ENV-12B

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 12(2):

“அம்மா கராஜ் சாவி எங்க இருக்கு?” அகிலன் கேட்க…

“பைக் கராஜ்லயா??? கார் அபார்ட்மெண்ட் பார்க்கிங்ல நிறுத்திருக்கான். பைக் கராஜ்ல. சப்பா. எதையும் சரியா செய்ற பழக்கமே இல்ல போல. நட் கழண்ட கேஸ்” என முணுமுணுக்க…

“பேபி கிளம்பலாமா?” என்ற அகிலனின் குரலில் அவனை முறைத்துக்கொண்டே கிளம்பினாள்.

“என்ன பேபின்னு கூப்பிடாதன்னு எத்தனை தடவ சொல்றது” அவன் மேல் எரிந்து விழ… அவன் கண்டுகொண்டால் தானே. காதில் விழாததுபோலச் சென்றான். கடுப்புடன் அவன் பின்னாலயே சென்றாள் கவிதா.

அந்தக் கம்யூனிடியில் இருக்கும் வெகு குறைவான டூயுப்ளக்ஸ் பெண்ட்ஹவுஸ் (duplex penthouse) அபார்ட்மெண்டிற்க்கு மட்டுமே தரும் கராஜ் அது. சலிப்புடன் அவன் பின்னால் சென்றவள் அவன் கராஜ் திறந்தவுடன் உள்ளே பார்த்து விழிவிரித்து நின்றாள்.

கிட்டத்தட்ட ஏழு வகை பைக்’குகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒரு விதம். பேசிக் (basic) மாடல் முதல் சில உயர் ரக மாடல் வரை இருந்தது. அவன் வைத்திருக்கும் காரின் விலையைவிட மொத்த பைக்கின் விலை அதிகமாக இருக்கும்.

அவள் மனதில் முதலில் தோன்றியது… ‘அவன் ரூம் போலவே கராஜ் கூட நீட்டா வெச்சுருக்கானே’ என்பது தான். ஏனென்றால் அவளுக்குச் சுட்டுப்போட்டாலும் சுத்தம் என்பது சுத்தமாக வராது.

“பேபி… எந்த பைக்ல போலாம்? Choice is yours” என்றவுடன்…

‘இப்போ சொல்லலைனா விடமாட்டான். எதையாச்சும் காட்டுவோம்’ என்று நினைத்தவள் … அங்கிருந்தவற்றில் ஒவ்வொன்றாகப் பார்த்து, இருப்பதிலேயே மிகவும் சாதாரணமாக இருந்த RX100 பைக்கை காட்டினாள்.

மிகவும் பழைய மாடல் பைக். குறைவான CC. சுருக்கமாக அவள் மனதில் தோன்றியது ‘மொக்க பைக்’. அப்படி யோசித்து அவள் சொல்ல… அவளின் மனநிலை புரியாத அவனுக்கு. புன்னகைத்துக்கொண்டே சரி என்றான்.

அவன் எடுத்துக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய, அவள் அவனிடம் ‘மேடு பள்ளம் பார்த்து ஓட்டணும்’ என எச்சரிக்கைக் கொடுக்க வாயைத்திறக்கும்முன்…

“பேபி. ஒழுங்கா பேக்ரெஸ்ட் பிடிச்சுட்டு உட்காரு. அப்பறம் ஸ்பீட் ப்ரேக்கர், மேடு பள்ளத்துல வேணும்ன்னு வேகமா போன… இடிச்சிட்ட… அப்படின்னு என்கிட்ட சண்டைக்கு வராத” குறும்புடன் முன் ஜாமீன் வைத்தான்.

கடுப்பின் உச்சிக்கே சென்றுவிட்டாள் கவிதா. கண்களை மூடி தன்னைத் தன்னிலைப்படித்துக்கொண்டு பின்னே உட்கார்ந்தாள்.

வற்புறுத்தி அவளின் லேப்டாப் பேக் மற்றும் ஹாண்ட் பேக்கை வாங்கி முன்னை வைத்துக்கொண்டான் அவள் இடைஞ்சலின்றி உட்கார ஏதுவாக.

மறுபடியும் அவனின் இந்த அக்கறையின் வெளிப்பாடு அவளைக் கொஞ்சம் குளிரச்செய்தாலும், அதைப் புறம் தள்ளினாள். அவளைக் கடுப்பேற்றினாலும் ஏற்ற இறக்கங்களிலும் கூடச் சீராகச் சென்றான்.

சில நிமிடங்கள் கழித்து “பேபி… நீ இந்த பைக் இருக்குறதுலயே பேசிக்’னு தானே ச்சூஸ் பண்ண. But this is so close to my heart. என்னோட முதல் பைக். நான் டென்த்ல ஸ்கூல் ஃபரஸ்ட் வந்தா அப்பா செகண்ட் ஹேண்ட் RX100 வாங்கித்தரேன்னு சொன்னாரு”

“அதுக்காகவே நல்லா படிச்சு டிஸ்ட்ரிக்ட் செகண்ட் (district second) வந்தேன். லோன் போட்டு அப்பா வாங்கித்தந்தாரு” என நெகிழ்ச்சியாகச் சொல்லிவிட்டு கண்ணாடி வழியே அவளைப் பார்க்க…

அவள் காதில் இயர்செட் (earset) மாட்டிக்கொண்டு எதையும் கேட்காதவள் போல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்தாள்.

அவன் முகம் வாடிப்போனது. ஆசையாக அவன் சொன்னதை அவள் கேட்கவில்லை என்ற வருத்தம் அப்பட்டமாகத் தெரிந்தது.

ஆனால் அவனுக்குத் தெரியாதது…

அவள் மனதில் ‘படிப்ஸ் தான் போலயே. என்ன… இந்த மாதிரி ஆளுங்க அதிகம் பேச மாட்டாங்க. இவன் மில்க் டின்ல போட்ட கோலிக்குண்டு மாதிரி லொட லொடன்னு’ என நினைத்து அவனுக்குத் தெரியாமல் சின்னதாகப் புன்னகைத்தது.

அவன் வாயாடினாலும், சிரத்தை எடுத்துக் கவனமாக வண்டியை ஓட்டியது, இவனுடன் பைக்கில் சென்றால் கூடத் தயக்கமின்றிச் செல்லலாம் என்றே தோன்றியது அவளுக்கு.

ஒருவழியாக அன்றைய தினம் முடிந்து அடுத்தநாள்… கவிதாவிற்கு கிளைன்ட்’டுடன் ஒரு முக்கியப் பேச்சுவார்த்தை மற்றும் ப்ரெசென்ட்டேஷன் இருந்தது. எப்பொழுதும் போல் காலை வேலையை மாமியாருடன் செய்துவிட்டு, தயாராக அவர்கள் அறைக்குள் வந்தாள்.

அவன் கிளம்பிக்கொண்டிருந்தான். இவள் உடையை மாற்றி வெளியே வந்தபோது அவன் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று தயாராகிக்கொண்டிருக்க … அவன் முன்னே பின்புறம் காட்டி நின்று “தள்ளுப்போ. நான் ரெடி ஆகணும்” என்றாள் கண்ணாடியில் அவனைப் பார்த்து.

கண்ணாடி வழியே அவளைப் பார்த்தவன், கண்கள் அகலக் கண்ணிமைக்காமல் அப்படியே நின்றான்.

அழகான ஒரு ஃபோர்மல் (formal) உடையில் இருந்தாள். வைட் த்ரீ ஃபோர்த் ஸ்லீவ் ஷர்ட் (White three fourth sleeve shirt) மற்றும் முட்டிக்குக் கீழ்வரை இருந்த ப்ளாக் ஸ்கர்ட். அவளின் உயரம். நேர்த்தியான உடற்கட்டு. அவளுக்கு அந்த உடை கச்சிதமாகப் பொருந்தியிருந்தது.

அவளை மேலும் கீழும் பார்த்தவனை “ஹலோ. போய் உட்காருங்க சார். அஞ்சு நிமிஷம் தான்” என்றதும் கண்கள் மின்ன அவளைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே கட்டிலில் உட்கார்ந்தான். கண்கள் மட்டும் அவளைத் தொட்டு தொட்டு மீண்டது.

“என்ன பேபி இன்னைக்கு ஸ்பெஷல்” அவளைப் பார்த்தவண்ணம் கேட்க… அவளோ முடியைத் தூக்கி போனிடெய்ல் போட்டுக்கொண்டு, மஞ்சள் கயிற்றுத் தாலியை கழட்டி வைத்துவிட்டு… கொஞ்சமே கொஞ்சம் மேக் அப் செய்துகொண்டாள்.

முழுதாக ஒப்பனை முடித்தபின் “எனக்கு முக்கியமான மீட்டிங். ப்ரெசென்ட்டேஷன் இருக்கு. புது ப்ராஜெக்ட்…” என சொல்லிக்கொண்டிருந்கும் போது கீழிருந்து லட்சுமி அவளை அழைத்தார்.

“சீக்கரம் ரெடி ஆயிடு. கொஞ்சம் ரிப்போர்ட் வாங்கவேண்டியிருக்கு” அவனிடம் சொல்லிக்கொண்டே வெளியே சென்றுவிட்டாள்.

அவன் மனமோ அவளையே சுற்றிக்கொண்டிருக்க… குதூகலமாக அதேசமயம் அவசரமாகக் கிளம்பினான். ஏதேதோ ஆசைகள் மனதில் அலைமோதியது. ஆனால் அதெல்லாம் நினைக்க மட்டுமே முடியும் என்று தெரியுமே அவனுக்கு.

மனைவியிடம் ஆசையாக நான்கு வார்த்தை பேசக்கூட முடியாது. பிறகுதானே மற்றதெல்லாம். மனது கொஞ்சம் சஞ்சலமடைந்தாலும் ஏதேனும் தவறான செயலுக்கு வழிவகுத்துவிடும் என்பதை நன்கு உணர்ந்திருந்தான்.

இப்போது அவனால் முடிந்தது அவளுடன் தனியாகச் செல்லும் அந்த கார் பயணம் மட்டுமே.

அவன் ஷர்ட் சரி செய்துகொண்டிருக்கும் பொது, கோவமாக உள்ளே வந்தாள் கவிதா. வந்தவள் கையிலிருந்த போனை தூக்கிக் கட்டிலில் எறிந்துவிட்டு ட்ரெஸ்ஸிங் டேபிள் பக்கத்தில் இருந்த வாட்ரோப்’பிலிருந்து வேறு உடையை எடுத்துக்கொண்டு உடைமாற்ற சென்றுவிட்டாள். கண்கள் வேறு கலங்கியிருந்தது.

ஒன்றும் புரியாமல் அவன் நின்றிருக்க, குர்தி லெக்கின் போட்டுக்கொண்டு வெளியே வந்தாள்.

“என்ன ஆச்சு பேபி?” புரியாமல் அவன் கேட்க, அவள் பதில் பேசாமல் கலைந்திருந்த கூந்தலை மறுபடியும் சரிசெய்துகொண்டாள்.

தாலியை எடுத்துப் போட்டுக்கொண்டு, பதில் எதுவுமே பேசாமல் தன்னுடைய பேக்’கில் தேவையானதை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.

கண்கள் மட்டும் சிவந்திருந்தது. அழுகையைக் கட்டுப்படுத்துகிறாள் என்று புரிந்தது அவனுக்கு.

அதற்கு மேல் பேசாமல் இருவரும் புறப்பட்டனர். இருவரும் தயாராகி வெளியே செல்லும்போது, அங்கு வந்த லட்சுமி “இதுமாதிரி டிரஸ் போட்டா எவ்வளோ நல்லா இருக்கு. தாலிய இருக்குல்ல… ஹ்ம்ம்” என்றவுடன்,

கலங்கிய கண்களுடன் அவரைப் பார்த்துவிட்டு, ஒட்டவைத்த புன்னகையுடன் வெளியேறினாள். அவனுக்கு இப்போது கொஞ்சம் புரிந்தது என்ன நடந்திருக்கும் என்று.

அவன் அம்மாவை ‘ஏன்’ என்பது போல் சைகையால் கேட்டுக்கொண்டே அவளுடன் சென்றான்.

அவள் நடையே காட்டியது… நல்ல அர்ச்சனை அவனுக்காகக் காத்திருக்கிறது என்று…