EUTV 6

EUTV 6

6

மறுநாள் முதல் வகுப்பே கணிதனது வகுப்பாக அமைந்துவிட மலர்விழி ஏககுஷி. அவளது உயரத்திற்கு முதல் வரிசையில் தான் உட்கார வேண்டுமென்றாலும் தான் அடிக்கும் லூட்டிகள் தெரியாமல் இருக்க அவள் கடைசி இருக்கைக்கு சென்றுவிடுவாள். பள்ளி நாட்களிலிருந்தே அப்படி தான். ஆனால் கணிதனின் வகுப்பு என்று தெரிந்தவுடன் முதல் அங்கிருந்தவர்களை தனது கொஞ்சும் குரலால் அப்புறபடுத்திவிட்டு அவளும் பாரதியும் திவ்யாவும் அமர்ந்துவிட்டனர்.

 வகுப்பறையில் நுழைந்தவனுக்கு அவளை முதல் வரிசையில் பார்த்தவுடனே சிறிது ஜெர்க்கானாலும் கண்டுக்கொள்ளாமல்  தன் வேலையை ஆரம்பித்துவிட, பாடத்தை கிஞ்சித்தும் கவனிக்காமல் பாடம் நடத்துபவனை அக்கு வேறு ஆணிவேறாக அவளது விழி என்னும் லேசரால் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள் மலர்விழி.

நிஜமாகவே கணிதனுக்கு என்னவோ போன்று ஆகிவிட்டது. மிகவும் தடுமாறி போனான். அவளை முறைத்தாலும் அப்படியே அசையாது பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன பெண் இவள்?

 

இப்பொழுது நடத்தி கொண்டிருக்கும் பாடத்திலிருந்து மலர்விழியை எழுப்பி கேள்விகள் கேட்க, அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. இந்த பாடவேளை முடியும் வரை நின்றுகொண்டே இரு என்று விட்டு அடுத்த அடுத்த மாணவர்களிடம் கேள்விகணைகளை தொடுக்க பலர் பதில் சொல்லி அமர்ந்து விட்டனர். சிலர் பதில் தெரியாமல் மலர்விழி போல் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை கணக்கில் எடுக்காமல் மீதமிருந்த நேரத்திற்கும் பாடத்தை நடத்தி முடித்துவிட்டு அந்த வேளை முடிய பத்து நிமிடம் என்றிருக்கும் போது, யாரிடம் என்ன என்ன கேள்விகள் கேட்டான் என்று கேட்டு அதற்கு சரியான பதில்களை ஒவ்வொருத்தருக்கும் தெரிவுபடுத்தி அமரசொன்னவாறு, முதலாவதாக நிற்கவைத்த மலர்விழியிடம் கடைசியாக வந்தான் கணிதன்.

“நீ எதுக்கு நிக்குற?” என்று கணிதன் கேட்க,

“நீங்க தான் சார் நிக்க சொன்னீங்க…”

தான் கேட்ட கேள்வி புரியவில்லையோ என்று நினைத்த கணிதன் தன்மையாக“நீ எதுக்கு மா நிக்குற?” என்று கேட்க,

“நீங்க தான் நிக்க சொன்னீங்க…” என்று கூற பக்கத்திலிருந்த பாரதியும் திவ்யாவும்  அவளது எண்ணம் புரிந்து சிரிப்பை அடக்கி கொண்டு அமர்ந்திருந்தனர்.

“ஏன்ன திமிரா? எதுக்கு நிக்குற நீ?”

“நீங்க தான் சார் நிக்க சொன்னீங்க…”

“சரி… நான் தான் நிக்க சொன்னேன். எதுக்கு நிக்க சொன்னேன்?” என்று வந்த கோவத்தை அடக்கி பொறுமையாக கேட்க, மீண்டும் அவள் அதே பல்லவியை பாட வகுப்பறை முழுவதும் சிரித்தே செத்து கொண்டிருந்தார்கள்.

கணிதனால் அவள் கிண்டல் செய்கிறாள் என்று கூட நினைக்க முடியவில்லை. எனெனில் அவளது முகம் அவ்வளவு பவ்வியமாக அறியாமையுடன் இருந்தது.

தனது மூச்சை இழுத்துவிட்டவன், இப்பொழுது மிக மிக நிதானமாக “உன்னை எதுக்கு நான் நிக்க சொன்னேன் ஐ மீன் எந்த கேள்வி கேட்டு தெரியாதனால நான் நிக்க சொன்னேன்?” என்று மீண்டும் கேட்க,

“அதான் சார் நீங்க தான் நிக்க சொன்னீங்க. நான் ஒன்னும் சும்மா நிக்கலை…” என்று மலர்விழி புரியாத பாவனையில் கூறினாள்.

அதற்கு கணிதன் கோவமாக எதோ கூற வர, அதற்குள் பாடவேளை முடிவதற்கான மணி அடித்துவிட கணிதன் அவளை முறைத்துக்கொண்டே,

“உனக்கு இந்த ஹவர் ஆப்சென்ட்…” என்றவாறு சொல்லி சென்றான்.

“ஹா ஹா ஹா… நிஜமாவே அந்த பொண்ணு அப்படி பண்ணாளா டா? பார்க்கவே அவ்ளோ அப்பாவியா இருந்தா?” என்று ஆதி சிரிப்புடன் கேட்க,

“ஆதி அவ அப்பாவி இல்லை அடப்பாவி கேஸ்… இதை விட இன்னொரு பெரிய காமெடி என்னை வைச்சு பண்ணா தெரியுமா?” என்று மலர்விழியும் அவளது தோழிகளும் தன்னை பங்கமாக கலாய்த்த கதையை சொல்ல ஆரம்பித்தான்.

அந்த கூத்து நடந்து ஒரு வாரம் சென்றிருக்க அதற்கு பிறகு கணிதன் அவளிடம் கேள்வி கேட்பதையே தவிர்த்திருந்தான். அவளிடம் பார்வையை கூட திருப்ப மாட்டான். அவளது அசராத பார்வை தன்னை நோக்கி தான் இருக்கிறது என்று மட்டும் அவனால் உணர முடியும்.

அன்றும் அப்படி தான் வந்தவன் தன்னாலே முதல் வரிசையை பார்க்க அவளும் அவளது இரு வால்களும் அங்கே இல்லை. எங்கே என்று தேட கடைசி வரிசைக்கு முந்தின வரிசையில் மூவரும் அமர்ந்திருந்தனர். அதுவும் மிகவும் நெருக்கி கொண்டு அமர்ந்திருந்தனர்.

என்னவென்று கேட்டால் அன்று மாதிரி எதாவது செய்து நேரத்தை வீணடிப்பாள் என்பதால் கண்டுக்கொள்ளாதவாறு பார்வையை திருப்பியவன் சிறிது நேரம் பாடத்தை எடுத்துவிட்டு ஒரு பெஞ்ச்க்கு மூன்று பேர் என்ற விதம் தள்ளிதள்ளி அமர்ந்து படிக்க சொல்ல அனைவரும் கணிதன் சொன்னதைப் போன்று உட்கார்ந்து படிக்க ஆரம்பிக்க, இவர்கள் மூவர் மட்டும் அப்பொழுது போலவே அமர்ந்திருக்க என்னவும் செய்துவிட்டு போகிறார்கள் என்பது போல் கண்டுகொள்ளாமல் வகுப்பறையை சுற்றி கண்காணித்து கொண்டிருந்தவனுக்கு,

 மூவர் சிரிப்பு சத்தமும் கிசுகிசு பேச்சு சத்தமுமே தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருக்க காண்டாகியவன் மூவரையும் முறைப்புடன் நெருங்கினான்.

நெருங்கவும் தான் தெரிந்தது மூவரும் ஒரே புத்தகத்தை நடுவில் வைத்துக்கொண்டு லூட்டி அடித்துக்கொண்டிருந்தனர்.

ஒரு வாரமாக நேரம் கொடுத்து அனைவரும் தனிதனி புத்தகம் கண்டிப்பாக வாங்கி வைத்திருக்க வேண்டும் இல்லையென்றால் வகுப்பைவிட்டே வெளியே அனுப்பிவிடுவேன் என்று வலியுறுத்தியிருந்தான்.

ஆனால் இவர்கள் மூவரும் ஒரே புத்தகத்தை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கின்றனர். இப்போது தான் புரிந்தது. அம்மையார் ஏன் முதல் வரிசையிலிருந்து இங்கே வந்து அமர்ந்து இருக்கிறார் என்பது.

“ஹேய் மூணு பேரும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”

மூவரும் கோராசாக “படிச்சிட்டு இருக்கோம் சார்…”

“ஏதே நீங்க? படிச்சிக்கிட்டு?”

“மூனு பேரும் எந்திரிங்க முதல்…”

“ஏந்திரிச்சுட்டோம் சார்ர்ர்ர்ர்…” என்று மூவரும் இழுக்க வகுப்பறையே படிப்பதை விட்டுவிட்டு இவர்கள் மூவரையும் பார்த்தது.

“எல்லாரும் தனிதனியா தானே புக் வைச்சிருக்கனும்?  உன் புக் எங்கே?” என்று மலர்விழியை பார்த்து கேட்க,

“என்னது தான் சார் இது…” என்று மலர்விழி கூற,

பாரதியை பார்த்து “அப்ப உன் புக் எங்கே?”

“இதான் சார் என் புக்…” ஏதே என்பதைப் போன்று பார்த்தவன் திவ்யாவிடம் திரும்பி அதே கேள்வியை கேட்க, அவளும் அதே பதிலை சொல்ல கணிதன் நொந்தே விட்டான்.

“விளையாடாம யார் புக் இது ஒழுங்கா சொல்லுங்க?” என்று குரலுயர்த்தி கேட்க, மூவரும் ஒரே நேரத்தில் “அதான் சார் இது…” என்று கூறிவிட்டு ஒருத்தியை ஒருத்தி மாற்றி மாற்றி முறைத்துக்கொண்டனர்.

“ஹேய் என்ன உங்க மூனு பேருக்கும் நக்கலா? அந்த புக்கை கொடு…” என்று பாரதியின் கையிலிருந்த புக்கை பறித்தவன் முதல் பக்கத்தை பார்க்க,

 

அதில்

 திவ்யா.k,

மலர்விழி.S,

பாரதி.T  என்று மூவரது பெயர்களுமே புத்தகத்தில் எழுதியிருக்க கணிதன் நிலைமையை சொல்லியும் தெரியவேண்டுமா?

‘உங்ககிட்ட வந்து கேட்டேன்ல என் புத்தியை பிஞ்ச செருப்பால தான் நான் அடிச்சுக்கனும்…’ என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கும் போதே, இது என்ன பிரமாதம் இனிமேல் தான் மெயின் பிக்சரே ஆரம்பம் என்பது போல் அடுத்து அவர்கள் செய்த காரியம் இருந்தது.

“நான் தான் சொன்னேன்ல சார் என் புக் தான் இதுனு…” என்று மீண்டும் மூவரும் ஒரே நேரத்தில் கூவ, கடுப்பாகியவன் மூணு பேருமே வெளியே போங்க என்று கூற, மூவரும் இவனுடன் சண்டைக்கு நின்றனர்.

“நான் எதுக்கு போனும்? இவளுகள போக சொல்லுங்க… இந்த புக்ல என் பெயர் இருக்கு…”மலர்விழி

“ஹே நான் எதுக்கு வெளிய போனும்? நீங்க ரெண்டு பேரும் போங்க டி பிளடி ராஸ்கல்ஸ்…” என்று பாரதி கூறிக்கொண்டிருக்கும் போதே, தனது பையிலிருந்து ஒரு நோட்டை எடுத்து அதில் ஒரு பக்கத்தை தேடிக்கண்டுபிடித்து கணிதனிடம் காட்டினாள் திவ்யா.

“சார் இங்கே பாருங்க… இன்னைக்கு புதன் கிழமை இன்னைக்கு கணக்குபடி இந்த புக் என் சொந்தம் இவளுக ரெண்டு பேரையும் அடிச்சு பத்துங்க சார் கொசுங்க…” என்று திவ்யா பேசபேச கணிதனுக்கு தலை சுத்தும் போன்று இருந்தது.

‘எப்படி வந்து சிக்கிருக்கேன் பாருங்க…’ என்பது போன்று பரிதாப பார்வையை மாணவர்களை நோக்கி செலுத்த,

‘யார் பெத்த பிள்ளையோ… இன்னைக்குன்னு போய் இப்படி வாண்ட்டடா சிக்கி இருக்கீங்களே சார். இவளுக புதன் கிழமைன்னா ரொம்ப உக்கிரமா இருப்பாளுகளே…’ என்று பரிதாபமும் கிண்டலும் கலந்தவாறு அவர்கள் பதில் பார்வை வீசினர்.

இவள்கள் மூவரும் இதே வேலையாக தான் திரிந்திருப்பார்கள் போன்று. அனைத்து பாடத்திற்குமே ஒவ்வொரு புத்தகத்தை வாங்கி வைத்துகொண்டு இப்படி கால அட்டவணை போட்டு உரிமையாடி கொண்டிருக்கிறார்கள். அந்த கால அட்டவணையின் இறுதியில் ஐந்து கட்டுபாடுகள் வேறு அதற்கு கீழ் இவர்கள் மூவரின் கையெழுத்து வேறு…

இன்று கால அட்டவணை படி திவ்யாவிற்கு தான் புத்தகம் சொந்தம் என்றாக, “ஹேய் இன்னைக்கு திவ்யாவுக்கு தான் சொந்தம்னு போட்டு இருக்கு… சோ நீங்க இரண்டு பேரும் வெளிய போங்க…” என்று மலர்விழியையும் பாரதியையும் பார்த்து கூற

மலர்விழி“சார் அந்த ஐந்து கட்டளைகளில் கடைசி கட்டளையை பாருங்க சார்…” என்று கூற இவனும் கேனையன் மாதிரி அதை வாசித்தான்.

‘அவர்களின் நாள் அன்று சம்மந்தப்பட்டவர் வரவில்லையென்றால் அவர்க்கு பதிலாக அடுத்து உள்ளவர் அன்று உரிமை வைத்திருக்கலாம். அடுத்த வாரம் அவருக்கு பதிலாக முதல் வாரம் வராதவர் உரிமை வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று இதை வாசித்து முடிக்க

“போன வாரம் நான் வரலைன்னு என் இதை இவ எடுத்துக்கிட்டா சோ இந்தவாரம் எனக்கு தான்” என்று மலர்விழி கெத்தாக கூற,

‘அட கொப்பன் மவளுகளா…’

“நீங்க மூனு பேரும் எச்.ஒ.டி கிட்ட வாங்க… அப்ப தான் அடங்குவீங்க…” என்று கணிதன் கூற அவர்கள் முகத்தில் பீதியில்லாமல் கிண்டல் சிரிப்பு தேங்கியிருந்தது.

“சார் எந்த காரணத்தை கொண்டும் இவங்க மூணு பேரும் எச்.ஒ.டி சார் ரூம் பக்கம் வரகூடாதுன்னு எச்.ஒ.டி ஆர்டர்.” என்று மாணவர்கள் சிரிப்புடன் கத்த

‘அவரையும் விட்டு வைக்கலையா இந்த குரங்குக …அவ்வ்வ்வ்வ்….’

 

வீர்“ஹா ஹா ஹா… என்னால முடியல ப்ரோ… புயல் காத்துல அசால்ட்டா பொறி சாப்பிடுற உன்னையே தலையால தண்ணீர் குடிக்க வைச்சு இருக்காங்கன்னா வேற லெவல் தான் போ… ”

“அதுக மூணும் எல்லாத்தையும் கதற விடும்ங்க… இதுக கலாய்க்குதுகலா இல்லை நிஜமாவே ஒன்னுமே தெரியாத லூசுகளான்னு கண்டே பிடிக்க முடியாது… அவ்ளோ பவ்வியமா மூஞ்சியை வைச்சுகிரும்ங்க… நானே இதுக விவரம் தெரியாம தான் பண்ணுதுங்கன்னு நினைச்சு இருந்தேன் தெரியுமா? ஆனால் …” என்று ஆரம்பித்து அவன் அந்த கல்லூரியை விட்டு சென்றபின்பு அடுத்து வந்த இரண்டு செமஸ்டர் தேர்வுகளில் நடந்ததை கூறினான்.

சிறிது இடைவேளை விட்டு இன்று காலை நடந்ததை கூற மீதி நால்வரும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.

அவர்கள் ஐவரிலே மிகமிக நல்லவன் என்றால் அது கணிதன் தான். தான் உண்டு தன் வேலையுண்டு இருப்பான். தங்களை தவிர அவனுக்கு இது வரை நண்பர்கள் என்று கூட யாரும் இருந்தது இல்லை. நன்றாக பேச மாட்டானா? என்றால் அப்படியெல்லாம் இல்லை. எல்லாருடனும் பழகுவான் ஆனால் தனக்குள் அனுமதிக்க மாட்டான். அதிலும் அவனை மதிக்காதவர்களை எந்த சூழ்நிலையிலும் திரும்பி கூட பார்க்க மாட்டான்.

இவனுடன் நடக்கும் திருமணத்தை ஒரு பெண் வேண்டாம் என்று இருக்கிறாள். இவனோ நிச்சயத்தை உடனே வைக்க இருக்கான்.

 அப்பொழுது தான் கணிதனின் மலர்விழியின் மீதான பிடித்தம் ஆழமாக புரிய ஆரம்பித்தது.

எந்தவிதமான பெரிய பின்புலமும் இல்லாத பெண்ணை மனம் முடித்து வையுங்கள் என்று வந்து நின்ற பொழுது எங்கோ பார்த்திருப்பான் பிடித்திருக்கும் போல என்று நினைத்து தான் மலர்விழியை பெண்பார்க்க சென்றது. இந்தளவு சத்தியமாக யாரும் நினைத்து பார்க்கவே இல்லை.

“இது தப்பு கணி. வேணாம்ன்ற பொண்ணை கல்யாணம் பண்ண கூடாது. அது உன் வாழ்க்கையவே அழிச்சிரும். யோசிச்சுக்கோ கணி…” என்று ஆதித்யன் ஜோசப் வீட்டிற்கு மூத்தவனாகவும் தனது வாழ்க்கையில் பட்ட அடியினால் உண்டான ஞானத்தினாலும் கணிதனுக்கு அறிவுரை கூற, அதை எல்லாம் கேட்கும் நிலையில் கணிதன் மனது இல்லை என்பது அவன் பின் கூறிய வார்த்தைகளில் தெரிந்தது.

“அப்படி இல்லை ஆதி. அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அவ கண்ணுல என்னை பார்த்தவுடனே ஒரு ஸ்பார்க் வரும். இப்ப இந்த கல்யாணத்தை நிறுத்த வந்துட்டே என்னை சைட் தான் அடிச்சா தெரியுமா? சும்மா சின்ன பிள்ளை தனமா பண்ணிக்கிட்டு இருக்கா. அவ சீரியஸா இருந்தா கண்டிப்பா இந்த கல்யாணத்தை நிறுத்திருவேன் ஆதி. அப்படி பிடிக்காத பெண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண நான் என்ன ஆன்டி ஹீரோவா???” என்று சிரிப்புடன் கண்ணடித்து கூறினான் கணிதன்.

அவனின் சகோதரர்களுக்கு இதுவே போதுமானதாக இருக்க, அந்த பேச்சை அதோடு முடித்துவிட்டு வேறு பேச ஆரம்பித்துவிட்டனர்.

எப்பொழுதுமே இவர்கள் இப்படி தான். அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருத்தருக்கொருத்தர் எப்பொழுதுமே தலையிட மாட்டனர்.

ஐவரில் ஒருவர் யாரோ தவறான பாதையில் செல்கின்றான் என்று தெரிந்தால் நேரே போய் மூத்தவனான ஆதித்யன் ஜோசப்பிடம் சொல்லுவார்கள். அவன் இப்பொழுது போன்று பட்டும்படாமல் சரியானதை சொல்லுவான். அதை கேட்டு கொள்வர்.

அப்படி கேளாமல் அதை பாதையில் சென்று விழுப்புண்கள் வாங்கி வந்தால் அன்றே சொன்னோமே என்று பேசாமல் தங்கள் இறக்கைகுள் அணைத்து கொள்வர். எக்காரணத்தை கொண்டும் அந்த தவறிலிருந்து தப்பிக்க உதவி புரியமாட்டார்கள். அவனுக்கு ஒரு மாறல் சப்போர்ட் மட்டுமே தருவர். நீ தன்னிச்சையாக செய்ததில் லாபமோ நட்டமோ அது உன்னை சார்ந்தது மட்டும் தான். அதில் உதவுவதற்கு ஒன்றும் இல்லை என்பதை போன்று தான் நடந்து கொள்வர்.

       ஒவ்வொருத்தனுக்கும் பதினெட்டு வயது வந்தவுடனே அவர்களுக்கான லா பிர்ம்ஸ் பங்கு மற்றும் சொத்துகளை தனியாக பிரித்து கொடுத்துவிட்டனர். அதிலிருந்து அவர்களது தனிப்பட்ட வரவு,செலவு எல்லாம் அவர்களை சார்ந்தது தான். அதில் ஒரே ஒரு கண்டிசன் மட்டும். லா பிர்ம்ஸ்ன் பங்குகளை விற்க மட்டும் உரிமை கிடையாது. அவர்களது மனைவிகளை தவிர வேறு யாருக்கும் எழுதி வைக்கவும் முடியாது என்பது மட்டும் தான்.

மற்றபடி எந்த சொத்தையும் தன்னிச்சையாக அவர்கள் விற்கவும் வாங்கவும் உரிமை இருந்தது. பங்கு பிரித்து கொடுத்த பின்பு நையா பைசா கூட அவர்களுக்கு இந்த ஜோசப் வில்லாவில் இருந்து பெயராது.

பிரித்து கொடுக்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் அவர்களது தாத்தா திலகர் ஜோசப்பின் சொத்துகள் தான். அவர்களது தந்தைமார்களின் சம்பாத்தியம் அவர்கள் தனிப்பட்டது. அவர்கள் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது அவர்களது முடிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!