான நேரச் செலவிடல்கள்.

அமுதா??

அவளின் பாச உண்டியல், அப்பாவின் பாசம் கொண்டு மட்டுமே நிரம்பும்.

அதற்காக அவள் தனித்திருக்கவில்லை.

சரத், ஜெகன்… இருவருடன் சேர்ந்து படிப்பாள், விளையாடுவாள், இரவு உணவு உண்பாள்… இப்படி நிறைய!

நாட்காட்டியின் நாட்கள், இதுபோன்ற முரண்பாடுகளின் பாதையில் சென்று கொண்டிருந்தன.

சரத்திற்கும் ஜெகனிற்கும் கீதாவை மிகவும் பிடித்திருந்தது. அவரின் மேல் நிரம்ப மரியாதை வைத்திருந்தனர்.

அதிலும் சரத், கீதாவை மிகவும் சார்ந்திருந்தான். முதலில் அறிவியல் பாடம் என்று மட்டும் ஆரம்பித்தது… அதன்பின் அவனது கல்வி சம்பந்தமான விடயங்களைக் கீதாவே பார்த்துக் கொள்ளும் நிலை வந்தது.

அது அவனுக்கும், கீதாவுக்கும் பிடித்திருந்தது.

அந்தப் பாசத்தை… ஏன்? எதற்காக? என்ன காரணம்? என்ன பிரதி பலனிற்காக?? என்று எந்தக் கேள்வி பதிலுக்குள் அடக்கி வைக்க முடியாது.

வெகு சில நேரங்களில், கீதாவை யாரும் ஏதேனும் சொல்லிவிட்டால், சரத்தால் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த அளவில் இருந்தது, அவனது பாசம்!

சில நேரங்களில், பள்ளி மைதானத்தில் பிள்ளைகளை விளையாட விட்டு, ராஜசேகரும், கீதாவும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

சண்டை போடுவதற்கு மட்டுமே வார்தைகளைப் பயன்படுத்திய கீதாவிற்கு, இப்படிச் சாதாரணமாகப் பேசப் பயன்படுத்தியது பிடித்திருந்தது.

அமுதா??

இன்னும், வாரக் கடைசியில் அப்பாவுடன் செலவிடும் நாட்களுக்காகவே… வார நாட்களை வாழ்ந்து வந்தாள்.

கீதா, எவ்வளவு பாசமாக இருந்தும், அமுதாவின் மனம் தந்தையைச் சுற்றித்தான் வந்தது.

இதற்கிடையே கீதாவிற்கு விவாகரத்தும் கிடைத்திருந்தது.

இந்தச் சூழலில்,
ராஜசேகர் எம்எஸ் படிப்பதற்காக வெளிநாடு செல்ல முடிவெடுத்திருந்தார்.

சரத், ஜெகன் இருவரையும் தன் உறவு வழியில் இருந்தப் பெரியவர் பொறுப்பில் ஒப்படைத்திருந்தார். அந்தப் பெரியவரிடம், வீட்டை கவனித்துக் கொண்டு… சரத் ஜெகன் இருவரையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

அதுமட்டுமில்லாமல், கீதாவிடமும் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டே சென்றார்.

கீதா இல்லையென்றால்… சரத்தும் ஜெகனும்… அப்பாவின் இந்தப் பயணத்தை ஏற்றிருப்பார்களா? என்றால்… சந்தேகம்தான்.

கீதா என்ற ஒரு பெண் இல்லாமல் இருந்திருந்தால், இப்படி ஒரு முடிவை ராஜசேகர் எடுத்திருப்பாரா?? என்றால் சந்தேகம்தான்.

ராஜசேகரைத் தவிர வேறு யாரும் இப்படிக் கேட்டிருந்தால் கீதா சம்மதிருப்பாரா? என்றால் சந்தேகம்தான்.

நால்வருக்கும் இடையே அப்படி ஒரு பாசம் இருந்தது.

நாட்காட்டியின் நாட்கள், கீதா, சரத், ஜெகன் மூவருக்கும் ஒரு புது உலகத்தை நோக்கிப் பயணித்தன.

இதற்கிடையே,
கீதாவின் தாயார் இறந்திருந்தார். ஆகையால் ஒரு பத்து நாட்கள், கிணத்துக்கடவில் கீதா இருந்தார்.

ஆனால் அந்த பத்து நாளில், சரத்தும் ஜெகனும் தவித்துப் போயினர்.

ஏன்?? கீதாவும்தான்!

இந்தச் சூழலில்,

ராஜசேகர் எம்எஸ் முடித்துவிட்டு வந்தார். இனிமேல் கோவையில் பணி செய்ய வேண்டாம், சென்னை சென்றால் இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கும் என்று நினைத்தார்.

எடுத்த முடிவை உறவினர்களிடமும் கூறினார்.

அவரது முடிவை ஏற்றுக் கொண்ட உறவினர்கள், ராஜசேகரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தனர்.

அது, கீதாவைத் திருமணம் கொள்ள வேண்டுமென.

ராஜசேகர் காரணம் கேட்கையில், சரத், ஜெகனை கீதா பார்த்துக் கொண்ட விதத்தால், இந்த முடிவு எனக் கூறினார்கள்.

திருமணத்தில் ராஜசேகருக்கு உடன்பாடு இருந்தது. ஏற்கனவே நிறைய முறை கீதாவிடம் நட்புடன் பேசியிருப்பதால், அவரைப் பற்றித் தெரியும்.

கீதா, சரத்தையும் ஜெகனையும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்.

அதேபோல, தானும் அமுதாவைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென ஆசை கொண்டார்.

பெண் பிள்ளை இல்லை என்பதால், இந்த ஆசை ராஜசேகருக்குச் சற்று அதிகமாகவே இருந்தது.

கீதா போன்ற ஒரு பெண், வாழ்வின் நீளத்திற்குத் துணை வருவது, ராஜசேகருக்கு மகிழ்ச்சியே!

திருமணத்திற்குச் சம்மதித்தார்.

எனினும் கீதாவிடம் கேட்க வேண்டும், முக்கியமாக அமுதாவைக் கேட்க வேண்டும் என்றார். மற்றவர்களின் உணர்வுகளை மதித்து நடப்பவர்.

உண்மையில்,
ராஜசேகர் ஒரு நல்ல மனிதர்!

****

ராஜசேகரின் உறவினர்களே கீதாவின் வீட்டிற்கு வந்து இதுபற்றிக் கேட்டனர்.

மறுப்பதற்கு காரணம் இல்லையென்று கீதாவிற்குத் தோன்றியது.

எனினும் யோசித்தார்.

சரத், ஜெகனை விட்டுப் பிரிந்திருக்க முடியாது என்று தோன்றியது. அதிலும் சரத்தை! சாத்தியமில்லை!!

இன்னொன்று, தன் மகள் தனியாக வளராமல், சரத் ஜெகனோடு வளர்வாள் என்ற நினைப்பு மகிழ்ச்சியைத் தந்தது.

மேலும்,
சிறுவயதிலிருந்து தந்தை இல்லாமல் தனியாக வளர்ந்தாயிற்று.

கணவன் என்று வந்தவரிடமிருந்தும் சரியான கவனிப்பு இல்லை.

உறவென இருந்த தாயும் இல்லை.

இன்னும் வாழும் நாள் முழுவதும், ஏன் இதுபோல் தனியாக வாழ வேண்டும்??!

அதுவும் தோழனாகத் தோள் கொடுக்க, இப்படியொரு நல்லவர் இருக்கும் போது!

அமுதா? அவளிடம் கேட்டாரா?? இல்லை, கேட்கவில்லை!

இந்த இடத்தில், கீதா கொஞ்சம் சுயநலமாகச் செயல்படுகிறாரோ?

கீதா திருமணத்திற்குச் சம்மதித்தார்.

*****
திருமணம் பற்றி, அதிபனிடம் சொன்னார். ஊரில் வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

கீதா வாழ்வில் தான் முடிவெடுக்கும் ஸ்தானத்தில் இல்லை என்று தெரியும். ஆதலால் அதிபன் ஒன்றும் சொல்லவில்லை.

ஆனால் அமுதா?

“அமுதா” என்றார், ஒற்றை வார்த்தையாக! அது வார்த்தை மட்டுமல்ல. அவரது வாழ்க்கை.

“எங்க கூடத்தான் இருப்பா” என்று ஒற்றை வரியில் முடித்து விட்டார்.

அதிபன் எதுவும் மறுத்துப் பேசவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது!

ராஜசேகர் கீதா பதிவுத் திருமணம் நடந்தது. ஐவரும் சென்னைக்குக் கிளம்பத் தயாராகினர்.

அமுதா??

வாரத்திற்கு ஒரு முறை அப்பாவைச் சந்தித்து, பாச உண்டியலை நிரப்பியவள், இனிமேல் மாதத்திற்கு ஒரு முறை அப்பாவைச் சந்தித்து அதை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டாள்.

போகும் முன், அப்பாவின் முன் நின்றாள்…

“அமுதா” என்று அதிபன் ஆரம்பிக்கும் போதே,

‘முடியாதுப்பா’ என்பது போல் மறுத்து தலையசைத்து தன் முடிவைச் சொன்னாள்.

ஆணித்தரமான முடிவு என்று சொல்வார்களே, அது போன்ற ஒரு தலையசைப்பு அது!

சத்தமே வராமல் கண்ணீர் வடித்தாள். அதிபனின் கண்களிலும் நீர் முட்டிக் கொண்டு நின்றது.

“அப்பா ப்ளீஸ்… நான் உங்க கூடவே இருக்கேனே. அவங்க மட்டும் போகட்டுமே” என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.

இதற்கு முன்னும் அமுதா, தன் அப்பாவைப் பிரிந்து இருந்திருக்கிறாள். அப்போதெல்லாம் இப்படிக் கெஞ்சிக் கொண்டு நிற்கவில்லை.

ஏனென்றால் அம்மாவுடன்தானே இருக்கிறோம்… அம்மா வீட்டில்தானே இருக்கிறோம்… என்ற உணர்வு.

ஆனால் இன்று நிலைமை வேறு!
ஏதோ ஒரு தயக்கம் அவளுள்!
ஏதோ ஒரு கோபம் அவளுள்!
ஏதோ ஒரு ஏக்கம் அவளுள்!
ஆதலால் இப்படி!!

“அமுதா…”

“முடியாது-ப்பா. நான் உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன்” என்ற ஒற்றைப் புள்ளியில் கால் கடுக்க நின்றாள்.

“அமுதா… அப்பா சொல்றதைக் கேளு” என்று தொடங்கும் போதே, அவரது இடுப்பை இரு கைகளால் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“அமுதா, நீ கொஞ்ச நாள் அம்மாகிட்ட இரு. அப்பாக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு வந்து, அப்பா அமுதாவைக் கூட்டிட்டு வந்துருவேன்”

“நீங்க பொய் சொல்றீங்க-ப்பா” என்று ஏங்கி ஏங்கி அழுதாள்.

“அப்பா உன்கிட்ட பொய் சொல்வேனா?”

“நிஜமா கூட்டிட்டு வந்திருவீங்களா?” என்றவள் கண்களில், ‘எப்ப-பா அந்த நாள் வரும்?’ என்ற கேள்வி இருந்தது.

“கண்டிப்பா அமுதா! நிறைய பிள்ளைகளோட படிப்பு விஷயமா… அப்பாக்கு ஒரு வேலை”

‘புரியலையே-ப்பா’ என்கின்றது போல் பார்த்தாள்.

‘இந்த வயதில் எப்படிப் புரியும்? என்ன புரிய வைக்க முடியும்?’ என்று தவித்தார்.

அதிபனின் உள்ளத்தை இலட்சம் ஊசிகள் கொண்டு குத்துவது போல வலி.

“அப்பாவை நம்பு அமுதா. கண்டிப்பா உன்னைக் கூட்டிட்டு வந்திடுவேன்”

மகளைச் சம்மதிக்க வைக்க, இன்னும் நிறைய நிறைய நிறைய பேசினார்.
கடைசியில் அரைமனதாகத்தான், அப்பாவும் பெண்ணும் பிரிந்தனர்.

‘போக மாட்டேன்’ என்று சொல்லும் மகளை அனுப்புவதில் அதிபனுக்கு சற்றும் உடன்பாடு இல்லை. ஆனால் அதிபன் இப்படிச் சொல்லக் காரணம் இருந்தது.

அந்தத் தனியார் பள்ளி தொடங்கும் பிரச்சனையில், இதுவரை இருந்த எதிர்கட்சி உடன்பிறப்பு, அந்த நிலையிலிருந்து ஆளும் கட்சி உடன்பிறப்பு என்று ஆகியிருந்து.

ஊரில் கால்வாசி பேருக்கு, தனியார் பள்ளி ஆரம்பிப்பது சம்மதமே! அவர்களால் பணம் கொடுக்க இயலும்! அரசுப் பள்ளியின் தேவை அவர்களுக்கு கிடையாது.

ஆனால் இயலாதவர்கள்!

அரசுப் பள்ளி இல்லை என்றால், அதில் படிக்கும் மாணவர்களின் நிலை?? கேள்விக்குறிதான்!

ஊர் மக்களுக்காக ஒரு விடயத்தில் இறங்கியாயிற்று. இனி முன் வைத்த காலை பின் வைக்க கூடாது என்று நினைத்தார்.

மேலும் அதிபனுடன் நிறைய இளைஞர்கள் களத்தில் இருந்தனர். அவர்களை அப்படியே விட்டுவிட்டு வர முடியுமா?

மேலும் அந்த ஊரின் முக்கால்வாசி மக்கள், அவரை மலை போல் நம்பியிருந்தனர்.

இதற்காகப் போராட்டம் செய்ய வேண்டிய நிலை வரலாம். அது போன்ற நேரங்களில் யார் அமுதாவைப் பார்த்துக் கொள்வது? என்ற கேள்வி எழுந்தது.

பதிலில்லா கேள்வி!

தன் தாயார் இருந்திருந்தாலாவது, அமுதாவை தன்னுடன் இருக்க வைத்திருக்க முடிந்திருக்குமே என்று வருந்தினார்.

அமுதாவைப் பார்த்துக் கொள்ள யாரையாவது நியமித்தால் என்ன? என்று தோன்றியது.

ஆனால் தான் பார்த்துக் கொள்ளவே, கீதாவிடம் பெரிய வாக்குவாதம் செய்ய வேண்டியிருக்கும்… இதில் வேறு ஒருவர் என்றால்??

மேலும், விவாகரத்து கிடைத்த போது கூட… அமுதாவை அதிபன் உரிமை கொண்டாடவில்லை.

காரணம், மகளைப் பிரிந்து கீதாவால்
இருக்க முடியாது என்று அதிபனுக்குத் தெரியும். ஆதலால்!

ஆனால், இன்று கீதாவின் முடிவை எப்படி ஏற்றுக் கொள்ள என்று தெரியவில்லை!

தந்தை ஸ்தானத்தில், தான் இருக்கும் போது, வேறொருவர் தன் பெண்ணைப் பார்த்துக் கொள்வதை அதிபன் சற்றும் விரும்பவில்லை.

இந்தப் பிரச்சினை முடிந்தவுடன், கீதாவுடன் சண்டை போட்டாவது மகளைத் தன்னிடம் அழைத்துக் கொள்ள வேண்டுமென எண்ணிக் கொண்டார்.

சுருக்கமாக அதிபன் இங்கே சூழ்நிலைக் கைதி!

இப்படித்தான் ராஜசேகர், கீதா, சரத், அமுதா, ஜெகன் சென்னை வந்தனர்.

*****

சென்னை வந்ததும், கீதா செய்த முதல் வேலை, மகளுக்குத் தன் விருப்பப்படி ‘தாரா’ என்று பெயர் மாற்ற நினைத்தது.

ராஜசேகர், ‘இது தப்பு. வேண்டாம்’ என்று கூறினார். ஆனால் கீதா கேட்கவில்லை.

கீதா… ‘தாரா’ என்று பெயர் மாற்ற நினைத்ததற்கு காரணம்… ‘அமுதா’ என்று பெயர் வைத்ததற்கு அதிபன் சொன்ன விளக்கமாகக் கூட இருக்கலாம்.

அதுபோல, சென்னையில் கிடைத்த நட்புகளுக்கு, அவர்களது தனிப்பட்ட வாழ்வைப் பற்றிச் சொன்னதே இல்லை.

இருவரும் மூன்று பிள்ளைகள் கொண்ட தம்பதிகள் என்ற அடையாளத்துடனே வலம் வந்தனர்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை, ராஜசேகர் தாராவைக் கோவை அழைத்துச் செல்லுவார்.

கோவை வரை விமானத்தில் செல்வார்கள். அதன்பின் கார் பயணம்!

காரிலிருந்து இறங்கியதும், ஓடிச் சென்று காத்திருக்கும் அப்பாவைக் கட்டிக் கொள்ளுவாள்.

ஓரிரு முறை, இப்படிக் கூட்டி வந்த பின்,
தாராவின் இந்த மகிழ்ச்சியைச் சென்னையில் பார்க்கவில்லை என்பதை ராஜசேகர் உணர ஆரம்பித்தார்.

error: Content is protected !!