emv11a
emv11a
எனை மீட்க வருவாயா! – 11A
பலரின் காதலை
சிலரின் அனுபவத்தால் கணித்து,
கரை ஒதுங்கி, மனம் வெதும்பி,
கனவாய்ப் போகிறது, சில காதல்!
காதலர்களே, காலத்தால்
சரிவராது எனக் கணித்து
பிரிந்து போகிறது,
நேரத்தைக் கடத்திய காதல்!
காதலர்களாய் சேருவதில்
காமம் மிஞ்சி, மோகம் மிதமிஞ்சி
காணாமல் போகிறது, கலிகாலத்துக் காதல்!
‘கடவுளே, இப்பப் பாத்து, கன்டினியஸ் மெசேஜா வருதே’ பயம் திவ்யாவை ஆட்கொள்ள, தாயையே கவனித்தபடி சீராக மூச்சுவிட மறந்து இருந்தாள்.
பேசி முடித்துவிட்டு, தன்னை நோக்கி வந்த தாயைக் கண்டதும், ‘ஹப்பாடா’ நிம்மதிப் பெருமூச்சு கிளம்ப, இமை மூடி திறக்குமுன், இன்னும் அடுத்தடுத்து குறுஞ்செய்தி வரும் சத்தமெழ, ‘மிடில’ தலையைப் பிடித்துக் கொண்டாள்.
‘எப்பவும் நோட்டிஃபிகேசன் ரிங்க் டோனை குறைச்சு வைக்கிறவ, இன்னிக்குனு மறந்துபோயி, ஈசுகிட்ட அப்டியே குடுத்துட்டேனே’ என தன்னைத்தானே நொந்தபடியே, என்ன நடக்குமோ எனும் பதற்றத்தோடு, தாயின் ஒவ்வொரு அசைவையும் இமைக்காது பார்த்திருந்தாள் திவ்யா.
அதேநேரம், ஈஸ்வரி தனது கையிலிருந்த திறன்பேசியை கூர்ந்து கவனித்தபடியே, நின்றுவிட, இங்கு திவ்யாவிற்கு இதயம் தனது துடிப்பை நிறுத்தியதுபோல இருந்தது.
யோசனையோடு, திறன் பேசியிலிருந்ததைப் பார்ப்பதும், கைவிரல் கொண்டு, மேலும், கீழுமாய் ஈஸ்வரி கருமமாய் நகர்த்துவதைக் கண்ட திவ்யாவிற்கு, ‘அம்புட்டுத்தான்… இன்னியோட சோலி முடிஞ்சுது’ எனத் தோன்ற, நா வறண்டு, மூச்சுக்கு திணறுவதைப்போல உணர்ந்தாள்.
அனைத்து செய்திகளையும் வாசித்தபடி நின்றிருந்த தாயைக் கண்டபோது, ‘இன்னிக்கு எல்லாத்துக்கும் சங்கா’ என மனம் அரற்ற, அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஆனாலும், கைகளைப் பிசைந்தபடியே, தாயை பயத்தோடு பார்த்திருந்தாள்.
நேரம் செல்லவே, திறன்பேசியில் எதையோ வாசிப்பதும், நிமிர்ந்து தன்னைப் பார்ப்பதுமாய் இருந்த தாயை, சிங்க கூண்டுக்குள், அகப்பட்ட உணர்வோடு பார்த்தாள் திவ்யா.
கிருபா, திவ்யாவிற்கு தற்போது எடுத்தனுப்பியிருந்த அவனது தாமி(Selfie)யை எடுத்து, மகளிடம் காட்டியவாறு “திவ்யா, இது யாரு?” எனக் கேட்டார் ஈஸ்வரி.
வார்த்தைகள் சிக்கிக் கொண்டு பேச்சுக்குத் திணறியவள், “அ..து.. அ..து..” அதற்குமேல், என்ன கூற என்று அவளுக்குத் தெரியவில்லை. நெஞ்சை அடைத்த உணர்வு.
“அதுதான் யாருனு கேட்டேன்” வில்லிலிருந்து கிளம்பிய நாணாய் ஈஸ்வரியிடமிருந்து கேள்வி வந்தது.
“ம்மா… அது கிருபா…” ஒரு வழியாய் தன்னைச் சமாளித்துச் சொல்லியிருந்தாள். கைவிரல்களில் நடுக்கம் உணர்ந்தாள். ‘ஈசப் பாத்து எனக்கு இம்புட்டு பயமிருக்கா…’ அந்நேரத்திலும் அவளால் அவ்வாறு நினைக்காமல் இருக்க முடியவில்லை. தாயிடம் இத்தனை பயமிருப்பதை அன்றுதான் முழுமையாய் உணர்ந்தாள் திவ்யா.
“யாரவன்?”
“காலேஜ்ல எங்கூட படிக்கறான்மா!”
“இதுதான் படிக்கிற லட்சணமா?”
“..”
“அவென் எதுக்கு, இந்தப் ஃபோட்டோவ உனக்கு அனுப்பியிருக்கான். நீ வேற உன்னோட போட்டோவை அவனுக்கு அனுப்பியிருக்க? இது எத்தனை நாளா நடக்குது?”
என்ன பதில் சொல்வாள். தயங்கி, தலையைக் குனிந்தபடி நின்ற மகளைப் பார்த்த ஈஸ்வரி, “மணி இப்ப என்னனு பாத்தியா? இந்த நேரத்தில ஒரு பையங்கூட சாதாரணமா பேசறதே தப்பு. இதுல, உங்க மொகறைய அவனுக்கு அனுப்பி, அவுக மொகறைய நீங்க பாக்கலன்னா, தூக்கம் வராதோ?” ஈஸ்வரியின் ஸ்வரம் கடினமாய் கூடியிருந்த போதும், அதில் தொக்கி நின்ற நக்கலும் திவ்யாவிற்கு புரிந்தது.
“சாரிம்மா… இனி அப்டியெல்லாம் பண்ணமாட்டேன்மா” அழுகையோடு சொற்களை உதிர்த்தாள். பயத்தில் அப்படித்தான் வார்த்தைகள் வந்தது திவ்யாவிற்கு.
“நீ சொல்றதை இன்னும் நம்பறதுக்கு, வேற எவளாவது ஏமாந்தவ கிடைச்சாப் போயிச் சொல்லு..” விரோதியைப் பார்ப்பது போலிருந்த, தாயின் பார்வையில் தேகமெங்கும் வெந்துபோன உணர்வு.
“…”
“படிச்சுப் படிச்சு எவ்ளோ சொல்லியிருப்பேன். செவிடங் காதுல ஊதின சங்குமாதிரி, அதையெல்லாம் உதுத்துட்டு, திண்ணக்கமா என்னடீ பதிலு இது? ம்… சொல்லு. படிக்க அனுப்புனா.. என்ன வேலை பண்ணிட்டு இருந்திருக்க? எவ்வளவு நாளா இப்டி நடக்குது?”
“இப்பத்தான்..” தயங்கி உரைத்தாள்.
“இப்பத்தான்னா…” வீடே அதிரும்படி சத்தம்.
“…ஒரு மாசமாம்மா..” பொய் சொன்னாள்.
“பொய் சொல்லாத…! என்ன கருமமா பேசியிருக்கீங்க…! ம்ஹ்ம்…! ஒரு மாசந்தாங்கறே…”
“…”
“நீங்க பேசினதைப் பாத்தா, ஒரு மாசத்துல இந்தளவுக்கு வந்திருக்க வாய்ப்பேயில்லை!” திறன்பேசியிலிருந்த குறுஞ்செய்தியை மகளுக்குக் காட்டியபடியே, அறுதியிட்டு திடமாய் மறுத்துக் கூறினார் ஈஸ்வரி.
“இவ்ளோ நேரம் இதப்பாத்து ஈனு, பைத்தியம் கணக்கா சிரிச்சிட்டுத்தான இருந்த. இப்ப வாயத் திறந்து பேசு”
“இல்லம்மா…!”
“இல்லம்மா, நொள்ளம்மானு சமாளிக்காம, வாயத் திறந்து பதிலைச் சொல்லு”
“…” ‘நீ இதுல ப்பிஹச்டீனு மறந்துட்டேனே ஈசு’ தன்னையே நொந்து கொண்டாள் திவ்யா.
“ஜாலிக்கு ஆம்பளை ஆயிரம் சொல்வான். அதைப்போயி நம்பி, இப்டீ உன்னையே அசிங்கப்படுத்திட்டுருக்க..!”
“இல்லமா… சீரியசா..!” திவ்யா முடிக்குமுன் ஈஸ்வரி துவங்கியிருந்தார்.
“அப்டி.. சீரியசாத்தான் பேசுவான். அப்பத்தானா உன்னைப் பாத்து ஊரே சிரிக்கும்படி செய்யலாம்”
“அப்டிலாம் அவன் இல்லமா”
“இப்டித்தானடி எல்லாரும் ஏமாறுறாளுக. என்ன மந்திர, மாயம்னு தெரியாமலேயே, மொத்தமாப் போட்டுக் கவுத்திறானுங்க. ஆனாலும் ஒருத்திக்கும் புத்தி வரவே வராது. பட்ட கதையச் சொல்லியுமே, பயமில்லாம இவ்ளோ பண்ணியிருக்க. என்ன நெஞ்சழுத்தம் உனக்கு”
“..அவன் என்னைக் கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லியிருக்கான்மா”
“ம்… அப்புறம்..” நக்கலாய் வினவினார்.
“உண்மைதான்மா..! டைம்பாஸ்கு எல்லாம் இல்லமா..! ரெண்டுபேருமே உண்மையாத்தான் லவ் பண்றோம்” ஒருவழியாய் விசயத்தைக் கூறியிருந்தாள்.
“அப்ப… நாளைக்கு அவனை, என்னை வந்து பாக்கச் சொல்லு!”
தாயின் வார்த்தையில் நம்பிக்கை வராமல் இருக்க, “நிஜமாவாம்மா சொல்ற!” ஆச்சர்யமாய் இருந்தது திவ்யாவிற்கு.
“இதுல என்ன விளையாட இருக்கு. நாளைக்கு சாயந்திரம்போல வீட்டுக்கு வரச் சொல்லு அந்தப் பையனை”
வாடிய வதனம் சட்டென அப்போது மலர்ந்த மலரைபோல பிரகாசிக்க, “சரிம்மா…” தலையை வேகமாக ஆட்டிக் கூறினாள்.
“இனி இந்த போனை, எனக்குத் தெரியாம தொடக்கூடாது, சொல்லிட்டேன்” கறாராகச் சொல்லிவிட்டு, வெளிக்கதவை பூட்டு கொண்டு தாளிட்டவர், சாவியோடு அவரின் அறைக்குள் சென்றுவிட்டார்.
அனைத்தையும் பார்த்தாள்தான் திவ்யா. ஆனாலும், ‘ஈசு, ரொம்பத்தான் பயப்புடுதோ’ என நினைக்க மட்டுமே தோன்றியது. தாயின் செயலை நினைத்துச் சிரிப்பு வேறு வர, மறைத்துக் கொண்டு, தனதறைக்குள் புகுந்து கொண்டாள் மகள்.
இத்தனை இலகுவான விசாரணை என நிச்சயமாய் நினைத்திருக்காதவளுக்கு, நடந்ததை நினைத்து, நெஞ்செல்லாம் இதமாய் இருந்தது.
தான் ஒன்று நினைத்து, ஏற்பாடு செய்து கொண்டிருக்க, மகளின் செயலைக் கண்டு கொண்ட ஈஸ்வரியால், இன்னும் நம்ப இயலாத நிலை. ‘எப்டி ஏமாத்திருக்கு இந்தப் பயபுள்ள. எவ்ளோ சூதனமா இருக்கோம்னு நினைச்சி கோட்டை விட்டுட்டீயே ஈஸ்வரி’ என தனக்குள் மறுகிப் போனார்.
கடந்து போன நாள்களில், மகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தும், தன்னால் எதையும் கண்டு கொள்ள இயலாத வருத்தம். ‘பொம்பிளைப் புள்ளைய வளக்குறதுல, நானும் தோத்துப் போயிட்டேனே! எங்க தப்பு நடந்திருக்கும்?’ மனம் அரற்றியது.
தற்போது, மகளுக்கு பிடித்தவனைப் பற்றி தெரிந்து கொள்ள அவகாசம் எடுக்கலாம் என மனம் கூற, அதையே ஆமோதித்தவர், அடுத்த நாள் அவன் வந்தபின் யோசிக்கலாம் என தன்னைச் சமாதானம் செய்து கொண்டார் ஈஸ்வரி.
ஈஸ்வரியைப் பொறுத்தவரை, வரப்போகிறவனுக்கு திவ்யாவின் வயதுதான் இருக்கும். அப்டியிருக்க, தனது பேச்சைக் கேட்டு தனித்து வீட்டிற்கு வருவானா என்பதே சந்தேகந்தான்.
சந்தேகம் என்பதைக்காட்டிலும், அவன் வரமாட்டான் என திடமாய் நம்பினார் ஈஸ்வரி.
மகளுக்கு அவனைப் பற்றிய தவறான கணிப்பை, சுட்டிக்காட்டி தன் மனம்போல, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஜெகனுக்கே, திவ்யாவை திருமணம் செய்து கொடுக்கலாம் எனுமளவிற்கு தனக்கு சாதகமாய் யோசித்து, படுக்கைக்குச் சென்றார் ஈஸ்வரி.
படுக்கையில் படுத்த திவ்யாவிற்கும் உறக்கமில்லை. அதே நேரம் ஈஸ்வரிக்கு தனது கடந்துபோன வாழ்க்கை நினைவுக்கு வர, அதை அசைபோட்டபடியே விழித்திருந்தார்.
……………………………………..
திவ்யாவிற்கு ஆழமான உறக்கமில்லை. தாய் பேசியதை அடுத்து, கிருபாவின் திறன்பேசியில் பேசிய பேச்சோடு நனவாய் தொடர்ந்திருந்தது இரவு.
கிருபா வந்து, தங்களின் காதலை இரண்டாண்டுகளுக்குப்பின் கரைசேர்க்க வேண்டி, தனது தாயிடம் வந்து பேசுகிறான்.
ஈஸ்வரியும் சரியென்றிட, இருவரும் இன்ப வானில், கைகோர்த்தபடியே சிறகில்லாமல் பறக்கின்றனர்.
பல்வேறு வண்ணங்களில் அவர்களைச் சுற்றிலும் பலூன்கள். மலர்கள். மாயமான உலகில் மயங்கிக் கிடக்கின்றனர்.
மொத்தமாய், முத்தத்தை குத்தகைக்கு எடுத்து, ஒருவருக்கொருவர் கொடுத்து, தங்களின் இன்பத்தைக் கொண்டாடிக் களிக்கின்றனர்.
இதழ் தேனின் சுவையில் மயங்கிக் கிடக்கின்றனர். உலகத்து இன்பங்கள் அனைத்தும், தங்களுக்கு கிட்டியதாய் இறுமாந்திருக்கின்றனர்.
இன்பத்தில் திளைக்கின்றனர். ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொள்கின்றனர். சிரிக்கின்றனர். சிலிர்க்கின்றனர். இரவு முழுமையும் இன்பமாய், தெவிட்டாமலேயே கழிகிறது.
விடியலில் உண்மை விளங்க, கலக்கம் பிறக்கிறது.
……………………………………
ஈஸ்வரியின் பதினான்காவது வயதில், முரளியைச் சந்திக்க நேர்ந்தது.
முதல் சந்திப்பில், முறைப்போடு நின்றிருக்காமல், காலில் கிடந்ததை எடுத்து, அடித்தும் இருந்தாள் ஈஸ்வரி.
ஈஸ்வரி, மிகவும் நடுத்தரக் குடும்பம். தாய், தந்தை இருவருமே, கூலி வேலைக்குச் சென்று, அவர்களின் மூன்று குழந்தைகளைக் கவனித்துக் கொண்டனர்.
வசதி குறைந்தவளுக்குள், குடிசை வீட்டில் வாழும் தனது பெற்றோரை, தான் நன்கு படித்து, நல்ல வேலைக்குச் சென்று, ஆஹா, ஓஹோவென வைத்துக்கொள்ளும் வெறி. அதைப் படிப்பில் காட்டினாள்.
அதற்கு இடையிட்ட, இதுபோன்ற எதிர்பாரா தடைகளை, தனது ஆவேசமான செயலால், இப்படித்தான் வேரறுத்தாள்.
ஆனால், நடுரோட்டில் வைத்து, அதுவும் செருப்பால் அடித்து தன்னை அவமானப்படுத்தியவளை, சாதாரணமாய் கடந்து போக முரளியால் இயலவில்லை.
நண்பர்கள் வேறு, “தம்மாத்தூண்டு இருந்துட்டு, உன்னையே செருப்பால அடிச்சிருக்கா. அப்டியே விட்டா, உம்மரியாதை என்னாகறது மாப்பிள” தூபம்போட, அது வளர்ந்ததே அன்றி, குறையவில்லை.
முரளி, கோடீஸ்வர வீட்டின் ஆறாவது பிள்ளை. முதலில், தான் எழுதிய காதல் கடிதங்களை, நண்பர்கள் மூலமாகத்தான் ஈஸ்வரிக்கு கொடுத்தனுப்பியிருந்தான்.
அதைச் சட்டை செய்யாதவள், கடிதம் கொடுக்க வந்தவனின் கையிலிருந்ததை, பிடுங்கி, அவனெதிரிலேயே கிழித்துப் போட்டிருந்தாள்.
ஆனாலும் கடிதம் அனுப்புவதை குறைத்துக் கொண்டானில்லை. அனைத்தையும் தூரத்தில் இருந்து ரசித்தவனின் அலும்பு சிறிதளவும் குறையவில்லை.
ஒருநாள், “பெரிய மைனராக்கும் உங்ஙண்ணே… இன்னொருவாட்டி அவங் குடுத்தான்னு, எதையாது எடுத்துட்டு வந்து நீட்டின, எங்கப்பாகிட்டச் சொல்லி, கொண்டு வந்து குடுக்கறவனை மாறுகாலு, மாறுகையி வாங்கச் சொல்லிருவேன். எப்டி வசதி?” தைரியமாக, கடிதம் கொண்டு வந்து தந்தவனிடம் கேட்டிருந்தாள்.
(மாறுகால், மாறுகை என்பது வலக்காலை வெட்டினால், இடக்கையை வெட்டுவது, அல்லது இடக்காலை வெட்டினால், வலக்கையை வெட்டுவது எனும் பொருள்படும்)
அடுத்த நாளே அவளின் தந்தையோடு, அவ்வழியில் சென்றவளை, தூரத்தில் அமர்ந்து அனைவராலும், அமைதியாகப் பார்த்திருக்க மட்டுந்தான் முடிந்தது.
அங்கு நின்றிருந்தவர்களைக் காட்டித் தந்தையிடம் கூறியபடியே சென்றவளை, அடுத்து இலகுவாக அணுகவே யோசித்தார்கள். நாள்கள் வேகமாகச் சென்றது.
சில நாள் அமைதி காத்தவன், மீண்டும் பழையபடி துவங்க எண்ண, நண்பர்கள் ஒத்துழைக்க மறுத்தனர்.
முரளி, ஒவ்வொரு கடிதம் கொடுக்கவும், பணத்தை தண்ணீராய் வாரியிறைத்தான். ஆனாலும், தற்போது அதை வாங்க மறுத்தார்கள்.
ஈஸ்வரி பேசியதை முரளியிடம் கூறியவர்கள், “அது ரொம்பப் பேசுது. இனி நீயே போயி நேருல குடுத்துக்கோ” என ஒரேமாதிரி கூறியதோடு, அனைவரும் விலகிக் கொண்டனர்.
அதன்பின் யாரும் கடிதம்தர முன்வராமல்போகவே, முதன் முறையாக முரளி சென்று கடிதத்தை நீட்ட, நிமிர்ந்து அவனை மேலும் கீழுமாய் பார்த்தவள், வாங்க மறுத்துவிட்டாள்.
ஈஸ்வரியின் அசட்டையான பார்வையில், கோபமெழ, அவளை வற்புறுத்தி, கையில் கடிதத்தைத் திணிக்க முற்பட, காலில் கிடந்ததை கனநேரத்தில் கழட்டி, இரண்டு கன்னங்களிலும். அவன் எதிர்பாரா தருணத்தில் மாறி மாறி சப்பென அறைந்திருந்தாள்.
அத்தனை அவமானம். முரளியால் இலகுவாக எடுத்துக் கொள்ளவே முடியவில்லை. அப்பகுதியெங்கும், அத்தனை மரியாதையாய் பெரிய வீட்டுப் பிள்ளையென சொல்லிக்கொண்டு, அலட்டலாய் தெரிந்தவனை, ஒரு சின்னப்பெண் கையால் கூட இல்லாமல், செருப்பால் அடித்துவிட்டாளே என மனம் வஞ்சம் கொண்டது.
ரெண்டொரு மாதங்கள் அமைதியாகச் சென்றது.
அதன்பின், தனது தோழியின் வாயிலாகவே, திண்பண்டங்கள், மற்றும் அலங்கார பொருள்கள் இப்படி வர,
“ஏதுடி இது!” ஈஸ்வரி
“எல்லாம் சேத்துவச்ச காசுலதான் வாங்கியாந்தேன்”
“எப்பவுமே உங்கிட்டயே வாங்கித் திங்கறேன். எனக்கு வேணான்டீ” குற்றமுள்ள நெஞ்சு மறுக்கச் சொன்னது.
“எங்கிட்ட இருக்கும்போது உனக்கு வாங்கித் தந்தா, உங்கிட்ட இருக்கும்போது எனக்கு வாங்கித்தா. அதுக்காக வேணானு ஏன் சொல்ற?” என ஆரம்பத்தில் தோழி தனக்களித்த திண்பண்டங்கள், பரிசு இவையெல்லாம் தோழியின் சிறுசேமிப்பு பணம் என நினைத்திருக்க, அதன்பிறகுதான் உண்மை தெரிய வந்தது ஈஸ்வரிக்கு.
அனைத்தும் முரளி தனக்காக செலவளித்தது என்பது தெரியவந்திட, அதன்பின் தோழியிடம் வாங்க மறுத்திருந்தாள் ஈஸ்வரி.
ஆனால் தோழியின் வாயிலாக, “நீ இதை வாங்காததால, அந்தண்ணன் இன்னைக்கு மருந்தைக் குடிக்கப்போறேன்னு போயிருச்சு, அந்தண்ணனுக்கு எதாவது ஆச்சு உன்னைத்தான் போலீசு புடிக்கும்” எனத் துவங்க
“குடிச்சிட்டு சாகச் சொல்லு அவனை! திமிரெடுத்துப் போயி விசத்தைக் குடிச்சா, சாகாம வேற என்ன செய்வான்!” என ஈஸ்வரி கூறிவிட்டாள்.
உண்மையில், அடுத்த நாளே முரளியை மருத்துவமனையில் சேர்த்த செய்தி அறிந்தவளுக்கு, ‘அய்யோ’ என வருத்தமாய்ப் போனது.
விசாரித்தபோது, அது உண்மை என்பதும் தெரிய வந்திட, ஈஸ்வரிக்கு குற்றவுணர்வு வந்திருந்தது.
ஒதுக்கமாய் செல்ல நினைத்தாலும், விடாமல் தோழியின் மூலம் பயமுறுத்தி, ஈஸ்வரியை ஒப்புக்கொள்ளச் செய்திடும் தொந்திரவு மேலும் துவங்கியது.
அடுத்து எதையாவது கொண்டு வந்து தந்தவளிடம், ஈஸ்வரி மறுத்தால், “நீ இத வாங்கிக்கலைனா, ரெயில்வே ட்ராக்ல விழப் போறேன்னு அண்ணே சொல்லுது” என்றதும், ஈஸ்வரியால் மறுத்துக்கூற முடியவில்லை.
‘சரியான லூசா இருப்பான்போலயே’ என அவனின் முட்டாள் தனத்திற்கு பயந்துபோய் வாங்கத் துவங்கியிருந்தாள் ஆரம்பத்தில்…
………………………………….