Enge En Punnagai–EPI 1

Enge En Punnagai–EPI 1
அத்தியாயம் 1
“இப்போ என்ன பிரச்சனை உனக்கு?”
“எதாவது பிரச்சனை இருந்தாத்தான் பேசனுமா? நான் உன் மனைவி! வீட்டுல உள்ள சுவத்தையும் என்னையும் ஒரே மாதிரி ட்ரீட் பண்ணறத முதல்ல நிறுத்து!” என குரலை உயர்த்தினாள் காமினி.
“சேச்சே! சுவத்துல போய் முட்டிக்கத்தான் முடியும். உன்னை மட்டும்தான் கட்டிக்கவும் முடியும் ஒட்டிக்கவும் முடியும்” என சரசமாக நெருங்கியவனை,
“பீ சீரியஸ் கிரு” என முறைத்தாள் அவன் தர்மபத்தினி.
“காமினி கிருபாகர்!!!”
ஆற்றாமையுடன் அழைத்தவன்,
“விடிகாலை ஒரு மணிக்கு களைச்சுப் போய் வீட்டுக்கு வந்த மனுஷன தூங்க விடாம நிக்க வச்சு, நீ என் பொண்டாட்டியா இல்ல அந்த சுவரு என் பொண்டாட்டியான்ற பட்டிமன்றம் நடத்தறதுதான் சீரியஸ்னஸா?” என கேட்டான்.
“கிரு! ரெண்டு நாளா ப்ராஜேக்ட் டேட் லைன்னு நீ வீட்டுக்கே வரல! இன்னைக்கும் இத்தனை மணிக்கு வந்து நிக்கற! சரி சொல்லு, எப்போ நாம ரெண்டு பேரும் ஆற அமர உட்கார்ந்து பேசலாம்? உன் கிட்ட சொல்லவும், கேட்கவும் எனக்கு நெறைய விஷயம் இருக்கு கிரு!”
“ம்ப்ச்!” என சலித்துக் கொண்டவன் டையை கலட்டி துவைக்கும் துணிகளை போடும் கூடையை நோக்கி விட்டடித்தான். அது அழகாய் போய் அதன் உள்ளே விழுந்தது.
“யெஸ்” என அந்த சின்ன வெற்றியை ஒற்றைக் கையை மேலே தூக்கி ஆட்டிக் கொண்டாடியவன், மனைவியின் முறைப்பில் கட்டிலில் போய் அமர்ந்துக் கொண்டான். நெற்றியை நீவி விட்டப்படியே,
“சரி சொல்லு! என்ன பேசனும்?” என கேட்டான் கிருபாகர்.
அவன் கண்ணுக்கு கீழே தெரிந்த கருவளையத்தையும், கைமறைவில் வெளியிட்ட கொட்டாவியையும் பார்த்தவள்,
“நைட் சாப்பிட்டியா கிரு?” என கேட்டாள்.
“டீம் மெம்பர்ஸ்க்கு பிட்சா வாங்கிக் கொடுத்தேன். நானும் அவங்களோடயே சேர்ந்து சாப்பிட்டுட்டேன்!”
“சரி, முதல்ல போய் குளிச்சிட்டு வா! நான் இப்போ வந்துடறேன்” என்ற காமினி அவர்களின் படுக்கை அறையை விட்டு வெளியேறினாள்.
ஏதோ ஒரு பாடலை ஹம் செய்தபடியே குளிக்க சென்றான் கிருபாகர்.
கிருபாகர் இருபத்து ஏழு வயது குமரன். ஆனால் காமினியைக் கேட்டால், அவன் இருபத்து ஏழு வயது குழந்தை என்பாள். எப்படி குழந்தைக்குப் பார்த்து பார்த்து எல்லாவற்றையும் செய்து கொடுக்க வேண்டுமோ, அதே போல இவனுக்கும் எல்லாம் அவள் தான் செய்து கொடுக்க வேண்டும். எப்படி குழந்தைப் பிடிவாதம் பிடித்து தனக்கானதை சாதித்துக் கொள்ளுமோ, அதே போல் தான் இவனும். கொஞ்ச நாட்களாய் அவன் பிடிவாதத்துக்கு இவள் விட்டுக் கொடுக்காமல் போவதால் அடிக்கடி முட்டிக் கொள்கிறது இருவருக்கும்.
குளித்து உடை மாற்றி விட்டு வந்தவன், அப்படியே கட்டிலில் விழுந்தான். உடல் ஓய்வுக்கு கெஞ்ச, கண்ணை உருட்டி விழித்திருக்க முயன்றவன், பரிதாபமாய் தோற்றுப் போய் உறங்கி இருந்தான்.
உள்ளே வந்த காமினி பார்த்தது மெல்லிய குறட்டையுடன் தூங்கி இருந்த கிருபாகரைத்தான். பேச வேண்டும் என்றதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் உறங்கிக் கொண்டிருந்தவனை கண்டு மனது ரணமாய் வலித்தது காமினிக்கு. கையில் வைத்திருந்த பாலை கட்டில் அருகே இருந்த குட்டி மேசையில் வைத்தவள், கட்டிலில் அமர்ந்து அவனை மெல்லிய குரலில் எழுப்பினாள்.
“கிரு, கிரு! வேக் அப்!”
கண்களை கஸ்டப்பட்டு திறந்தவன்,
“ரொம்ப டயர்ட்டா இருக்குடா மினி! ப்ளிஸ், காலையில எழுப்பேன்! ப்ரெஷ்சா பல்லெல்லாம் விளக்கிட்டு, லவ் பண்ணிக்கலாம்! ப்ளிஸ்டா பேபி” என கெஞ்சியவன் மீண்டும் குப்புறப் படுத்துக் கொண்டான்.
கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு. பால் குடிக்க எழுப்பியதை பலான மேட்டருக்கு எழுப்பியதைப் போல அவன் எண்ணிக் கொண்டதை தாங்கவே முடியவில்லை காமினியால். சிரமப்பட்டு அழுகையை அடக்கியவள், கொண்டு வந்த பாலை வீணடிக்காமல் தானே பருகினாள். பாத்ரூமில் டம்ளரை அலசி வைத்தவள், அவன் கலட்டி எறிந்திருந்த உடைகளைப் பொறுக்கி கூடையில் போட்டாள். இன்னும் சோப்பு நுரையாய் இருந்த பாத்ரூம் தரையைத் தண்ணீர் ஊற்றி கழுவி விட்டாள். அதன் பிறகே வெளியே வந்து நைட்டி மாற்றி விளக்கணைத்து விட்டு கிருபாகரின் அருகே படுத்தாள் காமினி.
அவள் படுத்த நொடி,
“பேபி” என்றபடியே இறுக்கி அணைத்து அவள் கழுத்து வளைவில் முகத்தை அழுத்தியப்படி தூக்கத்தைத் தொடர்ந்தான் கிருபாகர்.
இது என்னுடைய பொம்மை. இதன் மேல் எனக்கு மட்டுமே உரிமையுண்டு என்பது போல இறுக்கி அணைத்திருந்தவன் பிடியில் இருந்து கொஞ்சம் கூட அசைய முடியவில்லை காமினியால். அசௌகரியமாய் இருந்தாலும் அமைதியாய் படுத்துக் கொண்டாள் அவள்.
காமினிக்கும் கிருபாகருக்கும் திருமணம் முடிந்து ஏழு மாதங்கள் ஆகியிருந்தன. இருபத்து இரண்டு வயதான காமினி மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவள். மூத்தவளான அவளுக்குக் கீழே இரண்டு தம்பிகள். அம்மா இல்லத்தரசி. அப்பா ஈபி ஆபிசில் குமாஸ்தாவாக இருந்தார். இவளுக்கு நல்ல மார்க் கிடைத்தும், பி.ஏ ஹிஸ்டரியில் சேர்த்து விட்டார் அவள் அப்பா திருவேங்கடம்.
அம்மா உமையாளிடம் போய் இவள் கண்ணைக் கசக்க,
“உனக்கும் கீழ ரெண்டு தம்பிங்க இருக்காங்கடி! என்னத்தான் உனக்கு நல்ல படிப்புக்கு ஸ்காலர்ஷிப் கிடைச்சாலும், லொட்டு லொசுக்குன்னு வேற செலவெல்லாம் இருக்கும். நம்மாள முடியுமான்னு யோசிடி காமினி! இந்த படிப்பு கூட கட்டிட்டுப் போற வீட்டுல பொண்ணு பட்டப்படிப்பு படிக்கலையான்னு கேட்டுட கூடாதுன்னுதான் சேர்த்து விட்டிருக்கோம்! அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாம போய் வேற வேலையைப் பாரு” என கடிந்துக் கொண்டார்.
வேண்டா வெறுப்புக்கு பிள்ளையைப் பெற்று காண்டாமிருகம் என பெயர் வைத்தது போலத்தான் காமினியின் நிலையும். ஆண் என்றால் வரவு, பெண் என்றால் செலவு எனும் குறுகிய மனம் கொண்ட பெற்றோருக்கு மகளாய் பிறந்தது அவளது விதி. எடுத்தக் காரியத்தை நிறைவாய் செய்யும் கோட்பாடு கொண்டவள், படிப்பையும் முழு மனதுடன் படித்து முடித்தாள்.
அதன் பிறகு கல்யாண மார்க்கேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டாள் காமினி. ஒரு பட்டு சேலை வாங்கும் போதே எவ்வளவு விஷயங்களைப் பார்க்க வேண்டி உள்ளது. குலம் பட்டுப் போகாமல் விளக்கேற்ற வேண்டிய பெண்ணைத் தேர்ந்தெடுக்க எவ்வளவு பார்க்க வேண்டும்! சீர், செனத்தி, வரதட்சணை, ஜாதகம் என அலசி ஆராய்ந்து இருபக்கமும் திருப்தியாகி நடந்ததே காமினி கிருபாகர் திருமணம்.
கிருபாகர் அப்பர் மிடிள் கிளாஸ் குடும்பத்தின் கடைசி வாரிசு. வீட்டுக்குச் செல்லப்பிள்ளை. படித்து முடித்து, ஒரு பெரிய ஐ.டி நிறுவனத்தில் ப்ராஜேக்ட் மேனேஜராக இருக்கிறான். மூத்த இரு அக்காக்களுக்கும் திருமணம் ஆகியிருந்தது. இந்த ராஜா வீட்டுக் கன்றுக்குட்டிக்கு கண்ணசைவிலேயே எல்லாம் கைக்கு வந்துவிடும். அம்மா ஊட்டி விட்டால், பெரிய அக்காள் தண்ணீர் கொண்டு வந்துக் கொடுப்பாள், இன்னொருத்தி வாயைத் துடைத்து விடுவாள். அக்கா என்பவள் தாய்க்கு சமானம் என்பது உண்மையென்றால் இவனுக்கு மொத்தம் மூன்று அம்மா!
ஆறடி உயரம் இருந்தாலும், ஆள் பார்க்க மிகவும் சுமாராகவே இருப்பான் கிருபாகர். கருப்புக்கும் அட்டக் கருப்புக்கும் நடுவில் ஒரு நிறம் இருக்குமென்றால் அது தான் அவன் மேனி வண்ணம். அழகான முத்துப்பல் வரிசையும், என்னோடு சேர்ந்து சிரியேன் என அழைக்கும் புன்னகை ததும்பும் முகம் மட்டுமே இவனின் ப்ளஸ் பாயிண்ட்.
திருமணம் முடிந்ததும் கிருபாகர் வேலை செய்யும் பங்களூரில் தனிக்குடித்தனம் வைக்கப்பட்டனர் புதுமணத் தம்பதிகள். வாழ்க்கை மிக மிக இனிமையாகவே போனது இருவருக்கும்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என சும்மாவா சொல்லி வைத்தார்கள் நம் முன்னோர்கள்! ஒரே தாய் வயிற்றில் குடி இருந்து, அவள் ரத்தத்தைப் பாலாக்கிக் கொடுத்ததை குடித்து, ஒன்றாய் ஆடி, ஒன்றாய் வளர்ந்த சகோதர உறவே முட்டி மோதிக் கொள்ளும் போது, எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து ஒன்றாய் இணையும் கணவன் மனைவிக்குள்ளே புகைச்சலும் பூசலும் வெடிக்காமல் இருக்குமா? ஒரு குடும்பத்தின் பொறுப்பான மூத்த வாரிசு காமினிக்கும், இன்னொரு குடும்பத்தின் சொகுசான இளைய வாரிசு கிருபாகருக்கும் அடிக்கடி முட்டிக் கொண்டது! எத்தனை நாள் தான் வாய் சண்டையில் ஆரம்பித்து, கட்டில் சண்டையில் பிரச்சனையைத் தீர்ப்பார்கள்! போக போக பாலும் கசந்தது, பஞ்சணையும் நொந்தது!!!
(ஹாய் ஆல்.இதுக்கு பேரே சிறுகதை. எபி என்ன சின்னதா இருக்குன்னு கேக்கக் கூடாது, சரியா டியர்ஸ்.மொத்தமே அஞ்சோ ஆறோ எபிதான். தினம் போட்டு முடிச்சிடலாம்..ஆரம்பமே சொல்லறேன் இந்த கிரு ஒரு anti-hero :)..சொன்னா நம்பனும், நம்பிக்கைத்தான் தும்பிக்கை.. லவ் யூ ஆல்..ரஹ்மான் நாளைக்கு வருவான்)