EUTV 7

7

“அடி கள்ளி உனக்கும் அவர் மேல ஆசை இருந்துருக்கு தானே? அப்புறம் எதுக்கு வேண்டாம்ன்னு பிணாத்திக்கிட்டு திரியுற?” என்று கார்த்திகா கேட்க,

“ஹே அது வெறும் கிரஷ் டி. அதுக்கு மேல ஒன்னும் இல்லை…”

“பொய் சொல்லாத மலரு… இன்னைக்கு கூட அவரை அப்படி முழுங்குற மாதிரி நீ பார்த்த…” என்று  ஈஸ்வரி கூற அவளை பார்த்து முறைத்த மலர்விழி மூடு என்பதைப் போல் சைகை செய்தாள்.

“அவ எதுக்கு மூடனும்? அந்த எக்ஸாம்ல உன்னை கேள்வி கேட்டதுக்கா அவரை வேணாம்னு சொல்ற? பைத்தியமா நீ?”

“இந்த உலகத்துலயே எனக்கு ரொம்ப பிடிச்சது யாரு?”

“உங்க அப்பா தான்…” கார்த்திகா

“இந்த உலகத்துலயே எனக்கு பிடிக்கவே பிடிக்காதது யாரு? ”

“அதுவும் உங்க அப்பா தான்…” ஈஸ்வரி

“ம்ம்… இந்த கணிதன் எங்க அப்பாவோட ஜெராக்ஸ் காபி தெரியுமா? யாராச்சும் சமுத்திரகனிக்கிட்ட இருந்து தப்பிச்சு ஆரி ப்ரோகிட்ட மாட்டுவாங்களா… சோ பிக் நோ தான். அதைவிட முக்கியமான விசயம் கணிதன் அப்படின்னு இல்லை. யாரா இருந்தாலும் இந்த கல்யாணம் வேணாம் தான் எனக்கு. அது கணிதனா இருந்தா ரொம்பவே வேணாம்.”

“அதான் ஏன்னு கேட்குறோம்?”

“அதான் சொல்லிட்டேனே. கணிதன் எங்க அப்பா மாதிரின்னு. தங்களுக்குள்ளே யாரையுமே அனுமதிக்காதவங்க இரண்டு பேரும். அவங்களை யாராலுமே பாதிக்க முடியாது தெரியுமா? எங்க அப்பா எல்லாம் எங்க அம்மா கூட கடமைக்குன்னு வாழ்ந்தவர் அவரை எங்க அம்மாவால பாதிக்கவே முடியலை. என்னை கூட கண்டுக்காம இருந்தவர் தானே? அவருக்கு படிப்பு முக்கியம் அதனால வந்தார். அப்புறம் அவரோட இரத்தம்ன்றதுனால என்னை பிடிக்க ஆரம்பிச்சிருச்சு. இப்ப எங்க அப்பாவோட ஒரே ஒரு விக்னெஸ் என்ன தெரியுமா அது நான் தான். என்னை ரொம்ப பிடிச்சதுனாலயே எனக்காவும் சேர்ந்து அவரே கனவு காண ஆரம்பிச்சுட்டார். இவனுங்க இரண்டு பேரும் எப்படின்னா பிடிக்காட்டி என்ன, நார்மலா யாரையும் கண்டுக்க கூட மாட்டானுங்க. பிடிச்சுட்டா சம்மந்தபட்டவங்களுக்கு சேர்ந்து இவங்களை கனவு கண்டு வாழ ஆரம்பிச்சுருவாங்க. இவங்க ஒவர் அன்பால என்னை மாதிரி முட்டாள்கள் அவங்க மனசை உடைச்சிட்டு வெளிய போகாம உள்ளேயே இருந்து தங்களோட சுயத்தை தொலைச்சுருங்க. அம்புட்டு தான்”

“என்ன சொல்றனு எனக்கு ஒன்னுமே புரியலை மலரு?”

        “அதாவது என்னன்னா ஒரு வேளை எனக்கும் கணிதனுக்கும் பிறக்குற பிள்ளைங்க அவனை மாதிரி படிப்பாளியா இல்லாம என்னை மாதிரி ஹாப் ஆயில்ஸா இருந்தா சிவராமன் இப்ப எனக்கு பண்ணிக்கிட்டு இருக்குறதை நாளைக்கு கணிதன் பண்ணுவான் . அடிச்சு துன்புறுத்தி வலுக்கட்டாயாம சங்கிலில மாட்டுறதை விட அன்பு அப்படின்ற பெயர்ல சங்கிலியை மாட்டுறது ரொம்ப தப்பு. அதை ரெண்டு பேருமே அசால்ட்டா பண்ணுவாங்க.”

“மாமாக்கிட்ட பேசு மலரு”

“அவர் புரிஞ்சுக்கவே மாட்டார் ஈஸ்…”

“நீயா சொல்லாதே. பேசிப்பாரு…”

“எங்கிட்ட ஒரு வார்த்தை இந்த கல்யாணம் உனக்கு ஒகே வா அப்படின்னு கேட்டு இருக்கலாம் தானே…” என்று மலர்விழி கேட்கவும் மூவரும் அமைதியாகினர்.

“ம்ம்ம்ம்… கணிதன் கிட்ட பேசிருக்கேன். என்ன பண்றான்னு பார்ப்போம்.”

“உன்னை மீறி இந்த கல்யாணம் நடந்துருச்சுனா?”

“ஹான். வாய்ப்பே கிடையாது ஷிவானி. நடக்க விடவே மாட்டேன்.” என்று மலர் கூறிக்கொண்டிருக்கும் போதே கண்ணகி வந்து அனைவரையும் வெளியே அழைத்தார்.

என்னவென்று பார்த்தவளுக்கு கணிதனின் செயல் மிகுந்த கோவத்தை கொடுத்தது. கணிதனின் தந்தையரும் தாய்மார்களும் வந்து நிச்சயம் அடுத்த வாரத்தில் வைக்க வேண்டுமென்று சொல்ல மீண்டும் மலர்விழியிடம் ஒன்றுமே கேட்காமல் கூறாமல் நிச்சயத்தை மாற்றி வைத்தனர்.

உடனே கணிதனுக்கு அலைப்பேசியில் மலர் அழைக்க அவன் இவள் அழைப்பை எடுக்கவே இல்லை. இதே தான் திருமணத்திற்கு முதல் நாள் வரை தொடர்ந்தது. நேரில் சந்திக்கும் பொழுது பேசுவதற்கான வாய்ப்பே கொடுக்கவில்லை அவன்.

சரி இப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது என்று நினைத்தவள் கடைசி முயற்சியாக தனது தந்தை சிவராமனிடம் பேச சென்றவளுக்கு எப்பொழுதும் போன்று அவர் பெரிய பல்ப்பாக மாட்டி அனுப்பி விட்டார்.

கணிதனும் சிவராமனும் சேர்ந்து மலர்விழியை கோவப்படுத்திவிட அவளும் திருப்பி அவர்களை கோவப்படுத்துமாறு செய்தாள். அவளின் அந்த செயல்  இருவரையும் நிறைந்த சபையில் அவமானபட்டு தலைகுனிந்து நிற்க வைத்தது.

 

இன்று….

வீரேந்திரன் இந்த இரு வருடத்தில் இரண்டு மலையாள படம் முடித்திருந்தான். வசூல் ரீதியாக சுமாராக போனாலும் விமர்சகர்கள் மத்தியில் இவனது நடிப்பு அதிகம் பேசப்பட்டது. இப்பொழுது தான் தமிழ் படம் ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கிறான். அவுட்டோர் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டு கேரளா திருவனந்தபுரத்திற்கு வந்தவனை தங்களின் இருப்பிடமான ஆழப்புழாவிற்கு காரில் அழைத்து சென்றுகொண்டிருக்கிறான் கணிதன்.

கணிதன் தனது ஜாகையை ஆழப்புழாவிற்கு மாற்றி இரண்டு வருடங்கள் ஆகிறது. இங்கிருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறான்.

“ப்ரோ ரியலி மிஸ் அவர் பிரதர்ஸ் மேன். நாம எல்லாரும் மீட் பண்ணி கிட்டதட்ட செவன் மந்த்ஸ் ஆயிருச்சு?” வீர்

“யெஸ் வீர். லாக் டவுன் முடிஞ்சவுடனே மதுரை போவோம் நெக்ஸ்ட் வீக். உன்னை ப்ரீ பண்ணிக்கோ…” என்று கூறியவனும் தனது சகோதரர்களை மிஸ் செய்தான்.

“கணி எப்ப மேன் நீ அந்த பொண்ணுக்கிட்ட இருந்து மூவ் ஆன் ஆகுவ?”

“வீர் நான் எப்பயோ மூவ் ஆன் ஆகிட்டேன் டா. ஆனால் நீங்க தான் இன்னும் ஆகல போல… எப்ப பார்த்தாலும் என்னோட எல்லா செயல்களுக்கும் அவளையே காரணமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க.”

“ஆமாம். நாங்க தானே தேவதாஸ் மாதிரி தாடி வளர்த்துக்கிட்டு, வீட்டுல ஆள் இல்லாத நேரமா பார்த்து சரக்கு அடிச்சிக்கிட்டு, கல்யாணம்ன்ற வார்த்தையே சொன்னாலே எரிச்சலா திரியுறோம்.”

“டேய் தாடி ஒரு ப்ரஸ் லுக் கொடுக்குதுன்னு வைச்சிருக்கேன். ட்ரிங்க்ஸ் ஐ ஆம் அ சோசியல் ட்ரிங்கர்.”

“கணி நீ என்ன தான் மலுப்புனாலும் உண்மை பொய் ஆகிறாது. அந்த பொண்ணை பார்க்குற தானே? ஷீ என்ஜாய் ஹேர் லைப் மேன். அவ லைப்ல மேல போய்க்கிட்டு இருக்கா. என்னோட அடுத்த படத்துல கூட அவக்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்காங்க. நீ இப்படி இருக்குறது நாட் ஃபேர் மேன். என்ன பண்ணா அவக்கிட்ட இருந்து மூவ் ஆன் ஆகமுடியுமோ அதை பண்ணு. இது என் கணி அண்ணா கிடையாது. ஐ வாண்ட் அவர் கணி. நாட் ஹேர் பிளடி ஸ்டூப்பிட் லவ்வர் பாய் கணிதன்.” என்று உணர்ச்சி பூர்வமாக வீர் கூற,

கணிதனுக்குமே தான் எத்தனை வருடங்கள் தான் இப்படியே இருக்க முடியும் என்று தோன்றியது.

அவன் என்ன தான் அவள் எல்லாம் எனக்கு ஒரு ஆள் இல்லை என்று கூறிக்கொண்டாலும் அவனின் மனதுக்கு தெரியும். இன்னும் அவள் எங்கு விட்டு சென்றாலோ அங்கேயே நின்று கொண்டிருக்கிறோம் என்று. திருவிழாவில் இறுகபிடித்திருந்த தனது கையை விட்டு சென்ற தாயின்  கையை தேடுவது போல அவளது உதறிய கையை தேடி அலைந்துக்கொண்டிருக்கிறான்.

வீரேந்திரனுக்கு எப்படியென்றே தெரியாமல் கணிதன் என்றால் உயிர். சிறு வயதிலிருந்தே கணி கணி என்று ஒட்டிக்கொண்டு தான் திரிவான். கணிக்கும் தனது உடன்பிறந்த ஆதித்யன் மற்றும் இருவரை விட இவனில் ஒட்டுதல் அதிகம். இருவரும் யாருடனும் பகிர தயங்கும் விசயங்களை கூட ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வர். என்ன தான் வீரேந்திரன் கணிதனுடன் திரிந்தாலும் அப்படியே ஆதித்யனின் வார்ப்பு. அவனை போன்றே மிகவும் கோவக்காரன். ஆனால் விஜயேந்திரன் கணிதனின் வார்ப்பு. எதிலும் நிதானித்து தான் செயல்படுவான். ஆனால் அவனுக்கு ஆதித்யன் தான் எல்லாம். ஆமாம் கணிதன் மற்றும் வீரேந்திரன் ஒரு டீம், ஆதித்யன் மற்றும் விஜயேந்திரன் ஒரு டீம். ரிஷபன் இதில் எதிலும் வரமாட்டான். அவன் ஒரு தனி டீம்.

இவ்வாறு இவர்கள் தங்களுக்குள்ளே யோசித்தவாறு பயணத்தை மேற்க்கொண்ட போது தான் அந்த சம்பவம் நடந்தது. அவர்கள் முன் சென்று கொண்டிருந்த கேப் தனக்கு எதிரே வந்த ஒரு பைக் மீது மோதி சட்டென்று நிறுத்தியிருக்க பின்னாடி மிகசொற்ப மீட்டர் இடைவேளையில் வந்த இவர்கள் வண்டி அந்த கேப்பின் மீது மோதியது.

இவை அனைத்தும் கண்மூடி திறக்க எடுத்துக்கொள்ளும் ஒரு  நொடியில் நடந்து முடிந்திருந்தது.

வண்டி ஒட்டிக்கொண்டிருந்த கணிதன் இறங்குவதற்கு முன்பு இறங்கிய வீர் அவனுக்கு முன்பே இறங்கி தனக்கு முன்னாடி இருந்த இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்தவனை திட்டிக்கொண்டிருந்த அந்த கேப் ஒட்டுநருடன் சண்டைக்கு சென்றிருந்தான்.

வீர் அவர்கள் ஐவரிலே மிகவும் கோவக்காரன். ஆதித்யனாவது கோவத்தின் போதும் சிறிது நிதானித்து செயல்படுவான். ஆனால் வீரேந்திரனுக்கு கோவம் என்று வந்துவிட்டால் எதுவும் கண்ணுக்கு தெரியாது. எதிராளி யாராக இருந்தாலும் குத்தி கிழித்துவிட்டு தான் மறுவேலை. இவனுக்கு அப்படியே எதிர்பதம் கணிதன். அவ்வளவு சீக்கிரத்தில் கோவமே படமாட்டான். அப்படியே வந்தாலும் அந்த கோவத்தை சிந்தாமல் சிதறாமல் பாதுகாத்து எதிராளியை வலிக்க செய்து விடுவான்.

கணிதன் இறங்கியவன் மலையாளத்தில் இருவரையும் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்த வீரை பார்த்தவாறு நின்றிருந்தான். வீரேந்திரன் கோவமாக கத்திக்கொண்டிருக்கும் போது இடையில் போய் பேசினால் பேசுபவரையும் யாரென்று பார்க்காமல் கடுப்படிப்பான். அதனால் மூவரையும் வேடிக்கை பார்த்தவாறு நின்றிருந்தான் கணிதன். அது ஒரு ஒதுக்குபுறமான சாலை என்பதால் பெரிதாக எந்த போக்குவரத்தும் இல்லாதது இவர்களுக்கு வசதியாகி போனது.

ஐந்து நிமிடங்களாகியும் சண்டை ஒயாத காரணத்தினால் அந்த கேப்பிலிருந்து இறங்கினாள் மலர்விழி.

இறங்கியவளுக்கு முதலில் கண்களில் விழுந்தது வீரேந்திரன் தான். இவன் எங்கே இங்கே என்பது போன்று அவனை பார்த்தவள் பார்வையை திருப்ப அவனிலிருந்து ஒரு ஐந்தடி தள்ளி நின்றிருந்த கணிதன் பார்வை வட்டத்தில் விழ இவளுக்கு பகீரென்றது.

இரண்டு வருடங்களுக்கு பிறகு அவனை பார்க்கிறாள். ஆளே மாறி போயிருந்தான். முன்னெல்லாம் மீசை கூட வைத்துக்கொள்ள மாட்டான். இப்பொழுது பாதி முகம் மறைத்தவாறு தாடி. அது கணிதன் வீரிடம் சொன்ன மாதிரியே அவனுக்கு அது ஒரு ப்ரஷ் ரக்கட் லுக் கொடுத்தது.

கணிதனோ இவளை அசையாது பார்த்திருந்தான். அவனுக்கு சொல்ல தெரியா ஒராயிரம் எண்ணங்கள் மனதுனுள் பொங்கி வழிந்துக்கொண்டிருந்தது.

மலர்விழிக்கு ‘யோவ் மிலிட்டரி நீ எங்கே யா இங்கே?’ என்று தான் முதலில் தோன்றியது. அவனது பார்வையில் கொஞ்சம் இல்லை இல்லை எக்கசக்கமாகவே ஒரு சங்கட உணர்வு தோன்றியது.

இப்பொழுது சிரிப்பதா இல்லை தெரியாத மாதிரி திரும்பி கொள்வதா என அவள் மனதுக்குள்ளே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க அப்பொழுது தான் இவள் பக்கம் பார்வையை திருப்பிய வீரேந்திரனுக்கு இருந்த கோவம் வானளவு பெருகி மழையாக பொழிய தயாராகியது.

கணிதனுக்கு மலர்விழியை பார்க்க பார்க்க பற்றிக்கொண்டுவந்தது. அவளது செயலால் தான் ஊர்விட்டு ஊர் வந்து அநாதை மாதிரி உட்கார்ந்திருக்கிறோம். தன்னுடைய தாய் தன்னுடன் பேசியே இரண்டு வருடம் ஆகிவிட்டது. அதிலும் பற்றாக்குறைக்கு அடர்ந்த தாடி வேறு எதுவோ தேவதாஸ் மாதிரி. ஆனால் இவளோ தனது நடை உடை அனைத்தையும் மாற்றி முன்பிருந்ததை விட இப்பொழுது பளபளவென்று பாலீஸ் வேறு ஆகியிருக்கிறாள்.  தன்னுடைய வெளியேற்றம் அவளை எந்த விதத்திலுமே பாதிக்கவில்லையா…

வீர் வாயை திறந்து அவளை பேசுவதற்கு முன் கணிதன் பேச ஆரம்பித்திருந்தான்.

“இப்ப எத்தனாவது கல்யாணத்துல இருந்து ஒடி வந்து இருக்க?” என்று கேட்க, சரி பாதிக்கப்பட்டவன் பேசினால் பேசிவிட்டு போகிறான் என்று நினைத்த மலர்விழி தங்கள் கேப் ஒட்டுநரை அழைக்கப் போக கணிதன் ரொம்ப பேச ஆரம்பித்தான்.

“இன்னுமா உங்க அப்பன் உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு திரியுறான்? சங்கட்டமே இல்லாம?”

“தேவையில்லாம எங்க அப்பாவை பத்தி எல்லாம் பேசாதீங்க எனக்கு கெட்ட கோவம் வரும்.”

“அப்படி தான் டி பேசுவேன். இப்ப எங்கே இங்கிட்டு வந்து இருக்க? எவன் வாழ்க்கையை பாழாக்க வந்துருக்க? ”

“நீங்க வரம்பு மீறி பேசிட்டு இருக்கீங்க… இதெல்லாம் நல்லா இல்லை.”

“நீ பண்ணது மட்டும் எங்களுக்கு இனிச்சு கிடந்துச்சோ… ஊரையை கூட்டி என்னை மூக்கறுத்திட்டில டி. வெக்கமே இல்லாம எப்படி தான் உன்னால இப்படி திரிய முடியுதோ… பிளடி **** ” என்று காதுக்கொண்டு கேட்க முடியாத ஆங்கில கெட்ட வார்த்தையில் கணிதன் திட்டிவிட மலர்விழிக்கு சட்டென்று இவன் யாரை சொல்கிறான் என்று புரியவே சில நொடிகள் எடுத்தது. முகமே மாறிவிட்டது. முகமெல்லாம் சிவந்து கண்களில் கண்ணீர் கரை கட்டிக்கொண்டு நின்று விட்டது.

அந்த வார்த்தையை கேட்ட வீரேந்திரனுக்கே ஒரு மாதிரியாகி விட்டது. தனது அண்ணனா இப்படி என்று. அவனின் வேதனையை கூட இருந்து பார்த்தவன் தான் அதற்காக இப்படியா அதுவும் கணிதன் இப்படியா என்று தான் தோன்றியது.

தனது கண்களை உருட்டி சமாளித்து அவனுக்கு மறுமொழி கூற வருவதற்குள் கணிதன் சட்டென்று காரினுள் சென்று அமர்ந்துவிட்டான். வீரேந்திரனும் நிலைமையின் தீவிரத்தை புரிந்துகொண்டு அவன் செய்துகொண்டிருந்த செயலை விட்டுவிட்டு அவர்களை போக சொன்னான்.

இருசக்கர வாகனத்தில் வந்தவனிடமிருந்து கேப்காரன் காசுபறிக்க பார்க்க அவன் தாராமல் பறந்துவிட வீரை பிடித்துக்கொண்டான். வீரும் தனது தமையனின் நிலையை கருத்தில் கொண்டு காசு கொடுத்து கொண்டிருக்க அந்த வண்டியிலிருந்து இறங்கினான் இன்னொருத்தன்.

ஒரு மக்கள் கூட்டம் இருந்ததென்றால் அதில் இருக்கும் தொன்னூறு சதவீத நபர்களை குள்ளமாக்கி கொண்டு நிற்பவர்கள் இந்த ஜோசப் பிரதர்ஸ். இவர்களையே குள்ளமாக்குமாறு இருந்தான் அவன். நிறம் சிறிது மட்டு தான்.

இறங்கியவன் கலங்கிய கண்களுடன் நின்றிருந்த மலர்விழியிடம் என்னவென்று விசாரித்து கொண்டிருந்தான். அதைப்பார்த்த அண்ணனுக்கும் தம்பிக்கும் அவனை ஒங்கி ஒரு குத்துவிட வேண்டுமென்று தான் தோன்றியது. ஒருபக்கமாக திரும்பி நின்று அவளோடு பேசிக்கொண்டிருந்ததால் அவனை தெரியவில்லை.

“ஹே பிளவர்… வாட் ஹாப்பன்ட்?”

“நத்தீங்க்… நீ எதுக்கு கீழே இறங்கி வந்த முதல். உள்ளே போ…” என்று மலர்விழி படப்படப்பாக கூறினாள்.

“ஹே இங்கே யார் வரப்போறா? நீ பயப்படாதே.” என்று அவளிடம் கூறியவன் வீரேந்திரன் இருந்தபக்கம் நோக்கி பார்வையை திருப்பினான்.

 இருவரும் அதிர்ந்து “நீயா? ”

“நீயா?” என்று கூவினர்.