யாராவது ஏதாவது பேசுவார்களா?? என்று பார்த்துக் கொண்டே இருந்தாள், தாரா.
யாரும் எதுவும் பேசவில்லை.
“ம்மா… ஏதாவது பேசுங்க” என்று கேட்டு விட்டாள்.
“பேசணுமா?” என்று கேட்டவர், “இந்தக் கல்யாணம் நடக்காது” என்று கோபமாகப் சொன்னார்.
“கீதா…” என்று ராஜசேகர் ஏதோ பேச வருகையில், “வேண்டாம் ராஜ். இந்தப் பையனை ஏன் பிடிக்கலைங்கிற காரணத்தை, அன்னைக்கே உங்ககிட்ட தெளிவா சொல்லிட்டேன்” என்று சொல்லி, எழுந்துவிட்டார்.
“ம்மா ப்ளீஸ்” என்று கெஞ்சிக் கொண்டே தாராவும் எழுந்தாள்.
“ம்மா… அவ என்ன சொல்ல வர்றான்னு உட்கார்ந்து கேளுங்களேன்” என்று ஜெகன் சொல்லிப் பார்த்தான்.
“யாரு என்ன சொன்னாலும், இந்தக் கல்யாணம் நடக்காது” என்று செல்லப் போனவரை…
“ஒரு நிமிஷம் உட்காருங்க-ம்மா. பேசணும்” என்று கைப் பிடித்து நிறுத்தினான், சரத்.
“என்னடா பேசணும்? என்ன பேசணும்?” என்று வேகமாகக் கேட்டார்.
“தாரா கல்யாணம் பத்திப் பேசணும்” என்று மெதுவாகச் சொன்னான்.
“அதுலென்ன பேச இருக்கு சரத்??”
“கல்யாணம் எப்படி நடத்தணும்னு பேசணும்” என்றான் அமைதியாக, ஆனால் உறுதியாக!!
“உனக்கு என்னாச்சு சரத்?” என்றார் அதிர்ச்சியாக!
“எனக்கு எதுவும் ஆகலை! நீங்க முதல உட்காருங்க” என்றான்.
அவன் சொல்லிய பின்னும், நின்று கொண்டிருப்பவரைப் பார்த்தவன், எழுந்து கொண்டான்.
நேருக்கு நேராக, சரத்தும் கீதாவும் நின்று கொண்டிருந்தார்கள்.
“நீ ஏன் இப்படிப் பேசுற சரத்? இந்தக் கல்யாணம் வேண்டாம்-டா”
“ஏன்?”
“அந்தப் பையனை எனக்குப் பிடிக்கலை”
“அவளுக்குப் பிடிச்சிருக்கே-ம்மா”
ஜெகனும் தாராவும்… சரத்தை வித்தியாசமான பார்வைகள் கொண்டு பார்த்தனர்.
ஏன்?? ராஜசேகரும்தான்!!
கீதாவிடம் ஆச்சரிய அமைதிகள்!
“ம்மா… எதையும் யோசிக்காதீங்க. கல்யாணத்துக்கு ஒத்துக்கோங்க” என்று சம்மதம் கேட்டு நின்றான், சரத்.
“முடியாதுடா” என்றார் சட்டென்று!
“ஏன் முடியாது?”
“அந்தப் பையனோட வேலை?”
“என்ன வேலை? பாலிசி அனலிஸ்ட்! அதுக்கென்ன??”
“சரத்…” என்று ஏதோ சொல்ல வந்தவரை,
“புரியுது-ம்மா! ஆக்டிவிஸ்ட்!! அதான?” என்று சொல்லவிடாமல் தடுத்தான்.
‘ஆம்’ என்று தலையாட்டினார்.
“அதனாலென்ன?”
“சரத்… உனக்கு எப்படிப் புரிய வைக்கன்னு தெரியலை? விட்ருடா… இந்தக் கல்யாணம் நடக்காது” என்று வருத்தப்பட ஆரம்பித்தார்.
“அப்படியெல்லாம் விட முடியாது. இந்தக் கல்யாணம் நடக்கும்”
“அவ வாழ்க்கை நல்லா இருக்கணும்னா, இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது-டா”
“அவ வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்னா, இந்தக் கல்யாணம் நடக்கணும்மா”
“அவனைக் கல்யாணம் பண்ணா வாழ்க்கை முழுசும் அழுதுக்கிட்டே இருப்பா. இது தேவையா-டா?”
“ம்மா! அவரைக் கல்யாணம் பண்ணலைன்னாதான் அழுவா. அதனால இது தேவைதான்”
“அதிபனுக்கு ஆன மாதிரி… “
“ம்மா, இங்க எதுவும் நிரந்தரம் கிடையாது. அதனால அந்தப் பேச்சு வேண்டாம்”
“சரத்… அவனுக்கு குடும்பம் ரெண்டாம் பட்சம்-டா”
“தாரா பார்க்கிற வேலையும், அந்த மாதிரிதான். ஸோ ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சி நடந்துப்பாங்க-ம்மா”
“உனக்கு என்னாச்சு-டா? அம்மாவை எதிர்த்துப் பேசற?!”
“எதிர்த்துப் பேசலை-ம்மா, எடுத்துச் சொல்றேன்”
அதன் பிறகு, கீதா பேசவில்லை.
ஆனால், சரத் பேசினான்.
“ம்மா, இதுவரைக்கும் அவளுக்குப் பிடிச்சது எதையாவது நீங்க செஞ்சிருக்கீங்களா? இந்த ஒரு தடவை, செஞ்சி பாருங்களேன்!
நீங்க சொன்னதை என்னைக்காவது மீறி நடந்திருக்காளா? இப்பவும் அவளா கல்யாணம் பண்ணாம, உங்ககிட்ட வந்து கெஞ்சிக்கிட்டு இருக்கா!! புரிஞ்சிக்கோங்க” என்றான் சரத் சற்று கோபத்துடன்.
“சரத்… அம்மாகிட்ட இப்படிப் பேசாத” என்று தாரா குறுக்கிட்டாள்.
“நான், என் தங்கச்சிக்காக… என் அம்மாகிட்ட பேசிகிட்டு இருக்கேன். நீ நடுவில வராத” என்று கோபமாகப் பேசினவனைப் பார்த்து,
“சரத், ஏன் அவகிட்ட கோபமாப் பேசுற?” என்று ராஜசேகர் கேள்வி கேட்டார்.
எப்பொழுதும் அவர் இப்படிக் கேள்வி கேட்டால் கோபப்படுபவன், இன்று கோபப்படவில்லை!
மாறாக, “ஸாரிப்பா, இனிமே அவகிட்ட கோபப்பட மாட்டேன்” என்று மன்னிப்பு கேட்டு நின்றான்.
தாராவும், கீதாவும் ‘இன்று இவனுக்கு என்னாயிற்று?’ என்ற ரீதியில் பார்த்து நின்றனர்.
“அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதானம் பண்ணிடுவேன்-ப்பா” என்றான், அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு!
ஜெகனிற்குப் புரிந்தது, சரத்திடம் ஏன் இந்த மாற்றம் என்று?!
“அவ என்கூட சண்டை போடறப்ப, என்னை பிடிக்காம சண்டை போடறான்னு நினைச்சேன். ஆனா, அது அப்படியில்லை-ப்பா! என் மேல இருக்கிற உரிமையில சண்டை போட்டிருக்கா!” என்றான், தாராவைப் புரிந்து கொள்ளாத கவலையில்!
“அவளைப் புரிஞ்சிக்கிட்டேல! அதுவே போதும்” என்றார் ராஜசேகர் நிறைவாக!
“அன்னைக்கு உங்களை எதிர்த்துப் பேசினதைப் பார்த்து… இவ எங்க ரெண்டு பேர்கூடவும் சேராம, தனியா நிப்பான்னு நினைச்சேன்-ப்பா!
ஆனா, நான்தான் தனியா நிக்கிறேன்” என்று வருத்தத்துடன் சொன்னவன் அருகில், ஜெகன் வந்து நின்றான்.
மேலும், “ஏண்ணா இப்படிச் சொல்ற?” என்றும் கேட்டான்.
“சரி விடுங்க!! இதெல்லாம் முடிஞ்சுபோன விஷயம். இந்தக் கல்யாணம் நடக்கும். தாரா ஆசைப்பட்ட மாதிரி நடக்கும். அதை நான் நடத்தி வைப்பேன். யார் சம்மதிச்சாலும், இல்லைனாலும். நான் நடத்துவேன். எனக்கு அந்த உரிமை இருக்கு” என்று சரத் அழுத்தமாகச் சொன்னவுடன்,
தாரா, அவன் முன்னே வந்து நின்று கொண்டு… வாய் மூடி அழுதாள், நன்றியுடன்!
சரத் பார்த்தான்.
“பாருங்கம்மா…” என்று கீதாவை நோக்கிச் சொன்னவன், “அண்ணன் நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்றேன். இப்படி வந்து அழுதுகிட்டு நிக்கிறா… அப்போ என்னைய எந்த இடத்தில வச்சிருக்கான்னு பாருங்க?” என்றான் வேதனையாக!
எதிரே நின்று பார்த்துக் கொண்டிருந்த கீதா… எதுவும் சொல்லாமல் அவரின் அறைக்குள் சென்று விட்டார்.
சரத், தாராவை பார்த்து, “ஏதாவது வேணும்னா என்கிட்டயும் கேளு. நானும் வாங்கிக் கொடுப்பேன்!” என்றான்.
கண்களில் கண்ணீருடன், தாராவும் தலையாட்டினாள்.
“இனி எங்க? அதான் கல்யாணம் முடிச்சுப் போகப் போற! எல்லா நாளையும் வேஸ்ட் ஆக்கிட்டேன்??” என்று சரத் கண் கலங்கினான்.
சட்டென அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள், தாரா.
மேலும், “ஏன் சரத் இப்படியெல்லாம் பேசுற?” என்று கோபமாகக் கேட்டாள்.
“நீ இனிமே எதைப் பத்தியும் கவலைப் படாத. மேரேஜ் ரிலேட்டடா எல்லா வேலையும் நான் பார்த்துப்பேன். நாளைக்கே தேவாகிட்ட பேசுறேன். சரியா??”
“ம்ம், ஆனா அம்மா???” என்று நிமிர்ந்து பார்த்து கேட்டாள்.
“சொன்னேன்-ல தாரா. நான் பார்த்துக்கிறேன்னு. நீ இதெல்லாம் யோசிக்காத. சந்தோஷமா இரு”
“ம்ம்ம்” என்று மீண்டும் சரத் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.
“இன்னொன்னு கேட்கணும் தாரா”
“கேளு சரத்” என்றாள் விலகி நின்று!
“தேவா வேற யாரையோ லவ்…” என்று தொடங்கும் போதே,
“இல்லை சரத். இப்போ அது இல்லை. தேவாக்கு என்னைதான் பிடிக்கும்” என்றாள் படபடவென!
சரத்தும், ஜெகனும் சிரித்தனர்.
“ஏன் சிரிக்கிறீங்க?” என்று கேட்டாள்.
இருவரும் எதுவும் சொல்லவில்லை.
“நாளைக்கு நம்ம மூணு பேரும், எங்கயாவது போகலாம்” என்றான் சரத்.
“எங்க-ண்ணா?” என்றான் ஜெகன் ஆர்வமாக!
தாராவும் ‘எங்கே?’ என்ற ஆவலுடன் பார்த்தாள்.
“ம்ம்ம், உனக்கு நிறைய வாங்கிக் கொடுக்கணும்னு தோணுது, தாரா” என்றான் சரத் ஆசையாக!
லேசாக விசும்பல் வந்ததும், தாரா மீண்டும் நன்றாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவள் தோளில் வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்தான், சரத்.
அவள் தலை கோதி தேற்றினான், ஜெகன்.
மூன்று பேருக்கும் இடையே ஒரு பாச வலை பின்னப்பட ஆரம்பித்தது.
நிரப்பாமல் பாதியிலேயே நின்று விட்ட பாச உண்டியல், தன்னை நிரப்பிக் கொள்ள ஆரம்பித்தது.
சற்று நேரம், சிறுவயது கதைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ராஜசேகர் முகத்தில் ஒரு சந்தோஷம், தெரிந்தது. மூவரின் பேச்சுகளை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு அரைமணி நேரத்திற்குப் பின், “போங்க போய் தூங்குங்க… லேட்டா ஆயிருச்சு” என்று சரத் சொன்னான்.
தாரா, ஜெகன்… இருவரும் ‘குட் நைட்’ என்று சொல்லி, சிரிப்புடன் மாடிப் படியேறிச் சென்றனர்.
அவர்கள் சென்றதும்,
அந்த வரவேற்பறையில்… சரத், ராஜசேகர் மட்டும் நின்று கொண்டிருந்தனர்.
“ப்பா”
“நீ எதுவும் சொல்ல வேண்டாம். முதல போய் அம்மாகிட்ட பேசு” என்றார்.
“ம்ம்ம்” என்று கீதாவைப் பார்க்கப் போனான்.
கீதாவின் அறைக்குள்…
பால்கனியைப் பார்த்த வண்ணம், கீதா மெத்தையில் அமர்ந்திருந்தார்.
அவரைப் பார்க்கையிலே தெரிந்தது, அவர் வருத்தப்படுகிறார் என்று.
வேகமாகச் சென்று, கீதா முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
“ம்மா” என்று அழைக்கும் போதே அவன் குரல் உடைந்தது.
கீதாவின் பார்வை, எங்கோ வெறித்திருந்தது.
“ம்மா, பேசுங்க-ம்மா”
அவன் அப்படிக் கேட்டும், அவர் எதுவும் பேசவில்லை.
“இந்த ஒரு விஷயத்தில மட்டும், நீங்க சொல்ற மாதிரி என்னால நடந்துக்க முடியாது”
பார்வையை, அவன் புறமாகத் திருப்பினார்.
“தாரா விருப்பப்படிக் கல்யாணம் நடக்கட்டுமே! ப்ளீஸ்-ம்மா”
அவனைப் பார்த்தவர், அவன் பேச்சைக் கேட்க ஆரம்பித்தார்.
“உங்களை எதிர்த்து ஏதாவது பேசியிருந்தா… மன்னிச்சிருங்க-ம்மா” என்று அவர் மடிமேல் தலை சாய்த்துக் கொண்டான்.
“ஏன்டா, இப்படிப் பேசுற? அம்மாகிட்ட உனக்கு இல்லாத உரிமையா சரத்?!” என்றார் அவன் தலை கோதியபடியே!
“எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்லை-ம்மா”
“என்னடா?”
“தேவா, தாராவைப் பிடிக்கலைன்னு சொன்னதுக்கு அப்புறமா… ஏன் அவளுக்குச் சீக்கிரமா கல்யாணம் முடிக்கப் பார்த்தீங்க??”
கீதா அதிர்ந்தார். அவன் தலை கோதுவதை நிறுத்திவிட்டார்.
“ஏதோ ஒரு உண்மை, உங்க மூணு பேரைச் சுத்தியும் இருக்கிற மாதிரி இருக்கு. என்னம்மா அது?” என்று நிமிர்ந்து பார்த்துக் கேட்டான்.
கண்கள் கலங்க, அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“அப்போ ஏதோ இருக்கு!”
“சரத்… அது வந்து… ”
“வேண்டாம்-ம்மா! நீங்க சொல்லவே வேண்டாம். உங்களைக் கஷ்டப்படுத்திற எந்த உண்மையும் எனக்குத் தேவையில்லை” என்று சொல்லிவிட்டு, மீண்டும் தலை சாய்த்துக் கொண்டான்.
“இந்தக் கல்யாணம் மட்டும் நடக்கணும். வேண்டாம்னு சொல்லாதீங்க-ம்மா”
“நீ நடத்து-டா… உன் தங்கச்சி கல்யாணம். நீ உன் விருப்பப்படி நடத்தி வை” என்று சம்மதித்தார்.
அவர் சம்மதித்தச் சந்தோஷத்தை, நிமிர்ந்து பார்த்துக் காட்டிவிட்டு, மீண்டும் தலை சாய்த்தான்.
இருவரிடமும் ஒரு அமைதி.
“சரத், கல்யாணம் கொஞ்சம் கிரான்டா பண்ணலாம்ல-டா. இப்படி ரெஜிஸ்டர் ஆஃபிஸ்ல நடத்தனுமா?”
“ஏன்-ம்மா??”
“அப்பா-க்காக கேட்கிறேன், சரத். சொசைட்டில அவருக்குன்னு இருக்கிற மதிப்பு மரியாதைக்காக கேட்கிறேன்-டா”
“ஓ! பட், தேவா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாரு”
“ஏன்டா ஒத்துக்க மாட்டான்??”
“அதை விடுங்க! மேரேஜ் இப்படியே நடக்கட்டும். நான் ரிசப்ஷன் வச்சி சமாளிச்சிருவேன். அதெல்லாம் நினைச்சி கவலைப்படாதீங்க”
“ம்ம்ம், ஆனா கல்யாணத்துக்கு நான் வரமாட்டேன்-டா”
“ப்ச், இப்படிச் சொல்லாதீங்க-ம்மா!”
“இல்லை சரத்! நான் சொல்றதைக் கேட்காம கல்யாணம் பண்றா, அதனால நான் வர மாட்டேன்” என்றார் கோபமாக!
திருமண நாளுக்குள் அவரைச் சம்மதிக்க வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில், சரத் அமைதியாக இருந்தான்.
“அதோட எனக்கு அவனைப் பார்க்க… அது… வேண்டாம்” என்றார் ஒரு மாதிரி குரலில்.
“இப்போ இதைப் பத்தி எதுவும் யோசிக்காதீங்க. லேட்டாகியிருச்சு. தூங்குங்க” என்று சரத் எழுந்து கொண்டான்.
அவன் எழுந்ததும், கீதா மெத்தையில் தலை சாய்த்துக் கொண்டார்.
அவர் தூங்கும் வரை, அவர் கைப் பிடித்துக் கொண்டே இருந்தான், சரத்!
வெளியே வரவேற்பறையில்,
பிரம்மாண்டமான அறையின் பெரிய சோஃபாவில் தனியாக அமர்ந்திருந்தார், ராஜசேகர்.
ஏதோ ஒரு வகையில் குடும்பம் ஒன்று பட்டது போல், அவருக்குத் தோன்றியது.
ஆனால், தான் இன்னும் தனித்து இருப்பது போலவே உணர்ந்தார்!