Eedilla Istangal – 14

ராஜசேகர் வீடு 

தாராவைத் தவிர, மற்ற அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.

“தாரா இன்னும் வரலையா?” என்று ராஜசேகர் கேட்டார்.

“சொன்னேன்ல ராஜ். யாரோ ஒருத்தரைப் பார்க்கப் போயிருக்கான்னு” என்று கீதா சொல்லும் போதே,

கடகடவென தாரா வீட்டிற்குள் நுழைந்து, தன் அறைக்குச் செல்ல மாடிப்படிகள் ஏறினாள்.

“தாரா, சாப்பிட வரலையா?” என்று கீதா கேட்டார்.

“என்னாச்சு தாரா?” – ராஜசேகர்.

“தாரா நில்லு” – சரத்.

யாருக்கும் பதில் சொல்லும் நிலையில் அவள் தொண்டைவளை இல்லை.

நிற்காமல் மாடிப்படி ஏறி, அவளது அறைக்குள் சென்று, கதவைப் பூட்டப் போனாள்…

ஆனால் பின்னேயே வந்த ஜெகன், “என்னாச்சு?” என்று கேட்டு, கதவை மூட விடாமல் பிடித்தான்.

மேலும் மெல்லிய குரலில், “அக்கா அவர்கிட்ட பேசிட்டியோ?” என்று கேட்டான்.

“ம்ம்ம்”

“என்ன சொன்னாரு?”

காதல் மறுப்பின் மௌனம்!

“சொல்லுக்கா?”

“வேற ஒரு பொண்ண லவ் பண்றாரு. ஸோ… ” என்று முடிந்து போன காதல் வாழ்வை நினைத்து, வாக்கியத்தைப் பாதியில் முடித்தாள்.

“முன்னாடியே உனக்கு இது தெரியாதா?”

“அப்புறமா பேசறேனே ஜெகன்” என்று கலங்கிய குரலில் சொல்லிவிட்டு, கதவை அடைத்தாள்.

ஜெகன் கீழே வந்த பொழுது, சரத்தும் கீதாவும் பேசிக் கொண்டிருந்தனர்.

“சரத், என்னடா பிரச்சனை? இப்படிப் போறா!!” என்ற கீதாவின் குரல் கமிறியது.

“தெரியலை-ம்மா” என்றவன், “இதோ வர்றான்ல! இவன்கிட்ட கேளுங்க” என்று சரத், ஜெகனைக் கை காட்டினான்.

ஜெகன் அருகில் வந்ததும், “என்ன ஜெகன்? என்னாச்சு அவளுக்கு?” என்று கீதா பதறிக் கேட்டார்.

“ம்மா அது… “

“சொல்லுடா” – கீதா.

தாராவின் காதல், அதன் மறுப்பு, மறுப்பிற்கான காரணம், என அனைத்தையும் ஜெகன் சொன்னான்.

கீதா, ராஜசேகர் இருவரிடமும் ஒரு சிறு அதிர்ச்சி!

“தாரா லவ் பண்றான்னு, உனக்கு எப்போ தெரியும்?” – சரத்.

“கொஞ்ச நாள் முன்னாடி. அவளும் சாரு-க்காவும் பேசிறப்போ கேட்டேன்… அப்போ என்கிட்ட தாரா சொன்னா”

“ஏன், உனக்கு வீட்ல சொல்லணும்னு தோணலையா??”

“அவர்கிட்ட பேசிட்டு, அக்காவே வீட்ல சொல்றேன்னு சொன்னா. அதான்.. “

சரத் முறைத்தான்.

ஜெகன் குனிந்து கொண்டான். 

“ஜெகன், அந்தப் பையனைப் பத்தி உனக்குத் தெரியுமா?” என்று ராஜசேகர் கேட்டார்.

“ம்ம்ம், தெரியும்-ப்பா. பேரு தேவா”

“எந்த ஹாஸ்பிட்டல் டாக்டர்?” – ராஜசேகர்.

“ப்பா, அவர் டாக்டரா இருக்க சான்ஸ் இல்லைன்னு நினைக்கிறேன்” – சரத்.

“ஆமா! அண்ணா சொல்றது கரெக்ட். அவர் டாக்டர் கிடையாது. பாலிஸி அனலிஸ்ட்… அப்புறம்… ” என்று நிறுத்தினான். 

“அப்புறம் என்னடா?” – கீதா.

“ம்மா, அவர் ஒரு ஆக்டிவிஸ்ட்டும்” என்றான் ஜெகன்.

கேட்டவர்களின் நிலைப்பாடு என்ன?

*****

தேவா அலுவலகம்

தேவா, தன் அலுவலகத்தின் திரையிடப்பட்ட பகுதியிலிருந்த ட்டிலில், இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். 

ஏதேதோ எண்ண அலைகள்!

ஆர்ப்பரித்த எண்ண அலைகளை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, தன்னைப் பற்றி நினைக்க ஆரம்பித்தான்.

அரசம்பாளையம் 

இதுதான் தேவாவின் சொந்த ஊரும். அம்மா, அப்பா, அண்ணன், அக்கா மற்றும் தேவா என்று ஒரு சிறு வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

நடுத்தர வர்க்கத்திற்கும் கீழே வாழ்க்கை நடத்திய குடும்பம்.

ஒரு கட்டத்தில், குடும்பத்தில் மூன்று பிள்ளைகளையும் ஒரே நேரத்தில் படிக்க வைக்க முடியாத நிலை.

ஆதலால், அதிபன் படிக்க வைக்கும் மாணவர்கள் பட்டியலில் தேவாவும் சேர்ந்தான்.

தேவாவின் சிறு வயதிலிருந்தே அதிபன் செயல்களில், பேச்சுக்களில் ஈர்க்கப்பட்டான்.

வளர வளர ஈர்ப்பு அதிகமானது.

அதிபன் வீட்டின் முன் நடக்கும் கூட்டத்தில், அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பது… அவனுக்குப் பிடித்தமான ஒன்று!

சில நேரங்களில் அதிபனிற்குப் பதிலாக, கீதாவின் திட்டுகளைக் கேட்க வேண்டியது இருக்கும்.

‘யாரிது? இப்படித் திட்டுது??’ என்ற கேள்வி அவனுள் தோன்றும்!

‘ஐயா பொண்டாட்டி, பசங்களைத் திட்ட ஆரம்பிடுச்சி’ என்று ஊர்க்காரர் சொல்லிய பின்தான் தெரிந்தது, அது அதிபன் மனைவி கீதா என்று!!

இது, தேவாவின் பன்னிரெண்டாம் வகுப்பு வரைத் தொடர்ந்தது.

அந்த வருடத்தில்தான், தேவா தன் பெற்றோரை இழந்திருந்தான்.

உடனே அவனைக் கல்லூரியில் சேர்க்க முடியாத நிலை, அவனது அண்ணனுக்கும், ஹேமாவிற்கும்.

ஆதலால், ஒரு வருட இடைவெளி விடலாம் என்று முடிவெடுத்திருந்தனர்.

அப்பொழுதுதான், அந்த ஊரில் தனியார் பள்ளி அமைக்க கூடாது என்று அதிபன் நடத்திய போராட்டம் வலுக்க ஆரம்பித்தது.

அதுவரை அதிபனின் பேச்சுக்களை, மரத்தின் பின்னே இருந்தும்… கடைகள் மறைவிலிருந்தும்… கேட்டவன், அதன்பின் அவரின் போராட்டத்தில் நேரடியாகக் கலந்து கொண்டான்.

அண்ணனும், அக்காவும் வேலைக்குச் சென்றதும், அதிபனைத் தேடி வந்துவிடுவான்.

படிப்புத் தள்ளிப் போனது வசதியாகப் போயிற்று!

அவனுக்கு அவர் முன்மாதிரி! ஆனால் அவருக்கோ, மற்ற இளைஞர்களில் அவனும் ஒருவன்!!

ஜயாவின் பார்வைக்கு, தான் எப்பொழுது தெரிந்தோம்? என்று அந்த ரணகளமான நிகழ்வை நினைத்துப் பார்த்தான்!

கடிகாரத்தின் அன்றைய நொடிகள்

தனியார் பள்ளி திறப்பதை எதிர்க்கும் விதத்தில், அரசம்பாளையத்தில் ஒரு விழிப்புணர்வு போராட்டம்.

அதிபனைப் பின் தொடரும் இளைஞர்கள் வந்திருந்தனர்.

ஒவ்வொரு தெருவாகச் சென்று, போராட்டம் நடத்தப்பட்டது. கடைசியாக அரசுப் பள்ளி இருக்கும் தெருவில் வந்து நின்றனர்.

ஆளுங்கட்சி உடன்பிறப்புகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆனால், இதைக் கேட்ட ஒன்றிரண்டு ஆளுங்கட்சி உடன்பிறப்புகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிப் போனதில், அதிபனை நோக்கித் தவறான வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன.

அவ்வளவுதான்…தேவாவின் கோபம்… கரை காண முடியா கோபம்!

பேசிய ஆட்களை இழுத்துப் போட்டு, அடிக்க ஆரம்பித்தான்.

அருகிலிருந்த குடி தண்ணீர் குழாய்… தெருக்களின் புழுதிகளில்… ஓரங்களில் ஓடிய சாக்கடைகள்… என்று ஒவ்வொரு இடத்திலும் புரட்டி எடுத்தான்.

அதிபனும் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். முடியவில்லை!

தன்னுடன் வந்த இளைஞர்களைத் தடுக்கச் சொன்னார். அவர்களுக்கு முடியவில்லை என்பதை விட முயலவில்லை!

தங்களது அதிபன் ஐயா அல்லவா!

ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து, காவல்துறையினர் வந்தனர்.

தேவாவிடமிருந்து உடன்பிறப்புகளைப் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

மேலும், தேவாவை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அதிபனும் கூடச் சென்றார்.

நிறைய சமாதனப் பேச்சுக்கள்… தங்களது பக்க விளக்கங்கள்… இனி இப்படி நடக்காது என்ற உத்தரவாதம்… _என எல்லாம் முடிந்து, அதிபனும், தேவாவும் வெளியே வர மூன்று மணி நேரம் ஆயிற்று!

அதுதான் முதல்முறை, அதிபனுக்கு இப்படி ஒரு பையன், தன் மேல் பற்றுடன் இருப்பது தெரிய வந்தது!

அவனைப் பார்த்தார்.

சட்டை அங்கங்கே கிழிந்து, அழுக்காகி இருந்தது.

“வா” என்று கூட்டிச் சென்று, அருகிலிருந்த டீக்கடையில் அமரச் செய்தார்.

“தேவா… அதுதான உன் பேரு”

“ஆமாங்க ஐயா” என்றான் பவ்வியமாக!

“எதுக்கு இவ்வளவு கோபம்?? இப்படியா அடிக்கிறது?”

“ஐயா, உங்களைப் பத்தி தப்பா பேசினா, அப்படித்தான் அடிப்பேன்”

“இந்த வயசில இப்படிப் போலீஸ் ஸ்டேஷன் வர்றது நல்லாவா இருக்கு தேவா” என்று தனிந்த குரலில் சொல்லிப் பார்த்தார்.

“உங்களுக்காக என்ன வேணாலும் பண்ணுவேன். இன்னும் எத்தனை பேரை வேணாலும் அடிப்பேன்” என்று தடாலடியாகப் பேசினான்.

இன்னும் நிறைய பேசினார்கள்… இருவரும் தேநீர் அருந்திக் கொண்டே! 

கடிகாரத்தில் இந்த நிமிடம்…

அன்று, அதிபன் ஐயாவிற்காக… மற்றவர்களை அடித்தது நினைவில் வந்ததும் சிரித்தான்.

தான் சிரிக்கிறோம் என்று தெரிந்ததும், அதிபன் ஐயா ஒருமுறை தன்னால் சிரித்தது நியாபகம் வந்தது.

கடிகாரத்தில் அன்றைய நிமிடம் 

தெருவில், அதிபனும் தேவாவும் நடந்து போய்க் கொண்டிருக்கையில்…

தனியார் பள்ளி ஆரம்பிப்பது குறித்த விளம்பரப் போஸ்டர்கள் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தன.

“பாரு தேவா, எவ்வளவு விளம்பரம் பண்றாங்கன்னு?? இன்னும் டிவி பேப்பர்ல கூட விளம்பரம் பண்ணுவாங்க போல” என்றார் வருத்தமாக!

“கூவிக் கூவி விக்கிறதுக்கு கல்வி என்ன காய்கறியா? விடுங்க-ய்யா” என்றான்.

அதைக் கேட்ட அதிபன் வாய்விட்டுச் சிரித்தார்.

தேவா, அதை ரசித்தான்.

இன்னும் நிறைய சிரித்துப் பேசிக் கொண்டே நடந்தார்கள்!

கடிகாரத்தில் இன்றைய நிமிடம்…

அன்று அதிபன் முகத்தில் இருந்த சிரிப்பு, இன்று தேவாவின் அகத்திலிருந்து சிரிப்பை வரவழைத்தது.

அகத்தைப் பற்றி நினைக்கும் போது, அங்கே வாழ்பவள் பற்றிய நினைப்பு வந்தது.

தன்னுள் வாழ்பவள், தனக்கு அறிமுகமான நிமிடங்கள் நியாயத்திற்கு வந்தன.

கடிகாரத்தில் அன்றைய கடைசி நிமிடங்கள்…

அன்று தேவா, அதிபன் இருவரும் பைக்கிள் கோயம்புத்தூர் சென்றிருந்தனர்.

வேலை முடிந்து திரும்பும் போது இரவு ஆயிற்று.

இருவரும், பள்ளிக்கு அடுத்து என்னென்ன செய்யலாம்? என்று திட்டமிட்டுக் கொண்டே வண்டியில் வந்து கொண்டிருந்தனர்.

ஊருக்கு வெளியே வந்து, நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அகால நேரம் என்பதால், ஆட்கள் நடமாட்டம் இல்லை.

நல்ல இருட்டு! வண்டியின் முகப்பு விளக்கு பாய்ச்சும் ஒளியில் பாதையைப் பார்த்து ஓட்டிக் கொண்டு வந்தார்.

இருபுறமும், சில இடங்களில் மரங்கள்…. சில இடங்களில் புதர்கள்… என்று இருந்தன. 

பின்னேயும் முன்னேயும் யாரும் வரவில்லை.

நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டது. இரவுப் பூச்சிகளின் ரீங்காரமும் கேட்டது.

சிறிது தூரம் சென்ற பிறகு, அதிபனின் பைக்கை, இரண்டு பைக்குகள் பின் தொடர்ந்து வந்தன.

தேவா, அதிபன்… இருவரும், அடிக்கும் எதிர்காற்றைக் கிழித்துப் பயணம் செய்து கொண்டிருக்கையில்,

பின்னே வந்த பைக் நபர்கள், வேகமாக ஓட்டி வந்து… அதிபன் பைக்கிற்கு இணையாக ஓட்டினர்.

‘யார் என்று?’ யோசிக்கையில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த தேவாவை முரட்டுத்தனமாகப் பற்றி இழுத்து, கீழே தள்ளினர்.

தேவாவை இழுத்த வேகத்தில், அதிபனின் பைக் நிலை தடுமாறிச் சறுக்கிக் கொண்டு போனது.

விழுந்த வேகத்தில், தேவா உருண்டு சென்று, சாலையின் ஓரத்தில் இருந்த மைல் கல்லில் மோதினான்.

தலையில் அடிபட்டு, ரத்தம் சிந்தியது.

கீழே கிடந்த குச்சி ஒன்று கண்ணின் ஓரத்தை லேசாகக் கிழித்திருந்தது. கண்ணைத் திறக்கவே முடியவில்லை.

சற்று நேரம் முயற்சி செய்து கண்களைத் திறந்து ‘ஐயாவிற்கு என்னாயிற்று?’ என்று பார்த்த பொழுது… பார்த்தக் காட்சி….

நான்கு பேர் சேர்ந்து, அரிவாளால் அதிபனைச் சரமாரியாக வெட்டிக் கொண்டிருந்தனர்.

“ஐயா” என்று அலறிக் கொண்டு, ஓடி வந்தவனை… வெட்டியவர்களில் ஒருவன் வந்து பிடித்துக் கொண்டான்.

தேவா, தன் பலத்தையெல்லாம் திரட்டி, அந்த ஆளைத் தள்ளிவிட்டு ஓடி வர முற்படும் பொழுது… மற்றொருவன் வந்து அவனைக் கத்தியால் கீறினான்.

“ஏய்! என்னடா பண்ற? அவன் ஸ்டுடென்ட்… பிரச்சனை வந்துரும் விட்டுரு” என்று சொன்னதும், தேவாவைக் கீழே விட்டுவிட்டான்.

வலி தாங்க முடியாமல், சாலையில் தேவா சரிந்து வீழ்ந்தான்.

மற்றொரு புறம், அதிபன் ரத்த வெள்ளத்தில் மிதந்ததும், ‘உயிர் போயிடுச்சு’ என்று சொல்லி, வந்தவர்கள் சென்று விட்டனர்.

ஒரு பத்து நிமிடங்கள் கழித்து, தேவாவிற்கு உணர்வு வந்தது.

கத்தி கீறிய காயத்தைப் பிடித்துக் கொண்டு, மெதுவாக கால்களை இழுத்து… இழுத்து… அதிபன் இருக்கும் இடம் வந்தான்.

அவர் அருகில் அமர்ந்து, “ஐயா” என்று எழுப்பினான்.

ஒரு இரண்டு நிமிடதற்குப் பின், “தேவா…” என்று உயிர் போகும் குரலில் அழைத்தார்.

“ஐயா… வாங்க ஹாஸ்ப்பிட்டல் போகலாம்”

அவனைப் பார்த்தார். நெற்றியில் அடி… கண்களில் வீக்கம்… சட்டையின் ரத்தக் கறை….

“வேண்டாம்” என்றார் தலையைக் கூட உயர்த்த முடியாமல்.

“ஐயா…” என்றவன், அவர் தலையைத் தூக்கி தன் மடியில் போட்டுக் கொண்டான்.

“நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவர், தொடர்ந்து பேச முடியாமல் இருமினார்.

“ஐயா”

“தேவா… நீ என்னைய மாதிரி இருக்கக் கூடாது. நான்… என்னால போராட்டத்துக்கு வர்றவங்க அடி வாங்கிறாங்க. இன்னைக்கு நீ இப்படி…” என்று கண்ணீர் வடித்தார்.

“ஐயா, இப்போ எதுக்கு அது? அதோட போராட்டம்-னா இதெல்லாம் இருக்கும்”

“தேவா… என்.. என்னைய… பேச விடு…” என்று வலி தாளாமல் கெஞ்சினார்.

“ஐயா” என்று அழுது கரைந்தவன், சுற்றி யாரும் வருவார்களா? எனப் பார்த்தான்.

“இவன் செய்யலை… அவன் செய்யலை-ன்னு சொல்லறதை விட… நீ உதவி செய்…” என்று அந்த நிலைமையிலும், அவனுக்குக் கட்டளை இடுவது போல் சொன்னார்.

“செய்றேன் ஐயா… செய்றேன்” என்று கட்டுப்பட்டான்.

“பொறுமையா இரு… கோபப்படாத…”

“ம்ம்ம்”

“அப்புறம் இன்னொன்னு தேவா… உனக்குன்னு ஒரு லைஃப் வேணும்”

“ஜயா… அது மட்டும் வேண்டாம்”

“சொல்றதைக் கேளு தேவா! என் வாழ்க்கையைப் பார்த்து, உன் வாழ்க்கையில முடிவு எடுக்காத. நான் வீட்டுக்குச் சரியா நேரம் ஒதுக்கலை. அதான் பிரச்சனை. உன்னோட எண்ணத்தைப் புரிஞ்சிக்கிறவங்க இருப்பாங்க”

“வேண்டாம் ஐயா… அப்படி யாரும் இருக்க மாட்டாங்க”

“இருப்பாங்க தேவா. ஏன்?? என் பொண்ணு கூடச் சொன்னாளே! உன்னைப் பத்திச் சொன்னப்போ… ‘நான் தேவாவைப் பார்த்துக்கிறேன்னு’ சொன்னா…”

மகள் சொன்னது நியாபகம் வந்ததும் சிரித்தார்.

“பெரியவளா வளர்ந்தப்புறம், உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்னு சொன்னா! உங்கிட்ட எதுவும் எதிர்பார்க்க மாட்டாளாம்… ” என்று மகளின் தன்னலமற்ற சிந்தனையைப் பெருமையாகச் சொன்னார்.

அதிபன் மகளைப் பற்றி, தேவாவிற்கு அறிமுகம் கிடைத்த நொடிகள்!

“இந்தமாதிரி நிறைய பேர் இருப்பாங்க. உன்னைய உனக்காகப் பிடிக்கிற பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ”

“ஐயா….”

“என் பொண்ணு… என் பொண்ணு ” என்று தடுமாறியவருக்கு மகளின் ஆசை நியாபகத்தில் வந்தது.

“அவளுக்கு நான் எதுவுமே செய்யலையே! என்கூடவே இருக்கணும்-னு ஆசைப்பட்டா. ஆனா அதுவும் நடக்கப் போறதில்லை” என்றவருக்கு மூச்சிறைக்க ஆரம்பித்தது.

தேவா கண்கள் கலங்கின.

“இப்போ இப்படின்னா… எப்படித்தான் தாங்கப்போறாளோ??” என்றவர் மூச்சுவிட சிரமப்பட்டார்.

தேவா அழுதான்.

“வாழறப்பவும், அவளை நல்லா பார்த்துக்கலை. கடைசியில சாகறப்பவும் அவளைப் பார்க்க முடியாம…” என்றவர் கண்கள் மூடத் தொடங்கின.

தேவா அழுது துடித்தான்!

“என் பொண்ணு அமுதான எனக்கு உயிரு தேவா… அமுதா” என்றவர் மூச்சு நின்றது.

அவர் கடைசியாக உச்சரித்தது, அமுதா பெயர்தான்.

“ஐயா… ஐயா.. ஐயா” என்று கன்னங்களைத் தட்டிக் கூப்பிட்டுப் பார்த்தான்.

தன் அன்பிற்குரிய ஐயாவின் நிலைமை புரிந்தது!

“ஐயா” என்று அந்த இருள் பயப்படும் வண்ணம் கதறி அழுதான்.

*****

அன்று அதற்கு அடுத்து நிகழ்ந்தவை…

கொலை நடந்த இடத்திற்கு காவல் துறையினர் வந்தனர். நடைமுறைகள் செய்யப்பட்டன.

தேவாவின் காயங்களுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டது. எனினும் கண்களின் வீக்கம் அதிகரித்தது.

இருந்தும் காவல் நிலையம் வந்திருந்தான்.

ஆனால் அதிபனைக் கொன்றவர்கள், முன் விரோதம் காரணமாகக் கொலை செய்ததாகச் சொல்லிச் சரணடைந்திருந்தார்கள்.

முதல் தகவல் அறிக்கை, அப்படித்தான் பதிவு செய்யப்பட்டது!

தேவா, காவலர்களிடம் சென்று, ‘இவர்கள்தான் கொலை செய்தார்கள். ஆனால் காரணம் வேறு’ என்றான் தேவா.

இதற்குள், தேவா வீட்டிற்குத் தகவல் சென்றது. அவனது அக்காவும், அண்ணனும் வந்திருந்தனர்.

“என்னடா இப்படி இருக்க?” என்று ஹேமா கதறி அழுதாள்.

ஒரு காவலாளி வந்து, தேவாவின் அண்ணனைக் கூப்பிட்டு, “இங்க பாருங்க… பிரச்சனை அதிபனுக்கும், ஸ்கூல் ஆரம்பிக்கிறவங்களுக்கும்தான்… இந்தப் பையனைப் பத்தி அவங்க யோசிக்கவேயில்லை… பேசாம உங்க தம்பியைக் வேற எங்கயாவது கூட்டிட்டுப் போங்க… கொலை செஞ்சவங்களே வந்து சரண்டர் ஆயிட்டாங்க. எஃப்ஐஆர் போட்டாச்சு. கம்ப்ளைன்ட் கொடுத்தா, கோர்ட் கேஸூன்னு அவனோட ப்யூச்சர் பாழாயிடும்…” என்றார்.

மேலும், “இதை நான் சொல்லலை. கட்சி ஆளுங்க சொல்லச் சொன்னாங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அந்த நிலையிலும் தேவா, அண்ணன் அக்காவிடம் போராடிப் பார்த்தான்.

ஆனால், அவர்கள் மறுத்து விட்டார்கள். அவர்களுக்கு அவனது உயிர் முக்கியமாக இருந்தது.

அவ்வளவு பெரிய மனிதரையே கொன்றவர்களுக்கு, இவன் எம்மாத்திரம்? என்று நினைத்தனர்.

அத்தோடு, காவலர் வந்து சொல்லிச் சென்றது, ஒரு வகையில் மிரட்டல் என்று புரிந்தது.

கடைசியில் ஹேமாவும், அவளது அண்ணனும்… ‘வர மாட்டேன்’ என்று அடம்பிடித்த தேவாவைக் கூப்பிட்டுக் கொண்டு, காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தனர்.

அந்த வயதில்… கண் முன்னே பார்த்த மரியாதைக்கு உரியவரின் மரணம்… இடுப்பில் கத்திக் கீறல்… கண் வீக்கம்…. தலையில் அடி…. _எல்லாம் சேர்ந்து தேவாவிற்கு மயக்கம் வந்தது.

மயங்கியவனை மருத்துவமனை அழைத்துச் சென்று, முதலுதவி செய்தனர்.

அன்றைய இரவே, மூவரும் சென்னை புறப்பட்டு வந்துவிட்டனர்.

அதன்பின் அதிபனின் நிலை?

தேவாவால் முடியாதை, அதிபனின் நலன் விரும்பிகள் செய்திருந்தனர்.

பிரதேபப் பரிசோதனை, உடல் தகனம் செய்வது.. மேலும் வழக்கை எதிர்த்து வழக்கு தொடுப்பது! இப்படிப் பல!!

கடிகாரத்தில் இந்த நிமிடம்….

சென்னை வந்தபின் நடந்ததை நினைத்துப் பார்த்தான்…

சென்னை வந்தவன், சிறிது நாட்கள் மருத்துவமனையில் இருந்தான். கண்களில் அடிபட்டதால், அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆதலாலே கண்ணாடி அணிகின்றான்.

அந்தச் சம்பவத்திற்குப் பின்,  தேவாவிற்கும் அவனது அண்ணனுக்கும் இடையே, ஒரு சிறு இடைவெளி விழுந்தது.

அண்ணன் சொன்ன படிப்பைப்  படிக்காமல், அதிபன் விரும்பிய படிப்பைப் படித்தான். இடைவெளி மேலும் அதிகமானது! 

தேவா கல்லூரியில் சேர்ந்ததும், அரசம்பாளையம் சென்றான்…தன்னால் முடிந்த விவரங்களைக் கொடுத்தான்… வழக்கு விசாரணை நடந்தது… தனியார் பள்ளிக் கட்ட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது… 

படித்து முடித்த பின், தன் அதிபன் ஐயா சொன்னது போல் வாழ்ந்து வருகிறான்.

இதற்கிடையே, அதிபனின் நலன்விரும்பிகளும் தேவாவும் சேர்ந்து, அதிபன் கொலையில் கட்சி உடன்பிறப்பிற்குச் சம்பந்தம் இருப்பதற்கான ஆதாரங்கள் சேகரித்துக் கொடுத்தார்கள்.

மீண்டும் வழக்கு விசாரணை நடந்தது, கட்சி உடன்பிறப்பு சிறையில்… தனியார் பள்ளிக் கட்டிடம் கட்டத் தடை… அரசுப் பள்ளி சீரமைப்பு… _ஆறு மாதத்திற்கு முன்பு, இப்படி தீர்ப்பு வந்தது! 

இந்த வழக்கிற்காகத்தான் கோவை சென்று வருவான்!

கோவை என்றாலே, அந்த இரவின் சம்பவங்கள்தான் எண்ண அலைக்குள் வரும்.

எத்தனை வருடங்களானலும், அந்த இரவின் கொடூரத்தை, அவனால் மறக்க முடியாது!

ஆதுபோல், அவனின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதிபன் சொல்லிய வார்த்தைகளும்…

அந்த வயதிலே, ‘உன்னைப் பார்த்துக் கொள்வேன்’ என்ற சொன்ன பெண்ணின் மேல், தனிப்பட்ட பாசம் ஏற்பட்டது!

வளர, வளர… ‘உன்னிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டேன்’ என்ற பெண்ணின் மீது எதிர்பார்ப்பு கூடியது. ஆதலால், அந்தப் பாசம் நேசமானது!

‘உனக்கு உறுதுணையாய் இருப்பேன்’ என்ற சொன்ன பெண், அவன் உயிராகிப்போனாள்.

ஆதலால் நேசம் காதலாய் வளர்ந்து நிற்கிறது!

“அமுதா” என்று உள்ளத்திலிருந்து உச்சரித்தான்.

அமுதா என்ற பெயரைத் தவிர வேறு ஏதும் தெரியாது.

அரசம்பாளையத்திற்குச் சென்று மேலோட்டமாக விசாரித்துப் பார்த்தான்.

சிலர் கோயம்புத்தூர் என்றார்கள்!

சிலர் சென்னை என்றார்கள்!

விலாசம் எதுவும் தெரியாமல், விருப்பை மட்டும் வைத்துத் தேடிக் கொண்டிருக்கிறான்.

மனம் பாரமாவது போல் இருந்தது. எப்பொழுதும் தன் ஐயா சொல்வது போல், தனக்குத் தானே நம்பிக்கைச் சொல்லிக் கொள்ள நினைத்து எழுந்தான்.

குளியலறைக்குள் சென்றான். வாளியிலிருந்த நீரை, முகத்தில் வாரி இறைத்தான். 

“சீயர் அப் தேவா! அமுதா மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கிறது, அவ்வளவு ஈசி இல்லை. ஹேவ் எ ஹோப் இன் யூ அன்ட் யூவர் லவ்” என்று தனக்குத் தானே நம்பிக்கைத் தந்து கொண்டான்.

இப்போது மனதின் பாரம் குறைந்தது போல் இருந்தது.

“லவ் யூ அமுதா! லவ் யூ ஸோ மச்!!” என்று சொல்லி, முழங்கையால் முகத்தின் நீரைத் துடைத்தபடி வெளியில் வந்தான்.

அதிபன் புகைப்படம் முன் வந்து நின்றான்…

“ஐயா…” என்று தழுதழுக்கும் குரலில் அழைத்தான்.

“நீங்க அந்த நேரத்தில சொன்னது, எனக்குள்ள அப்படியே பதிஞ்சிருச்சு.

அமுதா எப்படி இருப்பாளோ? எங்க இருக்காளோ? தெரியாது. ஆனா அவளுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கேன்.

நீங்க பார்க்க முடியாம போனதுக்கும் சேர்த்து, நான் அவளை நல்லா பார்த்துக்கணும்”

என்று கண் கலங்கினான்.

“ஐயா, அமுதாவையே நினைச்சி வாழ்ந்துட்டேன். நிச்சயமா வேற எந்த பொண்ணையும் நினைக்க முடியாது” என்றவனுக்கு,

இமைகள் நனைந்து, ‘ஐ அம் ஓகே’ என்று தாரா சொன்னது நியாபகம் வந்தது. அது இதயத்தை நிந்தித்தது!

“பாவம் தாரா! ரொம்ப நல்ல பொண்ணு. அவங்களை இன்னைக்கு ரொம்பவே ஹேர்ட் பண்ணிட்டேன்.

ஆனா, எனக்கு வேற வழி தெரியலை” என்று ஒரிரு துளி கண்ணீர் சிந்தினான்.

அமுதாவிற்காகக் கண் கலங்கினான். தாராவிற்காகக் கண்ணீர் சிந்தினான்.

இவனின் பிரச்சனை என்ன தெரியுமா??

கடலின் அழகை… கரையில் வந்து நின்று, ரசிக்க நினைக்கும் அலைகள் போன்றது.

அலைகளுக்குத் தெரியாது. அந்தக் கடலுக்குள்தான் தானும் இருக்கின்றோம் என்று!

அது போல்தான் இவனும்! அமுதாவின் காதல் தாராவிற்குள் இருப்பது தெரியாமல், வெளியே தேடிக் கொண்டிருக்கிறான்!!

ஆனால், அவனுக்கு எப்படித் தெரியும்?? தாராதான் அதிபனின் மகளென்று!

******

ராஜசேகர் வீடு

இதே நேரத்தில் தாரா…

ஒரு புறம், ‘பொய் சொல்கிறானா?’ என்ற சந்தேகம்!

மற்றொரு புறம், ‘இதை முன்னமே சொல்லியிருக்கலாமே?’ என்ற சங்கடம்.

சங்கடமும், சந்தேகமும் சேர்ந்து, தேவா மீது சகட்டுமேனிக்கு கோபம் வரவழைத்தது.

அழுதாள். சாருவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினாள்.

ஐந்து நிமிடங்கள் கழித்து, ஓரளவிற்கு மனம் சமநிலைக்கு வந்தது. 

பத்து நிமிடங்கள் கழித்து, பால்கனிக்குச் சென்றாள். ‘டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். ஸூயரா, டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்’ என்று சொல்லியபடியே உலாத்தினாள். 

பதினைந்து நிமிடங்கள் கழித்து, மெத்தையில் வந்து தலை சாய்த்தாள். 

“ஆனா, தேவாவையே நினைச்சி வாழ்ந்துட்டேனே. இனிமே எப்படி மறக்க முடியும்?” என்று விக்கி விக்கி அழுதாள்.

அதற்கு அடுத்த நிமிடங்கள் எல்லாம் இப்படியே கழிந்தன!

? விதியென்ற நதியின் ஆற்றில், மிதக்கின்ற இலைகளாய், இருவரின் இதயங்கள்.

என்று கரை சேர்வார்கள்? எனப் பார்க்கக் காத்திருக்கிறது – காதல் உண்டியல்! ?

அடுத்த நாள் காலை

வழக்கம் போல, த்ரீ லிட்டில் வேர்ட்ஸ் கேட்டபடி, மருத்துவமனை வளாகத்தில் வந்து இறங்கினாள்.

மருத்துவமனை முகப்பு… மின்தூக்கி… ஐந்தாவது தளம்… எதிர் வருவோர்க்கு ‘ஹேப்பி மார்னிங்’…

இந்த வரிசையில் தாரா அவளது அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.

அவ்வாறு நடைகூடத்தில் நடந்து வருகையில், ஹேமா அமர்ந்திருப்பது தெரிந்தது. அருகில் தேவா!

தேவாவைப் பார்த்தாள். கோபம் கொண்டது மனம்.

ஆனாலும், இன்னும் அவன் புறமாகச் சரிந்து கொண்டிருந்த மனதை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தாள்!

தேவாவும் பார்த்தான்.

நேற்று மறுப்பு சொன்ன விதத்திற்காக, மன்னிப்பு கேட்கத் தயாராகினான்!!

? நிச்சயம் பேசப் போகிறார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!

ஆனால் என்ன பேசுவார்கள்?? என்று தெரியவில்லை!

எதுவானாலும், இனிமேல் தன்னுள் சேர்த்து வைக்க வேண்டிய நேரச் செலவிடல்கள்தான்!

இப்படிக்கு – காத்திருக்கும் காதல் உண்டியல்! ?