Eedilla-Istangal-3

இரவு 9:00 மணி, தேவாவின் அண்ணன் வீடு…

ஒரு ஒன்றரை வருடங்கள் கழித்து, தேவா இந்த வீட்டுக்கு வருகிறான்.

இன்று வரக் காரணம், அவனது அக்கா ஹேமாவின் வருகை.

இதுவரை வராததிற்குக் காரணம், அவனது அண்ணன் மற்றும் அண்ணி.

தேவாவுடன் பிறந்தவர்கள் அண்ணன் ஒன்று, அக்கா ஒன்று. நடுத்தர வர்க்கம்தான். தாய், தந்தை தேவாவின் பள்ளிப் பருவத்திலே தவறிவிட்டார்கள்.

மூத்தவர்கள் கல்லூரியைத் தாண்டி இருந்ததால், குடும்பத்தைச் சமாளிக்க முடிந்தது. தேவாவும் படிக்க முடிந்தது.

அண்ணனுக்குத் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன.

ஆரம்பித்திலிருந்தே அவனது அண்ணனுக்கும், அண்ணிக்கும் தேவாவின் சேவை, சீர்திருத்தம் போன்ற செயல்கள் பிடிக்கவில்லை. அதனால் வரும் பிரச்சனைகள் தேவையில்லாததாகத் தோன்றியது.

மேலும், அவனது சம்பாத்தியத்தில் வீட்டுக்கென்று எதுவும் கொடுப்பதில்லை என்பதைக் குத்திக் காட்டினர்.

இதற்காக நிறைய வாக்குவாதங்கள் நடந்தன. ஹேமா இருந்தவரை, அவள் இவர்களைச் சமாதானம் செய்து வைப்பாள்.

ஆனால் அவள் திருமணம் முடிந்து அயல்நாடு சென்றதால், வாக்குவாதம் மட்டுமே நடந்தது. சமாதானம் என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போனது.

எதற்கு இப்படிச் சண்டையிட்டுக் கொண்டு, ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என நினைத்து, தேவா வீட்டைவிட்டு வெளியேறினான்.

அவனது அண்ணனோ, அண்ணியோ ‘போகாதே’ என்று சொல்லவில்லை. அந்த நேரத்தில் ஹேமாவும் அருகில் இல்லாததால், அவளாலும் எதுவும் செய்ய இயலவில்லை.

வீட்டைவிட்டு வெளியேறிய தேவா, ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்தான். அதுதான் இப்பொழுது அவனது அலுவலகமாகவும், வீடாகவும் இருக்கிறது.

தன் தேவைகள் அனைத்தையும் அந்தச் சிறு இடத்தினுள்ளே சுருக்கிக் கொண்டான். அதில் அவனுக்குத் துளியும் வருத்தம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் சுதந்திரமாகச் செயல்பட முடிகிறது.

நேற்று இரவுதான் ஹேமா வந்திருந்தாள். அவள் வருகைக்கு காரணம், ஹேமா இப்பொழுது ஐந்து மாதக் கர்ப்பிணி.

ஏற்கனவே இரண்டு முறை கருச்சிதைவு நடந்திருந்ததால், அத்தனை தொலைவில் தனியாக இருக்க வேண்டாம் என நினைத்து, அவள் கணவனும், மாமியார் மாமனாரும் இப்படியொரு முடிவெடுத்திருந்தனர்.

ஹேமாவின் கணவனுக்கு வேலை இருந்ததால், அவளின் அண்ணனும், அண்ணியும் சென்று அவளை அழைத்து வந்திருந்தனர்.

வண்டியை நிறுத்திவிட்டு வந்து, வீட்டின் கதவைத் தேவா தட்டினான். இரண்டு மூன்று முறைத் தட்டியபிறகு, தேவாவின் அண்ணி வந்து கதவைத் திறந்து விட்டாள்.

தேவாவைப் பார்த்தும், அவனது அண்ணி எதுவும் பேசவில்லை.

‘யாரோ? எவரோ?’ என்பது போல உடல்மொழியுடன் தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

தேவா, “அக்கா” என்று அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்திருந்தவள், “தேவா வாடா” என்று சொன்ன பொழுது, அவள் முகமெல்லாம் சிரித்தது.

அவனும் சிரித்துக் கொண்டு, ஹேமா அருகில் வந்து அமர்ந்தான்.

“இப்போதான் வர்றதுக்கு டைம் கிடைச்சதா?? நேத்து நைட்டே வந்திட்டேன். காலையிலேயே வந்து பார்க்க மாட்டியா?? பாபிகூட அப்பவே வந்து பார்த்தான்”

“பாபி வந்தானா??”

“ம்ம்ம், சாயங்காலம் வந்தான். ஏன் உனக்குத் தெரியாதா?”

“ம்கூம்” என்றவன், “சரி, நீ எப்படி இருக்க?” என்று நலம் விசாரித்தான்.

“நல்லா இருக்கேன். நீ எப்படிடா இருக்க?”

“ம்ம்ம், எனக்கென்ன?? நல்லா இருக்கேன்”

ஹேமா தம்பியைப் பார்த்தாள். மெலிந்து விட்டானோ? என்று தோன்றியது.

அந்தக் கவலையில், “ஏன்டா வீட்டைவிட்டுப் போன?” என்று கலங்கிய குரலில் கேட்டாள்.

“இதுவரைக்கும் போஃன்ல கேட்ட. இப்போ நேர்ல கேட்கிற?” என்று கோணல் புன்னகை ஒன்றுடன் பதில் சொன்னான்.

“பதில் சொல்லு தேவா”

“அது முடிஞ்சு போன விஷயம். எனக்கு இங்க இருந்தா ப்ரீயா எதுவும் செய்ய முடியாது-க்கா. அதனால, இதைப் பத்தி இனிமே கேட்காத… பேசாத”

அந்த நேரத்தில், அம்மா-அப்பா இருந்திருக்கலாமோ என்று ஹேமாவின் மனது ஏங்கியது.

அவள் முகத்தைப் பார்த்தவன், “சரி, மாமா எப்படி இருக்காரு?” என்று பேச்சை மாற்றினான்.

“நல்லா இருக்காருடா. அவருக்கு கொஞ்சம் வேலை. அதான் வரலை”

“நீ இங்க இருக்கப் போறீயா?? இல்லை உன் மாமியார் வீட்டுக்கு போகப் போறியா??”

“அங்க போறதாதான் பிளான் இருந்தது. ஆனா அண்ணன்தான், தலைப்பிரசவம்… நாங்க பாத்துக்குவோம்னு சொல்லிட்டான்”

“அப்போ இங்கதான் இருக்கப் போற”

“ம்ம்ம், ஏன் தேவா!.! நான் இங்க இருக்கிற வரைக்கும், நீ என்கூட வந்து இருக்கலாம்ல?”

“இல்லை-க்கா. அது வேண்டாம். தேவையில்லாம பிரச்சனைதான் வரும்”

“பிரச்சனை வந்தா, நான் அதைச் சரி பண்ணிருவேன்டா”

“அதான் வேண்டாம்னு சொல்றேன். இந்தமாதிரி நேரத்தில நிம்மதியா இரு. நான் அடிக்கடி வந்து பார்த்துக்கிறேன்”

“ஏன்டா??” என்று கெஞ்சுதல் குரலில் கேட்டுப் பார்த்தாள்.

“வேற பேசு-க்கா” என்றவன், “அண்ணா பசங்க எங்க-க்கா??” என்று வீட்டைச் சுற்றிப் பார்த்துக் கேட்டான்.

“தூங்கிட்டாங்க தேவா. நீ ஏதாவது சாப்பிடுறியா??”

‘வேண்டாம்’ என்று மறுத்து தலையை ஆட்டினாள்.

ஹேமா சொன்ன எல்லாவற்றிற்கும் மறுப்பது போல் தேவாவிற்குத் தோன்றியது.

எனவே, “அக்கா, உனக்கு வேற ஏதாவது வேணுமா?” என்று பாசமாகக் கேட்டான்.

“ம்ம்ம்”

“என்னன்னு சொல்லு? செய்றேன்”

“என்னைய நீதான் ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டுப் போகணும்”

“இவ்வளவுதான!! கண்டிப்பா கூட்டிட்டுப் போறேன்”

“நெஜமாவா தேவா”

‘உனக்காக இதுகூட செய்ய மாட்டேனா’ என்பது போல் தேவா பார்த்தான்.

ஹேமாவிற்குப் புரிந்தது.

“இல்லைடா. நீ எதுவும் பார்க்கலை, பண்ணலைன்னு யாரும் சொல்லிடக் கூடாதுல. அதுக்காகத்தான் நான் இப்படிக் கேட்டேன்”

“அப்படி யாரும் சொன்னாலும், நான் கண்டுக்கவே மாட்டேன். நான் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னது உனக்காகத்தான்”

அதுவரை எப்படியோ! ஆனால் அந்தக் கணம் ஹேமா சந்தோஷமாக உணர்ந்தாள்.

“அக்கா, எந்த ஹாஸ்பிட்டல், எங்க இருக்கு… எப்படி… இதெல்லாம் பார்த்திட்டு, உனக்குச் சொல்றேன்”

“ஹாஸ்ப்பிட்டல் பார்த்தாச்சு. நீ கூட்டிட்டுப் போனா போதும்”

“பார்த்தாச்சா? நைட்தான வந்த… எப்போ பார்த்த?? அண்ணி சொன்னாங்களா??”

“இல்லை. பாபி சொன்னான்”

“பாபியா??”

“ம்ம்ம், காலையில ஒரு ஆக்சிடென்ட் கேஸுக்காக ஒரு ஹாஸ்பிட்டல் போனீங்களாமே??”

“ஆமா”

“அங்கதான்”

“அங்கேயா??”

“ஆமாடா. பாபி சொன்னான். அங்க இருந்த gynecologist, பார்க்க நல்ல மாதிரியா தெரியுது. ஹாஸ்ப்பிட்டலும் பெருசா, நல்லா இருக்கு. அங்கேயே செக்-அப்புக்கு போங்கன்னு”

‘இந்த பாபி ஏன் தேவையில்லாம அவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டல ரெஃபர் பண்ணியிருக்கான்??’ என்று தேவா யோசித்தான்.

“அதோட மாமாவும் சொன்னாருடா, ‘பணத்தைப் பத்திக் கவலை இல்லை, பேபிதான் முக்கியம்னு’ ”

இன்னும் தேவா யோசித்துக் கொண்டிருந்தான்.

“என்னடா யோசிக்கிற?? கூட்டிட்டுப் போவேலே”

‘சம்மதம்’ என்பது போன்ற தலையாட்டல்கள் தேவாவிடம்.

இந்த நேரத்தில் ஹேமா உட்காருவதற்கு, சற்று சிரமப்படுவது போல் இருந்தது.

இதைப் பார்த்த தேவா, “லேட்டாகுது. நீ தூங்கு-க்கா. நான் கிளம்புறேன்” என்று எழுந்திரிக்கப் போனான்.

அதற்குள் அவன் கைப்பிடித்து, ‘உட்காரு’ என்று கண்களால் சொன்னாள்.

“என்னக்கா??” என்று கேட்டு, தேவா உட்கார்ந்தான்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”

“சொல்லு”

“உன் லைஃப் பத்தி ஏதாவது ஐடியா இருக்கா??”

தேவா சிரித்தான்.

“சிரிக்காதடா!! பதில் சொல்லு”

“இப்ப எதுக்கு இந்தக் கேள்வி??”

“எதுக்கா?? உனக்காகத்தான்”

“எனக்கென்ன? நான் நல்லாத்தானே இருக்கேன்”

“நல்லது செய்ற… அவ்வளவுதான். நல்லா இருக்கேன்னு சொல்லாத”

யாரென்று தெரியாதவர்களுக்குக் கூடத் துணை நிற்கிறான். அவனுக்குத் துணையாக யாராவது வேண்டுமென ஹேமா நினைத்தாள்.

“எத்தனை நாள்தான் இப்படித் தனியாவே இருப்ப தேவா?”

“நான் எங்க தனியா இருக்கேன்?? நீ இருக்க. அப்புறம் பாபி… ஆபிஸ்ல அங்கிள் ஆண்ட்டி… அண்ணா பசங்க… இனி உனக்கு வரப் போற பிள்ளை… ”

“போதும் நிறுத்துடா!! நான் என்ன கேட்கிறேன்னு புரியலை??”

ஹேமா கேட்ட விதத்தில் மீண்டும் தேவா சிரித்தான்.

“சும்மா சிரிக்காதடா… ” என்று அவன் தலையில் அடித்தவள், “நான் கேட்கிறது வேற தேவா” என்றாள்.

“என்ன வேற?” என்று தெரியாத மாதிரி கேட்டான்.

“டேய்! நீ சொல்ற எல்லாருக்கும், இங்க ஒரு பேமிலி இருக்கு. நீமட்டும்தான் தேவா தனியா இருக்க. கல்யாணம் பண்ணிக்கோடா” என்றவள் குரலில் லேசான வருத்தம் ஒட்டியிருந்தது.

“இதுக்காவ நீ இங்க வந்த??”

“ஆமா! இதுக்குத்தான். கல்யாணம் பண்ணிக்கோ தேவா” என்று அதே புள்ளியில் நின்றாள்.

“அக்கா, எனக்குன்னு சில ப்ரின்ஸ்பிள்ஸ் இருக்கு. அதெல்லாம் உனக்கு… ” என்று தேவா, தன் வாக்கியத்தை முடிக்கும் முன்பே…

“கல்யாணம் பண்ணிப்பியா?? மாட்டீயா?? அதைச் சொல்லுடா” என்றாள்.

“நாளைக்கு வந்து ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போறேன்” என்று எழுந்து விட்டான்.

“நான் கேட்ட கேள்விக்கு இது பதிலில்லை தேவா” என்று ஹேமாவும் எழுந்தாள்.

“காலையில 9:30 க்கு வருவேன்” என்று சொல்லிக் கொண்டே வாசல் வரை வந்துவிட்டான்.

“தேவா நீ கல்யாணம் பண்ணிக்கணும்” என்று அவன் பின்னேயே வேண்டுகோள் வைத்தபடி வந்தாள்.

“ரெடியா இருக்கா. பைக் வேண்டாம். கேப் புக் பண்ணிடறேன்” என்றவன் பைக் அருகே வந்திருந்தான்.

“எஸ்கேப் ஆகி ஓடுறடா”

“மாமா போஃன் பண்ணா, கேட்டதா சொல்லு. அப்புறம் இந்த சாக்லேட்ட அண்ணா பசங்ககிட்ட கொடுத்திடு” என்று சொல்லி, ஹேமாவின் எண்ணத்தை மாற்றப் பார்த்தான்.

“இன்னைக்கு தப்பிச்சிட்ட! ஆனா இன்னொரு நாள் மாட்டுவ”

“அப்போ அன்னைக்கே பதில் சொல்லிக்கிறேன்”

ஹேமா சிரித்து விட்டு, “சரி, சரி… பார்த்துப் போடா” என்றாள்.

“ம்ம்ம் சரிக்கா” என்று தேவா கிளம்பினான்.

அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவள், ‘நான் திரும்பிப் போகறதுக்குள்ள, உனக்கொரு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் தேவா’ என்று மனதிற்குள் சபதம் எடுத்துக் கொண்டாள்.

******

இதே நேரத்தில் தாரா வீட்டில்…

வீடு, வீட்டைச் சுற்றியுள்ள இடங்கள்… அதை பற்றி ஒரே வரியில் சொல்லிவிடலாம். பணத்தின் செழிப்பை பறைசாற்றும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

சாப்பாடு மேசையில்…

சரத், தாரா, ஜெகன்… ராஜசேகர் மற்றும் அவரது மனைவி கீதா.

கீதாவைப் பற்றி…

தன் கணவன்… சரத், தாரா, ஜெகன்… இந்த வீடு… இதுதான் தன் உலகம் என்று வாழ்ந்து வருபவர். இதைத் தாண்டி வெளியே செல்லவும் மாட்டார். யோசிக்கவும் மாட்டார்.

ஆனால் எதார்த்தம் என்று எதையும் ஏற்காமல், எதிர்பார்த்தது வேண்டும் என்று நினைப்பவர்.

இதுவே கீதா ராஜசேகர்!

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே,
“அம்மா கேளுங்க” என்று கீதாவின் காதுகளில், சரத் ரகசியமாகச் சொன்னான்.

“சரிடா” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டு, “தாரா…” என்று சத்தமாக அழைத்தார்.

“என்னம்மா??” என்று சாப்பிட்டுக் கொண்டே கேட்டாள்.

“காலையில ஹாஸ்ப்பிட்டல என்ன நடந்தது?”

“அதான் சரத் சொல்லியிருப்பான்ல. அப்புறம் எதுக்கு என்கிட்ட கேட்கறீங்க??”

“அவன் சொல்றது இருக்கட்டும். நீ சொல்லு” என்று அதட்டல் தொனியில் கேட்டார்.

தாரா அமைதியாக இருந்தாள்.

“தாரா…” என்று சளைக்காமல் திரும்ப ஆரம்பித்தார்.

“என்னம்மா?” என்று சலித்துக் கொண்டாள்.

“நம்மகிட்ட வேலை பார்க்கிறாங்கன்னு, டாக்டர்ஸ்ஸ அப்படிப் பேசலாமா? அது தப்பு தாரா. அது ஹாஸ்பிட்டல் குட்வில்ல அபெஃக்ட் பண்ணும்” என்று அறிவுரைக் கூறத் தொடங்கினார்.

“கீதா, ஏற்கனவே இதைப் பத்தி பேசியாச்சு. திரும்பத் திரும்ப பேசி, அவளைக் கஷ்டப்படுத்தாதீங்க” என்று ராஜசேகர் தாராவிற்கு ஆதரவாகப் பேசினார்.

“அவங்க என்கிட்ட பேசிக்கிட்டு இருக்காங்க. நான் கேட்டுக்கிட்டு இருக்கேன். நீங்க இதுல… ” என்று பாதியிலேயே தாரா நிறுத்தினாள்.

கீதா, சரத், ஜெகன் மூன்று பேரும் ராஜசேகரைக் கலக்கத்துடன் பார்த்தனர். ஆனால் அவர் முகம் எதையும் உணர்த்தவில்லை.

“அம்மா… நான் ஒரு டெசிஷன் எடுத்தேன். ஆனா, எல்லாரும் சரத்கிட்ட கேட்கணும்னு சொன்னாங்க. அதனால ட்ரீட்மென்ட் டிலே ஆனது. ஸோ ஐ காட் ப்ரஸ்டுரேட்டடு. அண்ட் ஐ ஆஸ்கிடு ஸாரி பாஃர் மை மிஸ்டேக். இதுக்கு மேல என்ன செய்ய??”

“அது ஏன்னு உனக்குப் புரியலையா தாரா??” – சரத்.

“எது சரத்??”

“அதான், எல்லாரும் ஏன் என்னோட முடிவுக்கு வெயிட் பண்றாங்கன்னு?”

“போதும் சரத். வேண்டாம்” – ராஜசேகர்.

“அப்பா நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க” என்றவன், “சொல்லவா தாரா??” என்று ஒரு மாதிரிக் குரலில் சரத் கேட்டான்.

தாரா அமைதியாகிவிட்டாள்.

“நீ புதுசா ஒரு ஹாஸ்பிட்டல் கட்டிக்கிட்டு இருக்கேல. அதான் காரணம்”

கோபத்தில் அவள் மூக்கு விடைப்பதை, அவளது மூக்கு வளையம் காட்டிக் கொடுத்தது.

“இங்க இருக்கிற டாக்டர்ஸ் எல்லாருக்கும், நீ இந்த ஹாஸ்பிட்டல இருப்பியா?? இல்லை… உன் ஹாஸ்பிட்டல் போயிருவியா?-ன்னு ஒரு டயலமோல இருக்காங்க. அதான் எனக்கு இம்ப்பார்ட்டன்ஸ் கொடுக்கிறாங்க”

தாரா எழுந்துவிட்டாள்.

“அக்கா பாதிச் சாப்பாட்டுல எந்திரிக்காத. உட்காரு” என்று ஜெகன் அதட்டினான்.

“உண்மையைச் சொன்னா உனக்கு கோபம் வருதா தாரா??” – இது சரத்தின் கோபம். காரணம், அடிக்கடி அம்மா அப்பாவைக் கவலை கொள்ளச் செய்கிறாள் என்று!

“நான் என் இஷ்டப்படி இருக்க கூடாதா??” என்று சம்மந்தமே இல்லாமல் தாரா பேசினாள்.

“யார் சொன்னா அப்படி?? தாராளமா இருக்கலாம். ஆனா இப்ப நீ சாப்பிடு” என்று சிறுபிள்ளையைச் சமாதானப் படுத்துவது போல் ராஜசேகர் சொன்னார்.

அவள் சமாதானமாகவில்லை. “குட் நைட்” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

அனைவரும் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

சட்டென, ராஜசேகர்தான் ஒரு தட்டில் இரவு உணவை எடு‌த்து‌ வைத்தார்.

“ஜெகன்” என்று அழைத்தார்.

“அப்பா”

“நீ இந்தச் சாப்பாட எடுத்திட்டு போய் அக்காவைச் சாப்பிடச் சொல்லு”

“ம்ம், சரிப்பா”

“ஜெகன்” – கீதா.

“என்னம்மா??”

“எப்படியாவது சாப்பிட வைச்சிருடா”

“டோண்ட் வொரி. நான் பார்த்துக்குவேன். பட் நீங்க பீல் பண்ணாம, சாப்பிடுங்க”

“அதை நான் பார்த்துப்பேன்” – சரத்

“பிரச்சனைக்கு ஸ்டார்டிங் பாயிண்டே நீதான்” என்று முணுமுணுத்தாவாறே ஜெகன் சென்றான்.

ஜெகன் சென்றதும்…

“கீதா, ஜெகன் சொன்னது கேட்டுச்சுல. நீ சாப்பிட ஆரம்பி” என்று ராஜசேகர் எழுந்தார்.

சட்டென எழுந்து, அவர் முன்னே சென்று, “ராஜ், நீங்க சரியாவே சாப்பிடலை” என்றார்.

“அதெல்லாம் இல்லைம்மா. நல்லா சாப்பிட்டாச்சு” என்றவர்,

“சரத், இந்த ஹாஸ்பிட்டல் மேட்டர் ஏற்கனவே பேசியாச்சு. திரும்பவும்… அதுவும் இன்னைக்கு பேசணும்னு அவசியமேயில்லை” என்று சற்று கடுமையாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

அவர் சென்றவுடன்…

சரத்தின் அருகில் வந்தமர்ந்த கீதாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

“அம்மா.. நீங்க பீல் பண்ணாதீங்க”

“ஏன்டா இவ இப்படி இருக்கா?”

“அப்பா சொன்னமாதிரி, அவளோட ஹாஸ்ப்பிட்டல் பத்திப் பேசியிருக்க கூடாது”

“ரொம்ப பயமா இருக்கு சரத்”

“ஏன்-ம்மா? என்ன திடீர்னு??”

“ரெண்டு நாளைக்கு முன்னாடி, அப்பா ஒரு விஷயம் சொன்னாருடா”

“என்ன விஷயம்?”

“தாரா வீடு வாங்கியிருக்கான்னு”

“உங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னேன். அப்பா சொல்லிட்டாரா?” என்று சிரித்தான்.

“என்ன வீடுடா? எங்கடா வாங்கியிருக்கா??” என்று பரிதவித்தார்.

“வீடு இல்லை-ம்மா. ப்ளாட். ஆனா நீங்க ஏன் பயப்படனும்?”

“சரத் எனக்கு… எனக்கு… தாரா நம்மல விட்டுட்டுத் தனியா போயிருவாளோன்னு பயமா இருக்கு” என்கின்ற போதே, அவர் குரல் நடுங்கியது.

“ம்மா”

“அப்படிமட்டும் அவ போயிட்டா… அம்மா அவ்வளவுதான்-டா” என்று குலுங்கிக் குலுங்கி அழுதார்.

அவரைத் தோளோடு அணைத்து, அவரது கைகளைப் பிடித்துக் கொண்டான்.

மேலும், “அய்யோ அம்மா… அழாதீங்க. ச்சே, உங்களை அழ வைக்கிறதே இவ வேலை” என்றவனுக்குத் தாரா மீது கோபம் மேலோங்கியது.

“நம்மல விட்டுப் போமாட்டாள சரத்??” என்று அவன் கையை இன்னும் இறுக்கமாகப் பிடித்தார்.

“அவ வீட்டைவிட்டு போறேன்னு சொன்னா… அதுக்கு நான் விட்ருவேனா? நீங்க தேவையில்லாம பயப்படாதீங்க”

அவர் இன்னும் சமாதனமாகவில்லை என்று தெரிந்தது.

“ம்மா… இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க. தாரா இந்த வீட்டை விட்டுப் போறான்னா… அது அவ கல்யாணம் நடந்து போறதாத்தான் இருக்கும்” என்று சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னான்

“எங்கடா?! காமிக்கிற எல்லா பையனையும் பிடிக்கல பிடிக்கலன்னு சொல்றா”

“ம்மா… இதுக்கெல்லாம் போர்ஸ் பண்ண முடியாது. பண்ணவும் கூடாது”

“ம்ம்ம்… நீ சொல்றதும் சரிதான்”

“சரி, இப்போ சாப்பிடுங்க”

“தாரா சாப்பிட்டிருப்பாளா சரத்?”

“சாப்பிட்டிருப்பா. ஜெகன் சாப்பிட வச்சிருப்பான். நீங்க சாப்பிடுங்க” என்று பரிமாற ஆரம்பித்தான்.

சரத் சொல்வது உண்மைதான். பேசிப் பேசியே ஜெகன் தாராவைச் சாப்பிட வைத்துக் கொண்டிருந்தான்.

ஆதுபோல் கீதாவும், சரத்தின் பேச்சைக் கேட்டுக் கொண்டே சாப்பிட்டார்.

இந்த வீட்டில், இதுபோல் நிறைய இரவுகள் நிகழும்.

*****
அடுத்த நாள் காலை…

காருக்கு வெளியே…
அதே ஏறுவெயில்…அதே தார் சாலைகள்… அதே போக்குவரத்து நெரிசல்…

காருக்கு உள்ளே…
அதே நேட் கிங் கோல்-ன் த்ரீ லிட்டில் வேர்ட்ஸ்… ரசனையுடன் அதைக் கேட்டுக் கொண்டே தாரா…

மருத்துவமனைக்கு வந்தடைந்தாள்.

ஐந்தாவது தளத்திற்குள் நுழைந்து, நடைகூடத்தில் நடந்து வருகையில்… அந்தக் குஷன் இருக்கை ஒன்றில் தேவா இருந்தான்.

விரும்புவனைக் கண்டதும், தாராவின் மனம் வீணை மீட்டியது.

ஆனால் இது பார்வையாளர் நேரம் என்பதால், இப்போது பேச முடியாது. எனவே அவனைக் கவனிக்காமல் சென்றாள்.

எனினும் தேவாவைக் கடந்து நடந்து செல்லும் போது, தாராவின் மனம் கிடந்து அடித்துக் கொண்டது. இதயம், ‘லவ் யு தேவா’ எனத் துடிக்கத் தொடங்கியது.

எந்த அடிப்பையும், துடிப்பையும் முகத்தில் காட்டாமல், தன் அறைக்குள் புகுந்தாள்.

கதவை மூடிவிட்டு, ‘யெஸ்… யெஸ்…’ என்று வெற்றிக் குறி செய்து, ‘ஹே… யூ… லக்கி கேர்ள் தாரா… இன்னைக்கு தேவாகிட்ட பேசிடு! தி இஸ் யுவர் செகண்ட் சான்ஸ். அண்ட் டோண்ட் மிஸ் இட்’ என்று தன்னைத் தானே ஊக்கப்படுத்திக் கொண்டாள்.