Enge En Punnagai–EPI 5

Enge En Punnagai–EPI 5
அத்தியாயம் 5
அன்றிரவு களைத்துப் போய் வீட்டுக்கு வந்தவனைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தாள் காமினி. முகம் பல்ப் போட்டது போல பிரகாசித்தது கிருபாகருக்கு.
“யப்பா சாமி! மூஞ்சு என்னம்மா டாலடிக்குது! கண்ணே கூசுதுப்போ!” என நக்கலடித்தார் சிவகாமி.
காமினி களுக்கென சிரித்து வைக்க,
“ம்மா! போய் பெட்டிய அடுக்கு! நாளைக்கு உன்னை பஸ் ஏத்திட்டுத்தான் மறுவேலை!” என பல்லைக் கடித்தான் மகன்.
“போடா, போடா! என் பேரப்புள்ள பொறந்து, பாட்டிம்மான்னு கூப்புடற வரைக்கும் இங்கிருந்து அசைய மாட்டேன் நான்!” என அசால்ட்டாக சொன்னவர், சமயலறைக்குள் புகுந்துக் கொண்டார்.
“கிரு”
“மினிக்குட்டி, கண்ணம்மா! என்னையாடா கூப்பிட்ட!”
“சேச்சே! உன்னை ஏன் கூப்புட போறா! அடுத்த தெருவுல ஒரு கிறுக்கன் இருக்கானாம்! அவன கிரு, கிருன்னு கூப்டுருப்பா!” என சமையல் அறையில் இருந்து சத்தம் வர,
“ம்மா!” என பல்லைக் கடித்தான் கிருபாகர்.
“மினிம்மா! வாடா நாம ரூமுக்குப் போய் பேசிக்கலாம்” என மனைவியைக் கைப்பிடித்து உள்ளே அழைத்துப் போனான் அவன்.
ரூமினுள் நுழைந்ததும் தன் மனதிற்கினியவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் கிருபாகர்.
“ஐம் சாரிடா செல்லம்மா! வெரி வெரி சாரி! மன்னிப்பு கேட்கற தகுதி கூட எனக்கு இருக்கான்னு தெரியல! உன்னை எவ்ளோ காயப்படுத்திருக்கேன் நான்.”
எந்தப் பதிலும் தராமல் அவன் அணைப்பில் அமைதியாக இருந்தாள் காமினி. பெருமூச்சுடன்,
“உன் கிட்ட நெறைய சொல்லனும்டா மினி! என் கஸ்டத்த எல்லாம் சொல்லி உன்னை சங்கடப்படுத்த வேணா, நீயாச்சும் நிம்மதியா இருந்துட்டுப் போறன்னு எல்லாத்தையும் எனக்குள்ளேயே போட்டு வச்சிக்கிட்டதுதான் சில சமயம் இப்படிலாம் வெடிச்சிடுது” என்றவன் அவளை நடத்தி சென்று கட்டிலில் அமர்த்தினான்.
“நான் செஞ்சதுக்கு எல்லாம் சப்பைக்கட்டு கட்ட விரும்பல மினிம்மா! முழு மனசா ஒத்துக்கறேன் நான் பேசனது, நடந்துக்கிட்டது எல்லாம் தப்புன்னு! ஐம் எம் வ்ரோங் ஹியர்! என்னோட வேலை ஸ்ட்ரெஸ்ச உன் கிட்ட காட்டனது ரொம்ப தப்புடாம்மா!” என்றவன் தலையைக் கோதிக் கொண்டான்.
“பேருதான் ப்ராஜேக்ட் மேனெஜர்! என் பொழப்பு நாய் பொழப்பு பேபிம்மா! அமெரிக்காக்காரனுக்கு அடிமை வேலைப் பார்க்கனும்! அவன் சொல்லறதுக்கு எல்லாம் ஆமா சாமி போட்டு, நம்ம மேல தப்பு இல்லைனாலும் மன்னிப்பு கேட்டுன்னு பணத்துக்காக சுயமரியாதைய அடகு வைக்கற வேலை! இவனுங்க எனக்கு குடுக்கற டார்ச்சர்ல எனக்கு கீழ வேலை செய்யறவங்கள நான் டார்ச்சர் பண்ணி அவனுங்க வயித்தெரிச்சல வேற கொட்டிக்கனும். ஒவ்வொரு ப்ராஜெக்ட முடிக்கற வரைக்கும் ஸ்ட்ரெஸ்ல தூங்க முடியாம, ஒழுங்கா சாப்பிட முடியாம நொந்துப் போயிடுவேன்! அந்த மாதிரி சமயத்துல வீட்டுல வந்து உன்னை கொதறிடக் கூடாதுன்னு தான் ஆபிஸ்லயே தங்கிப்பேன்! வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தா கூட, மைண்ட் முடிக்க வேண்டிய வேலையையே சுத்தி வரும். அதான் பல சமயம் உன் கிட்ட சரியா பேசக் கூட முடியறது இல்ல. நீயா பேச வந்தாலும் தலை வலி வந்துடுது! எனக்கு வோர்க் லைப்பயும், பெர்சனல் லைப்பயும் பேலன்ஸ் பண்ண தெரியலடாம்மா! கொஞ்சம் டைம் குடுடி காமினி! கண்டிப்பா பேலன்ஸ் பண்ணிடறேன்! இதெல்லாம் இது வரைக்கும் உன் கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டது இல்ல! என் கஸ்டம் என்னோட போகட்டும்னு நெனைச்சுத்தான் சொல்லல! ஆனா எப்போ என்னையும் மீறி உன் மேல என் கோபம் பாய ஆரம்பிச்சதோ சொல்லிடனும்னு முடிவு பண்ணிட்டேன்! நான் எதாச்சும் சத்தம் போட்டா, போடா மடையான்னு சொல்லிட்டுப் போய் படுத்துடு! ப்ளீஸ்டா! என்னை விட்டுப் போயிடுவேன்னு மட்டும் சொல்லிடாதே! நானே தப்ப உணர்ந்து உன் கிட்ட வருவேன்! என்னை வெறுத்து ஒதுக்கிடாதடி, நான் உடைஞ்சுப் போயிடுவேன்!”
“போக மாட்டேன் கிரு”
அவள் வார்த்தையில் மனம் நிறைந்து முகம் மலர்ந்துப் போனது கிருபாகருக்கு.
“நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக என் கிட்ட எதையும் வாங்கிக்க கூடாதுன்னு இருந்துட்டியேடி! கல்யாணத்துல ஏழு அடி எடுத்து வச்சு சடங்கு செஞ்சாங்களே, ஞாபகம் இருக்கா மினிம்மா! நல்ல நண்பர்களா இருந்து, ஒருத்தொருக்கொருத்தர் இணைந்தும் சார்ந்தும் வாழ்வோம்னு சொல்லத்தான் இந்த சடங்கு. பணத்துக்காக என்னை நீ சார்ந்து இருக்கலாம், அதுல எந்தத் தப்பும் இல்லடா! அதுல தயங்கவோ, வருத்தப்படவோ ஒன்னும் இல்ல! என்னால இந்தக் குடும்பத்துக்கு பணத்த மட்டும்தான் கொடுக்க முடியுது! ஆனா உன்னாலத்தான் நம்ம குடும்பம் நிம்மதியா, மகிழ்ச்சியா, ஒரு ஒழுங்கான முறையில போய்ட்டு இருக்கு! மத்த எல்லா விஷயத்துக்கும் நான் தான் உன்னை சார்ந்து நிக்கறேன் மினிம்மா! சும்மா இருக்கறதா சொல்லப்படற வீட்டுத்தலைவி ரெண்டு நாள் படுத்துட்டா, அந்த வீடு என்ன நிலைமையில இருக்கும்னு பார்த்து வளர்ந்த நானே அந்த வார்த்தைய சொன்னது ரொம்பப் தப்பு! என்னை மன்னிச்சிடு காமினி!” என அவள் கையைப் பற்றி கன்னத்தில் வைத்துக் கொண்டான் கிருபாகர்.
மன்னிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு அவன் வாழ்க்கையை நரகமாக்கலாம்! அதனால் அவள் அடையப் போகும் லாபமென்ன! இவளும் நொந்து அவனையும் நோகடிப்பதற்கு பதில், மனம் வருந்தி நிற்பவனை மன்னிக்க முடிவெடுத்தாள் காமினி! கணவனின் குறைகளை மன்னிக்கும் குணத்தையும் மறக்கும் குணத்தையும் கடவுள் பெண்ணைப் படைக்கும் போதே இண்ஸ்டால் செய்து அனுப்பி விட்டுவிட்டானோ!
“விடு கிரு! நானும் என் மனச திறந்துப் பேசிருக்கனும்! உன்னோட வேலை எப்படி, அன்னன்னிக்கு என்ன நடந்ததுன்னு அக்கறை காட்டி இருக்கனும்! ரெண்டு பேர் மேலடும் தப்பு இருக்க, உன்னை மட்டும் தப்பு சொல்லறதுல நியாயம் இல்ல! நம்ம உறவ பலப்படுத்திக்க முயற்சிக்கலாம் கிரு! ஜூனியர் வேற வரப்போறாரு! அவர் முன்னுக்கு நாம முகத்த தூக்கிட்டு நிக்கறதோ, சண்டைப் போட்டுக்கறதோ கூடாது! குழந்தை குழந்தையா வளற சூழ்நிலைய ஏற்படுத்திக் கொடுக்கனும்! சோ லெட்ஸ் பிகீன் அகேய்ன்!”
“ஹலோ காமினி! மை நேம் இஸ் கிருபாகர்! எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு! நம்ம கல்யாணத்துக்கு ரொம்பவே ஆவலா காத்திருக்கேன்! உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” என பெண் பார்க்கும் படலத்தின் போது, தனியாக பேச கிடைத்த நேரத்தில் கேட்டத்தைப் போலவே மறுபடியும் கேட்டான் கிருபாகர்.
அன்று போலவே தலையைக் கீழே குனிந்துக் கொண்டு,
“வந்து..வீட்டுல எல்லாருக்கும் பிடிச்சிருக்கு! எனக்கும் தான்!” என காலால் தரையில் கோலம் போட்டாள் காமினி.
அப்படியே அவளை இறுக அணைத்துக் கொண்டவன், அழுத்தமாய் முத்தமிட்டான்.
“ஏய் கிரு! இதெல்லாம் அன்னிக்கு நடக்கல!” என ஆட்சேபித்தாள் காமினி.
“அன்னிக்கு வெட்கப்பட்டு சிவந்து நின்ன உன்னை இப்படித்தான் கட்டிப் புடிச்சு இச்சு இச்சுன்னு முத்தம் வைக்க துடிச்சேன். அப்போ முடியல, அதான் இப்போ முடிச்சுட்டேன்!” என சொல்லி புன்னகைத்த தன் கருத்த மச்சானை இறுக்கி அணைத்துக் கொண்டாள் காமினி.
(போன எபிக்கு லைக் கமேண்ட் போட்டவங்களுக்கு நன்றி. சாரி மை மிஸ்டேக். இன்னும் ஒரு எபி இருக்கு கதை முடிய..நான் கவனிக்கல!!! மிஸ்டேக் என்னதுனால, இன்னிக்கு நைட் கடைசி எபிய போடறேன் டியர்ஸ்..)