அதிபன், அமுதா… இருவரும் கோவையிலிருந்து அரசம்பாளையத்திற்கு பேருந்தில் பயணம் செய்வார்கள்.
பேருந்து பயணத்தில்…
சுள்ளென அடிக்கும் காலை வெயில்!
சரேலென வீசும் மரங்களின் காற்று!
சன்னலோர இருக்கை! – அவளின்
சந்தோஷ குவியலாய் அப்பா!
சிறகை விரித்துப் பறந்திடும் பறவையின் மகிழ்ச்சியை உள்ளத்தில் உணர்வாள்.
அந்த நாள் வரை சேமித்து வைத்த வார்த்தைகளையெல்லாம், அன்று அப்பாவுடன் பேசிப் பேசியே செலவு செய்வாள்.
அப்பா பேசும் வாக்கியங்களை, பாச உண்டியலில் போட்டு வைப்பாள். சென்னை சென்ற பின் உதவும் என்று!
“ப்பா… அங்க எல்லாரும் என்னைய தாரான்னு கூப்பிடறாங்க. ஏன்-ப்பா?” என்று கேட்டாள்.
அதிபனுக்கும் புரிந்தது. மகளின் பெயரை, கீதா மாற்ற முயற்சிக்கிறார் என்று! அதிபன் ஆட்சேபனை செய்யலாம். ஆனால் அவர் அதை விரும்பவில்லை.
அவரின் அந்த ஒரு நிமிட யோசிப்பிற்குள், ஓராயிரம் முறை ‘ப்பா.. ப்பா’ என்று உச்சரித்திருப்பாள்.
“யார் எப்படிக் கூப்பிட்டா என்னம்மா? அப்பாவுக்கு நீ என்னைக்கும் அமுதாதான்”
“ப்பா” என்றதிலே தெரிந்தது, அதில் அவளுக்கு உடன்பாடு இல்லை என்று!
“விடும்மா. கொஞ்ச நாளைக்குத்தான. அப்புறமா அப்பா உன்னைக் கூட்டிட்டு வந்திடுவேனே?! ”
“எப்ப-ப்பா அந்த நாள் வரும்??” என்றவள் குரலில் ஏகப்பட்ட ஏக்கங்கள் இருந்தது.
அதிபன் வெளியே சிரித்துச் சமாளித்தார். ஆனால் உள்ளே சித்திரவதைப் போல் உணர்ந்தார்.
நடத்துனர் வந்ததும், பயணச்சீட்டு வாங்கிக் கொண்டார்.
நடத்துனர் சென்றதும்…
“ப்பா… அந்த டிக்கெட் கொடுங்க” என்று கை நீட்டினாள்.
“எதுக்கும்மா??”
“பர்ஸ்ட் கொடுங்கப்பா…” என்று, அவர் கையிலிருந்த பயணச்சீட்டை வாங்கினாள்.
‘எதற்காக?’ என்பது போல் பார்த்தார்.
“இதைப் பத்திரமா வச்சுக்குவேன். உங்க நியாபகமா… ” என்றவள், மறக்காமல் தன் பைக்குள் அதைப் பத்திரப் படுத்தினாள்.
அதிபனின் நிலை… என்ன தவம் செய்தேன்? யான் இவளை என் மகளென பெற!! என்பதுதான்.
“ப்பா..”
“என்னம்மா??”
“இது, இந்த டைம் மட்டும் கிடையாது. ஒவ்வொரு டயமும், மறக்காம டிக்கெட் கொடுக்கணும். சரியா??” என்று கட்டளையிட்டாள்!
‘சரியென்று’ என்று தலையசைத்தவர், ஊர்ப் பிரச்சினை முடிந்தவுடன், தன் மகளுடன் நிறைய நிமிடங்கள் செலவிட வேண்டும் என ஆசை கொண்டார்.
அன்று ஒருநாள் முழுவதும், தன் அப்பாவுடன் பேசி, சிரித்து, உண்டு… என வாழ்வாள்.
நாட்காட்டியின் மற்றொரு நாலாவது ஞாயிறு…
ஒரு சில நேரம், இப்படி அரசம்பாளையம் வரும் நாளில் அப்பாவின் மார்பில் படுத்துக் கொள்வாள். ஆனால் அக்கணமும் வீணாக்காமல் பேசுவாள்.
“ப்பா…”
“ஸம் டைம்ஸ், நீங்க பக்கத்தில இல்லைன்னா… ரொம்ப டவுனா பீல் பண்றேன்-ப்பா”
மகளின் பாஷை, பழக்க வழக்கம் மாறுவதை… அதிபன் உணர்ந்தார்.
அவர், அந்த ஒரு நிமிடம் யோசிக்கையில், அவள் ஓராயிரம் முறை ‘ப்பா ப்பா’ என்று அழைத்திருந்தாள்.
எது மாறினாலும், அவளின் இந்த பாசம் மாறவில்லை என்றும் உணர்ந்தார்.
“அப்படித் தோணுச்சுன்னா… நீயே, உனக்கு நம்பிக்கை தர்ற மாதிரி பேசிக்கனும்”
‘ம்ம்ம்’ கொட்டினாள்.
“அப்பாகிட்ட வந்திட்டா, அந்த மாதிரி நினைக்க மாட்ட. சரியா?”
“எப்ப-ப்பா அந்த நாள் வரும்??”
“வரும்மா” என்று சொல்லி, அவளின் தலை கோத ஆரம்பித்து விடுவார்.
இந்த ஒருநாளில் வாழ்வதுதான் வாழ்க்கை என்று நினைக்கும் அளவிற்கு, அப்பாவின் மீது பாசம் வைத்திருந்தாளோ??
நாட்காட்டியின் நாட்கள் அமுதாவின் பதினான்கு வயது வரை இப்படியே பந்தாடப்பட்டன.
நாட்காட்டியின் இன்னுமொரு நாலாவது ஞாயிறு…
அதிபன் அன்று மிகவும் சுணக்கமாகத் தெரிந்தார். மகள் எவ்வளவு பேசினாலும், மனம் அதில் ஒன்றாமல் இருந்தார்.
அப்பாவின் மனதைத் தெளிவாகப் படித்தவள், “ஏன்-ப்பா ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லை. நீ பேசும்மா”
“ரியலீ” என்று ஆச்சரியம் காட்டினாள்.
அதிபன் சிரித்தார்.
“சிரிச்சது போதும்-ப்பா. என்னன்னு சொல்லுங்க” என்று சிடுசிடுத்தாள்.
“அம்மாக்காக, உனக்காக… அப்பா கொஞ்ச நேரம் ஒதுக்கியிருக்கனும். இல்லையா?”
“அப்படியெல்லாம் இல்லைப்பா. பட் ஸடன்னா ஏன் இப்படி யோசிக்கிறீங்க?”
“எங்க ரெண்டு பேருக்கும் சண்டை வந்திருக்காதுல… அதான்”
“ப்பா… என்னாச்சு-ப்பா?”
“அம்மா நிறைய கஷ்டப் பட்டாங்களோன்னு தோணுது”
அமைதியாக இருந்தாள்.
“நீயும் அம்மாவைக் கஷ்டப் படுத்திடாத” என்று வேண்டுகோள் வைத்தார்.
“இதை ஏன் இப்ப யோசிக்கணும்?” என்று புரியாமல் கேட்டாள்.
“அது வந்து…” என்று தயங்கினார்.
“சும்மா சொல்லுங்கப்பா…”
“தேவான்னு ஒரு பையன். நம்ம ஊர் பையன்தான். அப்பாகூட இந்த ஸ்கூல் விஷயமா போராட்டத்தில இருக்கான்”
“ம்ம்ம்”
“ரொம்ப நல்ல பையன். அவனோட எண்ணங்கள் எல்லாம் அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்குது. இப்பெல்லாம் அப்பா, அவன்கூட நிறைய நேரம் பேசிக்கிட்டு இருக்கேன்”
சிறு வயதில் எப்படியோ தெரியாது. ஆனால் இந்த வயதில், அவளுக்கு அப்பா செய்யும் சேவைகளில் மிகுந்த ஈடுபாடு உண்டு.
இந்த இடத்தில்,
அப்படிப்பட்டவர் ஒருவனைப் புகழ்கிறார் என்றால்… அவன் எத்தகையவன்? என்ற எண்ணம் முதன் முதலாக அவளுக்குள் உருவானது.
“அவனுக்கு நான்தான் முன்னுதாரணம்-னு சொல்றான்-மா”
“நீங்க நிறைய பேருக்கு ரோல் மாடல்-ப்பா” என்று பெருமையாகச் சொன்னாள்.
அதிபன் சிரித்து முடித்து, “அவனுக்கு அம்மா, அப்பா கிடையாது. அப்படிப்பட்டப் பையனுக்குத் தப்பா வழி காட்றனோன்னு தோணுது” என்றார்.
“நீங்களா? சான்ஸே இல்லைப்பா” என்று அடித்துச் சொன்னாள்.
“இல்லம்மா. அன்னைக்கு ஒரு நாள் பேசிறப்போ… ‘எதிர்காலத் திட்டம் என்னன்னு கேட்டேன்?’ ”
“என்ன சொன்னான்?”
“மரியாதை கொடுத்து பேசும்மா. இந்த வயசிலே, இப்படி ஒரு சிந்தனை இருக்கிற பையன். மரியாதை கொடுக்கனும்” என்றார் கண்டிப்புடன்!
“என்ன ஏஜ்-ப்பா?”
“ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ் போகப் போறான்”
“ஓ! ஸாரி-ப்பா. சரி, என்ன சொன்னாங்க?” என்று திருத்திக் கொண்டாள்.
” ‘தேவைப் படுறவங்களுக்குத் தேடித் தேடி உதவி செய்யனும். இந்த மாதிரி பிரச்சனை வந்தா… அதுக்காக முதல் ஆளா குரல் கொடுக்கணும்’ ”
“ப்பா, இது நல்ல விஷயம்தான??”
“நல்ல விஷயம்தான். ஆனா, கல்யாணம் முடிக்க மாட்டேன்னு சொல்றான்-ம்மா”
“ஏன்-ப்பா?”
“கல்யாணம் பண்ணா… குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கனும்… சேர்த்து வைக்கனும்… அது சரி வராதுன்னு நினைக்கிறான்”
அமுதா சிரித்து விட்டாள்.
“எதுக்கும்மா சிரிக்கிற?”
“இது அவங்க டெசிஷன். இதுக்கு நீங்க எப்படி-ப்பா காரணமா இருக்க முடியும்?”
“இல்லம்மா. அப்பாகூட, அம்மா சண்டை போடறதைப் பத்தி, ஊர்ல எல்லாரும் பேசுவாங்க. அப்பாவுக்கும் அது தெரியும்”
“அதை நினைச்சு பீல் பண்றீங்களா?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.
“ச்சே ச்சே. இந்தப் பையன் அதையெல்லாம் கேட்டுட்டுத்தான் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பான்-னு தோணுது”
“நீங்களா ஏதாவது நினைக்காதீங்கப்பா” என்று சமாதானம் கூறினாள்.
“இல்லைம்மா. அவன் பேச்சிலருந்தே தெரியுது. கல்யாணம் பண்ணா, தன்னால யாருக்கும் உதவ முடியாதுன்னு நினைக்கிறான்”
“ஓ!”
“அதையும் மீறி உதவி செஞ்சா, அந்தக் கல்யாண வாழ்க்கை கேள்விக்குறியா மாறிடுமோன்னு பயப்பிடறான்” என்று கவலைப்பட்டார்.
“வொரி பண்ணாதீங்க-ப்பா. சும்மா சொல்லுவாங்களா இருக்கும்”
“இல்லைம்மா. ரொம்பத் தெளிவான பையன். ஸ்கூல் விஷயத்தில, அவன் பேசுறதைக் கேட்டா… நீ இப்படிச் சொல்ல மாட்ட”
இந்த இடத்தில்,
தன் பாசத்துக்குரியவர் பாராட்டிப் பேசுபவனால், அவளுள் ஒரு பாதிப்பு வந்தது.
“அவனுக்கு அப்பாவை ரொம்ப பிடிக்கும்”
“ப்பா, என்னை விடவா??” என்று கேட்ட விதத்தில் பொறாமை இருந்தது.
எனினும் இந்த இடத்தில்,
அப்பாவை பிடிக்கும் ஒருவன் மேல், அவளுக்கு லேசான பிடிப்பு வந்தது.
நன்றாக சிரித்து விட்டு, “யாராவது அப்பாவை எதுவும் சொல்லிட்டா… அவனுக்கு அப்படியொரு கோபம் வருது” என்றார்.
இந்த இடத்தில்,
அன்பேயில்லாமல் அம்மா, அப்பா மீது கோபப்படுவதைப் பார்த்து வளர்ந்தவளுக்கு, அப்பாவிற்காக மற்றவர்கள் மீது கோபப்படுபவன் மேல் கிஞ்சித்து அன்பு வந்தது.
“பட்டு பட்டுன்னு பேசுறான். கொஞ்சம் கூட பொறுமை இல்லை. கோபம் நிறைய வருது”
அமுதா சிரித்துக் கொண்டே, “ப்பா, நீங்க, எதாவது அட்வைஸ் பண்ணீங்களா?” என்றாள்.
“இப்பவே இது மாதிரி முடிவெல்லாம் எடுக்காதன்னு சொல்லிருக்கேன். பார்க்கலாம்-ம்மா”
“ம்ம்ம்” என்று யோசித்தவள், “என்ன பேர் சொன்னீங்க? மறந்திடுச்சு-ப்பா” என்று கேட்டாள்.
“தேவா”
இனி மறந்து போக மாட்டாள். ஏனெனில் அந்தப் பெயர் மனதின் ஓரத்தில் எழுதி வைத்துக் கொண்டாள்.
அதன்பின்னும் நிறைய விடயங்கள் இருவரும் பேசினார்கள்.
இதுதான் தேவாவைப் பற்றி அமுதாவிற்கு(தாரா) தெரிய வந்த தருணம்.
நாட்காட்டியின் சில நாலாவது ஞாயிறுகளில்…
ஒவ்வொரு முறை வரும் போதும், அதிபன் தேவாவைப் பற்றி நிறைய சொல்ல ஆரம்பித்தார்.
தேவாவின் எண்ணங்கள் பற்றிச் சிலாகித்துச் சொல்லுவார். அந்தச் சிலாகிப்பு, அவளின் சிந்தைக்குள் சென்றது.
மேலும் மேலும், தேவா பற்றி பேசப் பேச, அவனின் மேல் ஒரு ஈர்ப்பு வந்தது.
அந்த ஈர்ப்பே, அதிபனிடம் தேவாவைப் பற்றிய விடயங்களை
கேட்டுத் தெரிந்து கொள்ளத் தூண்டியது.
தெரிந்தும் கொண்டாள்!
மேலும், ஒரு முறை அரசம்பாளையம் வரும் பொழுது, வீட்டின் முன் கூடிய கூட்டத்தில் ‘தேவா யார்?’ என்று அதிபனிடம் கேட்டு, அவனைப் பார்த்துக் கொண்டாள்.
அவனுடன் ஒரு வார்த்தைக் கூடப் பேசியதில்லை. ஆனால் பார்த்ததும் அவன் உருவம்… அவள் மனதில் அழுத்தமாகப் பதிந்து போனது.
இந்த இடத்தில்,
அவனின் மேல் இருந்த ஈர்ப்பு, அடுத்த கட்டமான விருப்பம் என்ற நிலையை அடைந்தது.
அடுத்தடுத்து வருகையில்…
சில முறை தேவாவைப் பார்த்திருக்கிறாள்.
பலமுறை தேவாவைப் பற்றிப் பேசியிருக்கிறாள்.
அவனின் மேலிருந்து விருப்பம், நேசமாக மாறியது.
சுருக்கமாக,
அவளுக்குத் தேவாவைப் பிடிக்க ஆரம்பித்தது.
நாட்காட்டியின் ஒரு நாலாவது ஞாயிறு, அதிபனுடன் பேசும் பொழுது…
“ஏன்-ப்பா, அந்தப் பையன்… தேவா மாறிட்டாங்களா?”
“இல்லம்மா… இன்னும் அப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்கான். கஷ்டமா இருக்கும்மா. தனியா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அப்பா இப்போ இருக்கேன் பாரு”
“நீங்க ஏன் தனியா இருக்கனும்? நான்தான் உங்ககூட வந்து இருக்கப்போறேன்ல”
“அதுவும் சரிதான்… ” என்றார் சிரித்துக் கொண்டே!
“எப்ப-ப்பா அந்த நாள் வரும்?” என்றாள் எக்கச்சக்க ஏக்கங்களுடன்!
அவரின் பதில் அமைதிதான்.
“இன்னும் அந்தப் பிராப்ளம் சால்வ் ஆகலையா-ப்பா?”
‘இல்லை’ என்று தலையசைத்தார்.
மேலும், “தேவா தனியா இருந்து கஷ்டப் படுவானோன்னு கவலையா இருக்கு-ம்மா” என்றார்.
அவளிடம் அமைதி.
“இப்பவே அவன் செய்ற விஷயத்துக்கு வீட்ல பெரிசா சப்போர்ட் இல்லை”
அவளிடம் அமைதி.
“கண்டிப்பா தேவா மாற மாட்டான். எதிர்காலத்தில என்ன செய்யப் போறானோ?”
அவளிடம் அமைதி.
“ஆணோ, பெண்ணோ… இந்த மாதிரி சமுதாயத்துக்கு நல்லது செய்யனும்னு எண்ணம் இருக்கிறவங்களுக்கு துணையா வீட்ல யாராவது இருக்கனும்மா”
“ப்பா…”
“சொல்லும்மா”
“நான் வேணா தேவாவுக்கு சப்போர்ட்டா இருக்கட்டா?” என்று அவளின் அமைதி போய், அடிமனதின் ஆசை வெளியே வந்தது.
“என்ன சொல்லறம்மா?” என்றார் அதிர்ச்சியுடன்!
“நான் தேவாவைப் பார்த்துக்கிறேன்ப்பா” என்று தன் ஆசையைப் பிரகடனப்படுத்தினாள்.
“இந்த வயசுல இப்படிப் பேசக் கூடாது” என்று கோபப்பட்டார்.
“நான் இப்போ சொல்லலை-ப்பா. வளர்ந்து… பெரியவளா ஆனதும்… தேவாவை நான் பார்த்துக்கிறேன். அவங்களைத் தனியா இருக்க விடமாட்டேன்”
“இது படிக்கிற வயசு. இப்படிப் பேசக் கூடாது” என்றார் மீண்டும் கோபத்துடன்.
“இப்போ போய் தேவா முன்னாடி நிக்க மாட்டேன்-ப்பா. படிச்சு… லைஃப்ல செட்டில் ஆனதுக்கப்புறம்… தேவாகிட்ட போய் சொல்லுவேன்” என்று உறுதியாகச் சொன்னாள்.
அதிபனுக்கு என்ன பேசவென்று தெரியவில்லை.
“நீங்கதானப்பா சொன்னீங்க, யாராவது சப்போர்ட் பண்ணனும்னு. அந்த சப்போர்ட்ட நான் கொடுக்கிறேன்-ப்பா”
அதிபன், பேச முடியாமல் அமைதியாக நின்றார்.
“அவங்ககிட்ட எதையும் எக்ஸ்பெக்ட் பண்ண மாட்டேன். அவங்க என்ன ஹெல்ப் பண்ணாலும், நோ சொல்ல மாட்டேன். அதான அவங்களுக்கு வேணும்… அப்” என்று தொடரப் போனவளை,
“போதும் நிறுத்தும்மா” என்று அதட்டி, அவள் பேச்சை நிறுத்தினார்.
ஆனால் அவள் மனம் நிற்காமல், தேவாவின் பின்னேதான் ஓட ஆரம்பித்தது.
அதன்பின்னும் ஓரிரு முறை, தேவாவின் எண்ணத்திற்கு, தான் உறுதுணையாக இருப்பேன் எனச் சொன்னாள்.
அதிபனுக்கும் புரிந்தது. தான் விரிவாகத் தேவா பற்றிப் பேசியதால், தன் மகளுக்கு விருப்பம் வந்திருக்கிறது என்று!
ஆகையால் அதிபன், அதன்பின் தேவா பற்றிப் பேசவில்லை.
அவர் பேசவில்லை என்றாலும், தேவா மீதிருந்த பிடித்தம் அவளுக்குப் போகவில்லை.
நாட்காட்டியின் நாட்கள், பாச உண்டியலில் பயணச்சீட்டு நிரப்புதல் என்ற ரீதியில் பயணம் செய்தன.
இந்தச் சூழலில்,
சரத், ஜெகன், தாரா மூன்று பேருக்கும் விடுமுறை என்பதால், குடும்பத்துடன் சுற்றுலா சென்றிந்தனர்.
சுற்றுலா முடித்து, தோராயமாக இருபது நாட்கள் கழித்து, சென்னைக்கு வந்தனர்.
வந்தடைந்த பின்தான், கீதாவிற்குத் தெரிந்தது… ஆறு நாட்களுக்கு முன் அரசம்பாளையத்திலுள்ள உறவினர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்திருந்தது என்று.
கவனிக்க தவறியிருந்தார் போல!
திரும்ப அழைத்தார்.
உறவினர் கூறிய விடயத்தைக் கேட்ட கீதாவிற்கு எப்படி எதிர்வினை புரிய என்று தெரியவில்லை.
சட்டென அழைப்பைத் துண்டித்து, ராஜசேகரிடம் சென்று கூறினார்.
“நானும் தாராவும் போயிட்டு வர்றோம்” என்று சொல்லிவிட்டு கிளம்ப ஆரம்பித்தார்.
“நானும் வரவா கீதா?”
“வேண்டாம் ராஜ். அந்த ஊருக்குள்ள… ப்ச் வேண்டாம். நல்லா இருக்காது” என்று மறுத்துவிட்டு தாராவைக் கூட்டிக்கொண்டு கிளம்பினார்.
அரசம்பாளையத்தில்…
அங்கு வரும் வரை என்ன நடக்கிறது என்று தாராவிற்குப் புரியவில்லை.
அம்மா ஏன் கூட வருகிறார்கள்?? என்று விளங்கவில்லை.
ஆனால் மனம் ஏதோ பாரமேற்றிய பறவை போல் உணர்ந்தது.
ஊரில் வந்து இறங்கியதும் தெரிந்து விட்டது.
அதிபன் கோயம்புத்தூரில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்று! அதுவும் ஏழு நாட்கள் முன்பே!!
கீதா, அதிபன் வீட்டிற்கு வந்து சிறிதுநேரம் இருந்தார். அதிபனின் நலன் விரும்பிகள் சிலரிடம் பேசினார்.
ஆனால், கீதாவிடம் யாரும் பெரிதாகப் பேசவில்லை.
இருந்தும், எப்படி நடந்தது? எங்கே நடந்தது? என்ற விவரங்கள் கீதா கேட்டுக் கொண்டார்.
‘இப்படி ஒரு நல்லவருக்கு, ஏன் இப்படி ஒரு மரணம்?’ என்ற வருத்தம் தவிர, கீதாவிற்கு வேறு ஒரு வருத்தமும் இல்லை.
அடுத்த நாளே, தாராவை அழைத்துக் கொண்டு மீண்டும் சென்னை வந்தடைந்தார்.
ராஜசேகர் வீடு
ராஜசேகர், கீதா ஒருபுறமும், சரத் ஜெகன் மறுபுறமும்… வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
தாரா?
அதே வரவேற்பறையில், ஒரு ஓரத்தில் பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருந்தாள்.
பேசிக் கொண்டிருந்தவர்களைத் திரும்பிப் பார்த்தாள்.
இனி எப்பவும் இவர்கள் கூடத்தானா?
அப்பா, தன்னைக் கூப்பிட்டுக் கொள்ளும் நாள், இனி வரவே வராதா?
பாச உண்டியலை, இனி பயணச்சீட்டு கொண்டு நிரப்ப முடியாதா?
பத்திரப்படுத்திய பயணச்சீட்டுகள் மட்டும்தான், இனி தனக்கு துணையா?
‘எப்ப-ப்பா அந்த நாள் வரும்?’ என்ற கேள்விக்கு, இனி வேலை இல்லையா?
உயிர் பிரியும் வேளையில், அவரின் உயிரான தன்னை தேடியிருப்பாரே?
எப்படி இது நடந்தது?
இத்தனை கேள்விகள் கேட்டுக் கொண்டே… பாச உண்டியலை உடையாமல் பிடித்துக் கொண்டு, தாரா உடைந்து கொண்டிருந்தாள்.
அக்கணம், கீதா பேசுவதைக் கேட்டவள்… “எப்படி உங்களால இப்படிப் பேச முடியுது?” என்று கத்த ஆரம்பித்தாள்.