emv13
emv13
எனை மீட்க வருவாயா! – 13
கிருபாவோடுடனான காதல் விசயத்தை, ஜெகனிடம் உரைத்துவிட்ட மகிழ்ச்சியில், இனி தங்களின் காதலுக்கு தடையேதுமில்லை என மகிழ்ந்திருந்தாள் பேதை, திவ்யா.
திவ்யா பேச, இடையுறாது அமைதியாகக் கேட்டுக் கொண்டான். மேலும் அவளை மனந் திறந்து பேசத் தூண்டியிருந்தான் ஜெகன்.
“எதுனாலும் தயங்காமச் சொல்லு திவ்யா” எனும் ஜெகனது வார்த்தையை நம்பி, அனைத்தையும் கொட்டியிருந்தாள் திவ்யா.
இந்த வார்த்தையைச் சொல்லும்போது, ஜெகன் இதுபோன்றதொரு விசயத்தை அவளிடம் இருந்து எதிர்பார்த்திருக்கவில்லை.
திவ்யா கூறத் துவங்கியதும், இடியே தலையில் இறங்கிய உணர்வுதான் ஜெகனுக்கு.
கடந்த சில மாதங்களாய், திவ்யாதான் தனது வருங்கால மனைவி என கனவுகளில் சஞ்சரித்து, கற்பனையில் குடும்பம் நடத்தத் துவங்கியிருந்தவனுக்குள், சொல்ல இயலாத வருத்தங்கள்.
திவ்யா பேசுவதை கேட்டுக் கொண்டவன், அதற்கிடையே தனது எதிர்ப்பையோ, எதிர்பார்ப்பையோ பேசாமல் அமைதியாக அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டான்.
ஆனாலும், திவ்யாதான் வருங்கால மனைவி என தீர்மானித்ததிலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லை ஜெகன்.
திவ்யாவிடமே, “எங்கிட்டச் சொல்லிட்டல்ல. நான் அத்தாச்சிக்கிட்ட பேசறேன். நீ எதையும் போட்டுக் குழம்பாம சந்தோசமா இரு. இப்ப போனை மட்டும் அத்தாச்சிக்கிட்ட குடும்மா”, என தயவாய் கொடுக்கச் செய்தவன், ஈஸ்வரியிடம் தான் அறிந்த அனைத்தையும் பகிர்ந்து கொண்டதோடு, ஆரம்பத்தில் தனது வருத்தத்தை கூறி மனதைத் தேற்றியவன், ஈஸ்வரியிடம் உரிமையாக, “இப்டி ஒரு விசயத்தையே எங்காதுல போடாம எதுக்கு உங்களுக்குள்ளயே வச்சிட்டு கஷ்டப்படறீங்க” என்க
“எந்த முகத்தை வச்சிகிட்டு உங்கட்ட இதைச் சொல்லுவேன். அப்டி ஒரு நல்ல காரியத்தையா இந்தப் புள்ளை பண்ணிவச்சிருக்கு” ஆதங்கமாய் கூற
“விடுங்க அத்தாச்சி” என ஆறுதல் மொழி கூறிவிட்டு, “இந்த விசயத்தை எங்கம்மாகிட்ட கொண்டு போயிராதீங்க அத்தாச்சி.. இன்னும் இருபது நாள்ல எனக்கும், திவ்யாவுக்கும் கல்யாணத்துக்கு நாள் பாத்திருங்க. எப்பாடு பட்டாவது கல்யாணத்தன்னிக்கு நான் அங்க இருப்பேன்” என திடமாய்க் கூற
“இல்ல கொழுந்தனாரே… இந்த விசயம் தெரிஞ்சும் உங்களுக்கு எம்புள்ளையக் குடுக்க எனக்கு மனம் ஒப்பலை. உங்களுக்கு வேற பொண்ணா கிடைக்காது. வேணுனா நானேகூட நல்லா பொண்ணாப் பாத்து கட்டி வைக்கறேன். எம்புள்ளைக்கு இப்டி ஒரு மனுசனோட வாழ குடுத்து வைக்கலைன்னு என்னை நான் தேத்திக்கறேன். இவ வேணாம் உங்களுக்கு” வருத்தத்தோடு ஈஸ்வரி இயம்ப,
“அத்தாச்சி, நீங்க அப்டிலாம் எதையும் நினைச்சு மனசப் போட்டுக் குழப்பாம, நல்ல ஜோசியராப் பாத்து, எங்க கல்யாணத்துக்கு மட்டும் நாள் குறிங்க. வயசுல இப்டி ஒரு விசயத்தைப் பண்றதுதான். அதுக்காக கொலைக் குத்தம் பண்ணவங்களைக் கணக்கா, திவ்யாவை விட்டுக்குடுத்து எங்கிட்ட பேசுன மாதிரி வேற யாருகிட்டயும் பேசிறாதீங்க. ஆரம்பத்துல அதுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். போகப்போக எல்லாம் சரியா வந்திரும். அதனால நீங்களா எதையாவது போட்டு மனசக் குழப்ப வேணாம்”
“இல்லப்பா… இப்ப சரினு தோணும்.. பின்னாடி எதாவது சண்டை, சச்சரவுல நீங்க அதைப்பத்திச் சொல்லிக் காட்டிட்டா.. அதுக்கும் மனக்கஷ்டம்”
“அத்தாச்சி என்னை நீங்க நம்புங்க. நான் அப்டி அதை நோகடிக்கறதுக்காகவா கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைப்பேன். அப்டி மனசு ஒப்பாத எந்த விசயத்தையும் நான் செய்ய மாட்டேன். அதனால, நீங்க நடந்ததை மறந்துட்டு, நடக்க வேண்டியதை மட்டும் பாருங்க. எந்த சூழ்நிலையிலயும் எங்கம்மாகிட்ட இதைப்பத்தி மூச்சு விடாதீங்க. நான் கிளம்பி வரதைப் பத்தியோ, நான் கல்யாணத்துக்கு நாள் பாக்கச் சொன்னதைப் பத்தியோகூட, எதுவும் அவங்கிட்ட நீங்க பேசிக்க வேணாம். எல்லாம் நானே பாத்துக்கறேன். திவ்யாவ மட்டும் கல்யாணம் முடியறவரை பத்திரமாப் பாத்துக்கங்க. கல்யாணத்துக்கப்புறம் திவ்யா எம்பொறுப்பு. எதுக்கும் நீங்க கவலையேபடாதீங்க அத்தாச்சி” என முடிவாய் கூறிவிட்டு, “திவ்யாவை பின்னாடி கஷ்டப்படுத்துவேன்னு நினைச்சு, வேற எந்த தப்பான முடிவும் எடுத்திர வேணாம் அத்தாச்சி” என்பதையும் மீண்டும் வலியுறுத்தியதோடு, ஈஸ்வரியின் முடிவை உறுதி செய்து கொண்டவன், தாயிக்கு அழைத்து விட்டான்.
…………………………………..
அதுவரை மகளின் மன்றாடலைக் கண்டு, மாற்று யோசனையாக பெரியவர்கள் மூலமாக, கிருபாவின் பெற்றோரைச் சந்திக்க எடுத்த முடிவுகளை, ஜெகனிடம் பேசியபின், அப்படியே ஒத்தி வைத்திருந்தார் ஈஸ்வரி.
சிலரிடம் பேசி, “கொஞ்சம் நிதானிச்சு முடிவெடுக்கலாம். பாத்துக்குவோம்” என்பதுபோல செய்தியைப் பகிர்ந்து கொண்டார் ஈஸ்வரி.
மிகுந்த தர்மசங்கடமாய் உணர்ந்த தருணமது.
‘இது பண்ற சேட்டையில, எனக்கு என்ன செய்யனே தெரியலையே ஆண்டவா. நாம அது நல்லதுக்குன்னு ஒரு முடிவை எடுத்தா, நல்லவ மாதிரி காலைப் புடிச்சி பயபுள்ளை கெஞ்சுது. அதப்பாத்து, மனசு கேக்காம, பலவகையில யோசிச்சு, யாருக்கும் எந்த பாதகமும் இல்லாம நல்ல முடிவெடுக்க நினைச்சா… என்ன வேலை பாத்து வச்சிருக்கு… இதையெல்லாம் பாத்து இனி பரிதாபப்பட்டா, நான் பரிதாபத்துக்குள்ளாக வேண்டியதுதான்போல’ என நினைத்த ஈஸ்வரி, ஒரு முடிவுக்கு வந்தவராய் மகளைப் பார்க்க விரைந்தார்.
மகளின் அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைய, தாயை எப்போதும் கண்டதும் கண்ணீரோடு காலைப் பிடித்துக் கதறுபவள், அசட்டையாய், பார்வை மட்டும் தாயை நோக்கியிருந்தது.
தெளிவாய் அமர்ந்து எதையோ செய்து கொண்டிருந்தவளைப் பார்த்து, “என்னடீ ஜெகங்கிட்ட சொன்ன?”
“ஒன்னும் சொல்லலையேம்மா” பாவமாய் பதில் வந்தது. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல மகளின் முகம்.
“சும்மா சொல்லு. நான் உன்னை எதுவும் பண்ணமாட்டேன்”
“சத்தியமா… நான் எதுவும் சொல்லலையேம்மா” மீண்டும் அதே பொய்யை கூசாமல் தொடர
பொழிச்சென திவ்யா எதிர்பாரா தருணத்தில், மகளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தார் ஈஸ்வரி .
பொறி கலங்கிய உணர்வு. ஆவேசமான அடியில் சட்டென கண்ணிலிருந்து வழிந்திருந்தது நீர்.
அடித்த கன்னத்தை உள்ளங்கையால் தாங்கிப் பிடித்தபடியே தாயைப் புரியாமல் நோக்க, “உன்னையெல்லாம் எந்த நேரத்தில பெத்தேன்னே தெரியலை… சரியான சகடையா வந்து பிறந்திருக்கே.. எருமை… நீயெல்லாம் ஒரு புள்ளையாடீ?”
“…” ‘என்னாச்சி’
“புள்ளை அழுகுதேன்னு, பெத்த வயிறு துடிச்சுப்போயி, அந்த கிருபா வீட்டுப் பெரியவங்களப் பாத்து, அவனுக்கும் உனக்கும் கல்யாணத்துக்குப் பேசலாம்னு முடிவெடுத்தா… அந்த நேரத்தில, இப்டி வந்து கிறுக்குத்தனம் யாராவது பண்ணக் கண்டிருக்கோமா?”
“…” ‘என்னாது… இது எதுவும் எனக்குத் தெரியாமப்போயி, இப்டி லூசுத்தனம் பண்ணிட்டேன்போலயே’ மனம் கதற தாயையே பரிதவிப்போடு, கைகளைப் பிசைந்தபடியே பார்த்திருந்தாள் திவ்யா.
“உன் வாயாலயே தலையில மண்ணை அள்ளிப் போட்டதும் இல்லாம, எங்கிட்டயே பொய் சொல்ற? நாயே!” என்றபடியே, இன்னுமொரு அறை விட்டார்.
“…” கன்னத்தைப் பிடித்தபடியே ஊமை அழுகையைத் தொடர்ந்திருந்தாள் திவ்யா.
“இதுக்குமேல என்னால எதுவும் செய்ய முடியாது. நீ சொன்னதைக் கேட்டுட்டு, அந்த ஜெகன், இன்னும் இருவது நாளுல கல்யாணத்துக்கு நாள் பாக்கச் சொல்லிட்டான். இதுக்குமேல அவனைமீறி உனக்காக வேற முடிவெடுத்தா, சாதி சனத்துல, அண்டை, அசல்னு எல்லாரும் என்னை காரித் துப்பிருவாங்க”
“…” ‘அய்யய்யோ, அப்ப நானே எனக்கு ஆப்பு வச்சிகிட்டேனா’ கண்ணீர் அருவியாய் வழிந்தது.
“இனி உனக்கு வேற வழியே இல்லை. அந்த ஜெகனையே கட்டிக்கிட்டு, என்னத்தையோ, வாழற வழியப் பாரு!” என்றதோடு, மீண்டும் ஓங்கி ஒரு அறைந்துவிட்டு, கதவை அறைந்து சாத்தி, அவரின் கோபத்தை அதில் காட்டிவிட்டு வெளியேறியிருந்தார் ஈஸ்வரி.
மறுநாளே காளி நேரில் வர, அதற்குமுன்பே, “காளியத்தை வீட்டுக்கு வருது. ஜெகங்கிட்ட போயி உளறின மாதிரி இனி யாருகிட்டயும் வாய விட்டா, அதுக்குமேல நீ வாழறதே வேஸ்ட். வாயப் பொத்திட்டு, ஒழுங்கா இருக்கணும். இல்லைனா, போனா போயித் தொலையிதுன்னு உன்னை அடிச்சே கொன்னுருவேன். ஓடனும்னோ, வேறு எதாச்சும் செய்யணும்னு கனவுலகூட நினைக்கக்கூடாது” எனும் மிரட்டலோடு, அவர் வந்து செல்லும் வரை, வீட்டிற்குள்ளேயே பெயிலில் வந்திருந்தாள் திவ்யா.
திவ்யாவிற்கு, தாயிடம் அடி வாங்கி, வாங்கி உடம்பே நொந்து போயிருந்தது. இதற்குமேல் வேறு என்ன செய்யலாம் என புத்தி யோசித்தாலும், சரியான வாய்ப்பு எதாவது கிட்டுமா என தகுந்த வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருந்தாள்.
காளியம்மாள் வந்து, சற்று புலம்பலோடு, “திடீர்னு அங்க என்னாச்சுனு தெரியலை. முடிச்சிட்டு இருவதே நாள்ல இங்க வரேங்கறான். கல்யாணத்துக்கு உங்கிட்ட பேசச் சொன்னான்”
“ஏந்தை இவ்வளவு சீக்கிரம்” எதுவும் தெரியாததுபோல ஈஸ்வரி பேச்சை வளர்க்க
இருவரின் பேச்சைக் கேட்டு சிரிப்பு வந்தாலும், சிரிக்க முடியாமல் திவ்யா இருந்தாள்.
பிறகு, இருவருமாக இணைந்தே, ஏற்கனவே ஈஸ்வரி முடிவு செய்த அதே தேதியில் திருமண நாளைக் குறிப்பதாக நடந்த விசயத்தை, தேமே எனப் பார்த்திருந்தாள்.
‘மனோரமா காலத்துல இருந்து இப்ப வரை, அது இதுன்னு ஆயிரம் பேரு என்னா நடிச்சிதுக. எங்கம்மா ஈஸ்வரி மாதிரி ஒத்த ஆளால நடிக்க முடியும்?’ என மனதிற்குள் மட்டுமே கௌண்டர் குடுக்க முடிந்தது திவ்யாவால்.
……………………………………….
மறுநாள் கல்லூரியிலிருந்து அழைப்பு வந்தது.
பல்கலைக்கழக அளவில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்த திவ்யா, இன்னும் தேர்வு எழுதுவதற்கான(ஹால் டிக்கெட்) தேர்வு அறைக்குள் செல்லும் ஒப்புகைத் தாளைப் பெற வரவில்லையென அழைத்திருந்தனர்.
ஈஸ்வரி, “அதுக்கு கல்யாணம் பேசிட்டோம். இனி காலேஜ்கு வராது” என விசயத்தைச் சட்டெனப் பகிர
திவ்யா, படிப்பில் எத்தனை கெட்டிக்காரி என்பதையும், அவளால் கல்லூரிக்கு மட்டுமன்றி, அவர்களுக்கும் பெருமை என்பதனையும் எடுத்துக்கூறி, “கண்டிப்பா, வந்து ஹால் டிக்கெட்டை வந்து கலெக்ட் பண்ணிக்கங்க. நாலே நாலு தியரி பேப்பர் மட்டுந்தான. அத எழுதிட்டா, கண்டிப்பா அவதான் யுனிவர்சிட்டில நம்பர் ஒன்னா வருவா” என ஆசை காட்ட, மறுநாள் தானே திவ்யாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று ஹால்டிக்கெட்டை வாங்கி வந்திருந்தார் ஈஸ்வரி.
அத்தோடு, “ஒழுங்கா படிக்கறதை மட்டும் யோசி. வேற எதாச்சும் பண்ணணும்னு நினைச்சே, சங்க அறுத்துருவேன்” மகளுக்கு அறிவுறுத்த என்பதைவிட மிரட்டத் தவறவில்லை.
“…” தாயின் சொல்லுக்கு, தலையை அசைத்தாலும், இதில் ஏதேனும் வாய்ப்பு கிட்டுமா என யோசிக்கத் துவங்கினாள் திவ்யா.
வானில் சுதந்திரமாய் பறந்து திரியும் பறவைகளை அடைத்து வைத்தால், வாய்ப்பு கிட்டும்போது பறக்க ஆவலாய் திமிறிக் கொண்டு வெளிவருவதைப்போல, திவ்யா தற்போது கிருபா எனும் வானில், சுதந்திரமாய்ப் பறக்கும் வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
…………………
திவ்யா, ஜெகன் இருவீட்டாரும் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யத் துவங்கியிருந்தனர்.
திவ்யா மிகவும் நல்லவளாக படிப்பதில் கவனம் செலுத்தினாள்.
தேர்வுகள் முடிந்த, இரண்டாவது நாளில் திருமணத் தேதி முடிவாகியிருந்தது.
ஈஸ்வரி மட்டுமல்லாது, அவரின் தம்பியையும் துணைக்கு வைத்துக்கொண்டு, மூன்று தேர்வுகளுக்கு, திவ்யாவை அழைத்துச் சென்று தேர்வை எழுதச் செய்து, அதன்பின் கையோடு வீட்டிற்கு அழைத்து வருவதை வாடிக்கையாக்கியிருந்தார் ஈஸ்வரி.
அதேநேரம் ஈஸ்வரியின் கணவர் வழிச் சொந்தமான மூத்த நாத்தனார், “திவ்யாவை என் மகனுக்குத்தான குடுக்கணும். எப்டி எங்ககிட்ட கேக்காம, உன் வழிச் சொந்தத்தில பேசி முடிக்கலாம்” என வீம்பாய் வந்து வம்பு வளர்க்க
“நாங்க பொண்ணைப் பெத்து வச்சிருக்கோம்னா, நீங்கதான அத்தாச்சி முதல்ல வந்து கேட்டிருக்கணும். நீங்க எம்பொண்ணை எடுப்பீகளோ மாட்டீகளோன்னு எதுவுமே தெரியாம வச்சிகிட்டு இருக்க முடியுமா? சொல்லுங்க… புள்ளையும் படிப்ப முடிக்கப்போகுது. அந்த நேரத்தில கேட்டு வந்தவங்களுக்கு குடுக்க சம்மதிச்சு, கல்யாணம்வரை வந்தாச்சு. இப்பபோயி, உங்க மகனுக்குன்னு வம்படியா பொண்ணைத் தாங்கன்னு வந்து வழக்குப் பண்ணா, நான் என்ன செய்ய முடியும் அத்தாச்சி?” என இரங்கி, தயவாய் கேட்டார் ஈஸ்வரி.
“அவங்கட்ட குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டு, எம்மயனுக்கு உம்பொண்ணைக் கட்டிக்குடு” என வந்தவர் வழிகூற
“அத்தாச்சி… இப்ப நிறுத்தினா அது ரொம்பத் தப்பாப் போயிரும். இன்னும் தாலி கட்டு மட்டுந்தான் பாக்கியிருக்கு. ஊரே ஒரு மாதிரிப் பேசும். எம்புள்ளை காலம் முழுக்க கெட்ட பேரை சுமக்கறதுங்கறதைவிட, இன்னாரு பேத்தின்னு சொல்லும்போது உங்கப்பாவுக்கும் அசிங்கந்தான அத்தாச்சி?” என்ற ஈஸ்வரியின் வார்த்தையில் சற்றே நிதானித்தார் ஈஸ்வரியின் நாத்தனார். அதையும் குறித்துக் கொண்ட ஈஸ்வரி, மேற்கொண்டு இன்னும் என்ன சொல்லலாம் என யூகித்து, அதற்கு ஏற்றவாறு பேசத் துவங்கினார்.
“நீங்கதான் அவங்கப்பா இல்லாத குறை தெரியாத அளவுக்கு, முன்ன நின்னு உங்க மருமகளுக்கு நல்லபடியா கல்யாணத்தை நடத்திக் குடுக்கணும் அத்தாச்சி” என அழுகை வராதபோதும், முந்தானை கொண்டு கண்ணைத் துடைத்தபடியே பேசத் துவங்கினார். அதிலேயே எதிராளி இளகத் துவங்கியிருக்க
“உங்க முன்னிலையில அவ கல்யாணம் நடத்தணும்னு கேக்க நினைச்சிட்டுருந்தேன் அத்தாச்சி. இதுக்கு இடையிலே என்னன்னமோ நடந்துபோச்சி” என ஒரேடியாய் அவர்களை உயர்த்தி, தன்னை சிறுமைப்படுத்திப் பேசியதும், அதற்குமேல் உண்டான குழப்பத்தில், “அய்யோ, உன்னோட நிலைமை புரியாம நாம்பாட்டுக்கு வந்து, ஏதேதோ பேசிட்டேன்டீ. எதையும் மனசுல வச்சிக்காதடீ ஈஸ்வரி” என சமரசம் ஆனதோடு, முக்கிய விசயங்களைப் பற்றி விவாதித்தபின் வீட்டீற்கு கிளம்பியிருந்தார்.
அனைத்தையும் கவனித்தாலும், கவனிக்காததுபோல நல்ல பிள்ளையாக வலம் வந்தாள் திவ்யா.
மனம் முழுக்க, வாய்ப்புகளைக் குறி வைத்துக் காத்திருந்ததே அன்றி, நடப்பை, எதிர்காலத்தை, தாயை, தனது குடும்பத்தை யோசிக்கத் தவறியிருந்தது திவ்யாவின் மனம்.
தனது தந்தையைப் பற்றி அறிந்தாலும், புத்தி சொன்ன சேதி வேறு.
உலகம் உள்ளவரை அனைத்து காதலர்களும் தனது காதலின் வார்த்தையை கடவுளின் வார்த்தையாக நம்புவது இப்படித்தான்.
மற்றவர்களைப்போல அல்ல எனது காதல்… அதாவது காதலன் அல்லது காதலி.
தூய்மைக்கும், உண்மைக்குமான ஒரே உதாரணம் அவரவரின் காதலன் அல்லது காதலி மட்டுமே.
காதல், மனதில் மட்டுமன்றி, எடுக்கும் முடிவுகளிலும் மாயாஜாலம் செய்கிறது.
காதலை வாழ வைக்க, உயிரையும் தியாகம் செய்யும் காதலர்கள் உள்ளவரை, இதுபோன்ற பித்துகள் குறைய வாய்ப்பில்லை.
திவ்யாவின் மனம் முழுக்க, கிருபா நிறைந்திருந்தான். அவனை ஊனிலும், உயிரிலும் கலந்ததாய் பாவனை செய்து பழகியதன் விளைவு, தற்போது இவ்வாறு நடக்கப் பணித்திருந்தது.
……………………………………
காலேஜ் பேகில், தனது இரண்டு செட் சுடிதாரை மிகவும் நேர்த்தியாய், வித்தியாசம் தெரியாதபடி எடுத்து வைத்திருந்தாள் திவ்யா. அத்துடன் அவளின் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் ஆதார் போன்ற முக்கிய ஆவணங்கள் அடங்கிய விபரங்களையும் எடுத்து வந்திருந்தாள்.
கிருபாவும், தானும் தனித்து வாழும் முடிவுக்கு திவ்யா வந்திருந்தாள்.
கிருபாவைத் தொடர்பு கொள்ளவே இயலவில்லை.
ஆனாலும் அவனது காதலின்மீது கொண்ட நம்பிக்கையில் இவ்வளவு தூரம் மெனக்கெட்டிருந்தாள்.
அவளின் மீதிருந்த நம்பிக்கையில், இருவருமாக இணைத்து தங்களின் எதிர்காலத்தினை செதுக்கிக் கொள்ளும் முடிவிற்கு வந்திருந்தாள் திவ்யா.
இன்றுடன் தேர்வு முடிகிறது என்பதால், தேர்வை முடித்துக்கொண்டு, கிருபாவோடு கல்லூரியில் உள்ள பின்வழியின் மூலம் செல்லத் திட்டமிட்டு, அவசியமானதாக அவள் கருதிய அனைத்தையும் பிறர் சந்தேகித்திடாத அளவில் எடுத்து வைத்திருந்தாள்.
தாய் மற்றும் மாமா இருவரும், தேர்வு நடக்கும் அறை வரை செல்ல அனுமதியில்லாததால், அதைப் பயன்படுத்திக் கொண்டு, கிருபாவோடு கிளம்ப எண்ணியிருந்தாள் திவ்யா.
மனமெங்கும் திக், திக்கென இருந்தது.
தாயின் இருசக்கர வாகனத்தில் ஏற வந்தவளை நோக்கி, மகளிடம் பேகை வாங்க ஈஸ்வரி கையை நீட்ட, “இல்லம்மா, நானே வச்சிக்கிறேன்” என அவசரமில்லாமல் முதுகில் மாட்டிவிட்டு, வண்டியில் ஏறினாள்.
வண்டி கிளம்பி, பயணம் துவங்கியது முதலே ஈஸ்வரியின் கேள்விகளுக்கு சரியாய் பதில் சொல்ல எண்ணி, மிகுந்த பிரயாசத்தோடு கவனத்தை தாயிடம் கொணர்ந்திருந்தாள்.
தனது முரணான செயலில் தாயிக்கு சந்தேகம் எழுந்தால், தனது இந்த முயற்சியும் வீணாகிவிடும் என்கிற பதைபதைப்பால் இவ்வாறு நடந்து கொண்டாள் திவ்யா.
இன்றுடன், தனக்கும், தனது தமையன், தாய் மூவருக்குமான பந்தம் நிறைவுக்கு வரப்போவதை எண்ணி, மனம் வருந்தினாலும், கிருபாவை எண்ணியதும் புத்துணர்வாய் உணர்ந்தது மனம்.
மனதில் வருத்தம் இருந்தாலும், தனது கனவை மெய்ப்பிக்க, திவ்யாவிற்கு வேறு வழி தெரியவில்லை.
தேர்வறையில், கையில் இருந்த கைகடிகாரத்தை அவ்வப்போது பார்த்தபடியே வேகமாக எழுதினாள்.
கிருபாவும் அதே அறையில்தான் தேர்வெழுதிக் கொண்டிருந்தான்.
ஹாலுக்குள் நுழைந்ததுமே, சைகையில், பன்னிரெண்டே முக்காலுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு வருமாறு விசயத்தை கிருபாவோடு பகிர்ந்திருந்தாள்.
கிருபாவும் மறுக்காமல் அதற்கு சம்மதித்திருந்தான்.
இன்னும் முக்கால் மணிநேரத்தில் இருவரும் இணைந்து பறந்துவிடலாம் என்கிற எண்ணம் எழுந்ததுமே, திவ்யாவிற்குள் அத்தனை ஆற்றல் ஊற்று.
தேர்வையும் திருப்தியாய் முடித்து, பேப்பரைக் கொடுத்து விட்டு, வெளியே வந்து கிருபாவிற்காக காத்திருந்தாள்.
சற்று நேரத்தில் கிருபாவும், திவ்யாவை அதிக நேரம் காக்க வைக்காமல் வெளி வந்திருந்தான்.
திவ்யாவிற்கு, கிருபாவைக் கண்டதும் இழந்த சந்தோசங்கள் அனைத்தையும் மீட்டெடுத்தாற்போல நிம்மதியாய் உணர்ந்த தருணமது.
இருவரும் கண்ணால் பேசியபடியே, தேர்வுகள் எதுவும் நடவாத பகுதிக்கு, தனித்தே, யாருக்கும் சந்தேகமெழாதபடி ஒருவர் பின் மற்றொருவர் சென்றனர்.
அறைக்குள் சென்று எதிரெதிரே நின்றபடியே, திவ்யா தான் எடுத்த முயற்சியை, மிகுந்த சந்தோசத்தோடு கிருபாவிடம் கூற முனைய, அவளின் கைகளிரண்டையும் ஆவலாய் பற்றியபடி, கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தான்.
கிருபாவின் செயலில், நம்பிக்கையோடு வரப்போகும் நாள்களில் எப்போது, என்ன செய்யலாம் என்பதையும் அவனிடம் தெளிவாய் விளக்கினாள் திவ்யா.
அனைத்தையும் முகம் மாறாது கேட்டுக் கொண்டிருந்தவன், அடுத்து என்ன செய்தான்?
அடுத்த அத்தியாயத்தில்…