EUTV 17
EUTV 17
17
கணிதன் தனக்குள்ளே போராடி போராடி மிகவும் சோர்ந்துப்போயிருந்தான். என்ன மாதிரியான வாழ்க்கையை தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று அவன் மனமே அவனை காரித்துப்பிக்கொண்டிருந்தது.
மனதில் ஒருத்தி மணத்திற்கு ஒருத்தி என்று தான் எடுத்த முடிவு அவனுக்கே மிகவும் அசிங்கமாக இருந்தது. திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் பொழுதில் இன்னும் தன் மனம் மாறாமல் அலைபாய்ந்துக்கொண்டிருப்பது எல்லாம் அவனுக்கு மிக அதிகளவிலான மனஅழுத்ததைக் கொடுத்து அவனது மனமும் தேகமும் காதல் என்னும் நெருப்பால் எரிந்துக்கொண்டிருந்தது.
எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றுவதைப்போன்று தான் சில நிமிடங்களுக்கு முன்பு அவனது கைப்பேசிக்கு வந்த அழைப்பு இருந்தது.
தன் யோசனையில் இருந்தவனை நிகழ்காலத்துக்கு கொண்டு வருவதற்காக ஒலித்த கைப்பேசியை தனக்கு அருகிலிருந்த மேசையிலிருந்து எடுத்து பார்த்தவனுக்கு உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்திருந்தது.
மலர்விழி இவள் எதற்கு தன்னை அழைக்கிறாள். அதை எடுத்துப் பேச அவனுக்கு தைரியம் வரவில்லை. அவள் எது சொன்னாலும் இந்த திருமணத்தை தானே நிறுத்த போதுமானதாக இருக்கும். அவளது குரலுக்கு அப்படியொரு சக்தி இருக்கிறது என்பதை அறிந்தே இருந்தான்.
எடுத்த இடத்திலே மீண்டும் கைப்பேசியை வைத்துவிட்டு தனது இரு கரங்களையும் கட்டியவாறு கண்களை இறுக மூடிக்கொண்டு படுக்கையில் அமர்ந்தான். அப்பொழுது அவனது முகம் ஒரு கடும்தவம் புரிபவனை போன்று இருந்தது.
அவனது தவத்தை கலைப்பதற்கென்றே மலர்விழி மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டிருக்க சட்டென்று எடுத்து அவளை பேசவே விடாமல் திட்டிக்கொண்டிருக்க அவனது வருங்கால மனைவி ரேஷ்மாவின் குரல் கேட்க அவளது கேள்விக்கு பதிலளித்துவிட்டு மலர்விழி பேசுவதற்கு இடமே கொடுக்காமல் அழைப்பை துண்டித்துவிட்டான்.
அப்பொழுது தான் கணிதனுக்கு ஞாபகம் வந்தது. தான் எதற்காக தனது அறைக்குள் வந்தான் என்பதே. திருமணம் நடக்க போகும் இடமான அந்தமான் தீவில் உள்ள ரிசார்ட்டிற்கு செல்ல தான் ரேஷ்மாவின் குடும்பத்தினர் இங்கே வந்திருந்தனர். அறைக்குள் துணி மாற்றிவிட்டு தன்னுடைய உடமைகள் அடங்கிய பையை எடுக்க வந்தவன் தான் ஏதேதோ யோசனையில் நேரத்தை போக்கியிருக்கான் என்பது புரிய மானசீகமாக ரேஷ்மாவிடம் மன்னிப்பை வேண்டியவன் ஆடையை மாற்றிவிட்டு அவளுடன் வெளியேறினான்.
ரேஷ்மா கணிதனின் அப்பாவுடைய நண்பரின் மகள். அவளும் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிவருகிறாள். மலர்விழிக்கு முன்பே இவளை தான் அவர்கள் வீட்டில் கணிதனுக்கு பேசலாம் என்று நினைத்திருந்தது. அதற்கு முன்பே இவ்வளவு நடந்துவிட்டது. அனைத்தும் நல்லதற்கே என்று நினைத்துக்கொண்டு மீண்டும் ரேஷ்மாவையே கணிதனிற்கு துணையாக தேர்ந்தெடுத்தனர்.
பெயர்பலகையை வெறித்துக்கொண்டிருந்த மலர்விழியின் தோள்களை சுற்றி ஒருகரம் படர்ந்து அவளை தன்னுடன் அணைத்துக்கொண்டது.
கரங்களுக்கு சொந்தமானவன் ஆகாஷ். கணிதனின் திருமணத்திற்காக அமெரிக்காவில் இருந்து வந்திருந்தான். இங்கிருந்து சென்றவுடனே ரேச்சலிடம் தனது காதலை கூறி அவளை மணந்திருந்தான். ரேச்சலை இங்கே அழைத்துவரவில்லை. இன்னும் நிலைமை சரியாகததால் அங்கேயே விட்டு வந்திருந்தான்.
“ப்ளார் எனக்கு என்ன சொல்லி உன்னை காம் பண்றதுன்னு தெரியலை. ஐ ஹேவ் நோ வர்ட்ஸ்… உனக்கு லவ் வந்தது தப்பில்லை. பட்…” என்று ஆகாஷ் இழுக்க அவனை திரும்பி பார்த்து முறைத்தவள் மூடு என்பதைப்போன்று சைகை செய்ய ஆகாஷ் அவளை முறைத்தான்.
“எனக்கு தெரியும்…”மலர்விழி,
“ச்ச்சீ பே… உன்கிட்ட போய் சொன்னேன் பாரு. வா உள்ளே போய் தொலைவோம்…” என்று அவளை அந்த சின்ன கெட் டூ கெதர் நடக்கும் இடத்திற்கு இழுத்துக்கொண்டு சென்றவனுக்க்கு பக்பகென்றிருந்தது. இவள் என்ன செய்து தொலைப்பாளோ என்று,
ஒரு செயலை செய்தற்கு பின்பு வரும் விளைவுகளை பற்றி சிறிதும் கவலைகொள்ளாதவள். அந்த நிமிடத்திற்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்து விடுவாள். அதற்கு சாட்சி அவள் தமிழ்நாட்டிலிருந்து கடல்கடந்து இந்த ரிசார்ட்டிற்கு வந்ததே…
இன்று சிறிய கெட் டூ கெதர் நாளை காலை கடல் பிண்ணனியில் ஒரு டெஸ்டினேசன் வெட்டிங்க்.
கெட் டூ கெதர் நடக்கும் ஹாலிற்குள் நுழைந்தவளை பார்த்த ஜோசப் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ந்தனர். இவளை பார்த்தவர்கள் நெஞ்சில் சொல்லொண்ணா பயத்துடன் திரும்பி தன் நண்பர்களுடன் நின்றிருந்த கணிதனை பார்த்தனர்.
அவர்களின் பயம் சரி என்பதைப்போன்று கணிதனின் முகம் கோவத்தில் கறுத்து கண்கள் எல்லாம் சிவந்து அய்யனார் போன்று நின்றிருந்தான். இன்னும் சில நொடிகள் அவன் கண் முன்பு இவள் இருந்தால் வந்து அடித்துவிடுவான் என்பதைப்போன்று தான் மலர்விழியை வெறித்துக்கொண்டிருந்தான்.
ஜோசப் குடும்பம் முழுவதும் இப்பொழுது வீரை தான் முறைத்துக்கொண்டிருந்தனர். ஏனெனில் முன்பு ஒரு முறை கல்யாணம் மணமேடை வரை வந்து நின்றிருந்ததால் யாரையும் பெரிதாக அழைக்காமல் மிக மிக நெருங்கிய உறவுகளும், நண்பர்களூம் மட்டுமே அழைத்திருந்தனர். இந்த ரிசார்ட் முழுவதையும் பதிவு செய்திருந்தனர். திருமண அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே இந்த ரிசார்ட்டின் உள்ளேயே வரமுடியும் என்பதைப்போன்று தயார் செய்திருந்தனர்.
ஆகாஷீடன் மலர்விழி வந்திருந்தபடியால் வீர் தான் ஆகாஷிற்கு அழைப்பிதழ் அனுப்பிருப்பான் என்று நினைத்துக்கொண்டு வீரை அனைவரும் முறைத்து தள்ள, அதில் ஜெர்க்கான வீரோ,
“ஐயோ ஆதி ணா… நான் இவன் மட்டும் தான் வருவான்னு நினைச்சு அனுப்பினேன். இவன் இப்படி மலரையும் கூட்டிட்டு வருவானு நான் என்ன கனவா கண்டேன்…” என்று தனக்கு அருகில் நின்றிருந்த ஆதியிடம் புலம்பினான்.
ஆதியின் மனைவி சக்தியின் அருகில் நின்றிருந்த ரிஷிக்கோ இதயம் வாயில் வந்து துடிப்பதைப்போன்று இருந்தது. அனைவரது பார்வையை வைத்தே வீர் தான் அந்த கருப்பு ஆடு என்று நினைத்துக்கொண்டு இருப்பதை புரிந்தவன் தான் மட்டும் மலர்விழிக்கு அழைப்பிதழ் அனுப்பியது தெரிந்தால் என்ன செய்வார்களோ என்று நினைத்தவனுக்கு பகீரென்றிருந்தது.
அவனின் திருட்டு முழியை சந்தேக கண்ணுடன் பார்த்த சக்தி”நீ ஏன் இப்படி முழிக்கிற? அந்த பொண்ணை நீ தான் இன்வைட் பண்ணீயா?”என்று கேட்க ரிஷி ஆடிப்போய்விட்டான்.
“என்னா கரெக்டா கண்டுபிடிச்சுட்டா? இவ லாயர் மூளைல தீயை வைக்க” என்று கருகியவன் சக்தியின் கையிலிருந்த ஆதி சக்தியின் இரண்டுமாத குழந்தையான அனீஷா ஸ்ரீ யை வாங்கிக்கொண்டு,
“ஏதாச்சும் கொளுத்திப் போடாத அண்ணி… மலரை நான் இங்கே தான் பார்க்குறேன்…” என்று பேசியவாறை தன் அண்ணன் மகளை தூக்கியவாறு அனைவரது பார்வையிலிருந்தும் மறைந்து சாப்பிடும் அறைக்குள் பதுங்கினான்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஆதித்யன் சிரித்த முகத்துடன் ஆகாஷ் மற்றும் மலர்விழியை நெருங்கினான்.
“வா ஆகாஷ்… வா மலர்… எப்படி இருக்கீங்க இரண்டு பேரும்…”
“குட் அண்ணா… நீங்க எப்படி இருக்கீங்க?” என்று மலர்விழி கேட்க, “நல்லா இருக்கேன் மா.. வாங்க சாப்பிட போகலாம்…” என்று பேசியவாறே அவர்களை கணிதனின் கண்பார்வையிலிருந்து அப்புறப்படுத்த நினைத்தான்.
“இப்ப தானே அண்ணா வந்தோம். அதுக்குள்ளேயவா? உங்க பொண்ணு அனீஷா ஸ்ரீ எங்கே அண்ணா?”
“அவங்க அம்மாக்கிட்ட இருந்தா… வெயிட் ரா…” என்றவன் இங்கேயிருந்தே கண்களை சுழலவிட்டவனுக்கு ஒரு விருந்தினரிடம் நின்றிருந்த சக்தி தெரிந்தாள். பேச்சு அவர்களிடம் இருந்தாலும் அவளது பார்வை முழுவதும் இவனை நோக்கி தான் இருந்தது.
வா என்பதைப்போன்று சைகை செய்ய சிறுகுழந்தைப் போன்று சிரிப்புடன் அவனை நோக்கி வந்தாள். சக்தி இப்படி தான் எப்பொழுதும் ஆதியை தொட்டுக்கொண்டு உரசிக்கொண்டு இருக்க வேண்டும். இவனின் அருகில் இருப்பது என்பதே அவளுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி தான்.
“மெதுவா…மெதுவா… சக்தி… இவங்க மலர்விழி… இவன் ஆகாஷ் உனக்கு தான் தெரியும்ல உன் கிளாஸ்மெட் தானே” என்று கூற ஆகாஷை முறைத்தவாறு நின்றிருந்தாள் சக்தி.
அதற்குமேல் ஆகாஷ் அவளை கொலைவெறியுடன் நோக்கிக்கொண்டிருந்தான். சக்தியும் இவர்களுடன் ஒன்றாக ஊட்டி கான்வென்ட்டில் படித்தவள் தான். அதிலும் வீர், விஜய், ஆகாஷ்,சக்தி ஒரே வகுப்பில் படித்தவர்கள். ஆகாஷீம் சக்தியும் பரம எதிரிகள். பள்ளிப்படிப்பு முடியும் வரை எப்பொழுதும் சண்டை தான். காரணமென்னவென்றால் இவள் செய்யும் அத்தனை திருட்டு தனங்களையும் ஆகாஷ் ஆதியிடம் சொல்லி விடுவான். அதே மாதிரி ஆகாஷ் வீர் செய்யும் அனைத்து திருட்டு தனங்களையும் சக்தி ஆதியிடம் மட்டுமில்லாது தங்கள் வகுப்பாசிரியடமே போட்டு கொடுத்துவிடுவாள்.
“வாங்க வாங்க மலர்விழி… உங்க சாங்க்ஸ் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க வாய்ஸ் சூப்பர்… நான் சக்தி ஆதியோட வொய்ப்…” என்று சிரிப்புடன் பேசியவள் ஆகாஷ் என்று ஒருத்தன் இருப்பதை கண்டுக்கொள்ளவில்லை.
தன்னை கண்டுக்கொள்ளாமல் இருக்கும் சக்தியைப் பார்த்து வெறுப்புடன் முறைத்தவன் ஆதித்யனை ‘உங்களுக்கு இதைவிட்டா இந்த உலகத்துல வேற பொண்ணை கிடைக்கலையா?’ என்ற செய்தியை கண்களில் தாங்கி பார்க்க, அது தனக்கு புரிந்ததைப்போன்று தனது நெற்றியில் கோடிழுத்து ‘எல்லாம் என் தலையெழுத்து…’ என்று செய்கையில் பதிலளித்தான் ஆதித்யன்.
அவனின் செய்கையை பார்த்த ஆகாஷிற்கு சிரிப்பு வந்துவிட்டது. அவனது சிரிப்பில் ஆதித்யனும் சிரித்தான். தனது மனைவியிடம் திரும்பி,
“சக்தி அனுப்பாப்பா எங்கே? மலர் பார்க்கனும்னு கேட்டா?”
“இந்த ரிஷி எருமை தான் டைனிங்க் சைட் தூக்கிட்டு போனான். இருங்க வாங்கிட்டு வரேன்…“
“வேணாம்… வேணாம் மலரை கூப்பிட்டுப் போய் பாப்பாவை காட்டிட்டு சாப்பிடவிட்டு கூட்டிட்டு வா… போ மா மலர்…” என்று ஆதித்யன் கூற அவளது பார்வையோ கவனமோ கிஞ்சித்தும் இவர்கள் மீது இல்லை. கணிதனையும் அவனது வருங்கால மனைவியும் வெறித்தாகவே இருந்தது. மேடையில் இல்லாமல் கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். ரேஷ்மா எதுவோ அவனுடன் பேசியவாறு இருந்தாள்.
“மலர்…” மீண்டும் ஒரு முறை அழுத்தமாக அழைக்க இவர்களிடம் பார்வையை திருப்பினாள்.
“நீங்க போயிட்டு வாங்க…” என்று சக்தியையும் மலரையும் அனுப்பியவன் ஆகாஷை பிடித்துக்கொண்டான்.
“எருமை மாடே… கோழிமுட்டை அளவுக்காச்சும் உனக்கு மூளை இருக்கா டா? இடியட்… அவளை எதுக்கு டா இங்கே கூட்டிட்டு வந்த?”
“ஹைய்யோ ஆதி ப்ரோ… நான் கூட்டிட்டு வரலை. நானே இங்கே வந்து தான் பார்த்தேன். என்ட்ரன்ஸ்ல இன்வெட்டேஷனை அவ காட்டிட்டு இருந்தப்ப தான் நானும் உள்ளே வந்தேன்.“ என்று கூற ஆதித்யனுக்கு யாரென்று புரிந்துவிட ரிஷி தடிமாடே இந்த கல்யாணத்துல மட்டும் பிரச்சினை வரட்டும் மவனே நீ செத்த டா என்று மனதிற்குள் உறுமியவன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இங்கேயே பார்வையை வைத்திருந்த தனது பெற்றோர்களிடம் சென்றான் ஆதித்யன்.
“என்ன டா ஆதி இந்த பொண்ணு எதுக்கு பா இங்கே வந்திருக்கு? இந்த தடவையும் தம்பி கல்யாணத்துல பிரச்சினை வந்தா என்ன பா பண்றது? என் பிள்ளை பாவம் யா…” என்று ஆதி தங்களை நெருங்கியவுடன் யாரும் பேசும் முன்பே தானே பதறிப்போய் பேசினார் விஜயா ஆதித்யன் மற்றும் கணிதனின் தாய்.
“விஜி மா… ரிலாக்ஸ்… பதட்டபடாதீங்க… எந்த பிரச்சினையும் வராது நான் இருக்கேன் மா…” என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்களிடம் விரைந்து வந்தனர் ரேஷ்மாவின் பெற்றோர்.
அவர்கள் இவ்வளவு நேரம் டைனிங்க் ஏரியாவில் இருந்தனர். அங்கு வந்திருந்த மலர்விழியை கண்டு அதிர்ந்து இவர்களை காண ஒடிவந்தனர்.
“சுதா, தினு என்ன டா? அந்த பொண்ணு வந்திருக்கு? எதுவும் பிரச்சினையா டா?”என்று ரேஷ்மாவின் தந்தை மகளின் வாழ்க்கையை நினைத்து பதறிப் போய் கேட்டார்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை டா… ரிலாக்ஸ்… இப்ப இரண்டு பேருக்கும் நடுவில ஒன்னும் இல்லை. எல்லாம் நல்லாபடியா நடக்கும். அந்த பொண்ணும் தெரியாமல் வந்து இருக்கும்னு நினைக்குறேன். வீர் உடைய ப்ரெண்ட் கூட வந்து இருக்கும். அவனுக்கு இங்கே நடந்தது எல்லாம் தெரியாதுல அதனால் கூப்பிட்டு வந்து இருப்பான். இப்ப கிளம்பிரும் டா…” என்று சுதாகரன் கூற ஆதித்யாவிற்கு ஐய்யோ என்றிருந்தது.
கேரளாவில் ஒன்றாக இருந்தது எல்லாம் இங்கே வீட்டில் பெரியவர்கள் யாரிடத்திலும் கூறவில்லை. அந்த விசயம் தெரியாதனால் ஆகாஷ் அழைத்தவுடனே யாரோ வீட்டு திருமணம் என்று இவள் நினைத்து வந்திருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டனர்.
“ஏன் தினு பேசாம நாம அவங்க ஃபேமிலிக்கிட்ட சொல்லிருவோமா?” என்று ரேஷ்மாவின் தந்தைக்கேட்க,
உடனே அதனை மறுத்தார் சுதாகரன்.
“அதெல்லாம் வேணாம் கரண். நம்மள மீறி என்ன நடந்திடும்? நீ பதட்டப்படாதே…” என்று அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
ஆதித்யாவிற்கு என்னவோ அவர் சொல்வதே சரியெனப்பட்டது. மலர்விழியின் தந்தையிடம் அழைத்து சொல்லிவிடலாம் மலர்விழி எதாவது திருகுதாளம் செய்வதைப் போன்று தெரிந்தால் என்று நினைத்துக்கொண்டான்.
அவனுக்கு தெரிந்திருக்கவில்லை இவனே போய் மலர்விழிக்கு ஆதரவாக தனது தம்பியிடமும், அவளது தந்தையிடமும் பேசுவான் என்பது.
கோலங்களும் வேஷங்களும் மாறும் போது வார்த்தைகளும் வாழ்க்கைகளும் மாறிவிடும் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.