emv10

emv10

எனை மீட்க வருவாயா! – 10

பிரபஞ்சத்திலேயே

தங்களைப்போல

காதலித்தவர் எவருமில்லை எனும்

இறுமாப்பிலே அஸ்திவாரம் எழுப்பி,

நம்பிக்கையிலே காதல்கோட்டை கட்டி,

காதலை வளர்த்தவர்கள்,

கோட்டையை ஆள தங்களோடு

கோள்களும் துணையிருக்க வேண்டுமென்பதை

மறந்து போகிறார்கள்!

கிருபா என்பவனை நம்பாவிட்டால், தன்னையே தன்னால் நம்ப இயலாது என்னுமளவிற்கு அல்லவா, அவன்மீது பைத்தியமாய் இருக்கிறாள் திவ்யா.

எப்படிச் சொல்லி, அவன் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்துவது என யோசித்தவள், “நம்பாமையா லாஸ்ட் வீக் ஃபுல்லா உன்னைப் பாக்கததிலேயே, இப்டி ஆகிட்டேன்” தனது மெலிவான உடலைக் காட்டிக் கேட்டாள்.

அவளின் பதிலில் கிருபாவிற்கே வருத்தமாய்ப் போனது. “அதுக்காக இவ்ளோதூரம் உன்னை நீயே கஷ்டப்படுத்தியிருக்க வேணாம்” என்றவனை முறைத்தாள்.

“எனக்கு உன்னைப் புரியுது.  ஆனா, நான் உங்கிட்ட இப்டி எதாவது குவஷின் ரைஸ் பண்ணலைல, அன் தென் மெலிஞ்சிருக்கேனா” என அவனது உடலைக் காட்டிக் கேட்டான்.

சற்று தள்ளி நின்று பார்த்தவள், “எனக்கு ஒன்னுமே தெரியலையே” பாவமாய் உரைத்தாள்.

“அப்டினா, நான் ஒரே மாதிரிதான இருக்கேன்னு அர்த்தம் டீடீ!”

“அப்ப உனக்கு என்னைப் பிரிஞ்சி இருந்ததுல வருத்தமே இல்லையா?” சிறுபிள்ளைத்தனமான அவளின் கேள்வியில், அவனுக்கு சிரிப்பு வந்தாலும், அதை அடக்கிக்கொண்டு, அவளின் அருகே வந்து தோளை ஆறுதலாகப் பற்றியவன், “பாக்காத வருத்தம் எனக்குள்ளயும் இருந்தது டீடீ. ஆனா சூழல் அப்டி. சின்ன காயந்தான்.  அதுக்கே, எதுவும் யோசிக்க முடியாதளவு அம்மா, சிஸ்டர்னு என்னை எங்கேஜ் பண்ணிட்டாங்க”

“…” குழப்பமான நிலையில் அவனது பேச்சைக் கேட்டிருந்தாள்.

“என்னைய நீ நினைப்பேன்னு நம்பிக்கையோட நானிருந்த மாதிரி, நீயும் ஸ்ட்ராங்கா எம்மேல நம்பிக்கையா இருக்கணும்ல. அடுத்தவங்க அதைச் சொன்னாங்க, இதைச் சொன்னாங்கனு மனசப் போட்டுக் குழப்பிக்கக் கூடாதுல்ல டீடீ” தோளைத் தட்டிக் கொடுத்தபடியே கூறினான்.

“இருந்தாலும்… நீ சொல்லிக் கேக்கறது வேறல்ல” நெருங்கி நின்றாலும், அவனது கண்களில் உண்மையைத் தேடியபடி கேட்டாள்.

“பயப்படறியா… உன்னை ஏமாத்திருவேன்னு”

“பயமெல்லாம் இல்லை.  வரப்போறதெல்லாம் சமாளிச்சிருவியானு மட்டுந்தான் யோசிக்கிறேன்”

“குட், அதுலாம் சமாளிச்சரலாம்” என்றவன், “இந்த செமஸ்டர் எக்சாம்ஸ் இன்னும் ஒன் மந்த்ல ஸ்டார்ட் ஆகிரும். அடுத்து வர செமஸ்டர் ஃபுல்லா புராஜெக்ட்லயே ஓடிரும்.   அது முடிஞ்சதும் பீஜி பண்ணலாம்.  அப்புறம் நம்மப்பத்தி வீட்ல சொல்லி, மேல ஆகவேண்டியதைப் பாத்திரலாம்” இலகுவாக திட்டங்களைக் கூறியவனை, இமைக்க மறந்துபோய் பார்த்திருந்தாள்.

ஆனாலும் அவனின் இறுதி வார்த்தையைக் கேட்டு இதயம் சுருங்கிப் போனவள், “பீஜி படிக்க, எங்க அம்மாவை ஒத்துக்க வைக்கிறது ரொம்பக் கஷ்டமே கிருபா” தயங்கி உரைத்தவாறே நிமிர்ந்தவள், அவன் முகம் பார்த்துக் கூறினாள்.

“அதுனால என்ன? எதாவது வேலைக்குப்போ.  அதுக்குள்ள நான் பீஜி முடிச்சிறுவேன். சிங்கப்பூர்ல எங்க ரிலேட்டிவ் டெவலப்பிங் லைன்ல இருக்கார். நான் பீஜி முடிச்சதும் அங்க எதாவது நியூ புராஜெக்ட் அசைன் பண்றதா சொல்லியிருக்கார்.  அதுனால இனி தேவையில்லாம குழப்பிக்க கூடாது” அவளது நெற்றியோடு, தனது நெற்றியை இதமாய் ஒற்றியபடி சிரித்தான்.

அவனது செயலிலும், எதிர்காலம் பற்றிய பேச்சிலும், கற்பனையில் அதை நினைத்தவளுக்கோ, அவளறியாமலேயே நாணமெழ, அவளைப் பார்த்திருந்தவன், “இப்பத்தான் நார்மல் மோடுக்கு வந்திருக்க டீடீ” இதுபோல எதிர்காலத்தினைக் குறித்து, திட்டமிடலோடு பேசியவனை நம்பாமல் என்ன செய்வாள் திவ்யா.

பிசிறில்லாத காதலில், இடையிட்ட தூபங்களினால் எழுந்த குழப்பத்தினால், உசிறில்லாதது போலிருந்தவளை தனது பேச்சால் மீட்டெடுத்திருந்தான்.

…………………………….

காலை வந்தது முதலே ஆய்வகத்தில் இருந்தவளுக்கு, மிகவும் சோர்வாக இருந்தது. இடைவேளைக்கு பிறகு வெளியே வந்தவள், அனுமதி வாங்கிக் கொண்டு கேண்டீனை நோக்கி நடந்தாள்.

நீண்ட நாள்களாகவே கயலை தனித்து சந்திக்க எண்ணியிருந்த கிருபா, எதேச்சையாக இன்று அவள் செல்வதைக் கவனித்துவிட்டு, அவனும் பின்னோடு கிளம்பியிருந்தான்.

வாங்கிய வடையில் ஒரு வாய், அடுத்து டீயை ஒரு மிடறு என மாறி மாறி இரண்டு முறை முடித்து, சோர்வோடிருந்த தன்னை, மாற்றிக் கொள்ள முனைந்திருந்தவளின் முன்னே, காபியோடு வந்தமர்ந்தவனை, யோசனையோடு பார்த்தாள்.

கிருபாவை, அந்த நிகழ்விற்குபின் பெரும்பாலும் தவிர்த்திருந்தாள் கயல்.  ஆனால் இன்று!  அசையாமல் அப்படியே திகைத்திருந்தவளைக் கண்டவன், “என்ன கயல், உன்னோட சிஐடி வேலையெல்லாம் எப்டிப் போகுது” சிரித்தபடியே கேட்டான்.

“…”

“சோசியல் சர்வீஸ்லாம் வேற பண்றபோல”

“…”

கிருபாவின் குரலில் வழிந்த நக்கல் புரிந்தாலும், பதில் பேசாது அமைதி காத்தாள் கயல்.  அவளின் டீயைக் குடிக்காமல், தன்னையே பார்த்துக்கொண்டு இருந்தவளைப் பார்த்தவன் “டீ ஆறிடப்போகுது கயல்”

“இப்ப உனக்கு என்ன வேணும்” குடித்த டீயைக் காட்டிலும், சூடாய் வந்தது கேள்வி.

“எதுவும் வேணுனாதான் உங்கூட பேசணுமா?”

“…”

“உன்னோட ஆராய்ச்சி, சர்வீஸ் எல்லாம் உன்னோட மட்டும் வச்சுக்க கயல்”

“…” 

“..தேவையில்லாம, என் மூக்கத் தொடணும்னு நினைச்சா, ஐ மீன், திவ்யாகிட்ட தேவையில்லாம எதுவும், குறிப்பா என்னைப் பத்தி பேசணும்னு நினைச்சா, இதுபோலலாம் வந்து இனி அமைதியா பேசிட்டுப் போகமாட்டேன்”

“அப்டி என்ன பண்ணீருவ?”

“சொல்லிட்டுச் செய்யறது என் பழக்கம் இல்ல”

“ஓகோ”

“எந்தக் காலத்திலயும் நீ ஒரு பொண்ணுங்கறதை மறந்துறாதே கயல்.  உன்னோட சேஃடிய நீதான் பாத்துக்கணும்.  தேவையில்லாம வாய விடறது, எதாவது செய்யறதுன்னு இருந்தா, எழுந்துக்கவே முடியாதளவுக்கு பெரிய அடியா வாங்கிருவ.  பாத்து இருந்துக்கோ.  உன்னோட தைரியம் நல்லதுதான்.  ஆனா அனாவசியமா அடுத்தவங்க விசயத்துல மூக்கை நுழைக்கும்போது, உன்னைச் சிதைச்சிறதுக்கும் வாய்ப்பிருக்கு”

“என்ன, மிரட்டறியா?”

“மிரட்டணும்னு, கீழ யோசிக்கற ஆளில்ல நான்.  அப்டி ஒரு பிரச்சனைனா, நேரடியாப் போயி வேலைய முடிச்சிட்டு, சத்தமில்லாம இருந்திருவேன்.  இப்டி வந்து சொல்லிட்டு இருக்க மாட்டேன்”

“பெரிய இவன்னு நினைப்பா உனக்கு”

“இப்பவும் சொல்றேன்.  பெரிய இவன்னு உங்கிட்ட வந்து காட்டணும்னு, ரெண்டாவது நிலைய யோசிக்கறவன் நானில்லை. வாயலா கெட்டுப் பழக்கமில்லை எனக்கு. செய்யறதை செஞ்சிட்டு போயிருவேன்” மீண்டும் உரைத்தவன், “இனி எங்க லைன்ல கிராஸ் ஆகாம இருக்கப் பாரு” என்று கிளம்பியவன், மீண்டும் நின்று பேசினான்.

“இன்னொன்னு, இத திரும்பவும் அங்க கொண்டு போனா, நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பாக முடியாது. இதைக்கூட அவ நேரிடையா எங்கிட்ட சொல்லலை.  ஃபிரண்டை காட்டிக் குடுக்கக்கூடாதுன்னு மறைமுகமாத்தான் வந்து சொன்னா.  ஆனா நான்… அது நீயாத்தான் இருப்பேன்னு, சரியா கெஸ் பண்ணிட்டேன்” சிரித்தவன்

“நான் எப்டிபட்டவன்னு, அவ…, அதான் என்னோட டார்லிங் ஆராய்ச்சி பண்ணிப்பா.  உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல” சிரிப்பு மாறாமல் கூறிவிட்டு, தலையைக் கோதியபடியே கிளம்பியிருந்தான்.

சற்றுநேரம் ஒரேயிடத்தில் இருந்தவளின் முன்பு வந்தமர்ந்தவனை புரியாமல் பார்த்தாள்.

“நீங்க திவ்யா கிளாஸ்தான?”

“…”

“இப்ப வந்திட்டுப் போறது கிருபாதானே” எனத் துவங்கிய விக்கியுடன், கைகோர்க்காமலேயே, சில விசயங்களைப் பற்றி இருவரும் பேசத் துவங்கியிருந்தனர்.

இது அன்றோடு முடியாமல், அடுத்தடுத்து வந்த தருணங்களிலும் தொடர்ந்தது.

……………….

வேறு ஏதோ பணி நிமித்தமாக வந்த காளியம்மாள், அப்படியே வந்து ஈஸ்வரியை சந்திக்க, ஆரவாரமில்லா வரவேற்பு.

பெயருக்கு வரவேற்று, அதுவரை வேலையில்லாதிருந்த ஈஸ்வரி, வேலையிருப்பதுபோல காட்டிக்கொள்ள, சற்றுநேரம் அமைதியாக நடப்பதைப் பார்த்திருந்தார் காளி.

“உங்க அக்கா வீட்ல கேட்டியாத்தா?”

“என்ன அத்தை?”

“இல்ல, போன தடவை கேக்கச் சொல்லியிருந்தேனே, கேட்டியா?”

“அதுவாத்தை, எங்க..! இருக்கற வேலையில, ரெண்டு தடவை போனை போட்டும் அவுக எடுக்கலை.  சரி மிஸ்டு காலைப் பாத்திட்டு கூப்பிடுவாகன்னு நினைச்சேன்.  என்னானு தெரியலை. பேசவே இல்லை”

“அப்டியா.. அப்ப இப்படியே நாளக் கடத்துனா, செகனு வரதுக்குள்ள பொண்ணு பாக்க முடியாது.  வேற எதுவும் உனக்குத் தெரிஞ்ச இடத்தில பொண்ணு இருக்கா ஈஸ்வரி”

“இருந்தா சொல்றேன்”, என இழுத்த ஈஸ்வரி, எதையும் மனதிற்குள் வைத்துக்கொள்ளாது, “ஏந்தை, இத்தனை தடவ இங்க வந்திட்டுப் போறீக. கருவேப்பிலை கொத்து மாதிரி, நானும் ஒரு புள்ளைய பெத்து வச்சிருக்கேன்ல.  அது உங்க கண்ணுக்குத் தெரியவே இல்லையாக்கும்” வருத்தத்தோடு கேட்க

“அடியாத்தி… அப்டி ஓரவஞ்சகமா நான் நினைப்பேனாத்தா?”

“அப்ப, யாருவுட்டோ புள்ளையப் பத்தி விசாரிச்சவுக, ஒரு வார்த்தை எம்புள்ளையப் பத்தி கேக்கலியே” வருத்தத்தை மறைக்காமல் பகிர்ந்தாள் ஈஸ்வரி.

“நீ குடுப்பியோ, மாட்டியோனுதான் கேக்கலை புள்ளை”

“குடுக்காம குதிருக்குள்ள வைக்க, நெல்லா அது?”

“நல்லாத்தான் பேசுற ஆத்தா”

“எங்கிட்ட மொதல்ல கேட்டுப் பாத்திட்டுள்ள, நீங்க அந்தப் பேச்சை எடுத்திருக்கணும்”

“சரி.. இப்ப என்னதான் முடிவா சொல்ற? பேத்திய, எம் மூத்த மவன் செகனுக்கு குடுக்கிறியா! இல்லையா!” வகையாய் தனது திட்டம் பலித்ததில், உண்டான சந்தோசத்தோடு காளி கேட்க

முதல்முறை ஜெகன் வெளிநாடு சென்று திரும்பியபோது இருந்த பொருளாதார நிலையைக் காட்டிலும், தற்போது சற்றே உயர்ந்திருந்த அவர்களின் அந்தஸ்தை, ஓரளவு யூகித்து அறிந்து கொண்டது முதலே, சின்ன ஆசை ஈஸ்வரிக்கு.

திவ்யாவை, ஜெகனுக்கு திருமணம் செய்து கொடுக்க.  ஆனால், தானாக எப்படி பேச்சைத் துவங்க என தயங்கியிருந்தாள்.  இன்று காளியம்மாள் துவங்கியதும், தனக்கானதை நழுவவிடக்கூடாது என திடமாய் முடிவெடுத்து கேட்டாயிற்று.

ஜெகனது நல்ல வருவாய், மற்றும் பழக்க வழக்கங்களை ஓரளவு கவனித்திருந்தாள். அவனிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதிருக்கவே, மகளைத் திருமணம் செய்து கொடுக்கும் ஆசை இன்னும் வேரூன்றியிருந்தது.

“கொழுந்தன் வரதுக்கும், இந்தப் புள்ளையோட படிப்பு முடியறதுக்கும் சரியாத்தான் இருக்கும்.  ஒரு எட்டுப்போயி சாதகத்தைப் பாத்திட்டு, என்ன ஏதுன்னு முடிவு பண்ணிக்கலாம்லத்தை.  நீங்களும் கொழுந்தங்கிட்ட கேட்டுக்கங்க.  அவுகளுக்கு இதுல விரும்பமிருக்கானு”

“அவன் இதுல என்ன சொல்லப் போறான். நீ சொன்ன மாதிரி சாதகத்தை முதல்ல பாத்திருவோம்”

“நல்ல நாளா பாத்து சொல்றேன்.  நீங்களும் வாங்க.  நானும் வரேன்.  பாத்திட்டு வந்திரலாம்”

ஈஸ்வரி இரண்டாண்டுகளுக்குமுன்பு இருந்த நிலையிலிருந்து, தற்போது நல்ல முன்னேற்றம் கண்டிருந்தார். அதனால்தான் காளியம்மாளுக்கும் அப்டி ஒரு எண்ணம் எழுந்தது.  சமீபத்தில் அடிக்கடி வந்து செல்லும்போது, ஈஸ்வரியின் முன்னேற்றம் அவரை பெண்ணெடுக்கத் தூண்டியிருந்தது.

இருவரும் ஒரே கோட்டில் பயணிக்க, சாதகம் பொருந்தும்வரை இருவருக்குள்ளும் ஒரு அபஸ்வரம்.  இருவரும் வேண்டாத தெய்வமில்லை.

ஜெகனிடம், ஈஸ்வரி கூறியதைப் பகிர்ந்து கொண்டிட, “சரிம்மா.  பொருத்தம் பாத்துட்டுச் சொல்லு” என்றிருந்தான்.

திவ்யாவிற்கு விசயம் தெரிவிக்கப்படவில்லை.  இன்னும் சில மாதங்கள் இருக்க, எதற்கு இப்போதே என ஈஸ்வரி எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

…………………..

ஜாதகம் பார்த்து பொருத்தமிருக்கவே, இரண்டு குடும்பத்திலுள்ள பெரியவர்கள் மட்டும் கலந்துபேசினர்.

திவ்யாவிற்கு படிப்பு முடியவும், ஜெகனுக்கு திருமணம் செய்துவிடலாம் என தீர்மானமாய் இரு குடும்பங்களும் பேசி முடிவுக்கு வந்திருக்க, அதை ஜெகனிடமும் தெரிவித்திருந்தனர்.

அதுமுதலே, ஈஸ்வரிக்கு அழைப்பவன், அவ்வப்போது திவ்யாவிடம் இரண்டொரு பொதுவான வார்த்தைகள் பேசுவதைக் கடைபிடித்திருந்தான்.

திவ்யாவிற்கு, திடீரென ஜெகன் தன்னோடு பேசுவதற்கான காரணம் எதுவும் தெரியாமலேயே, கேட்டதற்கு பதில் என்றளவில் பேசினாள்.

ஐந்தாவது பருவத் தேர்வும் முடிந்து, தேர்வு முடிவுகள் வெளியாயிருந்தது.

தற்போதும் திவ்யாதான் முதலிடத்தில் இருந்தாள்.  இதே நிலை நீடித்தால், பல்கலைக்கழக அளவில் பெண் முதலிடம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கவே, கல்லூரியில் திவ்யாவை அழைத்து, புராஜெக்ட் சம்பந்தமான முடிவுகளை எவ்வாறு எடுக்க வேண்டும் என்பது பற்றிய இலவச ஆலோசனைகளை, அவர்களின் துறைத்தலைவர் மட்டுமல்லாது, இதர ஆசிரியர்களும் பகிர்ந்து கொண்டனர்.

மகளின் படிப்பு சம்பந்தமான அனைத்தையும் குறைவின்றி பார்த்துக் கொண்ட ஈஸ்வரி, அதேநேரத்தில் திருமணத்திற்கு தேவையான ஆபரணங்கள் சேர்ப்பதிலும் மும்முனைப்பாய் இருந்தார்.

புராஜெக்ட்  சார்ந்த தேர்வு முடிந்திருந்தது.  அடுத்து கருத்துரு தாள்கள் மட்டும் எழுத வேண்டியிருந்தது.

வழமைபோல இரவு தாயின் அலைபேசியை எடுத்து குறுஞ்செய்தி வழியே, கிருபாவுடன் பேச்சு தொடர்ந்திருக்க, அதேநேரம் ஜெகன் அழைக்கவே, கிருபாவிடம் விசயம் எதுவும் தெரிவிக்காமல், அவசரத்தில் தாயிடம் அலைபேசியைத் தந்திருந்தாள் திவ்யா.

ஈஸ்வரி பேசும்போது குறுஞ்செய்திகள் வந்த வண்ணமிருந்தது. திவ்யாவிடம் பேச வேண்டி அலைபேசியைக் கொடுக்க வர, அந்த நேரத்திலும் அடுத்தடுத்து ரிதத்தோடு குறுஞ்செய்திகள் வந்திட, “திவ்யா ஏதோ வேலையா இருக்கு.  இன்னொரு நாளு அவகிட்ட தரேன்” என ஜெகனிடம் உரைத்தவர், குறுஞ்செய்தியை கவனித்து, யாரிது எனத் திறந்து பார்க்க

தங்லீஸ் காதல் வரிகள்!

அனைத்தையும் நிதானமாய் வாசித்து முடித்தவர், “திவ்யா, இது யாரு?” என மகளிடம் நேரிடையாய் விசாரிக்க, அதிர்ந்த திவ்யா, என்ன பதில் கூறினாள்?

……………………….

Leave a Reply

error: Content is protected !!