EUTV18

18

“கணி ஆர் யூ ஒகே?” என்று உடலளவில் தனக்கு அருகில் நின்றிருந்தாலும் சொல்லில் வடிக்கமுடியா உணர்ச்சி பிரவாகத்தால் மனதளவில் வேறு ஏதோ கிரகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த கணிதனின் வலக்கரத்தை பிடித்து கேட்டாள் ரேஷ்மா.

மலர்விழியை இங்கே பார்த்தவுடனே அனைவரும் தங்களுக்குள்ளேயே கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டிருந்தனர். சுற்றியிருப்பவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாவிடினும் அவர்களின் பார்வையும் கோணல் சிரிப்பும் மலர்விழியையும் கணிதனையும் பற்றிதான் பேசிக்கொண்டிருக்கின்றனர் என்று புரிந்தது.

“ஐயம் நாட் ஒகே ரேஷ்…” என்றுக்கூறிக்கொண்டிருக்கும் போதே வீரும் விஜயும் தனது அண்ணனை நெருங்கியிருந்தனர்.

அவர்களும் மலர்விழி எதற்கு இங்கு வரவேண்டும் என்று புரியவில்லை. என்னதான் கணிதன் மலர்விழியின் மீது கோவமும் வெறுப்பும் தான் இருக்கின்றது என்பதைப் போன்று தங்களுக்கு காட்டிக்கொண்டிருந்தாலும், அவனின் ஆழ்மனதில் அவள் மீது உள்ள காதல் நீரு பூத்த நெருப்பாக எரிந்துக்கொண்டிருக்கிறது என்பதை அவனின் குடும்பமே அறிந்து தான் இருந்தது.

அவர்கள் மலர்விழியை நினைத்து பயப்படவே இல்லை. கணிதனை நினைத்து தான் பயப்பட்டனர். மலர்விழி இவனுக்கு செய்ததை கணிதன் ரேஷ்மாவிற்கு செய்துவிடுவானோ என்று பயந்தனர்.

இந்த ஒரு வாரமாகவே அவனின் முகம் சரியே இல்லை. சகோதரர்களிடம் கூட எந்த பேச்சும் வைத்துக்கொள்ளவில்லை. இறுகிப்போயே இருந்தான்.

குடும்பத்தினர் தன்னாலே கணிதன் இப்பொழுது இருப்பதையும், மலர்விழியினுடான திருமணம் நடக்க இருந்த பொழுது இருந்ததையும் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்திருந்தனர்.

அவனது தாய் விஜயா திருமணத்தன்று விட்டுச்சென்ற அன்றுக்கூட மலர்விழியை திட்டாது தனது மகனை திட்டியவர் இந்த ஒரு வாரமாக மலர்விழியை கடித்து மென்று துப்பிக்கொண்டிருந்தார் தனது கணவரிடமும் தனது ஒரகத்தி பார்வதியிடமும்…

“கணி ரிலாக்ஸ்…” என்று வீர் கணிதனது தோளை தடவ அவனின் உடல் மெல்ல தளர்ந்தது.

விஜய் தனக்கு அருகிலிருந்த மேஜையிலிருந்து தண்ணீரை எடுத்து அவனிடம் நீட்டினான். அதை வாங்கி குடித்தவன் ரேஷ்மாவைப் பார்த்து,

“ஐ யம் ரியலி சாரி ரேஷ்… நவ் ஐயம் ஒகே…”

“பராவாயில்லைனு சொல்ல மாட்டேன் கணி. புல் யுவர்செல்ப் டூ கேதர் கணி(pull yourself together)… டூ மினிட்ஸ்” என்று கூறியவள் அவர்கள் மூவரையும் விட்டு தள்ளிச்சென்று தனது நண்பர்களிடம் பேச சென்றாள்.

ரேஷ்மாவின் பதிலைக்கேட்ட வீருக்கும் விஜய்க்கும் ஐய்யோடா என்று இருந்ததென்றால் கணிதனுக்கு கேட்கவா வேண்டும்.

“ஸிட்…ஸிட்…” என்று கூறியவாறு தனது கரத்திலிருந்த கண்ணாடி கிளாஸை அழுத்தமாக பிடித்து உடைத்து இருந்தான்.

அதில் பதறிய சகோதரர்கள் இருவரும் கணிதனின் கையை பிடித்துக்கொண்டு முதலுதவி செய்ய அழைத்துச்சென்றிருந்தனர் யாரும் சந்தேகப்படாத வகையில்…

இங்கோ இப்படிச் சென்றுக்கொண்டிருக்க டைனிங்க் எரியாவிற்கு சென்றிருந்த மலர்விழியோ ரிஷிபனிடம் இருந்த அனீஷா ஸ்ரீயிடம் ஒன்றிவிட்டாள்.

அவர்கள் பயந்தமாதிரி ஒன்றும் நடக்காமல் அந்த கெட் டூ கெதர் சரியாக முடிந்து அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த காட்டேஜீற்குள் சென்றனர்.

ஆகாஷிற்கும் மலர்விழிக்கும் ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆகாஷிற்கு முன்பே அறைக்குள் மலர்விழி சென்றிருந்தாள்.

ஆகாஷ் ஆதித்யா மற்றும் வீரை சமாதானப்படுத்திவிட்டு அறைக்குள் நுழைய குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டது. அவள் வெளியே வந்த பின்பு பேசவேண்டும் என்று அங்கிருந்த படுக்கையில் அவளை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான்.

அவளுடைய எண்ணம் என்னவென்று தெரிந்துக்கொள்ள வேண்டியிருந்தது. இவள் எதற்கு இங்கு வரவேண்டும்? வரவேண்டிய அவசியம் தான் என்ன? என்று அவனுக்கு எப்படி யோசித்தாலும் புரியவில்லை.

மலர்விழியை பைத்தியம் என்றே நினைக்க ஆரம்பித்திருந்தான் ஆகாஷ். அவள் காரியக்கார பைத்தியம் என்பதை அவன்  அறிந்திருக்கவில்லை.

ஆகாஷ் யோசித்துக்கொண்டிருக்கும் போதே குளியலறையிலிருந்து ஒரு வெள்ளை நிற மேக்சி முழங்காலுக்கு சற்று கீழ் வரை தொட்டுக்கொண்டிருக்கும் உடையோடு பூந்துவாலையால் முகத்திலிருந்த நீரை துடைத்தவாறு “ஆசை முகம் மறந்துப் போச்சோ…” என்ற பாரதியின் பாடலை முனுமுனுத்தவாறு வந்தாள் மலர்விழி.

இந்த உடையில் மலர்விழி செம கியூட்டாக இருப்பதாக ஆகாஷிற்கு தோன்றியது. அதையும் விட அவளது குரலில் இந்த பாடல் ப்பாஆஆஆ… என்னும் விதமாக இருக்க அவளிடம் கேட்க நினைத்ததெல்லாம் மறந்து ஆவென்று அவளையை பார்த்தவாறு அமர்ந்திருந்தான் ஆகாஷ்.

மலர்விழியோ அங்கு ஒருவன் இருப்பதையே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அங்கு மேசையிலிருந்த காபி மேக்கரில் சிறிது சத்தமாக பாடிக்கொண்டே காபி போட்டுக்கொண்டிருந்தாள்.

அவளது குரலில் மயங்கி கரைந்துக்கொண்டிருந்தான். உயிரை உருக்கும் குரல் என்பார்களே அப்படியொரு குரல் இவளுக்கு என்று நினைத்துக்கொண்டான்.

இப்பொழுது புரிந்தது இந்த கணிதன் ஏன் இவள் மீது பைத்தியமாக இருக்கிறான் என்பது. கேரளாவில் இருந்த பொழுதே கவனித்திருக்கிறான் ஆகாஷ். மலர்விழி கணிதனின் சுற்றுவட்டாரத்தில் இருந்தால் அவனின் பார்வை எப்பொழுதுமே அவளை தீண்டிக்கொண்டே இருக்கும். எப்பொழுதும் கம்பீரமாகவே தன்னை மற்றவர் முன்பு வெளிப்படுத்தும் கணிதன் இவள் இருக்கும் பொழுது மட்டும் தன் கம்பீரத்தை கடன் கொடுத்துவிட்டு ஒரு விடலைப்பையனைப் போன்று அவளின் கவனம் தன்னிடம் திரும்ப எதாவது செய்துக்கொண்டிருப்பான்.

பள்ளிப்பருவத்திலிருந்தே கணிதனை பார்த்திருந்ததால் கணிதன் செய்வதை எல்லாம் பார்த்து இவனுக்கு தோன்றியது இது தான் “ஹீ இஸ் கம்ப்ளிட்லி அப்ஸட்டு வித் பிளார்… (he is completely obsessed with flower…)”

அவளிடமிருந்து பார்வையை திருப்பமாலே இத்தனையும் நினைத்துக்கொண்டிருந்தான் ஆகாஷ். அவள் காபியே போட்டு முடித்துவிட்டு குடிக்க ஆரம்பித்திருந்தாள் மலர்விழி.

மலர்விழியின் பாடல் ஒசை நின்றவுடன் தான் சுயநினைவுக்கு வந்தான் ஆகாஷ்.

“ஹே ப்ளார்…” என்றழைக்க அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்தவள் ஆகாஷைப் பார்த்து என்னவென்பதைப் போன்று புருவத்தை உயர்த்த,

“உங்கிட்ட ஒரு சில கேள்வி கேட்கனும்… அதுக்கு உண்மையான பதிலை நீ எனக்கு சொல்லனும்…”

அதற்கு மலர்விழி தன் திருவாய் திறந்து மறுமொழி பொழிவதற்குள் அறை கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, ஒன் மினிட் என்றவாறு ஆகாஷ் போய் கதவை திறக்க அவனை தள்ளிக்கொண்டு அறையில் நுழைந்தான் கணிதன்.

தன்னை தள்ளிக்கொண்டு அறையில் நுழைந்தவனைப் பார்த்து 240 வோல்ட் மின்சாரம் தன் மீது தாக்கியதைப்போன்று அதிர்ந்து நின்றான் ஆகாஷ்.

எதையும் கண்டுக்கொள்ளாமல் காபியை அருந்திக்கொண்டிருந்த மலர்விழி ஆகாஷின் “அண்…அண்ணா… நீங்க…” என்ற குரலில் சோபாவில் இருந்து எழுந்து கதவு பக்கம் திரும்பினாள்.  

வந்திருந்தவனைப் பார்த்து மலர்விழி அதிர்ச்சியாகவெல்லாம் இல்லை. கணிதன் வருவான் என்பதை அவள் அறிந்தே இருந்தாள்.

“என்ன அண்ணா? ஒரமா போய் நில்லு…” என்று கூறியவன், தான் வந்தது தெரிந்தும் சிறிதும் ஒரு ரியாக்ஷன் காட்டாமல் சோபாவில் அமர்ந்துக்கொண்டு காபியை ரசித்து அருந்திக்கொண்டிருந்தவளைக் கண்டு கொலைவெறி வந்தது கணிதனுக்கு…

ஒரெட்டில் மலர்விழியை நெருங்கியவன் அவள் கையிலிருந்த காபிக்கோப்பையை வாங்கி சுவற்றில் விட்டெறிந்தான் கணிதன்.

அந்த செயலில் மலர்விழி கண்களை பயத்தில் இறுக முடிக்கொள்ள, ஆகாஷ் “கணி அண்ணா…” என்றவாறு பதட்டத்துடன் அவனை நெருங்க வர,

“அமைதியா இருக்குறதா இருந்தா இங்கே இரு… இல்லாட்டி வெளியே கிளம்பு. உன் ப்ரண்டை ஒன்னும் கடிச்சு முழுங்கிற மாட்டேன்.” கணிதனின் பேச்சில் அமைதியாக அந்த அறையை விட்டு வெளியேறினான்.

“பயந்த மாதிரி ரொம்ப நடிக்காம முதல் கண்ணை திற டி…” என்று கணிதன் சத்தமிட்டான்.

அவனது அதட்டலில் இரு காதுகளையும் இறுக மூடியிருந்த கரங்களை எடுத்துவிட்டு தன் மலர்விழிகளை மலர்ந்து கணிதனை நோக்கியவாறு சோபாவிலிருந்து எழுந்து நின்றிருந்தாள் மலர்விழி.

அவளின் அருகில் நெருங்கி வந்தவன் அவளது இரு தோள்பட்டைகளையும் தனது கரங்களால் இறுக மலர்விழிக்கு வலிக்குமாறு பற்றியவன்,

“ஏன் வந்த? எதுக்கு வந்த? இதெல்லாம் எனக்கு தெரியவேணாம். ஆனால் இப்பயே இந்த நிமிசமே நீ இங்கே இருந்து போயிருக்கனும்…” என்றவாறு இன்னும் இறுக்க மலர்விழிக்கு தோள்கள் இரண்டும் அற்று விழுவதுப் போன்று வலித்தது.

அவ்வளவு வலி எடுத்தும் அதை கண்ணில்  காட்டாமல் அவனது கண்களை நோக்கினாள்.

“கண்டிப்பா கிளம்பிறேன். ஆனால் உங்ககிட்ட ஒரு விசயம் பேசுன பின்னாடி போயிறேன். ப்ளீஸ்…”

“நீ பேசுறதை எதையும் கேட்க எனக்கு விருப்பம் இல்லை. கெட் அவுட் இடியட்…” என்றவன் மலர்விழியின் கண்ணில் தெரிந்த வலியின் சாயலில் தன் கரங்களை அகற்றினான்.

“எனக்கு உங்ககிட்ட பேசியே ஆகனும். ஒரு டென் மினிட்ஸ் அது போதும்… ப்ளீஸ் சார்… ப்ளீஸ் சார்…“

“என்ன சொல்லனுமோ சொல்லிட்டு கிளம்பு. சரியா பைவ் மினிட்ஸ் தான் டைம்…” என்று கூறியவன் சில நிமிடங்களுக்கு முன்பு அவள்  இருந்த சோபாவில் போய் இருந்தான்.

“தேங்க்ஸ் சார்… நான் ஏன் அன்னைக்கு கல்யாணத்துல இருந்து…” என்று அவள் ஆரம்பிக்கவுமே அவனுக்கு சிறிது நேரம் முன்பு சென்றிருந்த ஆத்திரம் மீண்டும் சுர்ரென்று ஏறியது.

சட்டென இருக்கையில் இருந்து எழுந்தவன் அவளது வலக்கரத்தை அவளது பின்புறமாக மடக்கி பிடித்தவாறு தன்னுடன் இறுக்கி கொண்டான். நொடி நேரத்தில் இச்செயல் நடந்திருந்தது.

நெருக்கத்தில் கணிதனின் மார்பு வரைக்கும் தான் அவளது உயரமே இருந்தது. அவளது மென்மைகள் அவனது இருதயத்திற்கு கீழே அழுத்திக்கொண்டிருந்தது. கணிதனை அண்ணாந்து பார்த்தாள்.

கணிதன் கரத்தை திருகி பிடித்திருப்பதால் உண்டான வலியைவிட அவனின் அருகாமையில் ஏற்ப்பட்ட பருவ உணர்வுகள் அதிகமாக வந்தது.

தன்னை அண்ணாந்து பார்க்கும் மலர்விழியின் கண்களில் தெரிந்த மயக்கத்தில் அவளை சட்டென்று தன்னிடமிருந்து உதறினான் கணிதன்.

உதறவும் சோபாவில் சென்று சாய்ந்தவாக்கில் விழுந்தாள் மலர்விழி. உதறியதன் அர்த்தத்தை உணர்ந்தவள் தன்னையை நொந்தவாறு நொடிக்கும் குறைவான நேரத்தில் எழுந்து சரியாக அமர்ந்திருந்தாள்.

சோபாவில்  தனது வலதுகாலை தூக்கி வைத்தவன் அவளை நோக்கி குனிந்து மலர்விழியின் தாடையை இறுக வலிக்க பிடித்தான்.

“இப்படி பார்ப்ப… இதை நம்பி நான் கல்யாணம் பண்ணிக்க வந்தா ஒடிப்போயிருவ… கிஸ் பண்ணா உன்னை எதோ செக்ஸீவல் அசால்ட் பண்ண மாதிரி சீன் போடுவ… சரி உன் தொல்லையே வேணாம்னு வேற ஒருத்தியை கட்டிக்க போனா இப்படி வந்து நிக்குற? உன் பிரச்சினை தான் என்ன டி? என்னை கல்யாணம் பண்ணாமல் மேட்டர் மட்டும் பண்ணனுமா?” என்று மலர்விழியை கூர்மையாக பார்த்தவாறு கேட்டான்.

அதற்கு மலர்விழி ஒரு பதிலும் சொல்லவில்லை. சொல்லவில்லை என்பதைவிட சொல்ல முடியவில்லை என்பது தான் சரியாக இருக்கும். இந்த கிராதகன் தான் வாயைக்கூட அசைக்கமுடியதவாறு தாடையை இறுகப் பற்றியிருந்தானே…

“அது மட்டும் தான் வேனும் கல்யாணம்லாம் வேணாம்னு சொல்லிருந்தா எப்பயோ முடிச்சு இருக்கலாமே? இப்ப ஒன்னும் கெட்டுப் போகலை வா இப்பயே முடிச்சுருவோம். வன் ஹவர் தான். கம் ஆன்.. கெட் அப்…கெட் அப்…” என்று பேசியவாறே அவளது தாடையிலிருந்து கையை எடுத்துவிட்டு அவளது தோளை பிடித்து எழுப்பினான்.

அவனிடமிருந்து சட்டென்று தன்னை மீட்டுக்கொண்டு தள்ளி வந்தவள்,”லூசா சார் நீங்க?”

“நான் லூசா? நீ தான் டி சைகோ… இப்ப என்ன டாஷ்க்கு இங்கே வந்த?”

“கொஞ்ச நேரம் கத்தாமல் நான் சொல்றதை கோவப்படாம கேளுங்க சார். இதான் லாஸ்ட் டைம். இனிமேல் உங்க கண்ணுலயே நான் படமாட்டேன் சார்.”

“ஏன் தற்கொலைப் பண்ணிக்க போறீயா?”

“நீங்க மட்டும் கல்யாணம் பண்ணி குஜாலா இருப்பீங்க… நான் சாகனுமா? வாய்ப்பில்ல ராஜா…”

“அப்புறம் என்ன? லாஸ்ட்டு பர்ஸ்டுன்னு கதை சொல்லிட்டு இருக்க. சரி விடு நீ கடல் தாண்டி என் கல்யாணத்துக்கு வந்த ரீசனை சொல்லு கேட்போம்…” என்று கூறியவாறு மீண்டும் அந்த சோபாவில் போய் கணிதன் அமர்ந்துக்கொள்ள,

மூன்றுப்பேர் அமரக்கூடிய அந்த சோபாவில் சிறிது தள்ளி கணிதனின் முகத்தைப்பார்த்தவாறு மலர்விழியும் அமர்ந்துக்கொண்டாள்.

என்ன நினைத்தானோ எதுவும் சொல்லாமல் அவள் பேசுவதற்காக அவளைப் பார்த்துக்கொண்டே அமைதியாக இருந்தான்.

கணிதனுடன் மனம் விட்டு பேச வேண்டும் என்று தான் கடல் கடந்து வந்தாள். ஆனாலும் இப்பொழுது பேச நா வரவில்லை. இனி பேசி இதனால் என்ன பயன் என்று ஒரு நிமிடம் தோன்றியது. அடுத்த நொடியே பயன் என்னவென்று அவள் மனம் எடுத்துரைக்க, தன்னை காதலித்த… தான் காதலிக்கும் ஒருவனுக்கு குறைந்தப்பட்ச மன நிம்மதியையும் தன்னிடமிருந்து மிகச்சிறந்த closureயும் கிடைக்கும். அவன் மணவாழ்வு சிறக்கும் ரேஷ்மாவுடன் என்று நினைத்தவளுக்கு தொண்டையை அடைத்தது.

இனி அவன் வாழ்வில் தனக்கு இடமே கிடையாது. கணிதனை முற்றும் முழுதாக வேறுஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தற்கே உள்ளே ஒரு ஆலகால விஷம் சுரந்து உடல் முழுவதும் ஒடி அனைத்து பாகங்களையும் செயலழிக்க செய்துக்கொண்டிருப்பது போன்று மலர்விழிக்கு தோன்றியது.

“ம்ம்ம்ம்ம்….” என்ற கணிதனின் தொண்டை செருமலில் நினைவுலகம் வந்தவள் அவனை பார்த்து கண்ணை எட்டாத சிரிப்பை உதிர்த்துவிட்டு பேச ஆரம்பித்தாள்.

 “உங்கக்கிட்ட முதல் நான் சொல்ல வேண்டியது இல்லை கேட்க வேண்டியது என்னன்னா ‘I am really sorry…’என்னை மன்னிச்சிருங்க சார்… எனக்கு எங்க அப்பான்னா ரொம்ப பிடிக்கும்… ரொம்ப… வார்த்தையில சொல்லவே முடியாத அளவுக்கு அவர் தான் உயிர். அவருக்கு நான் இன்ஜீனியர் ஆகனும்ன்றது அவரோட கனவு. ஆனால் எனக்கு பாடணும் ஆடணும் அதன் மூலமா அளவில்லாத புகழை சம்பாரிக்கனும்றது என்னோட கனவு… ஆசை… லட்சியம்… எல்லாமே. ஒருவேளை எங்க அப்பா என்னை அடிச்சோ திட்டியோ அவர் கனவை என்மேல திணிச்சு இருந்தார்னா போயா நீயும் உன் இன்ஜீனியருக்கும் அப்படின்னு சொல்லிட்டு எப்பயோ தூக்கி போட்டு இருப்பேன்…”

“ஆனால் அவர் அன்பால என் மேல திணிச்சாரு. எந்த சங்கிலியும் விட அன்புன்ற சங்கிலி ரொம்ப கடினமானது. யாரலாயும் அதை உடைக்கவே முடியாது.”

“எனக்கு உங்களை பார்க்குறப்ப எல்லாம் எங்க அப்பா ஞாபகம் தான் வரும். எங்க அப்பாவோட மினிவெர்ஷன் தான் நீங்கன்னு மனசுல ரொம்ப ஆழமா பதிஞ்சுருச்சு. அவர் ஒரு சமுத்திரகனின்னா நீங்க ஒரு ஆரி ப்ரோ… காலேஜ்ல நாங்க எவ்வளவு சேட்டை செஞ்சாலும் ஹெச் ஒடி க்கிட்ட போட்டு கொடுக்காமல், இண்டர்னல்ல கையை வைச்சிருவேன்னும் மிரட்டாமல் அட்வைஸ் பண்ணுறப்ப நீங்க என் அப்பா மாதிரின்னு புரிஞ்சுக்கிட்டேன். இதுதான் உங்களை எனக்கு பிடிக்குறதுக்கும்… கல்யாணத்தனைக்கு ஒடிப்போறதுக்கும் காரணமா இருந்துச்சு…”

“ஓரு தடவை நெருப்பு ஒரு குழந்தை கையில சுட்டுருச்சுனா அந்த குழந்தை நெருப்புபக்கத்துல போகவே பயப்படும்… அதுமாதிரி அன்பால சுடுப்பட்ட ஒரு குழந்தை நான். நான் சொல்லுறது உங்களுக்கு வேடிக்கையா இருக்கும். இதெல்லாம் ஒரு காரணமான்னு கூட தோணும் ஆனால் எனக்கு அப்படியில்லை.”

“என் கணவனா உங்களை பார்க்க என்னால முடியலை. உங்களையும் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. என்னோட அப்பா அளவுக்கு. அவரை மாதிரி உங்களுக்கும் படிப்பு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு என்ன? நான் கல்யாணம் ஆகி வந்து இந்த மாதிரி பாடனும் ஆடனும் சொன்னா நீங்க கண்டிப்பா விட்டு இருக்க மாட்டிங்கன்னு எனக்கு தோணுச்சு. எப்படியோ என்னை போராடி மீதம் இருக்க அந்த ஐஞ்சு அரியரை முடிக்க வைச்சிட்டு அடுத்து எதாவது லைப்க்கு தேவைப்படும்ன்னு இன்னும் எதாவது படிக்க வைச்சிருப்பீங்க. நான் திருப்பி இந்த அன்பால உங்க பேச்சைக் கேட்டு பிடிக்காததை செஞ்சு இருப்பேன்.  அன்போட போராட தெரியாத ஒரு கோழை நான். அதான் இவ்வளவுக்கும் காரணம்…”

“அதெல்லாத்தையும் விட நான் ஒடிப்போக காரணம்… எங்க அப்பா இடத்துல உங்களையும் என் இடத்தில நமக்கு பிறக்க போகுற பிள்ளையை வைச்சு பார்த்தேன். என்னால முடியலை. அன்புன்ற கூட்டுக்குள்ள நான் மூச்சு முட்டி இருந்தது போதும். என் குழந்தைக்கு அப்படி ஒரு நிலை வேணாம்னு தான் ஒடிப்போனேன். எல்லாமே என்னோட நினைப்பு மட்டும் தான்…”

 “நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கேன்னு எனக்கு லேட்டா தான் புரிஞ்சது. சுயநலமா எல்லாத்துலயும் இருந்து இருக்கேன். இந்த உலகத்துல நூறுக்கு நைன்ட்டி நைன் பர்சண்டேஜ் பொண்ணுங்களுக்கு அவங்க அப்பா மாதிரி தான் புருசன் வேணும்னு நினைப்பாங்க. ஆனால் எனக்கு எங்க அப்பா மாதிரி வேணாம்னு தான் தோணுச்சு அப்ப… அதான் நான் அப்படி பண்ணிட்டேன்.”

“இப்ப வந்து ஏன் இதெல்லாம் இவ சொல்றான்னு நினைக்கலாம். இத்தனை நாளா நான் காரணம் சொல்லாமல் போனது உங்களை பாதிக்கும்னு எனக்கு புரியல்லை. தெரியல்லை… ஆனால் எப்ப நான் உங்களை விரும்புறேன்னு என் மரமண்டைக்கு… அதாவது நீங்க என் கிரஸ் மட்டும் இல்லை லவ் ஒப் தி லைப்…” என்று கூறிக்கொண்டிருந்தவளுக்கு அப்பொழுது தான் ஸ்ட்ரைக் ஆனது தான் சிலபஸ் தாண்டி பேசிக்கொண்டிருக்கிறோம் என்று புரிந்து வாயை மூடியவுடன் தான் இன்னொரு தேவையில்லாத வேலையும் செய்துக்கொண்டிருக்கிறோம் என்று…

என்னவென்றால் கணிதனின் மிக அருகில் நெருங்கி அமர்ந்து அவன் முகத்திலிருந்து நெஞ்சு வரை தன் கரங்களால் தடவிக்கொண்டிருக்கிறோம் என்பது அதிர்ந்து கரங்களை எடுத்து பின்னால் நகரப்போக அதற்குள் கணிதன் மலர்விழியின் முகத்தைப் பற்றி ஆவேசமாக முகம் முழுவதும் முத்தமிட ஆரம்பிக்க, மலர்விழியும் அனைத்தையும் மறந்து அவனின் உதட்டை கவ்வினாள்.

என்னதான் இருவருக்கும் தனிப்பட்ட விசயம் என்பதைப் புரிந்துக்கொண்டு வெளியே வந்திருந்தாலும்… நாளை மறுநாள் திருமணத்தை வைத்துக்கொண்டு கணிதன் மலர்விழியிடம் தனியாக பேசுவதை நினைத்து பயந்தவாறு அறை கதவை சாத்திவிட்டு வெளியே தான் நின்றிருந்தான் ஆகாஷ்.

பத்து நிமிடம் முடிந்தவுடன் உள்ளே சென்று கணிதனை அனுப்பி விடலாம்… அதற்கு மேலும் முடியாதென்றால் ஆதித்யனிடம் சொல்லிவிடலாம் என்று நினைத்தவாறு நின்றுக்கொண்டிருந்தவனுக்கு, இரண்டு மாத கருவை சுமக்கும் தனது காதல் மனைவி ரேச்சலிடம் இருந்து அழைப்பு கணிமலரை டீலில் விட்டவன் அழைப்பை ஏற்று பேசியவாறே ரிசார்ட்டை விட்டு வெளியே வந்து கடற்கரை பக்கம் சென்றான்.

பேச்சு சுவாரசியத்தில் அரை கிலோமீட்டர் தூரம் கடற்கரையிலே நடந்து வந்த பின்னாடி அவன் கண்ட காட்சி. அவனது ஈரகுலையே நடுங்க வைத்தது. அங்கு யாரோ ஒரு ஆணுடன் ரேஷ்மா இதழ் முத்தம் பரிமாறிக்கொண்டிருந்தாள்.

இக்காட்சியே பார்த்து அதிர்ந்தவன் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாமல் பின்னங்கால் பிடறியில்பட ஒடிவந்து அவனும் மலர்விழியும் இருக்கிற அறைக்கதவை திறக்க இங்கு மலர்விழியும் கணிதனும் இதழ்முத்தம் பரிமாற அவனுக்கு என்ன கருமம் டா இது என்று தான் ஆனது.