Eedilla Istangal – 17.1

அவன் மோதிரம் என்று சொன்னதும், “என்ன ரிங்?” என்று கேட்டாள்.

“ம்ம்ம், என்னோட லவ்வருக்கு கிஃப்ட் கொடுக்க வாங்கினது”

“ஓ!”  

“பார்க்கிறீங்களா?”

“தேவா, எனக்கொரு டவுட்… கேட்கட்டுமா?” 

“ம்ம்ம்” 

“நீங்க, உங்க லவ்வர் பத்தி பேசறப்போ, அதை ஈஸியா எடுத்துக்கிற மெச்சூரிட்டி எனக்கு இல்லையோ?” என்றாள்.

எவ்வளவு எளிதாக, அவள் இதயம் படும்பாட்டைச் சொல்லி விட்டாள். 

அதைவிட… அவன் அதைப் புரிந்து கொண்டு, “லீவ் இட்” என்றான் இரண்டே வார்த்தையில்! 

அடுத்த நொடி, தாரா எழுந்து விட்டாள்.

“என்னாச்சு?”

“ஆல்ரெடி லேட். நான் கிளம்புறேன்”

“பட், அவங்க இன்னும் ஷாப்பிங் பண்றாங்களே” என்று சொல்லி, அவனும் எழுந்தான். 

“ய்யா! பட், நான் ஹாஸ்பிட்டல் போகணும் தேவா. ஆஃப்டர்நூன் வர்றேன்னு சொல்லியிருக்கேன்” என்று நடக்க ஆரம்பித்தாள்.

“இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டுப் போகலாமே” என்று கேட்டுக் கொண்டே, அவள் கூட நடக்க ஆரம்பித்தான்.

“பேஷன்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க தேவா” என்று சிரித்துக் கொண்டே விறுவிறுவென நடந்தாள்.

நேரே சென்று, சாருவிடமும், பாபியிடமும் சொல்லிவிட்டு, தாரா மின்தூக்கி நோக்கி நடந்தாள்.

சற்று நேரம் மாலியை வைத்துக் கொள்ளும்படி பாபியிடம் கொடுத்துவிட்டு, தாரா பின்னேயே தேவா சென்றான்.

மின்தூக்கி வர காத்திருக்கையில்,

“என்ன நீங்களும் கிளம்பிட்டீங்களா?” என்று தன்னருகில் வந்து நின்றவனைப் பார்த்துக் கேட்டாள். 

“பார்க்கிங் வரைக்கும் வர்றேன்”

அவள் எதுவும் சொல்லவில்லை. மின்தூக்கி வந்தது. இருவரும் ஏறிக் கொண்டனர்.

பொத்தானை அழுத்திவிட்டு, அவனைப் பார்த்து புன்னகை புரிந்தாள். 

என்ன புன்னகை இது?                 

இது,                                                 

இதழின் புன்னகை அல்ல!   

இதயத்தின் புழங்காகிதமோ??

வண்டி நிறுத்தும் தளம் வந்தது. இருவரும் இறங்கிக் கொண்டனர். 

அலைபேசியில்  கோபியை அழைத்து, “கோபி, நான் எக்ஸிட் டோர் பக்கம் நிக்கிறேன், கார் எடுத்திட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு, தாரா அழைப்பைத் துண்டித்தாள்.

அவளையே இன்னும் பார்த்துக் கொண்டிருந்தவனின் புறம் திரும்பி, ‘என்ன?’ என்பது போல் புருவங்கள் உயர்த்தி, புன்னகைத்தாள்.

“ஏதோ என்கிட்ட பேசணும்னு சொன்னீங்கள… இப்போ பேசறீங்களா?” என்றான் கண்களில் ஏதோ ஒன்றை ஏந்தி வைத்துக் கொண்டு! 

அவன் கண்களில் ஏந்தி வைத்திருப்பது, அவளது கண்ணீருக்கான பரிதாபம் என்று நினைத்தாள்.

எனவே, ‘ம்கூம்’ என்ற ஒரு மறுப்பு மற்றும் ஒரு முறுவல் அவளிடம்! 

“தாரா, ஆர் யூ ஓகே?”

“அஃப்கோர்ஸ் ஐ அம் ஓகே தேவா” என்று நகைத்தாள்.

“அப்புறமா, ஃபோன் பண்ணா பேசுவீங்களா?” 

“ஃப்ரியா இருந்தா பேசுவேன்… ம்ம்ம், பிஸியா இருந்தா பேசமாட்டேன்”

அவள் சொன்ன விதத்தில், அவன் சிரித்துவிட்டான்.

“அப்பா… சிரிச்சிட்டிங்க… இவ்வளவு நேரம் ஃபேஸ் எப்படி இருந்திச்சு தெரியுமா?” 

மேலும் நங்கைக்காக நகைத்து, “பட், நான் கண்டிப்பா ஃபோன் பண்ணுவேன்” என்றான். 

‘ம்ம்ம்’ என்று தாரா தலையாட்டும் போதே, கோபி காரை எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.

“ஓகே பை” என்று சொல்லி, தாரா விடைபெற்றுக் கொண்டாள்.

*****

அதன்பின் தேவா… 

தாரா சென்ற பிறகும், அங்கேயே நின்ற தேவாவின் உள்ளத்தில், அவளுடன் நடந்த உரையாடல்கள் ஊர்வலமாய் வந்தன! 

விளைவு…                                         

முகத்தில் ஓர் முகில்நகை!         

முழுவதும் தாராவினால்!!     

முக்கியமாக உள்ளத்திலிருந்து!!! 

*****

அதன்பின் தாரா… 

நேரே மருத்துவமனை… பார்வையாளர் நேரம்… மாலை நேர இடைவேளை… மீண்டும் பார்வையாளர் நேரம்… வீடு திரும்பல்… இரவு உணவு…

இந்த வரிசையில் அந்த நாளில் பயணம் செய்தவள், இரவு பத்து மணியளவில், தன் அறையில் தூங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

அக்கணம், கதவு தட்டும் ஓசை.      கதவைத் திறந்தாள்.                             

கீதா நின்று கொண்டிருந்தார்.

“என்னம்மா, இந்த நேரத்தில? இன்னும் தூங்கலையா?”

“உன்கிட்ட பேசணும் தாரா”

“உள்ளே வாங்க”

இருவரும் உள்ளே வந்து அமர்ந்தனர்.

“சொல்லுங்க-ம்மா?”

“சாரு வெட்டிங் ஷாப்பிங் நல்லபடியா முடிஞ்சதா?” 

“ம்ம்ம், நானும் ஆஃப்டர்நூன் கிளம்பி வந்துட்டேன்” 

“அவங்க ரெண்டு பேரும் தனியா பர்சேஸ் பண்ணாங்களோ?”

“இல்லைம்மா, பாபியோட ப்ரெண்ட் தேவா இருந்தாரு”

“இந்த தேவா… ” என்று கேள்வியாக நிறுத்தினார். 

“ம்ம்ம், நான் லவ் பண்றவர்தான்”

‘இது வேறயா? இவர்கள் இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு உள்ளதே!’ என்று கீதா கவலை கொண்டார். 

“உனக்கு தேவா-வ எப்படித் தெரியும்?” என்றார் நேரடியாக! 

“எதுக்கு இப்போ கேட்கறீங்க?” 

“கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லு” என்றார் கண்டிப்பாக! 

அவர் பேச வரவில்லை, விசாரிக்க வந்துள்ளார் என்று புரிந்தது.

ஜெகன், தன் காதலைப் பற்றிச் சொல்லியிருப்பான் என்று தெரியும். ஆனால், யாரும் ஏன் எதுவும் கேட்கவில்லை என்று நினைத்தாள். 

இதோ கீதா கேட்க வந்துவிட்டார். 

“அப்பா சொல்லி” என்றாள், அம்மா முகத்தைப் பார்க்காமல் தலை குனிந்தபடி! 

“எப்போ சொன்னாரு?”

“நான் ஊருக்குப் போறப்போ, தேவா பத்திச் சொல்லுவாங்க”

“அப்போ ஊருக்குப் போறதே இதுக்குத்தானா? ரெண்டு பேரும் இவனைப் பத்திதான் பேசுவீங்களா?”

“ம்மா”

“என்ன அம்மா? உன்னை, அங்க அனுப்புனதே தப்பு”

“அதுல என்ன தப்பு?”

“அங்க போகப் போய்தான, அவனைப் பத்தித் தெரிஞ்சிருக்கு”

உண்மைதான்! ஆதலால் தாராவிடம் ஓர் அமைதி! 

“உங்க அப்பா சொல்லித்தான், அவனை லவ் பண்றியா?”

“ம்மா, இப்படிப் பேசாதீங்க. தேவாவை நான் சப்போர்ட் பண்ணுவேன்னு சொன்னப்போ, அப்பாவே என்னைக் கண்டிச்சாங்க”

“யாரு? உங்க அப்பாவா?? நம்புற மாதிரி சொல்லு”

“நம்புங்க-ம்மா! ‘இந்த வயசில இது தப்புனு’ அப்பா சொன்னாங்க”

“….”

“ம்மா, அப்பா தேவாவைப் பத்திச் சாதாரணமாதான் சொன்னாங்க. எனக்குதான் அது வேற மாதிரி… வேற” என்று திணறியவள், “ம்மா, எனக்குத் தேவாவைப் பிடிக்கும். அவ்வளவுதான்!”

“ஆனா அவனுக்குத்தான் உன்னைப் பிடிக்கலையே!?”

தாராவைப் பொறுத்த மட்டில் இது உண்மைதான்! ஆதலால் மீண்டும் தாராவிடம் ஓர் அமைதி.

“சரி, அதை விடு! அது முடிஞ்சி போனது. நீ, உன் லைஃப் பத்தி என்ன முடிவு எடுத்திருக்கிற?”

“புரியலை-ம்மா”

“மேரேஜ் பத்தி என்ன முடிவு எடுக்கப் போற?”

“ம்மா, தேவாவை என்னால மறக்க முடியாது”

“அவன்தான் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டான்ல”

மீண்டும் தாராவிடம் அமைதி.

“ஏன் தாரா? நீ, அதிபனோட பொண்ணு-ன்னு அவனுக்குத் தெரியாதா?” 

‘இல்லை’ என்ற தலையசைப்பு! 

“ஏன் சொல்லலை?” 

தாரா புரியாமல் பார்த்தாள். 

“நீ சொல்லியிருந்தா, உங்க அப்பா மேல இருக்கிற மரியாதை-ல, உன்னைக் கல்யாணம் பண்ண சம்மதிப்பான்ல”

“ம்மா, இப்படி அப்பா மேல இருக்கிற மரியாதை-ல லவ் வரக்கூடாது. எனக்குத் தேவாவைப் பிடிச்ச மாதிரி, தேவாவுக்கும் என்னைய பிடிக்கனும்”

கீதாவிற்கு… ஓர் நிம்மதி, இவள் இதுவரை ‘தன்னை அதிபன் மகளென்று’ சொல்லவில்லை!! 

மேலும், ஓர் நம்பிக்கை, இனிமேலும் தேவாவிடம் தன்னைத் தெரியப்படுத்த மாட்டாள் என்று! 

“சரி இதுக்கு என்னதான் முடிவு.??”

“இதுக்கு எதுக்கு முடிவு. இது இப்படி போய்கிட்டே இருக்கும். நானும் அதுகூட போவேன்”

“என் லைஃப்ப பாழாக்கின மாதிரி, உங்க அப்பா உன் லைஃப்பையும் பாழாக்கி வச்சிருக்காரு”

சட்டென எழுந்து, “அப்பாவைப் பத்தி எதுவும் தப்பா பேசாதீங்க” என்று ஆவேசமாகக் கத்தினாள்.  

தாராவிற்கு மூச்சு வாங்கியது.

கீதா மேலும் பேசும் முன், கதவு திறந்தது. சரத்தான்! 

தாரா நிற்கும் நிலையைப் பார்த்தபடியே உள்ளே வந்தான். 

“என்னாச்சு-ம்மா?” என்று கேட்டு கீதா அருகில் வந்து நின்றான்.

“இப்பதான் வர்றியா-டா?” என்று கேட்டு எழுந்தார். 

“ம்ம்ம்” என்றவன், “நீ ஏன் இப்படிக் அம்மாகிட்ட கத்திக்கிட்டு இருக்க? சத்தம் வெளியே வரைக்கும் கேட்குது” என்று தாராவைக் கண்டித்து கேள்வி கேட்டான்.

மூவரிடமும் ஓரு அமைதி நிலவியது. 

“ப்ச், பீலிங் டயர்ட், நான் தூங்கனும்” என்றாள், அவனுக்குப் பதிலளிக்க மறுத்து! 

“என்ன கேட்டா, என்ன… ” என்று அவன் கேள்வியை முடிக்கும் முன்பே, 

“நீ வாடா” என்று சரத்தைக் கூட்டிக் கொண்டு, கீதா அறையை விட்டு வெளியேறினார்.

அவர்கள் சென்றதும், 

அப்படியே அமர்ந்தாள். பின்னோக்கி தலை சாய்த்துக் கொண்டாள்.

தன் இஷ்டத்தை,                              தேவா பரிதாபம் என்ற இடத்தில் வைத்துப் பார்க்கிறான்…                      அம்மா மரியாதை என்ற இடத்தில் வைத்துப் பார்க்கிறார்…

இவர்களுக்கு எப்படிப் புரிய வைக்க தன்….                                 

நெகிழ்வான நேசத்தை!!

கங்குகரையில்லா காதலை!!   

ஈடில்லா இஷ்டத்தை!! 

விரக்தியின் சாயலில் ஓர் புன்னகை…

அப்படிச் சாய்ந்தே உறங்கிப் போனாள். 

******

அடுத்த நாளிலிருந்து…

தேவா, தான் சொன்னது போல் தாராவிடம் நித்தமும் அலைபேசியில் பேசினான். 

?

அவன்,                                               

காரணம் ஏதுமின்றி                     

காதல் சாயலின்றி… பேசினான். 

அவள்,           

காயங்கள் ஏதுமின்றி                   

காதல் வலி சாயலின்றி… பேசினாள். 

அவள் அன்பிற்காக அழைத்தானா? இல்லை, அவளுக்கு ஆறுதல் கூற அழைத்தானா?                  தெரியவில்லை!! 

ஆனால்,                                        அன்பாகவும் பேசவில்லை!        ஆறுதலும் கூறவில்லை!!           

மாறாக…                                           

பேச்சில் அரட்டையின் சாயல் இருந்தது!!!

தாரா, தேவாவிடம் நிரம்ப உரிமை எடுக்க ஆரம்பித்திருந்தாள். 

இப்படிச் சொல்வதை விட, தாராவை அப்படி உரிமை எடுக்கும் இடத்தில் தேவா வைத்திருந்தான். 

தன்னுள், இந்த அளவுக்கதிகமான நேரச் செலவிடல்களைத் சேமித்து வைத்துக் கொண்டது! – காதல் உண்டியல் feeling hope with தாரா and தேவா!!

நாட்காட்டியில் பத்து நாள்கள் கழித்து! 

தேவாவின் அலுவலகம்…

இரவு ஒன்பது மணி ஆகியிருந்தது. 

ஹேமாவிடம் பேசிவிட்டு, அந்த நொடிதான் மடிக்கணினியைத் திறந்தான். 

உடனே அலைபேசி அழைப்பு வந்தது.

எடுத்துப் பார்த்தான். இலக்கங்கள் வரவில்லை. அழைப்பை எடுத்தான்.

“ஹலோ”

“ஹலோ… தேவா-வா?” என்று ஒரு பெண் குரல். 

“ம்ம் தேவா”

“அன்னைக்கு மால்-ல பார்த்தீங்கள…” என்ற பெண் குரலில் ஓர் சங்கோஜம்.

“ஓ! அமுதா அம்மா… சொல்லுங்க” என்றவன் குரலில் சந்தோஷம். 

“அமுதாகிட்ட பேசினீங்களா?”

“ம்ம்ம்”

“அமுதா என்ன சொன்னா?” என்பவனின் குரலில் ஆர்வம் அலைமோதியது!

“ம்ம்ம், அவங்க அப்பாகிட்ட அப்படிச் சொன்னதா சொன்னா”

“வேற எதுவும் சொன்னாளா?” 

“ம்ம்ம்”

“என்ன சொன்னா?” 

“அவளுக்கு இப்போ இதுல விருப்பமில்லை-ன்னு சொன்னா” 

“ஏன்? அதெப்படி இல்லாம போகும்” 

“அது, அவங்க அப்பாவோட முடிவு தெரிஞ்சதும்… அவளுக்கு ஒரு பயம்”

“பயப்பிடறாளா? எதுக்கு பயம்??”

“ஏன்னா? நீங்க பண்ற வேலை”

“பாலிசி அனலிஸ்ட்… ” என்று யோசித்தவன், “அதுல என்ன பிரச்சனை?” என்று கேட்டான். 

“அந்த வேலை மட்டும்தான் பண்றீங்களா? ஆக்டிவிஸ்ட்…”

அவனுக்குப் புரிந்தது. அவரின் பிரச்சனை என்னவென்று! அவர் இன்னும் மாறவில்லை என்றும் தெரிந்தது!! 

“ஹலோ” – கீதா. 

“சொல்லுங்க” 

“அந்த வேலை பார்க்கிறப்போ… எத்தனை பேரைப் பகைச்சிப்பீங்கனு எனக்குத் தெரியும்”

“முதல அது என் வேலையில்லை. வாழ்க்கை”

“இருக்கட்டும். ஆனாலும் எதிரிங்க இருப்பாங்கள??” 

“பட் எனக்கு… லாயர், போலீஸ்… ஈவன் சம் பொலிடிக்கல் பெர்சனோட சப்போர்ட் கூட இருக்கு”

“அதை வச்சி…”

“நீங்க ஃபோன அமுதாகிட்ட கொடுங்களேன். நான் அவகிட்ட பேசிப் பார்க்கிறேன்” என்றவனின் குரலில் எரிச்சல் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. 

“இது என்ன பழக்கம்? பிடிக்கலைன்னு சொல்ற பொண்ணோட பேச நினைக்கிறது”

“ஏன்னா, நீங்க அமுதாகிட்ட கேட்டிங்களான்னு சந்தேகமா இருக்கு” என்றவனின் குரலில் கோபம் கொட்டிக் கிடந்தது. 

“ஓ! கோபம் வருது…”

“ஆமாங்க, கோபம் வருது. உங்ககிட்ட போய் கெஞ்சிக்கிட்டு இருக்கேன் பாருங்க, என் நிலைமையை நினைச்சு… எனக்கு கோபம் வருது”

“யாரு உன்னைய கெஞ்சச் சொன்னா?”

“அதுவும் சரிதான்! இனிமே கெஞ்ச மாட்டேன். நானே அமுதாவைக் கண்டுபிடிச்சுக்கிறேன்”

“வேண்டாம்னு சொல்ற பொண்ண கண்டுபிடிச்சி, கல்யாணம் பண்ணி… அவகிட்டருந்து என்ன சப்போர்ட் நீ எதிர்பார்க்கிற?”

“அமுதாதான், அதிபன் ஐயாகிட்ட என்னைய சப்போர்ட் பண்றேன்னு சொல்லியிருக்கா”

“அது எப்பவோ சொன்னது. இப்போ இல்லை. “

“அதிபன் ஐயா சொன்னாருங்க… ” 

 

“என்ன சொன்னாரு? அவர்கிட்டருந்து அவர் பொண்ண பிரிச்சதுக்கு… இப்ப என்கிட்டருந்து என் பொண்ண பிரிக்கச் சொன்னாரா?”

“ச்சே, ஏங்க இப்படியெல்லாம் பேசறீங்க?”

“வேற எப்படிப் பேசச் சொல்ற? அதிபன் என் வாழ்க்கையைப் பாழாக்கின மாதிரி, நீ என் பொண்ணு வாழ்க்கையைப் பாழாக்க பார்க்கிறயா??”

“ஐயாவைப் பத்தி எதுவும் பேசாதீங்க. அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”

 “என்ன பண்ணுவ?”

“உங்களுக்கு என்னதான் பிரச்னை?”

“பிரச்சனை நீதான்! இப்படித் தொந்தரவு பண்றேன்னு போலீஸ்-ல கம்பளைண்ட் பண்ணவா?”

“இதுல என்ன தொந்தரவு?”

“வேண்டாம்னு சொல்ற பொண்ணு பின்னாடி வர்றது. போலீஸ்-ல கம்ப்ளைன்ட் பண்ணா… நீ சம்பாதிச்சு வச்சிருக்கியே ஒரு பேரு! அதெல்லாம் போயிடும்”

“ஏங்க, அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க. எல்லாத்தையும் விட இதுதான் எனக்கு முக்கியம்”

“வார்த்தைக்குக் கூட, வாழ்க்கை முழுசும் வரப்போற பொண்ண முக்கியம்னு சொல்ல முடியலை-ல. இதான் நீ! இப்படித்தான் உங்க ஐயாவும் இருந்தாரு!! “

“…”

“உங்களுக்கெல்லாம், சொந்த வாழ்க்கை ரெண்டாம் பட்சம்தான். எதுக்கு நீங்கெல்லாம் கல்யாணம் பண்ண நினைக்கிறீங்க?? ஒரு பொண்ணு வாழ்க்கையை பாழாக்கவா??”

“… “

“நீ விரும்புற பொண்ணுக்காக… நீ பண்ற சேவை, உதவி… இது எல்லாத்தையும் விட்டுட்டு வர முடியுமா?”

“இது ஐயாவோட கனவு… என்னோட லட்சியம். யாருக்காகவும் இதை விட முடியாது”

“அப்போ, அவர் பொண்ண மறந்திரு. புரியாத வயசில சொன்னதை பிடிச்சிக்கிட்டு நிக்காத”

“….” 

“நீதான் அவளைத் தேடிக்கிட்டு இருக்கிற… அவ உன்னைத் தேடவே இல்லை. அதைப் புரிஞ்சிக்கோ”

“….”

“திரும்பத் தேடிக்கிட்டு வந்த!!? நான் கண்டிப்பா போலீஸ்-ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன். பண்ண மாட்டேன்னு மட்டும் நினைக்காத” 

“…. “

“சோஷியல் மீடியால, உன்னைப் பத்திப் பார்த்தேன். அவர் பண்றதை விட, ஒரு படி அதிகமா பண்றேல. உன்னை நம்பிலாம் என் பொண்ண கொடுக்க முடியாது”

“…. “

“உன்னை… உன் லட்சியத்தைப் பிடிக்கிற பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ”

சட்டென தாரா முகம் வந்து சென்றது, தேவாவிற்கு!

“சொல்றது புரியுதா?”

“ம்ம்ம்”

“இனிமே டிஸ்டர்ப் பண்ணாத” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தார்.

*****

ராஜசேகர் வீடு 

கீதா தோட்டத்தில் அமர்ந்திருந்தார். அங்கிருந்துதான், இத்தனை பேச்சுக்களையும் பேசி இருந்தார்

அழைப்பைத் துண்டித்த அடுத்த நொடி, கீதா கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. 

சற்று நேரம் அழுதார்!                            நன்கு கண்களைத் துடைத்துக் கொண்டு, அறைக்கு வந்தார்.

ராஜசேகரும், சரத்தும் பேசிக் கொண்டிருந்தார்கள். 

“எங்க கீதா போயிருந்த?”

“கார்டன்-ல வாக்கிங் போயிட்டு வந்தேன்”

“ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு-ம்மா?” என்று எழுந்து வந்து, கீதா அருகில் நின்று கொண்டு! 

“சரத், தாராவுக்கு கல்யாணம் பண்ணலாம்-டா”

“ம்மா… அவ ஒரு பையனை…”

“அந்தப் பையன்தான் வேண்டாம்னு சொல்லிட்டானே” 

சரத் யோசித்தான். 

“சரத் யோசிக்காத… ப்ளீஸ் சரத்” என்று கெஞ்சினார். 

“ம்மா, இதுக்கு எதுக்கு ப்ளீஸ் சொல்றீங்க? என்னாச்சு உங்களுக்கு?”

“அவளுக்கு மாப்பிள்ளை பாருடா” 

“சரி, நான் பார்க்கிறேன். நீங்க இதைப் பத்தி நினைக்காதீங்க” என்றவன், “ப்பா பார்த்துக்கோங்க” என்று கிளம்பிவிட்டான்.

அவன் சென்றதும்,

அதுவரை கீதாவைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜசேகர், “கீதா உனக்கு என்னாச்சு?” என்று கேட்டார். 

ராஜசேகர் அருகில் சென்று அமர்ந்து கொண்டு, “தாராவை நினைச்சா…” என்றவர் அழுதுவிட்டார்.

“என்ன கீதா??” 

“சப்போஸ், அந்தப் பையனுக்கும் தாராவைப் பிடிச்சிருந்தா… தாரா வாழ்க்கை என்னாகும் ராஜ்?

எனக்கு அந்தப் பையனைப் பிடிக்கலைன்னு சொல்றதை விட, அவன் பண்ற விஷயம் பிடிக்கலை! 

இவனைத் தாரா கல்யாணம் பண்ணிக்கிட்டா… அதிபன்கிட்டருந்து எதுக்காக பிரிச்சுக் கூட்டிட்டு வந்தேனோ… அதுக்கான அர்த்தமே இல்லாம போய்டும்… 

நம்ம தாரா எப்படி…?? ம்ம்ம் எப்படி ராஜ்??

உங்ககிட்ட பேசமாட்ட… சரத் கூட எப்ப பார்த்தாலும் ஆர்க்யூமெண்ட்… என்னைய எந்த இடத்தில வச்சிருக்கானே தெரியலை. ஏதோ ஜெகன்கிட்ட மட்டும் பேசுறா!! 

இவனைக் கல்யாணம் பண்ணி வச்சா… இவன் பாட்டுக்கு ஊருக்கு உதவுறேன்னு போயிருவான்… திரும்பவும் என் பொண்ணு தனியாவே இருப்பா ராஜ்!! 

முதல்ல அவங்க அப்பாவுக்காக காத்திருந்தா… இப்போ இவனுக்காக… எப்பதான் அவ அவளுக்காக வாழப் போறா?? அவ வாழனும் ராஜ். சந்தோசமா வாழனும். 

அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவன்… என்ன வேலை வேணா செய்யட்டும்… ஆனா அவளுக்காக நேரம் ஒதுக்கணும். அவகூட நிறைய பேசணும்… அவளை வெளியே கூட்டிட்டுப் போகணும்… அட்லீஸ்ட் அழுதா, ஏன் அழறன்னு கேட்கணும்?

அது இல்லைன்னா, எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும்! 

அதுமட்டுமில்ல ராஜ்… கண்டவனும் வந்து மிரட்டிட்டுப் போவான்ங்க… ச்சே ச்சே என் பொண்ணுக்கு, அந்த வாழ்க்கை வேண்டாம் ராஜ்! 

நான் அதிபன் மேல பாசமே இல்லாம இருந்தேன். அதனால… அவர் இறந்தப்போ எனக்கு ஒன்னும் தெரியலை. 

ஆனா தாரா, அந்தப் பையன் மேல உயிரா இருக்கா. அவனுக்கு ஏதும் ஒன்னுனா, அவ தாங்க மாட்ட” என்று தேம்பித் தேம்பி அழுதார்.

ராஜசேகர், கீதாவைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டார். 

“அவன்தான் வேற பொண்ண பிடிக்கிதுன்னு சொல்றான்ல… ஸோ அவன் தாரா வாழ்க்கையில வரமாட்டான்”

கீதா, ஏங்கி ஏங்கி அழுதார்.

“அழாத கீதா. நீ இவ்வளவு எமோஷன் ஆகக்கூடாது”

 “நான் தப்பு பண்றேனா ராஜ்??” என்று கேட்டார் அழுகையின் ஊடே! 

“அப்படியெல்லாம் இல்லை கீதா”

“அப்படி ஏதும் இருந்தா… பிள்ளைங்க என்னை வெறுத்திடுவாங்களோ? என்னை புரிஞ்சிப்பாங்களா ராஜ்??”

“யார் உன்னை புரிஞ்சிக்கலைன்னாலும்… நான் உன்னை புரிஞ்சிக்குவேன். நீ தூங்கு” என்று சொன்னதும், 

கீதா தலையணையில் தலை சாய்த்துக் கொண்டார். 

“தாராவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சா, சரியாயிடுவா” என்றார் கீதா! 

“பேர் மாத்தின விஷயம் மாதிரி… இது கிடையாது”

“என்ன சொல்ல வர்றீங்க?”

“இப்போ தூங்கு கீதா”

“சரத் எல்லாத்தையும் பார்த்துப்பேன்”

“ம்ம்ம் சரி” என்றவர், கீதா மனநிலையை மாற்றும் வண்ணம், பேசிக் கொண்டே இருக்க, அவர் தூங்கிப் போனார். 

சற்று நேரம் கழித்து, சரத் வந்து பார்த்தான்.

“தூங்கிட்டாங்களா??” என்று நெற்றியில் தொட்டுப் பார்த்தான்.

“ம்ம்”

“டேப்லெட் ஏதாவது கொடுத்தீங்களா??” என்று நாடித் துடிப்பை சோதித்தான்.

“இல்லை. பட், நான் பல்ஸ் செக் பண்ணிட்டேன்-டா”

இருந்தும், அவன் கேட்கவில்லை! பரிசோதித்து முடித்தான்!! 

“இன்னைக்கு என்னாச்சு இவ்வளவு எமோஷன் ஆகியிருக்காங்க?” 

“தாராவைப் பத்தி நினைச்சி கஷ்டப் படுறா”

“அவளைப் பத்தி நினைச்சாலே கஷ்டம்தான்”

“இப்படி பேசுறதா இருந்தா வெளியே போயிரு சரத்” என்று அதட்டினார். 

“சத்தம் போடாதீங்க, அம்மா தூங்கிறாங்க” என்று கீதா அருகில் அமர்ந்து கொண்டான். 

சற்று நேரம், அவர் நெற்றியை நீவி விட்டான். 

“தாரா வந்தாச்சா??” – ராஜசேகர். 

“இல்லை. இன்னைக்கு ஒரு டெலிவரி கேஸ் இருக்கு. வர்றதுக்கு லேட்டாகும்”

ஓர் அமைதி! 

“ப்பா, திரும்பவும் தாரா-க்கு அலைன்ஸ் பார்க்கப் போறேன்”

ராஜசேகர் எதுவும் சொல்லவில்லை! 

“ம்ம், அம்மாவைப் பார்த்துக்கோங்க. ஏதும் வேணும்னா, கூப்பிடுங்க. ஹால்-லதான் இருப்பேன்” என்று சென்று விட்டான்.

நியாயம் எந்தப் பக்கம் இருந்தாலும், கீதா பக்கமிருந்து மட்டுமே யோசித்து பழகியவன், சரத்!