ENV-4A

அமைதியாக அவளுடைய அறைக்குள் வந்த கவிதா அந்த “AJ” என்ற பெயர் சுருக்கத்தை யோசித்துக்கொண்டிருந்தாள். அஜயைப் பற்றி அகிலனிடம் சொன்னதெல்லாம் கண்முன்னே ஓடியது…

———அன்று———

‘அப்பாவின் உடம்பு சற்று பரவாயில்லை’ என்ற சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து சென்ற தம்பியைப் புரியாமல் பார்த்த கவிதா, ICU’வுக்குள் சென்றாள்.

அங்கே உள்ளே இருந்த அகிலனைப் பார்த்து அதிர்ந்தாள்.

‘இவன் எப்படி இங்க வந்தான்?’ என்ற யோசனையுடன் தந்தையை நெருங்கினாள் ஒரு இனம் புரியாத அழுத்தத்துடன்.

தந்தையைப் பார்த்த மறு நொடி “அப்பா…” என்று அவள் கட்டுப்பாட்டை மீறி கண்கள் கலங்கின. அவரோ ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தார் மருந்தின் தாக்கத்தால்.

“கவிகண்ணு அழாதடா. அண்ணாக்கு ஒன்னும் ஆகாது. மாப்ள எனக்குப் போன் பண்ணி விவரம் கேட்டுட்டு இப்போ தான் வந்தாரு”

“உனக்கும் அவருக்கும் ஏதாச்சும் பிரச்சனையா?” என்று அவள் சித்தப்பா அகிலனையும் கவிதாவும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே கேட்க, அகிலன் கொலைவெறியில் அவளைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தான்.

‘என்ன நடந்தது’ என்று தெரியாதவர், அவளிடம் “அப்பா எந்திரிக்க நேரம் ஆகும். நீங்க ரெண்டு பேரும் போய்ச் சாப்பிட்டு நல்லப்படியா பேசிட்டி வாங்க”

“சின்ன விஷயத்தைப் பேசி சரி பண்ணிக்கோங்க” என்று அறிவுரைகளைக் கொடுக்க, கவிதா ‘என்ன செய்வது’ என்று புரியாமல் நின்று கொண்டிருந்தாள். அவரைப் பார்த்துச் செயற்கையாக அகிலன் புன்னகைத்து…

அவள் அருகில் வந்தவன் “வா… உன்கிட்ட பேசணும்” எனச் சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் முன்னேறி வெளியே செல்ல… சித்தப்பாவிடம் கண்ணசைவில் சொல்லிவிட்டு அவளும் அவனைப் பின்தொடர்ந்தாள்…

“இது தான் உன்னோட ஆசையா? உன் பேச்ச கேட்டுட்டு நானும் அவசரப்பட்டுட்டேன். என்னால அந்த மனுஷன் எப்படி ஆயிட்டாரு… பாத்தல்ல” அங்கிருந்த உணவகத்தில் அமர்ந்தபடி அகிலன் கத்த,

“உங்களால இல்ல… என்னால… என்னால இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கவே முடியாது. தயவு செஞ்சு புருஞ்சுக்கோங்க” கவிதா ஆரம்பிக்கும் முன்…

“லவ் ஆம் லவ். கொலை வெறில இருக்கேன். ஹாஸ்பிடல்ன்னு பாக்கறேன். ஏதாச்சும் பேசின…” பற்களைக் கடித்துக்கொண்டு எகிறினான் அவளிடம்.

“மனசு முழுசா அஜய் இருக்கும்போது எப்படி என்னால வேற வாழ்க்கையை வாழ முடியும்? ஒன்னு இல்ல ரெண்டு இல்ல ஆறு வருஷத்துக்கு மேல லவ் பண்ணிருக்கேன்” என்று அவள் கண்கள் கலங்க அதைப் பார்த்தவன் மனம் அவள் மேல் கோவமிருந்தாலும் இளகியது.

“நான் என்னோட வாழ்க்கையை முழுசா ஹாஸ்டல்ல தான் வாழ்ந்தேன். வாழ்ந்துட்டு இருக்கேன். அம்மா போனதுக்கப்பறம், அப்பாவால என்ன பத்திரமா பாத்துக்க முடியுமான்னு யோசிச்சுட்டு, நான் ஃபோர்த் (Fourth) படிக்கிறப்ப ஹாஸ்டல்ல சேத்துட்டாங்க”

“வருஷம் ஒரு தடவ தான் வீட்டுக்கு வருவேன். ஆனா அப்பவும் அப்பா காலேஜ் போயிடுவார். தம்பி சின்னப் பையன்… ஒரு ஃபேமிலி செட்அப்ல (family setup) இல்லாம வளர்ந்தேன். ஸ்கூல் ஹாஸ்டல்ல உயிருக்கு உயிரா இருந்த ஃபிரன்ட்டும் போய்ட்டா”

“காலேஜ்ல சேர்ந்த புதுசு… அப்போ தான் அஜய் பழக்கம். என் தனிமைக்கு ஒரு வடிகாலா இருந்தான்”

கட்டுக்கடங்காமல் அவள் கண்களில் கண்ணீர் கொட்டியது. முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் சுற்றுப்புறத்தைப் பற்றி யோசிக்காமல்.

அவன் என்ன செய்வது எனத் தடுமாறினான். அவள் அவனைத் தான் பயணித்த காதல் பயணத்திற்குக் கூட்டிச்சென்றாள்.

********

அங்கிருந்த பெரிய மரத்தடியில் சில மாணவர்கள் பைக் மேல் உட்கார்ந்தும், சிலர் மரத்தடியில் உட்கார்ந்தும் பேசிக்கொண்டிருக்க… அதிலிருந்த ஒருவன் “டேய் இன்னிக்கி லேட்டரல் என்ட்ரிஸ்’லாம் (laternal entry) சேர்றாங்கள்ல?” கேட்டான் மற்றொரு மாணவனிடம்.

பத்தாம் வகுப்பு முடித்ததும், பதினொன்றாம் வகுப்பில் சேராமல், பாலி டெக்னீக் காலேஜில் சேர்ந்து டிப்ளோமா படிப்பவர்கள், அது முடித்த பின், என்ஜினியரிங் கல்லூரியில் நேராக இரண்டாம் வருடம் சேர்வார்கள். அவர்களை லேட்டரல் என்ட்ரி என்று அழைப்பார்கள்.

அந்தக் கூட்டத்தில் மற்றொருவன் “ஆமா மச்சா. இன்னிக்கி தான். ஒரு வழி பண்ணிடலாம். அதுவும் அந்த ECE டிபார்ட்மென்ட் ஸ்டுடென்ட்ஸ்’ஸ விடவேக்கூடாது”

இந்த வானரக்கூட்டம் ஸாரி மாணவக்கூட்டம் IT டிபார்ட்மென்ட் மூன்றவது வருடம் படிப்பவர்கள். இவர்களுக்கும் ECE டிபார்ட்மெண்டுக்கும் ஆகாது. ஆகவே இந்தத் திட்டம்.

சற்று தூரத்தில் அப்பாவிற்கு பை (bye) சொல்லிவிட்டு வந்துகொண்டிருந்தாள் கவிதா. அழகாக… ஸ்கை ப்ளூ சுடிதார் மற்றும் வெள்ளை துப்பட்டாவை இருபக்கமும் போட்டவாறு, மெதுவாகச் சுற்றியும் முற்றியும் பார்த்துக்கொண்டே வந்தாள்.

புதிதாக ஒரு பெண் வருகிறாள் என்பதைப் பார்த்த இந்தக் கூட்டம், அவள் அவர்களைக் கடக்கும்போது முன் பேசிக்கொண்டிருந்தவன் “ஏய்… என்ன… போயிட்டே இருக்க… நில்லு… இங்க வா”

“எந்த டிபார்ட்மென்ட்?” கேட்டான் கவிதாவிடம்.

“ECE. லேட்டரல் என்ட்ரி” என்றாள். அவர்கள் நினைத்ததுபோல் அவள் சிக்க, அவர்களுக்குள் கண்ணசைத்துக்கொண்டவர்கள்…

“சீனியர்ஸ் இருக்கோம் நீ பாட்டுக்கு போயிட்டே இருக்க…” என்று ஒருவன் ஏதோ சொல்ல வரும்முன், அவர்களை மேலும் கீழும் பார்த்த கவிதா…

“ஓ ராக்கிங்கா… ஸப்பா…” பையை ஒரு பைக் மேல் வைத்துவிட்டு, துப்பட்டாவை கழுத்தில் சுத்திக்கொண்டு, அவர்கள் பக்கத்தில் இருந்த இன்னொரு பைமேல் எகிறி உட்கார்ந்தாள்.

இவளின் நடவடிக்கையைப் பார்த்தவர்கள் சில நொடிகள் வாயடைத்துப்போய் நிற்க, சட்டெனச் சுதாரித்துக்கொண்டு “ஏய் என்ன… சீனியர்ஸ் நாங்க இருக்கோம்…” என்று பேசத்தொடங்கும் முன்

“என்ன என்ன… என்ன சொல்ல வந்தீங்க” என்று காதைக் கொடுத்து கவனிப்பதுபோல், தலையைக் குனிந்துக் கேட்க “டேய்… யார்ரா இவ…” கடுப்பானான் மற்றொருவன்…

“என்ன பத்தி அவர்கிட்ட கேட்டா அவருக்கென்ன தெரியும் பாஸ். என்கிட்ட கேளுங்க” என்றவள்

“தேர்ட் இயர் IT அஜய் தெரியுமா…? காலேஜ் ஜாயிண்ட் செகரட்ரி… நான் அவனோட ஃபிரன்ட். க்ளோஸ் ஃபிரன்ட் யு நோ” என்றாள் மிகவும் சகஜமாகத் தோள்களைக் குலுக்கி.

அதேநேரம் அங்கிருந்த அனைவரும் சந்தேகத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, அதுவரை சீனில் இல்லாத ஒருவன் அப்போது பின்னே இருந்து… “அப்படியா…? அஜயோட ஃபிரன்ட்’டா இல்ல கேர்ள் ஃபிரன்ட்’டா?” கேட்டபடி முன்னே வந்தான்.

பைக்கில் இருந்து குதித்துப் பையை மாட்டிக்கொண்ட கவிதா, கேள்வி கேட்டவனிடம் “அட என்னப்பா நீ… இத போய் என்கிட்ட கேட்டுட்டு. அவன்கிட்டயே போய்க் கேளு” என நிறுத்தி “வர்ட்டா” என்று அவனைப் பார்த்து வாய் அகலப் புன்னகைத்துவிட்டுச் சென்றாள்.

போகும் அவளையே இவன் ஒருவிதமாகப் பார்த்திருக்க அவளோ அவசரமாக போனை எடுத்து யாரிடமோ பேசிக்கொண்டே சென்றாள். கூட்டத்தில் நடுநிலையாக நின்றுகொண்டிருந்தவனை ஏகத்துக்கு அனைவரும் முறைத்தனர்.

“யாருடா அவ…? உன் ஃபிரன்ட்’னு சொல்றா… அதுவும் க்ளோஸாமே” ஒருவன் சீற

நெற்றியை தேய்த்து யோசித்தவன், “மச்சி நீயே பாத்தல்ல. நான் தான் அஜய்’ன்னு தெரியாம என்கிட்டயே… அஜய்கிட்ட கேட்டுகோன்னு சொல்றா… செம்ம fraud’டா இருப்பா போலயே” எனச் சொல்லும்போது அவன் மொபைல் அடித்தது.

“சொல்லு அனி…… என்ன உன் ஃபிரன்ட்’டா?…… அதுக்குன்னு…… போய்த் தொல…… ஹ்ம்ம்…” போனை வைத்தான்.

அஜய் அங்கிருந்தவர்களிடம், “மச்சி அவ அனி ஃபிரன்ட்டு டா. இப்போ தான் போன் பண்ணி சொன்னா… ரெண்டு பேரும் டிப்ளமோ க்ளாஸ்மேட்ஸாம் (classmates)”

அதற்கு அவன் நண்பன்… “டேய் உன் தங்கச்சி ஃபிரன்ட் ஒகே. அதுக்காக உன் ஃபிரன்ட்’ன்னு சொல்வாளா அவ.” என்றான் கடுப்புடன். “அதுவும் க்ளோஸ்” ஓத்து ஊதினான் இன்னொருவன்.

“விடு டா. உங்களப் பாத்து பயந்துருப்பா… அதுனால சொல்லிருப்பா” என சமாளித்தான் அஜய். பாசமான தங்கையின் சிபாரிசாயிற்றே.

“டேய் மனசாட்சியைத் தொட்டு சொல்லு. அவ… எங்களைப் பார்த்து பயந்தா?” ஒருவன் கேட்க

“அட… விடுங்கடா. இன்னும் சின்னப் பசங்க மாதிரி ராக்கிங்’லாம் பண்ணிக்கிட்டு. அந்த ECE கேங்குக்கு தான் அறிவில்ல உங்களுக்குமா? நான் ப்ராக்டிஸ் போறேன். நாளைக்கி இன்டெர் காலேஜ் மேட்ச் இருக்கு” என்று அவர்களைக் கலைத்துவிட்டுச் சென்றான் அஜய்.

********

அடுத்தநாள் கல்லூரி வந்த கவிதா ‘ச்ச இந்த அஜய்ய இன்னைக்குப் பாத்தே ஆகணும். அந்த சீனியர்ஸ் பாக்கறப்பெல்லாம் லுக் விட்டே படுத்தறாங்க’ என்று யோசித்துக்கொண்டு வகுப்புக்குள் நுழைய…

“கவிதா வா வா. இன்னிக்கி க்லாஸ் இல்ல. இன்டெர் காலேஜ் பாக்ஸிங் மேட்ச். அதுவும் காலேஜ் சாம்பியன் அஜய்யோட மேட்ச்” என்று அவளைக் கூட்டிக்கொண்டு சென்றாள் அவளுடன் படிப்பவள்.

‘என்ன அஜய் மேட்ச்சா? ஒருவேளை அவனோ…? சூப்பர். அவனாயிருந்தா இன்னிக்கி பார்த்துப் பேசிடவேண்டியதுதான்’ என்று யோசித்துக்கொண்டு ஸ்டேடியம்முள் நுழைய, அரங்கமே “AJ”…”AJ” என்று கத்திக்கொண்டிருந்தது.

அங்கே சண்டையிட்டுக்கொண்டிருந்தவனைப் பார்த்த கவிதா அதிர்ந்தாள்.

நேற்று அவள் சீனியர்ஸிடம் பேசியது, அஜயிடமே அஜய் பற்றிப் பேசியது நினைவிற்கு வர, இன்னமும் அதிர்ந்தாள்.