EVA15

ELS_Cover3-b00be5a3

EVA15

15

முந்தைய இரவு ஆதன், பார்கவுடனான உரையாடல்களும், அறிவுரைகளும் தந்த நம்பிக்கையுடன் அந்நாளை எதிர்கொள்ளத் துவங்கினாள் சஹானா.

பூர்ணிமாவோ, தருணை கண்டாலே வெறுக்கும் தன் மகள், தான் சொல்லும் முன்பே தயாராகத் துவங்கியதில் சந்தேகம் எழ, முன்னெச்சரிக்கையாக அவளைக் கீழ்த்தளத்திலிருந்த தன் அறையில் பிள்ளை வீட்டார் வரும்வரை இருக்கும்படி கட்டளையிட்டார்.

சந்திரன் பொறுமையின்றி உலாவிக் கொண்டிருக்க, பார்கவோ தருண் சந்தேகம் கொள்ளாமலிருக்க அன்றைக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தான்.

ஆதனோ பூர்ணிமாவின் புண்ணியத்தால் சஹானாவைச் சந்திக்க முடியாமல் யோசனையாய் அமர்ந்திருந்தான். இந்நேரம் ஈவா தன் திட்டப்படி பூர்ணிமாவின் அறைக்குள் நுழைந்திருக்க வேண்டுமே? ஆனால் எதிர்பார்த்ததை விடத் தாமதமாகிக் கொண்டிருக்க, ஈவாவிடமிருந்து எந்தத் தகவலும் வந்தபாடில்லை.

நேரம் குறைவாக இருக்க, என்னவென்று ஆராயப் பூர்ணிமாவின் அறைக் கதவைத் தட்டச் சென்றவன் ஒரு நொடி தயங்கி, காதிலிருந்த சிறிய இயற்ஃபோனை அழுத்தி ஈவாவை அழைத்தான்.

“எங்க இருக்க…?” அவன் கோவமாகக் கேட்டு முடிக்கும் முன்பே,

“எலிப்பொறிக்குள்ள!” என்றது ஈவா.

“வாட்?”

“வேட்டு! மொதல்ல வந்து காப்பாத்துங்க பாஸ். என்னை கொண்டுபோய் எங்கேயோ போட போறாங்களாம்! கிச்சன் பக்கத்துல…”

குறுக்கிட்டவன் பொறுமையின்றி, “எலிப்பொறியெல்லாம் உனக்கொரு விஷயமா உடைச்சுக்கிட்டு வாயேன். நேரமாகுது ஈவா”

“உடைச்சுட்டெல்லாம் வர முடியாது பாஸ்! வாங்க ப்ளீஸ்”

“வரேன் வரேன்” வேகமாக நடப்பவன் எதிரே வந்த பார்கவ், “அவங்க எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்களாம். உன் சைடு எப்படி? சஹானா கிட்ட பேசிட்டியா?” அவசரமாகக் கேட்க,

“அதுதா…வந்து சொல்றேன்” ஆதன் சமையலறையை நோக்கிக் கிட்டத்தட்ட ஓடினான். அதற்குள் மருந்தைக் கேட்டு தாத்தா அழைக்க, பார்கவால் அவனைப் பின்தொடரமுடியாமல் போனது.

சமையலறையில் ஐந்து பேர் இருக்க, அதில் ஒருவர், “எதாவது வேணுமா சார்? காஃபீ , டீ? டிபன் இன்னும் கொஞ்ச நேரத்துல தயாராகிடும்” சாம்பாரைக் கிளறியபடி கேட்க,

“இல்ல தேங்க்ஸ்! இங்க…ஒரு எலி…” என்றவன் கண்களால் துழாவ,

“ஆமா இப்போதான் பையன் விளையாட கொண்டுட்டு போனான்” என்று தோட்டத்தைக் காட்டியவர், “எலியை எதுக்கு சார்….”

கேள்வியை முடிக்கும் முன்பே ஆதன் அவர் காட்டிய திசையில் விரைந்தான்.

மூடியிருந்த கிணற்றின் அருகே ஐந்து வயது மதிக்கத்தக்க பாலகன் எலிப்பொறியுடன் பேசிக்கொண்டிருந்தான்.

அவனை நெருங்கிய ஆதன், உள்ளே ஈவாவை கண்டு நிம்மதியானான்.

ஆதனின் வருகையில் என்ன நினைத்ததோ குழந்தை, “இது என்னுது!” குறுக்கே நின்றது,

அவன் அதைத் தரும்படி கேட்க, ஆறடிக்கு வளர்ந்திருந்தவனை முறைத்த இரண்டடி பொடியனோ, “தரமாட்டேன்! நான் தான் புடிச்சேன்” என்று மிரட்ட,

நெற்றியைத் தேய்த்துக்கொண்டவன், “அங்கிள் உனக்கு சாக்லேட் வாங்கி தருவேனாம், நீ எனக்கு அதை தருவியாம்” நயமாகப் பேச,

“முடியாது!” என்ற பொடியன் ஆதனின் கொஞ்சல்களுக்கோ, கெஞ்சல்களுக்கோ அசைந்து கொடுக்கவில்லை.

“என்ன வேணும்னாலும் தரேன் எலியை கொடுடா ப்ளீஸ். நீ குட் பாய்ல?” அவன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு கேட்க, சில நொடிகள் யோசித்து, “கார் வேணும்” என்றது.

“சாயந்தரம் இங்க வா நான் நீ கேட்டதை தரேன்” ஆதன் எலிப்பொறியை எடுக்கப்போக, குழந்தையோ “இல்ல இப்பவே வேணும்!” என்று அழத் துவங்க,

பெருமூச்சுவிட்டவன், “கடை திறந்து இருக்காது பா, நான் கண்டிப்பா வாங்கி….” சொல்லிக்கொண்டிருக்கும்போதே இதைக் கவனித்திருந்த குழந்தையின் அண்ணன், 15 வயது மதிக்கத் தக்க சிறுவன் சற்று ரகசியமாக,

“அவன் ஏற்கனவே பார்கவ் அண்ணாகிட்ட இப்படி தாஜா பண்ணியே நாலு ரிமோட் கார் வாங்கிட்டான். நான் பாத்துக்கறேன் சார், நீங்க எலியை எடுத்துட்டு போங்க” என்றவன் தம்பியிடம்,

“நாம சாப்பிட போகலாம் வடை சுடறாங்க, எலி எங்கேயும் போகாது”

கையையும் காலையும் உதைத்துக்கொண்டு நண்டு அழத்துவங்க, ஆதனுக்கோ எலிப்பொறியின் கம்பியைப் பிடித்துக்கொண்டு ஆர்வமாக வேடிக்கை பார்க்கும் ஈவாவை நசுக்க வேண்டும் போல் இருந்தது.

“ஆமா… அதுக்கு தான் சொன்னேன். இல்லனா இந்த எலி உன் வடையை தின்னுபுடும்” என்றபடியே தம்பியின் கையைப் பற்றி அழைத்துச் சென்றான் சிறுவன்.

முறைப்புடன் பொறியைத் திறந்த ஆதன் “வா” என்று கடுகடுக்க,

ஈவா “தேங்க்ஸ்” என்றதில், பல்லைக்கடித்தவன்,

“எதான சொல்லிடப்போறேன்! சொன்னதை செஞ்சுட்டு ரூமுக்கு வா. இருக்கு உனக்கு” மிரட்டியவன், பூர்ணிமாவின் அறை அருகிலிருந்த ஓவியத்தை ரசிப்பதைப் போல் நின்றிருந்தான்.

“அவ்ளோ நல்லாவா இருக்கு?” பார்கவ் குரல் கேட்க, திரும்பி “யாருக்கு தெரியும்?” சிரித்தவன், விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லி, “ஆள் வந்ததும் கூப்பிடு” என்று கிளம்பினான்.

பூர்ணிமாவின் அறைக்குள்ளே சென்ற ஈவா, அங்கே கண்ணைமூடி சாய்ந்திருந்த சஹானாவின் காலைச் சொரிந்தது. ஒரு நொடி ‘வீல்’ என்றவள், “ஹே ஈவா” புன்னகையுடன் அதைக் கையிலெடுத்தாள்.

“ஹாய் ஜூனியர்” என்ற ஈவா, தன் வயிற்றுப்பகுதி கவசத்தைத் திறந்து மிகச்சிறிய இயர்பட் ஒன்றை அவளிடம் கொடுத்து, “இதை காதுல மாட்டிக்கோ, பாஸ் சொல்றபடிதான் நீ பேசுவியாம்” என்றது.

“எதுக்கு இதெல்லாம், நான் ஏதாவது சொதப்பி வச்சுடுவேன் ஈவா” என விழித்தாள் ‘ஙே’னு.

“சொன்னதை செய்றேன். சீக்கிரம் அதுல இருக்கிற பட்டனை அழுத்து, பாஸ் பேசுவார் இல்லை நான் பேசுவேன் அதைக் கேட்டு நீ பேசு”

“சரியா வரும்னு தோணலை” அவள் முணுமுணுத்துக்கொண்டே அது சொன்னபடி காதில் இயற்பட்ஸை பொருத்திக்கொண்டாள்.

“ஒன்னும் கேட்கல” அவள் முகம் சுருக்க,

காதில் வாங்கிக்கொள்ளாத ஈவா, “ஜுனியர் ஏன் உங்க வீட்ல ட்ராப் இருக்கு? இங்கே நிஜ எலி இருக்கா?” ஆர்வமாகக் கேட்க,

“புரியலை” அவள் கொஞ்சம் முடியை எடுத்துக் காதோரம் தவழவிட்டு இயற்பட்ஸை மறைத்தாள்.

“எலி பொறி! இங்க எலி இருக்கா?” ஈவா மறுபடி கேட்டது.

“இருக்கும். வரும் போகும். ஏன்?” சஹானா புன்னகையுடன் கேட்க, அதற்குள் ஆதன் சிக்கெனல் வர,

“பாஸ் கூப்படறார், கால் பேசுவோம் எடு” அவள் பதிலுக்குக் காத்திராமல் ஈவா ஓட,

தரையில் வெள்ளை மேகம்போல ஓடும் ஈவாவை பார்க்கையில், ஏனோ சஹானா மனதில் தவழும் குழந்தையைக் காணும் நிறைவு.

வெளியே காத்திருந்த ஆதன் ஈவா வெளியேறியதும் அதை அவசரமாக எடுத்து யாரும் கவனிக்கும் முன்பே பேக்கெட்டில் போட்டுக்கொண்டு அறைக்கு விரைந்தான்.

கதவைச் சாத்தியவன் ஈவாவை மேஜை மேல்விட்டு முறைக்க, அதுவோ அவன் பார்வையைத் தவிர்த்து, “உங்க சஹாவை கூப்பிடுங்க பாஸ், நேரம் ஆகுது” என்றது.

அருகிலிருந்த புத்தகத்தை எடுத்து அதன் தலையில் அடித்தவன், “உன்னை என்ன சொன்னேன் நீ என்ன பண்றே? எதுக்கு இப்போ பொறிக்குள்ள போன?” என்று தாழ்ந்த குரலில் மிரட்ட,
“எலியை பார்க்கலாம்னு தான்”

“லூசா நீ?”

“பாஸ் நான் உங்ககிட்ட எத்தனையோ தடவை கேட்டுட்டேன் என்னக்கு நிஜ எலியை நேர்ல காட்டுங்கன்னு. வெறும் வீடியோவை பார்த்து எப்படி கத்துப்பேன்? நேருக்கு நேரா பார்த்தா தானே நானும் மேனரிசம் கத்துக்க முடியும்?”

மறுபடி ஒரு அடி போட்டவன், “அதுக்கு இதுவா நேரம்?

எலிப்பொறிக்குள்ள போனா எலி வருமா? நீ…முட்டாள்” அவன் கத்த,
“அவங்க தான் பேசிக்கிட்டாங்க, வடை வச்சா அதைத் தேடி எலி வரும்னு. அதான் போனேன். வடை பக்கத்துல எலி எப்படியும் வரும் பார்த்துரலாம்னு.

ப்ளஸ் எலி மாட்டிக்கிற அளவுக்கு அந்த வடைல என்ன இருக்குனு பாக்க போனேன் அதுக்குள்ள கதவு மூடிக்கிச்சு. வடைல நிறைய எண்ணெய் இருக்கு பாஸ். சாப்பிடாதீங்க கண்டிப்பா அஜீரணம் ஆகும், அந்த கோவத்துல என்னை திட்டுவீங்க”

நெற்றியைப் பிடித்துக்கொண்டவன், “ஆயிரமாவது முறை சொல்றேன் ஈவா, நீ எலி இல்லை! எனக்கு இப்போ நேரமும் இல்ல” கோவத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டவன், சஹானாவுக்கு போன் செய்தான்.
“ஹலோ கேக்குதா….ஸ்ஸ்ஸ் சத்தமா பேசாத சஹா….”

“சரி…”அவள் சொன்ன தொனியில் சிரித்துவிட்டவன், “அதுக்குன்னு இவ்வளவு ரகசியமாவா?”

“என்ன ஆதன் இது, எனக்கு பயமா இருக்கு நான் என்ன செய்யணும்?” அவள் ஆதங்கத்தை உணர்ந்தவன், பேசத்துவங்கும் முன்னே பார்கவின் கால் வர “ஹே நான் அப்புறம் கூப்பிடறேன்னு அழைப்பைத் துண்டித்தான்.

அதுவரை இருந்த தைரியம் மெல்ல கரைவதைப் போல் தோன்ற, கண்களை மூடி, “முடியும்! முடியும்!” சொல்லிக்கொண்டாள் சஹானா.
தருண் பெற்றோர்கள் வந்த தகவல் கேட்டு ஆதன் வேகமாக ஹாலிற்கு விரைந்தான்.

பெற்றோர்களுக்கு நடுவே அடிபட்ட மிருகம்போல் தரையை வெறித்திருந்த தருண், ஆதன் வந்த நொடியே கால்மேல் கால்போட்டு அமர்ந்தான். அவன் கண்களில் எள்ளல்.

பொருட்படுத்தாத ஆதன், பார்கவ் அருகே செல்ல, பார்கவ் அவனை அறிமுகம் செய்தான்.

மரியாதைக்குப் புன்னகைத்த ஆதன், பார்கவ் அருகில் உட்கார்ந்து பார்வையை ஓட்ட,

பூர்ணிமா முகமெல்லாம் பல்லாய் பேசிக்கொண்டிருக்க, சந்திரனோ விரல்களைக் கோர்த்துக்கொண்டு ஏதோ யோசனையிலிருந்தார். தாத்தா பாட்டி யாரோ ஒரு உறவுக்கார பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்க. மற்ற உறவினர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். தருணின் பெற்றோரோ ஏதோ ஒரு பதட்டத்துடன் காணப்பட்டனர்.

மெல்ல தருணின் தாய் தவமதி, “அப்போ நாம பேசியபடியே தருணுக்கு…” துவங்கும்போதே குறுக்கிட்ட பார்கவ், “டிபன் தயாரா இருக்கும், சாப்பிட்டுப் பேசலாமே” இயல்பாய் புன்னகைக்க.

தருணின் தந்தை ரங்கசுவாமி, “சாப்பாடு இருக்கட்டும் மொதல்ல நாம தட்டை…” மறுபடி குறுக்கிட்ட பார்கவ், “மாமா, தாத்தா பாட்டி மாத்திரை சாப்பிட நேரம் ஆகுது. எல்லார் கூடவும் சேர்ந்து சாப்பிடலாம்னு காத்திருக்காங்க” என்று சொல்ல,

“ஆமா அப்பாக்கு டேப்லெட் போடணும்” என்ற சந்திரன் வற்புறுத்த வேறுவழியின்றி உறவினர்கள் எழுந்தனர்.

ரங்கசுவாமி பூர்ணிமாவை முறைக்க, அவரோ கண்ணால் சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார்.

விருந்து ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க ஆதன் பார்கவுடன் உபசரிப்பில் இணைந்துகொண்டான்.

“நடக்காத நிச்சயத்துக்கு இதெல்லாம் கொஞ்சம் அதிகப்படி” பார்கவ் சிரிக்க, “தெம்பா புரளி பேசட்டும்” கண்ணடித்துச் சிரித்த ஆதன் வேலையைத் தொடர்ந்தான்.

மறுபடி கூடி அனைவரும் அமர்ந்துகொள்ள உண்ட மயக்கத்தில் சிலர் சோஃபா, நாற்காலியெனச் சாய்ந்து பேசத் துவங்க, சிலர் காத்து வாங்க வராந்தாவில் அமர்ந்துகொள்ள, சிலர் கண்கள் சொருக அரைத் தூக்கத்திலிருந்தனர்.

“பொங்கல் வேலை செய்யுது, ரெண்டு ரவுண்ட் பரிமாறினது வீண் போகலை.…” கிசுகிசுத்து ஆதன் விடாமல் கமெண்ட் அடிக்க, பார்கவ் உதட்டை இறுக்க மூடி சிரிப்பைக் கட்டுபடுத்திக் கொண்டிருந்தான்.
ரங்கசுவாமி தொண்டையை செருமி, “அப்போ நாம தட்டை….” வேகமாக வீடு வாசலில் பிரேக் அடித்து நின்ற காரின் சத்தத்தில் அவர் பேச்சை நிறுத்தித் திரும்ப, அவர் பார்வை சென்ற திசையில் அனைவரின் கண்களும் செல்ல, தங்கள் காரை அடையாளம் கண்டுகொண்ட ஆதன் அதிர்ந்து எழுந்தான்.

ரகுநாத்தும் மீனாக்ஷியும் காரிலிருந்து வெளிவர, “அப்பா” ஆதன் சொன்னது பார்கவ் காதில் விழ, “உங்க அப்பாவா?” அவனும் தான் எதிர்பார்க்க வில்லை. ஆமென்று தலையசைத்தவன், மறுநொடி ரகுநாதன் முன்பு நின்றான். ஆதன் தந்தையைக் கேள்வியாய் பார்க்க, அதே நொடி ஓட்டுநர் இருக்கையிலிருந்து ஆதிராவும், இளைஞன் ஒருவனும் இறங்கினர்.

“ஹாய் மேட்!” புன்னகையுடன், ஊன்றுகோலைப் பற்றிச் சிரமப்பட்டு விந்தி விந்தி வந்தவனைக் கண்டு அதிர்ந்து நின்ற ஆதனின் மனதில் மின்னல் வேகத்தில் பல நினைவுகள் கடந்தன. மனமும் கால்களும் ஸ்தம்பித்தன.

ஆதிரா, “டேய் என்னடா முழிக்கிற? பெஸ்டிய பார்த்துப் பேச்சே வரலையா? ஒரு மந்தையிலிருந்த இரண்டு ஆடுகள் வெவ்வேறு பாதையில் சென்றன. இரண்டும் சந்தித்தபோது பேச முடியவில்லையே!” சிரிக்க,

“மேட்!” தன்னை நெருங்கி உலுக்கிய நண்பனை இறுக்கமாக அணைத்துக்கொண்டான் ஆதன்.

“வி…வி…எவ்ளோ மிஸ் பண்ணேன் எப்படி டா…நீ” ஆருயிர் நண்பனைக் கட்டிக்கொண்டவன் கண்களில் கண்ணீர் மடைதிறக்க, வார்த்தைகள் திணறின.

புன்னகையுடன் “ஓஹ் கூல் கூல்! ஒரு வழியா எழுந்துட்டேன். கோமா போர் அடிச்சுது!” ஆங்கிலமும் தமிழும் கலந்து புதிய தமிழ் பேசிய விஹான், “நீ ஆளே மாறிட்டே மேட்! முஷ்(மீசை) காட்!” சிரிக்க,

“நீயும்…” என்றவன் நண்பனின் முகத்தைப் பார்த்து வியந்தான், விபத்தின் சுவடுகள் அள்ளி இறைத்திருந்த வடுக்கள் மறைந்து பழைய பொலிவுடன் நின்றிருந்தவன் கொஞ்சம் சோர்ந்திருந்தாலும், உற்சாகம் குறையாத கண்கள்.

விஹானை பார்த்த அதிர்ச்சியிலிருந்தவன் பெற்றோரை மறந்திருந்தான்.

“என்ன பா நீ, வந்தவர்களை அழைக்காம?” பார்கவ் அனைவரையும் வரவேற்க, அறிமுகங்கள் முடிய. ரங்கசுவாமி மறுபடி பேச்சைத் துவங்கினார்.

குறுக்கிட்ட சந்திரன், “ராகுகாலம் முடியட்டும்” என்றதில் பல்லைக் கடித்த பூர்ணிமா “அதுனால என்ன? புதுசா எதுவும் பேசலையே ஏற்கனவே தீர்மானித்தது தானே…” என்று ஆரம்பிக்க,

“அப்புறம் பேசிக்கலாம்னு சொன்னேன்!” மனைவியை முறைத்தவர், ரகுநாத்தின் புறம் திரும்பி எதோ பேசத் துவங்க, அவமானமாக உணர்ந்தபோதும் பொறுத்துக்கொண்ட ரங்கசுவாமி இப்பொழுதும் பூர்ணிமாவை முறைத்துவிட்டு அமைதியானார்.

வந்தவர்களை வற்புறுத்திச் சாப்பிட அழைத்துச் சென்றார் சந்திரன்.

நண்பனிடமிருந்து இம்மியும் விலகாத ஆதன் அவனுக்கு இட்லி தயிர் என்று பரிமாற,

“மேட், ப்ளீஸ் கொஞ்சம் சந்தோஷமா நம்ம ஊர் காரம் சாப்பிட்டுக்கறேனே” விஹான் மழலை தமிழில் கெஞ்ச,

“முடியாது, எத்தனை வருஷத்துக்கு அப்புறம் சாபிட்றே? வயிறு தாங்காது. தயிர் தொட்டு சாப்பிடு” மிரட்டிச் சாப்பிட வைத்த ஆதனை புருவம் முடிச்சிட பார்த்த சந்திரன்,

“நீங்க எல்லாம் பொறுமையா சாப்பிட்டு வாங்க” பொதுவாகச் சொல்லி, பார்கவிடம் “இவங்களை மாடில அந்த ரூம்க்கு அழைச்சுக்கிட்டு வா. மத்தவங்களை கொஞ்சம் ஓய்வெடுக்க சொல்லிடு” என்று கிளம்பிவிட, எதையுமே கண்டுகொள்ளும் மனநிலையில் ஆதன் இல்லை.

கையை விட்டால் மறைந்துவிடுவானோ என்பதுபோல் விஹானின் அருகிலேயே இருந்தான்.

உணவுக்குப் பின் ஆதிராவை சஹானா இருந்த அறைக்கு அனுப்பிவைத்த பார்கவ், ஒருநொடி தயக்கத்துடன் விஹானை பார்த்துவிட்டு ஆதனை பார்க்க, அவனோ “இவன் இருக்கலாம்” என்றான்.

சரியென்றே பார்கவ் சந்திரன் சொன்னபடியே அனைவரையும் தந்தை சொன்ன அறைக்கு அழைத்துச் சென்றான்.

ஏற்கனவே அங்கே சந்திரன் பூர்ணிமா தாத்தா பாட்டி என்று அனைவரும் அமர்ந்திருக்க, எதிரே தருண் மற்றும் அவன் தாயும் தந்தையும்.

மீனாக்ஷி குழப்பமாக ரகுநாத்தை பார்க்க அவரோ கண்டுகொள்ளாமல் முன்னே நடக்க, விடைதேடி மகனைப் பார்த்தார், அவனோ விஹானை தவிர எதுவுமே கண்ணுக்குத் தெரியாததுபோல் அவனைத் தாங்கிப் பிடித்து நடந்து சென்றான்.

‘கட்டுனது தான் இப்படின்னா பெத்ததும்…’ மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டவர், புதிய இடம் புதிய மனிதர்கள், எதற்காக வந்தோம் என்று கூடத் தெரியாமல் பெருமூச்சுடன் அறைக்குள் நுழைந்தார்.

ஆண்கள் மத்தியில் வியாபாரம் தொழில் என்று பேச்சு துவங்க, பெண்களோ குடும்பம் புடவை, கம்மல் என்று பேச, தாத்தா பாட்டி அவ்வப்போது உரையாடல்களில் கலந்துகொண்டும் அமைதியாகவும் இருந்தனர்.

“ஆரம்பிக்கலாமா?” பார்கவ் ஆதன் காதில் கேட்க,

“எதை?” என்ற ஆதனின் பார்வை விஹான் மீதே இருக்க, அவன் முதுகில் தட்டிய பார்கவ், “என்னபா கேக்கறே? ஆரம்பிக்கலாமா?” அழுத்தமாகக் கேட்க, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சுயநினைவுக்கு வந்தவனாய் ஆதன், “.அச்சோ!” என்று கண்களை மூடிக்கொள்ள,

“என்ன?” பார்கவ் கேட்கும்போதே,

“அவகிட்ட நான் இன்னும் ஒன்னுமே சொல்லலை!” ஆதனின் முகம் வேர்க்க, “வந்துடறேன்” என்றவன், விஹானிடம் பார்வையால் விடைபெற்றான்.

அறையை விட்டுச் சற்று தள்ளிச் சென்றவன் யாரும் அருகில் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டு, சஹானாவை அழைத்தான்.

“ஹலோ சஹா”

“ஹாய் டா அண்ணா!” ஆதிரா பேச அதிர்ந்தவன், “சஹா எங்கடி?” என்று பதற,

“இங்கதான் இருக்கா…அதைவிடு என்னடா நடக்குது இங்க? சஹானா என்னமோ சொல்றா நீ அவளை கல்யாணம் செஞ்சுக்க போறேன்னு, அப்படி எதும் சொன்னியா?” கோவமும் கொஞ்சலுமாக அண்ணனை மிரட்டினாள்.

“சஹா யூ இடியட்!” கத்திவிட்டான் ஆதன்.

“உன்னை இடியட்னு சொல்றான்” மறுபுறம் சஹானாவிடம் கிண்டலாகச் சொன்ன ஆதிரா, “ஏன்டா என்கிட்டே சொல்லக் கூடாதா?”

“ப்ளீஸ் ப்ளீஸ் அவகிட்ட அந்த இயர்பட்டை கொடுடி அர்ஜென்ட்” என்று கத்த, எதோ உணர்ந்தவளாய் சஹானாவிடம் தந்தாள் ஆதிரா.

“உனக்கு மூளை தர்மத்துக்கு கூட கிடையாதா?” ஆதன் கத்தியதில்,

“திட்டத்தான் கூப்பிடீங்களா?” சஹானா சினுங்க,

‘என்னை சுத்தி எல்லாமே லூசு!’ பெருமூச்சு விட்டவன், “நான் சொல்றதை ஏன் எதுக்குன்னு குறுக்கிடாம கேளு” என்றான்.

“ம்ம்”

“நான் காதை தடவினா ஆமான்னு சொல்லணும், மூக்கு நுனியை தொட்டா இல்லைனு சொல்லணும். சிலதெக்கெல்லாம் ஈவா பேசும், உன் காதுல கேக்குற பதிலை அப்படியே சொல்லணும்”

“என்ன விளையாடறீங்களா? இதெல்லாம் எதுக்கு? கண்டிப்பா நான் சொதப்புவேன். இன்னும் கூட உங்க திட்டம் என்னனு சொல்லலை. கதையையே சொல்லாம நடிக்க சொன்னா நான் என்ன பண்ணுவேன்?” அவள் கடுகடுக்க,

“முன்னாடியே சொல்லிட்டா மட்டும்” மீதி வார்த்தைகளைச் சத்தம் இல்லாமல் அவன் முணுமுணுத்தான்.

“புரியாத பாஷைல திட்டுறீங்கன்னு தெரியும்” என்றாள் சஹானா மிடுக்காக,

“அறிவு!” பழித்தவன், “இயல்பா இரு போதும்” என்று சொல்ல,

சஹானா “இயல்பானா…அப்போ நான் பதறினா பரவால்ல தானே?” அப்பாவியாய் கேட்டதில், புருவம் சுருக்கிய ஆதன்.

“இயல்பா இருக்க சொன்னேன். புரியலை? சாதாரணமா நடந்துக்கோ”

“என்னக்கு சாதாரணம்னாளே பதட்டம் தானே? பயம், பதட்டம், அப்போ அப்போ மயக்கம் இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா”

“ஐயோ! நான் சொன்னதை மட்டும் உன்னால செய்ய முடியாதா? இயல்பா ஒத்துழைக்க என்ன உனக்கு?” அவன் கோவத்தைக் கண்டுகொள்ளாதவளோ,

“பதட்டமா இருக்கவங்க எப்படி ஒத்துழைப்பாங்க?” பதிலுக்குக் கத்த,

“என்னை நீ நம்பினா நான் சொன்னதை செய்! உன் வாழக்கையை காப்பாத்திக்கணும்னா நான் சொன்னதை நீ செய்வ” அழைப்பைத் துண்டித்தான்.

அறைக் கதவைத் திறந்தவன் யுத்த களம் புகும் வீரனின் துணிவோடு நுழைய, சஹானாவோ தூண்டிலில் சிக்கிய மீனாய் தவித்துக்கொண்டிருந்தாள்.

ஆதிரா அவள் கையைப் பற்றி விஷயத்தைக் கேட்க, சிலநொடிகள் மௌனமாக அவளைப் பார்த்திருந்தவள்,

“அவன் கண்டிப்பா நீ நினைக்கிற மாதிரி உணர்ச்சிவசப்பட்டு இப்படி செய்ற ஆள் இல்ல. அவன் உன்னை கல்யாணம் செஞ்சுக்கறேன்னு வாக்கு கொடுத்திருக்கான்னா கண்டிப்பா ஆழமான காரணம் இருக்கும். சும்மா குழப்பிக்காத”

“அதுக்கில்ல…இருந்தாலும் எப்படி நான் போயி அவரை?” சஹானா தலை கவிழ,

“ஏன் உனக்கென்ன குறை?” முறைத்த ஆதிரா, “எனக்கு கோவம் தான். என்கிட்டே அவன் ஒரு வார்த்தை சொல்லலைன்னு… அச்சோ மேல அம்மா என்ன குதி குதிகிக்க போறாங்களோ” பதறியவள், மீனாட்சி ஆதனுக்கு தன் அண்ணன் மகளைப் பேச நினைத்திருந்ததை ஆதிரா சொல்லக் கேட்டவள்,

மனம் பாரமாகி, “அவருக்கு அவங்க தான் சரி. நான்….” பேசமுடியாமல் கண்கள் கலங்க,

“உனக்கு அவனை பிடிக்கும்ல?” ஆதிரா கேட்டதில் நிமிர்ந்தவள் கண்ணில் ஒற்றை துளி எட்டிப்பார்க்க,

“சோ யூ லவ் ஹிம்! இது போதும்” என்றாள் ஆதிரா தீர்க்கமாய். ஆதனிடம் காணப்படும் அதே உறுதி, ஆளுமை!

‘நான் இப்படி இருந்திருந்தா இந்த நிலைமைக்கு வந்திருப்பேனா?’ சஹானா மனம் அடித்துக்கொண்டது, அதுவே ஒரு வேகத்தை அவளுள் செலுத்த, தன்னால் முடியும் முழுமனதாகச் சொல்லிக்கொண்டாள்.

அங்கே அறையில்,

“இதெல்லாம் என்ன மாப்பிள்ளை? எங்களை கூப்பிட்டு வச்சு அவமான படுத்துறீங்களா? இப்ப பெண்ணை தரமாட்டேன் சொன்னா என்ன அர்த்தம்? என்ன பூர்ணி இது?” ரங்கசுவாமி ரௌத்திரமாகத் துவங்க, அவரைக் கைகாட்டி அடக்கிய சந்திரன்,

“என்னை முடிக்க விடு ரங்கா!” குரல் உயர்த்த, கோபமூச்சுகளோடு அமைதியானவர், ஒருமுறை தருணை முறைத்துவிட்டு சந்திரனை மீண்டும் பார்க்க,

“நான் சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு. என் பொண்ணு அறியா வயசிலிருந்தே ஒரு பையனை விரும்பறா…”சந்திரன் துவங்க,

ரகுநாத்தின் கையைச் சீண்டிய மீனாட்சி, “எதோ குடும்ப விஷயம் பேசுறாங்க நாம இருக்கிறது நாகரீகம் இல்லை” என்று கிசுகிசுக்க, அவர் கையைத் தொட்டு அமைதியாக இருக்கும்படி சொன்னவர், சந்திரனின் பேச்சில் கவனத்தை திருப்பினார்.

பூர்ணிமா, “அந்த பேச்செல்லாம் இப்போ எதுக்கு? எங்கண்ணன் குடும்பத்துக்கு தான் அவளைக் கொடுப்பேன்!. எப்பவோ வந்து போனவனுக்காக ஏன்…”

“அவன் போகலை!” என்றார் சந்திரன் நிதானமாக.

“என்ன சொல்லறீங்க?” பூர்ணிமா கேட்க,

“அந்த பையன் எங்கேயும் போகலைன்றேன்” என்றார் பொறுமையாக.

தருண் முகம் வெளிறி நிமிர, பார்கவ் ஆதனை பார்க்க, அவனோ ஆழமாகச் சுவாசித்துக்கொண்டிருந்தான்.

“ஆமா! வந்துட்டேன். என் சஹானாவுக்காக!” என்றான் ஆதன் தீர்க்கமாக.

அழுத்தமான அமைதி நிலவ, சந்திரன், பார்கவ், ரகுநாத் தவிர அனைவரது முகங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு அளவுகளில் அதிர்ச்சி. மீனாட்சி ரகுநாதன் கையை இழுக்க, அவர் வேண்டுமென்றே திரும்பாமல் இருக்க. எழுந்து நின்ற தருண் முகம் ரௌத்திரத்தில் விகாரமாக மாறி “பொய்!” என்றான் அடிக்குரலில்.

“உனக்கு தெரியாதா நாங்க காதலிக்கிறது?” ஆதன் நக்கலாகக் கேட்க,

“என்னடா இது?” என்ற மீனாட்சியை அடக்கிக் கண்களால் மறுத்தார் ரகுநாத், “என்னங்க நீங்க. என்ன…”

“மீனு!” அவர் அதட்ட கோவமும் அழுகையும் முட்டிக் கொண்டுவர, மீனாட்சி கட்டுப்படுத்திக்கொண்டு அவஸ்தைப்பட, மறுபுறம் பூர்ணிமா உறைந்திருந்தார்.

ஆதன் தொடர்ந்தான், “எங்க காதலை எல்லாருக்கும் சொன்னதே நீ தானே?”

தருண், “பொய்! அவ…இல்லை” என்று பொரும,

“என்னப்பா நீ அப்படியே பிளேட்டை திருப்புற? ஏன் பார்கவ் எங்க காதலை பத்தி இவன் சொன்னது உண்மைதானே?” ஆதன் கேட்க, ஆமென்று தலையசைத்த பார்கவ், “கூடவே அவ ஓடி போகப்போறான்னு நீ தானே தருண் எங்களுக்கு தகவல் சொன்ன? ஞாபகம் இல்லையா?” நக்கலாகக் கேட்க,

“இல்ல அண்ணா அது….” வேக வேகமாக மூச்சுவிட்ட தருண் பூர்ணிமாவைப் பார்க்க, அவரோ ஏதோ ஜாடை செய்ய, “அதெல்லாம் உண்மைதான் ஆனா அந்த பையன் இவன் இல்ல” கத்தினான்.

“நான் தான்னு நானே சொல்றேன், பார்கவ் சொல்றான் இன்னும் என்ன தான் வேணும்?” ஆதன் கேட்க, அவன் சட்டையைப் பிடிக்க வந்த தருணை தன் ஊன்று கோலால் தடுத்திருந்தான் விஹான்.

“நோ விஹான்” நண்பன் ஊன்றுகோலை மெல்ல இறக்கிய ஆதன், “நீ டென்சன் ஆகாத. ஜஸ்ட் வாச்” என்று புன்னகைக்க,

“தூர நின்னு பேசச் சொல்லு இல்லை…” விஹான் எச்சரிக்கையாய் தருணை முறைக்க,

“கையை வைக்கமாட்டான், வச்சா என்ன ஆகும்னு தெரியுமே” இளக்காரமாகச் சொன்ன ஆதனின் முகத்தில் நிழலாடிய அரக்கனைக் கண்ட தருண் பின்வாங்கினான்.

“அவ யாரையும் காதலிக்கவே இல்லை! “ தருண் தரையைப் பார்த்தபடி சொல்ல,

“ஆறு வருஷமா என் பொண்ணு யாரையோ காதலிக்கிறதா நீ தானேடா சொன்ன!” சந்திரன் மிரட்ட, திணறியவன்,

“அது…அது…”என்று பூர்ணிமாவைப் பார்க்க,

பூர்ணிமா கணவரிடம், “இப்போ எதுக்குங்க அவனை மிரட்டுறீங்க? ஊர் சுத்தி கழுதையை கேட்காம” என்று பாய,

“கேட்டுடலாம். தெளிவாகும்” என்றார் தாத்தா.

“ஆமா அவளையே கேப்போம். உன் தங்கையை கூப்பிடு பார்கவ்” சந்திரன் சொல்ல,

“அவளை எதுக்கு கூப்பிட்டுக்கிட்டு? அவ தான் ஓடு…” துவங்கிய பூர்ணிமாவை எரித்துவிடுவதுபோல் முறைத்த சந்திரன்,

“ஏன் நீ பயப்படறே? நீ ஏதாவது இதுல சம்பந்தப்பட்டு இருக்கியா?” என்று கேட்டதில் சட்டென வியர்த்ததை துடைத்துக்கொண்டு பூர்ணிமா,

“இல்…இல்லையே…கூப்பிட்டு கேட்டா இல்லைனு தானே சொல்லுவா…” என்று சுருதி இறக்கினார்.

பார்கவ் சஹானாவை அழைத்துவரச் செல்ல, இங்கோ வாக்குவாதம் துவங்கியது. தங்கள் பிள்ளையைக் கைகாட்டுவதா என்று ரங்கசுவாமி துவங்க, சந்திரன் தன் மகளுக்குப் பரிந்துவர, பூர்ணிமா தன் அண்ணனுக்காகப் பேச, தருண் சாதிக்க,

ரகுநாத் மகனைப் பார்க்க, அவனோ அவரைப் பார்த்த பார்வையை புரிந்து கொண்டவர், யார் காதுக்கும் கேட்காமல் குமுறிக் கொண்டிருந்த மனைவியை அமைதிப் படுத்தத் துவங்கினார்.

அசாதாரண சூழலுக்குச் சம்பந்தமே இல்லாத புன்னகையுடன் ஆதனின் காதருகே விஹான், “மேட் நீ லவ் பண்றியா? ஒரு வார்த்தை சொல்லல? எப்போ ஸ்டார்ட் ஆச்சு” சுவாரசியமாகக் கேட்க,

“நீ வேற….”சிரித்தவன், “காதல் கதை கேட்குற நேரமா இது?” ஆதன் குசுகுசுக்க,

“யூ லையர்” விஹான் பார்வை மாற அதிர்ந்த ஆதன், “என்னடா?” என்று கேட்க,

“இவங்க நம்பலாம் எனக்கு தெரியும் இது உண்மை இல்லைனு. ஆறுவருஷம் வாய்ப்பே இல்ல. நீ யோகி, ரிஷி! மேட்” வம்பிழுக்க,

சுதாரித்த ஆதன் அவனைச் செல்லமாக அடித்துச் சிரிக்க, அவர்களை ஓரக்கண்ணால் பார்த்திருந்த தருணின் ரத்தம் கொதித்தது.

கதவு திறக்க, பார்கவின் பின்னால் புடவை தலைப்பை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு தயங்கியபடி வந்தாள் சஹானா.

அவள் நுழைந்த நொடியே புயலின் மையம் தரும் அமைதி துவங்கியது.

Leave a Reply

error: Content is protected !!